பணிதல் – 7
ஏற்காடு..
கோடை வாழிட நகர் மற்றும் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டின் ‘பக்கோடா’ முனையில் நின்றிருந்தான் அமுதகீதன்!
அன்று கிருஷ்ணரூபிக்கு பள்ளி விடுமுறை என்பதால் அதிகாலையிலே தங்கையை அழைத்துக் கொண்டு இங்கு வந்திருந்தான்.
‘பகோடா’ முனையின் அருகே தான் அவர்களின் ஒரு ரிசார்ட் இருக்கிறது! கிருஷ்ணரூபிக்கு பயணம் என்றாலே சற்று ஒற்றுக் கொள்ளாது. ஆகையால் தான் அமுதன் இங்கு வேலை காரணமாக அடிக்கடி வரும்போதெல்லாம் அவள் வர மாட்டாள்.
அதுவும் ஏற்காட்டின் கொண்டை ஊசி வளைவுகளில் பயணித்து வருவதற்குள் தலை சுற்றி சோர்ந்து போவாள்.
இன்றும் அப்படியே ஆகி விட, அசதியில் உறங்குகிறேன் என்று கூறியவளை தனக்கென்று இருக்கும் பிரத்யேக ஷூட்’டில் அவளை ஓய்வெடுக்க சொல்லியவன், தான் மட்டும் இங்கே வந்து நின்றிருந்தான்.
சற்றே உயரமாகத் தெரிந்த ஆகாயங்களையும் அதைத் தொட்டு விடும் முனைப்பில் இருந்த மலை முகடுகளையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தவனின் மனதில் பல வித எண்ணங்கள் அலை மோதின.
எப்போதெல்லாம் மனம் ஒருநிலையில் இல்லாமல் அமைதியிழந்து அலைபாய்கிறதோ அப்போதெல்லாம் இங்கே வந்து நின்று எழில் நிறைந்த இயற்கை வளத்தினை வெறிப்பது அவனின் வழக்கம்.
இப்போதும் அவனின் மனம் அமைதியின்றி தான் தவித்துக் கொண்டிருந்தது. அதற்கு காரணுமும் இருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு தங்கையை அழைத்து சென்ற போது காரிற்குள் அவள் மௌனமாகவே வர,
“கிருஷ்ணா.. ஏன் டல்லா இருக்க?” என்று கேட்டான் காரணத்தை அறிந்து கொண்டே.
கண்ணீருடன் அண்ணனைப் பார்த்தவள், “ஏன் அண்ணா அம்மாவுக்கு என்னை பிடிக்கவே மாட்டேங்குது. நான்னா மட்டும் ஏன் எரிஞ்சு விழறாங்க. ஏன் எதாவது சொல்லி திட்டிட்டே இருக்காங்க?” என்றாள் மனமுடைந்து.
“கிருஷ்ணா..” என தங்கை அழுவது பொறுக்காமல் இடது கையால் அவளின் தலையை வருடிக் கொடுத்தவனுக்கும் இன்று அன்னையின் பேச்சை ஏற்க முடியவில்லை தான்.
அவனுக்கும் இந்தக் கேள்வி சிறு வயதில் இருந்திருக்கிறது.
ஏன் அன்னைக்கு தங்கையை பிடிக்கவில்லை? அவளை கண்டு கொள்வதே இல்லை? வளர வளர அவளை சாடிக் கொண்டே இருந்த அன்னை ஏன் அவளோடு ஒட்டவே மாட்டேன் என்று இருக்கிறார் என பலவிதமான கேள்விகள் அவனுள்ளும் இருந்தன.
ஆனால், அவன் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்து பக்குவமானதும் தந்தையிடம் சென்று மனதில் இருந்த அத்தனை கேள்விகளையும் கேட்டு விட்டான்.
அதற்கு பெரு மூச்சுடன் மகனைப் பார்த்து இன்பசேகரன் சொன்ன காரணம் இன்று வரை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று!
மூத்த பெண்கள் மூவருக்கும் வரன் பார்த்து திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில் தான், தான் மூன்றாம் முறையாக கருவுற்று இருக்கும் விஷயமே வசுந்தலாவிற்குத் தெரிய வந்தது. தெரிந்ததும் மிகவும் அதிர்ந்து தான் போனார்!
வசுந்தலாவிற்கு மூன்றாவது முறையாக கற்பம் தரித்ததில் எல்லாம் கவலை இல்லை. ஆனால், முதல் கற்பத்திற்கும் மூன்றாம் கற்பத்திற்கும் இடையே இருந்த கால இடைவெளி தான் அவரின் கவலையே!
கிட்டத்தட்ட இருபத்தொரு ஆண்டுகள் வித்தியாசம். மூத்த பெண்களுக்கும் மகனுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் இருக்கும் வித்தியாசத்தையே அடிக்கடி கணவனிடம் சொல்லிப் புலம்புவார்.
“ஒன்பது வருஷம் கழிச்சா ஆம்பளப் பிள்ளை பாக்கியம் கிடைக்கணும். ஒரு நாலு வருஷம் முன்ன கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் தான” என்று.
ஒன்பது ஆண்டு கால இடைவெளியையே ஏற்க முடியாதவரால் இருபத்தொரு ஆண்டுகள் வித்தியாசத்தை ஏற்க முடியுமா?
ம்ஹும்!
நிச்சயம் இந்தக் கருவை சுமக்க முடியாது என்று உறுதியாக இருந்தவர் கணவரிடம் சென்று கூறிய போது இன்பசேகரனுக்கும் சங்கடமாகத் தான் இருந்தது.
“என்னால இதை சுமக்க முடியாதுங்க. பொண்ணுங்க மூணு பேருக்கும் அடுத்த மாசம் கல்யாணமே நடக்க போகுது. இப்ப இது தேவையா?” என்றவர்,
“களச்சிடலாம்” என்று முடிவாகக் கூற, இன்பசேகரனுக்கும் ஆரம்பத்தில் அதுவே சரி என்று பட்டது.
“சரி வசு. ஆனா, இப்ப எதுவும் பண்ண வேண்டாம். கல்யாணம் முடியட்டும். அப்புறம் பாத்துக்கலாம்” என்று மனைவியிடம் கூற,
“என்ன விளையாடுறீங்களா..? கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள வளந்தடுச்சுன்னா..” என்று கோபமாகக் கேட்டார் வசுந்தலா.
“அதெல்லாம் ஒன்னும் வளராது வசு! இப்ப தான் நீயே கண்டு பிடிச்சு சொல்லி இருக்க. பொண்ணுங்க கல்யாணம் முடியட்டும். அப்புறம் பாத்துக்கலாம். இப்பவே எதாவது பண்ணப் போய் உனக்கு எதுவும் முடியாம வந்துட்டா சம்மந்தி வீடுகளுக்கு என்ன பதில் சொல்றது?” என்றவர்,
“கல்யாண வேலை வேற ஏகப் பட்டது இருக்கு வசு. சொன்னா புரிஞ்சிக்க. கல்யாணம் முடிஞ்சதும் பாத்துக்கலாம்” என்று விட்டார் இன்பசேகரன்.
வசுந்தலாவும் கணவர் கூறியதற்கு செவி சாய்த்து அமைதியாகி விட்டார். ஆனால், அவர் இந்த விஷயத்தை அறிந்த போதே மூன்று மாதங்கள் ஆகி இருந்தது. கருவும் சற்றே வளர்ந்திருந்தது.
மூன்று மாதங்களாக தனக்கு மாத விடாய் நின்று விட்டது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், கருவுற்று இருப்போம் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.
பெண்களின் திருமணம் நெருங்க நெருங்க அவரின் வயிறு சற்றே மேடிடத் துவங்கி இருக்க, உடல் மாற்றங்களும் அவரை சோர்வுற செய்ய, விஷேச வீட்டிற்கு வந்த உறவினர்கள் வசுந்தலா கருவுற்று இருந்த விஷயத்தை கண்டு கொண்டனர்.
கண்டு கொண்டவர்கள் சும்மாவா இருப்பார்கள்? கேலி, கிண்டல், ஜாடை பேச்சுக்கள் என ஒரு வழி ஆக்கி விட்டனர்.
விஷயம் பெண்கள் மூவருக்கும் தெரிய வர, மூவருமே அதிர்ந்து அன்னை தந்தையை காணவே சங்கடப்பட்டுப் போயினர்!
சம்மந்தி வீட்டாட்களும் “பொண்ணுங்க கல்யாணம் பண்ணி பிள்ள பெத்து போடுற நிலமையில இருக்கப்ப நீங்க புள்ள உண்டாகி இருக்கீங்களே சம்மந்தி!” என்று சங்கடத்துடன் பேசி விட்டனர்.
வசுந்தலாவும் இன்பசேகரனும் உடைந்து போனார்கள். அதுவும் வசுந்தலா கணவனின் சட்டையை பற்றி அழுது தீர்த்து விட்டார்.
“அப்பவே சொன்னேன் தான… களைச்சிடலாம்னு. கேட்டீங்களா?” என்று அழுதே கரைந்தார்.
எல்லோரும் ஆளுக்கொரு விதமாக பேசி இருவரையும் ஒரு வழி ஆக்கி இருக்க, இதில் பெரும் அளவில் சந்தோஷப் பட்டது என்னவோ அமுதகீதன் தான்!
அவனுக்கு அப்போது பன்னிரெண்டு வயது! உறவினர்கள் கேலி கிண்டல் செய்து பேசியவை எல்லாம் அந்த வயதில் புரியவில்லை என்றாலும், “காலம் போன பின்ன உங்க அம்மா உனக்கு ஒரு குட்டிப் பாப்பாவ பெத்துத் தர இருக்காடா..” என்று கிண்டலாகவே சொன்னார்கள்.
அதிலிருந்த நக்கலை புரிந்த கொள்ளும் பக்குவம் அப்போது அமுதகீதனுக்கு இல்லை. தனக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறக்கப் போகிறது என்று மட்டும் அறிந்தவன் துள்ளி குதித்தான் என்று தான் சொல்ல வேண்டும்!
நேராக தந்தையிடம் சென்று அவரை கட்டிக் கொண்டவன் “நம்ம வீட்டுக்கு குட்டி பாப்பா வரப் போகுதா ப்பா.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நான் பாப்பாவை பத்திரமா பாத்துக்குவேன். நானே குளிக்க வைப்பேன். தூங்க வைப்பேன். என் கூட ஸ்கூல் கூட்டி போவேன்” என வரிசையாக சொல்லிக் கொண்டே போனவனின் குரலில் அத்தனை உற்சாகம்!
சங்கடத்தில் அமர்ந்திருந்த இன்பசேகரனுக்கோ மகனின் சந்தோஷத்தில் மனம் சற்று அமைதி அடைந்திருந்தது.
தன்னிடம் இருக்கும் உற்சாகம் வீட்டில் வேறு யாரிடமும் இல்லாததை உணர்ந்த அமுதன் தந்தையிடம் “ஏன் ப்பா நீங்க யாருமே சந்தோஷமா இல்ல. பாப்பா வரப் போறதை நினைச்சு நீங்க சிரிக்கவே இல்லையே. அக்காங்க மூணு பேரும் கூட உம்முன்னு தான் இருக்காங்க. அம்மா அழுதுட்டே இருக்காங்க” என்றவன்,
“ஏன் ப்பா… உங்க யாருக்கும் பாப்பாவை பிடிக்காதா?” என்று தந்தையிடம் சோகமாக கேட்க, இன்பசேரனுக்கு உருகிப் போனது.
“அப்படி எல்லாம் இல்ல அமுதா. வரப் போற பாப்பாவுக்கும் உங்களுக்கும் ரொம்ப வருஷம் வயசு வித்தியாசம் வரும். அதை நினைச்சு தான் அம்மா அழறா” என்றார் அவனுக்குப் புரியும் வகையில்.
“வயசு வித்தியாசம்னா என்ன ப்பா?” என்றவன் தாடையில் கை வைத்து தானே யோசித்து புரிந்து கொண்டு,
“பாப்பா நம்ம பாப்பா தான! அக்காங்களை மாதிரி என்னை மாதிரி பாப்பாவும் உங்களுக்கு குழந்தை தான. நம்ம பாப்பாவை நாம தான பாத்துக்கப் போறோம். எத்தனை வயசு வித்தியாசம் இருந்தாலும் நான் பாப்பாவை பத்திரமா பாத்துக்குவேன் ப்பா” என்றான் நெஞ்சில் கை வைத்து உண்மையான அன்புடன்.
கலங்கி அமர்ந்திருந்த மனிதருக்கு மகனின் வார்த்தைகளைக் கேட்டு புல்லரித்தது.