வா காதோரம் காதல் சொல்ல 6.2

அத்தியாயம் 6.2

எபி-யின் கார் அவர்களது கணினி மையத்திற்குள் நுழையவும் அவன் கண்களில் தென்பட்டாள் காந்தக் கண்ணழகி. அவள் தான்… கண்டு கொள்ள இந்த முறை சிரமாக இருக்கவில்லை. 

அப்பொழுது தான் தலைக் கவசத்தைக் கழட்டியவள், சுருள் சுருளாய் முதுகில் விரிந்து விழுந்த கூந்தல் கற்றையின் சிலவற்றை கிளிப்புக்குள் அடக்க, மடியில் தலை கவசத்தோடு இவளையே பார்த்து அமர்ந்திருந்த சாக்லேட் பாய், “இந்தா, மறந்திட்ட பாரு” என்று நீட்டிய மல்லி சரத்தை வாங்கி வைத்து கொண்டாள்.

நூடுல்ஸ் மண்டை இன்று பீச் நிற சல்வார், காட்டன் துப்பட்டா என்று அழகிய கோலத்தில் காட்சியளித்தாள். 

பல்ஸரிலிருந்தவனோடு பேசிவிட்டு பெண், மையத்தின் வாயில் நோக்கிக் கிளம்பவும் அவன் பர்ஸிலிருந்து பணம் கொடுக்க, வாங்க மறுத்தவளை அவன் முறைக்க… அவள் அவனைப் பாவமாகப் பார்க்க… அவன் ஏதோ கூறிக் கொண்டே கை பிடித்து அதில் சில தாள்களைத் திணித்துவிட்டுப் பறந்தான். 

“யாரு டா நீ?” எபியின் மண்டை காய்ந்தது. ஏனோ அவர்கள் நெருக்கம் அவனை இடறவில்லை. மாதங்கள் இரண்டு சென்றிருந்தது இவளைப் பார்த்து. அன்று மைதானத்தில் பார்த்தது. அடுத்து வந்த சனிக்கிழமைகளில் அவன் கண்கள் மைதானத்தைத் துழாவ அவளைக் கண்டானில்லை. இன்று இன்ப அதிர்ச்சி. முகத்தில் புன்னகை ஒட்டிக் கொண்டது. 

‘ஃபேக்கல்டி இன்டெர்வியூக்கு மட்டும் நீ வந்திருந்த… ஐஸ்(EYES) பேபி யூ ஆர் செலக்டெட்’ சொல்லிக் கொண்டான். 

கையில் கார் சாவியைச் சுற்றிக் கொண்டே உள்ளே நுழைந்தவன் முகத்தில் அளவிற்கு அதிகமான புன்னகை. பார்த்ததும் எதிரில் இருப்பவருக்கு ஒட்டிக் கொள்ளும் புன்னகை அது. 

“குட் மார்னிங் எபி,” புன்னகைத்தாள் வரவேற்பாளர். இவனை விட ஏழு வயது பெரியவள். பார்த்தால் தெரியாது.

குஷி மூடிலேயே, “ஹாய் வனிதா. குட் மார்னிங்” என உள்ளே சென்றான்.  

மாதவனோடு வந்திறங்கியவளுக்கோ அந்த ஆறு மாடி கட்டித்தில் எங்கு செல்வது என்று வெளியே இருந்த தள-விபர பலகையைப் பார்க்க, ‘டேர் டு ட்ரீம்’ அனைத்து தளங்களையும் ஆக்கிரமித்திருந்தது.  ஏதேனும் ஒரு தளத்தில் வகுப்பு இருக்கும் என்று நினைத்தவளுக்குக் கண்ணாடிக் கட்டிடம் கண்ணைக் கட்டியது. 

‘கோர்ஸ் ஃபீ கம்மியா இருக்கணுமே…’ என வேண்டிக் கொண்டாள். ‘இந்தியாவின் தலை நகரம் சென்னையாக இருக்க வேண்டுமே’ என்ற வேண்டுதலுக்கு இணையானது அவள் வேண்டுதல் என்று சற்று நேரத்திற்கெல்லாம் தெரிந்து கொண்டாள்.

உள்ளே செல்ல… அறையின் பிரமாண்டமும், ஏசி-யின் குளுமையும், அறையில் தவழ்ந்த வாசமும் மனதில் பீதியைக் கிளப்பி, வயிற்றைக் கலக்கியது. இவள் உள்ளே சென்றதும், ஓரமாய் இருந்த மேசையின் பின் இருந்த வனிதா அழகாய் சிரித்துக்கொண்டே, “வாங்க. எந்த விதமான உதவி வேணும்?” என்பதைச் சரளமான ஆங்கிலத்தில் கேட்க, 

‘இவனுங்க ஏசிக்கும்… பில்டிங் வாடகைக்கும்… இதோ இவ சம்பளத்துக்கும் இங்க படிக்க வரவங்க தானே காசு கொடுக்கணும். இங்க எல்லாம் நமக்கு கட்டு படியாகுமா அலர்? உன் வசதிக்கு ஏத்த மாதிரி வேற இடம் பாரு’ மனம் சலித்துக்கொண்டது. 

‘போய்டலாமா?’ எண்ணிக் கொண்டே கண்களை உருட்டி உருட்டிக் கட்டிடத்தைப் பார்க்க… “ஹாய்… ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?” மீண்டும் அழகி கேட்க, வந்ததுக்கேனும் விசாரித்து செல்வோம் என்ற எண்ணத்தோடு அவள் முன் போய் நின்றாள். 

அடுத்த ஐந்தாவது நிமிடம் சிற்றேடுடன்(ப்ரோஷர்) தனியறையில் அமர்ந்திருந்தாள். கல்லூரி முடித்தவர்கள் தினம் காலை முதல் மாலை வரை வந்து செல்லும் இடம் என்பது புரிந்தது. இவளைப் போன்ற மாணவர்கள் மிகவும் அரிது! வார இறுதியில் இவர்களைப் போன்று வேலை செய்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் வகுப்பு இருந்தது. 

“நீங்க கேட்ட கோர்ஸ் டீச் பண்ற ஃபேகல்ட்டி யார் ஃப்ரீயா இருக்காங்கன்னு பார்த்து அனுப்புறேன். அவங்களால உங்க கேள்விக்கு எல்லாம் சரியான பதில் கொடுக்க முடியும். ப்ளீஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பை த பை.. ஐ ஆம் வனிதா!” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஒரு கண்ணாடி கோப்பையில் ஆரஜ் ஜீஸும், கோர்ஸ் பற்றிய வழவழப்பான புத்தகம் போல் இருந்த ப்ரோஷர் ஒன்றைக் கொடுத்து, ஏதோ எமிரேட்ஸ் விமானத்தில் முதல் வகுப்பில் பயணிப்பது போன்ற உணர்வை கொடுத்து சென்றாள் வனிதா! 

மீண்டுமாக அந்தப் பெரிய கண்கள் அறையை வலம் வந்தது. பத்தொன்பது வயது. உலகம் தெரியாது. கண் முன் ஒரு கனவு… கனவை நினைவாக்கும் முதல் படி. சறுக்காமல் ஏற வேண்டும்… ஆனால் இது தன்னைப் போல் மிடில் க்ளாஸ் ஆட்களுக்கு ஏற்ற இடமா? சிற்றிடை வனிதாவைப் பார்த்தே மிரண்டுவிட்டாள் பெண். ஆளும்.. அவள் பேச்சும்… அவள் ஒப்பனையும்… கண்டிப்பா ரொம்ப காஸ்ட்லியான இடமா இருக்கும். ஏதேதோ எண்ணம். 

‘இந்த ப்ரோஷோர்ல ரேட் போட்டிருக்குமோ?’ இழுத்து ஒரு மூச்சை விட்டவள், கப்பிலிருந்த ஜூசை வாய்க்குள் ஊற்றி விட்டு கையிலிருந்த புத்தக வடிவிலிருந்த கோர்ஸ் புத்தகத்தில் பார்வையை பதித்தாள். 

ஜூசை விழுங்கத் தோன்றவில்லை. ஆசைப்பட்ட கோர்ஸ் அனைத்துமே இருந்தது. அதைக் கற்றுக்கொள்ள கொடுக்க வேண்டிய விலை? விழிகள் இரண்டும் ஏகத்திற்கும் விரிந்தன. அவள் நினைப்பைப் பொய்யாக்கவில்லை அதில் தெரிந்த எண்கள்! 

குனிந்து மும்முரமாகச் சிற்றேட்டில் தலையை விட்டிருப்பவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு உள்ளுக்குள் குதூகலம். 

எத்தனை நாள் மூடிய இமைக்குள் வந்து சித்திரவதை செய்தது அந்த மலர் விழிகள்? எத்தனை சனிக்கிழமைகள் அவன் கண்கள் அந்த மைதானத்தைச் சுற்றி வந்தன? தேடினானே அவளை! அவளின் ஒவ்வொரு அசைவையும் எத்தனை நாட்கள் அசைபோட்டான். அவளின் இதயத்துடிப்பு? அந்த சொட்டு வியர்வை! அன்றைக்கு ஏற்பட்ட மின்சாரம் இன்று தாக்க, மனம் மீண்டும் துள்ளியது. 

‘என்னைத் தேடி இருப்பாளா? தன்னை நினைவு வைத்திருப்பாளா?’ 

ரூம் நம்பர்:105 என்றிருந்த கதவைத் தட்டிவிட்டு வந்தவன், “ஹலோ மிஸ்.விழி” என்று எதிரில் அமர, அவள் முகத்தை உயர்த்தவும், “மிஸ் மீ?” என்றான் நமுட்டு குறுஞ்சிரிப்போடு. 

அவன் ‘மிஸ் மீ’யில், வாயிலிருந்தது தொண்டைக்குச் செல்லும் வழியில் தடம் மாறி மூக்கின் வழியும் வாயின் வழியும் வெளியே வந்து முன் இருந்தவனை அபிஷேகம் செய்தது ஆரஞ்சு நிற திரவம். 

மூக்கிலும் தொண்டையிலும் சிக்கிய திரவம் இருமலை நிற்க விடவில்லை. அவள் கையை வானுக்கு உயர்த்தி தலையை பின்னுக்குக் கொண்டு சென்று மெல்லத் தலையையும் முதுகையும் தட்டி விட… சிறிது நேரத்தில் இயல்புக்கு வந்தாள். 

“யூ ஓக்கே?” கேட்டவன் முகத்தில் ‘அச்சோ…’ என்ற பிரதிபலிப்பு. மனமோ ‘கண்ணழகிக்கு என்னைத் தெரியுது’ குத்தாட்டம் போட்டது.

எதிரில் அமர்ந்தவன், டிஷ்யூ பாக்ஸை அவளிடம் தள்ளி வைத்து, அதிலிருந்து ஒன்றை உருவி தன்னைத் துடைத்துக் கொள்ள, வைத்த கண் எடுக்காமல் அவனைத் தான் பார்த்தாள். அவன் தான். அவனே தான். இதயத் துடிப்பு அவள் காது வரை கேட்டது. 

முதல் முறை + இரண்டாம் முறை பார்த்ததின் கலவையான தோற்றம் இன்று. 

இடது பக்கம் வகிடெடுத்து தலை வாரியிருக்க, வலப் பக்க கேசம் மட்டுமே நீளம், மற்றது வெறும் ஒரு சென்டிமீட்டர் நீளமே. நீளமான அடர் கேசம் ஜெல்லின் உதவியோடு படிந்து நின்றது. இன்று தாடி இல்லை. மீசையின் ஓரத்தில் சின்ன முறுக்கல். 

இப்படி எல்லாம் யாரைக் கவனித்தாள்? அவன் கண்கள் அவளை ஈர்த்தது… சுண்டி இழுக்கும் பார்வை ஈர்த்தது… அவளைக் கண்டதும் மந்தகாசப் புன்னகை சிந்தும் உதடு ஈர்த்தது… ஒவ்வொரு முறையும் மாற்றும் தோற்றம் ஈர்த்தது… மொத்தத்தில் ஈர்த்தான்… கவனித்தாள், இதயம் வழுக்கியது அவன்பால். 

“ஹாய்…” என்றான். அவன் ஆண்மை ததும்பிய குரல் ஏதோ செய்தது. ‘ஏன் இவன் இவ்வளவு மேன்லியா இருக்கான்?’ என்ற ஆராய்ச்சியை நிறுத்தி அவன் கண் பார்த்தாள்.  

பேச்சு வரவில்லை. இன்றும் முட்டைக் கண்கள் விரிந்தன. ஆனால் அன்று போல் ‘நீயெல்லாம் பெரிய இவனா’ என்ற திமிர் மொழி இல்லை. அதிகப்படியான ஆராய்ச்சி அவளிடம். பார்வையில் ‘நீ என்னை டிஸ்டர்ப் செய்ற’ என்ற தகவல் அடங்கி இருந்தது. 

அவன் ஆராய்ச்சி எல்லாம் கடந்திருந்தான். அதிகப்படியான ரசனை அவன் பார்வையில். 

எதிரில் இருந்த மோகினிப்  பிசாசின் நெற்றியில் தொங்கி நின்ற ஸ்ப்ரிங் முடியை இழுத்து அதன் நீளம் பார்க்கத் தோன்றியது.

என் பிம்பத்தை ஏந்தும் உன் விழியின் வெப்பமும் குளுமையும் ஒன்றாய் என்னைப் பொசுக்குகின்றது என்று கூற மனம் பரபரத்தது.

என்னைக் கூறு போடும் உன் நயனங்களை அலங்கரிக்கும் அடர்த்தியான மையோடு என்னையும் பூசிக்கொள்ளேன் என்று கூற மனம் ஆசை கொண்டது.

பளபளத்த மாந்தளிர் உதட்டில் சாயம் உள்ளதா இல்லை, அது தான் இயற்கை நிறமா என்று உற்றுப் பார்க்கத் தோன்றியது.

பாரதியின் புதுமைப் பெண்ணின் அடாவடி குணத்தைச் சீண்ட ஆசை தோன்றியது. இருந்தும் இதை எதையுமே முகத்தில் காட்டினான் இல்லை. 

இருவர் விழிகளும் சந்தித்தன. இருவர் பார்வையிலும் அலைப்புறுதல் இல்லை. கள்ளத்தனம் இல்லாத நேர்மையான பார்வை அது.

அவளை வம்பிழுக்காமல் போனால் அவனுக்குத் தான் தூக்கம் வராதே… கீழ் உதட்டை மென்மையாகக் கடித்து அதிலிருந்த சொட்டு திரவத்தை உள்வாங்கியவன், நெற்றி சுருக்கி, “ஜூஸ் கொஞ்சம் புளிப்பில்ல?” என்றான், எழுந்த நமுட்டு சிரிப்பை மறையாமல். 

‘மூஞ்சில துப்பினாலும் நீ அடங்க மாட்டியா டா?’ அழகிய சிலையிடம் உரைக்க பதிலில்லை என்றாலும் அந்த நீள நயனங்கள் சுருங்கி முறைத்தன. 

‘அச்சோ என் அழகே’ கொஞ்சிக் கொண்டவன் முத்து பற்கள் தெரிய சிரிப்பு விரிந்தது. முகம் துடைக்க, பிசுபிசுப்பு குறைந்தபாடில்லை. 

“வாஷ் ரூம் போகணும்னா… வெளியில லெஃப்ட் சைட் எண்ட்-ல இருக்கு. எனக்கு டூ மினிட்ஸ் தாங்க… ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன். ரொம்ப ஸ்டிக்கியா இருக்கு.” கூறிவிட்டு நகர்ந்தான். 

அவள் காதில் விழுந்ததா? விழுந்தாலும் எங்கும் செல்லும் நோக்கமில்லை… சேதாரம் அவன் சந்தன முகத்திற்கும் அதை ஒத்த பளீர் சந்தன சட்டைக்கும் தானே… அவன் நகர அவள் கருவிழிகள் அவனையே தொடர்ந்தன. 

ஏன் மீண்டும் மீண்டும் இவன்? அவன் மேல் துப்பியதற்கு மன்னிப்பைக் கேட்க வேண்டுமோ? அன்றே அறைந்ததிற்குக் கேட்டிருக்க வேண்டும்! இன்றும் கேட்டிருக்க வேண்டும். இன்றும் கேட்க தோன்றவில்லை. இவனைப் பார்த்தால் மூளை செயலிழந்து போய் விடுமோ? அவன் சீண்டுவது தெரிந்தது. ஏனோ அதுவும் பிடித்தது. 

‘ரொம்ப மேன்லியா… ரொம்ப அழகா இருக்கான். வாய்ஸ் கூட சூப்பர். ரொம்ப நல்லவன் போல முகத்துல துப்பி இருக்கேன்… ஒரு நிமிஷம் முகம் கோணல.’ அவன் சிந்தனையில் வயதுப் பெண் கரைய… அறையைச் சுத்தம் செய்யும் பெண்ணோடு வந்த வனிதா, இவளை வேறு அறை கூட்டிச் சென்று ஆப்பிள் ஜூசை கொடுத்து அமர வைத்துச் சென்றாள்.

‘இங்க தான் வேலை பார்க்கறானோ?’ மனம் அவனையே சுற்றி வந்தது. இன்று வரை நினைக்காதவனை இன்று சேர்த்து வைத்து ஒட்டு மொத்தமாக நினைத்தாள். கையிலிருந்த தாளில் கவனமில்லை. 

இம்முறை ஜூசை தொட்டுக் கூட பார்க்கவில்லை. முதுகு பின் கதவு தட்டப்படும் சத்தம். வந்து விட்டானா? மனம் பரபரத்தது. 

“ஹாய். ஐ ஆம் விஜய். அப்புறம் சொல்லுங்க. என்ன பண்றீங்க?” புன்னகை முகமாக எதிரில் அமர்ந்தவனைப் பார்த்தவள் முகத்தில் வெளிச்சம் இல்லை.  மெல்லத் திரும்பி வாசலைப் பார்த்தாள். கண்ணாடிக் கதவு மூடியிருந்தது. முகம் விழுந்து போனது. என்ன எதிர்பார்க்கிறாள்? அவனையா? அப்படித்தான் போலும். ‘இவன யார் கூப்பிட்டா? வந்துட்டான் ஹாய் சொல்லிகிட்டு.’ எதிரில் அமர்ந்திருந்த புதியவன் மேல் அவசியமே இல்லாமல் கோபம் வந்தது. 

“மிஸ்.அலர்விழி?”

 “ம்ம்..?”

  கவனம் அவள் கையிலிருந்த தாளில் எப்படியோ பதிய, ‘வந்த வேலையை மட்டும் பார்க்கிறியா?’ மனம் கடிய, வேண்டிய விஷயங்கள் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். 

“உங்களுக்கு சனி ஞாயிறு க்ளாஸ். அடுத்த பேட்ச், நெக்ஸ்ட் மந்த் லாஸ்ட் வீக்-ல தான். லேப் ஃபெசிலிட்டி பாக்கறீங்களா?” விஜய் வேறு தளத்திற்கு அழைத்துச் சென்றான். “மேல ரெண்டு ஃப்ளோர்ல லைவ் ப்ராஜெக்ட்ஸ் போகுது. கடைசி ரெண்டு மாசம் உங்களுக்கும் அதுல இன்வால்வ் ஆக முடியும்.” எரிந்து கொண்டிருந்த ஆசை நெருப்பில் நெய் ஊற்றினான். 

அந்த பிரமாண்டமான லேபை பார்த்தவள் கண்கள் இரண்டிலும் ஏக்கம் பொங்கி வழிந்தன. படிக்க ஆசை இருந்தும்… திறமை இருந்தும்… சிலருக்கு அது ஏக்கமாகவே நின்று விடுவது பாரமான விஷயமே.

படிப்பு சம்பந்தமாக அனைத்தும் கேட்டு முடிக்கவும் அவன், “ஹோப் டூ சீ யூ அரௌண்ட் மிஸ்.அலர்விழி,” என்று கழண்டு கொள்ள, மீண்டும் வனிதா வந்தாள். 

நீண்ட நாட்களாக இருவரும் தோழி போல் பெரிதாக இதழ் விரித்தாள். மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் இப்படி தானே சட்டென்று பெரிதாகச் சிரிப்பார்கள்?  

அருகில் அமர்ந்தவள், “இந்த ஜூஸ் பிடிக்கலியா? ஆரஞ்ச் ஜூஸ் கொண்டு வரட்டுமா? ஃபீல் ஃப்ரீ மிஸ்.அலர்விழி.” சிரித்துக் கொண்டே முகம் பார்த்தவளின் மார்க்கெட்டிங் திறன் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை அலர்விழியால். 

“இல்ல இல்ல இது ஓகே…” அருகிலிருந்த ஜூஸ் ஒரு வாய் உள்ளே சென்றதும், “உங்க ஃபீஸ் தான் பிடிக்கல. மாத்த முடிஞ்சா புண்ணியமாப் போகும்,” சிரித்தாள். 

அவள் பதிலுக்கு மீண்டும் இழுத்துப் பிடித்து இதழை விரித்தாள் வனிதா. “சொல்லுங்க அலர்விழி. இன்னும் ஏதாவது சந்தேகம் இருக்கா?”

“முதல்ல ஒருத்தர் வந்தாரே,” அலர் தயங்க, வனிதா உதட்டிற்குள் எழுந்த சிரிப்பை மென்று விழுங்க… இவளுக்கே இவள் அல்பத்தனம் முகத்தில் அறைந்தது. கேவலமான உணர்வை உள்ளுக்குள் புதைத்து “அவர் மேல் ஜூஸ் கொட்டிடுச்சே…” என்று இழுத்தாள். 

“ஓ… அவருக்கு இன்டெர்வியூ இருக்கு. கொஞ்சம் பிஸி.” 

‘அவர் பேர சொல்லேன்…’ வாய் திறந்து கேட்டாள் இல்லை. ‘லூசு என்ன பண்ற?’ தலையைச் சிலுப்பியவள், “வீக் எண்ட் மட்டும் தானே க்ளாஸ். எனக்கு டைம் இருந்தா வீக் டேஸ் காலேஜ் முடிஞ்சதும் லேப் யூஸ் பண்ண வரலாமா?”

 “அஃப் கோர்ஸ் எஸ். கிளாஸ் ஆரம்பிச்சதுல இருந்து அடுத்த எட்டு மாசமும் சென்டர் ஓப்பன் ஆகறதுல இருந்து ஷட்டர் க்ளோஸ் ஆகற வரைக்கும் எப்போ வேணும்னாலும் லேப் யூஸ் பண்ணலாம். லேப்-ல ஹெல்ப் பண்ண அங்க தனியா ஃபேக்கல்டி இருப்பாங்க.” வனிதா கூற, பெண்ணிற்கு ஆசை அலைமோதியது. ஆனால் இங்கு படிக்க விரும்புவது கானல் நீர் என்று உணர முடியாத அளவிற்கு முட்டாளில்லையே அவள். 

“நான் ஸ்டூடென்ட்! எனக்கு கோர்ஸ் ஃபீஸ்ல டிஸ்கௌண்ட் கிடைக்குமா? ஸ்காலர்ஷிப் மாதிரி எதுவும் இருக்கா?” 

“மார்னிங் எயிட்க்கு ஒபன் ஆகும். நைட் நைன் வரைக்கும் இன்ஸ்டிடியூட் இருக்கும். கம்ப்யூட்டர் அவர்ஸ் அன்லிமிடெட். எயிட் மந்த்ஸ் க்ளாஸ் ட்யூரேஷன் வரைக்கும் நீங்க எப்போ வேணும்னாலும் வரலாம். லேப் செய்யலாம். லேப்ல எப்போவும் ஹெல்ப் பண்ண ஃபேக்கல்ட்டி இருப்பாங்க.  எட்டு மாசம் அப்புறம் உங்க திறமைக்கு ஏத்த மாதிரி ரெண்டு மாசம் லைவ் பிராஜக்ட்ஸ் பண்ண வாய்ப்பு கிடைக்கும்.

வீக் எண்ட்-ல பெரிய பெரிய கம்பனில இருக்க பெரிய லெவல் டெக் லீட்ஸ் வந்து கெஸ்ட் லெக்சர் கொடுப்பாங்க. 90% எடுத்து இங்க பாஸ் ஆனா, உங்க காலேஜ் மார்க் 80% மேல இருந்தா கண்டிப்பா எம்என்சி-ல ப்ளேஸ் பண்ணுவோம். 100% ஜாப் கேரண்டி! நீங்களே சொல்லுங்க… இவ்வளவு ஃபெசிலிட்டிக்கு இந்த கோர்ஸ் ஃபீ கம்மி தானே. நீங்க நாலு இடம் விசாரிச்சுப் பாருங்க. நாங்க அவ்வளவு காஸ்ட்லி எல்லாம் இல்லை மிஸ்.அலர்விழி.” 

புன்னகைக்க மட்டும் தான் முடிந்தது. குனிந்து எண்களில் விழி பதித்தாள். லட்சத்து இருபதினாயிரம்! 

“கண்டிப்பா யூஸ்ஃபுல்லா இருக்கும்.” மீண்டும் வனிதா தான். 

இருக்கும் தான்… யார் இல்லை என்றது. ஆசையாகத் தான் உள்ளது. தொண்டையைக் கனைத்தவள், நடுக்கத்தை மறைத்து கொஞ்சமும் கெத்து குறையாமல், “ஸ்டேட் லெவெல் டாப்பர் நான். ஸ்காலர்ஷிப் கொடுக்க முடியுமான்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்ல முடியுமா?” 

வனிதாவிற்குத் தெரிந்து விட்டது. இது தேறாத கேஸ் என்று. “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல மிஸ்!” 

“ப்ச்! நிறைய சென்டர்ல இருக்கே… நான் உங்க பாஸ் கிட்ட பேசிப் பார்க்கறேன். அப்பாயின்மென்ட் கிடைக்குமா?”

அவளின் விடா முயற்சி கண்டு வனிதாவிற்குச் சிரிப்பு வந்தது போலும்… அடக்கிக் கொண்டாள். இவளுக்குக் கோபம் வந்தது. மற்றவரின் இயலாமை நகைப்புக்குரியது இல்லையே…

“நான் ஜோக் சொல்லலியே?” என்றாள். 

அவள் “சாரி” எனவும், மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள். “நீங்களா சொன்னா எப்படி? உங்க மேனேஜ்மென்ட் கிட்ட பேசிட்டு எனக்கு சொல்லுங்க ப்ளீஸ். இல்ல நான் பேச ஏற்பாடு பண்ணித் தாங்க.” 

ஜானகி ஆன்ட்டி கொடுத்திருந்த எஸ்தரின் விசிட்டிங் கார்டில் தனது நம்பரை எழுதிக் கொடுத்தாள். எம்.டியின் விசிடிங் கார்டைப் பார்த்ததும் வனிதாவிடமிருந்து, “மேடம் கிட்ட பேசிட்டு சொல்றேன் மிஸ்.” என்ற திருப்தியான பதில் வரவும் மீதி இருந்த ஜூசை வாய்க்குள் கடத்தியவள், “உங்க ஃபோன் காலுக்காக காத்திருப்பேன். பை,” என்று கிளம்பினாள். 

error: Content is protected !!
Scroll to Top