பணிதல் – 6
“அடியே தேனு. நில்லுடி. நான் கேட்டுட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு போற” என்று வேலைக்கு கிளம்பவென வாசல் வரை வந்து விட்ட மகளை நிறுத்தி எரிச்சலுடன் இரைந்தார் ஞானமங்கை.
“சொல்லுமா.. என்ன கேட்கணும்” என்று கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி நின்று விட்டாள் தேன்மலரும்.
“என்ன கேட்கணுமா? ரெண்டு நாளா நான் கேட்காததையா இப்ப கேட்கப் போறேன்? உனக்குத் தெரியாதா..” என்று மங்கை மகளை முறைக்க,
“அதே தான்மா நானும் சொல்றேன். ரெண்டு நாளா நான் சொல்லாததையா இப்ப புதுசா சொல்லப் போறேன்? உனக்குப் புரியாதா” என்றாள் எரிச்சலுடன்.
“தேனு.. கோபத்தை உண்டாக்காத. ஒழுங்கா அன்னைக்கு மாப்பிள்ளை என்ன பேசிட்டு போனாருன்னு சொல்லிடு” என்று முடிவுடன் கேட்டார் மங்கை.
“நானும் அதையே தான்மா சொல்றேன். சும்மா அவன் என்ன சொன்னான்.. என்ன சொன்னான்னு கேட்டு என் உயிரை எடுக்காத. ‘நைட்டு ஊருக்கு கிளம்பப் போறேன். அதான் உன்னை பாத்துட்டு போகலாம்னு வந்தேன்’னு சொன்னான். அதைத் தவிர்த்து வெட்டியா வழக்கம் போல பேசிட்டு இருந்தோமே தவிற நீ நினைக்கிற மாதிரி அவன் எதுவும் பேசவே இல்ல! போதுமா!!!” என பட்டென்று இரு கை கூப்பி கும்பிடு போட்டவள்,
“ஆளை விடு! இதுக்கு மேல இதைப் பத்தி கேட்டேன்னா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்று கத்தியபடி ஸ்கூட்டியை உயிர்ப்பித்து கிளம்பி விட்டாள்.
செல்லும் மகளை சந்தேகமாகவே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் மங்கை!
‘அதெப்படி பேசாம போயிருப்பார்? கண்டிப்பா கல்யாண விஷயம் பத்தி எதாவது பேசி இருக்கணுமே! விஷேச வீட்லயே ரஞ்சித்கு கல்யாணம் பேசப் போறதா கமலம் அண்ணி சொன்னாங்கன்னு எனக்கு காத்து வாக்குல செய்தி வந்திடுச்சே…’ என்று ஒற்றை விரலால் தாடையில் தட்டிக் கொண்டு யோசித்தவர்,
“தேனு சொல்ற மாதிரி ஒரு வேளை ரஞ்சித் தம்பி இவ கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கவே இல்லையா? அப்ப நம்ம பொண்ணு மேல அவருக்கு பிரியமே கிடையாதோ? இல்லேன்னா ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமே இல்லையா?’ என்று பலவாறாக யோசித்தவர்,
‘அப்புறம் எப்படி இவ அவரை டா போட்டு சொல்றதும்.. அவர் இவளை தேனடைன்னு கூப்பிடுறதும்.. ஒண்ணுமே புரியலயே!’ என மேலும் குழம்பியவருக்கு இரண்டு நாட்களாக மண்டை வெடிக்காத குறை தான்.
ரஞ்சிதன் வந்து பேசிவிட்டு சென்றதில் இருந்து தேன்மலரிடம் பல விதமாக கேட்டு விட்டார்.
ஒரு கட்டத்தில் “அவருக்கு உன்னைப் பிடிக்கும் தானடி. கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டிருப்பார் தான? ரெண்டு பேரும் விரும்புறீங்கல்ல” என்று வெளிப்படையாகவே மங்கை கேட்டு விட, சலனமற்ற முகத்துடன் அன்னையை பார்த்தவள்,
“விரும்புறோம்னு நாங்க சொன்னோமா?” என்றாள் பல்லைக் கடித்துக்கொண்டு! குரலில் அப்படி ஒரு இறுக்கம் தெரிந்தது.
“உன் எண்ணம் என்னைக்கும் நிறைவேறாதுமா. எங்களுக்குள்ள அப்படி எந்த எண்ணமும் இல்ல!” என்று சொன்னாளே தவிற அவன் என்ன சொன்னான் என்பதை கூற மறுத்தாள்.
அது தான் மங்கைக்கு மண்டை குடைச்சலை கொடுத்தது!
இப்போது மகள் கத்தி விட்டு செல்வதைக் கண்டால் இருவருக்கும் மத்தியில் எதுவும் இல்லையோ என்று தோன்ற, நெஞ்சம் பதறியது மங்கைக்கு.
‘ஐயோ.. இப்ப என்ன பண்றது? தேனுவ குடும்பத்துக்குள்ளயே கட்டிக் கொடுக்கணும்னு நினைச்சிட்டு இருக்கேனே.. ரஞ்சித் மாப்பிள்ளையை தான மலை போல நம்பி இருந்தேன்.. மாப்பிள்ளையையும் வீட்ல கல்யாண பேச்சு எடுத்த அப்புறமும் இவ கிட்ட எதுவும் பேசலேன்னா.. ஈஸ்வரா.. அப்போ என் மக கதி என்ன? அவளுக்கு எங்க போய் நான் மாப்பிள்ளை தேடுவேன்!” என்று புலம்பத் தொடங்கி விட்டார்.
வாசலிலே நின்று புலம்பிக் கொண்டிருக்கும் மாமியாரின் அருகே வந்த கவிரத்னா “என்ன அத்த? என்னமோ நீங்களே பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்க,
யாரிடம் சென்று புலம்புவது என்று புரியாமல் இருந்தவர் மருமகள் வந்ததும் அவளிடமே பேசி விடலாம் என முடிவு செய்து, “கவி.. உன் கிட்ட பேசணும். உள்ள வா” என்று கைப்பற்றி அவளை உள்ளே அழைத்து வந்தார்.
அவரின் பரபரப்பில் மெல்ல திகைத்த கவி “என்னத்த?” என்று கேட்க, சோஃபாவில் அவளை அமர வைத்தவர் தானும் அமர்ந்து கொண்டு “கவி.. என் கண்ணுல்ல.. அத்த கேட்டா ஒரு உண்மையை சொல்லுவியா” என்று சின்ன பிள்ளை போல் கேட்டார்.
அவரின் முக பாவனையில் சிரிப்பு வந்தாலும் “சொல்லுவேனே.. கேளுங்க அத்த” என்றாள் கவிரத்னா சாதாரணமாகவே.
“அது வந்து கவி.. நம்ம ரஞ்சித் மாப்பிள்ளைக்கு தேனுவுக்கும் இஷ்டம் தான” என்று மெல்லிய குரலில் கேட்க,
“இஷ்டம்னா…” என்று ஒற்றை புருவம் உயர்த்தி மாமியாரை ஒரு மார்க்காமாய் பார்த்தாள் கவி.
“இஷ்டம்னா.. அதான் கவி…” என்றவர் அவள் காதருகே சென்று “லவ்வு…” என்று கூற, கவிரத்னா கரத்தினால் வாயை மூடிக் கொண்டு மாமியாரை பார்த்தாள்.
“கவி… அப்படி எல்லாம் பாக்காதடி. நான் என்ன சொல்லிட்டேன்” என்றவர் திறுதிறுவென விழித்தபடி கேட்க,
“நீங்க என்ன சொல்லல…” என்ற கவி, விளையாட்டை கை விட்டு அவரிடம் பேச எண்ணினாள்.
அவளுக்கும் இந்த இரண்டு நாட்களாக மாமியார் குட்டி போட்ட பூனை போல் தேன்மலர் பின்னே சுற்றுவது தெரியாமல் இல்லை.
தேன்மலர் வாயைத் திறக்காததை வைத்தே
நிச்சயம் ரஞ்சிதன் என்னவோ பேசி இருக்கிறான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டாள் கவிரத்னா.
ஆனால் இப்போது வரை தேனுவிடம் என்னவென அவள் கேட்கவில்லை. நேரம் வரும் போது அவளே தன்னிடம் சொல்வாள் என்று கவிக்குத் தெரியும். அப்படி அவள் சொல்லாமல் விட்டாலும் கவியும் வருந்த மாட்டாள்.
தேன்மலரும் மனதை பாதித்த விஷயங்களை இதுவரை அண்ணியிடம் பகிராமல் இருந்ததில்லை. நிச்சயம் கூறுவாள். ஆனால், அவளுக்கான நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டி தான் இரண்டு நாட்கள் அமைதியாகவே இருக்கிறாள். இது இருவருக்கும் இடையே உள்ள நல்ல புரிதலின் வெளிப்பாடு!
ஆனால், மங்கைக்கு இந்தப் புரிதல் எல்லாம் இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ரீதியில் தான் இருக்கும் அவரின் செயல்களும் பேச்சுகளும்.
“அத்த.. நான் ஒன்னை மட்டும் உங்க கிட்ட தெளிவா சொல்லிக்கிறேன். நீங்க நினைக்கிற மாதிரி அவுங்க ரெண்டு பேருக்குள்ள லவ் எல்லாம் இல்ல. நல்ல நட்போட தான் பழகுறாங்க. அதனால அவுங்க கிட்ட போய் இப்படி எல்லாம் கேட்காதீங்க” என்றதும் மங்கையின் முகம் கூம்பி விட்டது.
“என்ன கவி இப்படி சொல்லிட்ட” என்று உள்ளே சென்று விட்ட குரலில் கேட்டார்.
“ஆமா அத்த. நான் நிஜமா தான் சொல்றேன். ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்” என்றவள்,
“நீங்க நினைக்கிற மாதிரி ஒரு நாளும் நடக்காது அத்த. கண்டிப்பா தேனு ஒத்துக்க மாட்டா. ரஞ்சித்தும் அந்த மாதிரி எண்ணத்துல இல்ல. இருந்திருந்தா இத்தனை நாள்ல ரெண்டு பேரும் அதை மறைச்சு வச்சிருந்திருக்க முடியாது. அதுவும் ரஞ்சித் ஊருக்கு வரும் போதெல்லாம் நம்ம தேனுவ வந்து பாத்திட்டு போவான். ஆனா, ஒரு நாளாவது அவளை தனியா வெளிய கூட்டிட்டு போய் இருக்கானா? இல்ல தனியா தான் அவ கிட்ட பேசி இருக்கானா? நம்ம இருக்கும் போது தான பேசுவான்” என்றவள்,
“நீங்க தான் இந்த தடவ அவன் வந்திருக்கும் போது ரெண்டு பேரும் தனியா பேசட்டும்னு என்னென்னமோ கற்பனை பண்ணிட்டு இருந்தீங்க. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல அத்த” என்று மாமியாருக்கு புரிய வைக்க முயன்றாள் கவி.
மங்கையோ கண்ணீருடன் “இவளுக்கு மாப்பிள்ளையே தேடத் தேவையில்லை. அண்ணன் மகனையே கல்யாணம் பண்ணிக்க போறா.. என் மக வாழ்க்கைக்கு எந்த ஒரு தடங்களும் இல்ல.. அப்படி இப்படின்னு கிறுக்கி மாதிரி நம்பிட்டு இருந்தேன் கவி…” என்றவர்,
முந்தானையில் மூக்கை உறிஞ்சிக் கொண்டே “ரெண்டு பேரும் நல்ல ஜோடி தான. கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா தான இருக்கும். நான் வேணும்னா கமலம் அண்ணி கிட்ட பேசிப் பாக்கவா” என்றதும் கவிக்கு கோபம் வந்தது.
இத்தனை தூரம் சொல்லியும் கமலத்திடம் சென்று கேட்கவா என்றல்லவா கேட்கிறார்!
“அத்த.. கமலம் பெரியம்மா ஒன்னும் அவ்வளவு நல்லவங்க இல்ல. அது உங்களுக்கே தெரியும். பூசி மொழுகின மாதிரி பேசினாலும் அவுங்களுக்கும் நம்ம குடும்பத்து மேல நல்ல அபிப்ராயம் கிடையாது” என்றவள்,
“அவுங்க கிட்ட நம்ம தேனுவை மருமகளா அனுப்புறதுக்கு அவளை நம்மளோடவே வச்சிருக்கலாம்” என்று பட்டென்று சொல்லி விட, மருமகளை பாவமாய் பார்த்தார் மங்கை.
“என்ன கவி நீ? முன்ன நம்ம திவா கொஞ்சம் அப்படி இப்படி இருந்துட்டான். அதனால யாருக்கும் நம்ம மேல நல்ல அபிப்ராயம் இல்ல. இப்ப தான் அவன் மாறிட்டான்ல. அதுக்கே கமலம் அண்ணி தான உதவி பண்ணாங்க” என்றதும் கவிரத்னாவிற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
‘உங்க கமலம் அண்ணியே டிவில பாத்ததை வச்சு சும்மா அள்ளி விட்ருக்காங்க. அதை நம்பி நீங்களும் உங்க புள்ளையை கூட்டிட்டு போய்ட்டீங்க. உங்க புள்ள என்னைக்கு காவி அவதாரத்தை தூக்கிப் போட்டு குடிமகன் அவதாரத்தை எடுப்பார்னு யாருக்கு தெரியும்?’ என்று மனதிற்குள் எண்ணியவளுக்கு இதற்கு மேல் மாமியாரிடம் சொல்லி புரிய வைக்க முடியும் என்று தோன்றவில்லை.
“எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல அத்த. ஆனா, இந்த எண்ணத்தை விட்ருங்க. நம்ம தேனுக்கு வேற நல்ல இடத்தில வரன் பாக்கலாம். அவ குணத்துக்கு நல்ல மாப்பிள்ளை கண்டிப்பா கிடைப்பாங்க” என்று கூறியவள் எழுந்து வேலையை பார்க்க சென்று விட்டாள். ஞானமங்கை தான் வெகுவாக குழம்பித் தவித்துப் போய் அமர்ந்திருந்தார்!