மலர் பாதம் பணிந்து..8(3)

அவனை மட்டும் பார்த்து விடவேக் கூடாது என்று கடவுளின் வேண்டிக் கொண்டபடி அட்ரஸை தேடிக் கண்டுபிடித்து சென்றவள், கருப்பும் தங்கமும் பூசிய இரும்புக் கேட்டிலிருந்த எண்ணைக் கண்டதும் இந்த வீடு தான் என்று ஊர்ஜிதம் செய்து கதவினை தட்டினாள்.

அவர்கள் வீட்டின் ட்ரைவர் தான் வந்து கதவினை திறந்து விட்டார். ‘அப்பாடா அவன் வரல’ எனும் பெரு மூச்சுடன் “போஸ்ட்” என்று கவரினை நீட்டினாள்.

“உள்ள வாம்மா” என்று கேட்டினை நன்றாகத் திறந்து விட்டவருக்கு அவள் தன் முதலாளியின் தங்கை மகள் என்று நன்றாகத் தெரியும்!

கைலாசநாதன் இருந்த காலத்தில் இருந்தே அவ்வீட்டில் ட்ரைவராக பணி புரிகிறார் சேது. அவ்வப்போது விஷேஷங்களில் மங்கையின் குடும்பத்தை பார்க்க நேரிடும். தேன்மலரும் அவருக்குப் பரிச்சயம் தான். எனவே தான் உள்ள வாம்மா என்று அழைத்தார்.

“இல்லண்ணா. சைன் பண்ணிட்டு போஸ்ட் வாங்கிக்க” என்று அவரிடம் போஸ்ட் கவரை நீட்ட,

“இல்லமா. பெரிய ஐயாவும் அம்மாவும் வீட்ல இல்ல. அப்பாவுக்கு போஸ்ட் வரும்னு அமுதன் தம்பி சொல்லி இருந்தார். தம்பி வீட்ல தான் இருக்கார். ஒரு நிமிஷம் பொறுங்க. தம்பியை வரச் சொல்றேன்” என்றவர் தோட்டத்தின் பக்கவாட்டாக இருக்கும் பாதையில் அவளை நிற்க சொல்லி விட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் உள்ளே சென்று விட, தேன்மலருக்கு ‘ஐயோ’ என்றாகி விட்டது.

அவன் முகத்தில் முழிக்க வேண்டாம் என்பதால் தானே இவரிடமே கொடுத்து விட்டு கிளம்பலாம் என்று எண்ணி இருந்தாள்.

இவர் என்னடாவென்றால்… உள்ளே அவனை அழைக்க சென்று விட்டார்.

அவனைக் கண்டால் தேவை இல்லாத பார்வை உரசல்கள் ஏற்படும்! தேவையா? என்று நின்றிருந்தவளுக்கு எரிச்சலாக இருந்தது.

இரண்டு நிமிடத்தில் வெளியே வந்த டிரைவர் “தம்பி வராருமா” என்று அவளிடம் கூறி விட்டு காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி இருந்தார்.

அவர் சென்று இரண்டு நிமிடங்கள் ஆன பின்னும் கூட அமுதகீதன் வந்திருக்கவில்லை.

முன் மாலைப் பொழுதின் வெயில் சற்று அதிகமாகவே இருக்க தண்ணீர் குடிக்க வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு.

தண்ணீர் பாட்டில் வெளியே வண்டியில் இருந்தது. உள்ளே சற்று எட்டிப் பார்த்தாள். கார் ஷெட்டைத் தாண்டி இருந்த வீட்டின் நுழைவு வாயில் சற்று பரந்த அளவில் இருந்தது.

அவன் தலையை தேடியவளுக்கு தாகம் அதிகமானது. மேலும் இரண்டு நிமிடங்கள் காத்திருந்தவள் இதற்கு மேல் முடியாது. அவன் வரும் போது வரட்டும். நாம் தண்ணீரை எடுத்து வருவோம் என்று கேட்டை லேசாக திறந்து வெளியே நின்ற வண்டியில் தன் வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே வந்தாள்.

கவரினை ஒரு கையால் பற்றிக் கொண்டவள் மற்றொரு கையால் பாட்டிலைத் திறந்து தண்ணீரைக் குடிக்க, அவளின் செயல்கள் ஒவ்வொன்றையும் மேலே தன் அறையின் பால்கனியில் நின்று

அலைபேசியில் பேசியபடி பார்த்துக் கொண்டிருந்தான் அமுதகீதன்.

ரிசார்ட் குறித்த முக்கியமான விஷயமாக பேசிக் கொண்டிருந்தான். ஆகையால் தான் அழைப்பை துண்டிக்கவில்லை.

ட்ரைவர் வந்து போஸ்ட் வந்திருக்கிறது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் “தேன்மலர் பொண்ணு தான் வந்திருக்குது தம்பி” என்று கூடுதல் தகவலையும் கூறினார்.

அவள் என்று தெரிந்ததும் அன்று ரஞ்சிதன் அவளின் பணியைப் பற்றி சொன்னது நினைவில் வர, அழைப்பை துண்டிக்க முடியாமல் பேசியவனின் கால்கள் தானாக பால்கனி பக்கம் நகர்ந்திருந்தது.

பால்கனி சுவரில் சாய்ந்து நின்று அவளை கவனித்தான். காக்கி நிற சுடிதாரும் குங்கும நிற ஷாலும் அணிந்திருந்தாள்.

கையில் எளிமையான ஒரு வார்’ வாட்ச். நெற்றியில் சின்னதாக கோபுர பொட்டு. இடை தாண்டிய கூந்தலை ஒற்றை ஜடையில் அடக்கி பின்னி இருந்தாள்.

மிக சாதாரண தோற்றம்! அவளையே பார்த்தபடி அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவனிடம் “நான் வேணும்னா வாங்கி வைக்கட்டுங்களா தம்பி” என்றவர் கேட்க,

‘வேண்டாம்’ எனும் விதமாக தலை அசைத்து மறுத்தவன் “நான் அப்புறம் கால் பண்றேன்” என அழைப்பை துண்டித்து விட்டு,

“இல்ல சேதுண்ணே நானே வாங்கிக்கிறேன். ஸ்கூல் முடிஞ்சிருக்கும். நீங்க போய் கிருஷ்ணாவை கூட்டிட்டு வாங்க” என்று அவரை அனுப்பி வைத்தான்.

அவர் சென்றதும் மீண்டும் பால்கனிக்கே வந்து நின்றான். சேது சென்று அவளிடம் சொல்வதும் அதற்கு அவள் தலை அசைப்பதையும் கண்டவனுக்கு ஏனோ அவளிடம் இருந்து பார்வையை அகற்ற தோன்றவில்லை.

அவளையே பார்த்து நின்றான். சேது காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய பின்னரும் கூட அமுதன் அசையவில்லை.

அவள் வீட்டு நுழைவாயிலை எட்டிப் பார்த்து விட்டு எரிச்சலுடன் நிற்பது தெரிய, இதழோரம் சின்ன புன்னகை உருவானது அவனுக்கு.

ஆனாலும் கீழிறங்கி செல்ல மனம் வரவில்லை. தூரத்தில் நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் கேட்டைத் திறந்து வெளியே சென்றதும் திகைத்தவன், “கடுப்பாகி கிளம்பிட்டாளா..” என்று முணுமுணுத்தபடி வேக வேகமாக கீழே இறங்கி வந்தான்.

வீட்டில் அவன் மட்டும் தான்! இன்பசேகரனும் வசுந்தலாவும் ஒரு விஷேஷத்திற்கு சேலம் வரை சென்றிருந்தனர்.

கார் ஷெட்டை தாண்டி வந்தவன் கண்டது, அவள் ஒரு கையால் கவரைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் தண்ணீர் அருந்தியதைத் தான்.

மெதுவாக நடந்து அவள் எதிரே சென்று நின்றான். அவளோ அண்ணாந்து பார்த்தபடி தண்ணீரை பருகிக் கொண்டிருந்தாள்.

தன் முன்னால் யாரோ வந்து நிற்பதை உணர்ந்து வாயில் தண்ணீரை நிரப்பியபடி அவள் நேராகப் பார்க்க, அமுதகீதன் தான் பேண்ட் பாக்கட்டில் இரு கைகளையும் நுழைத்தபடி இவளைப் பார்த்திருந்தான்.

வாய்க்குள் தண்ணீர் இருந்ததால் கன்னங்கள் இரண்டும் ‘உப்’பென்று வீங்கி இருக்க, திடீரென்று அவன் வந்து நின்றதை எதிர் பாராதவளின் கண்களும் விரிந்து கொள்ள, அவளின் அந்த முகமும் அதிலிருந்த திகைப்பும் கன்னங்கள் உப்பி இருந்த நிலையும் அமுதகீதனுக்கு மெல்லிய சிரிப்பை கொடுத்தது.

ஆனாலும் மறைத்துக் கொண்டவன் தொண்டையை செறுமிக் கொண்டு “தண்ணி குடிச்சு முடிச்சாச்சுன்னா போஸ்ட்டக் கொடுக்கிறியா? ” என்று இயல்பாக ஒருமையில் பேசியவன் கையினை நீட்ட, அப்போது தான் சுய நினைவே பெற்றவள் போல் வேக வேகமாக தண்ணீரை முழுங்கி விட்டு அவனிடம் போஸ்ட் கவரினை நீட்டினாள்.

அவனும் வாங்கிக் கொண்டான். கையெழுத்து போட வேண்டிய பேப்பரை அவனிடம் நீட்ட, “இது என்ன?” என்றான் ஒன்றும் அறியாதவன் போல்.

“சைன் பண்ணிக் கொடுங்க” என்றவள் இயல்பாகக் கூற முயன்றாலும் வார்த்தையில் அழுத்தம் வந்து விட்டது. அவளையே கூர்மையாக பார்த்தபடி கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தான்.

பேப்பரை வாங்கியவள் அவ்வளவு தான் எனும் பெரு மூச்சுடன் திரும்பி நடக்க ஆரம்பிக்க, “ஒரு நிமிஷம்” என்று அவளை நிறுத்தினான்.

தேன்மலருக்கு மனதில் அபாய மணி அடிக்க, அவன் புறம் திரும்பாமல் நின்றாள்.

“உன்னை தான்” என்றவன் மீண்டும் அழைக்க, கடுப்பானது அவளுக்கு.

“சொல்லுங்க” என்றவள் மார்பின் குறுக்கே கையை கட்டியபடி திரும்ப, எதற்காக அவளை நிறுத்தினோம் என்று அவனுக்கே புரியவில்லை.

என்னவோ பேச நினைத்தான்.. அன்று அவளிடம் அப்படி அவ மரியாதையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூட தோன்றியது. ஆனால், அவளிடம் இயல்பாக பேசியே இராதவனுக்கு எப்படி மன்னிப்பெல்லாம் கேட்க வரும்?

ஆகையால் அவன் அப்படியே நிற்க, “எதுக்கு கூப்பிட்டீங்க சார்?” என்றாள் தேன்மலர் நிதானமாக.

‘சாரா..’ என்று அவளைப் பார்த்தவனுக்கு ‘ ஓ மேடம் ப்ரொஃபெஷனலா பேசுறாங்களாமா’ என்று நினைத்தவன்,

‘நானும் ப்ரொஃபெஷனலாவே பேசுறேன்’ என்று எண்ணிக் கொண்டு, “எனக்கும் லெட்டர் வந்திருக்கும். செக் பண்ணிக் கொடு” என்று கேட்க, புருவங்களை சுருக்கியவள் அவனை ஒரு பார்வை பார்த்தபடி வண்டியில் இருந்த தன் பேகினை எடுத்து வந்தாள்.

அனைத்து போஸ்ட்களையும் எடுத்து ஒவ்வொன்றாக பார்த்தபடி, “பேர்?” என்று கேட்க, அமுதகீதனுக்கு முகம் மாறியது.

தன் பெயர் இவளுக்கு தெரியாதாமா? திமிரு!! என்று பல்லைக் கடித்தவன், அவளையே முறைத்தான்.

அவளும் போஸ்ட் கவர்களை பார்ப்பதை நிறுத்து விட்டு அவனைப் பார்த்து “பேர் சொல்லுங்க சார்” என்று கேட்க,

“அமுதகீதன்..” என்று கடித்த பற்களுக்கு இடையே தன் பெயரை கடித்துத் துப்பினான்.

உள்ளுக்குள் ‘தன் பெயரையே தன் வாயில் அரை பட விட்டாளே’ எனும் பொறுமல் வேறு ஏற்பட்டது அமுதனுக்கு!

எல்லாவற்றையும் பார்வையிட்டவள் “எந்த போஸ்ட்டும் வரல சார். இன்னைக்கு ஆஃபிஸ் வந்திருந்தா மே பி நாளைக்கு டெலிவரி பண்ணிடுவோம் ” என்று கூற,

“ஓகே” என்றவன் கவருடன் வீட்டிற்குள் திரும்ப, அவளும் தன் கடமை முடிந்தது என்பது போல் பையுடன் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

அவனுக்கோ அவள் இங்கே வந்த போது அவளைப் பார்த்த பார்வை முற்றிலும் மாறி இருந்தது.

“என் பேரு கூட இவளுக்கு தெரியாதாமா! வேணும்னே கேக்குறா” என்று எரிச்சலில் முணுமுணுத்தபடி வீட்டிற்குள் நுழையவிருந்தவன், அவள் குரலின் சத்தம் கேட்டதில் திரும்பிப் பார்த்ததும் அதிர்ந்தான்!

அங்கே தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ட்யூப்பில் கால் இடறி தேன்மலர் கீழே விழுந்திருந்தாள்!

இடது முழங்கை மற்றும் வலது பக்க பின் புற மணிக்கட்டில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்க, அவள் தடுமாறி பையுடன் கீழே விழுந்த போது பக்கவாட்டாக சரிந்ததில் அங்கிருந்த பூந்தொட்டியின் முனையில் இடது பக்க கண் பகுதியில் நல்ல காயமாகி இரத்தம் வந்து கொண்டிருந்தது!

அமுதகீதனுக்கு திக்கென்று ஆகி விட்டது. அதுவும் அவள் எழுந்து கொள்ள முடியாமல் கைகளை ஊன்றி எழ முயல்வதைக் கண்டவன் அப்போது தான் அவள் இடது கண் பகுதியில் இரத்தம் வடிவத்தைக் கண்டான்.

இரத்தத் துளிகளைக் கண்டதும் உள்ளமெல்லாம் உறைந்து விட, “ஹே.. தேன்…மலர்…” என முதல் முறையாக அவளின் பெயரைப் பிரித்து உச்சரித்தவன் பதற்றத்துடன் அவளிடம் விரைந்தான்!

அமுதம் மலரை நோக்கி ஓடி வந்தது!

error: Content is protected !!
Scroll to Top