Skip to content
அத்தியாயம் 7.1
“மிஸ் மீ?” கேட்டவனுக்கு இரண்டு நாளாகியும் நிமிடம் கரைய மறுத்தது. அன்று மயிரிழையில் மிஸ் செய்தான் அவளை. பழச்சாறு ஏற்படுத்திய பிசுபிசுப்பு அருவருப்பைக் கொடுக்க, விஜயிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நேரே வீட்டை நோக்கிச் சென்றவன் குளித்து உடை மாற்றி அடித்துப் பிடித்து வருவதற்குள், கணினி மையத்தில் அலர்விழியின் வேலை முடிந்திருந்தது.
சாலையோரம் கைப்பேசியில் முகம் சுளித்துப் பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் மகிழுந்தை நிறுத்தினாலும் இறங்கவில்லை.
தெரிந்தது. காலையில் பார்த்ததிற்கும் அந்த நொடி அவள் முகம் பார்ப்பதற்கும் தான் எத்தனை வித்தியாசம்.
காலையில் அவள் நயனங்கள் ஏந்தியிருந்த எதிர்பார்ப்பு… ஆர்வம்… கனவு… எல்லாம் காணாமல் போயிருக்க அதில் ஏமாற்றமும் ஏக்கமும் தான் தெரிந்தது அவனுக்கு. முகத்தில் அப்படி ஒரு சலிப்பு! யாருடனோ சலிப்பைப் பகிர்ந்து கொண்டிருந்தாள்.
அவளை அழைத்துப் பேசத் துடித்தாலும்… அது சரிப்படாது! இம்முறையும் அவளைப் பற்றி யோசிக்க வகை செய்து விட்டே இடத்தைக் காலி செய்தாள்.
‘ஏன்? இடம் பிடிக்கவில்லையா? அவள் எதிர்பார்ப்பை இந்த மையம் பூர்த்தி செய்யவில்லையா? விஜய் சொதப்பி விட்டானா?’ மையத்தின் உடமைக் காரனாய் யோசித்தான். பண நெருக்கடி கண்டிறாததாலோ… இல்லை அவளின் தோற்றமோ… எதுவோ ஒன்று கட்டணம் அலர்விழிக்கு அதிகமாயிருக்கும் என்ற எண்ணத்தைக் கொடுக்கவில்லை.
‘ஏன்?’ என்ற கேள்வி மூளையை அரித்தாலும், அதிகம் யோசிக்க நேரமில்லை… அவளிடம் சென்று நடுரோட்டில் பேசும் அளவிற்குப் பரிச்சயமுமில்லை.
அவனுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள் முடியவும் வனிதாவைத் தான் பிடித்தான்.
“அவ வேலைக்கு ஆக மாட்டா எபி,” சிரத்தையில்லாமல் அவள் கூற… அவளின் ஆரம்பமே எபி-க்கு பிடித்தமில்லை. வயதில் சிறியவன் தான். ஆனால் அனுபவம் அதிகம். வயது பதினான்கைத் தொடுமுன்னே மையத்தில் அம்மாவோடு நுழைந்தவன், பதினாறு முடியும் வேளை கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்திருந்தான். கல்லூரி நுழையவும் அம்மாவோடு தொழில் நுணுக்கங்களைக் கற்கத் தொடங்கினான். இன்று அவனுக்குத் தெரியாத விடயம் அந்த மையத்தில் இல்லை. இருந்தும் அதில் முழுவதுமாக அவன் இறங்க விரும்பவில்லை. அம்மாவிற்கு உதவுவதோடு நிறுத்திக் கொண்டான்.
“எத வச்சு அப்படி சொல்றீங்க வனிதா?” பொறுமையாகக் கேட்டுக் கொண்டான் நடந்ததை.
அவள் நீட்டிய விசிட்டிங் கார்டில் இருந்த எண்ணை மனதில் பதித்தவன் அதைப் பார்த்துக் கொண்டே பேச்சை வளர்த்தான்.
“வனிதா இன்னும் எத்தனை நாள் தான் வர கேண்டிடேட்டோட சின்ன சந்தேகத்தைக் கூட நீங்க தீர்த்து வைக்காம ஃபேக்கல்டிய தேடுவீங்க. நீங்களும் கோர்ஸ் டீடெயில்ஸ் எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமா?”
“தெரிஞ்சுக்குறேன் எபி.”
“எப்டி?”
அவள் விழிக்க, “எல்லா கோர்ஸ்சோட பேசிக்கும் கவர் ஆகற மாதிரி உங்களுக்கு ட்ரெயின் பண்ணலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?”
“சரி எபி”
“தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கினாக் கூட அதுக்கு கண்டிப்பா 30 நாள் வேணும். ஒரு ஃபேக்கல்ட்டியோட ஒரு மணி நேரம் தினமும் வேணும். சோ நீங்க 30 பே பண்ணிடுங்க…”
“பாஸ்? தர்ட்டி தௌஸ்சண்டா?” நெஞ்சில் கைவைத்த பெண்ணிற்கு மூச்சு முட்டியது!
“இல்லன்னா ரெண்டு மாச சம்பளத்தை பிடிச்சுக்கலாம்.”
“என்ன எபி… குறைக்க முடியாதா? ரொம்ப அதிகம் பாஸ்! என்னால அவ்வளவு எல்லாம் முடியாது பாஸ்.”
“என்ன ஆஃப்ட்டரால் 30 தானே… அது கூடவா முடியாது? நீங்க வேலைக்கே ஆக மாட்டீங்க போல…” சிரித்தான். வனிதா முகம் சிறுத்துப் போனது.
“என்ன வனிதா? நமக்குன்னதும் வலிக்குது இல்ல?” பொறுமையாக முகம் பார்த்துக் கேட்டான். அவளுக்கு உரைத்திருக்க வேண்டும், “சாரி பாஸ்” என்றாள் சின்னக் குரலில்.
“அவங்ககிட்ட கேளுங்க உங்க சாரிய! அடுத்தவங்கள ஜட்ஜ் பண்ணதான் நமக்கு எவ்வளவு அவசரம் இல்ல?”
“சாரி பாஸ்”
“அரை மணி நேரத்துல நம்ம சென்டர்ல ஸ்காலர்ஷிப் ஃபெசிலிட்டி கொண்டு வர என்ன என்ன செய்ய வேண்டியிருக்கும்னு ஹெச்.ஆர். மாஹேஷ் கிட்ட எனக்கு அப்டேட் குடுக்க சொல்லுங்க.”
அவன் நகரவும், அவளின் “பாஸ்” அவனை நிறுத்தியது. “இனி மேல் இங்க நீங்க தானா?” இத்தனை வருடங்களில் என்று இவன் இப்படிப்பட்ட முடிவுகள் எடுத்தான்? அவள் குழம்பிப் போனாள்.
‘நீ குழம்பிக் கொண்டே சொன்னதைச் செய்’ என்று நினைத்திருப்பான் போலும், புன்முறுவலோடு அன்று நகர்ந்து விட்டான்.
இன்று, இரண்டு நாட்களாகியும் அவன் மனம் எங்குமே நகரமாட்டேன் என்று அவளையே சுற்றி வருகிறது. முதல் சந்திப்பிலேயே அவனுள் ஏதோ செய்தாள்… பார்க்கும் பெண்களிடம் எல்லாம் நடனமாடும் நயனத்தைத் தேட வைத்தாள். அடுத்த சந்திப்பில் இதயத் துடிப்பை அவனுள் கடத்தி வாரக் கணக்கில் விளையாட்டு மைதானம் முழுவதும் அவளைத் தேட வைத்தாள்… மூன்றாம் சந்திப்பில், தேடியது போதும் என்று உள்ளே ஊடுருவி சட்டமாய் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்.
‘அலர்விழி!’ ஐஸ்(eyes) பேபி! சொல்லிப் பார்த்துக் கொண்டான். ‘நல்லா தான் உனக்கு பேரு வச்சிருக்காங்க உங்க வீட்டுல… அலர்விழிய விட அபிநய விழின்னு வச்சிருக்கலாம்! பிறந்ததும் இப்படித்தான் கண்ண விரிச்சு அழகா உருட்டி உருட்டிப் பார்த்திருப்ப, அந்த அழகுல உன் அப்பா மயங்கி உனக்கு இந்தப் பேரு வச்சிருப்பார்…’
மடிக்கணினியைப் பார்த்துக் கொண்டே கன்னியை நினைத்து அவளின் பெயருக்குக் காரணம் கற்பித்துக் கொண்டிருந்தான் எபி.
“தல… காப்பி குடிக்க வரியா?”
அன்று ஒரு நாள் நீல சட்டையோடு மரத்தடியில் நின்றிருந்தானே… அவனே தான், ஹம்ரிஷ்! பொறியியல் கல்லூரியில் நான்கு வருடங்கள் ஒன்றாகப் படித்து, ஒன்றாய் கேம்பசில் தேர்வாகி இன்று ஒரே டீமில் இருவரும்!
அவன் பேச்சு இவன் காதில் விழுந்தால் தானே…
“டேய் எபி… காலைலயே இன்னைக்கு ஆரம்பிச்சுட்டியா? இன்னைக்கு எந்த யூனிவர்சிட்டி நினைச்சு கனவு கண்டுட்டு இருக்க?”
“ம்ம்ம்? வா போலாம்” எழுந்து கொண்டான் எபி.
“என்ன டா யோசனை? யுனிவர்சிட்டி முடிவு பண்ணிட்டியா?”
“ஏற்கனவே முடிவு பண்ணினது தான். எம்.ஐ.டி. (Massachusetts Institute of Technology MIT) இல்லன்னா ஸ்டேன்ஃபர்ட்(Stanford University). அதுல சந்தேகமில்ல.”
“அப்போ என்ன புது யோசனை?”
“அன்னைக்கு ஒரு மாடர்ன் ராட்சசிய ரோட்ல பார்த்தோமே…”
“யார டா சொல்ற?”
“அது தான் ரோட்ல ஒரு பிக் பாக்கெட்ட சாத்தினாங்களே…?”
“லேடி ஜாக்கி சான்?”
“அவங்களே தான்!”
‘அவங்களா? சின்னப் பொண்ணுக்கு எதுக்கு மரியாத?’ என்று பாத்தவன், “அவங்களுக்கு என்ன?” என்றான் சந்தேகப் பார்வையோடே.
“உள்ள பூந்து அட்டகாசம் செய்றாடா மச்சான்.”
ஹமியின் கண்களில் குழப்பமா… ஆச்சரியமா? ஏதோ ஒன்று! “திரும்பவும் பார்த்தியா? எங்க?”
“சென்டர்ல”
“லவ்வா…?” நம்ப முடியாத பார்வை ஹம்ரிஷிடம்,
“லூசாடா நீ?” நம்ப முடியாத பார்வை எபி-யிடம்.
“பின்ன? ஆறு மாசம் மேல ஆச்சே டா. இன்னும் அவங்கள நினைவு வச்சிருக்க? போதாக் குறைக்கு நான் அவ இவன்னு கூப்பிட கூடாதுன்னு அவங்கன்னு ஆரம்பிச்சு, நான் அவங்கன்னு சொன்னதும் அவன்னு நீ மாத்திகிட்ட!”
மெல்ல சிரித்தான். “எதோ ஒரு அட்ராக்ஷன்… பிடிச்சிருக்கு. கொஞ்ச நாளாவே ரொம்ப டிஸ்டர்ப் பண்றாடா. அந்த ஃபீல் பிடிக்கவும் செய்யுது… அதே சமயம் பிடிக்கவும் இல்ல! கொஞ்ச நாள் கண்டுக்காம விட்டுட்டா இந்த ஃபீல் போயிடும்னு நினைக்குறேன்…”
“ம்ம்ம்.. பாத்து டா. உன் வாழ்க்கை குறிக்கோளே வேற… எம்.ஐ.டி.க்காக எத்தன வருஷமா ஆசப் பட்டு ரெடி ஆகிட்டு இருக்க, பொண்ணு பின்னாடி போய் இங்கேயே தேங்கி நின்னுடாத!”
‘கல்லூரிக் கல்வி’ கண்டிப்பாகச் சிறந்த மேல் நாட்டு பல்கலைக் கழகத்தில் தான் என்பது அவன் பள்ளிப் பருவத்திலேயே எடுத்த முடிவு. தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் படிப்பு என்பது அத்தனை சுலபமல்ல. ஆர்வம் மட்டும் போதுவதில்லை. உழைக்கத் தயாராயிருக்க வேண்டும். அதற்காகவே சிறந்த மதிப்பெண்ணைப் பெற்றிருந்தான்.
தமிழோடு ஜாப்பனீஸ், ஃப்ரென்ச் என அயல் நாட்டு மொழிகளைக் கற்றான். கூடை பந்தில் சிறந்து விளங்கினான். டென்னீஸ், ஸ்விம்மிங் என்று பல போட்டிகளில் பங்கேற்று மெடல்களும் வாங்கி வைத்திருந்தான். கிட்டார், பியானோ, வோக்கல் என்று இசையையும் விட்டு வைக்கவில்லை. பள்ளிப் பாடங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் வரலாற்றை பயின்றான். அறிவை வளர்த்துக் கொண்டான். அம்மாவோடு கணினி மையத்தில் நேரம் கழித்தான். பாடம் கற்பித்தான். இது அத்தனையும் எம்.ஐ.டி.-ஐ மனதில் கொண்டு!
குடும்ப சூழல்… கல்லூரி வாழ்க்கை இங்கேயே என்றானது! ஆனால் மேல் படிப்பு கண்டிப்பாக எம்.ஐ.டி. என்பதில் திடமாய் நின்று கொண்டிருக்கிறான்.
“இல்ல டா மச்சான். கனவ மறக்கல. மறக்கவும் மாட்டேன் டா,” என்றவன் பொய் கூறவில்லை.
அந்த மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் கேஃபட்டீரியா நோக்கி நண்பர் பட்டாளம் செல்ல, டீம், பிராஜெக்ட், ஃபிகர், அலுவலக அரசியல் என்று பலதும் முன் வர, எபியின் சிந்தனையில் அலர்வழி பின் சென்றாள். எபி-யின் அன்றைய பொழுதை வேலை முழுவதுமாக இழுத்துக் கொள்ள இரவு எட்டு மணி ஆனது மடிக்கணினியை எடுத்துக் கொண்டு வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல.
மகிழுந்தில் ஏ.ஆர்.ரகுமான் இசைக்க ஹரிஹரன் பாட ஆரம்பித்தார். பாரதியின் பாடல் வரிகளில் தன்னைத் தொலைக்க ஆரம்பித்தான்.
“சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ?
வட்டக்கரியவிழி கண்ணம்மா வானக்கருமை கொலோ?”
ஹரிஹரனின் மனதை மயக்கும் குரலா? அவர் குரலின் ஏற்ற இறக்கங்களா? இல்லை பாட்டில் ஒளிந்திருந்த கருத்தா? எது அவன் இதயத்தை வருடியது?
மயிலிறகாய் வந்து வருடியவள் அவன் சிந்தனையில் வந்து விழி விரித்தாள். பாரதியார் உணர்ந்து தான் எழுதினாரா? தெரியவில்லை. உணராமல் இப்படி எல்லாம் எழுத முடியாதே… பாட்டின் வரி பல உணர்வுகளை அவனுக்குள் கடத்த, அவனும் உணர்ந்தான்.
சூரியனாய் எரித்து சந்திரனாய் குளிரவைக்க அவள் ஒருத்தியின் பார்வையால் மட்டும் தானே முடிகிறது! ‘அலர்விழி!’ ‘விழி…’ மனம் அரற்றியது. உணர்வுக்குள் கரைந்து தொலைந்தான்.
அவளை நினைத்துக் கொண்டே இருக்கப் பிடித்தது. அவள் நினைவு அவனை ஆக்கிரமித்து அவனை முடமாக்குவது அவனுக்குப் பிடிக்கவில்லை. இரண்டும் கெட்டான் நிலை. சிகரம் ஏறக் காத்திருப்பவனுக்கு கவனச்சிதறல் சறுக்கலாய் போய் விடக் கூடாதே… நினைக்காதே மனமே என்று கூறிக் கொண்டே அவளை மட்டும் தான் நினைத்தான்.
இத்தனை போராட்டத்திற்கு இடையிலும் ‘என்னை நினைப்பாளா?’ என்று மனம் எதிர்பார்ப்பு கலந்த வாஞ்சையோடு கேள்வி கேட்கத்தான் செய்தது.
நினைப்பாளா? நினைத்துக் கொண்டு தான் இருந்தாள் அவள். உறக்கத்திலும்!
“மிஸ் மீ?” கண்கள் மின்னக் கேட்டான் அவன்.
“மிஸ் மீ?” சவ்வு மிட்டாயோடு அதே நமட்டு புன்முறுவல்.
“மிஸ் மீ?” வாஞ்சையோடு பார்த்தவனுக்குள் மூழ்கிப் போகத் தவித்தது மனது.
இந்த உணர்வு தவறாயிற்றே… சட்டென்று ஒரு கோபம், “யார் டா நீ எனக்கு? மிஸ் பண்ண?” சத்தமாக முனகினாள் அலர்விழி.
“ஏய் அலர்” நகுநா உலுக்க கொல்லைப்புற திண்ணையில் சாய்ந்து அமர்ந்த வாக்கிலேயே கண்ணயர்ந்திருந்தவள் கண்கள் திறந்தாள். இருட்டாக இருந்தது. அவன் எங்கே? மூடிய அறையில்லை. திறந்த வெளி! நிலவு ஒளியில் கிணறும் மரமும் அவள் முன். அவனில்லை! எங்கு சென்றான்? கண்கள் அவனைத் தேடின.
“அலர்?” மீண்டும் நகுநா உலுக்க, உணர்வு பெற்றாள்.
“யார மிஸ் பண்ற?” நகு கேட்க, அலர்விழியிடம் உணர்ச்சியற்ற முகபாவம். மூன்று முறை பார்த்திருப்பாளா அவனை? பெயர் கூடத் தெரியாதே! இரண்டு வார்த்தைகள் பேசியிருக்கிறான்… எப்படி தனக்குள் பதிந்து போனான்? அவளுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. பள்ளியில் ஆண்களோடு தான் படித்தாள்! அவர்களை எல்லாம் ஒரு பொருட்டாய் எண்ணியதே இல்லையே! இப்படி எல்லாம் ஆண்களைப் பற்றி எண்ணியதோ, ஏன் கவனித்தது கூட இல்லையே. அவள் நிலை அவளுக்குப் பிடிக்கவில்லை.
இருமுறை அவனைக் காயப்படுத்தியும் எந்த முகச் சுளிப்பும் காட்டாமல், நமுட்டு சிரிப்பை உதிர்த்தவனால் மனதில் சின்ன சலனம், அது அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. வேண்டாம் என்று நினைக்க நினைக்க அதிகமாக அவனை நினைத்தாள். இரண்டு நாட்களாக அவன் நினைவு வந்து அவளை இம்சிப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை!
‘போடா நீ யாரோ. என் கனவு வேற அதுல நீ இல்ல. போடா’ மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டாள். அவன் நினைவுகளைத் தள்ளி நிறுத்த நினைத்துத் தோற்றுக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. ‘படிக்கும் வயதில் இது உனக்குத் தேவையா? ம்ம்ஹூம், இது தேவையில்லாத சிந்தனை. வயதுக் கோளாறில் சிக்கினால் வாழ்க்கை தடம் மாறிப் போகும் பெண்ணே! வேண்டாம், நீயும் உன் சிந்தனைகளும்!’ மூளை, அவனைத் தள்ளிவிட முயன்று எக்கச்சக்கமாக தோற்றுக் கொண்டிருந்தது.
error: Content is protected !!