மலர் பாதம் பணிந்து..31

அத்தியாயம் – 31 

அமுதன் உணவு மேஜையை நெருங்க, வசுந்தலா பரிதவிப்பான முகத்துடன் மகனுக்கு பரிமாறினார். 

அருகே அமர்ந்திருக்கும் மனைவியை ஒரு முறை பார்த்தவன் தந்தையிடம் “என்ன ப்பா ஆச்சு?” என்று கேட்க, அவரும் நடந்ததை சொன்னார்! 

பெருமூச்சுடன் அவரைப் பார்த்தவன் “அன்னைக்கே இதைப் பத்தி பேசிட்டோமே அப்பா!” என்றான் அவரின் முகம் பார்த்தபடி. 

அமுதனுக்கு ஒரு புறம் அவரின் வார்த்தைகளை மறுக்கிறோம் எனும் சங்கடம். மற்றொரு புறம் அன்று தான் தெளிவாக சொல்லியும் தந்தை மீண்டும் இந்தப் பேச்சை ஆரம்பித்திருப்பதில் சிறு அதிருப்தி! 

அதை உணர்ந்த இன்பசேகரனும் “பேசிட்டோம் தான். ஆனா, இன்னைக்கு நேரடியா மருமக கிட்டயே கேட்டர்லாம்னு தான் கேட்டேன்!” என்றவர், மகனைப் பார்ப்பதை தவிர்த்து மருமகளிடம் பார்வையை திருப்பினார். 

“நீ உடனே வேலையை விடணும்னு இல்லமா. நல்லா யோசி! வேற என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் இந்த வேலையை விடு!” என்று அவர் முடிவை நாசுக்காக அவள் மேல் திணித்துக் கூறினார்! 

தேன்மலரிடம் அதற்கு மேல் பொறுமை இல்லை! உணவில் இருந்து கையை எடுத்து விட்டவள், பெரு மூச்சுடன் அவரைப் பார்த்து பேசத் தொடங்கினாள். 

“இந்த உலகத்துக்கு நான் வரக் காரணமா இருந்தவர் (அப்பா என்று சொல்ல அவளுக்குப் பிரியமில்லை! அப்படி சொல்லும் அளவிற்கு வரதனும் நடந்து கொண்டதில்லை! குடும்பத்திற்கு எந்த நல்லதையும் செய்திருக்கவுமில்லை. அவளுக்கு விவரம் தெரிந்ததில் இருந்தே அன்னையிடம் இருந்து நகை, பணம் என எல்லாம் வாங்கி ஏமாந்ததையும், ஒரு கட்டத்தில் அன்னையை அடித்து கொடுமை செய்து அவரின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி பணத்தை வாங்கி வரச் சொன்னதையும் கண் கூடாக கண்டிருக்கிறாளே..) இறந்த பின்னாடி தாத்தா எங்களுக்கு கொடுத்த அந்தக் கடை காம்ப்ளெக்ஸ்ல இருந்து வர்ற வாடகையை வச்சு தான் அம்மா, எங்களை வளத்தாங்க! அந்த மனுஷன் இறந்த பின்னாடி எங்களுக்கு தாய் மாமாவா இருக்க வேண்டிய நீங்களும்.. புருஷனை நம்பி நகை பணம்னு கொடுத்து ஏமாந்து போன உங்க தங்கச்சி மேல இருந்த கோபத்துல அப்படியே எங்களை ஒதுக்கி வச்சீட்டீங்க! எங்களோட நல்லா பேசி, அக்கறை காட்டின தாத்தாவும் ஒரு வருஷத்துல இறந்து போய்ட்டாங்க. ஒரு குடும்பத் தலைவனோட வழி காட்டுதல் இல்லாம, எங்கள நல்ல முறையில வழி நடத்த ரெண்டு தாய் மாமா இருந்தும் இல்லாம அனாதைங்க மாதிரி….” 

“மலர்….” என்று அமுதன் நடுங்கிய குரலில் இடையிட, “ப்ளீஸ்.. நான் பேசி முடிச்சிடுறேன்!” என்றவள் ஒரு வித பிடிவாதத்துடன் தொடர்ந்தாள்! 

“தெளிவான பக்குவமம் கண்டிப்பும் இல்லாத எங்க அம்மாவோட வளர்ப்புல தான் நாங்க வளந்தோம்! ரெண்டு தாய் மாமாவும் அவுங்க தங்கச்சி மேல இருக்க கோபத்தை அவுங்க குழந்தைங்க மேல காட்டி இருக்க வேண்டாம்னு தான் எனக்குத் தோணும்! நாங்க என்ன தப்பு பண்ணோம்? எங்கள ஏன் ஒதுக்கி வச்சீங்க நீங்க? அப்ப நாங்க சின்ன புள்ளைங்க தானே? எங்களுக்கு என்ன தெரியும்னு எங்களை நீங்க ஒதுக்கி வச்சீங்க? ஒரு வேளை வரதன் புள்ளைங்க வரதன் மாதிரி தான் வருவான்னு நினைச்சு எங்களை தள்ளி வச்சீங்களோ என்னவோ? ஆனா, அது ஒரு வகைல சரியா தான் போயிருக்கு! எங்க அண்ணன் குடிகாரனா மாறி இருக்கான்!” என்று விரக்தியுடன் இதழை வளைத்தவள், 

கலங்கிய கண்களோடு விக்கித்துப் போய் தன்னை பார்த்திருக்கும் மூத்த தாய் மாமனிடம் “ஏன் மாமா? என்னைக்காவது எங்களைப் பத்தி யோசிச்சுப் பாத்திருக்கீங்களா நீங்க? உங்க குடும்பம், குழந்தைங்கன்னு அப்படியே இருந்துட்டீங்க தான. தாத்தா போன பின்னாடி அப்படியே எங்களை மொத்தமா தலை முழுகிட்டீங்க தான! நீங்க எங்களுக்கு அடைக்களமோ ஆதரவோ கொடுத்திருக்க வேண்டாம்! எங்களை அன்போட அரவணைச்சு இருந்தாலே போதுமே! உங்க அன்பும், பாசமும், நேர்த்தியான வழி நடத்தலும் இருந்திருந்தா இந்நேரம் எங்க அண்ணா இப்படி ஒரு குடிகாரனா மாறி இருக்க மாட்டானோ என்னவோ? மொத்தமா எங்களை தண்ணி தெளிச்சு விட்டுட்டீங்க. இதுல எந்த விசேஷ வீட்டுல பாத்தாலும் எங்களை பாக்குறது பெரிய பாவம் மாதிரி நினைச்சுட்டு மூஞ்சிய திருப்பிட்டு போவீங்க. போதாக்குறைக்கு நீங்களும் கமலம் அத்தையும் சேர்ந்துகிட்டு தாத்தா கொடுத்த கடை காம்ப்ளக்ஸிலிருந்து வர்ற வாடகனால தான் இவங்க பொழப்பே ஓடுதுன்னு ஏளனமா வேற பேசுவீங்க.. நீங்க பாத்துட்டு போன பார்வையும் வீசிட்டு போன வார்த்தைகளையும் என்னால இப்ப வரைக்கும் மறக்க முடிஞ்சதில்ல மாமா. அதை எல்லாம் ஒரு பொம்பளப் பிள்ளையா எவ்வளவு கஷ்டப்பட்டு கடந்து வந்திருக்கேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்!” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், 

“நீங்க அப்படியெல்லாம் ஏளனமா பேசினததுக்காகவே நான் அந்த கடை காம்ப்ளக்ஸ்ல இருந்து வர்ற காசுல ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிடக் கூடாதுன்னு பிடிவாதமா நினைச்சிருக்கேன்! ரெண்டு நாள் பட்னி கிடந்து மயங்கி விழுந்து அம்மாட்ட அடி கூட வாங்கி இருக்கேன்! அதுக்கப்புறம் என்னால முடியல. சரி தாத்தா தந்தது தானேன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்குவேன். என்னோட நைன்த் ஸ்டாண்டர்ட்ல இருந்து பிளஸ் டூ வரைக்கும் கவர்மென்ட் ஸ்கூல்ல தான் படிச்சேன். அதனால எனக்கு ஸ்கூல் ஃபீஸ் இல்ல. அந்தக் காம்ப்ளெக்ஸ் காசுனால நான் என்னோட நாலு வருஷ ஸ்கூல் படிப்பை படிக்கலன்றது எனக்கு எவ்வளவு பெரிய ஆறுதலைக் கொடுத்ததுன்னு உங்க யாருக்கும் சொன்னா புரியாது!” என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டாள். 

துடைக்கத் துடைக்க வற்றாத நதியாக அது பெருகியது! 

பேரதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த இன்பசேகரன் மருமகள் முகத்தையே இமை சிமிட்டாமல் பார்த்திருந்தார். 

“எனக்கு எம்.பி.பி.எஸ் படிக்கணும்னு ஆசை. கார்டியாலஜிஸ்ட் ஆகணும்னு அவ்வளவு கனவு கண்டேன்! ஆனா, நான் பன்னெண்டாவது படிக்க ஸ்டார்ட் பண்ணப்ப தான் வீட்ல அண்ணாவோட குடி பழக்கம் பத்தித் தெரிய வந்தது! அண்ணி வயித்துல குழந்தையோட அண்ணன் கூட போராடிட்டு இருந்த நேரம்.. டைவர்ஸ் அது இதுன்னு பெரிய பிரச்சினை போய்ட்டு இருந்துச்சு.. அவ்வளவு மன அழுத்தம் எனக்குள்ள! என்னால படிப்புல சுத்தமா கான்சென்டிரேட் பண்ணவே முடியல! எவ்வளவு முயற்சி செஞ்சும் நான் எதிர் பார்த்த அளவு மார்க் எடுக்கல. மெடிசின் படிக்க முடியாம போனது எனக்குள்ள பெரிய அடி! காலேஜ்லயும் ஃபீஸ் கட்டி படிக்க வேண்டிய சூழல்! வேண்டாம்னு என்னால அம்மா கிட்ட சொல்ல முடியல. என்ன இருந்தாலும் ஒரு டிகிரி முக்கியம் இல்லையா? அதனால தாத்தா கொடுத்தது தான்னு அப்பவும் என்னைத் தேத்திக்கிட்டேன். இருக்கிறதுல ரொம்ப கம்மி ஃபீஸ் கட்டி படிக்கக் கூடிய டிகிரி தான் படிச்சேன்! அப்படி நீங்க ஏளனமா பேசின மாதிரி அந்தக்காசுல இருந்து தான் நாம படிக்குறோமேன்னு உள்ளுக்குள்ள அவ்வளவு உறுத்தும் எனக்கு! அதனாலேயே அந்த டிகிரி மூலமா வர்ற வேலை எனக்கு வேண்டவே வேண்டாம்னு ஒரு பிடிவாதம்.. வைராக்கியம் எனக்குள்ள! அதனால தான் என்னோட டெந்த் மார்க்கை வச்சு அப்ளை பண்ணி ஒரு எக்சாம் எழுதி இந்த வேலையை வாங்கினேன்!” என்றவள் அவரை நேராகப் பார்த்து, 

“எந்தக் காலத்திலயும் இந்த வேலையை நான் விட மாட்டேன்! இந்த வேலைன்னா எனக்கு ரொம்ப இஷ்டமும் கூட. நீங்க கேவலமா நினைக்கிற இந்த போஸ்ட் ஆஃபிஸ் வேலை என்னோட ஸ்கூல் படிப்புக்கான உழைப்பால கிடைச்சது! அதுல எனக்கு ஒரு பெருமை! நிம்மதி! அது அப்படியே இருந்துட்டு போகட்டும். இன்னொரு முறை இப்படிக் கேட்டு என்னை சங்கடப் பட கைக்காதீங்க மாமா!” என்று கனத்த குரலில் கூறியவள், 

“உங்களை கஷ்டப் பட வைக்கணும்னோ குத்திக் காட்டணும்னோ இதை எல்லாம் நான் பேசல. இன்னொரு தடவை இந்த வேலையை விடச் சொல்லி நீங்க என் கிட்ட சொல்லக் கூடாதுன்னு தான் இவ்வளவு தூரம் எல்லாத்தையும் பேசிட்டேன்! ஆனா, இவ்வளவு பேசுவேன்னு நானும் நினைக்கல! தப்பா எதுவும் பேசி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க!” என்றவளுக்கு அடுத்த வாய் உணவை உண்ணும் மன நிலை துளியும் இல்லை! 

ஆனால்,உணவை வீணடிக்கும் பழக்கம் அவளுக்கு இல்லை! எனவே 

தட்டிலிருந்த இரண்டு இட்லிகளை கடகடவென விழுங்கி விட்டு கையை கழுவிய வேகத்தில் படிகளில் ஏறி தங்களின் அறைக்கு சென்று விட்டாள்! 

எல்லோரும் பேசக் கூடத் திராணியின்றி அமர்ந்திருந்தனர். அதுவும் அவள் இறுதியாக பேசி விட்டுச் சென்ற வார்த்தைகளின் வலி இன்பசேகரனின் கண்களில் ஈரத்தை பரப்பி இருந்தது! 

ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்கக் கூட பயந்தவர்களாக அமர்ந்திருந்தனர். 

அமுதகீதனின் நிலையைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?  

நடு நெஞ்சிலேயே ஈட்டியை இறக்கியது போன்ற வலி! இந்த அளவிற்கு அவளுள் வேதனை இருக்கும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. 

அவளைப் புரியாமல் அவனும் அவர்களை பார்வையால் ஒதுக்கி இருக்கிறானே! ஆரம்ப நாட்களில் எவ்வளவோ பேசியும் விட்டானே! சீப் பீப்பில்ஸ் என்று கூட வார்த்தையை சிதற விட்டிருந்தானே! 

இன்றைய அவளின் வலி நிறைந்த வார்த்தைகளை கேட்ட பிறகு “நீ தான்டா சீப்!” என்று அவனின் மனசாட்சியே அவன் மீது கோபம் கொண்டது! 

இமை மீறத் துடித்த கண்ணீரை எச்சில் விழுங்கி உள்ளிழுத்துக் கொண்டான்! 

நெஞ்சம் மலர் மலர் என்றே துயரத்துடன் துடித்தது! 

எவ்வளவு அழகான காலை வேளை தங்களுக்கு விடிந்தது! அது தொடராமல் உணவு வேளையில் இப்படி ஒரு நெஞ்சை கனக்கும் நிகழ்வு நடந்தேறும் என்று யாரும் நினைக்கவில்லை. 

கிருஷ்ணாவிற்கு அவளின் பேச்சில் கண்ணீர் பெருகி இருந்தது!

சிறு பெண் தான் என்றாலும் அவளுக்கும் ஒதுக்கத்தின் வலி எந்த அளவு மனதை பாதிக்கும் என்று தெரியுமே! புரியுமே!

சாப்பிட்டு கொண்டிருந்த உணவை அப்படியே விட்டு விட்டு கையை கழுவிக் கொண்டு அண்ணியைக் காண ஓடி விட்டாள்!  

அதற்கு மேல் அமுதனும் அங்கே இருக்கவில்லை! மௌனமாக எழுந்து தங்கையின் பின்னே சென்றான். 

வசுந்தலா கணவனை கண்ணீருடன் பார்த்து “ஏன்க சாப்பிடும் போது இந்தப் பேச்சை எடுத்தீங்க!.. இப்ப பாருங்க.. யாரும் சரியா சாப்பிடாம அப்படியே எழுந்து போறாங்க!” என்று ஆதங்கமாக வினவ,

“நா..நான் சாதாரணமா தான் சொன்னேன் வசு.. ஆனா, என் தங்கச்சி மக மனசுல இவ்வளவு வேதனை இருந்திருக்கும்னு கொஞ்சமும் நினைக்கல!” என்றார் கலங்கிப் போன குரலில்! 

‘எங்களை அன்போட அரவணைச்சு இருந்தாலே போதுமே…’ என்று எத்தனை ஏக்கத்துடன் கேட்டாள்? 

அவளுள் எப்படி ஒரு வேதனை இருந்திருக்கும்? 

தான் செய்யத் தவறிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் இதயத்தை கூறு போட, பாரமேறிய நெஞ்சத்துடன் தானும் உண்ட வரை போதும் என எழுந்து அறைக்குள் சென்று விட்டார்! 

வசுந்தலாவிற்கு அடுத்து என்ன செய்ய என்று புரியாத நிலை! யாரைத் தேற்ற என்று கூட தெரியாமல் அப்படியே டைனிங் டேபிள் சேரில் தொப்பென்று அமர்ந்து விட்டார்! 

அண்ணனின் அறைக்கு வந்த கிருஷ்ணாவோ தேன்மலரைக் கட்டிக் கொண்டு அப்படி ஒரு அழுகை அழுதாள்!  

“சாரி அண்ணி.. சாரி அண்ணி… எனக்கு உங்களைப் புரியுது. விவரம் தெரிஞ்ச பின்ன எனக்கு ஒரு அத்தை இருக்காங்கன்னு தான் தெரியும். ஆனா, இவ்வளவு நடந்து இருக்கும்னு சத்தியமா தெரியாது. தெரிஞ்சு இருந்தா அம்மா அப்பா சொல்றதை எல்லாம் கேட்டிருக்க மாட்டேன். நான் உங்க கிட்ட நல்லா பேசி இருப்பேன். இப்படி எல்லாம் அவாய்ட் பண்ணி இருக்க மாட்டேன்” என்று கதறினாள்! 

இளையவளின் அழுகையில் தேன்மலருக்கு மனம் தவித்துப் போனது! 

கிருஷ்ணாவை யோசிக்காமல் எல்லாவற்றையும் கொட்டி விட்டோமே என்று தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டவள் அவளின் முதுகை வருடிக் கொடுத்தபடி “கிருஷ்ணா என்னைப் பாரேன்..” என்று சொல்ல, அதைக் கேட்கும் நிலையில் கிருஷ்ணா இல்லை. 

அந்த அளவிற்கு அண்ணியின் கண்ணீர் கிருஷ்ணரூபியை காயப்படுத்தி இருந்தது. 

அவளின் பின்னே வந்த அமுதனும் தங்கையின் வார்த்தைகளைக் கேட்டு சமைந்து போய் நின்று விட்டான். 

தானும் தந்தையின் வழியே நடந்திருக்கக் கூடாது! அவர்களை இந்த அளவிற்கு பார்வையால் ஒதுக்கம் காட்டி தள்ளி வைத்திருக்கக் கூடாது என்று ரணத்துடன் எண்ணிக் கொண்டான்! 

கசங்கிப் போன முகத்துடன் அறைக்குள் நுழையும் கணவனைக் கண்டதும் தேன்மலருக்கு நெஞ்சம் பதறியது!  

உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த அத்தனையும் ஒரே மூச்சில் பேசி இருக்கக் கூடாது என்று நூறாவது முறையாக தன்னை நொந்து கொண்டாள். 

கிருஷ்ணாவை தேற்றுவது பெரும் பாடாக இருந்தது. அந்த அளவிற்கு அவளின் அழுகை இருந்தது! 

“கிருஷ்ணா.. முதல்ல கண்ணத் துடை. இன்னைக்கு உனக்கு எக்சாம் இருக்கு வேற! இப்படி அழுதுட்டு இருந்தா எப்படி எக்சாம் எழுதுறது!” என்று சிறு கண்டிப்போடு அமுதன் அதட்டவும் தான் சற்று தெளிந்தாள்! 

“சாரி அண்ணி..” என்று மீண்டும் சொல்ல, 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல கிருஷ்ணா. நீ முதல்ல போய் ஒழுங்கா சாப்பிடு! அப்ப தான் எக்சாம்ல நல்லா கான்சென்ரேட் பண்ணி எழுத முடியும்!” என்று கூற, 

“நீங்களும் சரியா சாப்பிடல தானே. நீங்களும் வாங்க அண்ணி” என்று கூற, அவளின் பின்னே நின்றிருந்த கணவனை ஒரு பார்வை பார்த்தவள், 

“நான் வரேன். நீ போய் சாப்பிடு” என்று அவளை அனுப்பி வைத்தவள் கணவனிடம் வந்தாள். 

அவன் ஒன்றும் சொல்லவில்லை! என்ன சொல்ல முடியும்? 

புண்ணாகிப் போன இதயத்துடன் அவளைப் பார்த்து நின்றான். கண்களில் மெல்லிய நீர்ப் படலம்! மேலும் மேலும் அவளின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் அவனின் தலை தாழ்ந்தது! 

அவனை அப்படிக் காணவே முடியவில்லை தேன்மலரால்! 

குறையாத அழுத்தமும், தலை நிமிர்ந்த பார்வையும் அவனிடம் எப்போதும் இருக்கும்! 

தன் மீது நேசம் உருவாகிய பின்னர் அழுத்தம் நிறைந்த அவன் முகத்தில் புன்னகை இல்லாமல் இருந்ததில்லை! 

அப்புன்னகை அவனுக்குத் தனி அழகினை கொடுத்திருப்பதாக பல முறை யோசித்திருக்கிறாள். 

ஆனால் இன்று… 

என்ன செய்து வைத்திருக்கிறோம் என்று அவளாலயே நிதானிக்க முடியவில்லை! 

சற்று எக்கி அவனின் கன்னம் பற்றி தன்னைக் காண வைத்தவள் “ஏன் இப்படி இருக்கீங்க?” என்று கலங்கிய குரலில் கேட்க, அவனிடம் பதிலில்லை! 

“நான் ஏதோ ஒரு நினைப்புல… மாமா வேலைக்கு போகவே வேண்டாம்னு சொல்லிடுவாங்களோன்னு பயத்துல.. ஒரு அவசரத்துல.. என்னென்னமோ.. எல்லாத்தையும் கொட்டிட்டேன்… நீங்க ஏன் அது.. க்..கு..” என்றவள் அடுத்து பேசவில்லை! 

அந்த அளவிற்கு கணவனின் இறுகிய அணைப்பில் தெரிந்த வருத்தமும், மன்னிப்பும் அவளை செயலிழக்க வைத்தது! 

கூடவே அவன் கண்ணீர் துளிகள் வேறு அவள் உச்சந்தலையில் பட்டுச் சிதற, கதி கலங்கிப் போனாள் தேன்மலர்.

“என்னங்க.. ஏன்…. பிளீஸ்..” என்றவளுக்கு அவன் கண்ணீரைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை! 

“எல்லாத்துக்கும் சாரி மலர்!” என்று ஒட்டு மொத்த மன்னிப்பையும் ஒரே வரியில் நெஞ்சடைக்கும் குரலில் சொல்லியவன், 

“நடந்ததை எல்லாம் மாத்த முடியாது மலர். இனி உனக்கு, உன் குடும்பத்துக்கு.. இல்ல என் அத்தை குடும்பத்துக்கு நான் எப்பவும் கண்டிப்பா இருப்பேன்!” என்றான் உறுதியான குரலில்! 

“தெரியும்.. புரியுது. நீங்க இப்படி.. பிளீஸ்.. என்னால உங்களை இப்படி பாக்க முடியல. நீங்க நார்மல் ஆகுங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..” என்று விசும்பினாள்! 

அதில் அவனும் தன்னைத் தேற்றிக் கொண்டு தானும் தேறியவன் அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் வைத்து “வா கீழ போகலாம். கிருஷ்ணா வெயிட் பண்ணுவா” என்று அவளோடு கீழே வந்தான். 

கிருஷ்ணாவிற்காக தங்களை இயல்பாக காட்டிக் கொண்டு கணவன் மனைவி இருவரும் உணவை விழுங்கினர். 

தேன்மலர் வசுந்தலாவிடம் சங்கடமாக மன்னிப்புக் கேட்க, “நீ சொன்னதுல தப்பென்னமா இருக்கு? விடு! முடிஞ்சா இதை எல்லாம் மனசுல வச்சுட்டு இனியும் உன்னை கஷ்டப் படுத்திக்காத. இனி இந்த வீடு உன் வீடு. உன் விருப்பத்துக்கு மாறா யாரும் எதுவும் சொல்ல மாட்டோம். உன் மாமா உட்பட! இப்ப வந்து சாப்பிடு” என்றவர் மூவருக்கும் உணவை பரிமாறினார். 

இன்பசேகரன் இன்னும் அறையை விட்டு வெளியே வந்திருக்கவில்லை. 

தேன்மலர் வருத்தத்துடன் கணவனைப் பார்க்க, “அவர் கொஞ்ச நேரத்துல சரியாகிடுவாரு தேனு. நான் பாத்துக்கிறேன். நீ பத்திரமா போய்ட்டு வா” என்று மருமகளிடம் சொல்லியவர், 

அவளுக்கான லஞ் பேகினை அவள் கையில் கொடுத்து, மகளிடமும் அவளுக்கானதை நீட்ட, கிருஷ்ணா மெல்லிய திகைப்புடன் அன்னையைப் பார்த்தாள்.

இது போன்று எல்லாம் எதுவும் நடந்ததில்லை. இதுவரை அவளுடைய உணவுப் பை வேலையாள் மூலம் காரிற்கு சென்று விடும்! 

ஆனால் இன்று.. 

கிருஷ்ணா அதிர்ச்சியுடன் அன்னையைப் பார்த்து உறைந்து நின்றிருந்தாள்.

“என்ன பார்வை? பிடி!” என்று அவள் கையில் பேகினை கொடுத்தவர், “இதை எல்லாம் யோசிச்சிட்டு பரிட்சையை சரியா எழுதாம விட்ராத! ஒழுங்கா எழுது!” என்று சொல்லி அனுப்ப, கலங்கத் துடித்த கண்களை பிடிவாதமாக கட்டுப் படுத்தி ஒரு தலை அசைப்பை மட்டும் அவருக்கு பதிலாக கொடுத்து விட்டு கிளம்பினாள். 

தேன்மலர் வேலைக்கு செல்வதால் ஸ்கூட்டியை எடுத்தாள். இன்று வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் நேற்றே அன்னையின் இல்லத்தில் இருந்து ஸ்கூட்டியை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருந்தாள். 

மனைவி ஸ்கூட்டியை நெருங்குவதைக் கண்டவன் “நானே கொண்டு போய் விடுகிறேன் மலர்.. வா..” என்று அழைத்தான் அமுதகீதன். 

“இல்லங்க நான் ஸ்கூட்டிலேயே போறேனே.. எப்படியும் சாயங்காலம் வரனும் தானே..” என்று தயங்கியபடி தேன்மலர் கூற,

“சாயந்திரம் சேது உன்னை வந்து கூட்டிட்டு வருவாரு…” என்றவன் கூற, இதுவே தினமும் தொடருமோ என்று தேன்மலருக்குத் தயக்கம்! 

எனவே பதில் சொல்லாமல் நிற்க, 

“பிளீஸ்.. மலர்! இன்னைக்கு ஒரு நாள் தான். நோ சொல்லிடாத. நாளைல இருந்து நீ ஸ்கூட்டிலயே போ!” என்றான் கெஞ்சல் குரலில்! 

இன்று ஒரு நாள் தான் என்பதில் அவளும் ஒப்புக் கொண்டாள்! 

கிருஷ்ணாவை பள்ளியில் இறக்கி விட்டவன், மனைவியின் போஸ்ட் ஆஃபிஸ் வந்ததும் காரை நிறுத்தி விட்டு அமைதியாக அமர்ந்திருந்தான். 

அவனின் தெளிவில்லாத முகத்தைக் கண்டவளுக்கு மனம் என்னவோ போலாகி விட்டது. அவனின் உள்ளங்கையை பற்றிக் கொண்டவள், அவனை இயல்பாக்கும் நோக்குடன் “நாலு நாள்ல திரும்பி வந்திடனும் மிஸ்டர்.மலர்தாசன்! இல்லேன்னா நல்ல சண்டை பிடிப்பேன் உங்க கூட!” என்றாள் வேண்டும் என்றே! 

அவளின் மிஸ்டர் மலர்தாசனில் அவனின் முகம் நன்றாகவே புன்னகையை பூசிக் கொள்ள, “ஹே.. இதென்ன மலர்தாசன்?” என்று கேட்டான் தன் இயல்பை மீட்டுக் கொண்டவனாக! 

அதில் அவளும் நிம்மதி அடைய, “நீங்க என் மேல வச்சிருக்க லவ்வைக் கண்டு ரஞ்சி உங்களுக்கு வச்ச பேரு!” என்றவள் கலகலவென சிரிக்க, மனைவியை அன்போடு பார்த்தவன் “இடியட்..” என்று ரஞ்சிதனை வழமை போல் திட்டினாலும் இம்முறை அவன் முகத்தில் புன்னகையே வியாபித்திருந்தது. 

“நல்லா தான் இருக்கு இந்தப் பேரும். மலர்தாசன்!” என்று ஒரு முறை சொல்லிப் பார்த்து சிரித்தவன், மனைவியிடம் திரும்பி “தங்களின் உத்தரவுப்படியே இந்த மலர்தாசன் நான்கு நாட்களில் வந்து விடுவான் மகாராணி!!” என்றான் காதல் புன்னகையுடன்! 

ஆனால், மலர்தாசன் சொன்னது போல் நான்கு நாட்களில் திரும்ப வரவில்லை! இரண்டு வாரங்கள் கடந்து தான் ஏற்காட்டில் இருந்து திரும்பி வந்தான்! அதுவும் நெற்றியிலும் கையிலும் ஏற்பட்டிருந்த காயங்களுடன்! 

அதனைக் கண்டு தேன்மலர் துடித்துத் துவண்டு போனாள்!  அமுதம் பெற்ற காயத்தில் மலர் வாடி வதங்கிப் போனது! 

error: Content is protected !!
Scroll to Top