07 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 7.2

 

“அம்மா… இவ கண்ண திறந்து வச்சுகிட்டே தூங்கறாம்மா,” நகு கூவிக் கொண்டே உள்ளே செல்ல, அப்பா வந்தார். 

மகள் இருளை வெறித்து அமர்ந்திருந்தாள். தலை வருடப் படவும் தலை நிமிர்த்தியவள் பார்வையில் அப்பா முன் வர… சிந்தனையில் ‘அவன்’ பின் சென்றான். 

“என்ன பாப்பா யோசனை? எக்ஸாம் நல்லா எழுதியிருக்க தானே?” 

அம்மா தட்டோடு வந்துவிட்டார்.  

“ரொம்ப நல்லா எழுதியிருக்கேன் ப்பா” 

“அப்புறம் என்ன பாப்பா ஏதோ மாதிரி உக்காந்து இருக்க?” 

“ஒண்ணும் இல்லப்பா. சும்மா உக்காந்து இருக்கவும் காத்துக்கு தூங்கிட்டேன்… அது தான்!” 

“சாப்பிட்டுட்டு உள்ள போய் நிம்மதியா கால் நீட்டிப் படு பாப்பா…” அப்பா வாஞ்சைசோடு மகள் தலை தடவ, “இல்ல பா, தூக்கம் எல்லாம் இல்ல” என்றவளை என்ன செய்யலாம் என்று பார்த்தான் தமையன்.

“அவளுக்கு கம்யூட்டர் க்ளாஸ் போகணுமாம் சித்தப்பா. அது தான் மேடம் மூட் சரியில்லாம சுத்தறாங்க!”  மாதவன் வாய் விட்டான். 

அம்மா உணவை உருண்டை பிடிக்க, மாதவன் வாய் திறக்க, முதல் வாய் அவனுக்கு. மாற்றி மாற்றி ஒவ்வொருத்தருக்காய் அவர் கொடுக்க, பிள்ளைகள் மூவரும் நிலவு ஒளியில் ஒன்றாய் உண்டு முடித்தனர். 

அன்று சென்று வந்த கணினி மையம் பற்றிக் கூறி முடித்திருந்தாள். 

“வேலை கிடைச்சிடுமா பாப்பா?” 

“ஆமா ப்பா… என்னால கண்டிப்பா அவங்க சொல்ற அளவுக்கு மார்க் எடுக்க முடியும். பெரிய கம்பனில கிடைக்கும் பா. கண்டிப்பா முதல் வருஷமே நாலஞ்சு லட்சம் வரைக்கும் எதிர் பாக்கலாம்பா.”

“சரி பாப்பா… உனக்கு சரின்னு பட்டா, அப்பா பணத்துக்கு ஏற்பாடு பண்றேன்” எல்லா அப்பாக்களும் போல் மகளுக்காக மட்டுமே யோசிக்கத் தெரிந்த அப்பாவாய் தியாகு!

பெண் முகம் மலர்ந்து முடிக்கவில்லை. 

“படிப்பு முடியவும் ரெண்டு வருஷம் வேலைக்கு போகப் போறியா? அதுக்கு எதுக்கு பாப்பா இவ்வளவு செலவு? கல்யாணம் ஆனதும் உன் புருஷன் வீட்டுல வேலைக்கு விடுறாங்களோ என்னவோ?” பெற்றவளால் பெண்ணின் கனவை மட்டுமே பார்க்க முடியாதே… அவள் ஆசைக்குப் பின்னும் முன்னும் இருக்கும் கணக்கு வழக்கையும் சேர்த்துத் தானே பார்க்க வேண்டியுள்ளது. 

“ம்மா.. என்ன மா? கல்யாணமா? ஏன் மா? எனக்குன்னு ஒரு தடம் பதிக்கணும்மா. எனக்கு கனவு இருக்குமா. கண்டிப்பா அதுல இப்போதைக்கு கல்யாணம் இல்லமா.” 

“அப்போ என்ன சாமியார் ஆகப் போறியா?” 

“ஷ்ஷ்ஷ்…! என்ன சௌந்தர்யா இது? படிக்கிற பிள்ளை கிட்ட என்ன பேச்சு இது? அவ படிக்கட்டும். வேலைக்குப் போகட்டும். அதுக்கப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு அதப் பத்தி யோசிப்போம். பொம்பளக் குழந்த சுயமா நிக்க கத்துக்க வேண்டாமா? படிப்பும், வேலையும் இருந்தா பிள்ளைங்க தன்னம்பிக்கையோட இருப்பாங்க. நேரங்காலம் பாக்காம ஒரு குறிக்கோளோட கண்விழிச்சுப் படிச்சு, கஷ்டப்பட்டு வாங்கின வேலைய எதுக்கு கல்யாணம் பண்ணினதும் விடணும்?” 

எப்பொழுதும் போல் பாட்டி தான் பேசினார் அவளுக்காக. 

“என்ன அத்த பேசறீங்க? இவளுக்கு இன்னும் ஒண்ணரை வருஷப் படிப்பு, ஹாஸ்டல் செலவு இருக்கு. அடுத்து நகு-க்கு படிப்பு செலவு இருக்கு. இப்படியே கல்யாணத்துக்குச் சேர்த்து வைக்கிறதை எல்லாம் காலி பண்ணிட்டா… பொண்ணுங்களைக் கரை சேர்க்க வேண்டாமா?” 

“மா, நான் இங்க தானே லோக்கல்ல படிக்கப் போறேன் எனக்கு ரொம்ப எல்லாம் செலவு ஆகாது. அக்கா கேக்கற க்ளாஸ்ல சேர்த்து விடுங்களேன்.” நகு நடுவே பேச, “இது என்ன புதுப் பழக்கம் நகுநா, பெரியவங்க பேசும் போது நடுவுல பேசிகிட்டு?” அம்மா காய்ந்தார். 

“அவ என்ன தப்பா சொல்லிட்டா? பொண்ண, கேட்ட கிளாஸ்ல சேர்த்து விடேன் சௌந்தர்யா!” – பாட்டி 

“அத்த… அவ கேக்கிற க்ளாஸ் லட்சத்து இருபதினாயிரமாம்!” 

ஒரு நிமிடம் அங்கு அமைதி நிலவ, மாதவன் கிணற்றின் திண்டின் மேல் அமர்ந்து கொண்டு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். சத்தம் எழுப்பாமல் சித்தப்பாவிடம் பேசியிருக்க வேண்டும். அவரிடம் தனிமையில் பேசியிருந்தால் அமைதியாக அலர்விழிக்கு சாதகமாக முடிந்திருக்கும். 

“கட்டையில போற வயசுல எனக்கு எதுக்கு கையிலயும் கழுத்துலயும்? இத வித்து பிள்ளையைப் படிக்க வை.” சகுந்தலா பாட்டி தீர்மானமாகக் கூறினார். 

“அம்மா, என்ன பேச்சு இது?” – தியாகு 

“பாட்டி…! ஏன் பாட்டி இப்படிப் பேசறீங்க? அப்படி ஒண்ணும் எனக்கு படிக்க வேண்டாம்,” அலர் பாட்டியின் மடி சாய்ந்தாள்.  

“பாப்போம் பாப்பா… என்ன பண்றதுன்னு. ஒரு ஃபிக்ஸட் டெபாசிட் இருக்கு. அத எடுப்போம். என்ன வட்டி கிடைக்காது. போகட்டும் விடு!” – அப்பா 

“பொம்பளைப் பிள்ளைக்கு படிப்புக்கே இவ்வளவு செலவு செஞ்சா… இவ அளவுக்கு மாப்பிளை தேடணும். பெரிய படிப்பும், நல்ல வேலையிலும் இருக்கவருக்கு என்னத்த கொடுத்து பொண்ணைக் கரை சேர்க்க..?” 

“எனக்கு விலை கொடுத்து வாங்கற மாப்பிள்ளை வேண்டாமா” 

“அலர்விழி!” 

“ப்ச்! யாரையாவது வாங்குங்க! ஒரு தரம் ஆன் சைட் போனா போதும் மா… சேத்துடலாம்!” 

“வெளிநாடு போற வாய்ப்பு கிடைக்கலனா? நடக்கிறதை மட்டும் பேசுவோம் பாப்பா! உன் படிப்புக்கோ உன் ஆசைக்கோ நான் எப்பவுமே எதிரி இல்ல, அத புரிஞ்சுக்கோ! எனக்கு நீ மட்டும் இல்ல உன் தங்கச்சியும் இருக்கா! சொத்துன்னு இருக்கறது இந்த ஒரு வீடு தான்! உன் அளவுக்கு அவளுக்கும் வரன் பாக்க வேண்டி வருமே… என்னத்த வித்துக் கொடுப்போம்?” 

பேச்சு போகும் திசை சரியில்லை என்று புரிந்தது அலர்விழிக்கு. நகுநாவின் கை பற்றி அம்மா ஒரு வார்த்தை கூறினாலும் தங்கை உடைந்து போக மாட்டாளா? தங்கை காயப்பட்டு… அம்மா விருப்பமின்றி தரும் இந்த படிப்பு தேவை தானா? அம்மாவும், நகுவும் முதன்மையாகத் தெரிய, கனவாவது ஏதாவது என்ற முடிவுக்கு வந்தாள்.  அவள் குடும்பம் முன் அவள் கனவு பின் சென்றது!

“சரி விடுங்க ம்மா, முதல்ல காலேஜ் முடிக்கிறேன். அப்புறம் மத்ததை யோசிப்போம்!” என்று முடித்தாள். 

மூத்த மகளாய், பிரச்சினையாக முன் நின்ற அவள் ஆசைக்கு, தங்கை முகம் பார்த்து முற்றுப் புள்ளி வைத்தாள், அலர்விழி! இதுவே மற்ற எல்லா பிரச்சினைகளுக்கும் வழக்கமாய் மாறிப் போகாமலிருந்தால் சரி தான்! 

மாதவன் பேச வார்த்தை இல்லாமல் நின்றிருந்தான். அளவான குடும்பம். அளவான வருமானம். பாசம் கொட்டிக் கிடக்கிறது. ஒருவர் மற்றவர்களுக்காக யோசிப்பதும், தாங்குவதும் பார்க்க அழகு தான்!  

வசதி இல்லை என்பதால் இதுபோல் எத்தனை பிள்ளைகளுக்கு அவர்கள் படிப்பும், பட்டமும் கூட எட்டா நிலவாகப் போய் விடுகிறது! கொட்டிக் கிடப்பதை அள்ள ஆள் இல்லாமல் அவர்களிடம் இருக்க, லட்ச ரூபாய்க்கு எவ்வளவு பாடு. இவர்கள் சேர்க்காவிட்டால் என்ன? அவன் தங்கையை அவள் இஷ்டப்படி படிக்க வைத்தே தீரும் நோக்கம் அவனிடம். 

சௌந்தரியா படித்தவர் தான். ஆனால் பழமைவாதி. அவருக்குத் தெரிந்ததெல்லாம் வீடும், அலுவலகமும், கோவிலும் தான்! ஒரு வட்டம் இட்டு அதைத் தாண்ட விரும்பாதவர். நூலைப் போலத் தானே சேலை இருக்க வேண்டும்? ஆனால் ஏன் அவர் மகள் மட்டும் அனைத்து விஷயத்திலும் அவர் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறாள்? 

“என்னதான் இருந்தாலும், எந்த வேலைக்குப் போனாலும், பொண்ணுங்க கல்யாணம் ஆனாலே ஒரு வீட்டுக்குப் போய் சமைக்கத் தானே போறாங்க? குழந்தையை பார்த்துக்க ஆள் இல்லன்னா அந்த வேலையும் போச்சு! அதுக்கு தான் பாப்பா சொல்றேன்!” கால காலமாய் நடைமுறையில் அது தானே நடக்கிறது! 

“பாரம்பரியம், பண்பாடு, பழமை எல்லாம் ஒரு எல்லைக்குள்ள இருக்கணும். ஆனாலும் காலத்துக்கு ஏத்த மாதிரி மாறத் தெரியணும். பொண்ண பெத்தாலே கல்யாணம்னு ஒரு சின்ன வட்டத்துக்குள்ள அடக்க நினைக்கக் கூடாது. அவ, அவள பத்தித் தெரிஞ்சுக்க அவகாசம் குடு.  

அவளுக்குன்னு ஒரு தடம் பதிக்க விரும்பறவ கனவைப் புரிஞ்சு அவள மேல் தூக்கி நிறுத்தத் தெரியறவனுக்கு கட்டிக் கொடுக்கணும். அத விட்டுட்டு அவ வாழ்க்கையில இன்னும் வராத ஒருத்தனுக்காக படிக்க விரும்பிற பிள்ள படிப்பக் கெடுத்துகிட்டு! 

கல்யாணமான கையோட அவ சுயத்தைச் சாம்பல் ஆக்குற எவனையும் காசு கொடுத்து வாங்க வேண்டாம் என் பேத்திக்கு. என் பேத்திங்க அறிவுக்கும், திறமைக்கும், அழகுக்கும் எல்லாம் நல்லதே நடக்கும். படிக்க வை மா!” 

“எல்லாம் சரி தான் அத்த… இவ்வளவு பணம்? அது தான்! அப்போ அந்த ஃபிக்ஸட் டெப்பாசிட்ட ப்ரேக் பண்ணணுமே!” 

“அது எல்லாம் தேவைப் படாது சித்தி. அவ மார்க்குக்கு 75% ஸ்காலர்ஷிப் கிடைக்கும் சித்தி. எந்த சென்டர்ல்ல அந்த வசதி இருக்குன்னு விசாரிச்சு சேர்த்து விடுவோமே… ஒரு முப்பது எல்லாம் சமாளிச்சுடுவீங்க தானே..?” மாதவன் வாய்க்கு வந்ததை அளந்து விட்டான்! 

அலர்விழிக்கு தெரிந்தது, மீதி பணத்தை மாதவன் தான் கட்டப் போகிறான் என்று. “ண்ணா…” அவள் வாய் திறக்கவும், “உள்ள போ அலர். அப்புறம் பேசுவோம். நாளைக்கு காலையில நான் கிளம்பணும். படுக்கப் போறேன்,” என்று பேச்சைக் கத்தரித்தான். 

மாதவன் படுக்கச் செல்ல மாநாடு கலைய ஆரம்பித்தது. அப்பாவும், அம்மாவும் பணத்திற்கு என்ன செய்வது என்று பேசிக் கொண்டே உண்ணச் செல்ல, நேரம் பார்க்க, கடிகாரம் மணி ஒன்பது என்றது.

“போங்க பசங்களா… உங்களால என் ‘சிங்க நாட்டாமை’ சீரியல் போச்சு! பட்டணத்துப் பொண்ணப் பாத்து லவ்வ சொல்ல, வேகமா வண்டியில போனான். எதிர்ல இன்னும் வேகமா லாரி வந்துது. என்ன ஆச்சோ? ஹீரோ உயிரோட இருக்கானோ என்னவோ போ!” தன் போல் பாட்டி புலம்பிக்கொண்டே படுக்கச் சென்றார். 

அவரைத் தொடர்ந்து தைல பாட்டிலோடு நகுநா. அவளைத் தொடர்ந்து அலர். 

“ஹீரோ செத்துட்டா கதை எப்படி பாட்டி நகரும், இருப்பான் கவலைப் படாதீங்க!”

“அதுவும் சரி தான்!”

“அந்த லூசு நாட்டாமைக்கு லவ் ஒரு கேடா? அந்த மேதாவிய அந்த பட்டணத்துப் பொண்ணு வச்சு செய்யணும் நகு. அப்போ தான் எருமைக்கு அறிவு வரும்!”

“இல்லாத அறிவு எங்க இருந்து வருமாம்?” இருவரும் கெக்கப் பிக்க எனச் சிரிக்க,  “பாப்பா… அண்ணாக்கு பால ஊத்திக் கொடுத்துட்டு, அவனுக்கு படுக்கை ரெடி பண்ணு!”  அம்மா சத்தம் கொடுக்க, நாட்டாமையை மறந்து போனாள். 

அறைக்குச் சென்றவள், படுக்கையை விரித்துக் கொண்டே, “ண்ணா..” என்று ஆரம்பித்தாள். ஆரம்பிக்க மட்டும் தான் முடிந்தது. 

“வார்த்தைக்கு வார்த்தை அண்ணான்னு சொல்லு… ஆனா அது வார்த்தையில மட்டும் தான் இல்ல?” 

“ஏன் ண்ணா அப்டி சொல்ற?” 

“ம்ம்… நான் உன் அண்ணன்னா நான் செய்யறத நீ தடுக்காத. ஆமா, அம்மாவும் அப்பாவும் சைட்ல பணம் வாங்க தான் செய்யறாங்க. இவங்க வாங்கினா தான் இவங்க மேல இருக்க அதிகாரிங்களுக்கு இவங்களால கொடுக்க முடியும். அப்படி இவங்க நல்லவங்களா பணம் வாங்காம, மேல இருக்கவங்களுக்குப் பணம் கொடுக்க முடியாதுன்னு சொன்னா… வருஷத்துக்கு நாலு ட்ரான்ஸ்ஃபர் இருக்கும்.

அதுக்காக அவங்க செய்யறது சரின்னு நான் சொல்லல. முழு சிஸ்டமும் அப்படித்தான் இருக்கு. அந்த பணத்துல தான் நான் சாப்பிட்டு, படிச்சு, வாழ்ந்துட்டு இருக்கேன். அதனால நான் உனக்கு அண்ணனா இல்லாமப் போகலியே…? சோ, வாய மூடிட்டுப் போய்டு. நான் செய்யறத வேண்டாம் சொன்னா, நானும் உனக்கு இல்ல.” 

“ப்ச்.. நீ ரொம்ப பேசற ண்ணா…” 

“போ, போய் நிம்மதியாத் தூங்கு.” 

“அம்மா, அப்பா ஒத்துக்கணுமே” 

“நீ வாய் திறக்க வேண்டாம். நேரம் பாத்து நானே சித்தப்பாட்ட சொல்றேன்” 

சொல்லுவானா? நம்பாத பார்வை அவள் பார்க்க, அவன் கள்ளச் சிரிப்பு சிரித்தான்.  

“நான் சம்பாரிச்சு திருப்பித் தருவேன் ண்ணா” 

“ம்ம். வட்டியோட எதிர்பார்ப்பேன்,” புன்னகைத்தான். 

“ரொம்ப தேங்க்ஸ் ண்ணா…” அண்ணன் கையைப் பிடித்துக் கொண்டாள். 

“போடி போடி… போய் நிம்மதியாத் தூங்கு!” தலையில் தட்டி துரத்தி விட்டான். 

வேண்டாம் என்று கூறியவள் தான்… அண்ணன் பிடிவாதமாக உதவ முன்வரவும், எங்கோ ஒரு மூலையில் எழுந்த சின்ன களிப்பு மனம் முழுவதும் பரவ, உடலில் ஒரு புத்துணர்வு. நடையில் ஒரு துள்ளல். வாயில் ஒரு பாடல்.  பார்த்து நின்றவன் முகத்தில் புன்முறுவல். 

அண்ணன் அமைவது கூட இறைவன் கொடுத்த வரம் தான் போலும்.

error: Content is protected !!
Scroll to Top