மலர் பாதம் பணிந்து..4

அத்தியாயம் – 4

புது மனையில் பால் நன்றாக பொங்கி இருக்க, விஷேசம் சிறப்பாக நிறைவு பெற்றிருந்தது.

தாங்கள் பரிசாக வாங்கி வந்திருந்த வெள்ளி குத்து விளக்கினை இளவழகன் குடும்பத்தினரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் கவிரத்னாவும் தேன்மலரும் கிளம்புவதாகக் கூற,

“என்னமா அவசரம்? மதியம் சாப்பிட்ட பின்ன போகலாமே” என்று இளவழகன் அன்புடன் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். வந்ததில் இருந்து இவர் ஒருவர் தான் நன்றாக முகம் கொடுத்து பேசி இருக்கிறார் என இதமாக உணர்ந்த தேன்மலர்,

“இல்ல மாமா. நான் ஆஃபிஸ்க்கு லீவ் எல்லாம் போடல. பத்து மணிக்கு போய் ஆகனும். அண்ணிக்கும் வேலை இருக்கு. கிளம்புறோம்” இன்முகமாக கூற,

“சரிம்மா” என்றவர் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முறை சாமான்களை கொடுத்து காலை உணவை உண்ண வைத்த பின்னர் தான் கிளம்ப விட்டார்.

கவிரத்னா போட்ட போடில் கமலம் அவர்கள் இருக்கும் பக்கமே அடுத்து தலை காட்டவில்லை. தங்களை கண்டதும் அவர் ஓடி ஒழிவதைக் கண்டு தேன்மலருக்கு சிரிப்பு கூட வந்து விட்டது.

வீட்டை விட்டு வெளியே வந்தபடி “நீங்க செம அண்ணி. நீங்க போட்ட போடுல கமலம் அத்த டோட்டல் ஆஃப்!” என்று சிரிக்க,

“பின்ன.. அவுங்களை சும்மாவா விட முடியும்? சும்மாவே அத்த ஜோசியர், கோயில், பரிகாரம், பூஜை, சாமியார்ன்னு அலைஞ்சு திரிஞ்சிட்டு இருக்காங்க. இதுல திருவண்ணாமலை போய் திருநீர் சுவாமிகள பாத்துட்டு வந்தா உன் மகன் ஒரே நாள்ல குடியை விட்டுடுவான் திருந்திடுவான்னு சொல்லி ஏத்தி விட்டா..! அத்தையும் இவுங்க சொன்னதை நம்பி கிளம்பிட்டாங்க” என்று ஆயாசமாக சொல்லிக் கொண்டவள்,

“திருந்தாத பிறவிய திருவண்ணாமலை கூட்டிட்டு போனா என்ன? திருப்பதி கூட்டிட்டு போனா என்ன? அவரே பொறுப்பு வந்து திருந்தினா தான் உண்டு” என்றாள் பெரு மூச்சுடன்.

அவளின் நிலை கண்டு கஷ்டமாக இருந்தது தேன்மலருக்கு. அண்ணனின் நிலையில்லாத குணத்தினாலும் குடி பழக்கத்தினாலும் அதிகம் பாதிக்கப்படுவது கவிரத்னா தான் என வழமை போல் அண்ணிக்காக கவலை கொண்டவள் முகம் வாடி வாசல் வர, அவர்களின் முன் காரினை கொண்டு வந்து நிறுத்தினான் ரஞ்சிதன்.

தேன்மலர் அவனை முறைத்துக் கொண்டு நிற்க, ரஞ்சிதன் இறங்கி வந்து அவள் பக்கம் இருக்கும் கதவினை திறந்து விட,

தேன்மலர் அப்போதும் முறைத்துக் கொண்டே நின்றாள்.

“அம்மா தாயே.. தெரியாம சொதப்பிட்டேன். இப்ப என்ன நான் உன் கால்ல விழட்டுமா?” என்று ரஞ்சிதன் கை எடுத்து கும்பிட்ட படி கேட்க, அவன் கையை கடுப்புடன் தட்டி விட்ட தேன்மலர்,

“சும்மா இரு ரஞ்சி. யாராவது பாத்திட்டு போய் அத்தை கிட்ட சொல்லிட போறாங்க” சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றியவள் கமலத்தை எண்ணி பயந்தபடி கூற,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ முதல்ல கார்ல ஏறு. நானே உங்களை கொண்டு போய் விடுறேன்” என்று கூற, தேன்மலர் தயங்கிய நிலையில் அவனைப் பாத்திருந்தாள்.

“இல்ல ரஞ்சி. அத்த எதாவது சொல்வாங்க.. நாங்க ஆட்டோல போய்க்கிறோம்”

ரஞ்சிதனோ அவளை நன்றாக முறைத்து “உன் அருமை அத்த கிட்ட உங்களை கொண்டு போய் ட்ராப் பண்ணிட்டு வரேன்னு சொல்லிட்டு தான் வந்தேன். ஏறு முதல்ல” என்று சிறு அதட்டலுடன் கூறியவன்,

“ம்ம்..” என்று கார் கதவினை மேலும் திறந்து விட, தேன்மலர் அண்ணியை பார்த்ததும்,

“போகலாம் தேனு” என்று கூறிய கவி, ரஞ்சிதனிடம் “ஏன் ரஞ்சித்.. உன் அத்தை பொண்ணுக்கு தான் கார் கதவை திறந்து விடுவீங்களோ.. அவ அண்ணிக்கு எல்லாம் திறந்து விட மாட்டீங்களோ” என கிண்டலாக கேட்க,

“தாய்க் குலமே!!! அப்படி எல்லாம் சொல்லப் பிடாது. இந்தா வாரேன்” என்றவன்,

“ஏய் தேனடை.. நீ உள்ள ஏறு” என அவள் முன் சீட்டில் ஏறிக் கொண்டதும் கதவை சாற்றி விட்டு பின் கதவினை திறந்து விட, அவன் செயலில் சிரித்தபடி “நன்றி நன்றி” என்ற கவி குழந்தையுடன் பின்னே ஏறிக் கொண்டாள்.

சுற்றி வந்து ட்ரைவர் சீட்டில் அமர்ந்தவன் காரினை கிளப்பி இருந்தான்.

அவனின் செயல்கள் ஒவ்வொன்றையும் மொட்டை மாடியில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தான் அமுதகீதன்.

தேன்மலரை அவன் முன்னே அமரச் சொன்ன போது அவனிடம் தென்பட்ட உரிமையும் அன்பும் அவனை ஆச்சர்ய பட வைத்தது.

தான் அவளை முன் இருக்கையில் அமரச் சொன்னதன் நோக்கம் ‘இவளுக்கு நான் என்ன ட்ரைவரா? மகாராணி சொகுசா பின்னாடி உக்காந்துட்டு வருவாங்க. நா காரோட்டி சேவகம் பண்ணனுமா?’ என்று எண்ணியவன் அவளை முன் இருக்கையில் அமரச் சொல்லி இருந்தான்.

அவனின் அன்பான செயலுக்கும் தனது அதிகாரமான செயலுக்கும் நிறைய வேறு பாடுகள் உள்ளதை உணர்ந்தான்!

ஆனால், அதை தவறு என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை. ரஞ்சித் அவளோட க்ளோஸ்! எனக்கு ‘அவுங்க’ன்னாலே ஆகாது! என்று எண்ணிக் கொண்டவன் ஒரு தோள் குலுக்களுடன் தன் செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டான்.

அவனின் எண்ணமும் நிஜம் தான். இன்று நேற்று அல்ல. சிறு வயதிலிருந்தே அவனுக்கு அத்தை குடும்பம் என்றாலே பிடிக்காது!

************

தாரமங்கலத்திற்கே வந்து அவர்களின் இல்லத்தில் இறக்கி விட்டிருந்தான் ரஞ்சிதன்.

“பஸ் ஸ்டாப்ல விடுடா போதும்” என்று தேன்மலர் கூறியதை எல்லாம் அவன் காதிலே வாங்கவில்லை.

வீட்டிற்கு வந்ததும் கவிரத்னா அவனிடம் “தேங்க்ஸ் ரஞ்சித்” என்று கூற, அவளை செல்லமாய் முறைத்தவன்,

“இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லுவாங்களா தாய்க் குலமே..? நீங்க தேங்க்ஸ் சொல்றதுக்கு பதிலா காஃபி போட்டுத் தரலாம்” என்று கூற,

“உனக்கில்லாத காஃபியா.. உள்ள வா. சாப்பிட்டு போகலாம்” என்ற கவி, வீட்டைத் திறந்து முன்னே செல்ல, “உள்ள வாடா” என்றாள் தேன்மலரும்.

“இல்ல தேனடை. நான் சும்மா சொன்னேன். இப்ப கிளம்பணும். அங்க கெஸ்ட் பாதி பேரை கவனிக்கனும். இன்னொரு நாள் வரேன்” என்றதும் தேன்மலர் அவனை முறைத்தாள்.

“ஹே தேனடை.. சத்தியமா இன்னொரு நாள் வரேன். இன்னும் நாலு நாள் லீவ் எடுத்திருக்கேன். அப்புறம் தான் சென்னை கிளம்புறேன். சோ, கண்டிப்பா வருவேன். அப்ப எனக்கு ட்ரீட் வைக்கிற” என்றதும், புன்னகையுடன் தலை அசைத்தாள் தேன்மலர்.

கவியும் கண்டிப்பாக இன்னொரு நாள் வர வேண்டும் என்று கூறி விட்டு உள்ளே சென்று விட, ரஞ்சிதன் தேன்மலரிடம் அமுதகீதன் குறித்து பேச நினைத்து பின் இப்போதைக்கு அந்தப் பேச்சு வேண்டாம் என்று எண்ணியவன்,

“சரி நான் கிளம்புறேன் தேனு. நீயும் பாத்து ஆஃபிஸ்க்கு போய்ட்டு வா. நான் சாய்ந்தரமா கால் பண்றேன்” என்றுவிட்டு கிளம்பி இருந்தான். செல்லும் அவனைக் கண்டவள் சின்ன சிரிப்புடன் உள்ளே வந்தாள்.

முகம் கழுவி விட்டு வந்ததும் கவி காஃபியை கொடுக்க, “தேங்க்ஸ் அண்ணி. நானே காபி கேக்கலாம்னு இருந்தேன்” என்று புன்னகையுடன் கூறியவள் காபியை அருந்தி விட்டு தனது தபால் அலுவலக சீருடையை அணிந்து கொண்டு “போய்ட்டு வரேன் அண்ணி” என்று பணிக்கு கிளம்பி இருந்தாள்.

தேன்மலர் தாரமங்கலத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் ‘ABPM’ (Assistant Branch Post Manager) ஆக பணி புரிந்து வருகிறாள். சம்பளம் குறைவு தான் என்றாலும் தேன்மலருக்கு இந்த வேலை மிக இஷ்டம் தான்!

கோகுலன் அன்று பள்ளிக்கு விடுமுறை எடுத்திருந்தான். எனவே, தேன்மலரை அனுப்பி வைத்த பின்னர் மகனுக்கு உணவைக் கொடுத்து உறங்க வைத்த கவிரத்னா தனது லேப்டாப்பை எடுத்து லாகின் செய்து தானும் வேலையில் மூழ்கி விட்டாள்.

கவிரத்னா பெங்களூரில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் ‘டீம் லீட்’ஆக பணிபுரிகிறாள். கடந்து இரண்டு வருடங்களாகத் தான் இந்தப் பதவி உயர்வும், ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ வாய்ப்பும் கிடைத்திருந்தது.

ஆனால் அவள் டீம் லீடான விஷயம் தேன்மலரைத் தவிற அவ்வீட்டில் இருக்கும் மற்ற இருவருக்கும் தெரியாது. தெரியப் படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர் பெண்கள் இருவரும்.

குறிப்பாக அன்னையிடமும் அண்ணனிடமும் தெரியப் படுத்த வேண்டாம் என்று கூறியதே தேன்மலர் தான்.

“அதெப்படி தேனு? அத்த கிட்டயும் அவர் கிட்டயும் சொல்லத் தானே வேணும்? எப்படி மறைக்க முடியும்?” என்று கவிரத்னா கேட்டதற்கு,

“ஐயோ அண்ணி.. உங்களுக்கு ப்ரமோஷன் கிடைச்சதை சொல்றது பிரச்சனை இல்ல. ஆனா, சேலரி ஒரு லட்சத்துக்கு மேல வாங்குறீங்கன்னு சொல்ல வேண்டியது வரும். அப்புறம் என்ன? அண்ணாவுக்கு ரொம்ப தொக்கா போய்டும். இருக்கிற காசை கேட்டு நச்சரிப்பான். வாங்கி குடிச்சா தான் விடுவான். அம்மாவும் சும்மா இருக்க மாட்டாங்க. ஜோசியர், சாமியார்னு சொல்லி உங்க கிட்ட காசை கரப்பாங்க” என்று தேன்மலர் அன்னைக்கும் அண்ணனுக்கும் பயந்து பலமாக மறுத்தாள்.

“புரியுது தேனு. ஆனா, ஏற்கனவே ஒரு வருஷத்துக்கு முன்ன எழுபத்தஞ்சாயிரம் சம்பளம் ஏறின விஷயத்தை அவுங்க கிட்ட சொல்லல. வெறும் நாப்பதாயிரம்னு தான் சொல்லி வாச்சிருக்கோம். இப்பவும் இதை சொல்ல வேண்டாம்னா எப்படி?” என்று கவி சங்கடத்துடன் கேட்க,

“மறைச்சு தான் அண்ணி ஆகனும். இப்பவே உங்க சம்பளத்துல மாசம் இருபதாயிரம் அம்மா வாங்கிடுறாங்க. பத்தாயிரத்த அண்ணா புடுங்கிடுறான். நீங்க எழுபத்தஞ்சாயிரம்னு சொல்லி இருந்தீங்கன்னா ஆளுக்கு பாதியா வாங்கி ஆளுக்கொரு விதமா காசை கரைச்சிருப்பாங்க. அப்புறம் உங்களுக்கும் கோகுலுக்கும் என்ன சேவிங்ஸ் இருக்கும்?” என்று அவளுக்காக யோசித்து பேசி இருந்தாள் தேன்மலர்.

இத்தனைக்கும் அப்போது தேன்மலர் கல்லூரி இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் தான் இருந்தாள். அப்போதே இரண்டு வயது கோகுலையும் கவியின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து இதைக் கூறி இருந்தாள்.

“தயவு செஞ்சு நான் சொல்றதை கேளுங்க அண்ணி. அண்ணா வேலைக்கு போறதில்ல. குடிக்கு அடிமையாகி சீரழிஞ்சிட்டு இருக்கான். அம்மாவும் வீட்டு செலவு போக சேத்து வைக்காம அண்ணாவை மாத்துறேன்னு சாமியாருங்க காலடில கொண்டு போய் காசை கொட்றாங்க! நீங்க தான் உங்களையும் கோகுலயும் கவனிச்சுக்கணும். அதனால தான் சொல்றேன். பிரமோஷன் பத்தியோ லட்சத்துல சம்பளம்னோ வீட்ல யார்கிட்டயும் வாயைத் திறக்காதீங்க. என் கிட்ட சொன்னதையும் மறந்திடுங்க” என்று வேண்டுகோளாக கேட்டுக் கொண்டாள் தேன்மலர்.

தேன்மலர் கூறியதை கவியாலும் மறுக்கவே முடியவில்லை. அவளின் வேண்டுகோள் தனக்கான நல்அறிவுரை என்றே தோன்ற, பதவி உயர்வு பற்றியோ சம்பளம் பற்றியோ கணவனிடமும் மாமியாரிடமும் இன்று வரை மூச்சு விடவில்லை!

*************

தேன்மலர் அலுவலகத்திற்கு வந்ததும் அவளின் அன்னை ஞானமங்கையிடம் இருந்து அழைப்பு வந்தது. பார்த்ததும் பெருமூச்சுடன் அழைப்பை ஏற்காமல் அலைபேசியை அணைத்தவள்

அன்றைய அலுவலக வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

வேலையை முடித்து விட்டு போஸ்ட் டெலிவரிக்கான கவர்களை எடுத்துக் கொண்டு

தனது சீனியர் மேனேஜரிடம் “இந்த லெட்டர்சை எல்லாம் டெலிவரி பண்ணிட்டு அப்படியே கிளம்புறேன் சார்” என்று கூறியவளிடம்,

“தேன்மலர், இன்னைக்கு முத்துவேல் சாரோட பென்ஷன் கவரும் வந்திருக்கு. அதை நீங்களே கொண்டு போய் கொடுத்திடுங்க” என்றவர் கவரினை அவளிடம் நீட்ட, “ஓகே சார்” என்றபடி அதனை பெற்றுக் கொண்டவள் கிளம்பி இருந்தாள்.

அனைத்து தபால்களையும் டெலிவரி செய்தவள், அந்தப் பென்ஷன் கவரையும் அதனின் உரிமையாளரான முத்துவேலிடம் கொடுத்து விட்டு மாலை நான்கு மணி போல் வீட்டிற்கு வந்தாள்.

உள்ளே நுழைந்ததுமே திருநீரின் மனம் தான் நாசியை நிறைத்தது.

“வா தேனு. இப்ப தான் வேலை முடிஞ்சதா..” என்று உளறாமல் குழறாமல் வார்த்தைகளை உச்சரித்தது தன் அண்ணன் தானா என்று ஆச்சர்யமாய் பார்வையை திருப்பியவளுக்கு அவனின் தோற்றம் மேலும் அதிர்வைக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

காவி வேட்டி சட்டையும், நெற்றியில் பட்டையும், கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் என மினி சாமியார் வேடத்தில் இருந்தான் அவளின் அண்ணன் திவாகரன்.

“என்னடி? உங்க அண்ணன பாத்து பனியாட்டம் ஒறஞ்சு போய் நிக்குற?” என்றபடி அடுக்களைக்குள் இருந்து வந்தார் ஞானமங்கை.

அவரைத் தொடர்ந்து கவிரத்னாவும் வந்தாள்.

அவளைக் கண்டதும் தேன்மலர் ‘என்ன அண்ணி இது?’ என்பது போல் பார்வையை வீசி விட்டு தன் அலுவலக பேகினை வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்தாள்.

‘எல்லாம் காலக் கொடுமை’ என்ற ரீதியில் பதில் பார்வை வீசிய கவி, மகனுக்கு பாலினை கொடுக்க ஆரம்பித்திருந்தாள்.

“ஏன்டி தேனு. போன் பண்ணா எடுக்க மாட்டியா?” என்று மங்கை மகள் போனை எடுக்காதது நினைவு கூர்ந்து அதட்டலுடன் கேட்க,

“அம்மா.. வேலையா இருந்தேன்மா” என்று சமாளித்தவளுக்கு இன்னமும் அண்ணனின் தோற்றம் தந்த அதிர்வு நீங்கி இருக்கவில்லை.

“வேலையா இருந்தா.. அதை சொல்றதுக்கு என்னடி? நீ பாட்டுக்கு சுவிட்ச் ஆப் பண்ணிட்ட!” என்று ஞானமங்கை விடாமல் கோபத்துடன் கேட்க,

“விடும்மா. அவ தான் வேலையா இருந்தேன்னு சொல்றாள்ல. ஏன் கோபப்படுற” என்று தங்கைக்காக அன்னையிடம் பேசிய உத்தமர் வேறு யாருமில்லை.. திவாகரனே தான்!

தேன்மலர் அண்ணனை கண்கள் விரித்துப் பார்த்தாள். அவனோ “என்ன தேனு? அப்படிப் பாக்குற? உன் அண்ணன் தான். இனிமேல் சத்தியமா சரக்கை தொட மாட்டேன். என்னை நம்பு!” என்றான் நல்லவனாக மாறி விட்டேன் எனும் குரலில்.

“நீ ஏன்டா இதை எல்லாம் விளக்கமா சொல்ற? சொன்னாலும் நம்பவா போறாளுங்க இவளுங்க ரெண்டு பேரும். விடு. நீ செயல்ல காட்டினா தான் இதுங்க நம்புங்க” என்ற மங்கை,

“இந்தாடி தேனு… இந்தத் திருநீர பூசிக்க!” என்று அவள் மறுக்கும் முன்பே நெற்றியில் திருநீரை பூசி விட்டவர்,

“கமலம் அண்ணி சொன்ன சாமியார் மத்தவங்க மாதிரி இல்லடி தேனு. ரொம்ப சக்தி வாய்ந்த சாமியார் தெரியுமா. ரெண்டு நாள் பூஜை பண்ணி இவனை தியானத்துல உக்கார வச்சிருந்தார். பாத்த தான உன் அண்ணனை.. எப்படி ஆளே மாறிட்டான்னு” என்று பெருமை பொங்க காவி உடையில் இருந்த மகனைப் பார்த்து கூறியவர்,

பேரனுக்கு பாலை கொடுத்துக் கொண்டிருந்த மருமகளிடம் “ஏய் கவி.. நான் சொன்னேன் தான. என் மகன் கார்த்திகை போய் மார்கழி வந்தா மாறிடுவான்னு. இந்தா மாறிட்டான்ல” என்றார் அதே பெருமை கலந்த மிதப்புடன்!

அவர் கூறுவதைக் கேட்ட கவிக்கு சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. மாமியாருக்கு தெரிந்தால் ‘என்னடி சிரிப்பு வேண்டிய கிடக்கு’… என குதிப்பார் என்பதால் அடக்கிக் கொண்டாள்.

களவாணி திரைப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் கூறும், “ஆனி போய் ஆவணி வந்தா என் மகன் டாப்ல வந்திடுவான்” என்ற டயலாக்கை போல் என் மகனும் கார்த்திகை போய் மார்கழி வந்தா மாறிடுவான் என்று சொல்லிக் கொண்டு திரியும் மாமியாரிடம் என்னத்தை சொன்னாலும் அதனைப் புரிந்து கொள்ளாமல் அவர் சொன்னதயே தான் சொல்லிக் கொண்டிருப்பார் என்பதால் அவரின் போக்கிலேயே விட்டு விட்டாள்.

இப்போதும் தன்னிடம் மிதப்புடன் பேசும் மாமியாருக்கு பதில் சொல்லாமல் அவள் மகனை கவனித்துக் கொண்டிருக்க,

“என்னடி.. பதில் பேசாம நீ பாட்டுக்கு இருக்க” என்று மங்கை அதற்கும் பேச, அவரை நிமிர்ந்து பார்த்தவள் உதடு வளைத்து சிரித்து விட்டு மீண்டும் மகனுக்கு பாலினை கொடுத்தாள்.

அவள் செயலில் மங்கை முறைக்க, திவாகரனோ மனைவியின் அருகே மண்டியிட்டு அமர்ந்து “கவி.. என்னை நீ நம்பலையா? சத்தியமா கவி.. நான் மாறிட்டேன்! இனிமேல் ‘பார்’ பக்கம் எட்டி கூட பாக்க மாட்டேன். இதோ.. வேலைக்கு அப்ளை பண்ணலாம்னு என்னோட லேப்டாப்பை தூசி தட்டி சார்ஜ் போட்டு வச்சிருக்கேன் தெரியுமா” என்று அவளிடம் கூற, கவிரத்னா சின்ன சிரிப்புடன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவ்வளவு தான்! அதற்கு மேல் அவளின் முகத்தில் வேறு எந்த ரியாக்ஷனும் இல்லை!

மகனுக்கு பாலைக் கொடுத்தவள், அவனை விளையாட விட்டு மீண்டும் அடுக்களைக்குள் சென்று அனைவருக்கும் காஃபி கலந்து எடுத்து வந்தாள்.

உடை மாற்றாமல் நிற்கும் தேன்மலரிடம் “போய் ட்ரெஸ் மாத்தி கை கால் கழுவிட்டு வா தேனு. காஃபி ஆறிரும்” என்று தேன்மலரை அனுப்பி வைத்தவள், தனக்கான காபியுடன் மீண்டும் தன் லேப்டாப்பின் முன்னே அமர்ந்து வேலையை பார்க்கத் துவங்கினாள்.

திவாகரன் அவளையே தொங்கிப் போன முகத்துடன் பார்க்க, கவிரத்னா அதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.

இதெல்லாம் எனக்குப் பழகி விட்டது என்பது போல் இருந்தது அவளின் செயல்கள் ஒவ்வொன்றும்.

தேன்மலரும் ஃப்ரெஷ் அப் ஆகி வந்து தனக்கான காஃபியை எடுத்துக் கொண்டவள் கோகுலுடன் இணைந்து விட்டாள்.

அவர்களைக் கோபமாக பார்த்த மங்கை “நீ விடுடா திவா. இதுங்க திருந்தாதுங்க. நீ மாறிட்டேன்னு இவளுங்க நம்பலேன்னா என்னடா? அம்மா நான் நம்புறேன். நீ ஒன்னும் கவல படாத” என்று மகனின் தலையை கோதிக் கொடுத்தவர்,

“இந்தா இந்தக் காப்பியை குடிச்சிட்டு.. எதோ வேலைக்கு அப்ளை பண்றேன்னு சொன்னியே.. அதைப் பாரு” என்றார் மகன் வருத்தம் கொள்வது தாங்காமல் முந்தானையால் மூக்கை உறிஞ்சி கொண்டே.

அவனும் அன்னையிடம் காஃபியை வாங்கிக் கொண்டு ஹாலில் இருந்த சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.

கோகுலனுடன் விளையாடிக் கொண்டிருந்தாலும் தேனுவின் பார்வை ‘நல்ல பிள்ளை’ போல் முகத்தை வைத்துக் கொண்டு காபியை அருந்தும் அண்ணனிடம் தான் இருந்தது.

‘இந்த நல்லவன் வேஷம் எத்தன நாளைக்குன்னு பார்ப்போம்’ என்று உதடு வளைத்து விரக்தியாக சிரித்துக் கொண்டவளின் எண்ணத்தை பொய்யாக்காமல் அடுத்த வாரமே குடிகார அவதாரம் எடுத்திருந்தான் திவாகரன்!

error: Content is protected !!
Scroll to Top