02 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

வா… காதோரம் காதல் சொல்ல
அத்தியாயம் 2

.

மா, எழுந்திரு. எழுந்திரு மா…” 

 

கண்களை கசக்கி நேரம் பார்த்தார் சௌந்தர்யா.

கடிகாரம் நேரம் 5.40 என்றதும், “சனிக்கிழம பாப்பா… மணி ஆறு கூட ஆகல. இன்னைக்குக் கூட மனுஷிய நிம்மதியா தூங்க விட மாட்டியா? நீயும் கொஞ்ச நேரம் தூங்கு போ.” கூறியவர் இழுத்து மூடிக்கொள்ள,  

 

“மா, எழுந்திருங்க. என் கையால காபி போட்டுத் தரேன்…” அலர் அம்மாவைப் படுத்தி எடுக்க, அவரும் என்ன செய்வார்?

 

எழுந்தமர்ந்த சௌந்தர்யா, “ம்ம்ம் சொல்லு, என்ன வேலையாகணும் உனக்கு? எதுக்கு காலங்காத்தால என் பிராணன வாங்குற?” எனவும்,

 

“அய்ய… சும்மா தான் எழுப்புனேன். ரெண்டு நாள் தான இங்க இருப்பேன்… அது தான்!” வாகாய் அம்மா மடி சாய அவரும் தலை கோத, அம்மா வயிற்றில் முகம் புதைத்தாள் அலர்விழி.

 

“ரெண்டு நாள் தானா பாப்பா…” மென்மையாக மகளின் தலை வருடியவர் மனம் கனத்தது. அந்த சிறிய கூடு மட்டுமே இவர்களின் சொர்க்க பூமி என்பதால், பஞ்சமில்லா கொஞ்சல்கள்.

சௌந்தர்யா கண்டிப்பானவர் என்றாலும் அதிகமாகக் கடிய மாட்டார். பிள்ளைகள் என்றால் இரு கண்கள் போல அவருக்கு. 

 

“ம்மா, இர்ஃபானாக்கு இன்னைக்கு பர்த்டே மா. அவ வீட்டுக்கு கூப்பிட்டா. இந்த முறையாது போகட்டா? ப்ளீஸ்மா…”

 

மகளைப் பார்த்த பார்வையே அவர் பதிலை உதிர்த்தது. எதிர்பார்த்த பதில் என்றாலும் மறுக்கப்பட்ட ஆசை சிறியதாக ஏமாற்றத்தை தரத்தான் செய்தது.

 

“ப்ச் ம்மா… என்னைத் தவிர எங்க கேங்ல எல்லாரும் அவ வீட்டுக்குப் போறாங்க தெரியுமா? ஏன்தான் நீங்க இப்பிடியோ… போங்கமா!”

 

“அலர் போகட்டுமே மா…” என்ற நகுவும் அம்மாவிடம் ஒரு முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டாள்.

 

அக்கா என்ன செய்தாலும் கூட்டுக்கு நகுநாவால் மட்டும் தான் நிற்கமுடியும்! அக்கா என்றால் அப்படி ஒரு பிடித்தம். அம்மா அப்பா வேலைக்குச் சென்றுவிட, பாட்டி தாத்தாவின் பொறுப்பில் வளர்ந்தாலும் சின்னவளுக்கு என்றுமே அக்கா சொல் தான் வேதம்.

 

தடையில்லா சுதந்தரம் உள்ள வீடு என்றாலும், கட்டுப்பாடுகளும் இருக்கத்தான் செய்தது. புது ட்ரெண்டில் கண்களை உறுத்தாதவாறு பிள்ளைகள் உடுத்த தடை போடுவதில்லை என்றாலும், சௌந்தர்யா கொஞ்சம் பழைமைவாதி. நண்பர்கள் என்ற முறையில் அனைவரோடும் அன்பாய் பழகினாலும் அது பழக்கத்தோடு நின்றுவிடும்.

வேற்று இனத்தாரோடு உறவு கொண்டாடும் அளவிற்கு இன்னும் மனம் பக்குவப்படவில்லை. அதை அவர் விரும்புவதாகவும் தெரியவில்லை. அதற்காக அவர் முற்போக்கான எண்ணம் இல்லாதவர் இல்லை. மற்ற சாதி, மதம் என்று வரும் வேளை ‘நீ நல்லா இருக்கியா? நான் நல்லா இருக்கேன்.’ என்று அவர் எல்லையில் நின்று கொள்வார். 

 

அவரின் அக்கா மகள், வைதேகி வட மாநிலத்தைச் சேர்ந்த வேறு இனத்தவனை மணமுடித்து அந்த திருமணம் இன்று கேள்விக்குறியாகிப் போகவும், ‘இனம் இனத்தோடு மட்டும் சேரவேண்டும்!’ என்ற அவர் எண்ணம் இன்னும் வலுத்துப் போனது. 

 

“என் கனவு, என் சுயம் எல்லாமே அவங்க அடுக்களைல புதைஞ்சு போச்சு சித்தி. அவங்க வீட்டுப் பழக்க வழக்கம் எதுவுமே ஒத்துவரல.” என்று காலைக் காபியில் ஆரம்பித்து இரவு கண் மூடும் வரை உள்ள எல்லாக் குறைகளையும் பெண் அடுக்க, இவருக்குத் தோன்றியதெல்லாம் அவர்களும் இவர்கள் இனமாய் இருந்திருந்தால் பெண் சுகித்திருப்பாள் என்பது மட்டுமே!

 

“அப்பா இன்னும் பால் வாங்கிட்டு வரலியா?”  முடியைத் தூக்கி கொண்டை போட்டுக்கொண்டே, அறையை விட்டு வெளி வர, இரண்டு பெண்களும் பின்னோடே வந்தனர். 

 

வெளியே இரும்பு கேட்டின் சத்தம் கேட்க, வாயிலை நோக்கிச் சென்ற அலர்விழி, “ம்மா அப்பா வந்தாச்சு.” என்று சத்தம் போடவும், “சத்தம் போடாத பாப்பா. அத்த எழுந்திடப் போறாங்க.” என்ற அதட்டலில் சட்டென்று வாய் மூடினாள் பெண்.  

 

பாட்டி படுத்திருக்கும் அறையை நகுநா எட்டிப் பார்க்க, அவர் நித்திரையிலிருந்தார். முன் இரவு நாட்டாமை கொடுத்த மன உளைச்சலில் பாட்டி உறங்க நேரம் பிடித்ததின் விளைவு போலும். மூன்று வருடங்கள் முன்பே பெண்களின் தாத்தா இயற்கை எய்திருக்க, இன்று பாட்டி மட்டும் தான் அந்த அறையில். 

 

பெரிய வீடில்லை என்றாலும் ஐந்து பேருக்கு அது தாராளமாகவும் போதுமானதாகவும் இருந்தது.

அலர்விழியின் தகப்பனார், தியாகராஜன் பிறந்தது முதலே கடலூர் தான். இதே வீட்டில் தான் பிறந்தார். அன்று ஒற்றைப் படுக்கையறை கொண்ட சிறிய வீடு நாளடைவில் பல மாற்றங்களைக் கண்டுவிட்டது. ஒற்றை மகனை, பெற்றோர் பாசமாக வளர்த்திருக்க, இன்று அரசாங்க வேலையில் இருக்கும் அவர் ஒரு பாசமான மகன், கணவன் மற்றும் அருமையான இரு பெண்களுக்குத் தகப்பன். கண்டிக்கத் தெரியாத, வெறும் பாசத்தை மட்டுமே காட்டத் தெரிந்த ஜீவன். 

 

பால் வாங்கி உள்ளே வந்த அப்பாவிடம் அலர்விழி பாலை வாங்கிக்கொள்ள, டீ போடும் வேலை என்று சூரியன் உதிக்கும் முன்னமே நாள் ஆரம்பமானது. 

 

மூத்தவள் பன்னிரண்டும் இளையவள் பத்தும் இந்த வருடம் படித்து முடித்திருக்க, பொழுது புலரும் முன்னே புத்தகத்தைக் கையில் எடுக்கும் அதே பழக்கம் இன்றும் அவர்களை விழிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 

 

அம்மாவும் அரசு அலுவலகத்தில் பணிபுரிய, அம்மாவின் வீட்டு பாரம் குறைக்கச் சிறுமிகள் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யப் பழகியிருக்க, வீட்டில் இருக்கும் சனி, ஞாயிறுகளில் அம்மாவிற்கு முழு நாள் விடுப்பு. 

அன்பான, மனநிறைவான குடும்பத்தில், அளவிற்கு அதிகமாக பணம் கொட்டிக் கிடக்கவில்லை என்றாலும் ஏழ்மை இல்லை. தேவைக்கு யாரிடமும் கை ஏந்த அவசியமிருந்ததில்லை. 

 

ஆக மொத்தத்தில் அளவான குடும்பம்… விரலுக்கு ஏற்ற வீக்கம் போல் வசதிக்கேற்ற விருப்பங்களும் ஆசைகளும் என்று எந்த அலட்டலும் இல்லாத தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கை அவர்களுடையது. 

 

‘இது வேண்டும்’ என்று ஆசைப்பட்டது கிடைக்காமல் பிள்ளைகள் ஏங்கியதில்லை. பெண்களுக்கு என்று வந்துவிட்டால் தியாகு பணத்தைப் பற்றி என்ன… எதைப் பற்றியுமே யோசிக்க மாட்டார். எந்த விஷயத்திலும் பெண்களுக்கு எந்தக் குறையும் இன்று வரை இருந்ததில்லை… விருப்பங்களுக்குத் தடையும் இருந்ததில்லை. 

 

அதனால் தான் கல்லூரிப் படிப்பிற்காக சென்னை செல்ல வேண்டும் என்ற கோரிக்கையோடு வந்த அலர்விழிக்கும் தடை விதிக்கப்படவில்லை. தகப்பனாய் சென்னைக்கு அனுப்ப யோசித்தாலும் தடை போடவில்லை தியாகு. 

 

இன்று வரை கடலூர் மட்டுமே அவர்கள் உலகம். அலர்விழியின் உலகம் பரந்து விரிந்தது. அவள் எண்ணங்களும் கனவுகளும் ஒரு சிறிய கூண்டிற்குள் அடங்க மறுத்தன. 

 

அப்பா, “டாக்டர் ஆகலாமே”, “இன்ஜினியர் ஆகேன்” என்று எல்லா தென்னிந்தியப் பெற்றோர் போல் ஆசைப்பட, அவள் ஆசையோ வேறாய் இருந்தது. 

 

“வேண்டாம் பா. முக்குக்கு முக்கு இஞ்சினியரிங் காலேஜ் இருக்கு. ஆனா தரமில்ல! ஆசைப்பட்டு படிக்கப் போனாலும் அங்க நல்ல லேப் ஃபெசிலிட்டியும் இருக்கிறது இல்ல… நல்ல எக்ஸ்பீரியன்ஸ்ட் ஸ்டாஃபும் அதிகம் இருக்கிறது இல்ல. இந்த மாதிரி காலேஜ்-ல படிச்சு முடிச்சுட்டு தெருவுக்குத் தெரு நாலு வேலை இல்லாத இஞ்சினியர்ஸ் இருக்காங்க. நானும் அவங்கள மாதிரி படிச்சு முடிச்சுட்டு வேலைக்குத் திண்டாடணும். இதுக்கு நல்ல காலேஜ்ல நல்ல டிசிப்ளின் எடுத்து முன்னேறலாம்.” 

 

அவள் தெளிவாகத் தான் இருந்தாள். அப்பா பழைய காலத்து ஆள். அவருக்குப் புரியவில்லை என்றாலும் மகளின் திறமை அவருக்குத் தெரியும்.

 

அதனால் பள்ளி முடியும் தருவாயில், “விஸ்காம் படிக்கிறேன் பா. இந்த காலேஜ்ல எல்லாம் ரொம்ப நல்லா இருக்காம்.” என்று மகள் ஒரு பட்டியலோடு வந்து நின்றதும், அவள் விருப்பத்திற்கு உடன்பட்டு, அதிக மதிப்பெண்ணோடு வந்து நின்றவளை சென்னையில் நுங்கம்பாக்கத்திலிருந்த புகழ்பெற்ற மகளிர் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

 

சென்னை என்றதும் அப்பா ஒத்துக்கொள்ள வேறு காரணமும் இருந்தது. இந்த வீட்டிற்கு அடுத்து இருக்கும் வீட்டில் தான் இவர் பெரியப்பா குடும்பம் இருந்தது. பெற்ற பிள்ளை போல் தான் பெரியப்பாவும் பெரியம்மாவும் தியாகு மேல் பாசம் வைத்திருந்தனர். 

 

அவர்கள் மகன் வைத்திய நாதனுக்கும், தியாகராஜனுக்கும் சிறு வயதிலிருந்தே நல்ல உறவு. அண்ணன் தம்பியாய் இருவருமே ஒன்றுக்குள் ஒன்றாய் தான் வாழ்ந்தார்கள்… அண்ணனுக்கு பாக்கிய லக்ஷ்மியை திருமணம் முடிக்கும் வரை. 

 

பாக்கிய லக்ஷ்மி அந்தக் காலத்திலேயே ஒரு லோடு வரதட்சணையோடு வந்தவர். வசதியான குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயும் நீளம், நாவும் நீளம். நலிந்தவனை மதிக்க மாட்டார். சட்டென்று தூக்கி எறிந்து பேசிவிடுவார். எதிரில் இருப்பவர்களின் உணர்வுகள் புரியுமா என்பது சந்தேகம்.

 

இப்படிப்பட்ட குணநலன்களோடு வந்த பாக்கிய லக்ஷ்மியின் வரவிற்கு பின் எல்லாம் மாறிப்போனது. ஏன் அண்ணன் வைத்தியும் கூட ஜாடிக்கேத்த மூடியாக மாறிப்போனாரே!  இன்று அண்ணன் குடும்பம் சென்னையில், வேளச்சேரி பேருந்து நிறுத்தம் அருகில் வசித்து வருகின்றனர். 

 

“சென்னையில் படிக்கவா?” என்று மகள் கேட்டதும், ‘அண்ணன், மகளை பார்த்துக் கொள்ள இருக்கிறார்’ என்ற எண்ணம் எழவே, “சரி” என்றார் தியாகராஜன். 

 

இப்படிப்பட்ட தாய் தந்தையருக்கு தப்பிப் பிறந்தவர்கள் இருவர். மாதவன், முதுகலை இரண்டாம் வருடத்திற்குள் நுழைந்திருக்க, வசந்திக்கு பன்னிரண்டு ஆரம்பமாயிருந்தது.

 

“மாதவன் காலேஜும், உன்னுதும் ரொம்ப பக்கத்தில தானாமே. பெரியப்பா வீட்டில தங்கிட்டு அண்ணா கூடவே போய் வரியா? அவன் கூட போனா அரை மணி நேரத்துல காலேஜ் போயிடலாமாம். அப்பறம் வீட்டுல பேச்சுத் துணைக்கு வசந்தி இருக்கா, உனக்கு வசதியா இருக்கும்”  

 

‘இந்த படிப்புக்கு எல்லாம் எதுக்குமா வெளியூர்? வேண்டவே வேண்டாம்’ என்று முதலில் கூறிய அப்பா மனம் இறங்கி, மகள் ஆசைக்கு உடன்பட்டு கல்லூரியில் சேர்த்துவிட்டதே அதிகம். இதில் தனக்கு அந்த ‘மிலிட்டரி ஆப்பிசர் என்ற எண்ணம் கொண்ட’ பெரியப்பா, லொட லொட பெரியம்மா வீட்டில் தங்குவதில் சிறிதும் விருப்பமில்லை என்று எப்படிக் கூறுவது? அவள் தயங்கி நிற்க… 

 

“அது எல்லாம் வேண்டாம் டா தியாகு. சொந்தங்கள எப்பவும் ஒரு தூரத்துல வச்சிருக்கணும். இந்தா இருக்கு மெட்ராஸ். அவ ஹாஸ்ட்டல்ல தங்கிப் படிக்கட்டும். அப்பப்போ போய் பார்த்துட்டு வா.”  சகுந்தலா பாட்டி கூற அலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

 

“சொல்லுங்க அத்த, அவருக்குப் புரியற மாதிரி… அந்த ஊரு நெரிசல்ல வேளச்சேரியில இருந்து நுங்கம்பாக்கம் போகவே மணி நேரம் ஆகிடுமாமே… அது கூட பரவால்ல. இவர் அண்ணி கூட எல்லாம் இருக்க முடியுமா? அவங்களும் அவங்க வாயும். இவர் அண்ணா? அவர தல மேல வச்சு ஆடணும்!”  என்று சௌந்தர்யா வாய் விட, கணவன் முறைக்க, ‘ம்கும், அவர் நொண்ணனை ஒண்ணு சொல்லிடக் கூடாதே’ வாய்க்குள் முணுமுணுத்ததோடு வாயை மூடிக் கொண்டார். 

தியாகு சாது தான். ஆனால் அவர் பேச்சை இன்று வரை ஒருவரும் மீறியதில்லை. மனைவிக்கு விருப்பமே இல்லை என்றாலும் கணவன் முடிவுக்கு எதிர்த்து நின்றதில்லை.

 

“அவங்க எப்படியோ போகட்டும். பொம்பளைப் பிள்ளை தைரியமா வாழ கத்துக்க வேண்டாமா? ஒரு வீட்டுல போய் வாழப் போற பொண்ண இடுப்பில வச்சு அவ வளர்ச்சிய கெடுக்காத தியாகு.” என்று பேசி, பாட்டி அலர்விழியைக் காப்பாற்றி விட்டார். 

 

“ஆமா ஆமா, உங்க பேத்திக்கு தைரியம் ரொம்பக் கம்மி தான்…” கூறியபடியே அவர் மகளைப் பார்த்த பார்வையில் அலர்விழி அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள்.

பெண்ணின் புகழ் அப்படி! அவளைத் தனியே வெளி உலகிற்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணினாலே பெற்றவருக்கு படபடப்பு தான்! பெற்றவர் மகளை நினைத்து பயப்படக் காரணம் இருந்தது. 

 

போகும் இடம் எல்லாம் வம்பை விலை கொடுத்து வாங்க மாட்டாள். ஆனால் அவள் ஈடுபட்ட காரியத்தில் பிரச்சனை என்று தெரிந்தாலும் அதைக் கண்டு ஓடி ஒளிய மாட்டாள். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்பாள். அசட்டுத் தைரியமோ, துணிவோ, நேர்மையோ… எதுவோ ஒன்று கொஞ்சம் அளவுக்கு அதிகம் தான் பாரதியின் புதுமைப் பெண்ணிடம்.  

 

ஏன்? சில மாதங்கள் முன் கூட இப்படித் தானே…? வேதியியல் பயிற்சி மையத்தில் இவள் தோழிக்கு தொந்தரவு கொடுத்த வாத்தியாரை காம்பஸ் கொண்டு குத்தவில்லை? 

 

“ஏய் இடியட்… காம்பஸ்ச இப்படித்தான் கேர்லெஸ்சா நீட்டி பிடிச்சுட்டு இருப்பியா?” தொடையை அழுத்திப் பிடித்துக் கொண்டே, அமர்ந்திருந்தவளிடம் எரிச்சலோடு அன்று வாத்தியார் கத்த, பொறுமைக்கே பிறந்தவள் போல் மெல்ல காம்பஸ் நுனியைத் துடைத்து ஜாமெட்ரி டப்பாவில் மூடி வைத்தவள், அதைவிடப் பொறுமையாக அவர் முகம் பார்த்து சிறு புன்னகையுடனே, “யார் சொன்னா கேர்லெஸ்சா பிடிச்சிருந்தேன்னு?” உதடு புன்னகைக்க, கண்கள் அவரை எரித்தன. 

 

என்றும் பெஞ்ச்சில் ஓரமாய் அமரும் அலர்விழியின் உயிர் தோழி ஜோதி, உட்புறம் அன்று அமர்ந்திருக்க, அவள் முகத்தில் அத்தனை ஆதங்கம். 

 

வாங்கிய குத்தின் காரணம் புரிந்தது வாத்தியாருக்கு. வாய் திறக்க முடியவில்லை. ‘உன் கொழுப்ப அடக்குறேன்’ என்று எண்ணிக்கொண்டு முறைக்க மட்டும் தான் முடிந்தது. அன்றிலிருந்து அவர் கையை ஆட்டிக்கொண்டோ, மேசையை உரசிக்கொண்டோ அங்கும் இங்கும் வகுப்பறைக்குள் நடப்பதில்லை. ஒழுங்காக அவர் நாற்காலியில் அமர்ந்து கொள்வார். ஆனால் வகுப்பு பாடம் என்று அவர் கொடுத்த குடைச்சல் தான் பெண்ணிற்கு அதிகமாய் போனது. 

 

என்ன முயன்றும் அவள் நிமிர்வு, திமிர், தைரியம், துணிச்சல் என்று எதையுமே அவரால் அசைக்க முடியவில்லை. ‘போடா போடா… நீயெல்லாம் ஒரு ஆளு’ என்ற பாவனையும் மாறவில்லை.

 

இது வீடு வரை பிரச்சனையாக எட்டவில்லை என்றாலும், அப்பா காதிற்கு விடயம் வரத்தான் செய்தது. இப்படி பிரச்சனை கொடுப்பவனைப் பார்த்து ‘பயந்து ஓடி ஒளி’ என்று ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனாக அவரால் சொல்ல முடியவில்லை. பாட்டியோ ஒரு படி மேலே சென்று பெண்ணின் துணிவைப் பாராட்டி அல்வா கிண்டி, பாராட்டு பத்திரம் வாசித்தார்.

பெண்களுக்குத் தைரியம் மிக அவசியம்.

அசட்டுத் தைரியமாக அது உருமாறாத வரை நன்மைக்கே என்று மனைவியைக் கொண்டு மகளிடம் பேச வைத்தார், தியாகு. இது நடந்து முடிந்த கதை என்றாலும் இது போல் ஏதாவது அவ்வப்போது காற்றோடு வந்து பெற்றவர் காதில் விழும். 

 

இத்தனை தடங்கல்களைத் தாண்டி பெண் சென்னைக்கு பெட்டியை கட்டிக் கொண்டிருக்கிறாள். அன்றைய பொழுதும் அடுத்த நாளும் அலர்விழிக்கு பெட்டி கட்டுவதிலேயே சென்றாலும், அக்காளும் தங்கையுமாக வீட்டைக் குஷியான மனநிலையிலேயே வைத்திருந்தனர். 

 

“எண்ணி அஞ்சே அஞ்சு வருஷம் மா… ரிட்டயர் ஆக ரெடி ஆகிடுங்க. நான் படிச்சு பெரிய எம்என்சி-ல சேந்து ஃபாரின் போய் சம்பாரிச்சு உங்கள எல்லாம் பாத்துப்பேன்.” கண்களில் கனவோடும், தீர்மானத்தோடும் உரைத்த மகளைப் பார்த்து பெருமைப் படாமல் இருக்க முடியவில்லை, தாயால். 

 

திங்கட்கிழமை அப்பாவோடு கிளம்பும் வரை இருந்த திடம் வாயில் தாண்டும் வேளை இல்லாமல் போனது. அம்மாவும் பாட்டியும் அணைத்து, உச்சி முகர்ந்து, பத்திரம் சொல்லி அனுப்ப, நகுநாவை கண்கள் தேடின. நகமும் சதையுமாக வாழ்ந்து, சண்டையாலும் சிரிப்பாலும் வீட்டை நிறைத்தவர் இருவரும். முதல் பிரிவை தங்கையால் தாங்க இயலவில்லை. கிணற்றடியில் மௌனமாகக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். 

 

“நகு…” இவள் தோள் தொடவும்… கண்ணீரைத் துடைத்து, “நல்லா படிச்சிட்டு வா அலர். டெய்லி பேசணும், சரியா?” வலித்த தொண்டை கரகக்க அலர்விழி கன்னத்தில் முத்தம் பதித்தவளுக்கு கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

 

“ஏய் அழாத லூசு. ரெண்டு வருஷம் தான்… அதே காலேஜ்ல உனக்கும் சீட் வாங்கிடுவோம், சேர்ந்து கலக்குவோம்.” கட்டிக்கொண்டு அழுதவளை அழுது கொண்டே ஆறுதல் படுத்தினாள், சற்றே பெரியவள். 

 

இருவருக்குமே தெரியும் நகுநாவை அப்பா எங்குமே விட மாட்டார் என்று. நகுவிற்கு வலது கை மற்ற கையை விட கால் பங்கு நீளம் குறைவு. பத்து வயது பெண்ணின் கை அளவு தான் அதன் பருமனும் இருக்கும். அந்த பலமில்லாத கரம் கொண்டு கனமான பொருளைத் தூக்க முடியாது.

கை அப்படி இருக்க, அந்த இழப்புக்கு ஈடு கொடுக்கவென அவ்வளவு இனிமையான குணம். பெண் அத்தனை அழகு. அம்மாவின் மொத்த அழகையும் கொண்டு பிறந்திருந்தாள் நகுநா. 

 

இன்று வரை அதைக் குறையாக யாரும் குறிப்பிட்டதில்லை என்றாலும் அவளைக் கொஞ்சம் அதிகமாகவே அப்பா அடைகாத்தார். அதிக அக்கறையாலோ இல்லை இயற்கை குணமோ, நகுநா அதிக அலப்பறை செய்யத் தெரியாத பொறுமையின் சிகரமாய் வளர்ந்தாள்.  அவளுக்கும் சேர்த்து மூத்தவள் அராஜகம் செய்தாள் என்று கூறினால் மிகையாகாது. 

 

“பார்த்து போயிட்டு வா பாப்பா. வீண் வம்புக்குப் போகாத. வம்பு வருதுன்னு தெரிஞ்சா ஒதுங்க கத்துக்கோ, உன் கராத்தே உனக்குள்ளயே இருக்கட்டும் பாப்பா,” வழியனுப்பிய தாய்க்கு பாரம் தாளவில்லை.

அத்தனை அருமையாக கைக்குள் பொத்தி வளர்த்த மகளைக் கண்காணா இடத்துக்கு அனுப்புவது ஒன்றும் எளிதாக இருக்கவில்லை அவருக்கு.  

 

பேருந்தில் கண்மூடிப் படுத்திருக்க, அதில் கசிந்த இசை சிறுமியைக் கலக்கம் கொள்ளச் செய்தது. உள்ளுக்குள் பல சிந்தனைகள் கிளர்ந்தன. 

அடுத்த மூன்று வருடங்கள் படிப்பிலும், அதற்கு அடுத்த இரண்டு மூன்று வருடங்கள் வேலையிலும் சென்றபின் கண்டிப்பாக திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

ஒரே கூரையில் பெற்றோர், சகோதரியோடான வாழ்க்கை இன்றோடு முடிவடைகிறது என்ற நிதர்சனம் மனதைக் கலங்கடிக்க, விழியோரம் மெலிதான நீர் கோடு. 

 

அவள், பேச்சு, சிரிப்பு, கண்ணீர் என்று எல்லாவற்றிற்கும் அவள் வீட்டில் தலை சாய்க்க என்றும் ஆள் உண்டு. இனி தனியே இந்தப் பரந்த உலகில் தன் சத்தம் செல்லுபடியாகுமா?

“ஓ… பூமி… பூமி… சுத்தும் சத்தம்…

ஆழி ஆழி.. கத்தும் சத்தம்…

மனிதன் மனிதன், ஓ யுத்த சத்தம்…

இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்?

இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்?”

 

அந்த காலை வேளையில் பேருந்து நகர்ந்து கொண்டிருக்க மகளின் கண்ணீரை தகப்பனால் சகிக்க முடியவில்லை. “அப்பா இல்ல, அம்மா மாசத்துக்கு ஒரு தரம் வந்து பாக்குறோம். உனக்கு நடுவுல ஏதாவது லீவ் விடுறாங்கன்னா… முந்தின நாள் அப்பாட்ட சொன்னாப் போதும், நான் வந்து கூப்பிட்டுப்பேன். அழாத பாப்பா. நீ ஏதோ சாதிக்கணும்ன்னு நினைக்கிற. அத மட்டும் நினை. துணிச்சலான பொண்ணு பாப்பா நீ, மனசப் போட்டு அலட்டிக்காத!” 

 

ஆம் துணிச்சலான பெண் தான்! அது தானே பெற்றோரின் இன்றைய பயம்!  தோளில் சாய்ந்திருந்த மகளின் தலையை வருடி தைரியமாக இருக்கக் கூறினாலும், பெண்ணைப் பெற்றவருக்கு உள்ளுக்குள் ஒரு பயம். மகளின் துணிச்சல் எங்கு கொண்டு போய் விடுமோவென்று! 

 

அவள் துணிச்சல் எங்கு கொண்டு விடும்? இன்றிலிருந்து ஆறு மாதங்கள் கழித்து ‘ஒருவனிடம் கழுத்து நெரிபடும் அளவிற்குக் கொண்டு போய் விடும்’ என்றுவிடுவர் ஜோசியம் தெரிந்தவர். 

 

அதே நேரம்:

அந்த ஒருவனின், விழிகள் இரண்டும் கருப்புக் கண்ணாடிக்குப் பின் மறைந்து கொண்டிருந்தாலும் சுவாரஸ்யத்தோடே சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் மக்களை வேடிக்கை பார்க்க… இனிப்பில்லாத அந்த சவ்வுமிட்டாய் வாய்க்குள் சவைப்பட… மிதமான வேகத்தில் சென்னையின் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த மகிழுந்து பாடிக்கொண்டிருக்க… நீள, வலுவான அந்த விரல்கள் ரசனையோடு ஸ்டீயரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தன.

உடலென்ற பாண்டம்… உடைந்துவிடும்

கதறும் மனமே… கவலையுற வேண்டாம்

இலைகள் உதிரும் பொழுதில்… மரம் அழிவதில்லை

அக்றினைபோலே அன்றாடம் வாழ்ந்திடு

உலகே… நிலையில்லையே….

 

….

error: Content is protected !!
Scroll to Top