பணிதல் – 5
நான்கு நாட்கள் கடந்த நிலையில்..
தாரமங்கலத்தில் உள்ள அமுதகீதனின் இல்லம்! மூன்று தளங்கள் கொண்ட
நல்ல பெரிய இல்லம் தான். அமுதகீதன் அவனின் சொந்த உழைப்பால் வந்த வருமானத்தில் கட்டியது!
வெளியே முன் பகுதியில் மூன்று கார்கள் நிற்கும் அளவிற்கு இட வசதிகள் உண்டு! கார் ஷெட்டின் எதிரே விஸ்தாரமான தோட்டமும் உண்டு.
கைலாசநாதன் உருவாக்கிய கடலை மிட்டாய் ஃபேக்டரியின் வருமானம் அவரின் ஆண் வாரிசுகளான இன்பசேகரன் மற்றும் இளவழகன் குடும்பத்தினருக்கு பொது தான்.
அண்ணன் தம்பி இருவரும் ஒற்றுமையுடன் இன்று வரை தொழிலை திறம்பட நடத்தி வருவது மட்டுமல்லாமல் தொழிலில் இருந்து வரும் வருமானத்தை சரி சமமாக பிரித்துக் கொள்வார்கள். எனவே, அவர்களுக்குள் எந்த வித மனக்கசப்புகளும் இடையூறுகளும் இன்று வரை வந்ததில்லை.
அமுதகீதன் எம்.பி.ஏ படிப்பை முடித்ததும் தந்தையுடன் அவர்களின் குடும்பத் தொழிலில் இணைந்தான். ஆனால், அவனுக்கு சொந்தமாக தொழில் மேற்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது.
எனவே, அவனின் நண்பன் நந்தனுடன் இணைந்து ஏற்காட்டில் சொந்தமாக ஒரு ரிசார்ட்டினை அமைத்திருந்தான்.
சொந்தமாக ரிசார்ட் கட்டுவதும் எளிதான விஷயம் அல்லவே. நிறைய பணம் தேவை.
பேங்கில் வாங்கிய லோன் போக, உதவிக்கு இன்பசேகரனிடம் குறிப்பிட்ட லட்சங்களை வாங்கி இருந்தான்! அதை ஒரே ஆண்டில் திருப்பிக் கொடுத்தும் இருந்தான்.
“எதுக்குடா அமுதா திருப்பித் தர? ஏன்.. என் மகனுக்கு நான் தரக் கூடாதா?” என்று இன்பசேகரன் ஆதங்கமாக கேட்ட போது,
“தாராளமா தரலாம்ப்பா. ஆனா, இந்த ரிசாட் எங்களோட கனவு! இது என்னோடதும் நந்தனோடதும் மட்டுமா இருக்கணும்னு ஆசைப் படுறோம். நந்தாவும் அவுங்க அப்பா கிட்ட வாங்கின பணத்தை திருப்பி கொடுத்திட்டான்” என்றவன், அவர் இன்னும் அதிருப்தியுடன் தன்னை பார்த்ததை கண்டு
“அப்பா… இதுக்கு ஏன் அப்செட் ஆகுறீங்க? நாங்க நினைச்சிருந்தா வெளிய யார் கிட்டயும் போய் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கலாம். ஆனா, உங்க கிட்ட தான வந்து நின்னோம். நெக்ஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ்குள்ள அந்த பேங்க் லோனையும் செட்டில் பண்ணிடுவோம். சோ, உங்க கிட்ட காசை திருப்பிக் கொடுத்துட்டேன்னு வருத்தப் படாதீங்க. இது உங்க மகன் சம்பாதிச்ச பணம். சந்தோஷமா வாங்கிக்கணும்” என்று அமுதன் அன்புடன் நிபந்தனை விதிக்க, இன்பசேகரனும் அதற்கு மேல் மகனிடம் முறையிடவில்லை.
சந்தோஷமாகவே மகன் கொடுத்த பணத்தினை பெற்றுக் கொண்டார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் அவனின் தொழில் வளர்ச்சியும் அமோகமாக அமைந்து விட, பேங்க்கில் பெற்ற கடனையும் நண்பனுடன் இணைந்து அடைத்திருந்தான்.
அதற்கடுத்து தாரமங்கலத்தில் வீடு கட்ட வேண்டும் என்று தந்தையிடம் கூறிய போது,
“சேலத்துலயே வீடு கட்ட இடம் பார்க்கலாமேப்பா” என்றார் இன்பசேகரன் மகனிடம்.
“அங்க தான் ஏற்கனவே ரெண்டு வீடு நீங்க கட்டி இருக்கீங்கலேப்பா. இது அம்மாச்சியும் அப்பச்சியும் வாழ்ந்த ஊரு. எனக்கும் சின்ன வயசுல இருந்தே இங்க தான் பிடிக்கும். நாமளும் முதல்ல இங்க தான தாத்தா கூட ஒன்னா இருந்தோம். அப்புறம் கிருஷ்ணா பிறந்ததும் சேலம் போகலாம்னு நீங்க சொன்னதால தான் எல்லாரும் அங்க ஷிஃப்ட் ஆகிட்டோம். எனக்கு தாரமங்கலத்துல வீடு கட்டனும்னு தான் ப்பா ஆசையா இருக்கு” என்றவன் உறுதியாகக் கூறியதும் சரி என்று விட்டார் இன்பசேகரனும்.
இல்லம் கட்டி முடித்த பின்னர் இந்த ஓராண்டு காலமாக தான் எல்லோரும் தாரமங்கலத்தில் வசிக்கின்றனர். கிருஷ்ணரூபியும் தனது பத்தாம் வகுப்பினை தாரமங்கலத்தில் உள்ள பள்ளியில் தான் பயின்று வருகிறாள்.
ஃபேக்டரி சேலத்தில் இருக்க, இந்த ஓராண்டு காலமும் தினமும் காரிலேயே ஃபேக்டரிக்கு சென்று வருவதை இன்பசேகரன் வழக்கமாக்கிக் கொண்டார்.
சொந்தமாக ரிசாட் கட்டியிருந்தாலும் குடும்பத் தொழிலான கடலை மிட்டாய் கம்பெனியை அமுதகீதன் எட்டிப் பார்க்காமல் இருந்ததில்லை.
மாதத்திற்கு ஒரு முறையேனும் வந்து பார்வையிடுவான்.
ரஞ்சிதன் தொழிலே வேண்டாம் ஐ.டி தான் எனக்கு இஷ்டம் என்று என்ஜினியரிங் படித்து முடித்த கையோடு சென்னையில் உள்ள ஒரு மென் பொருள் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்து விட்டான்.
இளவழகனுக்கு அதில் வருத்தம் தான் என்றாலும் அண்ணன் மகன் இருப்பதால் வருங்காலத்தில் தொழிலை கவனிக்கவும் அதனை திறம்பட வழி நடத்தவும் ஆள் இருக்கிறது என தன்னை தேற்றிக் கொண்டார்.
இன்பசேகரனுக்கு எப்போதுமே மகன் மேல் பிரியமும் பெருமையும் தான். தற்போது சொந்தமாக வீடும் கட்டி, ஏற்காட்டில் மற்றொரு ரிசார்ட்டையும் கட்டிக் கொண்டிருக்கும் மகனின் வளர்ச்சியில் அவருக்கு பெருமைக் கூடித் தான் போனது.
அன்றைய காலை உணவை உண்ண வந்த மகனிடம் வசுந்தலா மெல்ல பேச்சினைத் தொடங்கினார்.
“வா அமுதா.. இன்னைக்கு ஏற்காட்டுக்கு போறியா?”
“இல்லமா. ஓரளவு அங்க வேலை எல்லாம் முடிஞ்சது. அப்பா கூட ஃபேக்டரிக்கு தான் போகலாம்னு இருக்கேன்”
“சரி சரிப்பா. உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று ஆரம்பிக்க,
“சொல்லுங்கம்மா” என்றான் அமுதகீதன் உணவை உண்டபடி.
“ம்ம்.. அது வந்து அமுதா..” என்றவர்,
“இரு. உங்க அப்பாவும் வந்திடட்டும்” என்று நிறுத்தி விட, சரி என்று தோள் குலுக்கியவன், உண்பதில் கவனமாக இருந்தான்.
“கிருஷ்ணா எங்கமா?” என்று தங்கையைக் கேட்க,
“அவ ரெடியாகி வருவா. நீ சாப்பிடு அமுதா” என்றவர் குரலில் மெல்லிய எரிச்சல் பரவியது.
அதை கவனித்தவன் அன்னையை அழுத்தமாய் பார்த்துக் கொண்டே தங்கையின் அறையைப் பார்த்தான்.
அப்போது தான் பள்ளிச் சீருடையில் தயாராகி வெளியே வந்தாள் கிருஷ்ணரூபி.
அண்ணன் உணவு மேஜையில் அமர்ந்திருப்பதை கண்டு மலர்ந்த முகத்துடன் ஓடி வந்தவள், “எவ்வளவு நாள் ஆச்சு ண்ணா உன் கூட சாப்பிட்டு” என்று உற்சாகத்துடன் அவனருகே அமர்ந்து கொண்டாள்.
வசுந்தலா இளைய மகள் வந்ததும் அமைதியாக நிற்க, கிருஷ்ணரூபியும் அன்னையைக் கண்டதும் உற்சாகத்தை அடக்கி தனக்கான தட்டினை எடுத்துக் கொண்டாள்.
அமுதகீதன் உண்பதை நிறுத்தி விட்டு, தங்கைக்கு உணவினை எடுத்து வைக்க, “தேங்க்ஸ் ண்ணா” என்றாள் இளையவள் மலர்ந்த முகத்துடன் பாசமான குரலில். கண்களில் லேசாக கண்ணீர் கூட வந்து விட்டது அவளுக்கு.
இந்த ஆறு மாத காலமும் அமுதகீதன் மற்றொரு ரிசார்ட் கட்டும் பணியில் பிஸியாக இருந்ததால் வாரத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவான். மற்றபடி ஏற்காடே கதி என்று கிடந்தான்.
இந்த ஆறு மாதங்களும் அண்ணனை அதிகமாக நாடியது கிருஷ்ணரூபி தான். ஆகையால் தான் அண்ணன் பரிமாறியதும் கண்கள் கலங்கிப் போனாள்.
“சாப்பிடு கிருஷ்ணா. இன்னைக்கு நானே உன்னை கொண்டு போய் ஸ்கூல்ல விடுறேன்” என்றதும் சிறியவள் முகம் இன்னமும் மலர்ந்து போனது.
சிறிது நொடிகளில் இன்பசேகரன் வந்து விட, வசுந்தலா கணவனிடம் கண்ணை காண்பித்து மகனிடம் பேசத் துவங்கினார்.
“அமுதா…”
“சொல்லுங்கமா” என்றவன் உணவில் மட்டும் கவனமாக இருந்தான்.
இன்பசேகரன் மனைவியிடம் “நானே சொல்றேன் வசு” என்று விட்டு, “நானும் அம்மாவும் உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறோம் அமுதா. நீ என்ன சொல்ற?” என்றதும், அமுதன் உணவினை விடுத்து பெற்றோரின் முகம் பார்க்க, இளையவளோ அண்ணனுக்கு திருமணம் என்றதும் குஷியாகி விட்டாள்.
“நிஜமாவாப்பா… அண்ணாவுக்கு அண்ணி வரப் போறாங்களா..” என்று துள்ளலான குரலில் கேட்க,
இன்பசேகரன் மகளின் துள்ளலில் புன்னகையுடன் தலை அசைத்து “அதுக்கு உன் அண்ணன் தான் பதில் சொல்லணும்” என்று மகனின் பதிலிற்காக அவனின் முகம் பார்க்க,
கிருஷ்ணரூபியும் அண்ணன் புறம் திரும்பி “அண்ணா.. ஓகே சொல்லுண்ணா” என்று ஆர்வமாக கேட்டாள்.
“நீ சும்மா இரு. பெரியவங்க நாங்க பேசுறோம் தான. சின்ன பொண்ணு உனக்கென்ன தெரியும்? எல்லாத்துக்கும் மூக்கை நுழைக்க கூடாது” என்று ஒரு அதட்டல் போட்டார் வசுந்தலா.
அவ்வளவு தான்! இளையவள் முகம் சுண்டிப் போனது. சற்று நேரத்திற்கு முன்னர் அண்ணனால் ஆனந்தமாக கலங்கிய கண்கள் தற்போது அன்னையின் வார்த்தைகளில் வலியால் கலங்கி விட,
“அம்மா..” என்று கோபமாக அழைத்தான் அமுதன்.
“இல்ல அமுதா. நீ பதில் சொல்றதுக்குள்ள அவ குறுக்க பேசவும் தான் திட்டிட்டேன்” என்றார் வசுந்தலா உள்ளே சென்று விட்ட குரலில்.
“அதுக்கு இப்படி தான் குழந்தையை திட்டனுமா வசு” என்று இன்பசேகரனும் மனைவியை சாடினார்.
தங்கையின் முகத்தை கண்ட அமுதன் “நீ சாப்பிடு கிருஷ்ணா” என்று கூறி விட்டு பெற்றோரை பார்த்து,
“சாப்பிடும் போது வேறெந்த விஷயமும் பேச வேண்டாம் ப்பா” என்று அழுத்தமாக கூற,
“இல்லப்பா.. உன் கல்யாண விஷயம்ன்றதால தான்..” வசுந்தலா கூற,
“எந்த விஷயமா இருந்தாலும் தான்மா” என்றவன், கை அமர்த்தி தடுத்து விட்டான்.
கிருஷ்ணரூபி உணவை வெறிக்க, தானே அவளுக்கு உணவை ஊட்டியவன், “நீ பேகை எடுத்துட்டு கார்ல வெயிட் பண்ணு கிருஷ்ணா. அண்ணா வரேன்” என்றதும் மௌனமாக தலை அசைத்து விட்டு எழுந்து சென்று விட்டாள் இளையவள்.
அவள் சென்றதும் வசுந்தலா பாவமாக மகனைப் பார்க்க, “எத்தனை தடவைமா சொல்றது? கிருஷ்ணா கிட்ட இப்படிப் பேசாதீங்கன்னு” என்று கோபமாக கேட்டவனிடம் பதிலேதும் சொல்லாமல் அமைதியாகவே நின்றார் வசுந்தலா.
“ப்ச்.. விடு அமுதா. அவ மாற மாட்டா” என்ற இன்பசேகரன், “நீ சொல்லு. பொண்ணு பாக்கட்டுமா. உனக்கு ஓகேவா” என்று கேட்க, வசுந்தலாவும் மகனை ஆர்வமாகப் பார்த்தார்.
பெரு மூச்சுடன் பெற்றவர்களைப் பார்த்தவன்,
“இப்ப என்னப்பா அவசரம்” என்று கேட்க,
“என்ன அவசரமா? இருபத்தி ஏழு வயசாகிடுச்சு அமுதா உனக்கு. பால் காய்ச்சுற விஷேஷத்தப்ப ரஞ்சித்கு பொண்ணு பாக்கப் போறதா கமலம் சொல்லிட்டு இருந்தா.. அவன் உன்னை விட நாலு மாசம் இளையவன். சின்னவன் அவனுக்கு பேசும் போது உனக்கும் பேசுறது தான் நல்லது” என்று வசுந்தலா படபடவென கூற,
“அம்மா.. ரஞ்சித்கு கல்யாணம் பண்றாங்கன்னு எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. இதென்ன ரேஸா…
ஓடுறவனை முந்திட்டு நாமளும் ஓடுறதுக்கு? கல்யாணம்ன்றது இன்னொரு பாதி வாழ்க்கைமா. அதை அவசரப் பட்டு பண்றதுக்கு நான் ரெடி இல்ல. ஒரு ஆறு மாசம் போகட்டும். அப்புறம் பாக்கலாம்” என்று விட்டான் முடிவாக.
“ஆறு மாசமா..” என்று வசுந்தலா திகைப்புடன் கேட்க,
“ஆறு மாசம் தான்!” என்று அழுத்தமாய் சொன்னவன், தந்தையைப் பார்த்தான்.
இன்பசேகரனுக்கும் மகனின் முடிவு சரியாகவே பட, “சரிப்பா. உன் இஷ்டம்!” என்று விட்டார்.
வசுந்தலா கணவனை முறைக்க, அன்னையை ஒரு பார்வை பார்த்து விட்டு “நான் கிருஷ்ணாவை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே ஃபேக்டரிக்கு வந்துடுறேன் ப்பா” என தந்தையிடம் கூறியவன் கிளம்பி விட்டான்.
வசுந்தலாவோ கணவனிடம், “ஏங்க.. நீங்க பாட்டுக்கு சரின்னு சொல்லிட்டீங்க? இப்ப வள்ளி கிட்ட என்னத்த சொல்றது? அவ என்னைப் போட்டு நச்சரிப்பா!” என்று மூன்று மகள்களில் இளைய மகளான யோகவள்ளியை எண்ணி அவர் அவஸ்தையுடன் கணவனிடம் முறையிட,
“சும்மா இரு வசு. வள்ளி அவ நாத்தானரை நம்ம அமுதனுக்கு கட்டி வைக்கணும்னு நச்சரிக்கிறதுக்கு எல்லாம் நாம ஆளாக முடியாது. அமுதன் கிட்ட வள்ளி இப்படி கேக்குறான்னு சொல்லி உடனே பேசவும் முடியாது. முதல்ல அவன் சொன்ன மாதிரி இது அவசரப் பட வேண்டிய விஷயம் இல்ல. அதான் ஆறு மாசம் டைம் சொல்லிருக்கான்ல. உன் சின்ன மக கிட்டயும் ஆறு மாசம் கழிச்சு பதில் சொல்றதா சொல்லி வேலையை முடி!” என்றவர் தானும் கிளம்பி விட்டார்.
வசுந்தலா தான் வள்ளியை எப்படி சமாளிப்பது என்று அறியாமல் மண்டை காய்ந்து நின்றார்!
*******************
ரஞ்சிதன் அன்று இரவு பதினொரு மணிக்கு சென்னை கிளம்பவிருந்தான். அதற்கு முன்பு தேன்மலரை பார்த்து விட்டு செல்லலாம் என்று மாலை போல் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்திருக்க, அவனின் தலையை கண்டதும் ஞானமங்கைக்கு சுவிட்ச் போட்டார் போல் முகத்தில் பல்ப் எரிந்தது.
“வாங்க வாங்க மாப்பிள்ளை” என்று முகம் முழுக்க பல்லுடன் தான் அவனை வரவேற்றார்.
“திடுதிப்புன்னு வந்து நிக்குறீங்க. சொல்லிட்டு வந்திருந்தா முறுக்கு அதிரசம்ன்னு எதாவது பலகராம் பண்ணி வச்சிருப்பேன் மாப்பிள்ளை..” என்றவர்,
“உக்காருங்க மாப்பிள்ளை” என வரிக்கு ஒரு மாப்பிள்ளை போட்டு, சோபாவை தனது முந்தானையால் துடைத்து விட்டார்.
அவரின் அலப்பறையை கண்டபடி ஹாலிற்கு வந்த கவிரத்னா “வா ரஞ்சித்” என்று அவனை சின்ன புன்னகையுடன் வரவேற்க,
“ஏய் கவி.. எத்தன தடவை சொல்லிருக்கேன் உனக்கு. அவரு நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளை முறை. ரஞ்சித்னு பேரு சொல்லி எல்லாம் கூப்பிடாதன்னு..” என்று வழக்கம் போல் மங்கை மருமகளை அதட்ட,
அவரை பெரு மூச்சுடன் பார்த்த ரஞ்சிதன் “பரவாயில்ல அத்த. அக்காவுக்கு எப்படி கூப்பிடனும்னு தோணுதோ அப்படியே கூப்பிடட்டும்” என்று புன்னகை முகம் மாறாமல் கூறியவன்,
“குடிக்க தண்ணி மட்டும் குடுங்க அத்த” என்றான்.
“ஐயோ.. நான் ஒரு கிறுக்கி.. வந்தவரை கவனிக்காம என்னென்னமோ பேசிட்டிருக்கேன்” என்று நெற்றியில் தட்டிக் கொண்ட மங்கை, தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து விட்டு,
“இருங்க மாப்பிள்ளை. நான் போய் சூடா காஃபியும் பஜ்ஜியும் போட்டு எடுத்துட்டு வரேன்” என்று அடுக்களைக்குள் நகர்ந்து விட்டார்.
அவரின் தலை மறைந்ததும் ‘அப்பாடா..’ என்று நெஞ்சில் கை வைத்த ரஞ்சிதன், தன்னைக் கண்டு நமட்டு சிரிப்புடன் நிற்கும் கவியிடம் “என்ன தாய்க்குலமே சிரிப்பு? பிச்சு புடுவேன் பிச்சு” என்றவன்,
மெல்லிய குரலில் “தேனடை எங்க?” என்று கேட்க,
“இப்ப தான் வேலை முடிஞ்சு வந்தா. குளிச்சிட்டு இருக்கா. வெயிட் பண்ணுங்க மாப்பிள்ளை சார். வருவா” என்று கிண்டல் குரலில் கூறிய கவி,
“நான் போய் கோகுலை கூட்டிட்டு வரேன். ஸ்கூல் விடுற நேரம் ஆச்சு” என்றவள் மாமியாரிடம் சொல்லிக் கொண்டு தேனுவின் ஸ்கூட்டியை எடுத்துக் கொன்டு கிளம்பி விட்டாள்.
அவள் சென்றதும் அடுக்களையில் இருந்து மணக்க மணக்க ஃபில்டர் காஃபியும் சுட சுட பஜ்ஜி சகிதம் வந்த மங்கை, “எடுத்துக்கங்க மாப்பிள்ளை” என்றார் பற்கள் மின்ன!
இவரின் ரோதனை தாங்க முடியவில்லை என்று உள்ளுக்குள் நொந்து கொண்டவன் முகத்தில் எதையும் காட்டாமல் காஃபியை மட்டும் எடுத்துக் கொண்டான்.