மலர் பாதம் பணிந்து..9(1)

பணிதல் – 9

“தேன்.. மலர்..” என்றபடி அவளை நெருங்கியவனுக்கு அவள் எழ முடியாமல் சிரமப் படுவதை கண்டு மனம் என்னவோ செய்தது.

தேன்மலருக்கோ இடது பக்க கண்ணைத் திறக்கக் கூட முடியவில்லை. வலி உயிர் போனது. இடது முழங்கையுடன் சேர்த்து உள்ளங்கையிலும் ஆங்காங்கே புண்ணாகி இருக்க, வலது கையை பின் பக்கமாக ஊன்றி விழுந்ததால் அங்கேயும் மணிக்கட்டில் பயங்கர வலி.

அதுவும் விழுந்தது சிமெண்ட் தரை வேறு என்பதால் நன்றாகவே காயங்கள் ஏற்பட்டிருந்தது.

இரு கைகளையும் ஊன்றி எழக் கூட முடியவில்லை அவளால். வலது கண்ணை சிமிட்டினால் இடது கண்ணில் வலி எடுத்தது. கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு எழப் பார்த்தவளுக்கு சொட்டு சொட்டாய் இரத்தம் கீழே சிந்துவதை உணர்ந்ததும் தான் இடது கண்ணில் பெரிய அடி என்று புரிந்தது.

முயன்று இடது கையை பின்னே இழுத்து தரையில் கிடந்த நிலையிலேயே கண் பகுதியை தொட்டுப் பார்த்தாள்.

கண்ணிற்கு மேலேயும் புருவத்திற்கு கீழேயும் உள்ள பகுதியில் தான் பூந்தொட்டியின் முனை காயத்தை ஏற்படுத்தி இருந்தது.

தொட்டுப் பார்த்த விரல்களில் இரத்தக் கரைகளை கண்டதும் மனம் பயம் கொள்ள, எழ முடியாத தன் நிலையை எண்ணி கழிவிரக்கம் ஏற்பட மற்றொரு கண்ணில் இருந்து கண்ணீர் தானாய் வழிந்தது.

கண் பகுதிக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று புத்தி அறிவுரைக்க மெல்ல எழ முயன்றவளின் முன்னே வந்து முழங்காலிட்டு அமர்ந்த அமுதகீதன், அவளின் முகத்தை கண்டு மேலும் திகைத்தான்.

ஒரு கண்ணில் கண்ணீரும் மற்றொரு கண்ணில் ரத்தமுமாக இருந்தவளை காணக் காண மனம் பலமிழப்பது போலிருந்தது.

சற்றும் யோசிக்காமல் முழங்காலிட்டபடியே அவளைத் தூக்கி அமர வைக்க, உடலெல்லாம் வலித்தது தேன்மலருக்கு.

மேலும் மேலும் கண்களில் கண்ணீர் வழிய, இடது கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் இரத்தத்துடன் கலந்து அவளின் ஒரு பாதி முகத்தையே உருக்குலைத்து காட்டியது.

அவன் முன்னால் இப்படி ஆனது வேறு அவளை இன்னும் நோக வைக்க, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அவள் கண்களை மூடியதும் பயந்து போனான் அமுதகீதன்.

“ஹே.. தேன்..” என்றவன் அவளை அப்படி அழைக்க வராமல் “ப்ச்.. மலர்… என்னைப் பாரு. ஒன்னுமில்ல. இப்ப ஹாஸ்பிடல் போயிடலாம்” என்றவன் அவளைத் தூக்கி நிறுத்த முயல, தேன்மலர் அயர்ந்து போய் மயங்கி இருந்தாள்.

அவளைத் தூக்கி நிறுத்த முயன்றவன் அவள் மயங்கியதும் தடுமாறி இடை பற்றி அவளைத் தாங்கிக் கொள்ள மயக்கத்தில் கிடந்தவளின் தலை தொய்ந்து அவன் மார்பில் விழுந்தது.

தன் வலப் பக்க மார்பில் மயங்கி விழுந்தவளை கண்டவணுக்கு உடனே அவளை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும் என்று புரிய, அவளை கைகளில் ஏந்திக் கொண்டவன் தன் மோரிஸ் கேரேஜினை நெருங்கினான்.

அப்போது வெளியே கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. கிருஷ்ணரூபியை அழைத்துக் கொண்டு சேது வந்திருந்தார்.

“சேதுண்ணா..” எனக் குரல் கொடுத்தபடி

திரும்பி வாசல் பக்கம் விரைந்தான்.

காரை வீட்டினுள் விட வேண்டி கதவினை திறந்தவருக்கு அமுதன் கையில் தேன்மலரைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவதைக் கண்டதும் பதற்றம் ஏற்பட்டது.

“என்னாச்சு தம்பி?” என அவர்களை நெருங்கிக் கேட்டவர் அப்போது தான் அவள் முகத்தில் இரத்தம் படிந்திருப்பதை கண்டார்.

“ஐயோ தம்பி.. என்ன தம்பி ஆச்சு? முகத்துல ரத்தமா இருக்கு” என்று தேன்மலரை பார்த்து பதட்டத்தோடு சேது கேட்க,

“கீழ விழுந்துட்டாண்ணே. பூத்தொட்டி முனைல பட்டதால கண்ணுக்கு மேல அடி பட்டிருக்கு. உடனே ஹாஸ்பிட்டல் போங்க” என்றவன் அவளுடன் வெளியே வர, அண்ணன் கைகளில் யாரயோ ஏந்திக் கொண்டு வருவதைக் கண்ட கிருஷ்ணரூபியும் முதலில் திகைத்து விட்டாள்.

அவனுக்கு கார் கதவினை திறந்து விட்ட சேது கிருஷ்ணரூபி அதிர்ந்து வெளியே நிற்பதைக் கண்டதும் “தம்பி பாப்பா..” என்று கிருஷ்ணரூபியை காட்ட,

தேன்மலருடன் காரிற்குள் ஏறிய அமுதனோ தங்கையை மட்டும் வீட்டில் இருக்க சொல்வது சரியாகாது என “கிருஷ்ணா.. நீயும் ஏறு. சீக்கிரம்” என்றதும் மீண்டும் முன் இருக்கையில் ஏறிக் கொண்டாள் கிருஷ்ணா.

“சீக்கிரம் சேதுண்ணா ..” என்று அவரை அவசரப் படுத்தியவன் இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் அவளின் இடது கண்ணைக் காண சகிக்காமல் உள்ளங்கையால் காயத்தை அழுத்தியவன்,

மிரண்டு போய் தங்களைப் பார்த்திருக்கும் தங்கையிடம் “கிருஷ்ணா.. உன்னோட ஹான்ட் கர்சீஃப்ப கொடு” என்று கேட்டு வாங்கினான்.

அண்ணனிடம் கை குட்டையை நீட்டியபடி அவன் மார்பில் மயங்கிக் கிடந்தவளின் முகத்தை உற்றுப் பார்த்தாள் கிருஷ்ணரூபி.

பார்த்ததும் சட்டென்று அவள் யாரென கண்டறிய முடியவில்லை இளையவளால். அதுவும் பாதி முகத்தில் இரத்தக் கரை வேறு இருக்க, கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது அவளுக்கு.

மீண்டும் நன்றாகப் பார்த்தவள் யோசனையுடன் அண்ணனிடம் “அண்ணா.. இவுங்க.. இவுங்க நம்ம ரிலேட்டிவ் தான” என்று கேட்க,

“ம்ம்..” என்று மெல்ல தலை அசைத்தவன், “நம்ம அத்தை பொண்ணு. மலர்” என்றான் தங்கையிடம்.

“தேன்மலர் அக்காவா” என்று மெல்லிய திகைப்புடன் கேட்டவளிடம் ஆமோதிப்பாக தலை அசைத்துக் கொண்டே அவள் தலையை தன் மார்போடு அழுத்தியவன், இரத்தம் வெளியேறி விடக் கூடாது என கைக்குட்டையை காயத்தில் அழுத்த, வலியில் “ஸ்..” என்று முணங்கிய தேன்மலர் மெல்ல வலது கண்ணைத் திறந்தாள்.

மற்றொரு கண்ணில் கைக் குட்டையை வைத்து அழுத்தி இருந்தான் அமுதன்.

எதிரே தெரிந்த முகம் அவளை கண்களால் எரித்தவனின் முகம்!

தன்னை, தன் குடும்பத்தை அவ மரியாதையாக பேசியவனின் முகம்!

‘ஓசில லிஃப்ட் கிடைச்சா.. உடனே ஏறிட்டு வந்திடுவியா?’ என்று கேட்ட பணக்கார திமிர் பிடித்தவனின் முகம்!

சீப் பீப்பில்ஸ்! என்று ஏளனமாக பேசியவனின் முகம்!

அப்படிப்பட்டவனின் மார்பில் தான் சாய்ந்திருக்கிறோம் என்று எண்ணும் போதே அவளுக்கு கூசியது.

வலியையும் மீறிய வைராக்கியம் உடலெங்கும் பரவி, மயங்கிய உடலுக்கு தெம்பினை கொடுக்க, தன் காயத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்தியவனின் கரங்களை மெல்ல விலக்கியவளுக்கு உள்ளங்கையில் ஏற்பட்ட சிராய்ப்பு வலியைத் தந்தது.

முகத்தை சுறுக்கியபடி அவனிடம் இருந்து பிரிய முயல, “ஹே மலர்..” என்றவன் மீண்டும் அவளை மார்பில் சாய்த்து கன்னம் தட்டி “என்னைத் தெரியுதா?” என்று கேட்க, இடது கண்ணை திறக்க முடியாமல் வலது கண்ணால் அவனைக் கண்டு “ம்..” என்று முனங்கினாள்.

“ஒண்ணுமில்ல. இதோ அஞ்சு நிமிஷத்துல ஹாஸ்பிடல் வந்துடும்” என்றதும் உடலில் இருந்த பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி அவனிடம் இருந்து பிரிந்து கைக்குட்டையை மட்டும் தன் கையில் வாங்கிக் கொண்டு மற்றொரு புறம் சாய்ந்து அமர்ந்தாள்.

அதற்குள் உடம்பெங்கும் சுர் சுர் என்று வலி பரவி உயிரைக் கொன்றது! இடது பக்க முகத்தை வெட்டி எடுத்து விடலாம் என்று நினைக்கும் அளவுக்கு கண் மேல் பட்ட காயம் ரணமாய் வலித்தது.

அந்த நிலையிலும் அவனின் காரில் அவனுடன் பயணித்து செல்கிறோம் என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

மெல்ல தன்னை சமன் செய்து கொண்டவள் பலவீனமான குரலில் “எனக்கு ஒன்னுமில்ல. வண்டியை நிறுத்துங்க” என்று கூற, காரில் இருந்த மூவருமே அதிர்ந்து தான் போயினர்.

அவளோ முன்னர் ட்ரைவரையும் கிருஷ்ணரூபியையும் கவனிக்கவே இல்லை.

“காரை நிறுத்துங்க” என்று அமுதனிடம் மட்டும் ஒற்றை கண் பார்வையை வைத்து சொல்ல,

“மலர்.. ரத்தம் போய்ட்டிருக்கு.. இந்த நிலமைல ஹாஸ்பிடல் போகாம வண்டியை நிறுத்த சொல்ற” என்று அவள் சிறு பிள்ளை போல் அடம் பிடித்ததில் அமுதன் குரலை உயர்த்த,

“அண்ணா..” என்று மெல்ல அழைத்தாள் கிருஷ்ணா.

அப்போது தான் அவளை கவனித்தாள் தேன்மலர். கிருஷ்ணாரூபியை அடிக்கடி எல்லாம் பார்க்க நேரிடாது. எந்த ஒரு பொது விசேஷங்களுக்கும் அவளை அழைத்து வர வசுந்தலா விரும்பியது இல்லை.

அவளைப் பார்த்தே வெகு காலமாகி இருந்தவளுக்கு அண்ணா என்றவள் அமுதனை அழைத்ததும் தான் அவள் கிருஷ்ணரூபி என்பதை உணர்ந்து கொண்டாள்.

அவளிடம் இருந்து பார்வையை அமுதனிடம் கொண்டு வந்தவள் “வண்டியை நிறுத்த சொல்லுங்க. நான் இறங்கிக்கிறேன். நானே போயிடுவேன்” என்றாள்.

இதை அவள் சொல்லி முடிப்பதற்குள் முகம் வலியில் கசங்கி கண்ணீர் பெருகி இருந்தது.

அமுதகீதனுக்கு உச்சந்தலை வரை சுர்ரென கோபம் ஏறியது. அவள் எதற்காக இப்படி கூறுகிறாள் என்று நன்றாகவே விளங்கியது அவனுக்கு.

இந்த நிலையில் கூட தன்மானத்தை பெரிதாக எண்ணும் அவளின் குணத்தை கண்டு கோபத்தையும் மீறிய ஆச்சர்யம் வந்தது அவனுக்கு.

அத்தை குடும்பத்தை மொத்தமாக கணித்தது தவறு என்று இப்போது உணர்ந்தான்!

அமுதகீதனின் கண்களுக்கு இப்போது அவள் மட்டும் தனியாக, தனித்துவமாகத் தெரிந்தாள்.

வலியிலும் கூட சுய மரியாதை முக்கியம் என்று நினைக்கும் அவளின் குணம் அவனையே வியக்க வைத்தது.

ஆனால், இது அவளின் சுய மரியாதையை அங்கீகரிக்கும் சமயம் அல்லவே!

ஆகையால் அவளின் வாயை அடக்க வேண்டி “இதோ ரெண்டே நிமிஷத்தில ஹாஸ்பிட்டல் வந்திடும் மலர்! போயிடலாம்” என்றவன் அவளின் கையை பற்றி மீண்டும் அவள் முகத்தை தன் மார்பில் வைத்து அழுத்திக் கொள்ள, தேன்மலருக்கு திகைப்பில் வார்த்தைகளே வரவில்லை.

சிந்தனை எல்லாம் மரத்து போனது போலிருந்தது. அதற்கடுத்து அவளை சிந்திக்க விடாமல் மருத்துவமனையும் வந்திருக்க, மளமளவென சிகிச்சை தொடங்கியது.

அவளை பரிசோதித்த மருத்துவர் வெளியே வந்து “கண் கிட்ட ஏற்பட்டிருக்க காயம் ஆழமா இருக்கு. ஸ்டிச்சஸ் போட்டு தான் ஆகனும்” என்று சொல்லி விட்டுச் சென்றார்.

அவள் வீட்டிற்கு தகவல் சொல்ல வேண்டுமே என்று தன் கைபேசியை வேக வேகமாக எடுத்தவனுக்கு யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை!

க்கும்… துரையிடம் அவர்கள் குடும்பத்தில் யாருடைய நம்பரும் இல்லையே! பிறகெப்படி சொல்லுவார்?

இரண்டு நொடிகள் யோசித்தவன் அன்று ரஞ்சித் சொன்னது ஞாபகம் வந்து வாட்ஸ் அப்பில் குடும்ப குரூப்பினை திறந்து பார்க்க, ஏகப் பட்ட பெயர்கள் இருந்தன.

அதில் பதிந்து வைக்காத எண்கள் மூன்று மட்டும் அப்படியே இருக்க, அவர்கள் தான் என்று பெரு மூச்சை விட்டவன் அதில் ஒரு எண்ணிற்கு கீழே ‘கவி’ என்று அவளின் பெயரைக் காட்டியதும் அந்த எண்ணிற்கு அழைத்தான்.

அழைப்பு எடுக்கப்படாமல் விட, மீண்டும் அழைத்துப் பார்த்தான். இம்முறையும் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் ரஞ்சித்திற்கே கால் செய்து கூறி விடலாம் என்று அவனுக்கு அழைத்தான்.

error: Content is protected !!
Scroll to Top