மலர் பாதம் பணிந்து..7(3)

இரவு உணவினை உண்டு விட்டு மொட்டை மாடிக்கு வந்திருந்தாள் தேன்மலர்.

வானத்தில் தெரிந்த நிலவினை வெறித்துக் கொண்டு நின்றிருந்தவளுக்கு மனதில் இன்னும் பாரம் குறையவில்லை. நேற்று காலையில் இருந்து ரஞ்சிதன் ஒரு நூறு முறை அழைப்பு விடுத்திருப்பான்!

அந்த அழைப்புகளை எல்லாம் புறக்கணிப்பதை மட்டுமே வேலையாக வைத்திருந்தாள் தேன்மலர்.

எதோ ஒரு சூழ்நிலை காரணமாக தான் அவன் தன்னிடம் அப்படி கேட்டான் என்று புரிந்தாலும் கிஞ்சித்தும் அதனை ஏற்க முடியவில்லை.

“லூசு… அவுங்க வீட்ல என்ன வேணும்னா பேசி இருக்கட்டுமே. அதுக்காக இப்படி வந்து கேட்பானாமா?” என கோபத்தில் முணுமுணுத்தவள் தன்னருகே கவிரத்னா வந்து நின்றதும் தான் சுதாரித்தாள்.

“அண்ணி…” என்றதும் “உன்னை கீழ தேடிட்டு இருந்தேன் தேனு. நீ என்னடான்னா இங்க வந்து நிக்கிற” என்ற கவி, “இந்தா உனக்குப் பால்” என்று கொண்டு வந்திருந்த பால் டம்ளரை நீட்டினாள்.

பாலினை வாங்கிக் கொண்டவள் “தேங்க்ஸ் அண்ணி” என்றபடி கைப்பிடி சுவரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

கவி கீழே செல்ல எத்தனிக்க “அண்ணி..ஒரு நிமிஷம்” என்று அவளை தடுத்த தேன்மலர்,

“உங்க கிட்ட பேசணும்” என்றதும் கவியும் அவளருகே வந்து அமர்ந்து கொண்டாள்.

“சொல்லு தேனு”

“அது வந்து அண்ணி…”

“ம்ம் சொல்லு..” என்று கவிரத்னா அவனை ஊக்க,

“அது.. கோகுல் தூங்கிட்டானா?” என்று தடுமாறியபடி கேட்டாள் தேன்மலர்.

அவள் கேள்வியில் புன்னகைத்த கவி “எப்பவோ தூங்கிட்டான் தேனு.. அவன் தூங்கின பின்ன தான நாம சாப்பிட்டோம்” என்றதும் அசடு வழிய அண்ணியைப் பார்த்தவளுக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

அவளின் அவஸ்தையை கண்ட கவி அவள் கையை பற்றிக் கொண்டு “ரொம்ப சிரமப் பட வேண்டாம் தேனு. சொல்ல முடியலன்னா விட்டுடு” என்று கூற,

“அப்படி எல்லாம் அண்ணி.. உங்க கிட்ட சொல்லாம என்ன பண்ண போறேன்” என்றவள், அன்று ரஞ்சிதன் வந்த போது நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னவள், இறுதியாக அவன் நூறு முறை அழைப்புப் படை எடுத்ததையும் கூறி,

“சரியான எருமை அண்ணி அவன். நானே கால் பண்றேன்னு சொல்லிட்டேன். விடாம கால் பண்ணிட்டே இருக்கான். அதான் சாய்ந்தரம் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்” என்றாள் கடுப்புடன்.

அவள் சொன்னதை கேட்டு சிரித்த கவி “அவனுக்கு அந்த எண்ணம் இல்ல தேனு. வீட்ல எதோ பேச்சு வார்த்தை போயிருக்கு. அதான் உன் கிட்ட இப்படி வந்து கேட்டிருக்கான்” என்றாள் ஆதரவான குரலில்.

“புரியுது அண்ணி. ஆனா, இந்த பேச்ச எதுக்காக எடுக்கணும். அவன் மனசு ஓரத்துல என்னை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இருக்குன்னு தான அர்த்தம்?” என்று ஆறாத குரலில் கேட்க,

“இல்ல தேனு. ரஞ்சித்கு அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தா இத்தனை நாள் உன் கிட்ட ஃப்ரெண்ட்டா மட்டும் இருந்திருக்க முடியாது. எதோ ஒரு சந்தர்ப்பத்தில உன்னை நெருங்கி அவனோட மனச சொல்லி இருப்பான். அவ்வளவு ஏன்.. வீட்ல கல்யாண பேச்சு எடுத்ததும் உன் மேல லவ் இருந்தா மறைக்காம சொல்லி இருப்பானே” என்று தெளிவாக அவளுக்குப் புரிய வைக்க முயன்றாள் கவிரத்னா.

“அவனுக்கு மனசு ஓரத்துல உன்னை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் எல்லாம் இல்ல தேனு. மனசு முழுக்க உன் மேல அளவுக்கு அதிகமான அக்கறையும் அன்பும் இருக்கு. அதனால தான் உன் கிட்ட வந்து இப்படி கேட்டிருக்கான். அவன் இடத்துல இருந்து இதைப் பாரு. உனக்கே புரியும்” என்றவள்,

“நாளைக்கு நீயே அவனுக்கு போன் பண்ணி தெளிவா பேசு. அவனே ஏன் இப்படி வந்து உன் கிட்ட பேசினான்னு சொல்லுவான். அதை விட்டுட்டு இப்படி மூஞ்சியை உம்முண்ணு வச்சிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்?” என்று கேட்க, தேன்மலரின் மனதில் இருந்த பாரம் அப்படியே கரைந்து போனது.

அவன் இடத்தில் இருந்து சிந்திக்கத் தானே வேண்டும் என்று யோசித்தவளுக்கு தன்னிடம் இப்படி கேட்டதனால் அவனுக்கும் வேதனை தான் உண்டாகி இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டாள்.

அண்ணியை கட்டிக் கொண்டவள் “தேங்க்ஸ் அண்ணி” என்று மனமார கூற,

“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ். வா கீழ போகலாம்” என்று கூற, “ம்ம்..” என்று தெளிந்த மனதோடு படிகளில் இறங்கியவளுக்கு கீழே அன்னையின் புலம்பல் குரல் கேட்டதும்,

“ஏன் அம்மா அப்ப இருந்து புலம்பிட்டே இருக்காங்க? என்னாச்சு அவுங்களுக்கு” என்று ஆயாசத்துடன் கேட்க,

பெரு மூச்சுடன் நாத்தனாரை பார்த்த கவி “இன்னும் உங்க அண்ணன் வீட்டுக்கு வரலையாம். அதான் புலம்பிட்டு இருக்காங்க” என்றாள்.

அவள் சொன்னதும் மெல்லிய திகைப்புடன் அண்ணியைக் கண்டவள் “அண்ணி..” என்று அழைக்க,

“ம்ம்” என்று மேலும் கீழும் தலை அசைத்த கவி, “அவர் எட்டு மணிக்கு மேல வராதப்பவே எனக்கு தெரியும் தேனு.. இன்னைக்கு உங்க அண்ணன் பழையபடி குடிச்சிட்டு தான் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கப் போறார்னு” என்றாள் வெறுமையான குரலில்.

தேன்மலர் ஆதரவாக அவள் தோள் தொட, “விடு தேனு.. நமக்கு இது தான் முன்னாடியே தெரியுமே? என்ன.. உங்க அம்மா தான் பாவம் அவுங்க புள்ள கோவிலுக்கு போய்ருக்காருன்னு நினைச்சிட்டு இருக்காங்க” என்றாள் மாமியாரை எண்ணி கவலையுடன்.

“அண்ணா எப்ப தான் திருந்துவான் அண்ணி..” என்று விரக்தியாக கேட்ட தேன்மலருக்கு அண்ணியை எண்ணி அதிகமாகக் கவலை ஏற்பட்டது.

அவள் வருந்துவதை கண்ட கவி “ஹே தேனு.. விடு. உங்க அண்ணாவை பத்தி தெரியாததா” என்றவள் அவளுடன் கீழே வர சரியாக திவாகரன் குடித்து விட்டு தள்ளாடிய படி வீட்டினுள் காலடி எடுத்து வைத்தான்.

ஞானமங்கை மகனின் தள்ளாட்டதை கண்டு “ஐயோ.. நல்லா இருந்த என் புள்ள மேல யார் கண்ணு பட்டுச்சோ தெரியலையே. மறுபடியும் குடிச்சிட்டு வந்து நிக்குறானே” என்று அழுது புலம்ப, திவாகரனும் “ஆ..மா மம்..மி” என்று போதையில் உளறினான்.

பெண்கள் இருவரும் பெரு மூச்சுடன் இருவரையும் பார்த்து ‘திருந்தவே மாட்டாங்க ரெண்டு பேரும்’ என்று விரக்தியாக எண்ணிக் கொண்டனர்.

error: Content is protected !!
Scroll to Top