01 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

வா… காதோரம் காதல் சொல்ல
அத்தியாயம்  1

.

 

பதினெட்டுப் பட்டி கிராம மக்களும் ஆலமரத்தடியில் கூடியிருக்க, காது ஜவ்வு கிழிந்து மண்டை பிளக்கும் அளவிற்கு அங்கு சலசலப்பு.

சிக்கலான ஒரு வழக்கிற்கு தீர்ப்பு வேண்டி மக்கள் கூடியிருந்தனர், அவர்கள் நாட்டாமையை எதிர்பார்த்து. 

 

“என்ன ஓய்… இன்னும் உங்க நாட்டாமை வரலியோ?” ஏதோ ஒரு முக்கிலிருந்து முரட்டு மீசைக்காரன் ஒருவன் முந்திக்கொண்டு குரல் கொடுத்தான்.

 

“சூரியன் கூடச் சொன்ன நேரத்துக்கு வராது. ஆனா எங்க நாட்டாம சொன்ன டைமுக்கு டான்னு வந்து நிப்பார். அத தெரிஞ்சுட்டு உம்ம நாக்கு மேல பல்லப் போட்டு பேசுமய்யா!” மற்றொருவன் சண்டைக்குத் தயாராக அதன்பின் எதிர்க்கட்சியை சேர்ந்த முரட்டு மீசை வாயை ஏன் திறக்கப் போகிறான்? 

 

நிமிடங்கள் தேய்ந்து கரைந்து மணி நேரத்தைத் தொடுமுன், காளையின் கழுத்து மணி கிலுங்க, மாட்டு வண்டி ஒன்று அசுர வேகத்தில் ஆலமரத்தடியை நோக்கி அனல் பறக்க வந்து கொண்டிருந்தது. 

 

“நாட்டாம ஐயா வண்டி வருது டோய்!” என்ற அரை நிக்கர் சிறுவன் அறிவிப்புக்குப் பின் அங்கு ‘பின்-ட்ராப் சைலன்ஸ்’.

தோளில் கிடந்த துண்டுகள் எல்லாம் இடுப்புக்கு இடம்பெயர, அனைத்துக் கண்களும் மாட்டு வண்டி வரும் திசையை நோக்கின.

 

இதை எல்லாம் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பட்டணத்துப் பாவை, சுவாரசியம் குறையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கிராமமும், மரத்தடிப் பஞ்சாயத்தும் இதுதான் அவளுக்கு முதல் முறை. 

 

“நாட்டாம வந்துட்டாரு! நாட்டாம வந்துட்டாரு!” சிறுவன் ஒருவன் கூவிக் கொண்டே ஓட, கடவுளின் அவதார புருஷனைப் பார்க்கப் போவது போல் அனைவர் முகத்திலும் பக்திப் பரவசம் தாண்டவமாடியது. 

 

‘என்ன டா ஓவர் பில்டப்பா இருக்கு, பெரிய அப்பாடக்கரோ?’ பட்டணத்து மங்கை நினைப்பைப் பொய்யாக்கவில்லை அவன் தோற்றம். கரை வைத்த வெள்ளை வேட்டியும், மடிப்பு நீங்காத அரைக் கை வெள்ளைச் சட்டையும், பின்னோக்கிப் படிய வாரிய கேசமும், நெற்றியில் சந்தனக் கீற்றும், முறுக்கி விட்ட மீசையுமாய் ஆறடி உயரத்தில், தூசி பறக்க, ஐயனார் போல் முப்பது வயது கட்டிளம் காளை ஒருவன், அப்படி ஒரு சீரியஸ் முகத்தோடு வந்து கொண்டிருந்தான்.

 

மக்கள் கீழே அமர, மினிஸ்டர் கமிட்டி மரத்தைச் சுற்றிக் கட்டியிருந்த சிமென்ட் திண்டில் அமரவும், நாட்டாமை ஒரே குதியில் பாய்ந்து திண்டில் ஏற, கால் தடுக்கி ஜஸ்ட் மிஸ்சில் கீழே விழாமல் தப்பித்தவன், கலைந்த முடியைப் பின்னோக்கித் தள்ளி, மீசையை முறுக்கி, தொண்டையை செருமிக் கொண்டு கீழே விழுந்து போன அங்கவஸ்திரத்தை எடுத்துப் படு ஸ்டைலாக தோளில் போட்டுக் கொண்டான்.

 

‘எங்களுக்கு எல்லாம் கீழ விழுந்தாலே மீசையில மண்ணு ஒட்டாது. இது எல்லாம் ஜுஜுபி’ என்ற தோரணை அவனிடம். 

 

தென்றல் காற்று வீச, இரண்டடித் திண்டில் புலி போல் பாய்ந்து குதித்ததில் கலைந்து போன சிலப் பல முடிகள் அழகாக ஆடிக்கொண்டிருக்க, அதைப் பின்னோக்கித் தடவிவிட்டு, வெற்றிலை வாயோடே ஹீரோ… அதாவது நாட்டாமை, “எல்லாருக்கும் வணக்கம். சின்ன கவுண்டர் வம்சத்துக் குட்டி கவுண்டராகிய நான்…” ப்ளா ப்ளா ப்ளா… “உங்க மரியாதையும், நம்பிக்கையும் காப்பாத்துவேன். நியாயமான தீர்ப்பைத் தருவேன். இது, என் மேல நம்பிக்கை வச்சிருக்க இந்த பதினெட்டுப் பட்டி மக்கள் தல மேல சத்தியம்.” என்றான். 

 

‘நாம தப்பிச்சோம் டா சாமி!’ – அவளே தான்! பட்டணத்து சிட்டு! 

 

திண்டில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்தவன், “சொல்லுங்க உங்க வழக்க!” என்று இரு கரங்களையும் உயர்த்தி கூட்டத்தைப் பாகுபலி தோரணையில் ஆரம்பித்து வைத்தான். 

 

வழக்கு உரைக்கப் பெற்றது.  “பொண்ணக் காதல் ஆச காட்டி அவள ஆட்டையப் போட்டுட்டான் நாட்டாம. பொண்ணு அம்மா நியாயம் கேட்டு வந்திருக்கு.” 

 

நெற்றி சுருங்க, ஐயனார் ஒரு முறை கூட்டத்தை நோட்டமிட்டான். முதல் வரிசையில் அவன் நேர் எதிரில், அம்மா வயதில் ஒருத்தி முந்தியை வாய்க்குள் திணித்துக் கொண்டு தேம்ப, அருகிலிருந்த இளம் பெண் கண்ணீர் வழிய நின்றிருந்தாள். 

 

பக்கவாட்டில் நின்றிருந்த பெண்ணின் முறை மாமன் தெனாவட்டாக ‘யாருக்கு வந்த விருந்தோ’ என்பது போல் குச்சியால் பல்லை நோண்டிக் கொண்டு நின்றிருந்தான்.   

 

பற்களை நரநரவென்று அரைத்துக்கொண்டு, பல்குத்தியை முறைத்துக் கொண்டு வாட்டம் சாட்டமான ஆண்மகன் ஒரு பக்கம்!  

 

கூட்டத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தவன், சட்டைக் காலரைப் பின்னோக்கி இழுத்துவிட்டு, சொம்பில் வெற்றிலையைத் துப்பி,  “இவன் உங்கள ஆச காட்டி மோசம் செஞ்சுட்டானுங்களா அம்மணி?” என்று கேட்க, பதிலுரைக்காமல் அவள் மேலும் அழுது கொண்டே இருக்க… 

வாயிலிருந்த முந்தியை எடுத்த பெண்மணி தோள்பட்டையால் அருகில் இருந்தவளை இடித்து,

“கேடுகெட்ட சிறுக்கி பெத்த மவளே… வாயத் திற!” என்று அவரையே திட்டிக் கொண்டது எல்லாம் அவலம்!

 

முத்து உதிர்ந்தது. “நான் மாமன விரும்பலைங்க ஐயா. எனக்கு பீட்டரு மேல உசுரு. அவருக்கும் என் மேல ஆசை. இவன கட்ட மாட்டேன்னு தெரிஞ்சுட்டு இந்த துரோகி யாருமில்லாத நேரம் வீட்டுக்கு வந்து என்னை மோசம் பண்ணிட்டான்.”

யுவதி கை நீட்டி பல் குத்திக் கொண்டிருப்பவனை குற்றம் சாட்டினாள். பற்களை அரைத்துக் கொண்டிருந்த பீட்டர் முகத்தில் பல்குத்தியைக் கொன்றுவிடும் அளவு கோபம். 

 

‘இங்க பாரு டி கதைய’, ‘அம்மாடியோ இது என்ன புது கதை’, ‘பாவமே…’, ‘இந்த பொண்ணுக்கு என்ன நியாயம் கிடைக்குமோ…?’ கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு.

 

“எலேய் பல் குத்தி… நெசமாலே அந்தப் பொண்ணு சொல்றது?” நாட்டாமையின் அதிரடி கேள்விக் கணை வில்லனைத் தாக்கியது. 

 

“ஆமாங்க, எனக்கு உரிமைப்பட்ட சிறுக்கிய, கண்ட சாதிக்கார பயலுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா?  நம்ம சாதிப் பெருமையக் காப்பாத்த நான்தே அவ கற்ப களவாண்டேன்! மயில இறகு போட சொன்னா போடுமா… அதுதேன்!”

பகிரங்கமாக கோர்ட்டில் அனைவர் முன்னிலையிலும் தவறு பெருமிதத்தோடே ஒத்துக் கொள்ளப்பட்டது. 

 

அனைவரும் ஏதோ நினைத்திருக்க, நிகழ்ந்தேறியதோ வேறு. எத்தனை சிக்கலான வழக்கு இது! என்ன தீர்ப்பை நாட்டாமை வழங்கப் போகிறார்? இதயங்களில் மத்தளம் கொட்டியது. சலசலப்பு அதிகமானது. 

 

“இந்த பஞ்சாயத்துக்குத் தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சு!” நாட்டாமையின் கணீர் குரலில் ஆடு மாடு கூட அமைதி காத்தது.

 

“வேலியில விழுந்த புடவை கிழிஞ்சு போச்சு! அதனால…” 

 

கடைசி பந்தில் இரண்டே ரன் வேண்டும். ஆனால் மட்டையைக் கையில் வைத்திருப்பவன் ‘டக்’கை தாண்டியதாக சரித்திரம் இல்லை. அந்த நிமிடம் அரங்கில் இருக்குமே ஒரு தவிப்பு… அதே தவிப்பு இங்கும்.

அனைவர் முகத்திலும் தீவிரம். சிலரின் நகங்கள் அவர்கள் பற்களுக்கு இரையானது.

நாட்டாமையின் அரை நொடி மௌனம் அனைவரையும், இல்லாத சீட் நுனிக்கு பிடித்துத் தள்ளியது! ‘அதனால…?’ 

 

“அதனால… கிழிஞ்ச புடவைய வேலி தான் பாதுகாக்கணும்!” 

 

‘ஆங்? என்னடா உளறுறான்? லூசுப் பயலா இருப்பான் போல!’ -இது நம்மைப் போலவே நினைக்கும் பட்டணத்துப் பைங்கிளியின் மைண்ட் வாய்ஸ். 

 

“வேற இனத்துப் பொண்ண காதலிச்ச குத்தத்துக்கு, ரெண்டு நாளைக்கு பீட்டர புளியமரத்துல கட்டிப் போடுங்கடா! பீட்டரையும் அவன் குடும்பத்தையும் ஊர விட்டு ஆறு மாசம் ஒதுக்கி வைக்குறேன்.  இனம் இனத்தோட தான் சேரணும்! டேய் பல்குத்தி, மொறப் பொண்ணு கழுத்துல கட்டுடா தாலிய. இது தான் இந்த பதினெட்டுப் பட்டி நாட்டாமையோடு தீர்ப்பு!”

 

‘தீர்ப்பு… தீர்ப்பு… தீர்ப்பு!’ அண்ட சராசரமும் நடுநடுங்க, காற்றும் அலையும் நின்றுவிட, நான்கு திக்கும் ‘தீர்ப்பு’ எதிரொலித்தது.

 

பெண்ணிற்கு அந்த பல் குத்தியிடம் தாலி வாங்க இஷ்டமில்லை. தன் பெண்மையைக் களவாடியவனோடு ஒரு வாழ்வா?

இரு உள்ளங்கைகளுக்குள்ளும் முகம் புதைத்து, “இதுக்கு என்னைப் பாழும் கிணத்துல தள்ளிடு ஆத்தா. என் பீட்டரு இல்லாம என்னால வாழ முடியாது. அதுவும் என்னைப் பாழாக்கினவன் கூட ஒரு வாழ்க்கை என்னால வாழவே முடியாது.” 

விக்கிக் கொண்டு வர… முகத்திலிருந்த இரண்டு அணைகளையும் மீண்டும் திறந்து விட்டாள்.

 

“தொட்டவன கட்டிக்கிறதுதான் கண்ணு நம்ம பண்பாடு! காலம் காலமா தமிழர் கலாச்சாரம். யோசிக்காத கண்ணு, பீட்டரு நல்லவனா இருந்தாலும் அவன் நம்ம ஆளுங்க இல்ல கண்ணு. அவன மறந்திடு. நீ ஒழுக்கமா வீட்டோட அடங்கி இருந்தா இப்படி ஆகுமா?”

எப்பொழுதும் போல் புலியால் வேட்டையாடப்பட்ட மானே குற்றவாளியெனத் தீர்ப்பானது.

 

நிமிடங்களில் மஞ்சள் கிழங்கு கட்டப்பட்ட மஞ்சள் தாலிக் கொடி தயாரானது. மிரண்ட பார்வையோடே அடிமேல் அடி வைத்து பெண் பின்னோக்கி செல்ல, அவள் கால்கள் பின்ன… பல் நோண்டிக் கொண்டிருந்தவன் கையில் இப்பொழுது மஞ்சள் தாலி.

தாலிக் கொடியைத் தூக்கிப்பிடித்து, கோணல் சிரிப்போடு முன்னோக்கி வில்லன் செல்ல… கையறு நிலையில், மரத்தோடு கட்டப்பட்ட காதலன்!

கூட்டம் வாய் மூடி நடந்து கொண்டிருப்பதை எந்த எதிர்ப்பும் காட்டாது வேடிக்கை பார்த்து நின்றது. 

மேலே தலை உயர்த்தி சூரியன் திசை நோக்கி, நேரம் என்னவெனக் கண்டுகொண்ட ஹீரோ, வேறு அவசரமான ஒரு அப்பாயின்மெட் இருக்கவே, “நியாயமான ஒரு தீர்ப்ப சொல்லிட்டேன். உங்க எல்லார்கிட்ட இருந்தும் நான் விடுதல வாங்கிக்கிறேன்,” என்றான் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டு. 

 

செருப்புக்கடியில் தீப்பொறி கிளம்ப, நாட்டாமை வணக்கம் வைத்துக் கொண்டே நடக்க… மக்கள் அனைவரும் மறுத்துப் பேச தைரியம் இல்லாமல், இடுப்பு வரை குனிந்து நாட்டாமையை வணங்க… பயமறியா கன்று ஒன்று சிலுப்பிக் கொண்டு முன் வந்தது.

 

அவள், அந்த பட்டணத்துப் பாவை, “ஹலோ… மச்சான், இந்த தீர்ப்பு செல்லாது. தீர்ப்ப மாத்து நாட்டாம”, என்றாளே பார்க்கலாம்… சர்வமும் அடங்கி ஒடுங்கிப் போனது அங்கு.

 

அவ்வளவு பெரிய கூட்டம் முன் ஒரு பெண் சிங்கம், சிங்கிளா சென்று கொண்டிருந்த சிங்க நாட்டாமையை எதிர்த்து நின்றாள். கடல்… காற்று… பறவை… மரம்.. பறந்து கொண்டிருந்த சருகு… தூசி, எல்லாமே சிலையாய் மாறிப் போன சரித்திரம் அறியா தருணம்.

 

“அச்சோ… என்ன பொண்ணு இவ? நாட்டாமைய எதிர்த்து நிக்கிறாளே? என்ன ஆகப் போகுதோ?” வாயை கைகளால் மூடி, விழிகள் விரித்து சகுந்தலா பாட்டி பார்த்துக் கொண்டிருக்க…

அங்கிருந்த ஒவ்வொரு முகமாய் ஃபோகஸ் போக… அனைவர் முகத்திலும் அப்படி ஒரு அதிர்ச்சி! மீண்டும் ஒவ்வொரு முகமாக முன் வர, “தூர பார்த்தாலே விளங்கல, இதுகள வேற திரும்பத் திரும்ப கிட்ட காட்டிக்கிட்டு! என்ன ஒரு கேவலமான மேக்கப்?” சகுந்தலா பாட்டிக்கு எரிச்சல் கிளம்பியது. 

 

“ஐயோ நேரமாகுதே! மனுஷன் பொறுமை போறதுக்குள்ள அடுத்து என்ன டா…” கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே புலம்பினார். 

சகுந்தலா பாட்டியின் தவிப்பு புரியாமல், ஒரு பெரிய அதிர்வோடு, பாட்டி பார்த்துக் கொண்டிருந்த தொலைகாட்சித் திரையில் ‘தொ…ட…ரு…ம்’ என்று த்ரில்லர் பட ரேஞ்சிற்கு எழுத்துகள் வந்து விழுந்தன. 

 

“ஐயோ… ஐயோ… இன்னும் முழுசா அஞ்சு நிமிஷம் இருக்கே, எப்படி ஒரு முக்கியமான சீன்ல பாவி தொடரும் போட்டுட்டான்? திங்கக்கிழம வரைக்கும் காத்திருக்கணும். எங்கேயாவது டிவி பாக்குறவ கஷ்டம் புரியுதா இந்த சீரியல் போடுற பரதேசிங்களுக்கு? 

 

பாழாப் போனவன் அந்த பொண்ண என்ன பண்ணப் போறானோ? தாலி கட்ட வந்தவன் தலையில இடி விழ! காதலிக்கிற மண்டையன் சரியான மங்குனி அமைச்சரா இருப்பான் போல… நிக்கிறான் பாரு, கைய கட்ட கொடுத்துகிட்டு!

இந்த நாட்டாம வேற கோவமாப் பாக்குறானே… இருந்தாலும் அந்த பட்டணத்துப் புள்ளைக்கு தைரியம் தான்! இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு எல்லாம் எங்க இருந்துதான் இத்தன தைரியம் வருதோ? அடுத்து என்னாகுமோ?” பாட்டி புலம்பிக் கொண்டே தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்து,

 

“அம்மா எப்போ வராளாம்?” சோஃபாவில் அவரோடு இருந்த இளசுகளிடம் கேட்க,

“பத்தாகிடும் பாட்டி. அப்பா கூட தானே போனாங்க, வருவாங்க. நீங்க படுங்க. நாங்க வெயிட் பண்றோம்.” என்ற பதில் வரவும், 

 

“நேரத்தோட படுங்கம்மா” என்று கூறிக் கொண்டே படுக்கையில் விழுந்தார். அவர் படுக்கைக்குச் செல்லவும், அவருக்கு முட்டியில் தைலம் தேய்க்க சின்னவள் கூடவே சென்றாள்.

 

நேரம் இரவு ஒன்பது. அந்த அழகிய தனி வீட்டின் விஸ்தாரமான கொல்லைப்புறத்தில், வெள்ளி நிலவு கிணற்றுக்குள் விழுந்து கிடக்க, அதைப் பார்த்துக் கொண்டே கிணற்றுத் திண்டில் கால்களைக் கட்டிகொண்டு அமர்ந்தாள் அலர்விழி. 

 

நிசப்தமான இரவு. ஒரு வித ஏகாந்த வேளை. பூச்சிகளின் ரீங்காரமும், தூங்கா குருவிகளின் சிணுங்கலும், செல்லமாய் தேகத்தைத் தழுவி மேனியைச் சிலிர்க்கச் செய்யும் தென்றலும் பெண்ணவளைத் தீண்டியது.

 

நிலவு ஒளியில் அதிகம் தெரியவில்லை என்றாலும், அந்த அழகிய முகத்தைக் கசங்கலாக்கியிருந்த யோசனை ரேகை அப்பட்டமாகத் தெரிந்தது. இன்னும் இரண்டே நாட்கள் தான் இங்கு! அதன் பின் சென்னைக்கு பெட்டியைக் கட்ட வேண்டும். 

 

“என்ன அலர் யோசனை?” உள்ளிருந்து வந்தாள் இளையவள், நகுனா. இவள் அளவிற்கு சின்னவளுக்கு துணிச்சல் இல்லை போலும் மூன்றடி உயர துணி துவைக்கும் கருங்கல் மேல் அமர்ந்து கொண்டாள். அம்மாவைப் போலவே இவளும் பேரழகி என்றது நிலவின் ஒளி.

“மண்டே கிளம்பிடுவேன் நகு. அதுதான் எப்படியோ இருக்கு.”

 

“கவலப்படாத அலர்… ஃபோன் போட்டு அப்டேட் தரேன்.”

 

“என்ன அப்டேட் டீ?” பெரியவளுக்குப் புரியவில்லை.

 

“நம்ம நாட்டாமை தீர்ப்ப மாத்தறாரா என்னன்னு”

 

“அட ச்சீ…” இருவரும் குலுங்கிச் சிரித்தனர்.

“பாட்டி புலம்பிட்டே தூங்கறாங்க. ஸ்டுபிட் சீரியல் அலர், அதுக்கு என்ன டென்ஷன் பாரேன் பாட்டிக்கு?” 

 

“கததான் நகு, பட் யோசிச்சு பாரேன். பாவமா இல்ல, அந்தப் பொண்ணு நிலம? நமக்கு பரவால்ல நகு. அந்தக் காலத்துல, அந்த வில்லேஜ்ல பொண்ணுங்க எல்லாம் எவ்வளவு பாவம் இல்ல? ஆசைப் பட்டவன விட்டுட்டு யாரோ சொன்னதுக்காக எவன் கூடவோ வாழ்க்க பூரா இஷ்டமே இல்லாம வாழணும்!”

 

“வில்லேஜ், சிட்டி எல்லாம் இல்லை. அந்தக் காலம் இந்தக் காலம் எல்லாம் இல்ல, இப்போவும் நடக்கத்தான் செய்யுது அலர். என் க்ளாஸ் மேட் ரம்யாவோட அக்கா, டாக்டர்.காயத்திரி… அந்த மெரைன் இன்ஜினியர் முகமது அண்ணாவ எப்படி லவ் பண்ணிட்டு சுத்தினாங்க?

விஷயம் வீட்டுல தெரியவும் அந்த அக்காவோட அம்மா விஷம் குடிக்கப் போய் அந்த அக்கா வேற வழி இல்லாம அவங்க சொந்தக்காரப் பையன கல்யாணம் பண்ணிகிட்டாங்க.

பாவம்! அந்த அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? அவங்க ஆட்கள் இல்லியாம்… இது எல்லாம் ஒரு ரீசனா இந்தக் காலத்துல? ப்ச்!” 

 

“ஏன் அலர்… நீ சென்னை எல்லாம் போற, அங்க யாராது உன்ன பிடிச்சிருக்குன்னு சொன்னா… நீ லவ் பண்ணுவியா?” யோசனையாய் அக்காவைப் பார்த்தாள் நகுநா. 

 

“எதுக்கு? அம்மா என் ரெண்டு காலையும் உடைச்சு வீட்டுல உக்கார வைக்கவா? நான் கண்டிப்பா லவ் எல்லாம் பண்ணவே மாட்டேன். எனக்கு படிக்கணும் நகு. நல்லாப் படிச்சு, வேலைக்குப் போய் அம்மா அப்பாவ ரொம்ப ஹாப்பியா வச்சுக்கணும்.” 

 

“இன்கேஸ் நீ காயத்திரி மாதிரி லவ் பண்றேன்னு வை. ஏதோ காரணத்தால… நாங்களா? இல்ல உன் லவ்வரான்னு வந்தா என்ன பண்ணுவ, அலர்?” 

 

“ஹ ஹ ஹா… அட லூசு! லவ்? அதுவும் நான்? அதுவும் வேற ஆட்களை? ம்ம்கும்..! அது தெரிஞ்சே நெருப்புக் குழியில இறங்குற மாதிரி! நீங்க எல்லாம் தான் எனக்கு ரொம்ப இம்பார்ட்டென்ட். அந்த கருமத்த செஞ்சுட்டு எவன் அவஸ்தப் படுறது?

காதலிச்ச ஒருத்தரும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரம் சொல்லல. எனக்கு சோக கீதம் எல்லாம் செட்டே ஆகாது. சோ, இந்த அலர்விழி யாரையும் காதலிக்க மாட்டா நகு! காதலாவது கத்தரிக்காயாவது!” 

 

‘காதலாவது கத்தரிக்காயாவது!’ என்பவர்கள் தான் முந்திக்கொண்டு காதல் கடலில் விழுவார்களாம். நம் அலர்விழி எப்படியோ?

 …

Scroll to Top