03 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

வா… காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 3

.

வேளச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து நிமிட பயண தூரத்திலிருந்த வீட்டின் முன் ஆட்டோ நிற்க அதிலிருந்து இறங்கிய அலர்விழியையும், தியாகுவையும் வரவேற்க மாதவனும் வசந்தியும் வந்துவிட, பின்னோடு பாக்கிய லக்ஷ்மியும் வைத்திய நாதனும் வந்துவிட்டனர். 

 

“ஏய்… அலரக்கா, வா வா… வாங்க சித்தப்பா.” வசந்தி முதல் ஆளாய் முன் வந்து அக்கா கையோடு விரல்களை கோர்த்துக்கொண்டு குதிக்க, 

 

“வாங்க சித்தப்பா… ஹே அலர்.. எப்பிடி இருக்க?” விசாரித்தவாறே வந்தவர்கள் இறக்கி வைத்த பெட்டிகள் இரண்டையும் எடுத்துக் கொண்டான் மாதவன். 

 

“நல்லா இருக்கீங்களா? வாங்க.” இருவருக்கும் பொதுவான விசாரிப்பும் அழைப்பும் பெரியவரிடமிருந்து. 

 

ஒவ்வொருத்தருக்காய் பதில் அளித்து முடிக்கும் முன் பாக்கியம் ஹாலுக்கு வந்திருந்தார். 

 

“வா வா வாடிமா…” அவரின் பார்வை மேல் இருந்து கீழ் வரை பெண்ணை அளவெடுத்துக் கொண்டது. கண்ணில் எதை வைத்திருப்பாரோ தெரியாது. அவர் கண்கள் விரிய எதையேனும் பாராட்டினாலோ பெருமூச்சு விட்டாலோ… அது தொலைந்தது. அவரிடம் பாராட்டு வாங்காமல் இருப்பதே மேல்.  இது அலரின் கண்டுபிடிப்பு. 

 

“ஒரே படிப்பா, கேவலமா இளச்சுப் போயிட்ட?” 

‘ஹப்பா… தப்பிச்சேன்!’ என்ற உணர்வு எழுந்தாலும், ‘கேவலம்’ என்றுவிட்ட பின் என்ன கூற? வாயில் ஏதேதோ வரத்தான் செய்தது. நினைப்பதெல்லாம் கூறிவிட முடியுமா என்ன? 

 

“சாப்பிட வீட்டுல ஒண்ணும் குடுக்கறது இல்லியாக்கும்? இல்ல ஸ்டைலுக்கு பட்டினியா? நீங்க எல்லாம் நினைச்சதும் எப்பிடிதான் சினிமாக்காரிங்க மாதிரி வத்தலும், தொத்தலுமாறிங்களோ…? ஹூம்! இங்க பாரு வசுவ. கொழுமொழுன்னு…” 

 

என்னதான் சொல்ல வருகிறார்? இளித்து வைத்தாள். வீட்டுப் பெரியவர்களிடம் வாய் துடுக்கு காட்டினால் அப்பாவிற்குப் பிடிக்காது. அதனால் பெரியவர்களிடம் என்றுமே சட்டென்று பதில் பேச வராது. அதுவும் அப்பா முன்? வரவே வராது. 

 

தியாகுவிடம் அவர் கவனம் போகவும், வீட்டாட்களை விசாரிக்க ஆரம்பித்தவர், “நீங்க, வீட்டுக்குப் பின்னால இடிச்சு கட்டின பிறகு வரல இல்ல.  டேய் மாது, சித்தப்பாக்கு சுத்திக் காட்டு.” என்று அவர் பெருமைகளை எடுத்துவிட்டார்.

 

இருவர் சம்பளமும் போக, இருவருக்குமே மத்திய அரசு நியமித்த வேலையைச் சரிவர செய்யாதிருக்க தனியாகப் பெட்டி வரும் என்பதால், வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே பெரிய பெரிய ஐந்து படுக்கை அறை கொண்ட சலக வசதியும் நிறைந்த தனி வீடு.

 

மாடியில் இரண்டு போர்ஷன் வாடகைக்கு விட்டிருந்தனர். எல்லாம் இருந்தும் பெரியம்மா பெருமையோடு கூட அழுதும் வடிவார். எவரும் கடன் கொடு, உதவி செய் என்று வந்து நின்றுவிடக் கூடாது என்பதற்காக இருக்கலாம். 

 

“என்னவோ போ… உங்க வசதிக்கு ஏத்த மாதிரி படிக்கிற. நாளைக்கு ஒரு பி.ஏ. இல்ல ஒரு டிப்ளமோ மாப்பிள்ளைய பார்த்தாப் போதும்.

அவனுக்கும் அப்படி ஒண்ணும் கொட்டிக் கொடுக்க வேணாம். உன் அம்மா கொடுத்து வச்சவ, ரெண்டு அழகான பொண்ணுங்க. எவனாவது ஓசியில கூட்டிட்டுப் போயிடுவான். உங்க வருமானத்துக்கு அப்படிப் போனாத்தான் உண்டு. 

 

எனக்கு அப்படியா? பையனைப் பெத்து வச்சிருக்கேன். அவன் இப்போ தான் 13லட்சம் குடுத்து கார் வாங்கினான். அவனுக்கு இந்த வீட கொடுக்கணும். பொண்ணுக்கு இஞ்சினியர் மாப்பிள்ளை பாக்கணும். வெறும் நூத்தி அம்பது பவன் தான் சேர்த்து வச்சிருக்கேன்… மேடவாக்கத்துல வாங்கிப் போட்டிருக்கிற ரெண்டு பெட்ரூம் ஃப்ளாட்ல பெருசா வாடைகை ஒண்ணும் வரதில்ல.  அது அவளுக்குப் போதாதே… அவளுக்கு ஒரு ஃப்ளாட் உன் காலேஜ் ஏரியால வாங்க அட்வான்ஸ் கொடுத்திருக்கு, அந்த செலவு வேற.” இத வாங்கணும், அத வாங்கணும், வசதி பத்தல, வயசாகிடுச்சு என பாடித் தீர்த்தார் சிறுமியிடம். 

 

அலர்விழிக்கு புரிந்தது. செலவுக்கு என்னிடம் வந்து நிற்காதே என்கிறார் என்று. அடுக்களையில் வசதியாக மாட்டிக் கொண்டவள், பற்களை கடித்துக் கொண்டு அமைதியாகக் காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள். 

 

வந்ததும் நேராகவே கூறிவிட்டார், “என் சமையல்ல உப்பு சப்பே இல்லன்னு மாதவன் ஒரே குறை படிக்கிறான். இன்னைக்கு தான் நீ இருக்கியே, சௌந்தரி நீ ரொம்ப நல்லா சமைப்பன்னு சொன்னா. இன்னைக்கு நீ செய் பாப்போம்.” என்று அடுப்பங்கரையில் நிறுத்திக் கொண்டார். 

 

‘இந்த வீட்டுப் பக்கமே வரக்கூடாது டா சாமி’ என்று வந்த இரண்டு மணி நேரத்தில் பெண் முடிவெடுத்துவிட்டாள். அப்படி நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்? 

 

அவரைப் போன்ற குணமுள்ளவர்கள் மத்தியில் வாழத் தெரியவேண்டும் என்பதற்காகத் தான் அம்மா கூறினார் போலும், “சுயமா வாழப் பழகிக்கோ பாப்பா. எப்பவும் சொந்தகாரங்க மேல் ஈஷிக்கவும் கூடாது, தேவை இல்லாம பகைச்சுக்கவும் கூடாது. உன் பெரியம்மா மாதிரி ஆட்கள் கிட்ட எல்லாம் தாமரை இலை மாதிரி ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க கத்துக்கோ” என்று.

 

அலர்விழி எதைக் கேட்டாளோ இல்லையோ, இதை இறுகப் பற்றிக்கொண்டாள். அதனாலேயே அவளுக்கு, அடுத்த மூன்று வருடங்களும் இவரிடம் இன்னல்கள் இல்லாமல் சென்றது எனலாம். 

 

பிள்ளைகள் இருவரும் தப்பிப் பிறந்திருக்க, கள்ளம் கபடமற்ற உண்மையான அன்பைப் பார்க்கலாம் அவர்களிடம். 

 

வசந்தி, “இங்கேயே தங்கிப் படிக்கலாமே அலர். உனக்கு தனி ரூம் கூட இருக்கு. உனக்கு வேணுங்கற வசதி அப்பா செஞ்சு தருவாங்க.” ஆசையாய் கைபிடித்துக் கேட்டாள். 

 

“காலேஜ் கிட்டேயே ஹாஸ்டல் பார்த்தாச்சுன்னு அண்ணா சொன்னாங்க வசு. அது தான் போய் வர வசதி,” என்றாள் அலர். 

 

“ஏன் டி அக்கா? மாதவன் கூடப் போய் வரலாமே? அவனும் நுங்கம்பாக்கத்துல தானே படிக்கிறான்.” 

 

“ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல… தினமும் பிராக்டிகலா சரி வராது வசு. அண்ணாவும் ஃப்ரெண்ட்ஸோட எல்லாம் சுத்துவான். சரி வராது வசு.” 

 

அலர்விழியிடம் எடுபடவில்லை என்றதும் துணைக்கு அம்மாவை அழைத்தாள் சிறியவள்.

“அம்மா… அலர் இங்கயே இருக்கலாம் இல்ல?” 

‘அச்சோ…! வேற வினையே வேண்டாம்.’ பெண் விழித்தாள். 

 

ஒரு நாளுக்கே… அதுவும் அப்பா இருக்கும் போதே பெரியம்மாவின் சோக கீதமும், இடக்கு முடக்கான பேச்சும் பொறுக்க முடியவில்லை. 3 வருடங்கள் எல்லாம் தனியாக அவரோடு? கண்டிப்பாக முடியவே முடியாது. வீட்டு வேலை செய்ய வைத்தே போடும் சாப்பாட்டிற்கு சரிகட்டி விடுவார். அவரிடம் யார் மாட்டிக்கொள்வது? 

 

நல்ல வேளையாகப் பாக்கியத்திற்கு அதில் விருப்பமில்லை.  “அவளுக்கு எல்லாம் இங்க வசதி பத்துமோ என்னமோ? அது தான் யோசிக்கிறா போல” 

 

“இல்ல பெரியம்மா, அதுனா வசதி.” 

 

“என்ன வசதியோ? ஏசி-ய அணச்சுட்டு படுத்தா உன் வீடு மாதிரி தான் இருக்கும். பீங்கான் தட்டு பழக்கம் இல்லேனா ஸ்டீல் தட்டுல சாப்பிடு பொழுது போகாட்டி வீட்டப் பெருக்கி…” அவர் அடுக்கிக் கொண்டே போகவும் அலர்விழிக்கு கோபம் தலைக்கேற ஆரம்பித்தது.

எத்தனை நேரம் தான் இவர் பேச்சைக் கேட்பது? கேட்டுக் கொண்டிருந்த மாதவனுக்கும் கோபம் வந்திருக்க வேண்டும். “மா… போதும்.” என்றான் சத்தமாக. 

 

சிறிய பிராயத்தில் அவன் பாட்டி தாத்தா இருந்த காலங்களில், வருடா வருடம் கடலூரில் தங்கும் ஒரு மாதமும் அவன் சித்தப்பா வீடே கதி என்று கிடப்பான். வசந்தி எதற்கும் அவனோடு சண்டை போட, நகுநா வசந்தி பின்னோடு சுற்ற… இவனுக்குத் தோதாய் நிற்பவள் அலர்விழி தான்.

பக்கத்து வீட்டுப் பப்பாளிப் பழம் திருடுவதிலிருந்து, கில்லி விளையாடுவது வரை அவனுக்கு இணையாய் நிற்பவள் அலர்.

ஏரியாவில் ஒரு வார்த்தை ஒருவரும் அவனைக் கடிய முடியாது. ‘என்னைத் தாண்டி என் நண்பனிடம் செல்’ என்பது போல் சண்டைக்கு நிற்பாள். அவள் கராத்தே பயின்று கொண்டிருந்த காலகட்டம் அது. ஒற்றைக் கொய்யா அவனுக்கு கிடைத்தாலும், முதல் கடி அலர்விழிக்கு தான். அது அவர்களின் கனாக்காலம். 

 

வருடங்கள் கடந்திருந்தாலும் உள்ளிருக்கும் பாசம் குறையாதில்லையா, அவர்களதும் அப்படித் தான்.

 

அம்மாவின் பேச்சு அவனுக்குச் சகிக்கவில்லை. ‘நிம்மதியா?’ என்ற பார்வையை வசந்தியிடம் செலுத்தியவன், இடைப் புகுந்தான். “மா… வெளியில போகணும் சாப்பாடு போடறீங்களா? இல்ல வெளியில போய் சாப்பிடவா?” 

 

“சாப்பிட்டு போடா மாது. உனக்கு பிடிச்சதா செஞ்சிருக்கு நீ பாட்டுக்குக் கிளம்பிடாத.” அவர் எழும்பவும், “வசு, அப்பாவையும் சித்தப்பாவையும் சாப்பிடக் கூப்பிடு. நீ வா அலர்,” கையோடு தங்கையை அழைத்துச் சென்றான். 

 

சாப்பாட்டு மேசையிலும் அவர் வாய் நீளத்தான் செய்தது. ஒன்றும் செய்வதற்கில்லை என்பதால் பிள்ளைகள் பேசிக்கொண்டே உண்டு முடித்தனர். 

 

அன்றைய பொழுது நன்றாகவே போனது. பாக்கியமிடமும் வைத்தியிடமும் விடைபெற்றுக் கொண்டு விடுதிக்குக் கிளம்பவும் பெரியப்பா வாய் திறந்தார். 

 

“வெள்ளிக் கிழமை காலேஜ் முடிஞ்சதும் மாதவன் கூட வந்திடு. திங்கள் இங்க இருந்து அவன் கூடவே போயிடலாம்.” 

 

பெண் முகம் பார்த்த பெற்றவருக்குத் தெரியாதா… அவள் என்ன பதில் உரைப்பாள் என்று? அலர் ஏதேனும் சொல்லிவிடுவாளோ? அண்ணன் பேச்சைத் தட்டாத தம்பி முந்திக்கொண்டார். 

 

“அவ வந்துடுவா ண்ணா…” 

அதன் பின் அலர்விழி அங்கு பேச ஒன்றுமே இல்லை. ‘அப்பா!!!’ என்று உள்ளுக்குள் குமையத்தான் முடிந்தது. 

 

மாதவன், ஹாண்டா சிட்டியோடு வர, “நானும் நானும்” என்று மூவரோடு வசந்தியும் ஒட்டிக் கொள்ள, நன்றாகத் தான் இருந்தது பயணம்.

 

“ண்ணா ஹாஜன்-தாஸ் ண்ணா,” என்று பனிகூழுக்காக வசந்தி நச்சரிக்க, வாகனம் வேளச்சேரியில் இருந்த பீனிக்ஸ் மாலுக்குள் நுழைந்தது.  வசந்தி, இது பழக்கம் தான் என்பது போல் நேரே அந்த  பிரபலமான பனிக்கூழ் கடையை நோக்கி அலர்விழியோடு ஓட,

 

“எனக்கு இது எல்லாம் வேண்டாம் டா மாதவா.” என்று தியாகு ஒரு இருக்கையில் அமர்ந்துக் கொள்ள, பெண்கள் இருவரும் கண்ணைக் கவரும் பனிக்கூழ் வகைகளில் பார்வையைச் செலுத்த ஆரம்பித்தனர். 

 

இது தான் அலர்விழிக்கு இப்படிப்பட்ட கடைகளில் முதல் முறை. ஒற்றை பனிக்கூழ் கோப்பைக்கு ஒரு நல்ல புத்தகம் வாங்க முடியும் என்பது அவளுக்குத் தெரியாது. விலையை விசாரித்தவள் கண்கள் தானாய் விரிந்தது. 

 

வசந்தி வாங்கிய ஒற்றைக் கோனே எழுநூறு! இவள் விரும்பிப் பார்த்தது ஆயிரத்தைத் தொட, பனிக்கூழ் சாப்பிடும் ஆசை எல்லாம் எங்கு போனதோ? 

 

“இப்போ தானே ண்ணா வீட்டுல காபி குடிச்சோம். எனக்கும் எதுவும் வேண்டாண்ணா.” நாசுக்காக பெண் ஒதுங்க, அவளைப் பார்த்தவன் தங்கையைக் கண்டுகொண்டான். 

 

“நீ என் குட்டித் தங்கையாவே இரு. பெரிய மனுஷி ஆக வேண்டாம். பிடிச்சத சொல்லு.” என்றான் காட்டமாக. 

 

“இல்ல ண்ணா. ஆயிரம்… ஆயிரத்து ஐந்நூறு எல்லாம் குடுத்து ஒரு கப் ஐஸ் கிரீம் சாப்பிடணும்னா அது நான் சம்பாரிச்சு வாங்கினதா இருக்கணும். ஓசில கிடைக்குதுன்னு வாங்கினா அது என் தொண்டைக்கு அடியில போகாது. வேண்டாண்ணா.” 

 

எதையும் மறைக்காமல் மனதை உரைத்தாள். சிலர் அப்படித்தான், நேர்மை விரும்பிகள். பிறர் பொருளின் மேல் ஈர்ப்போ, ஆசையோ கொள்வதில்லை. மற்றவர் உயரம் கண்டு வயிற்றெரிச்சல் கொள்வதில்லை. தனக்கு வேண்டும் என்றால் தான் தான் முன்னேற வேண்டும் என்ற கொள்கை கொண்டிருப்பர். அவளும் அப்படித் தான். நேர்மை விரும்பி! தனக்கென்று சில கனவுகளும், கொள்கைகளும், வரம்புகளும்! 

 

பெண்ணின் நேர்மையை வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.  புன்னகைத்தான். 

“ரொம்ப வளர்ந்துட்ட அலர். நீ என் குட்டித் தங்க இல்ல, பெரிய மனுஷி ஆகிட்ட.” 

“உன் தங்கைதான் ண்ணா என்னைக்கும்.” புன்னகைத்தாள். 

 

அவன் ஃப்ரூட் ப்ளாஸம் ஒன்று சொல்ல, பல வண்ண நிறத்தில் பனிக்கூழ், வேஃபர் பேஸ்கெட்டை அலங்கரித்திருந்தது. “இவ்வளவு எல்லாம் என்னால சாப்பிட முடியாது. என் தங்கையா… சட்டம் பேசாம, அண்ணாங்கிற உரிமையில… என் கூட ஷேர் பண்ணு.” என்று கெஞ்சாத குறையாக அவள் தொண்டையில் இறக்கினான். 

 

கல்லூரி நுங்கம்பாக்கத்திலிருக்க விடுதி நுங்கம்பாக்கத்திற்கும் ராயபேட்டைக்கும் இடையே இருந்தது. சில கிலோமீட்டர்கள் தொலைவு. நடந்து செல்லும் தூரம் தான் என்றாலும், சென்னை வெயில், நடைபாதையற்ற சாலை, ஜன நெருக்கடி என்ற பல இன்னல்கள் மத்தியில் நடப்பதிற்கு பதில், பொங்கி வழிந்து சரிந்து செல்லும் ‘பேருந்தே வசதி’ என்ற சிந்தனை தன்னால் வந்துவிடும். 

 

பணம் படைத்தவர் வாழும் பகுதி அது. இரண்டு அடுக்கு மாடி பங்களா முன் மாதவன் மகிழுந்தை நிறுத்த, “என்ன டா மாதவா? ஹாஸ்டல் தானே சொன்ன? வீடு மாதிரி இருக்கு?” தியாகு பயந்து போனார். யாரோ ஒருவர் வீட்டில் பிள்ளையை எப்படி விடுவார்? 

 

“ஹாஸ்டல் தான் சித்தப்பா. வெளில போர்டு இல்ல. ஆனா உள்ள சின்னதா இருக்கும். 

ஜானகின்னு ஒரு ஆன்ட்டி வீடு தான் இது. அவங்களுக்குன்னு யாரும் இல்ல… சோ வீட்டை மாடிஃபை பண்ணி ஹாஸ்டல் ஆக்கிட்டாங்க. வெறும் 28 பேர் தான் அலோ பண்றாங்க. இப்போதைக்கு அலரையும் சேர்த்து 25 பேர் தான்.

ரூமுக்கு மூணு பேர் தான். ஒரு பொண்ணு நாளைக்கு வருதாம், அலர் காலேஜ் தான். வேற ஒரு பொண்ணும் இருக்கு இவ காலேஜ்ல இருந்து. இங்க எல்லாருக்கும் தங்க இடம் கிடைக்காது. தெரிஞ்சவங்க மூலமா மட்டும் தான் வர முடியும். என் ஃப்ரெண்டோட ஃபேமிலி ஃப்ரெண்ட் தான் இவங்க. அதுனால தான் நமக்கு கிடைச்சுது சித்தப்பா. 

 

இந்த ஏரியாவும் சேஃப். இந்த ஹாஸ்டலும் ரொம்ப சேஃப் சித்தப்பா. வீட்டு சாப்பாடு, வீடு மாதிரியே அட்மாஸ்ஃபியர் இருக்கும். அலரும் நிம்மதியா இருப்பா. நம்பி விடலாம் சித்தப்பா.” 

 

உள்ளே சென்று பார்த்து, பலரோடு பேசியபின் தியாகுவின் முகம் தெளிந்தது. மனமில்லாமல் மகளை ஜானகி வசம் விட்டு சென்றார் தகப்பன். இடம் புதிது. ஆட்கள் புதிது. சட்டென்று ஒட்டத் தெரியவில்லை. இரவு தூக்கமின்றி கழிந்தது. 

 

அடுத்த நாள் காலை அப்பா பஸ் பிடித்து வந்து நின்றார் மகளைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல. அன்று மட்டுமல்ல தொடர்ந்து மூன்று நாட்கள் வந்து சென்றார் மகளைக் கல்லூரி சாலையில் இருந்த கல்லூரிக்கு கூட்டிச் சென்று, விடுதிக்கு கூட்டி வர. 

 

கல்லூரி வளாகம் பெரிதாக இருந்தது. பெரிய பெரிய ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடங்கள்.  வெயில் தெரியாத வண்ணம் நூற்றுக் கணக்கான பெரிய பெரிய மரங்கள். தென்றல் வருட, குருவிகள் இசைக்க, இதமாக உணர வைத்தது அந்தப் புது இடம்.  காலையில் கல்லூரி ஆரம்பிக்கும் முன் கிருஸ்துவ வழிப்பாட்டு ஸ்தலத்தில் வழிபாடு நடந்தது. விருப்பபட்ட மாணவர்கள் செல்லலாம். எட்டிப் பார்த்து வந்தாள்.

 

கண்கள் விரிய ஏதேதோ கனவுகளோடு தேங்கி நின்ற புது வரவுகள், பூத்துக் குலுங்கிய சீனியர் இளவட்டங்கள், சுமாரிலிருந்து சூப்பர் ஃபிகர் வரை வளாகத்தைச் சுற்றித் திரிந்தன.

முதல் வருட தொளதொள சல்வாரிலிருந்து, ‘இதை எல்லாம் கூட கல்லூரிக்கு உடுத்துவார்களா’ என்று ரகசியமாக சைட் அடிக்க வைத்த சீனியர் அழகிகளும் அங்கு அடக்கம். 

“காஷ்மீர் ரோஜா தோட்டம்

கேட்வாக் இங்கே காட்டும்

என்னாளும் பேஷன் ஷோ

கல்லூரி சாலை…” என்று பாட தகுதியான இடம்!

மூன்று நாட்கள் அப்பா சென்னையிலேயே தங்கியிருந்தார் மகளைக் கல்லூரிக்கும், சுற்று வட்டாரத்திற்கும் பழக்கப்படுத்த. “வேண்டாம் பா… நான் பாத்துக்குறேன்.” என்ற அவள் கூற்றை அவர் காதில் வாங்கினால் தானே. 

“என்ன சித்தப்பா… அவ என்ன எல்கேஜிக்கா போறா? அவ குழந்த இல்ல சித்தப்பா…” என்று மாதவன் கூட சிரித்தான். 

“உனக்கு ஒரு மக பிறக்கும் போது புரியும் மாதவா…” என்றவர் குரல் வலியில் பிசிறியது. 

அவனுக்கு எப்படிப் புரியும்? ஒவ்வொரு அப்பாவிற்கும் அவர் மகள் என்றுமே குழந்தை தான் என்று. மிகவும் பாசமாக, அரவணைப்பில் வளர்த்த மகளை அவரால் விட்டுச் செல்ல முடியவில்லை. 

அதிகம் கொஞ்சவெல்லாம் வராது. தோளில் ஏந்தி, கை பிடித்து நடத்தி, மார்பில் போட்டுத் தூங்க வைத்த காலங்களோடு தொடுதல் கூட நின்று போனது. இரண்டடி தள்ளி நின்று பேசினாலும் மனிதன் மனம் முழுவதும் அவர் பெற்றெடுத்த இரண்டு பெண்கள் மட்டும் தான். 

அப்படி எல்லாம் வசதி இல்லை என்றாலும் ஏழ்மை என்ற ஒன்றை பிள்ளைகள் கண்டதில்லை. பிள்ளைகள் குறை என்று உணர்ந்ததே இல்லை. அவளைப் பார்த்தால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று சட்டென்று சொல்லிவிட முடியாது. இன்று மட்டும் இல்லை, வசதி மிகவும் குறைவாக இருந்த நாட்களில் ஆசைப்பட்ட ஹீரோ பேனா இரண்டு என்றுமே கேமலின் ஜாமென்ட்ரி பாக்ஸில் இருந்ததுண்டு. பெண்களிடம் அப்பா கணக்கு பார்த்ததே இல்லை எனலாம். 

பிள்ளைகளையும் ஒரு விடயத்தில் குறை சொல்ல முடியாது. தேவை இல்லாத செலவை இழுத்து வைத்தது இல்லை. அளவிற்கு அதிகமாக எதிலும் ஆசைப் பட்டதில்லை. எங்கும் எதிலும் பெற்றவர்களுக்கு ஏற்ற பிள்ளைகள். 

மூன்றாம் நாள் விடுதியில் கண்கள் பனிக்க, “பத்திரமா இரு பாப்பா.” என்று தலை தடவி உச்சி முகர்ந்து கலங்கிய விழிகளோடு அப்பா செல்ல, தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது அலர்விழிக்கு. ஒட்டிய கன்னமும்.. பாதி நரைத்த தலை முடியும், நெற்றியிலிருந்த சுருக்கமும் கதை கூறும் அவர் உழைப்பையும் பாசத்தையும். 

ஒரு துண்டு மீன் இருந்தாலும் அதை இரண்டாய் பிட்டு பிள்ளைகள் தட்டில் வைக்கும் அப்பா. அப்பா பிள்ளைகளுக்கு கொடுப்பாரே என்று அவர் பங்கையும் அப்பா தட்டில் வைக்கும் அம்மா. இப்படி ஒரு அப்பா அம்மா கிடைப்பதெல்லாம் வரம்!

“அப்பா…” என்று பின்னோடு ஓடியவள் கன்னம் துடைத்து, “அடிக்கடி அப்பா வந்து பாத்துட்டுப் போறேன் பாப்பா. பத்திரமா இருந்துக்கோ. நல்லா படிச்சு நீ ஆசைப்பட்ட மாதிரி பெரியாளா வரணும். அழக்கூடாது.” என்று நா தழுதழுக்க வாஞ்சையோடு தலை வருடி அனுப்பி வைத்தார்.  

மெத்தையில் படுத்தவள், ‘மூன்று வருடப் படிப்பை நன்றாகப் படிக்க வேண்டும். நல்ல வேலையில் அமர்ந்து அம்மா அப்பாவிற்கு ஓய்வு தரவேண்டும்.’ கன்னம் நனைய எண்ணிக் கொண்டாள். 

அழுதே கரைய, அன்று இரவு உண்ணச் செல்லவில்லை. அப்பாவோடு வீடு சென்று விட வேண்டும் என்று ஒட்டிக்கொண்ட ஏக்கம் விட்டபாடில்லை. அங்கேயே ஏதாவது கல்லூரியில் படித்திருக்க வேண்டுமோ? மனம் கனத்தது. நகுநாவும் இவளில்லாமல் ஒழுங்காகச் சாப்பிடாமல் ஏங்கிப் போய் கிடக்கிறாளாம்… அம்மா கூறியிருந்தார் கைப்பேசி மூலம். 

ஜானகி ஆன்ட்டிக்கு பிள்ளைகள் இல்லை. துணையாய் நிற்பது அவர் வீட்டில் வேலை செய்த பவானியின் மகள் ராஜாத்தி. இருபதில் கணவனை இழந்து கைக்குழந்தையோடு ஜானகியிடம் தான் வேலைக்கு வந்து நின்றாள். தனிமையில் பிடிப்பில்லாத ஜானகிக்குப் பிடிப்பாய் நின்றது சௌமியா, ராஜாத்தியின் மகள். சௌமியின் மூன்று வயதில் வீடு விடுதியாக மாற, ராஜாத்தி சமையல், விடுதியின் மேல்வேலை என்று சில பொறுப்புகளை எடுத்துக் கொண்டாள். 

அழுது வடிந்து கொண்டிருந்தவளின் அறைக்கு பதிமூன்று வயது சௌமியா வந்தாள். “ஒரு வாய் சாப்பிடு க்கா… நீ சாப்பிடாட்டி உன்ன இங்க விட்டுட்டுப் போன உன் அப்பா மனசு வருந்தாதா? வா க்கா.” சிறுமி டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றாள், அலர்விழியை. 

உணவு எடுப்பதோடு சரி… ஒருவரும் அங்கு அமர்ந்தெல்லாம் உண்ணவில்லை. சிலர் அறைக்குக் கொண்டு சென்றனர். சிலர் டி.வி. முன் அமர்ந்து கொண்டனர்.  அனைவருமே படிக்கும் அல்லது வேலை பார்க்கும் திருமணமாகாத பெண்கள் என்பதால் கேலிக்கும் கும்மாளத்திற்கும் பஞ்சமிருக்கவில்லை.

“முதல் தடவ குடும்பத்தை விட்டு இருக்கிறதால கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். ரொம்ப அதையே நினைக்காத. எல்லார்கிட்டயும் பேசிப் பழகு, சரியாகிடும்.” என்று ஜானகி ஆன்ட்டி ஆறுதல் படுத்தினார்.

நகுநா போல் சௌமியும் அலரை பிடித்துக் கொள்ள இரு தினங்களில் பெண் தேறிக்கொண்டாள். காலை வேளைகளில் கல்லூரி, மாலைப் பொழுதில், சௌமி பள்ளி சென்று வந்ததும் சற்றுத் தொலைவில் இருந்த விளையாட்டு மைதானத்திற்கு இருவரும் சென்று வருவார்கள். 

கல்லூரி, விடுதி, விளையாட்டு மைதானம், பெரியப்பா வீடு… இது மட்டுமே வாழ்க்கை என்று முதல் செமஸ்டர் சென்றது. 

வானிலை என்றும் ஒரு போல் இருப்பதில்லையே… அலர்விழியின் வானிலை மாற ஆரம்பித்தது. 

error: Content is protected !!
Scroll to Top