அத்தியாயம் – 30
“திவாவோட குடி பழக்கம் தெரிஞ்சு ஆறு மாசம் வரைக்கும் அண்ணி யாரு கிட்டயும் சொல்லவே இல்ல! நாமளே எப்படியாவது அவனை மாத்தலாம்னு அவன் கூட போராடி இருக்காங்க. அவனை Rehabilitation Centre ல கொண்டு போய் விட்டு, கவுன்ஸிலிங் கூட்டிட்டு போய்ன்னு எவ்வளவோ முயற்சி பண்ணாங்க. ஆனா, அவன் Rehabilitation Centre-ல வேலையை காரணம் காட்டி ‘இன் ஃபேஷன்ட்’டா ஜாயின் பண்ண முடியாதுன்னு ‘அவுட் பேஷண்ட்’டா சேர்ந்ததால காலைல இருந்து சாய்ந்தரம் வரை அங்க பேருக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு நைட் குடிச்சிட்டு தான் வந்திருக்கான்! ராஸ்கல்.. அப்ப அண்ணி ப்ரெக்னன்ட் வேற தெரியுமா?” என்று விசும்பியவள்,
“ஆஃபிஸ்ல பிரச்சனை பண்ணி, வேலையும் போய், குடிக்க காசு கேட்டு அண்ணியை நச்சரிக்கவும் தான் அவனைப் பத்தி அண்ணி எங்க கிட்ட சொல்லவே செஞ்சாங்க! அவன் குடிக்கிறான்னு தெரிஞ்சது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? ரொம்ப ரொம்ப கோபம்! ஆதங்கம்! வெறுப்பு! நம்ம கூட பிறந்தவன் குடிகாரனா அப்படின்னு அவ்வளவு கஷ்டமா இருந்தது” என்றாள் கூடிப் போன அழுகையுடன்!
அமுதன் அவள் சொல்வதை எல்லாம் மௌனமாகக் கேட்டபடி அவளின் முதுகினை மென்மையாக வருடிக் கொடுத்திருந்தான்.
இத்தனை ஆண்டுகளும் அவளின் ஆழ்மனதினுள் புதைந்த அழுத்தங்கள் எல்லாம் இன்று தன்னிடம் வெளிப்படுகிறது என்பதை ஒரு வித பாரத்துடன் உள்வாங்கிக் கொண்டான்.
“கோகுலன் பிறந்த பின்னாடியாவது அவன் குடியை நிறுத்துவான்னு எல்லாரும் நம்பினோம். ஆனா, அவன் திருந்தவே இல்ல. அதுக்கு மேலயும் அவன் திருந்த மாட்டான்னு தெரிஞ்சு அண்ணியோட அப்பாவும் அம்மாவும் மறுபடியும் ஆளுங்களை வச்சு பஞ்சாயத்து பண்ணாங்க. அண்ணா கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்க சொன்னாங்க. ஆனா, அண்ணி சம்மதிக்கவே இல்ல.. ஏன் நானுமே அண்ணியை டைவர்ஸ்க்கு ஓகே சொல்ல சொன்னேன்.. ஆனா, அண்ணி யார் பேச்சையும் கேக்கல. அதுக்கான காரணத்தை அவுங்க சொன்ன போது நான், அம்மா, அவுங்க அம்மா அப்பா, பஞ்சாயத்து வந்திருந்தவங்க எல்லாரும் வாயடச்சுப் போனோம்” என்றவளுக்கு இப்போதும் கவிரத்னா சொல்லிய காரணங்களை எண்ணி நெஞ்சம் அடைத்தது!
பெரியவர்களை வைத்து பஞ்சாயத்து நிகழ்ந்த போது கவிரத்னா விவாகரத்து வேண்டாம் என்று உறுதியாக மறுத்து விட, கவியின் அன்னை கடும் கோபத்திற்கு ஆளாகி இருந்தார்.
“எதுக்காகடி டைவர்ஸ் வேண்டாம்னு சொல்ற? குழந்தை வேற பிறந்தாச்சு.. குழந்தைக்காக கூட அவன் மாறல. இப்படியே இந்த குடிகாரனோட வாழ்ந்து உன் வாழ்க்கையையும் குழந்தை வாழ்க்கையையும் சீரழிக்க போறியா? முதல்ல அதைச் சொல்லு!” மகளிடம் ஆவேசத்துடன் இரைந்திருந்தார்.
கவியோ அன்னையின் ஆவேசத்தைக் கண்டு, “விவாகரத்து வாங்கினா மட்டும் இந்தக் குழந்தை அவரோடது இல்லேன்னு ஆகிடுமா அம்மா..? இல்லை.. நடந்தது எதுவும் மாறிடுமா? இல்ல அவர் தான் மாறுவாரா?” என்று விரக்தியுடன் கூறியவள்,
“இதெல்லாத்துக்கும் மேல தேனுவை யோசிச்சுப் பாருமா! சின்ன பொண்ணா இருந்தாலும் ரொம்ப பொறுப்பான பக்குவமான பொண்ணுமா. அவுங்க அண்ணன் குடிக்கிறார்னு தெரிஞ்சதும் எவ்வளவு கோபப்பட்டா தெரியுமா? இன்னும் காலேஜ் கூட போகாதவ. ஆனா, எனக்காக யோசிச்சு என் கிட்டயே வந்து நீங்க அம்மா அப்பா சொல்றதை கேளுங்க அன்ணின்னு சொல்றா. அதோட ரொம்ப அழுது தயங்கி தயங்கி பிற்காலத்துல நானும் அம்மாவும் உங்களையும் குட்டி தம்புவயும் அப்பப்ப பாக்குறதுக்கு மட்டும் பெர்மிஷன் கொடுங்கன்னு அழுதுட்டே சொல்றா!” என்றவளுக்கு தேன்மலருக்காகவே, விவாகரத்து வாங்கக் கூடாது எனும் உறுதி மனதில் வந்து அமர்ந்து கொண்டது!
“இப்ப நான் டைவர்ஸ் வாங்கிட்டு வந்தேன்னா என் வாழ்க்கைல பெரிய மாற்றம் என்ன வந்திட போகுது சொல்லுமா? மிஞ்சி மிஞ்சி போனா இனி நான் திவாகரன் மனைவி இல்லேன்ற சூழ்நிலை ஒரு வித ஆசுவாசத்தை தரும்! ஆனா, அதைக் கூட நிம்மதியா அனுபவிக்க முடியாது தானமா! நம்பி கல்யாணம் பண்ணிட்டு வந்தவன் குடிக்கிறான்… நாம எவ்வளவு முயற்சி செஞ்சும் அவன் மாறலேன்றது பெரிய அடியா நியாபகம் இருந்திட்டே தான் இருக்கப் போகுது” என்றவள், அடுத்து பேசியதை தான் யாரும் எதிர் பார்க்கவில்லை!
“என் வாழ்க்கைல இனி என்ன பெருசா நடந்திடப் போகுது..? ஆனா நான் அவரை விவாகரத்துப் பண்ணா தேனு வாழ்க்கை ரொம்ப பாதிக்கும்மா. அந்த பாதிப்பு இப்பத் தெரியாது. அவ காலேஜ் முடிச்சு வேலைக்கு எல்லாம் போன பின்னாடி அவளுக்கு வாழ்க்கைல கல்யாணம் பண்ற நேரம் வரும்! அப்ப எல்லாரும் என்ன தெரியுமா பேசுவாங்க? இந்தப் பொண்ணோட அப்பா பொழைக்கத் தெரியாம பொண்டாட்டி நகை, பணம்னு எல்லாத்தையும் வாங்கி யார் யாரையோ நம்பி ஏமாந்து செத்துப் போயிட்டாரு. இவ அம்மாவுக்கும் அவ்வளவு சுதாரிப்பு கிடையாது! அண்ணன் குடிகாரன்.. அவனை கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ணும் அவன் குடிகாரனானதால டைவர்ஸ் வாங்கிட்டு போய்ட்டா! குடும்பமே ஒரு விளங்காத குடும்பம்.. இப்படிப் பட்ட வீட்ல இருந்து பொண்ணெடுக்கவே வேண்டாம்’னு தான் பேசுவாங்க”
“சும்மாவே அத்தையோட கூடப் பிறந்த ரெண்டு அண்ணன்களும் தங்கச்சி, தங்கச்சி பிள்ளைங்கன்னு எல்லாம் உறவு பாராட்டுறது இல்ல. அதுவும் மூத்தவர்….! அத்தையை கிட்ட கூட சேத்துக்க மாட்டாரு. எந்த விசேஷத்துல பாத்தாலும் பார்வைலயே ஒதுக்கத்தை தான் காட்டுவாங்க. அவுங்க வீட்ல எல்லாரும் அத்த கிட்டயோ தேனு கிட்டயோ பேசி நான் பாத்ததே கிடையாது! அப்படி இருக்கப்ப நானும் டைவர்ஸ் வாங்கிட்டு வந்துட்டா நிலமை இன்னும் மோசமாகிடாதா? இப்ப என்ன? அவர் குடிகாரன்! வேலையும் போச்சு! நான் அதை ஏத்துக்குறேன். என் மாமியார் ஒன்னும் பொல்லாத ஆள் இல்ல. அதே சமயம் மகனுக்கு சப்போர்ட் பண்ணி அவர் குடிக்கிறதை என்கரேஜ் பண்ற ஆளும் இல்ல. அவுங்களும் எப்படியாவது அவனை நான் மாத்திடுறேன்னு தான சொல்றாங்க. தேனும் என் பக்கம் தான் நிப்பா.. அவுங்க ரெண்டு பேரும் என்னையும் பிள்ளையையும் பாத்துக்குவாங்க. நாங்க எல்லாரும் சேர்ந்து எப்படியாவது அவரை மாத்திடுவோம்! அப்புறம் என்னமா? என்னால டைவர்ஸ்க்கு ஒத்துக்க முடியாதுமா!” என்றிருந்தாள் ஒரே முடிவாக!
அன்று அவளின் பேச்சில் எல்லோரும் வாயடைத்துப் போயிருந்தனர்! இப்போது அதை மனைவியின் மூலமாக கேட்டறிந்து கொண்ட அமுதனும் வாயடைத்து தான் போனான்!
புகுந்த வீட்டின் நிலை உணர்ந்து தேன்மலரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவள் திவாகரனை விவாகரத்து செய்யாமல் இந்த வீட்டின் அடி வேராக, அவர்களை விட்டுக் கொடுக்காமல் உறுதுணையாக வாழ்ந்து வருகிற கவிரத்னாவின் மேல் அமுதனுக்கு பன்மடங்கு மரியாதையும் மதிப்பும் கூடித் தான் போனது!
“இப்படிப்பட்ட அண்ணிக்காகவாவது இவன் திருந்தனும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டேன். ஆனா, அது நடக்கல.
இதோ இப்ப வரைக்கும் அப்படியே தான் இருக்கான்..” என்றவளின் குரலில் அளவு கடந்த துயரம் மட்டுமே பரவிக் கிடந்தது!
குழந்தையின் பிஞ்சு முகம் பார்த்தாவது அவனின் போதைக்கு அடிமையாகிய குணம் சற்று மாறும் என்று சிறு நம்பிக்கை கொண்டாள் தேன்மலர்.
ஆனால், திவாகரன் கோகுலன் பிறந்தும் மாறவில்லை! குழந்தை பிறந்த பின்னாலும் போதையின் காந்தம் அவனை ஈர்த்துக் கொண்டே தான் இருந்தது.
அண்ணனின் மாறாத குணத்தில் தேன்மலருக்கு அவ்வளவு ஆக்ரோஷம்!
பிஞ்சுக் குழந்தையின் முகம் பார்த்துக் கூட இவனால் திருந்த முடியாதா என்று மனமுடைந்து போனாள்.
எல்லாவற்றுக்கும் மேல் அவனைப் பிரிந்து செல்லாமல் அவனோடு ஒரு வாழ்க்கையை வாழும் அண்ணியை எண்ணும் போதே மனமெல்லாம் பாரமாகி விடும்!
இப்போதும் அதே பாரத்துடன் கணவனின் மார்பில் சாய்ந்து கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தவள் “அவன் திருந்துற வழி தான் என்னன்னு தெரியலங்க! நானும் அவனை விட ஒன்பது வருஷம் சின்ன பொண்ணா இருந்தாலும் எவ்வளவோ மிரட்டிட்டேன். ரோஷம் வர்ற அளவுக்கு நொறுங்க பேசிட்டேன்! எதுக்கும் அவன் மாறல. சரி நான் கல்யாணம் ஆகி வந்த பின்னவாவது கொஞ்சம் மாறுவான்னு சத்தியமா எதிர் பார்த்தேன்.. ஆனா, இன்னைக்கு…” என்றவளுக்கு மேலும் பேச முடியாமல் தொண்டை அடைத்தது!
மனைவியின் வேதனை அமுதனுக்கும் கஷ்டத்தைக் கொடுத்தது! அதே சமயம் தன் மலரை வேதனைப்பட வைக்கும் அவளின் அண்ணன் மேல் ஆத்திரம் வந்தது!
நேரில் கண்டான் என்றால் சுளீர் என்று ஒரு அறை வைத்து அவனின் ஒட்டு மொத்த போதையையும் ஒரே நொடியில் இறக்கி விடுவான்!
இவன் எல்லாம் என்ன ஜென்மம்..? கட்டிய மனைவியையும் பாராமல், பெற்ற பிள்ளையையும் பாராமல், தான் மாற வேண்டும் என்று கோவில் குளம் சாமியார் என அலைந்து திரியும் அன்னையையும் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் இவன் போக்கிற்கு குடித்து விட்டு திரிகிறானே என்று அனலென தகித்தான்.
இனி தன் மலருக்கு அவளின் அண்ணனை நினைத்து துயரமோ.. வேதனையோ.. கோபமோ வர விடக்கூடாது!
என்ன செய்யலாம் என சில நிமிடங்கள் யோசித்தான்!
‘ஆடுற மாட்டை ஆடிக் கரக்கணும்! பாடுற மாட்டை பாடிக் கரக்கணும்! அப்படி இருக்கப்ப இந்தக் குடிக்கிற நாயை.. குடிக்க வச்சே தான் திருத்தனும்! வச்சு செஞ்சி திருத்திடலாம்! என்னோட மலருக்காக! அவளுக்காக அவுங்க வாழ்க்கையை இங்கேயே அர்ப்பணிச்ச அவ அண்ணிக்காக இதை செஞ்சே ஆகனும்!’
முடிவெடுத்து விட்டான் அமுதகீதன்! இனி திவாகரனின் குடி ஆட்டத்திற்கு முடிவு விழா உறுதி!
நெஞ்சில் சாய்ந்திருந்த மனைவியின் முகம் பற்றி தன்னைக் காண வைத்தவன், “எல்லாம் உடனே மாறிடாது தானே மலர். கொஞ்சம் கொஞ்சமா மாறலாம். மாற வைக்கலாம். இனி இதைப் பத்தி நீ யோசிக்காத” என்றவன்,
அவளின் கண்களை துடைத்து விட்டு “போ மலர். போய் உங்க அண்ணி கூட கொஞ்ச நேரம் இரு” என்று வாஞ்சையுடன் கூற,
“ஹ்ம்ம்..” என்று கண்களை நன்றாக துடைத்துக் கொண்டவள் கதவு வரை சென்று பின்பு மீண்டும் கணவனிடம் தயங்கி தயங்கி வந்தாள்!
“என்ன மலர்?” என்றவன் மென்மையாக வினவ, இத்தனை நேரம் தன்னை நெஞ்சில் தாங்கிக் கொண்டு தன் துயரங்களை கேட்டு, அதற்கு ஆறுதல் தந்து இப்போது அண்ணியிடம் செல்லச் சொல்பவனை அப்படியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை மலருக்கு.
அவன் என்னவென பார்க்கும் போதே மின்னலென அவன் இதழில் தன் இதழை அழுந்த ஒற்றி எடுத்தாள் தேன்மலர்.
தன் செயலில் விழிகள் விரிய திகைத்து எதிர் வினையாற்றக் கூட மறந்து நிற்கும் கணவனின் அதிர்வில் சிரித்தவள், மீண்டும் அதே போன்ற முத்தமொன்றை அவனுக்குக் கொடுத்து விட்டு, அவன் தோள்களை பற்றி எக்கி அவன் காதருகே இதழ்களை வைத்து, “உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் போல இருந்தது! நீங்க தான அன்னைக்கு ஒரு நாள் கல்யாணத்துக்கு அப்புறம் இந்தத் தேங்க்ஸ்ஸ வேற மாதிரி வாங்கிக்கிறேன்னு சொன்னீங்க! அதான் நானும் வேற மாதிரி கொடுக்கலாமேன்னு…” என்று கண்ணீர் தாங்கிய கண்களை சிமிட்டி சிரித்தாள்!
அமுதனின் பார்வை அப்படியே மாறிப் போனது! அதை உணர்ந்தவள் வேக வேகமாக அவனிடம் இருந்து விலக, அவள் இடையைப் பற்றி தன்னிடம் இழுக்கும் சமயம் லாவகமாக அவன் கைகளை விலக்கி அவனைத் தள்ளி விட்டு வெளியே ஓடிப் போனாள் மலர்ந்த முகத்துடன்!
அமுதனின் “மலர்…” எனும் அவஸ்தையான.. ஆசையான.. அழைப்பு அவளைப் பின் தொடர்ந்தது!
*************
இரண்டு வாரங்கள் கடந்த நிலையில்..
திருமணத்திற்கு என்று தேன்மலர் விடுமுறை எடுத்திருந்த நாட்கள் முடிந்திருந்தன.
இடைப் பட்ட நாட்களில் உறவினர்களின் விருந்து, சேலத்தில் ஆடம்பர ரிசப்ஷன், கோவில் பூஜை என எல்லாம் சிறப்பாகவே முடிந்திருந்தது.
திரும்ப அவள் வேலைக்கு செல்லும் நாளும் விடிய, தபால் அலுவலக சீருடையில் கிளம்பி கீழே வந்த மருமகளைக் கண்ட வசுந்தலா “இன்னைல இருந்து வேலைக்கு போகணுமா தேனு?” என்று கேட்க,
“ஆமா அத்த..” என்றபடி அவருக்கு முடிந்த உதவிகளைச் செய்தாள்!
நாளையில் இருந்து அவளுக்கு மதிய உணவை சமைத்துத் தயார் செய்து வைக்கச் சொல்லி சமையல் செய்யும் பெண்மணியிடம் நேற்றே சொல்லி இருந்தார் வசுந்தலா.
ஆகையால், கிருஷ்ணாவிற்கும் தேன்மலருக்கும் மதிய உணவு தயாராக இருந்தது.
அதனை பேக் செய்யத் தொடங்கியவரிடம் “நானே பண்றேன் அத்த..” என்றாள் தேன்மலர் சங்கடத்துடன்.
“இதுல என்ன இருக்கு தேனு? நான் பண்றேன். நீ போய் சாப்பிடு. வேலைக்கு நேரமாச்சு தான..” என்று சொல்ல, மெல்ல தலை அசைத்துக் கொண்டு உண்ண வந்தாள்.
கிருஷ்ணாவும் பள்ளிக்கு கிளம்பி வந்து விட, அவளைத் தொடர்ந்து இன்பசேகரனும் வந்து விட்டார்!
மருமகள் சீருடையில் வந்து அமர்ந்திருப்பதை கண்ட மனிதருக்கு முகம் சற்று மாறித் தான் போனது!
திருமணத்திற்கு முன்பே தங்கையிடம் “கல்யாணத்துக்கு அப்புறம் தேனு போஸ்ட் ஆஃபிஸ் வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் மங்க. சேலத்துல இருக்க ஃபேக்ட்டரிக்கு வரட்டும்.. அமுதன் கூட சேர்ந்து ஏற்காடுல அவன் ரிசார்ட் பொறுப்பை பாதியா ஏத்துக்கிட்டாலும் சரி தான்! இல்லேன்னா வேற தொழில் பண்ண நினைச்சிருந்தாலும் அதுக்கு என்ன பண்ணிக் கொடுக்கணுமோ கொடுத்திடலாம். ஆனா, இனி இந்த வேலை வேண்டாம்!” என்று உறுதியாக சொல்லி இருந்தார்.
அவரைப் பொறுத்த மட்டில் இனி இன்பசேகரனின் ஒரே மருமகள்.. தன் மகன் அமுதகீதனின் மனைவி.. வீடு வீடாக சென்று தபால் கொடுக்கக் கூடாது! அதற்கான அவசியமும் இல்லை என்றே நினைத்தார். எனவே தங்கையிடம் கண்டிப்பாக சொல்லி விட, மங்கையும் அண்ணனின் பேச்சிற்கு மறு பேச்சு பேசும் ரகமில்லையே!
எனவே வழமை போல் அவரிடம் “சரிங்க அண்ணே..” என்று தலையை அசைத்து வைத்து விட்டார்.
ஆனால் மகளிடம் சொன்ன போது அவளின் உக்கிரப் பார்வை மங்கையை கதி கலங்க வைத்தது!
“தேனு.. அண்ணன் கௌரவத்துக்காக தான் சொல்றாங்க.. புரியுது.. ஆனா, நீயும் இனி அந்த வீட்டு மருமக! அதுகேத்த மாதிரி நாம மாறிக்கிறது தானே நல்லது!” என்று மகளின் கோபத்திற்கு பயந்து பம்மியபடி தான் பேசினார் மங்கை!
தேன்மலரோ அன்னையிடம் “உங்க அண்ணன் கௌரவத்துக்காக எல்லாம் என்னோட வேலையை என்னால விட்டுத் தர முடியாதுமா. இந்த விஷயத்துல இனி நீங்க எதுவும் பேச வேண்டாம். நானே இதைப் பார்த்துக்கிறேன்” என்றவள் நேரடியாக அமுதனுக்கு அழைத்து வீட்டுக்கு வர சொல்லி அவன் வந்ததும் இன்பசேகரன் அன்னையிடம் பேசியதைப் பற்றி கூறி,
“உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னதுக்காக உங்க இஷ்டத்துக்கு என்னை நீங்க எந்தக் காலத்துலயும் வளைக்க முடியாது. என்னோட வேலை, சுயமரியாதை, தன்மானம் இதை எல்லாம் ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டேன். உங்க அப்பாவுக்கு அவரோட மருமக போஸ்ட் ஆஃபிஸ்ல வேலை செய்யக் கூடாதுன்னா அவர் என்னை பொண்ணு கேட்டு வந்திருக்கக் கூடாது. உங்களுக்கும் என் வேலையைப் பத்தி அதே எண்ணம் இருந்ததுன்னா இப்பவே சொல்லிடுங்க!” என்றவள் கோபத்துடன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசி இருந்தாள்.
அவளின் கோபத்தில் அமுதகீதனுக்கே ஒரு நொடி திக்கென்று ஆகிப் போனது!
“மலர்.. ஏன் இவ்வளவு கோபம்? நான் அப்பா கிட்ட பேசுறேன்..” என பொறுமையாக பேசியவனிடம்,
“இதை உங்க அப்பா கிட்டயே நேரடியாப் பேசறதுக்கு எனக்கு பயமோ தயக்கமோ கிடையாது. ஆனா, அவங்க திரும்ப ஏதாவது பேசி, அதுக்கு நான் மறுத்து பேசின்னு பிரச்சனை வந்திட கூடாது! அதுக்காக தான் உங்களை வர சொல்லி பேசுறேன்” என்றாள் அவளும் கோபம் குறைந்தவளாக!
“புரியுது மலர். நீ டென்ஷன் ஆகாத. அப்பாவ நான் சமாளிச்சுக்கிறேன்” என்றான் அமுதன் தன்மையாகவே!
அவளோ அழுத்தமாக அவனைப் பார்த்து “உங்க வருங்கால பொண்டாட்டி போஸ்ட் ஆஃபிஸ்ல வேலைக்கு போறது உங்களுக்கு கவுரவக் குறைச்சலா இருக்கும்னு ஃபீல் பண்றீங்களா?” என்றாள் பார்வையில் கூர்மையுடன்!
அவளின் பார்வைக் கூர்மையில் இவனுக்கு முறுவல் அரும்பியது. வருங்கால மனைவி அவனைப் பரிசோதிக்கிறாளே!
அவளின் கையை தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன் “என் பொண்டாட்டி எங்க.. என்ன.. வேலைப் பாத்தாலும் அதுல அவ தான் பெஸ்ட்டா இருப்பா! காக்கி சுடிதார், ரெட் ஷால் போட்டுட்டு நீ போஸ்ட் டெலிவரி பண்ற சின்சியாரிட்டிக்கு நானே பெரிய ரசிகன் தெரியுமா?” என்று குறும்பாக சிரித்தவன்,
“நம்ம வீட்டுக்கே போஸ்ட் டெலிவரி பண்ண வந்தப்ப சொந்தம்னு காட்டிக்காம கண்ணும் கருத்துமா போஸ்ட்டை கொடுத்துட்டு ‘எனக்கும் போஸ்ட் வந்திருக்கும் பார்த்துக் கொடுன்னு கேட்டதுக்கு கேட்ட பாரு ஒரு கேள்வி!!!” என்றதும் அவளுக்கும் பழைய நியாபகங்கள்! அதில் முறைப்பும் புன்னகையுமாக அவனைப் பார்த்து வைத்தாள்!
“என் பேர் என்னன்னு கூட தெரியாத மாதிரி கேட்ட போஸ்ட் மாஸ்டர் தானே நீ! உங்கள் சேவையைக் கண்டு அன்றே நான் விழுந்து விட்டேன் மிசஸ்.அமுதன்!” என்றான் முகம் விகசிக்க!
“நீ ஃப்ரீயா விடு. அப்பா கிட்ட நான் சொல்லி புரிய வச்சுக்குறேன்” என்றிருந்தான் நம்பிக்கையாக!
அவளும் அதில் புன்னகை முகமாக கோபத்தை கை விட்டிருந்தாள்! அமுதனும் தந்தையிடம் இதைப் பற்றி தெளிவாகப் பேசி இருந்தான். அதற்கு இன்பசேகரன் மிகுந்த அதிருப்தியுடன் மகனைப் பார்த்தார்.
“ப்ளீஸ்ப்பா.. இதை இப்படியே விட்டுடலாம். என்னால மலர கட்டாயப்படுத்த முடியாது. அவளுக்கு இஷ்டமானத செய்யறதுல எனக்கும் இஷ்டம்தான். அவ போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு போறது எனக்கு பெரிய பிரச்சனை இல்லப்பா. மலர் மலராவே நம்ம வீட்டுக்கு வரட்டும்” என்று மனைவியாகப் போகிறவளுக்காக உருக்கமாக தந்தையிடம் வேண்டி இருந்தான்!
இன்பசேகரனும் அதற்கு மேல் அதைப்பற்றி பேசியிருக்கவில்லை. ஆனால் இப்போது மருமகளை அந்த சீருடையில் கண்டதும் அவரையும் அறியாமல் அவரது முகம் மாறித்தான் போனது.
கூடவே மகளுடன் அவளின் பரீட்சையை பற்றி பேசியபடி உண்டு கொண்டிருந்தவளிடம் “வேலைக்கு போயே ஆகணுமாம்மா?” என்று தன்மையாகவே பேச்சினை ஆரம்பித்தார்.
தேன்மலருக்கு ‘இதென்ன திடீரெனக் கேட்கிறார்’ என மெல்லிய திகைப்பாக இருந்த போதிலும் அழுத்தம் நிறைந்த முகத்துடன் ஆமோதிப்பாக மட்டுமே தலை அசைத்தாள்!
“நம்ம தொழில்ல ஈடுபடலேன்னா சரி! வேற தொழில் கூட பண்ணலாமேமா? அதுவும் வேண்டாம்னா மேல படிக்கிறதுன்னாலும் கூட இங்க யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டோம்! ஆனா, இந்த வேலை எதுக்கு? வீடு வீடாப் போய் அலஞ்சு.. இதெல்லாம் தேவையா!” என்றார் அதிருப்தியும் எரிச்சலும் நிறைந்த குரலில்!
“தேவைதான்!” என இறுக்கமாக ஆரம்பித்தவள் பின்பு தன்னை சமாளித்துக் கொண்டு பெருமூச்சுடன் “கட்டாயம் இந்த வேலை எனக்கு தேவைதான் மாமா! நான் தான் கல்யாணத்துக்கு முன்னாடியே அவுங்க கிட்ட இதைப் பத்திப் பேசி உங்க கிட்டயும் சொல்ல சொல்லிட்டேனே..” என்ற தேன்மலரின் முகத்தில் நன்றாகவே இறுக்கம் படர்ந்து கொண்டது!
அன்று ஏற்காடு கிளம்பவென அதற்கு ஏதுவாக சின்ன டிராவல் பேக்குடன் கிளம்பி கீழே வந்திருந்தான் அமுதகீதன். அடுத்த நான்கு நாட்கள் அவனின் ஜாகை அங்கே தான்!
திருமணத்தின் காரணத்தால் அங்கே பாதிக்கும் மேலான வேலைகளை நந்தனைத் தான் கவனிக்கச் சொல்லி இருந்தான்!
இன்னும் ஆறு மாதங்களில் அவனும் நந்தனும் இணைந்து கட்டிக் கொண்டிருக்கும் அவர்களின் இரண்டாவது ரிசார்ட்டின் வேலைகளை முடித்து அதனின் திறப்பு விழாவை வைக்க வேண்டும்!
எனவே, அதற்கான வேலைகளில் இனி அவனின் அதிக நாட்கள் ஏற்காட்டில் தான் கழியும்! நேற்று இரவே மனைவியிடம் அதைப் பற்றி அவன் கூறி இருந்தான்.
திருமணமான பத்து தினங்களில் கணவனின் முதல் பிரிவை நினைத்துக் கலங்கி அவளாகவே அவர்களுக்கு இடையே இருந்த தலையணை சுவரினைப் படபடவென தள்ளி விட்டு அவன் கைகளுக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டாள்!
இரவு முழுவதும் அவன் கை வளைவிற்குள்ளையே தான் உறக்கமும்! விடிந்ததும் இருவரும் ஒன்றாகவே விழித்திருந்தனர்.
அவன் கை வளைவில் இருந்து பிரிந்து எழ மனமே இல்லாமல் அவன் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை வைத்து “நாலு நாள்ல வந்திடுவீங்க தானே!” என்று ஏக்கமும் கலக்கமுமாக கேட்டவளுக்கு அவனை இன்னும் நான்கு நாட்களுக்கு பார்க்கவே முடியாது என்பதை ஜீரணிக்க முடியவில்லை!
அமுதனுக்கும் பிரிவு வருத்தமாக இருந்தாலும், ஏனோ மனைவியின் ஏக்கத்தில் சிரிப்பு தான் வந்தது!
அவளைத் தன்னுள் மேலும் இறுக்கியபடி “நாலு நாள் என்ன… ஒரு வாரம் கூட ஆகலாம் மலர்! அங்கேயே இருந்துட்டு வரேனே? இங்க வந்தா மட்டும் பெருசா என்ன பண்ணிட போறோம்? இடைல தலைகாணி வச்சுட்டு ஆளுக்கொரு பக்கம் கம்முன்னு தூங்கப் போறோம்! அதுக்கு நான் அங்க தூங்குறேன்! நீ இங்க தூங்கு! சிம்பிள்!” என்று அவளைச் சீண்டினான் கணவனாக!
அவன் சொன்னதில் ரோஷமும் வீம்பும் பொத்துக் கொண்டு வந்தது தேன்மலருக்கு!
“உங்கள…. இன்னும் நாலு நாள் உங்களை பாக்க முடியாதுன்னு எவ்வளவு கவலையா நான் பேசினா.. நீங்க எப்படிக் கிண்டல் பண்றீங்க…? விடுங்க என்னை….” என்று கோபமாக விலகப் போனவளை மேலும் இறுக்கி அணைத்தவன் அவள் இதழை தனக்குள் எடுத்துக் கொண்டான்! அவளை சமாதானம் செய்யும் விதமாக!
அவனோடு முத்த சஞ்சாரத்தில் இணைந்தாலும் கீழே கிளம்பி வரும் முன்னர் அவனிடம் ஒன்றும் சொல்லாமல் முறுக்கிக் கொண்டு கோபமாக தான் போயிருந்தாள்!
அவளுக்கு அடுத்து கிளம்பி வந்தவனும் அவளிடம் நிச்சயம் நான்கு நாட்களில் வந்து விடுவேன் என்று சொல்லி அவளை சமாதானம் செய்து விட்டே போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கீழிறங்கி வந்தான்!
ஆனால், வந்தவன் கண்டது மனைவியின் இறுக்கம் படர்ந்த முகத்தையும், தந்தையின் அதிருப்தி நிறைந்த முகத்தையும் தான்!
கூடவே அவர்களின் சம்பாஷனையில் கலங்கிப் போய் நின்றிருந்த வசுந்தலாவும், பயந்து போய் உணவை விழுங்கிக் கொண்டிருந்த தங்கையையும் கண்டவனுக்கு என்னவானது எனும் கேள்வி மனதைக் குடைந்தது!
எதுவாக இருப்பினும் சமாளிக்கலாம் எனப் புருவங்களை சுறுக்கியபடி அவர்களை நெருங்கினான் அமுதகீதன்!