மலர் பாதம் பணிந்து..8(1)

பணிதல் – 8

தேன்மலரின் அண்ணன் திவாகரன் முன்பெல்லாம் நல்லவன் தான். பொறியியல் படிப்பினை நன்றாகப் படித்த பின்னர் சென்னையில் உள்ள ஒரு மென் பொருள் நிறுவனத்தில் நல்ல வேலைக்கும் சென்றான்.

ஆனால், அந்த வேலையில் ஆறு மாதங்களே நிலையாக இருந்தான். அதற்கடுத்து வேலைக்குச் சேர்ந்த கம்பெனியில் இரண்டு மாதங்கள் மட்டுமே நிலையாக இருந்தான்.

ஒரு கட்டத்தில் இதுவே வாடிக்கையாகி விட, இரண்டு ஆண்டுகளில் பத்து கம்பெனிகள் மாறி விட்டிருந்தான்.

தேன்மலர் அண்ணனின் குரங்குத் தாவலை கண்டு தாயிடம் “என்னமா? அண்ணா ஒரு வேலைல உருப்படியா நிக்க மாட்டேங்குறான். தாவிட்டே இருக்கான்” என கவலையாக கூற,

“அதெல்லாம் ஒன்னுமில்ல தேனு. நீ இதை எல்லாம் ஏன் யோசிக்கிற. எப்ப என்ன செய்யணும்னு அவனுக்கு தெரியும். அந்த வேலையில என்ன குறையோ? அதனால அடுத்தடுத்த வேலைக்கு மாறுறான்” என்று அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல் மகனை விட்டுக் கொடுக்காமல் பேசினார் ஞானமங்கை.

அதற்கடுத்து ஒரு புகழ் பெற்ற மென் பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவன் ஓராண்டு காலம் அதில் நீடித்து நிலைத்து விட, தேன்மலருக்கும் அண்ணனின் மீது சிறிது நம்பிக்கை வேர் துளிர் விட்டது.

அதே கம்பெனியில் ஆறு மாதங்கள் கழித்து ஊதிய உயர்வுடன் பிரமோஷனும் பெற்றிருந்தான் திவாகரன். சம்பளமும் லட்சத்தில் உயர்ந்து விட்டிருந்தது.

தேன்மலருக்கு அண்ணன் மீது நம்பிக்கை

வேர்கள் ஸ்திரம் பெற்றது என்றால் ஞானமங்கைக்கு சந்தோஷம் தாளவில்லை.

“பாத்தியாடி தேனு உன் அண்ணன் எப்படி முன்னேறி இருக்கான்னு” என்று பெருமை பட்டுக் கொண்டவர், உடனே அண்ணன்களிடம் சென்று மகனுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்று நின்றார்.

இன்பசேகரனோ “உன்னையும் உன் மகனையும் நம்பி எல்லாம் என்னால பொண்ணு பாத்து கட்டி வைக்க முடியாது மங்கை. ரெண்டு வருஷத்துல பத்து கம்பெனி மாறி இருக்கான். போதா குறைக்கு லட்சத்துல சம்பளம் வாங்குறான்னு நீ தான் சொல்ற. அப்படி வாங்குறவன் வீட்டுக்கு எதாவது பண்ணி இருக்கானா? சம்பளப் பணத்தை என்ன தான் பண்றான்?” என்று சூடான குரலில் கேட்டபோது,

“அது.. அவன் என்ன அண்ணே பண்ணிட போறான்…. சேத்து தான் வைப்பான்” என்றார் மங்கை மகன் மீது அபார நம்பிக்கையுடன்.

“சேத்து வைக்கட்டும்.. ஆனா, சொந்தத் தங்கச்சிக்கு கூடவா ஃபீஸ் கட்ட மாட்டான்? இன்னமும் நம்ம அப்பா உனக்குக் கொடுத்த அந்த கடை காம்ப்ளக்ஸ் வாடகைல தான உன் பொண்ணயே படிக்க வைக்கிற” என்றவர்,

“உன் மகன் போக்கு எனக்கு சரியா படல மங்கை. நீயும் அவ்வளவு சுதாரிப்பான ஆள் இல்ல. உங்க வீட்டுக்கு ஒரு பொண்ணை வாழ அனுப்பி வச்ச பாவம் என்னைச் சேர வேண்டாம். தயவு செஞ்சு கிளம்பிடு” என்று முடிவாகக் கூறியவர் அப்போதே ஒதுங்கிக் கொண்டார்.

அண்ணன் அளவிற்கு வார்த்தைகளை கொட்டவில்லை என்றாலும் இளவழகனும் தங்கையின் மேல் நம்பிக்கை இல்லாததால் ஒதுங்கிக் கொண்டார்.

ஞானமங்கைக்கு அண்ணன்களின் வார்த்தைகளில் கண்ணீர் கொட்டியது.

திருமணம் நடக்கும் முன்பு வரை சகோதரர்களுக்கு தங்கை மேல் பாசம் அன்பு அக்கறை என எல்லாம் இருந்தது தான். ஆனால், அவை எல்லாம் தங்கைக்கு திருமணமானதுன் காணாமல் போனது.

மங்கையின் கணவர் வரதன் தொழில் செய்கிறேன் என்று கூறி அவருக்கு சீராகக் கொடுத்திருந்த இரண்டு லட்ச ரூபாய் பணம் மற்றும் நூறு பவுன் நகைகளையும் வாங்கிச் சென்றார். அவைகளை யார் யாரையோ நம்பிக் கொடுத்து ஏமாந்து போய் இருந்தார்.

இத்தனைக்கும் மங்கைக்கு கணவனைப் பற்றி நன்கு தெரியும். அப்படி தெரிந்திருந்தும் எந்த நம்பிக்கையில் தாங்கள் சீராகக் கொடுத்த நகை பணத்தினை அவளுடைய கணவனிடம் கொடுத்தாள்… எல்லாமே வீணாகிப் போனதே.. என்று அப்போதே தங்கையின் மேல் கோபம் ஏற்பட்டது சகோதரர்கள் இருவருக்கும்.

அக்கோபம் அடுத்து வரதன் மங்கையை மிரட்டி அடித்து தாய் வீட்டிற்கு அனுப்பி பணம் வாங்கி வரச் சொன்னதும் இன்னும் பெருகி விட, “இப்படியே விட்டீங்கன்னா அவன் நம்ம சொத்தையே வித்து ஏமாந்த பின்ன தான் ஓய்வான். பேசாம வெட்டி விட்டர்லாம் ப்பா” என்று கைலாசநாதனிடம் கூறி இருந்தார் இன்பசேகரன்.

பெரியவரோ மகளை இப்படி ஒருவனிடம் கரை சேர்த்திருக்கிறோமே என்று குற்ற உணர்வில் மனம் உடைந்து போனார்.

மகன் சொன்னது போல் வெட்டி விடலாம் என்றாலும் இரண்டு பிள்ளைகளை அல்லவா பெற்றிருக்கிறாள்.. என்று பலவாறாக யோசித்தவர் இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தார்.

சொத்துக்களை பிரிப்பதென!

மூவருக்கும் சரி சமமாக தான் சொத்துக்களை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர் மருமகனின் குணம் அறிந்து மகன்களுக்கு பூர்வீக சொத்துக்களையும் தொழிலையும் அப்படியே பிரித்துக் கொடுத்தவர் மகளுக்கு தாரமங்கலத்தில் ஒரு இல்லமும், சேலம் பேருந்து நிலையம் அருகே இருந்த கடை காம்ப்ளக்ஸ்களை மட்டும் கொடுத்தார்.

வரதன் அதற்கு தாம் தூமென குதித்து சண்டையிட்ட போது “உங்களை நம்பி என்னால சொத்தை சரி சமமா பிரிக்க முடியல மாப்பிள்ளை. மன்னிச்சிடுங்க” என்று ஒரே வரியில்

பேச்சை முடித்து விட்டார்

தந்தை பிரித்துக் கொடுத்தாலும் அண்ணன் தம்பி இருவரும் தொழிலை பிரிக்கும் எண்ணத்தில் இல்லை. எனவே, இணைந்து செயல்பட்டனர். தங்கையை மட்டும் நெருங்க விட்டதில்லை.

தேன்மலர் எட்டாம் வகுப்புப் படிக்கும் போதே வரதன் மாரடைப்பால் இறந்து விட்டார். அதன் பின்னர் மங்கை அந்த கடைகளின் வாடகை பணத்தை வைத்துத் தான் வீட்டு செலவுகளை கவனித்து பிள்ளைகளையும் படிக்க வைத்தார்.

வரதன் இறந்த பின்னர் இளவழகன் கூட தங்கை மீது சற்று கோபம் குறைந்து கருணை காட்டி நன்றாகப் பேச ஆரம்பித்தார்.

ஆனால், இன்பசேகரன் முற்றும் முழுதாக தங்கையை, தங்கையின் பிள்ளைகளை ஒதுக்கி வைத்தார். இன்றளவும் அவருக்கு தங்கையின் குடும்பத்தை கண்டால் ஆகாது தான்!

கவிரத்னா மேல் மட்டும் இரக்கம் கொள்வார். ‘இப்படி ஒரு குடும்பத்தில் வந்து மாட்டிக் கொண்டாளே இந்தப் பெண்’ என்று!

ஆனால், அந்த இரக்கமும் ஒரு கட்டத்தில் திவாகரன் குடிக்கு அடிமையாகி விட்டதை அறிந்து பரிதாபமாக மாறி விட்டிருந்தது.

ஐடி கம்பெனியில் லட்சக் கணக்கில் சம்பாதித்த திவாகரனுக்கு நம்பிக்கையுடன் தங்களின் பெண்ணை கட்டிக் கொடுத்தனர் கவிரத்னாவின் பெற்றோர்.

அவளும் ‘ஐ.டி’ துறை தான் என்பதால் இருவரும் முதலில் சென்னையில் தனிக் குடித்தனம் தான் இருந்தனர். ஆனால், திருமணமான கொஞ்ச நாட்களிலேயே கணவனின் போக்கை கண்டு கொண்டாள் கவி.

சம்பளம் அக்கவுண்ட்டிற்கு வந்ததும் கணவன் முதல் வேளையாக நண்பர்களுடன் இணைந்து சீட்டாடி குடித்து சீரழிகிறான் என்பதைத் தெரிந்ததும் அதிர்ந்து போனாள்.

எப்படியாவது அவனை மாற்றலாம் என்று அனைத்து முயற்சியையும் எடுத்தவளுக்கு தோல்வியே மிஞ்சியது.

ஒரு கட்டத்தில் அவனின் மேலதிகாரியிடம் குடித்து விட்டு பிரச்சனைக்கே சென்று விட, பிறகென்ன? வேலையும் பறி போனது!

குடிக்கு அடிமையானவன் வேலை போனதும் மனைவியிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்ய, கவிரத்னாவால் அதற்கு மேல் கணவனை சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. அப்போது அவள் ஆறு மாத கர்ப்பிணி வேறு!

எனவே, பெற்றவர்களுக்கும் மாமியாருக்கும் விஷயத்தை சொல்லி விட்டாள். பெரியவர்கள் எல்லோரையும் வைத்து சிறிய பஞ்சயாத்தே செய்து விட்டனர்.

கவியை பெற்றவர்கள் விவாகரத்து செய்தே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்க, ஞானமங்கைக்கு கதி கலங்கிப் போய் விட்டது. கவி பெற்றோரின் காலிலே விழுந்து விட்டார்.

“உங்க பொண்ணு எங்க சொத்துங்க சம்மந்தி. என் பையனை நான் மாத்திடுவேன். என்னை நம்புங்க” என்று என்னென்னவோ கூறி கெஞ்சினார்.

கவியின் பெற்றோர் இறங்கி வராமல் மகளின் சம்மதம் வேண்டி நிற்க, கவிரத்னாவிற்கோ விவகாரத்து வாங்கும் எண்ணத்தை விட விரக்தி தான் மனதை வியாபித்திருந்தது.

விவாகரத்து வாங்கினால் மட்டும் அவள் வாழ்வில் நடந்தவை மாறி விடுமா? இல்லை வயிற்றில் இருக்கும் பிள்ளை அவனுடையதில்லை என்றாகி விடுமா?

எதுவுமே மாறப் போவதில்லை! ஆனால், இப்படி ஒரு குடிகாரனுடன் இணைந்து வாழும் வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்கும். அவ்வளவு தான்.

error: Content is protected !!
Scroll to Top