Skip to content
அத்தியாயம் 6.1
“மாது ண்ணா… கம்யூட்டர் சென்டர்ல சேர்ந்தா நல்லா இருக்கும்ன்னு பாக்கறேன். என்ன ண்ணா சொல்ற?”
“ஏன் டீ? காலேஜ்ல சொல்லித் தரது புரியலியா?”
“புரியுதுண்ணா…” சமைத்த சாப்பாட்டை பரிமாறிக் கொண்டே அலர்விழி மாதவனோடு கேட்டுக் கொண்டிருக்க, சம்மந்தமே இல்லாமல் ஆஜர் ஆனார் பாக்கியா.
“ஏன் டி அலர், இந்த வருஷம் பாஸ் ஆக மாட்டியா? உனக்கு எதுக்கு இந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் எல்லாம்? அதுக்கு தான் கடலூர்லயே ஏதாவது காலேஜ்ல காமர்ஸ்… எக்கனாமிக்ஸ் எடுத்து படிச்சிருக்கணும். எல்லாம் உன் அப்பன சொல்லணும். நீ என்ன சொன்னாலும் எதுவும் யோசிக்காம தலையத் தலைய அவர் ஆட்டவும் நீயும் தலை கால் புரியாம ஆடுற.”
“மா… ஏன் மா சும்மாவே இருக்க மாட்டீங்களா? போங்க மா… போய் உங்க பொண்ண டீவிய ஆஃப் பண்ணிட்டு படிக்க சொல்லுங்க. அவள கவனிங்க.”
‘ம்கும்… என் பையன என்ன பண்ணினாளோ தெரியல. இதுவும் அவ அப்பன மாதிரியே இவளுக்கு பூம் பூம் மாடு மாதிரி மண்டைய மண்டைய ஆட்டுது…’ வாய்க்குள் பொருமிக் கொண்டே நகர்ந்தார்.
அவர் அப்படித்தான். அலர்விழியை மென்று துப்ப மிகவும் பிடிக்கும். அனைத்திலும் அவர் மகளை விட ஒரு படி மேல் இருப்பவளைக் கொஞ்சம் மட்டம் தட்டிப் பார்ப்பதில் ஒரு தனி சுகம் அவருக்கு.
“நீ சொல்லு… என்ன சென்டர்? என்ன படிக்க?”
கல்லூரியில் முதல் வருடம் முடிவடைந்திருக்க, வீட்டிற்குக் கிளம்ப இருந்தவளைத் தனியே போக மாதவன் சம்மதிக்கவில்லை. வம்படியாக விடுதி சென்று அவனோடு அழைத்து வந்திருந்தான்.
‘சித்தப்பாவ பாத்து நாள் ஆச்சு… நானும் வரேன்’ என்றுவிட அண்ணனும் தங்கையும் நாளை மாலை கிளம்பி விடுவர்.
பாக்கியாவிற்கு அதிலும் எரிச்சல் தான். ‘போறவ பஸ்ல ஏறிப் போகாம என் பையன ட்ரைவர் வேல பாக்க வச்சுகிட்டு.’ அந்த கோபம் தான் இன்று அலர்விழி வந்தது முதலே குத்தலும் குதர்க்கமுமாய் அவள் தலை மேல் மழையாகப் பொழிந்து கொண்டு.
“கிராபிக்ஸ் அண்ட் அனிமேஷன், விஷுவல் எஃபக்ட்ஸ், அப்பறம் கேமிங் (Graphics and animation, visual effects, gaming) படிக்கலாம்ன்னு நினைக்கிறேன். காலேஜ் முடிச்சதும் வேலை கிடைக்க ஈசியா இருக்கும் ண்ணா.”
“உன் ஃப்ரெண்ட்ஸ் யாராவது படிக்கிறாங்களா? எனக்கு இந்த ஃபீல்ட் தெரியல அலர். விசாரிச்சு சொல்லவா? இல்ல நீயே விசாரிச்சுட்டியா?”
“சீனியர் அக்கா ஒருத்தங்க படிச்சு நல்ல கம்பனியில ஆஃபர் வாங்கிருக்காங்க. நான் சேந்தா, என் ஃப்ரெண்ட் ஸ்ருதியும் சேருறேன்னு சொன்னா.”
“ஓஹ்”
“ஹாஸ்டல்ல ஜானகி ஆன்ட்டிட்ட அன்னைக்குப் பேசும் போது சொன்னேன்… அவங்க ராயபெட்-ல இருக்க ‘டேர் டு ட்ரீம் கம்ப்யூட்டர் சென்டர்’ போய் பாக்க சொன்னாங்க. அந்த சீனியர் அக்கா கூட அங்க தான் பண்ணினாங்களாம். ஹாஸ்டல்ல இருந்து பக்கம் தானே, ஊருக்குப் போயிட்டு வந்ததும் அங்க விசாரிக்கவா?” யோசனையாக அவன் முகம் பார்த்தாள்.
விஷுவல் கம்யுனிகேஷன் மாணவியை கணினி வரைகலை அதிகமாக ஈர்த்தது. கல்லூரியில் சொல்லித் தருவது போதவில்லை. இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள ஆசை. நூலக புத்தகங்களில் படிப்பதை எல்லாம் செய்து பார்க்கும் ஆவல். அவள் விருப்பத்தை அவளின் நலன் விரும்பி, ஜானகி ஆன்ட்டியிடம் கூறினாள்.
“மூணு வருஷம் காலேஜ் முடியும் போது, கைல ஆஃபர் லெட்டர் இருக்கணும் ஆன்ட்டி. அதுக்கு முதல்ல இப்போ ட்ரெண்டுல இருக்க சாஃப்ட்வேர் படிக்கணும். அப்புறம் அங்கேயே ஒரு ஆறு மாசம் சம்பளம் இல்லேனா கூட பரவாலன்னு வேலை செய்யணும். அப்படியே முடிஞ்ச அளவு நிறைய கத்துக்கணும். அப்புறம் ஒரு க்ராஃபிக்ஸ் பண்ற சின்ன கம்பனில சேரணும். படிப்பு முடியவும்… கையில டிகிரீ, மண்டை பூரா சரக்கோட பெரிய கம்பனில ஜாயின் பண்ணனும். அப்புறம் ஆன் சைட்-ல போய் வேல பார்த்து அம்மா அப்பாக்கு ரெஸ்ட் குடுக்கணும் ஆன்ட்டி.”
கண்களில் கனவோடு பேசிய அலர்விழி மேல் ஒரு தனி மதிப்பே ஜானகி ஆன்ட்டிக்கு ஏற்பட்டது நிஜம். ஜானகிக்கு குடும்பம் மட்டும் தான் இல்லை… மற்றபடி அவர் நட்பு வட்டாரம் கிளைபரப்பின ஆலமரம் போல்.
“எஸ்தர்ன்னு எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு, அடிக்கடி இங்க வருவா. அறிமுகப்படுத்தி வைக்கிறேன் உனக்கு. உன்னப் பாத்தா எனக்கு அவ தான் நினைவுக்கு வர்றா..
நான் கல்யாணம் ஆனதும் இருந்த வேலைய விட்டுட்டு என் புருஷன் மாமியார் மாமனார் கொழுந்தனுக்கு ஏத்த மாதிரி சமைக்கவும் வீட்ட பார்த்துக்கவும் இறங்கின சமயம் அது. எனக்குன்னு இருந்த கனவெல்லாம் மறந்து போயி குடும்பமே எல்லாமா மாறிப் போன டைம்! அப்போ தான் அவளுக்கும் கல்யாணம் ஆச்சு. அவளுக்கும் ஒரு கனவு இருந்தது, ஆனா என்னை மாதிரி அவ லட்சியத்த மறக்கல. இன்னைக்கு ஒரு கம்யூட்டர் சென்டர் வச்சிருக்கா. நீ கூட கேள்விப் பட்டிருப்பியே டேர் டு ட்ரீம்! அவளுது தான்.
அவ சென்டர போய் பாரு, அங்க படிச்சா கண்டிப்பா வேலை உறுதி. நீயும் எஸ்தர் மாதிரி உன் லட்சியத்த அடைய என் வாழ்த்துக்கள் அலர்விழி.”
இன்று, அதே சென்டர் பற்றித் தான் மாதவனோடு பேசிக் கொண்டிருந்தாள்.
“எனக்கு இந்த சென்டர் பத்தி தெரியல டா. ஏன் தள்ளி போட்டுகிட்டு? நாளைக்கு சனிக்கிழமை தான, எனக்கு அடையார்ல ஒரு வேலை இருக்கு. உன்ன சென்டர்ல விட்டுட்டு நான் போறேன்… நீ வேல முடிஞ்சதும் அடையார் வந்திடு. சேர்ந்தே வீட்டுக்கு வந்திடலாம். சென்டர் பிடிச்சிருந்தா ஊர்ல இருந்து வந்ததும் சேர்ந்துக்கோ.”
ஒரு வருடத்தில் அவளின் உடன் பிறப்பாய் மாறிப் போயிருந்தான் மாதவன். தள்ளித் தான் நிறுத்தப் பார்த்தாள் உறவுகளை. ஆனால் அவன் விட்டானில்லை. அவளின் அனைத்து முடிவுகளிலுமே அவன் இருந்தான். ‘இத செய்யவா?’ என்பதை எதிர்பார்க்கவில்லை. ‘இத செய்யறேண்ணா’ என்ற தகவல் அவனுக்குப் போதும். வெள்ளி மாலை பயணம், திங்கள் காலை பயணம்… என்று ஆரம்பித்த உறவு இன்று அதிகம் ஆழம் பிடித்தது.
சிறியதில் அவனுக்கு அரணாய் அவள் சுற்றிய காலம் மாறி, அலர்விழிக்கு அண்ணனாய் இருக்க ஆசை கொண்டான் தமையன்.
கூறியது போலவே காலை ஒன்பது மணிக்கு பல்சர் ராயப்பேட்டையை நோக்கிச் சென்றது.
ராயப்பேட்டையில் கம்யூட்டர் மையம் மட்டுமா உள்ளது?
சென்னையில் பலதரப்பட்ட மக்களைக் காணலாம். ஒரு தெருவில் ரோல்ஸ் ராய்சும், பென்ட்லியும் சர்வ சாதாரணமாய் உலாவரும். அதே தெருவின் பின்னால் இருக்கும் தெருவில் சைக்கிள் நுழைவதே கடினம். அங்கு குழாய் சண்டை காதைக் கிழிக்கும். இது தான் சென்னை!
வீட்டின் முன் இரண்டு மகிழுந்தாவது நிற்கும் ராயப்பேட்டை பகுதி அது. பெரிய பெரிய வீடுகள். எல்லாம் அந்தக் காலத்துத் தனி வீடுகள். அங்கொன்றும் இங்கொருமாய் புதிதாக முளைத்துக் கொண்டிருந்தது அடுக்கு மாடிக் கட்டிடங்கள்.
அடுக்கு மாடிக் கட்டிடங்கள் தவிர மற்ற அனைத்து வீட்டு மதில் சுவருக்கு வெளியே ஏதோ ஒரு பூ பூக்கும் மரம் நிற்க, அந்த ஒரு வீட்டின் மதில் சுவருக்கு வெளியே நாவல் மரம் ஒன்று. இரண்டு மாதம் முன்பு வரை அதில் கொத்துக் கொத்தாய் பழுத்துத் தொங்கிய பழங்களுக்காக குட்டிக் குரங்குகளாய் மாறிப் போன பள்ளிப் பிள்ளைகள் தான் எத்தனை!
மதில் சுவருக்குள் நுழைந்ததும் ஒன்றரை ஆள் உயரத்திற்குப் பவள தண்டும், வெண்மை இதழ்களோடும் இடத்தையே மணத்தில் ஆழ்த்திய பவளமல்லி. செடியில் சிலது மட்டுமே வீற்றிருக்க, இரவு பூத்த பவளமல்லி வாசலை அலங்கரித்திருந்தது.
கண்டிப்பாக அந்த வீட்டின் முன்னிருந்த அசோக மர நிழலடியில் இருந்த நாற்காலிகள் ஒன்றில் மாலை நேரம் கண்களை மூடி அமர்ந்தால், குருவிகளின் கீச்சொலிக்கும், மேனியைத் தழுவும் தென்னையின் தென்றலுக்கும், பவளமல்லி வாசத்திற்கும்… குழம்பித் தவிக்கும் மனதிலும் ஒரு அமைதி பிறக்கும் என்பது திண்ணம்.
சற்றுப் பெரிய வீடு தான். பெரிய போர்ட்டிகோ, உள்ளே பெரிய ஹால், சுற்றி சில பல அறைகள். வீடு முழுவதும் ஆங்காங்கே அலங்காரமாய் மூங்கில் பனை. ஹால் வழியே, சுற்றிக் கொண்டு மாடி அறைகளுக்குச் செல்ல அகலமான படிகள். படி ஏறி மாடி ஹாலுக்குச் செல்லும் வரையிலுமே அங்கு அமைதி தான்.
அந்த அறையின் தேக்கு மரக் கதவைத் திறக்கும் வரை இருந்த அமைதி, அதைத் திறந்த பின் காணாமலே போனது. காலை வேளையின் அமைதியைக் கிழித்துக் கொண்டிருந்தது இசைத்துக் கொண்டிருந்த அயல் நாட்டுப் பாடல் ஒன்று.
சத்தமாகப் பாடிக்கொண்டு, தலை வாரிக் கொண்டிருந்தவன் வாயும் கையும் அதன் வேலையை நிறுத்தியது. காரணம் பாட்டு நின்றிருந்தது.
திரும்பிப் பார்த்தவன், “ஏன் மா இப்போ அத ஆஃப் பண்ணினீங்க?” கேட்டுக் கொண்டே மீண்டும் பாடலை பாடவிட்டவனிடம் எஸ்தரின் முறைப்பு எடுபடவில்லை.
“காலையில கடவுள் பாட்டு கேட்டா என்ன? இல்லையா மனுஷன் கேக்குற மாதிரி பாட்டு கேக்கணும்! இது என்ன டா பாட்டு? ஃபிட்ஸ் வந்தவன் பாடுற மாதிரி?”
“ஆரம்பிச்சுட்டீங்களா மா? ரசனையே இல்ல மா உங்களுக்கு! காலையில எனர்ஜட்டிக்கா அப்படியே நாடி நரம்பெல்லாம் சுறுசுறுப்பாகல?”
அவர் முகம் போன போக்கைப் பார்த்தவன், “ஆகலியா? சரி வரியில இருக்க அர்த்தத்தை பாருங்கம்மா… அந்த ஃபீல் இருக்கே…”
அவர் முகம் கேவலமான, அழுகிப் போன பழத்தை உண்டது போன்ற முக பாவத்தைக் காட்ட, “போங்கமா உங்களுக்கு இந்த ஜென்ரேஷன் புரியாது.” என்று வேண்டுமென்றே “ஹே கூகுள் ப்ளே நெக்ஸ்ட் சாங்” என்று கூகுள் ஹோமிடம்(google home) கட்டளையிட, அது அடுத்த பாடலுக்குத் தாவியது.
“அம்மாஆஆ… டேய், அந்த வலிப்பெடுத்த பாட்டே தேவலாம். ஒரு நாள் இல்ல ஒரு நாள்… இந்த ஸ்பீக்கர அடுப்புல வைக்கல, வைக்கல இல்ல… வைக்கறேன்.”
“ம்மா!”
“உனக்கு கருத்து தானே வேணும்… கண்ணதாசன் பாட்டக் கேளு. தத்துவம் கொட்டும். அவர் வரில இல்லாத உணர்வுகளா?”
“இன்னும் அவரையே பிடிச்சுகிட்டு தொங்காதீங்க… வளருங்கமா”
இவர்கள் வாக்குவாதத்தை நாம் கண்டு கொள்ள வேண்டாம். என்றும் நடப்பது தான். இவர் ஆவேசமாக ஆரம்பிப்பதும்… அவன் தோளோடு அம்மாவை கட்டிக் கொண்டு அம்மா கன்னத்தில் இதழ் பதிப்பதும், “எப்படி மா இந்த வயசுலேயும் உங்க சப்பி சீக்ஸ் இன்னும் இப்படி அழகா இருக்கு. என் செல்லம் மா நீங்க…” என்று கொஞ்ச ஆரம்பிப்பதும்…
எஸ்தர், தான் தான் உலகத்திலேயே பேறு பெற்ற தாய் போல் உணர்வதும்… “போடா போக்கிரி…” என்று அவர் வழிவதும்… தினம் நடக்கும் கூத்துகளில் ஒன்று.
“வா சாப்பிட…”
“உங்கள முட்டி வலியோட மேல வர வேண்டாம்ன்னு சொல்லி இருக்கேனா இல்லியா? ஏன்மா படுத்துறீங்க?”
மாடி ஏறிவிடுவார் முட்டியை பிடித்துக் கொண்டே. இறங்குவதில் அப்படி ஒரு சிரமம் அவருக்கு.
“நேத்து நீ வாங்கி வந்த மருந்துக்கு, வலி நல்லா கேக்குது எபி கண்ணா”
“வலி இல்லாட்டா அடங்க மாட்டீங்களா?” பட்டென்று அம்மாவைத் தூக்க, அவர் குய்யோ முறையோ என்று ஒலி எழுப்ப, “எபி… அம்மாக்கு என்ன ஆச்சு?” என்று அப்பா குரல் எழுப்பிக் கொண்டே மாடிப்படி நோக்கி ஓடி வர,
“ஒண்ணும் இல்ல பா…” அப்பாவிற்கு பதில் அளித்து, அம்மாவிடம், “இனி மேல் மாடிப் பக்கம் வந்தீங்க… இது தான் கதி…” கூறிக் கொண்டே கீழே தூக்கிச் சென்றான் மைந்தன்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் பெயர் போன குடும்பம். சென்னைக்குக் குடிபெயர்ந்து வருடம் 25 ஆகிறது. பால்ராஜ் படிப்பு முடிந்ததும் சென்னையில் வங்கி வேலையில் அமர, அவரைத் திருமணம் செய்துகொண்ட எஸ்தருக்கும் சென்னை பிடித்துவிட, ஒரு கட்டத்தில் சொந்த ஊர் என்பது வருடத்திற்கு ஒரு முறை போகும் சுற்றுலாத் தலம் போல் ஆனது. தம்பதியினரின் பெற்றோர் காலம் சென்றபின் அங்கிருந்த நில புலம் எல்லாம் விற்றுவிட, சென்னை தான் அவர்கள் சொந்த ஊர் ஆகிப்போனது.
இன்று பால்ராஜ் அரசு வங்கியில், அதிக பணப்புழக்கத்தில் இருக்கும் ஒரு கிளையில் மேனேஜராக இருக்க, எஸ்தரோ கணினி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
“அக்கா… இன்னைக்கு சாம்பார் சூப்பர் க்கா…” தட்டிலிருந்த குட்டி இட்டிலிகளை விழுங்கிக் கொண்டே வீட்டோடு தங்கி வீட்டு வேலை செய்யும் யமுனாவிற்கு ஒரு பாராட்டைத் தட்டி விட்டான், எபி.
“இன்னும் கொஞ்சம் வச்சுக்கோ கண்ணு…”
“போதுங்கா… நீங்களும் நேரத்துக்கு சாப்பிடுங்க,” என்றவன் சாப்பாடு மேசையிலிருந்து எழும்ப, கையில் கொடுக்கப்பட்ட மசாலா டீயை கண்மூடி ருசித்தான்.
“எபி, நான் வர லேட் ஆகும். அது வரைக்கும் சென்டர்லேயே இரு. இன்னைக்கு, ஃபேக்கல்டிக்கு ஷார்ட் லிஸ்ட் பண்ணின ரெண்டு பேரு வராங்க. நீ ஃபைனல் இன்டெர்வியூ பண்ண வேண்டி இருக்கும்,” எஸ்தர் கூற, எந்த மறுப்பும் கூறாமல் கார் சாவியை எடுத்துக்கொண்டு, “சரி மா… கிளம்பறேன். அப்பா பை, க்கா வரேன்…” அனைவருக்கும் அறிவித்துக் கொண்டே கிளம்பினான்.
error: Content is protected !!