ரீங்காரம் – 1.2

“இல்லையேம்மா… தமிழ் சொல்லிதான் அதைத் தொலைச்சதே எனக்குத் தெரியுது!” எனப் பேரழகன் ஒரு பெரிய நகைச்சுவை போலச் சொல்லிச் சிரிக்க, கவிதா தன் தலையிலேயே அடித்துக்கொண்டாள்.

“இந்த ஆளுக்காகவா நீ பேச வர்ற? இப்போ பாரு… யோவ், காலையில பிரஷ் பண்ணியா?” எனத் தமிழ் கேட்க,

“இல்லை தமிழு… அதான் நேத்து நைட்டே பண்ணிட்டேனே!” என்றார் சிறிதும் தயக்கமின்றி.

விழி விரிய கவிதா அவரைப் பார்க்க, “உலகத்துலயே உனக்குத்தான்யா ‘பேரழகன்’ங்கிற பேரு ரொம்பச் சரியா இருக்கு!” எனச் சொல்லி, கவிதா இனி அவருக்குப் பரிந்து பேசவே வராதபடி அவளை அங்கிருந்து விரட்டியிருந்தான் தமிழ்.

நேற்று தான் எழுதிய காகிதங்களைப் பேரழகனிடம் கொடுத்துவிட்டு அவன் முன்னே நடக்க, பேரழகன் அந்தக் காகிதத்தைப் படித்துக்கொண்டே இடையில் சந்தேகம் கேட்டுத் தமிழ் செய்த ‘அட்டூழியங்களை’ச் சமாளித்தார்.

“சார்… ஷாட் ரெடியாகப் பத்து நிமிஷமாகும். லைட் செட் பண்ணிட்டு இருக்கோம்.”

“சரிண்ணே… ஜெனரேட்டர் எதுக்கும் ரெடியா வைச்சுடுங்க” என்றான் தமிழ்.

தமிழ்செல்வன் இன்றைய காட்சிக்குக் கலைஞர்கள் தயாரா எனப் பார்க்க வர, படத்தின் நாயகனும் அவனைத் தேடித்தான் வந்திருந்தான். “என்ன தமிழ், இன்னும் சீன் பேப்பர் தரல?”

“டேய்… நேத்தே கொடுத்து அனுப்புனேனே!”

“எனக்கு வரலையே தமிழ்!” என்றான் நாயகன்.

தமிழ்செல்வன் கண்கள் கூட்டத்தைத் துழாவ, ஓரிடத்தில் நிமலன் சாவகாசமாக நின்று இளநீர் குடித்துக்கொண்டிருந்தான். “இவனுங்களை மேய்க்கிறதும் மாடுகளை மேய்க்கிறதும் ஒண்ணுதான்” எனப் புலம்பியபடி, “டேய் நிமலா!” என உரக்க அழைத்தான்.

அவனோ இவன் குரல் கேட்டுத் தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு, ‘காத்திரு’ என்பது போலக் கையசைக்க, தலையில் அடித்துக்கொண்ட தமிழ் தன் கைபேசியில் அழைத்தான்.

“தல… பிஸியா இருக்கேன், பார்த்தா தெரியலை?” – நிமலன் போனில் கேட்டான்.

“செருப்பு பறந்து வரக்கூடாதுன்னா இப்ப என் முன்னாடி வந்து நில்லு!” என இணைப்பைத் துண்டித்தான் தமிழ். அவனோ அந்த இளநீரை உடைத்து, அதனுள் இருந்த தேங்காயைச் சுரண்டி வாங்கிக்கொண்டுதான் வந்தான்.

“கஷ்டம் தான் இவனுங்களை வைச்சுட்டு…” அந்த நாயகனே நொந்துபோக, தமிழ் மட்டும் நிதானமாக நின்றான்.

இது இன்று நேற்றல்ல, கடந்த இரண்டு வருடங்களாக இவர்களை இப்படித்தான் மேய்த்து வருகிறான். இதெல்லாம் அவனுக்குப் பழகிப்போன ஒன்று.

“மொபைல்ல மெயில் எதுவும் அனுப்பிருப்பாங்க, பாருங்களேன். இல்லைன்னா என்கிட்ட ஒரு காப்பி இருக்கு, இப்போதைக்கு இதை வைச்சுப் பாருங்க… பிரிண்ட் எடுத்துத் தரச் சொல்றேன்” என அவனை அனுப்பி வைத்தான் தமிழ்.

“சொல்லு தல… ரெஸ்ட் வேணுமா? அடுத்து எந்த சீன் எடுக்கணும்?” என நிமலன் கேட்க, தமிழ் அவன் கையிலிருந்த இளநீரை வாங்கி, அதிலிருந்த தேங்காயை உண்டபடியே…

“அவ்ளோ பெரிய வேலை எல்லாம் செஞ்சா உடம்பு இளைச்சிடும்டா தம்பி! உன்கிட்ட நேத்து கொடுத்த ஸ்கிரிப்ட் பேப்பர் மட்டும் கொடு, மிச்சத்தை அண்ணன் பார்த்துக்கிறேன்” என்றான் நிமலன் நிதானமாக.

“சீன் பேப்பரா?”

“நேத்து திலீப் கையில கொடுத்துட்டு சீன் சொல்லிட்டு வரச் சொன்னேனே!”

“ஓ… அதுவா?” வேகமாகத் தன் காற்சட்டைப் பையிலிருந்து துண்டுச் சீட்டாய் மடிந்திருந்த காகிதத்தைப் பிரித்து, அதிலிருந்த திருநீற்றைக் கீற்றாய்த் தமிழ்செல்வன் நெற்றியில் வைத்தான் நிமலன்.

“சரிடா… ஸ்கிரிப்ட் பேப்பர் எங்க?”

“அதான் தல இது!” கையடக்கமாகக் கூட இல்லாத அந்தச் சின்னக் காகிதத்தைப் பார்த்த தமிழ், “இதுவா?” எனத் திகைத்துக் கேட்டான்.

“ஆமா தல… இங்க திலீப் சாரைப் பார்க்க முடியலை. சரி, அவருக்கு ஒதுக்கியிருக்க வீட்டுக்குப் போய்க் கொடுக்கலாம்னு நினைச்சுப் போனேனா…”

“போன…”

“போற வழியில ஒரு கோவில். அப்படியே அந்த வாசனை ஆள இழுத்துடுச்சு!”

பேரழகன் குறுக்கிட்டு, “கோவில்ல என்னடா வாசனை?” எனக் கேட்க,

நிமலன் நக்கலாக, “திருநீறு வாசனை பாவா! உனக்கு பீர் வாசனை மட்டும்தான் வரும். ஆனா நாங்க அப்படி இல்லையே!” என்றான்.

“ஆமா… நீங்க அப்படியே என்ன வேடிக்கை பார்த்துட்டு இருப்பீங்க!” எனப் பேரழகன் முணுமுணுக்க, இருவரையும் அலட்சியப்படுத்திய தமிழ், “நீங்கன்னா… யார் யாரெல்லாம் போனீங்க?” எனக் கேட்டான்.

“நானு, சசிகரன், கவிதா, பவன், படையப்பன் அண்ணன்…”

“சரி… மேல சொல்லு” என்றான் தமிழ் இடுப்பில் கை வைத்தபடி.

“அந்தக் கோவிலைப் பார்த்ததும் எங்கிருந்தோ காத்து அடிக்குது, கையில இருந்த பேப்பர் பறக்குது… இயற்கை என்னமோ சொல்லுதுன்னு தோணுச்சு தல! திடீர்னு நீ நேஷனல் அவார்ட் வாங்குற மாதிரி ஒரு இமேஜ் என் கண்ணு முன்னாடி வந்துட்டுப் போச்சு. விஷயம் புரிஞ்சு போச்சு… அதான் பேப்பரைத் தூக்கிட்டுச் சாமிகிட்ட போயிட்டோம். சாமி பாதத்துல வச்சுப் பூசாரி எடுத்துத் தருவாருன்னு பார்த்தா, இப்படிப் பேப்பரைக் கிழிச்சுத் திருநீறு வச்சுக் கொடுத்துட்டாரு தல!”

பேரழகன் விடாமல், “ஒரு பேப்பர் சரி… மிச்சம் எங்கடா?” எனக் கேட்க,

“கோவிலுக்கே வச்சுக்கிட்டாங்க பாவா! சண்டை போடத்தான் போனோம்… ஆனா சாமி குத்தமாயிட்டா அது நம்ம தலையைத்தானே பாதிக்கும்? அதான் வந்துட்டோம்.”

“அது ஸ்கிரிப்ட் பேப்பர்டா… எவ்வளவு அசால்ட்டா பேசுற!” எனப் பேரழகன் எகிற, தமிழ் அவரை அமைதிப்படுத்தினான்.

“பெருசு… விடுங்க. டேய் நிமலா! போய் வெட்டிக்கதை பேசாம ஹீரோவுக்கு சீன் சொல்லு. பவனை ஹீரோயின் காஸ்ட்யூம் டிசைனரைப் பார்த்து டிரஸ் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வரச் சொல்லு. அந்தப் பொண்ணு ரெண்டு மணி நேரத்துல வந்துடுமாம்.”

“தலை சொல்லிட்டா மறுபேச்சு ஏது? இதோ போறேன்” என்றவன், ஒரு நிமிடம் நின்று தமிழிடம், “அப்புறம் அந்த இளநீருக்குக் காசு கொடுத்துடு தல!” என்றான்.

“அடிங்க… இந்த வழுக்கைத் தேங்காய்க்கு நான் காசு கொடுக்கணுமா?” தமிழ் திட்டியதைக் கேட்க அவன் அங்கில்லை, ஓடியே விட்டான்.

“யோவ் தமிழ்… நீ இவனுங்களுக்கு ரொம்ப இடம் கொடுக்கிற! காப்பி நீ எடுக்காம இருந்திருந்தா என்ன பண்றது? இவனுங்க பக்திக்கு ஒரு அளவே இல்லையா?” எனப் பேரழகன் கோபத்தைக் காட்ட, தமிழ் சிரித்தபடியே அந்தத் திருநீற்றைக் கீழே கொட்டிவிட்டு, காகிதத்தைப் பேரழகனின் மூக்கிற்கு நேராகக் கொண்டு சென்றான்.

அதை நுகர்ந்த அவர், “என்ன தமிழு… எண்ணெய் ஸ்மெல் வருது?” என்றார் குழப்பத்துடன்.

தமிழ் சிரிப்போடு தலையசைத்து, “அடேய்… பஜ்ஜி நசுக்கவா இதை எடுத்தானுங்க!” என்றான்.

“எதுக்குடா இவன் ஸ்கிரிப்ட் பேப்பரை எனக்கு மெயில் அனுப்பிருக்கான்னு யோசிச்சேன். வர்ற வழியில பார்த்தது கோவில் இல்லை, டீக்கடை! பஜ்ஜி சாப்பிட இவனுங்களுக்கு ஸ்கிரிப்ட் பேப்பர் உதவியிருக்கு. விடுங்க… அவனுங்க சந்தோஷத்தை எதுக்குக் கெடுக்கணும்?” என எளிமையாகக் கடந்து சென்ற தமிழ்ச்செல்வனை வியப்போடு பார்த்தார் பேரழகன்.

“இது சந்தோஷமாடா? பைத்தியக்காரனுங்க… உன்கூட இருக்கிறவங்க எல்லாம் உன்ன மாதிரியே இருக்கானுங்க!” எனப் புலம்பியபடி அவர் நகர, தமிழின் முகம் மட்டும் அந்த இளநீர் தேங்காயைச் சுவைத்தபடி புன்னகையில் இருந்தது.

இவன் தமிழ்… தமிழ்செல்வன். படித்தது பொறியியல்; அதுவும் முழுதாகப் பட்டத்தை முடிக்கவில்லை. நான்கு ஆண்டுகள் முடிந்தும், நிலுவையில் உள்ள சில தாள்களை (Arrears) முடிக்காமல் விட்டதால், அவனது பொறியியல் பட்டமும் கடந்த ஆண்டோடு கைகூடி வராமல் போனது. அதற்கெல்லாம் கவலைகொள்ளும் ரகம் இல்லை அவன். எதையும் எளிமையாகக் கடந்து செல்லும் மார்க்கத்தில் இவனே வல்லவன். குறும்பு இல்லை, ஊதாரித்தனமான குணமும் இல்லை; அதேநேரம் ‘உர்’ரென இருப்பவனும் இல்லை. எந்தவொரு தருணத்தையும் சஞ்சலத்தோடு எதிர்கொள்ளாமல் நிதானமாகக் கையாள்பவன்.

தன் தந்தை வம்படியாகப் படிக்க அனுப்பியபோது, விளையாட்டை முதல் பாடமாக எடுத்துப் படித்தான். அந்த வயதிற்கே உரிய சேட்டையில் படிப்பை ஓரம் வைத்துவிட்டு, விளையாட்டாகத் தொடங்கியதுதான் குறும்படம் எடுக்கும் வேலை. “என்னடா இது?” என கேலி பேசிச் சிரித்தவர்கள் முன்பு, தானும் சிரித்து வைத்தாலும், அந்த உதடுகள் ஒருநாள் தன்னைப் பாராட்டியே தீரவேண்டும் என உறுதியோடு இறுதியாண்டில் இறங்கினான். அடுத்த இரண்டே ஆண்டுகளில், எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராக நிற்காமல், தானே வளர்ந்து இன்று பெயர் சொல்லும் இயக்குநர்களில் ஒருவனாகி நிற்கிறான்.

அதற்கு முதல் படி அவனது குறும்படம். ஏழு நிமிடங்கள் ஓடிய அந்தப் படம் ஊடகங்களில் பலவிதமாகப் பேசப்பட்டது. சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவான அந்தப் படத்தை, ஒன்றரை மணி நேர விரிவான படமாக எடுக்கப் பல தயாரிப்பாளர்கள் அவனுக்குத் தூது விட்டனர். இவனோ, எப்பேர்ப்பட்ட தயாரிப்பாளர் வந்தாலும் “முடியாது” என்றுவிட்டான். சந்தர்ப்பத்தை வீணடிக்க வேண்டாம் எனப் பலரும் அறிவுரை கூறிப் பார்த்தனர். ஆனால், அந்தப் படத்தின் சாராம்சம் அந்தச் சுருக்கத்தில்தான் இருக்கிறது என்பதில் அவன் பிடிவாதமாக இருந்தான்.

அதன்பிறகு இரண்டு வருட விடாமுயற்சிக்குப் பின், அவனது முதல் பட வாய்ப்பு வந்தபோது, மக்கள் அந்தக் குறும்படத்தையும் அவனையும் மறந்தே போயிருந்தனர். திரைக்கு வந்த அந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை. ஆனால், அவனது இயக்கத்தைப் பார்த்து வியந்த ஒரு தயாரிப்பாளர், தானே முன்வந்து அவனுக்கு ஆறு மாத கால அவகாசம் கொடுத்து இரண்டு கதைகளைத் தயார் செய்யச் சொன்னார்.

அவனோ மூன்று கதைகளை எடுத்து நீட்ட, மூன்றும் வெவ்வேறு களங்களில் (Genre) இருப்பதைக் கண்டு வியந்த தயாரிப்பாளருக்கு மூன்றுமே பிடித்துவிட்டது. அதில் ஒரு காதல் கதையைக் குறிப்பிட்ட பொருட்செலவில் எடுக்கச் சொன்னார். எல்லாம் சிறப்பாக முடிய, தமிழ்செல்வனின் இரண்டாவது படம் அவனது முதல் படத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது; நல்ல லாபமும் ஈட்டியது. இதோ… மூன்றாவது படம்! இரண்டாம் தட்டு முன்னணி நடிகர், நடிகையை வைத்து ஐம்பது கோடி பொருட்செலவில் உருவாகிக்கொண்டிருக்கிறது.

“இடத்தைச் சுத்தம் பண்ண ஆளுங்களுக்குக் காசு தரணும் தல… ஒரு ரெண்டாயிரத்தை வெட்டு!” – தான் கொடுத்து வைத்த பணத்தைக் கேட்பது போல வந்து நின்றான் சுசிதரன், தமிழின் மற்றொரு உதவி இயக்குநர்.

“என்கிட்ட ஏன் கேக்குற? புரொடக்ஷன் மேனேஜர்கிட்ட வாங்கி அனுப்புடா.”

“கேட்டாச்சு தல… அவன் என்னென்னமோ கணக்கு சொல்லிட்டுப் பணத்தைத் தர மாட்டேங்கிறானாம். காசு தராம ஆளுங்க நகர மாட்டேங்கிறாங்க.”

தமிழ், “ஏதாச்சும் பேசி வாங்கி அனுப்புடா. இதுக்கெல்லாமா என்கிட்ட வந்து நிப்பீங்க?”

“தல… அவங்க ஊர் தலைவர்கிட்ட போறேன்னு நிக்கிறாங்க. ஷூட்டிங் பண்ண வேணாம், போங்கடா அயோக்கிய ராஸ்கல்களான்னு விரட்டுனா என்ன பண்ணுவ?”

நெற்றியை நீவிய தமிழ், தானே நேராக மேலாளர் முன்பு வந்து நின்றான். அவன் கேட்டதற்கு மேலாளர் ஏதேதோ கதைகள் கூறினார். இறுதியாக, இவன் வம்படியாகப் பேசித்தான் பணத்தை வாங்கி அனுப்ப வேண்டியிருந்தது.

“வர வர ரொம்பப் பண்றான் இந்த மேனேஜர்! அடுத்த படத்துக்கு இவனை வர வச்சீங்க… அப்புறம் நாங்க வர மாட்டோம், சொல்லிட்டேன்!” என்றான் சுசிதரன் அந்த மேலாளரை முறைத்தபடி.

பணத்தைப் பெற்றுக்கொண்டதற்கான ரசீதில் கையெழுத்திட்டு நிமிர்ந்த தமிழ், “அப்படியாவது என்னை விட்டுப் போங்கடா! நாளுக்கு நாள் உங்களை வைச்சு என்னால ஒண்ணும் பண்ண முடியல” என்றான் சலிப்புடன்.

“பார்த்தியா… பிரிச்சுப் பேசுற!” எனச் சுசிதரன் போலி கோபத்தைக் காட்ட, தமிழ் மட்டும் மெலிதாகப் புன்னகைத்தான்.

“அடேய்… போடா!” எனச் சலிப்பாகக் கூறிய தமிழுக்கு, அடுத்தடுத்துக் காத்திருக்கும் வேலைகளை என்ன செய்வதென்ற யோசனை.

“தல…”

“இப்போ என்ன?”

“அக்கவுண்ட்ல தொன்னூத்தி ஒரு ரூபாய் இருக்கு… ஒரு ஒன்பது ரூபாய் போட்டுவிட்டா நூறாகிடும். போட்டு விடுறியா?” என அவன் கேட்க, கீழே கிடந்த கல்லை எடுத்து அவனைத் துரத்தி அடித்திருந்தான் தமிழ்.

அன்று மாலை நான்கு மணி வரை வேலைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. நிற்க நேரமில்லாமல் அவனது மொத்த நேரத்தையும் படப்பிடிப்பே விழுங்கிக்கொள்ள, மதிய உணவே நான்கு மணிக்கு மேல்தான் கிடைத்தது. உணவை எடுத்து வாயில் வைக்கவிருந்த நேரம், அவனது கைபேசி அலறியது. போனை எடுக்கச் சென்றவன் அருகே தண்ணீர் பாட்டிலை வைத்த பேரழகன், “சாப்பிடு தமிழு” என்றார்.

“இரு பெருசு” என்றவன், அழைத்த எண்ணைப் பார்த்து அசைவற்று நின்றான். எதற்கு இப்படிப் பார்க்கிறான் இவன் என எட்டித் திரையைப் பார்த்தவர், “அன்னோன் காலரா (Unknown Number) இருந்தா எடுக்காத… அதை எதுக்கு தமிழு இப்படிப் பார்க்குற?” என்றார்.

இவனிடம் இன்னும் மௌனம் தான். முகத்தில் இறுக்கம் படர்ந்திருக்க, அழைப்பை ஏற்பதா வேண்டாமா என்கிற போராட்டத்தை முடிக்கும் முன்பே, “அடுத்த படத்துக்கு யாரும் கூப்பிடுறாங்களா? அட எடு தமிழு!” என்றார் அவர்.

அழைப்பை ஏற்றவன், “யோவ்…” என அவரைத் திட்ட வந்த வார்த்தையை விழுங்கிக்கொண்டு, அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தான். காதுக்குள் அந்தப் பக்கமிருந்த பெண்ணின் குரல், அவன் உள்ளத்தைச் சென்று தாக்கியது.

“செல்வா… செல்வா… கேட்குதாடா?”

அந்த அழைப்பின் அழுத்தமே அவனுள் ஒளிந்திருந்த சொல்ல முடியாத வேதனைகளைத் திரட்டி எழுப்பியது. கண்களை இறுக்கமாக மூடித் திறந்தவன், உணவைப் பிசைந்தபடியே தொண்டையைக் கனைத்து பதில் கொடுக்க, அந்தப் பக்கம் சில நொடிகள் மௌனம் நிலவியது.

“எனக்கு உன்னைப் பார்க்கணும் போல இருக்கு செல்வா. உனக்கு என் நினைப்பே இல்லையா?”

வேதனையைச் சுமந்து வந்த அந்தக் குரலில், அவளோடு கைகோர்த்துப் பயணித்த நாட்கள் யாவும் அடுக்கடுக்காய் வந்து நிழலாட, அவனுக்கு மூச்சு முட்டியது.

“என்ன பேசணும்?”

“எதுக்குடா யாரோ மாதிரி பேசுற?”

“எனக்கு நீங்க யாரோதானேங்க!” என்றான் நிதானமாக.

“ஆனா எனக்கு நீ அப்படி இல்லடா… நீதான் என் உலகமே!”

“சரிங்க… இப்போ உங்களுக்கு என்ன வேணும்?”

“செல்வா…”

இவன் அந்நியனைப் போலப் பேசுவது அந்தப் பெண்ணுக்கு அத்தனை மன உளைச்சலைக் கொடுத்தது. கொஞ்சமும் ஒட்டுதல் இல்லையே இவனிடம்! ‘அவ்வளவுதான்’ என இவன் முடிவெடுத்த போதிலும், விடாது துரத்துகிறது இந்த அழைப்பும் குரலும். விட்டுவிட்டு வரக்கூடிய உறவா இது? உயிரையே கூறுபோட்டுச் சென்ற உறவல்லவா!

“தமிழ்செல்வன்… தமிழ்… இதுல எது வேணா சொல்லலாம்” என்றான் அவன். ‘செல்வா’ என்னும் வார்த்தையை இனி உச்சரிக்காதே என்கிற அமைதியான கட்டளை அது.

மறுமுனையில் அந்தப் பெண்ணின் அழுகை வெடிப்பு தெளிவாகக் கேட்டாலும், இவன் தன் நிதானத்தை இழக்கவில்லை. அழைப்பைத் துண்டித்துவிட்டு கைபேசியை ஓரம் வைத்தவன், உணவை உட்கொள்ளத் தொடங்கினான். சற்று முன்பு பசிக்காகத் தேடி வந்த உணவு, இப்போது ருசி துறந்து ஒரு கடமையாக அவன் தொண்டைக்குள் இறங்கியது.

error: Content is protected !!
Scroll to Top