“தேனு குளிச்சிட்டு இருக்கா மாப்பிள்ளை. இப்ப வந்திடுவா” என்றவர்,
“அவ வந்ததும் நீங்க பேசிட்டு இருங்க. நான் பக்கத்துல இருக்க கோவிலுக்கு போய்ட்டு வந்துடுறேன்” என்று கூறி விட்டு கிளம்ப எத்தனிக்க,
“அத்த.. பரவாயில்ல. நான் சும்மா தான் தேனுவை பாக்க வந்தேன்” என்று அவசர அவசரமாக கூறியவனிடம்,
“அட பரவாயில்ல மாப்பிளை. நீங்க எதாவது பேசுவீங்க. நான் எதுக்கு நடுவுல” என்று கூறியவருக்கு மன வானிற்குள் கற்பனை மின்னல்கள் பலமாக கூத்தாடியது.
ரஞ்சிதனுக்கோ தர்ம சங்கடமான சூழ்நிலை! அவரின் எண்ணங்கள் எல்லாம் அவனுக்குப் புரியாமலோ தெரியாமலோ இல்லை! ஆனால், அவரின் எண்ணம் ஈடேற துளி அளவு கூட வாய்ப்பில்லை எனும் போது என்ன சொல்லி புரிய வைப்பான்?
எப்போதும் இங்கே வந்தால் அளவுக்கு அதிகமான அக்கறையுடன் அத்தை தன்னை கவனிப்பது வழக்கம் தான். ஆனால், இப்படி தனிமை கொடுத்து பேச சொல்வது எல்லாம் இதுவே முதல் முறை!
“திவா.. திவா அத்தான் எங்க” என்றவனுக்கு குடித்திருந்தாலும் அவனாவது வீட்டில் இருப்பானா? எனும் கேள்வி இருக்க, மங்கையோ மேலும் மலர்ந்து விகசித்த முகத்துடன்,
“திவா இப்ப எல்லாம் கோவில் குளம்னு தான் சுத்துறான் மாப்பிள்ளை” என்றதும் ரஞ்சிதன் திகைத்த முகத்துடன் தான் அத்தையைப் பார்த்தான்.
திவாகரனின் வண்டவாளம் அவனுக்கும் நன்றாகத் தெரியும் நிலையில், மங்கை கூறுவது அவனுக்கு திகைப்பை கொடுக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்!
அவனின் திகைப்பை கண்ட மங்கையோ “அட என்ன மாப்பிள்ளை நீங்க? நீங்களும் நம்பாம பாக்குறீங்க. அவன் மாறிட்டான்” என்றவர்,
“இதெல்லாத்துக்கும் உங்க அம்மாவுக்கு தான் நான் நன்றி சொல்லணும்” என்றதும்,
“என்னோட அம்மாவுக்கா?” என்று ரஞ்சிதன் புரியாமல் அவரைப் பார்த்தான்.
“அட ஆமா மாப்பிள்ளை! என்ன நீங்க இப்படி கேட்டுட்டீங்க? கமலம் அண்ணி சொன்னதால தான் திவாவை திருவண்ணாமையில இருக்க சாமியார் கிட்ட கூட்டிட்டு போனேன்” என்றவர், கமலம் சொன்னதை எல்லாம் கூறி முடித்து,
“பால் காய்ச்சுறது கூட முக்கியமில்லை. உன் புள்ளையை கவனின்னு அண்ணி எவ்வளவு அக்கறையோட சொன்னாங்க தெரியுமா..” என்றதும் ரஞ்சிதனுக்கு அன்னை மேல் மிகுந்த கோபம் வந்தது.
‘க்கும்.. உங்களை பால் காய்ச்சறதுக்கு வர விடக் கூடாதுன்னே இப்படி பண்ணி இருக்காங்க. அது கூடப் புரியாம…!’ என்று எண்ணியவன், வெளியே “ஓ அப்படிங்களா அத்த. எனக்குத் தெரியாது” என்பதோடு நிறுத்திக் கொண்டான்.
“என்னமோ மாப்பிள்ளை. இந்தப் பையன் நல்லா மாறி பழையபடி வேலைக்குப் போய் கவியையும் புள்ளையயும் பாத்துக்கிட்டான்னா போதும். அதுக்காக தான் அரும்பாடு படுறேன்” என்றார் கண்ணைக் கசக்கிக் கொண்டு.
“அதுக்கு நீ அரும்பாடு பட்டு என்னமா பண்றது? அண்ணன் தான் அவனா திருந்தனும்” என்றபடி அங்கே வந்தாள் தேன்மலர்.
மகளின் பேச்சில் அவளை நன்றாக முறைத்தவர், “நீ சும்மா இருடி. எப்பப் பாரு எதையாவது சொல்லிக்கிட்டு” என்று அதட்டி விட்டு,
“மாப்பிள்ளை வந்திருக்கார்.. அவரை வாங்கன்னு கேட்டியா?” என்று அதற்கும் அதட்ட,
“வாங்க மாப்பிள்ளை” என்று இரு கரம் கூப்பி பவ்வியமாக அவள் ரஞ்சிதனை நோக்கி கூற, அவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
மங்கை மகளை முறைத்து விட்டு அவனிடம் “சும்மா குறும்பு பண்றா மாப்பிள்ளை. நீங்க பேசுங்க. நான் கிளம்புறேன்” என்றவர் வீட்டை விட்டு கிளம்பி இருந்தார்.
அவர் கிளம்பியதும் இளையவர்கள் இருவரும் பெரு மூச்சுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பின் பக்கென்று சிரித்துக் கொண்டனர்.
“உங்க அம்மா பஜ்ஜி போட்டிருக்காங்க. எடுத்துக்க” என்று ரஞ்சித் சிரிக்க,
“அவுங்க மாப்பிள்ளைக்கு ஸ்பெஷலா பண்ணி இருக்காங்க. சோ நீங்களே சாப்பிடுங்க சார்” என்றவள், அவனருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“இன்னைக்கு நைட் சென்னை கிளம்புறேன் தேனு” என்று ரஞ்சித் கூற, சோஃபாவில் ஒற்றை காலை மடக்கி தலை சாய்த்து அமர்ந்து கொண்டவள்,
“சோ, போனா போகுதே.. இவ கிட்ட அன்னைக்கு வரேன்னு வேற சொல்லிட்டு வந்தோமே.. போய் பாத்திட்டு வருவோம்னு வந்தியாக்கும்” என்று முறைப்புடன் கேட்டாள் தேன்மலர்.
“அப்படி எல்லாம் இல்ல தேனடை. நேத்து வரலாம்னு தான் இருந்தேன். ஆனா, வீட்ல வேற டாப்பிக் ஓபன் ஆகிடுச்சு. என் மண்டையை போட்டு உருட்டிட்டாங்க. அதான் வர முடியல” என்றதும்,
“என்ன டாப்பிக்?” என்றாள் தானும் ஒரு பஜ்ஜியை எடுத்து கடித்துக் கொண்டே!
“அந்த டாப்பிக் இருக்கட்டும். முதல்ல இதுக்கு பதில் சொல்லு” என்றவன்,
“உனக்கு எங்க அம்மா தான் அத்தையையும் திவா அத்தானையும் திருவண்ணாமலை அனுப்பினாங்கன்னு முன்னாடியே தெரியுமா?” என்று கேட்க, மௌனமாக இருந்தாள் தேன்மலர்.
“சொல்லு தேனடை..”
“ம்ம்.. பால் காய்ச்சுற அன்னைக்கு தான் தெரியும்”
“ஏன் என்கிட்ட சொல்லல”
“சொல்லிருந்தா நீ அத்தை கிட்ட போய் சண்டை போட்டிருப்ப. நல்ல நாள் அதுவுமா எதுக்கு எங்களால பிரச்சனை வரணும்? சும்மாவே நம்ம ஃபேமிலிக்குள்ள எங்களைப் பத்தி பெரூரூரூமையா தான் பேசுவாங்க. இதுல நீ எதாவது கோபமா பேசப் போய் அது ஒரு பிரச்சனை ஆக வேண்டாம்னு தான் சொல்லல” என்றாள் தெளிவுடன்.
ரஞ்சிதனும் அவள் கூறுவதில் இருந்த உண்மை புரிந்து மௌனமாய் இருக்க, “நீ அதை மறந்திடு. அண்ணன் திருந்தாத வரை அம்மாவை இந்த சாமியார் விஷயத்துல இருந்து மாத்த முடியாது” என்றவள்,
“அத்த கிட்ட நீ இதைப் பத்தி மூச்சு விடக் கூடாது. மவனே.. மூச்சு விட்ட… உன்னை பிச்சிடுவேன்” என்றாள் மிரட்டலாக.
“சரிங்க மேடம். நான் ஒன்னும் கேட்கல”
“ம்ம்.. இது நல்ல புள்ளைக்கு அழகு!” என்று கூறியவள்,
“உன் மண்டையை உருட்டின டாப்பிக் என்ன? அதை சொல்லு” என்றாள்.
“வேற என்ன? எல்லாம் என் கல்யாண விஷயம் தான்” என்றதும், பரபரப்புடன் கால்களை சோஃபாவில் விட்டு கீழிறக்கி தலை நிமிர்ந்து அமர்ந்தவள்,
“டேய்.. சூப்பர்டா! பொண்ணு யாரு? எதாவது ஃபோட்டோ காட்டுனாங்களா. எங்க என்கிட்ட காட்டு” என்று ஆர்வமாகக் கேட்க,
“தேனடை… பொறுமை பொறுமை!” என்றவன்,
“நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் போகல. அம்மா இந்தப் பேச்சை ஆரம்பிச்சாங்க. அப்பாவும் இருபத்தேழு வயசாச்சி தான ரஞ்சித். கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானன்னு கேக்குறார்” என்றான் சுரத்தே இல்லாத குரலில்.
“வாஸ்தவம் தானே ரஞ்சி. கல்யாணத்துக்கு இது கரெக்ட் ஏஜ் தான” என்று தேன்மலர் கேட்க,
“நீயும் அதையே சொல்லாத” என்றான் அயர்ந்த குரலில்.
“பின்ன என்னடா?” என்றவள், அவனை மேலும் கீழும் பார்த்து “டேய்.. எனக்கே தெரியாம யாரையாவது லவ் பண்றியா?” என்று கேட்க, அவளை முடிந்த மட்டுக்கும் முறைத்தான் ரஞ்சிதன்.
அவன் முறைப்பில் தன்னை அடக்கிக் கொண்டவள், “எதோ.. வாய் தவறி கேட்டுட்டேன்” என்று சமாளித்தவள்,
“என்ன தான் நீ சொன்ன?” என்று விளையாட்டை கை விட்டு விட்டு கேட்டாள்.
“முதல்ல மித்ராவுக்கு கல்யாணம் பண்ணுங்க. அப்புறம் எனக்குப் பண்ணலாம்னு சொல்லிட்டேன்”
“லூசாடா நீ! மித்ரா காலேஜ் செக்கண்ட் யியர் தான் படிக்கிறா. இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு படிப்பு முடிய. அதுவரைக்கும் நீ சிங்கிளா இருப்பியா”
“ரெண்டு வருஷம் படிப்பிருக்கு தான். ஆனா, அவ அடுத்து ரெண்டு வருஷம் வேலைக்கு போகனுமாம். அதுக்கப்புறம் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உறுதியா சொல்லிட்டா”
“அப்படிப் போடு! சோ, இப்ப ஐயா கல்யாணம் பண்ணிக்க வேண்டிய நிர்ப்பந்தம்”
“ம்ம் ஆமா! அதான் நேத்து ஃபுல்லா அம்மாவும் அப்பாவும் பேசிப் பேசி என் மண்டையை உருட்டிட்டாங்க”
“கடைசில என்ன தான்டா சொன்ன?”
“ஒரு ரெண்டு மாசம் டைம் கொடுங்ககன்னு கேட்டிருக்கேன்”
“க்கும்… கல்யாணத்துக்கு ஓகே சொல்ல ரெண்டு மாசம் டைமா?” என்றாள் தேன்மலர் கிண்டலாக.
அவனோ அவளையே பார்த்து “நீ எப்ப தேனு கல்யாணம் பண்ணிக்க போற” என பட்டென்று கேட்டிருக்க, தேன்மலர் அலட்டிக் கொள்ளவே இல்லை.
மிக சாதாரண குரலில் “இது வரைக்கும் அந்த ஐடியா இல்ல ரஞ்சி. இனிமேல் தான் யோசிக்கணும்” என்றாள்.
அவன் அமைதியாகவே இருக்க, “என்னடா? உன் கல்யாணத்தை பத்தி கேட்டா என் கல்யாணத்தை பத்தி நீ கேக்குற!” என்று ஒரு மார்க்கமாய் அவனைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் தேன்மலர்.
அதற்கு அவன் திருப்பிக் கேட்ட கேள்வியில் தேன்மலர் முகத்தில் இருந்த புன்னகை துணி கொண்டு துடைத்தார் போல் மறைந்திருந்தது.