மலர் பாதம் பணிந்து..3(2)

பணிதல் – 2 

மொட்டை மாடிக்கு வந்த ரஞ்சிதன் அங்கே அமுதன் கோபமாக நடந்து கொண்டிருப்பதை கண்டு “அமுதன்..” என்று மெல்லிய குரலில் அழைக்க, பட்டென்று அவனிடம் பார்வையை கொண்டு வந்த அமுதன், 

“உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்! வா” என்று கடுப்புடன் கூற,

‘ஆஹா.. பயபுள்ள ஓவர் சூடா இருப்பான் போலயே. பங்காளி கிட்ட வான்டட்டா வந்து வாயக் கொடுத்துட்டோமோ?’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.

“என்னாச்சு அமுதன்.. ஏன் இவ்வளவு கோபமா இருக்க?” என்று இயல்பாக அவனிடம் கேட்க, 

“என்ன ஆச்ச்சா? ஏன் உன் தேனடை உன் கிட்ட எதுவும் சொல்லலையா?” என்று அமுதகீதன் நக்கலாக கேட்க, 

ரஞ்சிதன் பெக்க பெக்க விழித்தான். 

“என்ன பாக்குற. நீ அவ காண்டாக்ட் நம்பர் அனுப்பினப்ப அவ பேர் இப்படி தான் காட்டுச்சு… தேனடையாம் தேனடை..!!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறினான். 

ரஞ்சிதனோ “அது.. சின்ன வயசுல இருந்தே.. அப்படி தான்..” என்று சிரித்தவன் அமுதன் முறைத்ததும் “அது.. ஒன்னுமில்ல.. ஜஸ்ட் விளையாட்டுக்கு அப்படி சேவ் பண்ணி வச்சிருந்தேன்” என்று சமாளித்து விட்டு, 

“நீ சொல்லு என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க” என்றான்.

“ஹான்.. உன் அருமை தேனடை பண்ண காரியம் அப்படி!” என்று எரிச்சலாக சொன்னவன் நடந்த அனைத்தையும் கூறி, 

“செவனேன்னு மொட்டை மாடில நின்னு காத்து வாங்கிட்டு இருந்த என்ன அந்த திமிரு புடிச்சவள கூட்டிட்டு வரச்சொல்லி அனுப்பி வச்சிட்ட! இப்ப பாத்த தான! என் கிட்டயே காச வீசி எறிஞ்சிட்டு போறா. ஹவ் டேர்..!” என்று உள்ளங்கைக்குள் கசங்கி இருந்த அந்த இரு ஐநூறு ரூபாய் தாளினையும் அவனிடம் காட்டி உருமினான். 

ரஞ்சிதனுக்கே நடந்ததை கேட்டு தலை கிறுகிறுத்து விட்டது. 

‘அடிப்பாவி தேனடை.. இப்படியா பண்ணுவ! யோகராசு இனி சும்மா இருக்க மாட்டானே!’ என்று உள்ளுக்குள் அலறிய ரஞ்சிதன், 

“அவ ஏதோ கோவத்துல தெரியாம அப்படி பண்ணி இருப்பா அமுதன். இதை பெருசு பண்ண வேண்டாமே. விட்டுடலாம்” என்று கெஞ்சுதலாக ரஞ்சிதன் பேச, 

“எப்படி விட முடியும்? ஹான்.. எப்படி விட முடியும்ன்னு கேக்குறேன்.. பணத்தை வீசி எறிஞ்சிட்டு அவ பாட்டுக்கு போறா! பணத்தோட அருமை தெரிஞ்சா இப்படி செய்ய மாட்டா ரஞ்சித். இந்தப் பணம் அவ சுயமா சம்பாதிச்சு இருந்தா அதோட அருமை அவளுக்கு தெரிஞ்சிருக்கும்! இந்தக் காசு அந்த கடை காம்ப்ளெக்ஸ்ல இருந்து வர்ற வாடகை தானே! அதான் இப்படி வீசி எறிஞ்சிட்டு போறா!” என்று எள்ளலாய் கூறிய அமுதகீதன், 

அந்த நோட்டுகளை கோபமாக உள்ளங்கைக்குள் வைத்து மேலும் கசக்கி “கேவலம் ஆயிரம் ரூபாய்! இதை எனக்கு ட்ரைவர் சார்ஜா வீசிட்டு போறாளா..!!” என்றவன் கசக்கிய பணத்தை கீழே வீசி எறிய,

சிறிய பந்தென உருமாறிய பணக் காகிதங்கள் அவன் வீசிய வேகத்தில் அந்த மொட்டை மாடியில் உருண்டோடியது! 

அவனின் செய்கையில் ரஞ்சிதன் முகமே மாறி விட்டிருந்தது. 

அமுதன் இடுப்பில் கையிட்டு கோபமாக நின்றிருக்க, நிதானமாய் அவனை ஏறிட்ட ரஞ்சிதனின் முகத்தில் ஒரு வித தீர்க்கம் தெரிந்தது.

அதே தீர்க்கத்துடன் அவன் கண்களைப் பார்த்து “தப்பு அமுதன்” என்றான் ரஞ்சிதன் பட்டென்று!

“என்ன தப்பு?” என்று அமுதன் கண்களில் கோபத்தை தேக்கி கேட்க, 

“இப்படி காசை கசக்கி கீழ எரியுறது தப்பு!” என்றான் ரஞ்சிதனும் பதிலுக்கு! 

“ஹலோ பாஸ்… உங்க தேனடையும் இதே மாதிரி தான் ஸ்டியரிங் மேல காசை எறிஞ்சா!” என்று கோபத்துடன் சொல்ல, 

“அவ செஞ்சதையும் நான் சரின்னு சொல்லல. ஆனா அவ அப்படிப் பண்ணி இருக்கான்னா நீயும் அந்த அளவுக்கு பேசி இருக்க! சீப் பீப்பில்ஸ்னு மரியாதை குறைவா வார்த்தையை விட்டிருக்க. அதனால தான் அவ உன்னை மதிக்கல” என்றவன், 

கீழே உருண்டோடி காற்றில் அசைந்து கொண்டிருந்த அந்த பந்தான நோட்டுக்களை எடுத்து “ஆனா இந்தப் பணத்தோட அருமை உனக்கு தான் தெரியல!” என்று கூற, “ரஞ்சித்” என்றான் அமுதன் கோபம் ஏறிய குரலில்! 

“எஸ் அமுதன். உனக்கு தான் இந்தப் பணத்தோட அருமை தெரியல. அவ உழைப்போட அருமையும் தெரியல” என்றவன், 

“நிச்சயம் இந்தக் காசு நீ நினைக்கிற மாதிரி வாடகை பணம் கிடையாது! அதை என்னால உறுதியாக சொல்ல முடியும்” என்று ரஞ்சிதன் அடித்துக் கூற, 

“பின்ன? வேற எந்தப் பணம்?” என்று நக்கலாக கேட்ட அமுதன், 

“அவுங்க அண்ணியோட பணமா?” என்று சந்தேகமாக கேட்க, 

இல்லை என தலையசைத்த ரஞ்சிதன், “இது தேனு உழைச்சு சம்பாதிச்ச பணம்! அவ தாரமங்கலம் போஸ்ட் ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்து மூணு மாசத்துக்கு மேல ஆச்சு. கண்டிப்பா இது அவளோட பணம் தான். வீடு வீடா போய் போஸ்ட் டெலிவரி பண்ணி, ஸ்கீம்ஸ் மார்கெட்டிங் பண்ணி அலைஞ்சு திரிஞ்சு அவ வேலை பாக்குறதுக்கான சம்பளத்தில இருந்து வந்தக் காசு இது!” என்றவன், 

“இந்தக் காசோட அருமை தெரியாம அவ உன் கிட்ட இதை வீசி இருக்க மாட்டா!” என்று உறுதியான குரலில் கூறினான் ரஞ்சிதன்! 

அமுதகீதனுக்கு அவன் சொன்னவற்றை கேட்டு அடுத்து எதையும் கூற முடியவில்லை. அவள் வேலைக்கு செல்லும் விஷயமே அவனுக்குத் தெரியாதே! 

“அவ காலேஜ் தான படிச்சிட்டு இருந்தா” என்று ரஞ்சிதனிடம் சந்தேகத்துடன் கேட்க, 

“அவ காலேஜ் முடிச்சு ஆறு மாசம் ஆகுது அமுதன். நீ ஆறு மாசமா உன் ரிசார்ட் விஷயமா ஏற்காட்டுல பிஸியா இருந்ததால உனக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்றவன், 

“அப்படி இல்லேன்னாலும் உனக்கு மங்கை அத்த ஃபேமிலி பத்தி தெரிஞ்சுக்கவும் விருப்பம் இருந்திருக்காது” என்று நேரடியாகக் கூற, அமுதகீதன் அவன் சொல்வதில் இருந்த உண்மையை உணர்ந்து அமைதியாக நின்றான். 

“நம்ம கிட்ட ஒரு விஷயம் அதிகமா இருக்கிதுன்றதுக்காக இல்லாதவங்களை இழிவா நடத்துணும்னு அவசியம் இல்ல அமுதன். நீ தரக் குறைவா பேசாம இருந்திருந்தா தேனுவும் உன் கிட்ட இப்படி நடந்துட்டிருக்க மாட்டா” என்ற ரஞ்சிதன், 

சுருண்டு கசங்கி இருந்த அந்த ஐநூறு ரூபாய் தாள்களை நீவி சரி செய்து, “இனி இந்தக் காசை குறைச்சு மதிப்பிட மாட்டேன்னு நினைக்கிறேன்” என்ற ரஞ்சிதன், அவன் விரல்களுக்கு இடையே அந்த பணத்தினை திணித்து விட்டு, “மனுஷங்களையும் தான்!” என்று கூறி, விறுவிறுவென கீழிறங்கி சென்று விட்டான். 

செல்லும் அவனையும் தன் கையில் அவன் திணித்து விட்டு சென்ற பணத்தையும் மாறி மாறி பார்த்த அமுதகீதன் என்ன நினைத்தானோ.. அந்த நோட்டுக்களை மடித்து தன் நெஞ்சுப் பகுதியை தொடும் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்! 

error: Content is protected !!
Scroll to Top