🎶…உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா🎶
என்ன பெரிய இசைஞானி, இசைப்புயல் பாடல்கள், காலை ஐந்து மணிக்கு ஆவி பறக்கும் பால் பாத்திரத்தை பார்த்தவாறு குளிரை தாங்க முடியாமல், கைகளை பரபரவென தேய்த்து அந்த டீ மாஸ்டர் கொடுக்கும் ஒரு தேநீரை ஆவலோடு எதிர்பார்க்கும் நேரத்தில் பின்னணி இசையாக ஒலிக்கும் முருகனின் பாடலை கேட்பதன் சுகமே தனி.
ஏதோ முருகனே வந்து தன் புகழ் பா,டி உடன் இணைப்பாக புது தெம்பையும் கொடுத்து செல்வது போல் நாளே அழகாய் விடியும். கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதனுக்கு கூட அந்த பாடலின் இசையோடு வரிகளும் ஒரு சிலிர்ப்பை கொடுப்பதை எவராலும் தவிர்க்க முடியாது. தூரத்தில் விழாவுக்கு தயாரான முருகன் கோவிலில் அழகாய் ஒலித்தது அந்த பாடல்.
🎶சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா🎶
அப்பேற்பட்ட இசையை மனமெல்லாம் நிறையக் கேட்டவன், அந்த வயலை நோக்கி நடந்தான். களை அறுக்கும் பணிக்கு அதிகாலை ஐந்தரை மணிக்கே மக்கள் வந்துவிட்டனர். ஆங்காங்கே பாத்திகள் கட்டப்பட்டிருக்க, அந்தப் பாத்திகளில் தேவையற்ற செடி கொடிகள் மண்டியிருந்தன.
“சிறுகச் சிறுக வளர்ந்திருக்கும்போதே எடுக்காம, இம்புட்டுப் பெருசானதும் வரச் சொல்றாங்க. இதை எடுக்க எவ்வளவு கஷ்டமா இருக்கு பாரு! வேர் அடி ஆழம் வரைக்கும் போயிருக்கும் போல.”
“ஏம்மா… பேசாம வேலையைப் பாரும்மா!” அந்தப் பக்கம் நடந்து சென்ற கண்காணிப்பாளர் அதட்ட,
குனிந்து வேலை செய்துகொண்டிருந்த அந்த வயதான பெண்மணி நிமிர்ந்து நின்று, “ஏண்டா… எடுக்குறது நாங்கதானேன்னு வேப்பமரம் கணக்கா வளர்ந்த பிறகு சொல்றீங்க. இடுப்பு ஒடிய வேலை பார்த்தா நேரத்தைக் கடத்துறோம்னு சொல்றது… முடிஞ்சா வந்து இதை ஒரு பிடி களை எடுத்துப் பாரு!” எனச் சவால் விட்டார்.
அந்தச் சவாலைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தமிழ் அங்கிருந்த செடிகளை அகற்றத் தொடங்கினான்.
“ம்மா… அவர் கவனிக்காமலேயே போறார்ல, அவரை எதுக்கு திட்டிட்டு இருக்கீங்க? நீங்க சின்னச் செடியெல்லாம் எடுங்க, நான் பின்னாடியே வந்து கஷ்டமான செடிகளை எடுத்துடுறேன்” என்றான் தமிழ்.
“எப்பா… யாருப்பா நீ? நீ எதுக்கு தம்பி இந்த வேலையெல்லாம் பார்க்குற? உன் கூட சம்பளத்தைப் பங்கு போடுற அளவுக்கு எனக்கு வருமானம் இல்லையேப்பா!” என்றார் அந்தப் பெரியவர் கவலையுடன்.
அவரது பதிலில் மெல்லச் சிரித்தவன், “என்னம்மா… பாதி சம்பளத்தைப் பத்தி பேசுறீங்க? நான் முக்காவாசி வாங்கத்தான் பிளான் போட்டேன்” என்றான் கிண்டலாக.
அவர் அவனைத் திட்ட முற்பட்டபோது, சுதாரித்த தமிழ்செல்வன் அவரை அலேக்காகத் தூக்கிக் கரையில் அமர வைத்தான். “கிழவி… ரெண்டு மணி நேரம் உனக்கு ரெஸ்ட், பேசாமப் படுத்துத் தூங்கு.”
“அடேய் எடுபட்ட பயலே! ரெண்டு மணி நேரத்துல என் ஒரு நாள் சம்பளத்தை லவட்டப் பார்க்குறியா?” எனப் புலம்பினாலும், அவரது வயதிற்கே உரிய சோர்வு அவரை எழ விடவில்லை.
“அட கிழவி… நான் வேலை பார்த்தா அதை எப்படி உன் சம்பளத்துல பிடிப்பாங்க? யோசிக்க மாட்டியா?” என்று சிரித்தபடியே, வேட்டியை மடித்துக் கட்டி, தோளில் இருந்த துண்டைத் தலைப்பாகையாக மாட்டினான்.
தமிழ் சொல்வது சரிதான் எனப் பட்டதால், அவரும் ஆசுவாசமாக அமர்ந்தார்.
மாத்திரை வாங்கப் பணமில்லாமல் இரண்டு நாட்களாக உடல் அசதியில் இருந்த அவருக்கு, இது பெரிய உதவியாக இருந்தது. அந்தப் பெரியவரை மீண்டும் வேலைக்கு எழுப்ப வந்த கண்காணிப்பாளரைத் தடுத்தான் தமிழ்.
“உங்களுக்கு வேலை நடக்கணும், அவ்வளவுதானே? அவங்களுக்குப் பதிலா அடுத்த ரெண்டு மணி நேரம் நான் வேலை பார்க்குறேன்” என்றான் உறுதியாக.
தமிழ் தன் முழு பலத்தையும் திரட்டி, அந்த இரண்டு மணி நேரத்தில் பெரும் பகுதியைச் சுத்தம் செய்துவிட்டான்.
“அண்ணே… மணி இப்போ என்ன இருக்கும்?” சட்டையில்லாமல், லுங்கி மட்டும் அணிந்து, உடல் முழுதும் வியர்வை வழிய நின்றவனை ஏளனமாகப் பார்த்த கண்காணிப்பாளர், “மணி தெரிஞ்சு துரை எந்த ஊர் கலெக்டர் வேலைக்குக் கிளம்பப் போறாரோ?” என்று எகத்தாளமாகக் கேட்டான்.
அதற்குப் புன்னகையோடு, “கலெக்டர் இல்லைங்க… இந்த நிலத்துக்கு உங்க முதலாளி விவசாயக் கடன் கேட்டிருக்கார்ல, அதை அப்ரூவ் பண்ண வேண்டிய அக்ரி ஆபீசரா நான் வரணும்ல!” என்றான் தமிழ். அவன் கூறியதைக் கேட்டுச் சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தமிழோ அதே நிதானத்துடன் நின்றான்.
“சார்… நீங்கதானா?” – அந்த அதிகாரி திகைத்துப் போய் கேட்டான்.
“இன்னுமா சந்தேகம்? பேங்க்ல லோனுக்கு அப்ளை பண்ணியிருந்தது நீங்கதானே?”
“ஆமாங்க சார், ஆமா! நீங்க எதுக்கு இப்படி வேலை செஞ்சீங்க? பாருங்க… எப்படி வேர்த்துப் போயிருக்கீங்கன்னு. தண்ணி… தண்ணி வேணுமா சார்?” பதற்றத்துடன் ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்தான்.
“வாங்க… வடக்காலதான் நம்ம வீடு இருக்கு. அய்யாவுக்குத் தெரிஞ்சா, உங்களைச் சரியா கவனிக்கலைன்னு என் மேல கோவிச்சுப்பார்.”
தமிழ் நிதானமாக, “இருக்கட்டும்ங்க. ஆனா, இப்படியே எப்படி வர்றது? நான் இந்த மாதிரி கமிஷன் எல்லாம் வாங்குறது இல்ல” என்றான்.
“ஐயோ சார்! நான் அப்படி எதுவும் சொல்லலையே. நீங்க ரொம்ப நல்லவர்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அதுக்காக இவ்வளவு நல்லவரா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல.”
“அப்படியே வளர்ந்துட்டேங்க! சரி, குளிக்க ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா?”
“வாங்க… பம்ப் செட் போட்டுவிடச் சொல்றேன். உங்களுக்கு இல்லாததா?” என்றவன், “ஏம்மா… வேலையைப் பாருங்க” என்று மற்றவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு மோட்டாரை உயிர்ப்பித்தான். குதித்தோடி வந்த தண்ணீரைப் பார்த்ததும் தமிழின் முகம் புன்னகையில் விரிந்தது.
“சோப்பு இருக்கா சார்? இல்ல… வாங்கிட்டு வரவா?”
“அதெல்லாம் இருக்கு” என்றவன், தண்ணீரில் நனைந்தபடி பதில் சொன்னான். “எதுக்கு சார் இந்த வேஷம்? நீங்கதான்னு ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா?” எனக் கேட்டான் கண்காணிப்பாளன்.
“உங்களுக்குத் தெரியக் கூடாதுன்னுதான் இந்த வேஷமே! எனக்கு எப்பவும் எல்லாம் கரெக்டா இருக்கணும். பொய் பேசுறவங்களை எனக்குப் பிடிக்காது. அதான் பெரிய அமௌன்ட் சாங்ஷன் பண்றப்போ, வெளி ஆள் மாதிரி வந்து இன்ஸ்பெக்ட் பண்ணிட்டு அப்ரூவ் பண்ணுவேன்.”
“நிஜமாவே நீங்க நேர்மையானவர் சார். எனக்கும் உங்களைப் மாதிரி ஆபீசர் ஆகணும்னுதான் ஆசை. நீங்க என்ன படிச்சீங்க? எனக்கு இப்போ வயசு இருபத்தி ஆறு… இதுக்கு மேல எக்ஸாம் எழுத முடியுமா?”
“திறமை இருந்தா தாராளமா எழுதலாமே! என்னென்ன படிக்கணும்னு நான் சொல்றேன்” எனத் தமிழ் கூற, அவன் அதைக் கர்மசிரத்தையாகக் குறித்துக் கொண்டான்.
“சார்… சாப்பாடு ஏற்பாடு பண்ணச் சொல்லிட்டேன், வீட்டுக்கு வாங்க.”
குளித்து முடித்து, எளிமையான டீ-ஷர்ட் மற்றும் கார்கோ பேண்ட் அணிந்திருந்த தமிழ், தன் சிகையை உலர்த்திக் கொண்டே, “வேணாம்… என்கிட்ட சாப்பாடு இருக்கு” என்றான். தூங்கிக் கொண்டிருந்த அந்த முதியவரின் தூக்குச் சட்டியைத் திறந்தான். அதிலிருந்து கமகமவென மணம் வீசியது.
“சார்… களி சார்!” என முகம் சுளித்தான் அவன்.
“ஆமா, களிதான்!” என ஆர்வமாகச் சொன்னான் தமிழ். களி உருண்டையாகத் திரட்டப்பட்டு ஓர் இலையின் மேல் வைக்கப்பட்டிருந்தது. அந்த வாலியின் அடியில் மற்றொரு சிறிய கிண்ணம் போட்டு மூடப்பட்டிருந்தது.
“இப்ப தான் மெயின் மேட்டரே இருக்கு!” எனத் தமிழ் ஆர்வமாக அதைத் திறக்க, ஆளையே சுண்டி இழுக்கும் நெய் மீன் கருவாட்டு வாசனையில் தமிழ்செல்வன் முகம் பளிச்சிட்டது. “ஐயோ கருவாடா! கருமம்…” என அவன் மூக்கைப் பிடித்துக்கொண்டு ஓடப் பார்க்க, “சீ… மனுஷன் இல்லடா நீ!” எனத் தமிழ் அவனைத் திட்டிவிட்டு, இடது கையில் இருந்த கருவாட்டை நுகர்ந்து ஆனந்தம் கொண்டான்.
“தம்பி… அந்தம்மா எழுந்தா கத்துவாங்களே?”
“கத்துனா கத்திட்டுப் போகட்டும்!” எல்லாவற்றையும் மறந்த தமிழின் கவனம் முழுவதும் அந்தக் கருவாட்டில் நிலைத்தது. நல்லெண்ணெயில் சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதோடு கருவாட்டைப் பூப்போல வதக்கி, மிளகு இடித்துச் சேர்த்திருந்த அந்த ருசி அபாரமாக இருந்தது.
பத்து நாட்கள் உண்ணாதவன் போல, ஆற அமர அந்த காரத்தில் கண்கள் கலங்க உண்டு முடித்தான். பின் அங்கிருந்தவர்களிடம், “பேங்க் போயிட்டு வர்றேன், அவர் எழுந்தா சொல்லிடுங்க” எனக் கூறிவிட்டு கிளம்பினான். அந்த வயலில் இருந்து கிளம்பும்போது, அந்தத் தூக்குச் சட்டியின் அடியில் சில ரூபாய் தாள்களை வைக்க அவன் மறக்கவில்லை.
அங்கிருந்து நேராகத் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் வந்தான் தமிழ். கையில் நேற்று நடந்த முக்கிய வேலைகளையும், இன்று நடக்கவிருக்கும் பணிகளையும் பட்டியலிட்டு அவனிடம் ஒப்படைத்தார் பேரழகன்.
“என்ன தமிழு… உனக்காக ஹீரோவெல்லாம் வந்து எவ்வளவு நேரம் காத்துக்கிட்டிருப்பாங்க? எங்க போயிருந்த? புரொடியூசர் வேற உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாராம்!”
“எக்சர்சைஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சுல்ல… அதான் ஊரைச் சுத்திப் பார்க்கப் போனேன். போன இடத்துல ஒரே கவனிப்பு! வயிறாரச் சாப்பிட வைச்சு அனுப்பிட்டாங்க… ‘நோ’ சொல்ல முடியல, அதான் லேட்டு” என்றான், கேட்பவர் அப்படியே நம்பிவிட வேண்டும் என்கிற ரேஞ்சுக்கு முக பாவனைகளை மாற்றிக்கொண்டு.
“என்ன புதுசா வேலை எல்லாம் நடக்குது?” – அந்தப் பட்டியலை ஓரம் வைத்துவிட்டு அவரைப் பார்த்துக் கேட்டான்.
அவரோ சிரித்த முகமாய், “அது ஒண்ணுமில்லை தமிழு… நம்ம புதுப் பொண்ணு கவிதா இருக்குல்ல, அது இங்க ஒரு கம்மா (கண்மாய்) ஓடுதுன்னு சொல்லுச்சு.”
“ஏன்… குளிக்கப் போறியா?” தமிழ் நக்கலாகக் கேட்டான்.
“அய்யோ… இல்லை தமிழு. மீன் பிடிக்க நல்ல இடம்னு சொல்லுச்சு.”
“ஏழு கழுதை வயசாயிடுச்சு… குளிக்கப் போறேன்னு சொன்னாக்கூட விட்ருப்பேன். மீன் பிடிக்கப் போறேன், பாம்பு பிடிக்கப் போறேன்னு… போயா, போய் வேலையைப் பாரு!”
பேரழகன் விடாமல், “உனக்காக ராத்திரி பகலா வேலை பார்க்கிற எனக்கு, ஒரு ரெண்டு மணி நேரம் ரெஸ்ட் கொடுக்க மாட்டேங்கிறியே… இதெல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்!” என்றார்.
அருகிலிருந்த கவிதாவும் வழிமொழிந்தாள், “அதானே… தல, இதெல்லாம் ரொம்பத் தப்பு சொல்லிட்டேன். இந்த வயசான காலத்துல, நீ ‘ம்’ சொல்றதுக்கு முன்னாடியே உன் வேலை எல்லாம் முடிக்கிற ஆளை இப்படி உதாசீனப்படுத்தாதே!”
அவரைச் சாக்கு வைத்துத் தானும் சில மணி நேரம் தப்பித்து விடலாம் என அவள் நினைக்க, தமிழோ அசையவே இல்லை.
“நேத்து நீ போனைக் கீழே விட்டுட்டுப் போயிட்டன்னு என்கிட்ட வந்து கொடுத்தாங்க. அது இப்போ வரைக்கும் எங்க இருக்கு, என்னாச்சுன்னு தேடக்கூடத் தெரியாத கோமா பேஷண்ட் நீ… நீ ராத்திரி பகலா வேலை பார்க்கிறியா? இதுல உனக்கு ஒரு ஆள் வக்காலத்து வேற! ஊரெல்லாம் இப்படித்தான் சொல்லிட்டுச் சுத்துறியா?”
கவிதா குறுக்கிட்டு, “சார்… அவர் காலையிலிருந்து தேடிட்டுதான் இருக்கார்” என்றாள்.
