08 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 8.1

 

வெகு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்திருக்கவே அலர்விழியை தாங்கோ தாங்கென்று தாங்க… பெண்ணிற்கு நாட்காட்டி வேகமாகக் கிழிபடுவது அவஸ்தையைத் தந்தது. விடுப்பில் இன்னும் இருதினங்களே மீதமிருக்க, பெண்ணிற்கு, வீட்டினரை விட்டுக் கிளம்ப வேண்டுமா என்றிருந்தது. 

இன்று ஒருவராலும் விடுப்பு எடுக்க முடியவில்லை என்றதும் பாட்டியும் பேத்தியும் மட்டுமே வீட்டில். 

“தலமுடிய என்ன பாடு படுத்தி வச்சிருக்க நீ? வாரத்துக்கு ஒரு தரம் எண்ணெய் வச்சுக் குளிக்கறது இல்லியா? பழகின பழக்கம் ஏன் மறக்குது?” 

கொல்லைப்புற வாசற்படியில் அமர்ந்து பாட்டி, பேத்தியின் சுருள் முடியில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்ய… பெண்ணின் விழிகள் சுகத்தில் சொக்கி நின்றன. 

“என்ன டி… சத்தத்தக் காணம்?” 

“உங்க மசாஜ்க்கு கண்ண சொக்குது பாட்டி. இந்த சுகம் அனுபவிச்சு எத்தன மாசமாச்சு! ஹ்ஹ்ம்ம்! நீங்களும் என்னோடையே வந்திடுங்க பாட்டி… நாம ரெண்டு பேரும் தனியா வீடெடுத்து தங்கலாம். நீங்களே எனக்கு வாராவாரம் எண்ணெய் வச்சு விடுங்க” 

“அங்க எல்லாம் வீடு தீப்பெட்டி கணக்கால்ல இருக்கும்? அங்க வந்து நான் என்ன பண்ண?” 

“ரெண்டு பேருக்கு அது போதும். நிஜமா தான் கேக்கறேன்… என்னோட வரீங்களா? நீங்க என்னோட இருந்தாலே எனக்கு யானை பலம் பாட்டி”

“உன் தாத்தாக்கு வாழ்க்கைப்பட்டு இங்க வந்தேன். என் உயிர் இங்க தான் பிரியணும்.” 

“ச்சு… என்ன பாட்டி இப்படியே பேசிகிட்டு.” 

“வயசாகுதில்லியா மா… உடம்புக்கு எதுவும் வரதுக்கு முன்ன, உங்களுக்கெல்லாம் தொந்தரவு தராம கண்ண மூடிடணும். எம் மகனும் மருமகளும் என்னைக் கண் கலங்காம பாத்துக்கறாங்க! நீ, அவங்க வயசான காலத்துல அவங்களப் பாத்துக்கணும். இந்த வீட்டுல பையன் இல்லாத குறைய நீ தான் தீர்த்து வச்ச. அம்மா அப்பா மனசு கோணாம நடந்துக்கணும்.” 

“ம்ம்ம்..” 

“என்ன ம்ம்?”

“கண்டிப்பா அவங்க மனசு கோணாம நடந்துப்பேன்… நல்ல படியா பார்த்துப்பேன்… போதுமா…?” 

“நீ நல்லாப் படிக்கணும் பாப்பா. நல்ல உத்தியோகத்துக்கு போகணும். உன் வளர்ச்சிய கெடுக்கன்னு நிறைய தடை வரும். உத்து கவனிச்சா தெரியும், அந்த தடை தான் நீ மேல ஏற உதவுற படிகட்டுன்னு. சோர்வா இருக்கும் போது ப்ரேக் எடுத்துக்கோ… தேங்கி நின்னுடாத. மூச்சு இருக்க வரைக்கும் யார் கையும் எதிர்பார்க்காத மாதிரி வாழக் கத்துக்கோ. எப்பவும் மத்தவங்களுக்காக உன் கை நீளணுமே ஒழிய… யார் தூக்கி விடுவான்னு காத்து நிக்காத! 

உனக்கு சரின்னு தோணறத மூணாம் மனுஷியா தள்ளி நின்னு பாரு. சாதக பாதங்கள அலசு. அது உன் வாழ்க்கைக்கு சரின்னு தோணினா துணிஞ்சு செய். ஒரு கனவு முடியும் போது புதுக் கனவு காணு. உடம்புல தெம்பிருக்க வரைக்கும் ஓஞ்சு போயிடாத. நல்லா வருவ பாப்பா நீ!” 

பாட்டியின் குரல் கரகரத்தது. “ஏன் பாட்டி… உங்களுக்கு ஏதாவது கனவு இருந்துதா?” 

“கனவு இல்லன்னா அந்த மனுஷனும் மனுஷியும் ஜடம்! நீ என்னை மாதிரி பாப்பா. எனக்கும் படிப்பு தான் கனவா இருந்துது. அப்போ எல்லாம் அது ரொம்ப ரொம்பப் பெரிய கனவு! என் குடும்பத்துல என் கூடப் பிறந்தவங்க எட்டு பேர். ரொம்ப வசதி எல்லாம் இல்ல. தோட்டம், ஆடு, மாடு எல்லாம் இருந்துது அதனால வயிறுக்கு சாப்பாடு இருக்கும். அவ்வளவு தான் தேவை. அதனால யாரும் அதுக்கு மேல யோசிக்கல. படிப்பு வாசனையே இல்லாத கிராமம். 

ஒரு லூதரன் சர்ச் இருக்கும்… அவங்க அஞ்சாவது வரைக்கும் ஸ்கூல் வச்சிருந்தாங்க. அதுல இருந்த ஃபாதர், அவர் தான் என்னோட வழிகாட்டி! சும்மா சுத்திட்டு இருந்த என்னை இழுத்துட்டுப் போய் அங்க க்ளாஸ்ல உக்கார வச்சாங்க. மதியம் ஸ்கூல் முடியும் போது ஒரு மிட்டாய் தருவாங்க. அதுக்காக போக ஆரம்பிச்சேன். 

ஆறாவதுக்கு டவுன் போகணும். ஸ்கூலுக்கு ஃபீஸ் கட்டணும். அப்பா தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அம்பது காசுக்கு எங்க முழு குடும்பமும் ரெண்டு நாள் மீன் வச்சு சாப்பிடலாம்! பீஸ் கட்டி என்ன பிரயோஜனம்னு படிப்பு வேண்டாம் சொல்லிட்டார்.

அந்த ஃபாதர் தான் அப்பாட்ட பேசி ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க. எங்க வீட்டு கிட்ட இருந்த பெரியப்பா பசங்களோட பழைய புக்ஸ், பழைய நோட்ல மீதி வர பேப்பர் வச்சு படிப்பு ஓடுச்சு! ஃபீஸ் கட்டினதால துணி கிடையாது எனக்கு! மொத்தமே ரெண்டு சட்டை துணி தான் இருக்கும். நல்ல நாளுக்கு எல்லா பிள்ளைங்களுக்கும் புதுத் துணி கிடைக்கும். ஆனா எனக்கு ஒரு பேனா… பென்சில் அப்படித்தான் ஏதாவது வாங்கிப்பேன். அக்காவோட கிழிஞ்ச பழயத தச்சுப் போட்டுப்பேன்! 

பன்னெண்டுல நல்ல மார்க் கிடைக்கவும்,  ஸ்கூல் ஹெட் மாஸ்டர் தான் காலேஜ் சேர்த்துவிட அப்பாட்ட பேசினாங்க. நிறைய நிறையப் போராட்டம். தெரியாம கெமிஸ்ட்ரி எடுத்துட்டு நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். நைட் எல்லாம் முழிச்சுப் படிப்பேன். அப்பா தான் தேயில போட்டுக் குடுத்து பக்கத்துல படுத்திருப்பார் நான் தூங்கப் போற வரைக்கும். அந்த மண்ணென்னை விளக்குல படிச்ச நான் காலேஜ் செக்கண்ட். என்னாலயே நம்ப முடியல. 

படிப்பறிவு இல்லாத என் கிராமப் பிள்ளைங்களுக்காக தான் டீச்சிங்-ல இறங்கினேன். வாழ்க்கையில முடியாததுன்னு எதுவுமே இல்ல. சிலது சிலருக்குச் சுலபமா கிடைக்கும் சிலருக்கு அதுவே எட்டாக் கனியா இருக்கும். அதுக்காக முடியாதுன்னு துவண்டுடக் கூடாது. முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்!   

சாதிக்கறதுன்னா மார்ஸ் போய் கொடி பறக்க விடுறது மட்டும் இல்ல… நம்ம மன நிம்மதியும், கூட இருக்கவங்கள நிம்மதியா இருக்க விடுறதுமே பெரிய சாதனை தான்! எங்க வீட்டுல மட்டும் இல்ல சுத்தி இருந்த பசங்க எல்லாம் ஜாலியா விளையாடின போதும் நான் என்னை வருத்திப் படிச்சேன். என்னோட உழைப்பால என் மகன்… என் பேத்திங்கன்னு அடுத்து வந்த தலமுறை எல்லாம் தலை நிமிர்ந்து நிக்கிறிங்க. இது என்னோட சாதனை! நீயும் உன் சக்திக்கு ஏத்த மாதிரி ஒரு சாதன படைக்கணும்!”

பாட்டியும் பேத்தியும் அவரவர் கால காரியங்களை அலசி ஆராய்ந்தனர். எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் இப்படிப்பட்ட தருணங்கள் அபூர்வமாகிப் போனது சமுதாயத்தின் சாபமோ?

“நேத்து நைட்டோட சீரியல் இப்போ திரும்பவும் போடுவான். நேத்து மிஸ் பண்ணினத இன்னைக்குப் பிடிக்கணும்! நான் போய் நாட்டாமைக்கு என்ன ஆச்சுன்னு பாக்கறேன்.” 

பாட்டி கிளம்பி உள்ளே சென்றுவிட்டார். அவள் அமர்ந்தே இருந்தாள். பாட்டி சிந்திய ‘மிஸ்’ என்ற ஒற்றை வார்த்தை அவளை எங்கோ அழைத்துச் சென்றது. அங்கு வாயில் எதையோ அரைத்துக் கொண்டே வந்து நின்றான் அவன்.

  ‘சென்டர்ல இருப்பான். பாக்கலாம்!’ கள்ள மனது திட்டம் தீட்டியது. ‘படிக்கிற வேலையை மட்டும் பாரு!’ மூளை சாடியது.  சும்மா இருந்தா தானே பிரச்சனை? வீட்டு வேலையில் ஈடுபட்டவள், வேலை முடித்து தலைக்கு நீர் ஊற்றி, உண்டு முடித்து, கையில் ஒரு புத்தகத்தோடு மெத்தையில் அமர்ந்தாள். The Hidden life of Trees-ல் மூழ்கிப் போனாள். என்றுமே மரங்கள் மேல் தனி விருப்பம் அவளுக்கு. அவைகள் பேசிக் கொள்ளுமாமே… உணருமாமே! புத்தகத்தில் ஆழ்ந்து போனாள். 

அவளும் பேசுவாள் அவள் வீட்டுக் கொய்யா மரத்தோடு. அப்பாவும் தாத்தாவுமாக நட்ட செடியாம். இன்று அத்தனை பெரியதாகக் கிணற்றின் பின் நின்று கொண்டிருக்கிறது. வருடம் தோறும் கூடை கூடையாக சிறிய, சிகப்பு கொய்யா தரும்… தேன் தித்திப்பு அதன் சிறப்பு! 

மாதவனோடு அவளும் கிணற்றில் ஏறி, அங்கிருந்து கொய்யாவில் தாவி… நகுநாவையும் வசுவையும் இழுத்து தூக்கிக் கிளையில் அமர வைத்துக் காய் பறித்த நினைவலைகள் வருடி நின்றது. 

இரு வாலுகளும் இறங்கி விட, கிளையில் தொங்கிய வசுவை இறக்கி விட்டவர்களுக்கு நகுவை இறக்கத் தெரியவில்லை அன்று. ஒற்றைக்கை பிள்ளையை மரம் ஏற்றிவிட்ட குற்றத்திற்காக அதே கொய்யா சுள்ளியால் இவள் அடி வாங்க நடுவே வந்து விழுந்து மீதி அடியை அன்று மாதவன் தான் வாங்கினான். 

இவர்கள் இருவரும் அடி வாங்க அம்மா காலைக் கட்டிக் கொண்டு அழுதது என்னவோ நகுநாவும் வசுவும் தான்! புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துப் பிடித்தவள் இதழ் விரிந்தது. 

உண்ட மயக்கம்… தலைக்கூற்றிய மயக்கம்… கண்கள் தன்னால் மூடின.  மரம் பேசவில்லை. ஆனால் கனவில் வந்தது. அந்த மரத்தோடு மரமாய் இவளை ஒருவன் நிறுத்தி குரல்வளையைப் பிடித்திருந்தான். அவன் உதடு உதிர்த்த மந்தகாசப் புன்முறுவல் அவள் தலைமாட்டில் போட்டிருந்த கைப்பேசி அழைப்பால் காணாமல் போக, எரிச்சலோடே கண் திறந்தாள். 

லோன் தருகிறேன் என்று நீண்ட வரிசையில் வருபவர்களுக்கு எல்லாம் மதியம் மூன்று மிகவும் பிடித்த நேரம். வேலை எல்லாம் முடித்து சற்று கண் அசர நினைக்கும் தருவாயில் தான் அவர்களுக்கு கடன் கொடுக்க ஆசை முட்டிக் கொண்டு வரும். இன்றும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தாள். 

“மிஸ்.அலர்விழி?” என்றதும் வேண்டா வெறுப்பாகத்தான் “ம்ம்… சொல்லுங்க,” என்றாள். 

“டேர் டு ட்ரீம்-ல இருந்து ஸ்காலர்ஷிப் விஷயமா கால் பண்றேன்,” என்ற அந்த வரியில் பட்டென்று எழுந்து அமர்ந்தாள். எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தான். 

அப்படி ஒன்று அங்கு இல்லை என்று வனிதா கூறியிருந்தாளே… தன்னை யாரேனும் கிண்டல் செய்கிறார்களோ என்று ஒரு வினாடி தோன்றியது. “புரியல… யார்? எங்க இருந்து பேசறீங்க?” மீண்டும் கேட்டுக் கொண்டாள். உன்மை தான் போலும்! 

“சேக்கர் ஃப்ரம் டேர் டு ட்ரீம் மேடம். உங்க ஸ்காலர்ஷிப் விஷயமா பேசலாமா?” 

‘என்னது பேச..லா..மா..வா? பேசு பேசு’ என்று மனம் துள்ளியது. “சொல்லுங்க சார்,” என்றதும் சில பல கேள்விகள் கேட்கப்பட்டது. பதில் கூறினாள். வீட்டின் வருமானம், பள்ளி மதிப்பெண் என சில கோப்புகள் அனுப்பித் தருமாறு கேட்டுக் கொண்டான். 

“அனுப்புற டாக்யுமென்ட்ஸ் வெரிஃபை பண்ணிட்டு, நீங்க ஸ்காலர்ஷிப்புக்கு எலிஜிபிள்னா எங்க ஆஃபீஸ்ல இருந்து கால் வரும். ஆப்டிட்யூட் டெஸ்ட், உங்க காலேஜ்ல போன செமஸ்டர்ல படிச்ச கான்செப்ட்ஸ்-னு ரெண்டு  டெஸ்ட் இருக்கும். மொத்தம் மூணு மணி நேரம்! பாஸ் பண்ற மார்க் வச்சு, 40% டூ 70% வரைக்கும் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். ஒரு டெஸ்ட் ஃபெயில் ஆனா கூட ஸ்காலர்ஷிப்ப மறந்திடுங்க,” என்றபின் எந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்ற தகவல் பகிரப்பட்டது. 

அவளின் நிம்மதிப் பெருமூச்சோடு தாங்க்யூ வர, ‘ஆல் தி பெஸ்ட்’-டோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது. 

பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த எபி-க்குள்ளும் ஒரு நிம்மதி. அவளின் அந்த ஒற்றை நிம்மதி மூச்சிற்காக அவன் எத்தனை மணி நேரம் நிம்மதி இழந்தான்! 

அலர்விழி அல்லாது வேறு யாரேனும் அவள் இடத்திலிருந்திருந்தால் ‘உதவி செய்திருப்பாயா?’ என்ற மனசாட்சிக்குப் பதில் உடனே கூறவில்லை என்றாலும், பதில் தீர்க்கமாக வந்தது. அந்த பதில் ‘செய்வேன்’ என்பது. அப்படி ஒரு பதில் வரவும் தான் அம்மாவிடம் சென்று நின்றான்.  

“நாம என்ன ச்சாரிட்டியா ரன் பண்றோம் எபி?” இந்த கணினி மையத்தைப் பொறுத்த வரை எஸ்தர் தான் அனைத்தும். இன்று வரை மகனோ கணவனோ அதில் மூக்கை நுழைத்தது இல்லை, அதனால் அம்மாவிற்கு அவன் புதிய பரிமாணம் பிடிபடவில்லை. 

“பண்ணினா என்ன மா தப்பு? வருஷா வருஷம் என் பொறந்த நாள் அன்னிக்கு ஒரு இல்லத்துக்கு டொனேஷன் குடுக்கிறதவிட இது மேல் மா. முன்னுக்கு வரணும்ன்னு இருக்க பல வசதியில்லாத பசங்க முன்னுக்கு வருவாங்க மா. படிக்க ஆசை இருக்கறவங்களுக்கு தானே செய்யறோம்… செய்யலாம்மா. ஒரு வேள சாப்பாடு கொடுக்கிறத விட வருஷம் பூரா சாப்பிட வழி பண்ணித் தரது தானே நல்ல கொடை! அத செய்வோமே மா! நமக்கு நஷ்டம் வராம பார்த்துக்கலாம். டேக்ஸ் டிடக்ஷ்ன் இருக்கான்னு பார்ப்போம்.

மாடில ஒரு ஃப்ளோர வாடகைக்கு விடலாம். அந்த சிஸ்டம் எல்லாம் கீழ இருக்க இடத்தில அட்ஜட் பண்ணி போடுவோம். சோ கூட்டிக் கழிச்சா எல்லாம் ட்டாலி ஆகும்!” 

“ம்ம்ம்… யோசிக்கிறேன். எந்த போதி மரத்தடியில போய் உக்காந்த?” 

“ஒரு பொண்ணுமா!” என்று உள்ளம் மறையாமல் கூறிவனை எஸ்தர் கண்கள் விரிய பார்த்தார். “டேய்…? நான் அம்மா டா…” 

“அம்மா…!” 

“சரி சொல்லு” 

“சனிக்கிழம ஒரு விஸ்காம் ஸ்டுடென்ட் வந்தா, உள்ள வரும்போது அவ முகத்தப் பார்த்தேன். அதுல அவ்வளவு கனவு. அவ்வளவு எதிர்பார்ப்பு. அவளுக்கு இங்க கட்டுபடியாகல. வசதி இல்லங்கறது மட்டும் தான் ரீசன். திறமை இருந்தும் ஆசை இருந்தும் வசதி மட்டும் இல்ல. அவளால இங்க அஃபர்ட் பண்ண முடியாதுன்னதும் அவ முகம் வாடிப் போச்சு. கனவ தொலைச்சுடுவோமோன்னு ஒரு பயம், ஏக்கம், விரக்தி அதுல! அதப் பாத்துட்டு ஒண்ணுமே செய்யாம இருக்க முடியல மா. 

அந்த பொண்ணோட ஏக்கமான முகம் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது மா. அவளுக்கு மட்டும் உதவறதுல என்ன இருக்கு? ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு செஞ்ச கணக்குல போகும். இது.. அது இல்லமா… அவள மாதிரி படிக்கிற, வசதி கம்மியான பசங்களுக்கு அவங்க கனவ பிடிக்க உதவணும்.” 

“…” 

இது ஒரு பெண்ணால் எடுத்த முடிவென்றாலும், எண்ணம் அவளைத் தாண்டியது என்று புரியவைக்கும் நோக்கம் அவனிடம். “ம்மா… புரியுதாமா? பொண்ணால தான் இந்த முடிவு… ஆனா இது பொண்ணுக்காக இல்ல… ம்மா?” 

“ம்ம்,” புன்னகைத்தார். “ரொம்ப வளர்ந்துட்ட எபி. பெருமையா இருக்கு கண்ணா. எடுத்ததும் ஆழம் தெரியாம கால விட கூடாது. அடுத்த ஒரு பேட்ச்சுக்கு மட்டும் இத செய்வோம்! கட்டுபடியானா கன்டினியூ பண்ணலாம்!” என்று விட்டார். 

ஆக… அலர்விழி என்ற போதி மரம் அவனுள் இருந்த மனிதனை வெளிக் கொண்டு வந்திருக்க, அவர்கள் கணினி மையத்தில் இன்று அவளால் பல பிள்ளைகள் பயன்படும் கதவு திறக்கப்பட்டுள்ளது. கதவு அப்படி ஒன்றும் அகலமல்ல. பல தரப்பட்ட வடிகட்டலுக்கு பின்னரே தகுதியானவர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்றது அவர்களின் சட்ட திட்டங்கள். 

அந்த குறுகிய கதவு அலர்விழிக்கு போதுமானதாக இருந்தது. கல்லூரி திறந்து இரு தினங்கள் கழித்து, நான்கு மணித் தேர்வுக்கு வரக் கோரியிருந்தனர் மையத்திலிருந்து. 

மாலை கணினி மையம் கூட்டி வந்து விட்டவனிடம், “மாதுண்ணா, பயமா இருக்குண்ணா,” என நடுங்கின   தங்கையின் திறமை மேல் மாதவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. கடினமான கேள்விகள் தான்… கொஞ்சம் திணறவும் செய்தாள், ஆனால் முடித்து வெற்றிக் கொடி நாட்டினாள். 

error: Content is protected !!
Scroll to Top