மலர் பாதம் பணிந்து..9(2)

அழைப்பை ஏற்ற ரஞ்சித் “சொல்லு அமுதன். திடீர்னு கால் பண்ணி இருக்க?” என்று கேட்க, அவனிடம் நடந்ததை முழுதாக சொன்னவன்,

“அவுங்க வீட்ல அண்ணிக்கு போன் பண்ணேன் ரஞ்சித். எடுக்கல. நீ சொல்லிடு. நாங்க இங்க ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கோம்” என்று கூற, அனைத்தையும் கேட்டு அதிர்ந்து போனான் ரஞ்சிதன்.

“காயம் பெருசா அமுதன்? தேனு இப்ப எப்படி இருக்கா?” என்று பதட்டமாக வினவ,

அவனின் உரிமை கலந்த அக்கறையான விசாரிப்பை எனோ அமுதனால் ஏற்க முடியவில்லை. முதல் முறையாக உள்ளுக்குள் புகைச்சல் உருவானது!

“அமுதன்..”

“ஹான்.. இருக்கேன்” என்றவன்,

“கண் கிட்ட ஸ்டிச்சஸ் போடணும்னு சொல்லி இருக்காங்க ரஞ்சித். நீ அவுங்க வீட்ல சொல்லிடு” என்று மட்டும் கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.

அடுத்த அரை மணி நேரத்தில் கவிரத்னாவும் மங்கையும் குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

“ஐயோ.. என்ன ஆச்சு? என் பொண்ணுக்கு என்ன ஆச்சு” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு மங்கை அழுது கொண்டே வர, கவி அவரை சமாளித்தபடி வந்தாள்.

அமுதனைக் கண்டதும் “சாரி தம்பி. நீங்க தான் கூப்பிட்டீங்கன்னு எனக்கு தெரியாது. புது நம்பரா இருக்கவும் நான் அட்டன் பண்ணல” என்று மன்னிப்பு வேண்டும் குரலில் சொன்னாள்.

புரிந்தார் போல் தலையை அசைத்தவன் “கண்ணு கிட்ட ஸ்டிச்சஸ் போட்டிருக்காங்க. ரெண்டு மணி நேரத்துல கண்ணு முழிப்பான்னு டாக்டர் சொல்லி இருக்காங்க” என்றதும் மங்கை பதறி விட்டார்.

அதுவும் அவன் சட்டையின் மார்புப் பகுதியில் மகளின் உதிரக் கரையை கண்டவருக்கு உள்ளம் எங்கும் பயம் மட்டுமே பிரதானமாக இருந்தது.

“என்னது கண்ணு கிட்ட தையலா? ஐயோ என்னங்க தம்பி ஆச்சு..” என்றவர் அரற்ற, அவரிடம் பேசவே பிடிக்கவில்லை அவனுக்கு.

ஆனாலும், பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தமையால் அவன் நிகழ்ந்ததை கூறி “பயப்பட ஒன்னுமில்ல” என்று மட்டும் சொல்லி விட்டு தங்கையின் அருகே வந்தமர்ந்து கொண்டான்.

கவி அவனிடம் “நீங்க வேணும்னா கிளம்புங்க தம்பி. இனி நாங்க பாத்துக்குறோம்” என்று சீருடையில் சோர்ந்து போய் அமர்ந்திருந்த அவன் தங்கையை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கூற,

“இல்ல பரவாயில்ல” என்றவன், சேதுவிடம் “நீங்க கிருஷ்ணாவை கூட்டிட்டு கிளம்புங்க சேதுண்ணா. நான் வரேன்” என்றான் அங்கே நின்றிருந்த சேதுவிடம்.

“இல்ல அண்ணா. அக்கா கண் முழிக்கட்டும். பார்த்த பிறகு போகலாம்” என்று கிருஷ்ணரூபி மறுத்து விட,

“இல்ல கிருஷ்ணா. லேட் ஆகிடும். நீ வீட்டுக்கு போ. அண்ணா இருந்து பாத்திட்டு வரேன்.” என்று கூற,

“நான் மட்டும் போய் என்னண்ணா பண்ண போறேன். அக்காவை பாத்த பின்ன உன் கூடவே வரேன்” என்றாள் இளையவள்.

அதற்கு மேல் அவனும் வற்புறுத்தவில்லை. சேதுவிடம் சொல்லி தங்கைக்கு தண்ணீர் பாட்டிலை எடுத்து வர சொன்னான்.

அவளை அருந்த சொல்லி விட்டு தானும் சற்று அருந்தியவன் அப்படியே கண்களை மூடி சாய்ந்து கொண்டான்.

மூடிய கண்களுக்குள் அவளின் முகமே நிலவைப் போல் காட்சி அளித்தது. அவள் வந்து நின்றது முதல், அடி பட்டு எழ முடியாமல் தவித்தது வரை கண்ணுக்குள் உலா வர, கண்களை பட்டென்று திறந்து கொண்டான்.

என்னமோ வித்தியாசமாக உணர்ந்தான். ஆனால் என்ன என அவனால் யூகிக்க முடியவில்லை.

ஆனால், ஒன்று மட்டும் விளங்கியது! தன் அத்தை மகள் அத்தையை போலில்லை!

‘நான் உன் கணிப்பிற்கு உட்பட்டவள் இல்லை’ என மிக அழுத்தமாக அவனுக்கு உணர்த்தி இருந்தாள் தேன்மலர்.

சிறு வயதிலிருந்தே அவனுக்கு அத்தை குடும்பம் என்றால் அவ்வளவு பிடிக்காது. அதற்கு காரணம் இன்பசேகரன் தான்!

எப்போதும் வீட்டில் தங்கையின் பெயரை எடுக்கும் போதெல்லாம் அவர்களை சாடிக் கொண்டே இருப்பார். அதுவும் வரதனை பற்றி பேச்சு வந்தால் கொதித்தே போவார்.

அதை எல்லாம் பார்த்துப் பார்த்து வளர்ந்தவனுக்கு அத்தை குடும்பம் என்றால் ஆகாது என்ற நிலை தான்!

அவனையும் அறியாமல் அவர்களை பார்த்தால் பார்வையில் கோபத்தையும் வெறுப்பையும் காட்டத் தொடங்கினான்.

அதுவும் அந்த வெறுப்பை சிறு பிள்ளையான தேன்மலரிடம் தான் வெளிப்படையாக காட்டி இருந்தான் அமுதகீதன்.

அது கைலாசநாதனிற்கு உடல் நலம் குன்றத்துவங்கி இருந்த கால கட்டம்! படுக்கையில் தான் அவரின் நாட்கள் சென்று கொண்டிருந்தது.

தொழிலை மகன்கள் இருவரும் தான் கவனித்துக் கொண்டிருந்தனர். என்ன தான் மங்கைக்கு சொத்தில் சரி பங்கு கொடுக்கவில்லை என்றாலும் மகளையும் மகளின் பிள்ளைகளையும் கைலாசநாதன் ஒதுக்கியது கிடையாது.

மூத்த மகன் இன்பசேகரனுடன் தாரமங்லத்தில் அவரின் சொந்த வீட்டில் இருந்தார். மகளின் பிள்ளைகள் வந்தால் நன்றாகவே பேசுவார். பிள்ளைகளுக்கு கேட்டதை வாங்கிக் கொடுப்பார். உடல் நலம் சீராக இருந்த வரைக்கும் அவர்களுடன் விளையாடுவார்.

அது போலத் தான் அவர்களின் கடலை மிட்டாய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கும் அவர்களை அழைத்துச் சென்று சுற்றி காட்டி அங்கேயும் சுதந்திரமாக விளையாட விடுவார்.

தாத்தா இருந்தவரையிலும் அவரோடு சென்று விளையாடிய பிள்ளைகள் அவர் உடல் நலக் குறைவால் வரவில்லை என்றதும் அன்னையிடம் நச்சரித்து அவரை அழைத்துக் கொண்டு சென்றனர்.

இன்பசேகரனும் சிறு பிள்ளைகள் தான் என்பதால் எதுவும் கூறியதில்லை. தங்கையிடமும் முகம் காட்டவில்லை.

எனவே, திவாகரனும் தேன்மலரும் தினமும் சென்று விளையாடினார்கள். அதுவும் தேன்மலருக்கு கடலை மிட்டாய் என்றால் கொள்ளை பிரியம்.

ஒரு நாளைக்கு இரண்டு கடலை மிட்டாய் உண்ணவில்லை என்றாலும் உறக்கமே வராது அவளுக்கு.

பேக்டரிக்கு வரும் போதெல்லாம் உற்பத்தி செய்யும் இடத்தில் நேராக சென்று சுட சுட தயாராகும் கடலை மிட்டாயை உடனே எடுத்து இரண்டினை வாயில் போட்டுக் கொள்வாள்.

கடலை மிட்டாயுடன் சக்கரையின் இனிப்பும் சேர்ந்து வாயில் எச்சில் ஊற வைக்கும்! அந்தச் சுவைக்கு வேறெதுவும் ஈடு இணை இல்லை!

அப்படி ஓர் நாள் அவள் ஆசை ஆசையாக ஒரு கடலை மிட்டாயை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு மற்றொண்டை கையில் எடுத்த சமயம் அதை வெடுக்கென்று பிடுங்கி இருந்தது ஒரு கரம்.

தேன்மலர் திகைத்துத் திரும்ப, அங்கே கோபமாக நின்றிருந்தான் மீசை அரும்பிய அமுதகீதன்!

அவனைக் கண்டதும் மெல்லிய பயம் உண்டாக

“அத்..தான்..” என்றாள் குரல் தடுமாற.

“என்ன பண்ற?” என்றவன் பல்லைக் கடித்துக்கொண்டு கேட்க,

“ஹம்ம்.. அது கடலை மிட்டாய்..” என்றாள் வாய்க்குள் இருந்த கடலை மிட்டாயை மென்றபடி.

“இப்படி தான் வேலை செய்யுற இடத்தில வந்து எடுத்து சாப்பிடுவியா?” என்றவன்,

“இதென்ன உங்க ஃபேக்டரியா? இப்படி உன் இஷ்டத்துக்கு எடுத்து சாப்பிட” என்றான் கடுமையான குரலில்.

தேன்மலரின் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது.

“அத்த..தான்” என்றவள் திணற,

“என்ன அத்தான்.. அப்படி எல்லாம் என்னைக் கூப்பிடாத. எனக்கு உன்னை, உங்க ஃபேமிலியை பிடிக்கவே பிடிக்காது. பாத்தாலே கோபம் தான் வரும்” என்றதும் தேன்மலர் கண்களில் கண்ணீர் வெளியேறி இருந்தது.

எதிரில் இருந்த கோபக்கார அமுதனுக்கோ அவளை இனி இங்கே பார்க்கவே கூடாது என்று மட்டும் தோன்ற, “இனி இந்த மாதிரி எல்லாம் நீங்க வரக் கூடாது. வந்தாலும் எங்க ஃபேக்டரில செஞ்ச கடல மிட்டாயை எடுத்து சாப்பிடக் கூடாது. வேணும்னா வெளில கடைல காசு கொடுத்து வாங்கி சாப்பிடுங்க” என்று முகத்தில் அரைந்தார் போல் கூறி விட, தேன்மலருக்கு அப்படி ஒரு அழுகை வந்தது.

கண்ணீரைத் துடைக்க துடைக்க அது பெருக, அவனோ அவள் கையில் இருந்து பிடுங்கிய மிட்டாயை கீழே வீசி விட்டுச் சென்றிருந்தான்.

கீழே கிடந்த மிட்டாயை அழுகையுடன் பார்த்துக் கொண்டே வாயில் இருந்த மிட்டாயை கசப்புடன் மென்று விழுங்கினாள் தேன்மலர். ஏனோ, அந்த இனிப்பான கடலை மிட்டாய் மிக மிக கசப்புடன் அவள் தொண்டைக்குள் இறங்கியது.

அதற்கடுத்து அமுதகீதன் அவளை தொழிற்சாலைக்குள் பார்த்ததே இல்லை!

சில விசேஷங்களில் கண்டிருக்கிறான். ஆனால், பேசியதில்லை. பேச வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.

வருடங்களும் ஓடி விட, ஓர் முறை அவள் மேற்படிப்பு இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது பார்த்தான். கல்லூரி வாசலிலேயே பார்த்தான்.

அதன் பின்னர் இளவழகனின் வீடு பால் காய்ச்சும் போது தான் அவளிடம் பேசும் சூழ்நிலையே உருவாகி இருந்தது!

இருவருக்கும் உரசலும் ஏற்பட்டது!

அன்றே அவள் பணத்தை வீசிய போதே

“அத்..தான்.” என்று தன்னைக் கண்டு பயப்படும் குட்டித் தேன்மலர் இல்லை என்று நிரூபித்திருந்தாள்.

இன்றும் தன் வீட்டிற்கே வந்து போஸ்ட்டை கொடுத்த போது நிமிர்ந்த பார்வை, அழுத்தமான வார்த்தைகள் என அவனுக்கு நிகராக அவளும் இறங்காமல் நின்றாள்.

எல்லாவற்றையும் யோசித்து பார்த்தவன் “ம்ம்.. வைராக்கிய வைரம் தான் நம்ம கடல மிட்டாய்!” என்று முதல் முறையாக அவளைப் பற்றி சிலாகிப்புடன் உணர்ந்தவனுக்கு இதழ்களில் மெல்ல புன்னகை அரும்பியது.

ஆனால் அந்தப் புன்னகை மறையும் விதமாக அவளைக் காணச் சென்ற போது அவள் பேசியது மீண்டும் அவனை முருங்கை மரம் ஏற வைத்தது.

மருத்துவர் வந்து அவள் கண் விழித்து விட்டாள் என்று சொல்லவும் அவசர அவசரமாக எழுந்தவன் மங்கையும் கவியும் இருப்பதை கண்டு வாசலில் நின்று விட்டான்.

“நீங்க போய் பாருங்க” என்றும் சொல்ல,

கவியும் மங்கையுடன் சென்று தேன்மலரைப் பார்த்தாள்.

உள்ளே அவள் பேசியது வெளியே தெளிவாகக் கேட்டது அமுதனுக்கு.

“அண்ணி.. ஹால்பிட்டல் பில்’ யாரு கட்டினா” என்றவளின் சோர்ந்த குரல் கேட்க, அமுதனின் முகம் மாறி இருந்தது.

“நாங்க வந்ததில இருந்து பில் எதுவும் வரல தேனு. அமுதன் தம்பி கட்டிருப்பார்னு நினைக்கிறேன்”

இரண்டு நிமிட அமைதிக்குப் பின் மீண்டும் அவள் குரல் கேட்டது.

“இன்னும் இங்க தான் இருக்காங்களா..”

“ம்ம்… பாவம் ரூபி பிள்ளையும் இங்க தான் இருக்கு. உன்னைப் பார்த்த பின்ன போகலாம்னு இருக்காங்க” என்ற கவியின் குரலுக்கடுத்து,

“நீங்க முதல்ல போய் அவர் கிட்ட ‘பில்’ல வாங்கி எவ்வளவு பணமோ அதை கொடுத்திடுங்க அண்ணி” என்றவள் பேசியவை தெளிவாக அவன் செவிகளை தீண்ட, அமுதனின் தாடை கட்டுக்கடங்காத கோபத்தில் இறுகியது!

error: Content is protected !!
Scroll to Top