மலர் பாதம் பணிந்து..6(2)

அன்னையிடம் எதையும் கூறாமல் கத்தி விட்டு வந்திருந்தாலும் தேன்மலருக்கு இரண்டு நாட்களாக மனம் அமைதி இழந்து போய் இருந்தது.

காரணம்..

அன்று ரஞ்சிதன் பேசியவை தான் மீண்டும் மீண்டும் செவிக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

அன்று…

“என்னடா? உன் கல்யாணத்தை பத்தி கேட்டா என் கல்யாணத்தை பத்தி நீ கேக்குற!” என்று தேன்மலர் கேட்டதும்,

“எல்லாம் காரணமா தான் தேனு” என்றவன் பலத்த யோசனைக்கு பின்னர் அவளின் முகத்தை நேராகப் பார்த்து,

“நான் சின்ன வயசுல சொன்னதை பத்தி நீ என்ன நினைக்கிற?” என்று தடுமாறாத குரலில் கேட்டான்.

தேன்மலருக்கு அவன் எதை நினைவூட்ட முயல்கிறான் என்று புரிய வரவே, அவளின் முகத்தில் பெரும் அமைதி நிலவியது.

“சொல்லு தேனு..”

“சின்ன வயசுல நீ என் கிட்ட ஏகப் பட்ட விஷயம் சொல்லிருக்க ரஞ்சி. எதைக் கேக்குற?”

“அதான் தேனு.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேனே…”

உணர்வற்ற முகத்துடன் அவனைப் பார்த்தவள், “அதுக்கு நான் அப்பவே உன் கிட்ட பதில் சொல்லிட்டதா ஞாபகம்!” என்றாள் கடினமான குரலில்.

“இ..இல்ல தேனு.. உனக்கு அதுல மாற்றம் இல்லையா?”

அவனை கோபமாக பார்த்தவள் “ஓ.. அப்ப சாருக்கு அதுல மாற்றம் இருக்கோ!” என்று கேட்க,

“அப்படி இல்ல தேனு… உன்னோட எண்ணத்தை தெரிஞ்சுக்கணுமேன்னு தான் கேக்குறேன்”

“என்னடா என்னோட எண்ணம்!!” என்று கத்தியவள்,

“அன்னைக்கு நான் உன் கிட்ட என்ன சொன்னேனோ அதே தான் இப்பவும் சொல்றேன். நம்ம குடும்பத்துல யாரு கூடவும் எங்களுக்கு நல்ல உறவு இல்ல. எங்களை யாரும் நல்ல உறவா ஏத்துக்க தயாரில்ல. நீ ஒருத்தன் தான் என்னை மதிச்சு வந்து நல்லா பேசின. கடைசி வரைக்கும் உன்னோட உறவாவது நிலைக்கணும்னு நினைக்கிறேன். அதனால நமக்குள்ள காதல் கல்யாணம் இதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ரஞ்சி. நல்ல பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்ஸா இருப்போம்” அன்று கூறிய அதே விஷயத்தை இன்றும் தெளிவாக.. மிகத் தெளிவாக அவனின் கண்களைப் பார்த்துக் கூறினாள் தேன்மலர்.

ரஞ்சிதனுக்கு கண்கள் பணித்து விட்டன.

“தேனு..”

“எதுவும் பேசாத ரஞ்சி” என்று கோபமாக கை அமர்த்தி தடுத்தவள்,

“இத்தனை வருஷமும் உனக்கு இந்த எண்ணம் இருந்திருக்கு. அதான் என் கிட்ட இன்னைக்கு இப்படி கேட்டிருக்க” என்று ஆதங்கம் நிறைந்த குரலில் பேசியவளிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.

“அப்படி இல்ல தேனடை..”

“உன்னை பேச வேண்டாம்னு சொன்னேன்..” என்றவள் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு,

“அன்னைக்கு நான் சின்ன பொண்ணா இருந்தாலும் ரொம்ப மெச்சூர்ட்டா உன் கிட்ட பேசினேன்னு நீ ஒரு தடவ என் கிட்ட சொன்ன. அந்த மெச்சூர்ட்கு காரணம் நம்ம ஃபேமிலி தான் ரஞ்சி. என் அம்மா.. அண்ணா..

இன்பா மாமா.. அவுங்க பையன்.. உங்க அம்மா இப்படி எல்லாருமே சேர்ந்து சின்ன வயசுலயே வாழ்க்கைன்னா என்ன ஒதுக்கப் படுறதுன்னா என்னன்னு புரிய வச்சாங்க. அதான் நீ என் கிட்ட வந்து அப்படி கேட்ட போது நம்ம ஃபேமிலில இவன் ஒருத்தவனாவது நம்ம கூட கடைசி வரைக்கும் ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்ல இருக்கணும்னு நினைச்சேன்” என்றவள் சிறிது நொடிகள் அமைதிக்குப் பின்,

“நீ நினைக்கலாம். நாம கல்யாணம் பண்ணாலும் கடைசி வரைக்கும் ஒன்னா இருப்போம்லன்னு. கல்யாணம் பண்ணா ஒன்னா தான் இருப்போம்! ஆனா அதுக்கு அர்த்தமே இருக்காது. சொல்லப் போனா நிம்மதி பறி போய்டும் ரஞ்சி. என்னை பேசியே உங்க அம்மா குத்திக் கிழிச்சிடுவாங்க. ஒரு வாய் சோறு கூட உள்ள இறங்காது. அப்புறம் இன்பா மாமா.. அவுங்க பொண்ணுங்க.. பையன்.. இப்படி எல்லாரு வாய்லையும் அரை படுவேன். எனக்கு இதெல்லாம் நீ கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டியே.. அன்னைக்கே தெரியும்! கூடவே, மத்தவங்க மாதிரி நீ இல்லேன்னு புரிஞ்சிகிட்டேன். அதனால தான் காலம் முழுக்க என் குடும்பத்துல ஒருத்தனாவது என் கூட நிக்கணும்னு நினைச்சு உன் கிட்ட ஃப்ரெண்ட்ஸ்சா இருப்போம்னு சொன்னேன்!” என்றதும் ரஞ்சிதன் கண்ணீர் இமை மீறி இருந்தது.

“தேனடை…” என்றவன் அவளின் வலக் கரத்தினை பற்ற, பட்டென்று அவன் கையை உதறியவள்,

“அன்னைக்கு இதைத் தவிர்த்து நான் முக்கியமா உன் கிட்ட ஒன்னு சொன்னேன்.. ஞாபகம் இருக்கா ரஞ்சி?” என்று தீர்க்கமான குரலில் கேட்டாள்.

“ஹே ஞாபகம் இருக்கு தேனுமா..” என்றவனுக்கு மனம் அடித்துக் கொண்டது. அவளிடம் தான் இப்படி கேட்டிருக்கவே கூடாது என்று நூறாவது முறையாக தன்னையே நிந்தித்துக் கொண்டவன்,

“தேனு.. நான்..” என்று அவளிடம் விளக்க முயல,

“ஞாபகம் இருந்திருந்தா இன்னைக்கு இப்படி என் கிட்ட பேசி இருக்க மாட்ட ரஞ்சி!” என்றாள் கண்ணீருடன்.

“ஹே சாரி தேனு. நான்.. ஐயோ.. பிளீஸ் அழாத”

“உனக்கு ஞாபகம் இல்ல தான. நான் மறுபடியும் ஞாபகப் படுத்துறேன்” என்றவள் கண்களை துடைத்துக் கொண்டபடி,

“இனி என்னைக்கும் நீங்க என் கிட்ட வந்து இப்படி கேட்கக் கூடாது ரஞ்சி அத்தான். நாம நல்ல ஃப்ரெண்ட்ஸ்சா மட்டும் தான் இருக்கணும். அதை மீறி நீங்க காதல் கல்யாணம்ன்னு சொன்னீங்கன்னா அப்புறம் உங்க கூட நான் பேசவே மாட்டேன் அத்தான்!” அன்று போலவே இன்றும்ஒரு வார்த்தை கூட மாறாமல் உணர்ச்சி வசமாக கூறினாள்.

“தேனு..” என்றவனுக்கும் குரல் கலங்கி இருக்க,

“இதுக்கு நீ என்ன பதில் சொன்னேன்னு ஞாபகம் இருக்கா ரஞ்சி?” என்று தேன்மலர் கேட்டதும் அவனால் தாங்க முடியவில்லை.

“அதையும் நானே சொல்றேன்..” என்றவள்,

“அதான் கடைசி வரைக்கும் ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிட்டியே.. இன்னும் என்ன அத்தான்.. பொத்தான்னுட்டு.. டேய் ரஞ்சித்னு உரிமையா கூப்பிடு தேனடை”ன்னு சொன்ன!” என்றவள் அவனைப் பார்க்கப் பிரியப்படமால் முகத்தை திருப்பிக் கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

இன்று திருமணத்தை பற்றி பேச்சை எடுத்தவன் தங்களின் அழகான நட்பை அவமதித்து விட்டதாகவே தோன்றியது தேன்மலருக்கு.

“தேனடை…”

“கிளம்பு!” என்றாள் ஒற்றை வார்த்தையாக.

“தேனு.. சாரி தேனு. நான் சொல்றத கொஞ்சம் கேளேன்..!”

“எதுவும் சொல்ல வேணாம் ரஞ்சி. கிளம்பு” என்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க, சிறு பிள்ளை போல் கண்கள் முழுக்க கண்ணீருடன் நின்றிருந்தவனை இவளால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

அவன் ஒன்றும் இதே எண்ணத்துடன் இத்தனை நாட்கள் தன்னோடு பழகி இருக்கவில்லை என்று அவளுக்குத் தெரியும். இன்று சந்தர்ப்ப சூழ்நிலையால் தன்னிடம் வந்து இப்படி உளறி இருக்கிறான் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், ஏற்கத் தான் முடியவில்லை.

அதெப்படி தன்னைப் பற்றி அறிந்தும் இப்படி வந்து கேட்கிறான் என்று ஆதங்கமும் கோபமும் தான் உண்டானது.

“இப்ப இதைப் பத்திப் பேசினா உனக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம் ரஞ்சி. கிளம்பு” என்றதும், அவன் இன்னும் அழுது கொண்டே அவளைப் பார்த்தான்.

“எனக்கு உன்னைப் புரியுது ரஞ்சி. ஆனா, டைஜெஸ்ட் பண்ணிக்க முடியல” என்றவள்,

“இப்போ கிளம்பு. பத்திரமா ஊர் போய் சேரு. நானா கால் பண்ற வரைக்கும் நீ எனக்கு கால் பண்ணாத” என்று கூறி விட, ரஞ்சிதனுக்கும் அவள் மனம் புரிந்தது.

“சாரி தேனடை!” என்றவன் வாசல் வரை சென்று விட்டான்.

பின் திரும்பி அவளைப் பார்த்து “உன் ‘கால்’காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன் தேனடை..” என்று கமறிய குரலில் கூறி விட்டு கிளம்பி விட்டான்.

இதோ இரண்டு நாட்கள் ஆகி விட்டன. அவளாக இன்னும் ரஞ்சிதனுக்கு அழைக்கவில்லை. அவனும் தேனுவின் வார்த்தைக்கு மதிப்பளித்து இப்போது வரை அழைப்பு விடுத்திருக்கவில்லை.

எல்லாவற்றையும் யோசித்து அலுவலகம் வந்து சேர்ந்தவள், ஸ்கூட்டியை பார்க் செய்யும் போது அலைபேசி சிணுங்கவும் யாரென்று எடுத்துப் பார்த்தாள்.

‘ரஞ்சி’ என்ற பெயரைக் கண்டதும் “எருமைக்கு பொறுமையே கிடையாது! கூப்பிடாதன்னு சொல்லியும் கூப்பிடுறான் பாரு!” என பல்லைக் கடித்தவள் அழைப்பை துண்டித்து விட்டு அலுவலகத்திற்குள் சென்றாள்.

error: Content is protected !!
Scroll to Top