மலர் பாதம் பணிந்து..29

அத்தியாயம் – 29

சேலம் அருகே அரிசிபாளையம் எனும் கிராமத்தில் உள்ள அவர்களின் குல தெய்வக் கோவிலில் அன்றைய பூஜை சிறப்பாக முடிந்திருக்க, மாலை போல் தான் வீடு திரும்பி இருந்தனர் எல்லோரும்.

கிருஷ்ணா தேர்வு முடிந்து மதியமே இல்லம் வந்திருந்தாள். தேன்மலரைக் கண்டதும் ஓடிச் சென்று கட்டிக் கொண்டவள் “இன்னைக்கு எக்சாம் சூப்பரா பண்ணி இருக்கேன் அண்ணி. சென்ட்டம் எடுப்பேன்!” என்றாள் சந்தோஷத்துடன் நம்பிக்கையாக.

தேன்மலருக்கும் அவளின் சந்தோஷத்தில் புன்னகை பிறந்தது. அடுத்தத் தேர்வு எப்பொழுது எனக் கேட்டபடி அவளுடன் உள்ளே சென்றவள் இன்னும் ஓர் நாள் கழித்து தான் தேர்வு என்று கிருஷ்ணா சொன்னதும் “அப்ப இன்னைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ கிருஷ்ணா. ஒரு எட்டு மணி மேல படிக்கலாம். நீ படிக்கும் போது நான் உன் கூட இருக்கேன்” என்று சொல்ல கிருஷ்ணரூபிக்கு ஒரே ஆனந்தம்.

“இப்பப் போய் கொஞ்சம் ஃப்ரெஷ் அப் ஆகிட்டு வரேன்” என்று சொல்ல, கிருஷ்ணாவும் ஆர்வத்துடன் தலை அசைத்தாள்.

அவர்களின் பேச்சை கேட்டபடி இன்பசேகரன் புன்னகை முகத்துடன் அறைக்குள் செல்ல, வசுந்தலாவோ மருமகளிடம் “அதெல்லாம் அவ படிச்சுக்குவா தேனு. நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. காலைல இருந்து கோவில்ல இருந்தது. பூஜைல உக்காந்தது… அங்க இருக்க ஆத்துல தண்ணி எடுத்ததுன்னு நிறைய வேலை வேற” என்றவர்,

மகளிடம் கோபமாக “நீயா படிச்சுக்குவ தானே? அப்புறம் என்ன தேனு வரேன்னு சொன்னதும் சரின்னு சொல்ற! அவ நைட் தூங்காம உனக்கு உக்காந்து பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருப்பாளா?” வழமையான அதட்டலையும் மீறி வசுந்தலாவின் குரலில் அவ்வளவு காட்டம் வேறு!

அன்னையின் பேச்சில் கிருஷ்ணரூபி முகம் கூம்பி கண்கள் கலங்கி விட்டன. ஆனால், அதை சாதுர்யமாக இமை சிமிட்டி மறைத்துக் கொண்டவள் எழும்பாத குரலில் தேன்மலரிடம் “நீங்க ரெஸ்ட் எடுங்க அண்ணி. உங்களை நான் யோசிக்கவே இல்ல” என்று சொல்லி விட்டு வேகமாக தன் அறைக்குள் சென்று விட்டாள்.

காரை ஷெட்டில் நிறுத்தி விட்டு உள்ளே வந்த அமுதன் கண்டது கலங்கிய கண்களை மூடிக் கொண்டு அறைக்குள் ஓடிய தங்கையை தான்.

கவலை படிந்து கிடந்த மனைவியின் முகமும், கோபமாக இருந்த அன்னையின் முகத்தையும் வைத்தே வழக்கம் போல் கிருஷ்ணாவிடம் கோபத்தை காட்டி விட்டார் என்பதை உணர்ந்து கொண்டவன், “ஏன்மா கிருஷ்ணாவை எதாவது சொல்லிட்டே இருக்கீங்க?” என்று தன்னையும் மீறி குரலை உயர்த்தி இருந்தான்.

தேன்மலர் கணவனிடம் ‘வேண்டாமே’ என்பது போல் ஒரு பார்வை பார்க்க, “பின்ன என்ன அமுதா? வந்ததும் வராததுமா தேனுவ ரூம் கூட போக விடாம பேசிட்டு இருக்கா! இதுல நைட் எட்டு மணி மேல வேற அவளோட படிக்க வரேன்னு தேனு சொன்னதும் பேச்சுக்கு கூட மறுக்காம சரின்னு மண்டை ஆட்டுறா. சின்ன பொண்ணு அவ கிட்ட எப்படி இதை எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியும்? அதான் திட்டிட்டேன்” மகனிடமும் கோபம் தணியாமல் பேசியவர்,

“நீயும் யோசிக்காம அவ கிட்ட எட்டு மணி மேல படிக்கலாம்னு சொல்றியே தேனு!” என்று கூற, தேன்மலர் மௌனமாக நின்றாள்.

அவரின் பேச்சில் அவரின் எண்ணத்தை புரிந்து கொள்ள முடிந்தது கணவன் மனைவி இருவராலும்!

புதிதாக திருமணம் ஆனவர்கள் என்று தங்களுக்காக யோசித்து அவர் கிருஷ்ணாவை அதட்டி இருக்க, அன்னையின் கோபம் இரவில் தங்களின் தனிமையை நினைத்துத் தான் என்று உணர்ந்தவன் மௌனமாகி விட்டான்!

அவரிடம் தங்களுக்கு இடையே இருக்கும் தலையணை சுவர் பற்றி என்னவென்று விளக்க முடியும்?

எனவே, “கொஞ்ச நேரம் கிருஷ்ணா படிக்கும் போது அவ கூட இருந்தா ஒன்னும் தப்பில்லமா. இதுக்காக எல்லாம் கோபப்படாதீங்க ப்ளீஸ். எக்ஸாம் டைம் வேற.. கிருஷ்ணாவோட மைண்ட் செட் ரொம்ப முக்கியம்! அதனால அவ கிட்ட கோபமா பேசாதீங்க” என்று பொறுமையாகவே வலியுறுத்தினான்.

வசுந்தலாவும் தன்னை நிதானித்துக் கொண்டார்.

கவலையோடு இருந்த மருமகளிடம் “அவ சின்ன பொண்ணு தேனு. இப்படி தான் எதாவது பண்ணுவா. நீயும் நைட் அவ கூட படிக்க வர்றேன்னு சொன்னதும் கோபத்துல பேசிட்டேன். நீ எதையும் மனசுல வச்சுக்காத. போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு!” என்றார் தன்மையாக!

தன்னிடம் காட்டும் இந்தத் தன்மையை அவர் கிருஷ்ணாவிடம் காட்டி இருந்தால் பரவாயில்லை என்று பெரு மூச்சுடன் உள்ளுக்குள் வருத்தப் பட்டவள் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் “சரி அத்தை” என்று மட்டும் கூறி இருந்தாள்!

****************

மறு நாள் காலை இருவரும் மறு வீடு விருந்திற்காக கிளம்பி இருந்தனர்.

வீட்டிற்குள் நுழைந்ததுமே கவி நாத்தனாரை ஆரத் தழுவிக் கொண்டாள். கண்களில் மெல்லிய நீர்ப் படலம்.

தேன்மலர் இல்லாத வீடு.. கவிக்கு கசந்தது!

ஒரு நாள் தான் முடிந்திருந்தது.. அதற்கே அவளால் முடியவில்லை. காலை எழுந்த போது நாத்தனார் புகுந்த வீடு சென்றதை மறந்து வழக்கம் போல் அவளுக்கும் சேர்த்தே காஃபியை கலந்திருந்தாள்.

மூன்று காஃபியை கண்டதும் மங்கை “என்ன கவி? மூணு காஃபி போட்டிருக்க?” என்று கேட்டதும் தான் தேன்மலர் புக்ககம் சென்று விட்டதையே உணர்ந்தாள்.

முகம் உடனே கலங்கி இருந்தது. மங்கைக்கும் மருமகளின் நிலை கண்டு என்னவோ போலாகி விட்டது.

“தேனு இதே ஊர்ல தான் என் மூத்த அண்ணன் வீட்ல தான் வாக்கப்பட்டு போயிருக்கா கவி. அமுதன் தம்பி அவளை நல்லா பாத்துப்பார். நீ இப்படி கவல படாத! அதான் உனக்கு நான், திவா, கோகுல் இருக்கோம்ல” என்று அவளிடம் ஆறுதலாகப் பேச, மாமியாரின் பேச்சில் கவியின் முகம் கசங்கியது.

“நீங்களும் கோகுலும் இருக்கீங்க. ஆனா, எனக்காக உங்க மகன் இருக்காருன்னு சொல்லாதீங்க அத்த” என்று வெறுப்புடன் சொன்னவள்,

“இன்னைக்கு காலைல எழுந்ததும் என் ஹாண்ட் பேக்ல இருந்து எனக்கே தெரியாம பணத்தை எடுத்துட்டு வெளிய கிளம்பிட்டார்” என்றாள் கோபம் கலந்த விரக்தியுடன்!

மங்கைக்கு திகைப்பாகி விட்டது. இன்று மகளும் மருமகனும் மறு வீட்டு விருந்திற்கு வேறு வருவார்களே என்று உள்ளம் பதறியது!

“என்ன கவி சொல்ற? தேனும் மாப்பிள்ளையும் வருவாங்களே இன்னைக்கு! அவன் இப்படி குடிக்க போய்ட்டான்னு தெரிஞ்சா மாப்பிள்ளை என்ன நினைப்பார்?” என்று பதறியவர்,

“தேனுவைப் பத்தி சொல்லவே வேண்டாம். கல்யாணத்தன்னைக்கே மண்டபத்துல அவன் கிட்ட இனி திருந்துற வழியைப் பாருன்னு மிரட்டிட்டு தான் கிளம்பி இருக்கா. அதை எல்லாம் கேக்காம இவன் இப்படி… ஹையோ” என்று தலையில் கை வைத்து நின்று விட்டார்!

“கடவுளே இவன் ஏன் மாறவே மாட்டேங்குறான்! நானும் இவன் மாறனும்னு என்னன்னவோ பண்ணிட்டேன்… ஆனாலும் இவன் திருந்துற வழி தான் தெரியல” என்று முதல் முறையாக மங்கை மகன் மீதான வெறுப்புடன் கண்ணீர் சிந்தினார்.

கணவனை எண்ணி கவிரத்னாவிற்கு மனம் வெறுத்துப் போனது!

திருந்தாத அவனைப் பற்றி யோசித்து, இன்று வீட்டிற்கு விருந்துக்காக வரும் நாத்தனாரை கவலைக்ககு உள்ளாக்கக் கூடாது என தன்னை தேற்றிக் கொண்டவள், “அவரை விடுங்க! முதல்ல சமையல் வேலையை ஆரம்பிப்போம்! கவியும் மாப்பிள்ளையும் ஒன்பது மணிக்கு வந்துடுவாங்க” என்றவள் தேன்மலருக்கு பிடித்த உணவாக பார்த்துப் பார்த்து சமைத்திருந்தாள்!

தேன்மலர் வந்ததும் அவளிடம் கண்ணீர் முகத்தை காட்டக் கூடாது என்று எத்தனை முறை தன்னுள் எச்சரித்து கொண்டாலும் அவளைக் கண்ட நொடி கண்ணீர் தானாய்க் கண்களில் திரண்டிருந்தது கவிரத்னாவிற்கு.

“நீ இல்லாம என்னமோ மாதிரி இருக்குத் தேனு!” என்று கவி கரகரத்த குரலில் கூற, தேன்மலருக்கு இன்னும் கண்ணீர் வந்தது.

இரு பெண்களும் உணர்ச்சி வசமாக இருக்க, “கவி.. மாப்பிள்ளை வந்திருக்கார் பார். இன்னமும் கண்ணை கசக்கிட்டு நிக்குறீங்க ரெண்டு பேரும்..” என்று மங்கை கூறியதும் தான் இருவரும் சற்று தெளிந்தனர்.

அமுதனை வரவேற்ற கவி “சாரி தம்பி.. இத்தனை நாளும் தேனு இல்லாம காலை வேள ஓடுனதே இல்ல. அவ இல்லேன்றதே கனவு மாதிரி இருந்தது. அதான் அவளைப் பாத்ததும் அழுதுட்டேன்” என்றாள் சங்கடமான குரலில்!

அமுதனுக்கு அவர்களைப் புரிந்தது. எனவே, “இதுக்கு எதுக்குக்கா சாரி, கண்ணீர் எல்லாம்? ஒரே ஊர்ல தான் இருக்கோம். நீங்க எப்ப வேணும்னாலும் நம்ம வீட்டுக்கு வரலாம். மலரைப் பார்க்க உங்களுக்கு இல்லாத உரிமை என்ன?” என்றவன்,

அழுது சிவந்த கண்களோடு நிற்கும் மனைவியின் தோளில் கை போட்டு தன்னோடு அரவனைத்தபடி “மலரும் எப்ப வேணும்னாலும் இங்க வருவா.. பதினஞ்சு நிமிஷம் தான் நம்ம வீட்ல இருந்து இங்க வர்றதுக்கு. அப்புறம் ஏன் அழுகை?” என்று மனைவியின் முகம் பார்த்து புருவம் உயர்த்தியவன், “காம் டவுன் மலர்” என்றான் ஆதூரமான குரலில்!

தேன்மலர் ஒரு தலை அசைப்புடன் அவனையே பார்த்தாள். கவியிடம் ‘நம்ம வீடு’ என்றவன் கூறியது மனதிற்கு அத்தனை இதத்தை கொடுத்தது!

அமுதகீதனின் அரவணைப்பும் ஆதூரம் நிறைந்த வார்த்தைகளும் அதற்கு தேன்மலரின் தலையசைப்பும் விழி விலகாத பார்வையும் என அனைத்தையும் கண்ட கவிக்கும் மங்கைக்கும் மனம் நிறைந்து போனது!

“சரி சரி வாங்க சாப்பிடலாம்! எல்லாம் தயாரா இருக்கு” என்று சந்தோஷத்துடன் மங்கை கூற, இருவரும் உண்ணவென அமர்ந்தனர்.

இலையில் உணவுப் பதார்த்தங்களை பரிமாறிய கவியிடம் “கோகுல் எங்க அண்ணி?” என்று கேட்டவளின் பார்வை வீட்டை சுற்றி வந்தது!

“அவனுக்கு இன்னைக்கு ஸ்கூல் தேனு. மதியம் வந்திடுவான்” என்றவள்,

“நீ வரேன்னு அவன் கிட்ட சொல்லி இருந்தா ஸ்கூல் போயிருக்க மாட்டான். நேத்தெல்லாம் தேனுத்த வேணும்னு ஒரே அடம்.. சமாளிக்க முடியல என்னால..” என கவி கூறியதும்,

“மதியம் கோகுலை பாத்ததும் தான் நானும் கிளம்புவேன்” என்றவளின் பார்வை திவாகரன் இருக்கும் அறையின் பக்கம் நொடி நேரம் நீண்டு பதிய, அவனைக் காணவில்லை என்றதும் மெல்லிய அதிர்வுடன் கவிரத்னாவிடம் பார்வையைத் திருப்பினாள் தேன்மலர்.

கவி அவளிடம் வலியுடன் கண்ணமர்த்தி தலை அசைத்ததும் புரிந்து கொண்டாள்! அண்ணன் திருந்தவில்லை என!

அவ்வளவு தான்! தேன்மலரின் முகத்தில் சட்டென இறுக்கம் படர்ந்து விட்டது!

அத்தனை முறை சொல்லியும் இப்படி குடிக்கக் கிளம்பி விட்டானே என்று உடன் பிறந்தவன் மேல் அத்தனை ஆத்திரம் வந்தது!

மகளின் பார்வை மகனின் அறைப் பக்கம் சென்றதையும், அதற்கு கவியின் பார்வை அவளுக்கு பதில் சொன்னதும் மகளின் முகம் இறுகியதையும் கண்ட மங்கைக்கு மனம் பதறியது!

உணவை உண்ணாமல் கைகளால் அளந்து கொண்டிருந்தவளை படபடப்புடன் பார்த்தவர் “சாப்பிடுடி தேனு.. என்ன அளந்துட்டு இருக்க?” என்றார் முயன்று வரவழைத்த அதட்டல் குரலில்!

தேன்மலருக்கு உணவு இறங்குவேனா என்றது!

அண்ணன் எப்போது தான் மாறுவான்? எனும் விடை தெரியா வினா அவளுள்!

இன்று தாங்கள் வருவோம் என்று தெரிந்தும் குடி தான் முக்கியம் என்று கிளம்பியவனை நினைக்க நினைக்க கோபமும் ஆத்திரமும் தான் வந்தது.

கவிக்கு அவள் உணவை உண்ணாமல் அமர்ந்திருப்பது மனதை பிசைந்தது!

“சாப்பிடு தேனு..” என்று அவளும் சொல்ல, தேன்மலரால் சுத்தமாக முடியவில்லை!

தனக்காக அண்ணி பார்த்துப் பார்த்து சமைத்திருக்கிறாள் என்பது இலையில் நிரம்பி இருந்த தன் விருப்ப உணவு வகைகளைக் கண்ட போதே புரிந்தது!

அவளுக்காகவேணும் சாப்பிட வேண்டும் என தன்னை சமன் படுத்திக் கொண்டவளால் என்ன முயன்றும் நான்கு வாய்க்கு மேல் உண்ண முடியவில்லை.

எப்படியும் அன்னையும், அண்ணியும் அவனுக்கு பணம் கொடுத்திருக்க மாட்டார்கள் என்று அறிவாள்! அவனாகத் தான் அவர்களின் அனுமதி இல்லாமல் பணத்தை எடுத்து சென்றிருக்க வேண்டும் என்று யூகித்தவளுக்கு கவியை நினைத்து கண்கள் கலங்கியது!

இவனோடு அண்ணியின் வாழ்வு இப்படியே தான் செல்லுமா? எந்த மாற்றமும் நிகழாதா? என்னவானாலும் திவாகரனுக்குள் இருக்கும் குடிகாரன் அழியவே மாட்டானா என மனம் குமுறியது!

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தன் அருகே அமர்ந்திருக்கும் கணவன் அண்ணன் இல்லாததை கட்டாயம் கவனித்திருப்பான்!

கவனித்தவன் தன்னைப் பற்றி.. அண்ணி, அன்னையைப் பற்றி என்ன நினைப்பான்?

அவளுக்குள் பலவித சிந்தனைகளின் சடுகுடு ஓட்டம்!

முன்பு போல் தங்களைப் பற்றிய அபிப்ராயம் அவனுள் தோன்றுமோ என யோசித்த நொடி இமை மீறி இருந்தது மலரின் கண்ணீர்!

கண்ணீர் தாங்கிய கண்களுடன் மெல்ல கணவன் பக்கம் திரும்பிப் பார்த்தவள், அவன் தன்னையேப் பார்ப்பதை கண்டு மீண்டும் இலையின் மேல் பார்வையை குனிந்து கொண்டாள்.

கவிக்கும் மங்கைக்கும் தேன்மலரின் கண்ணீரில் மனம் அடித்துக் கொண்டது!

அவளோ ஒற்றை விரலால் நாசுக்காக கண்களை துடைத்துக் கொண்டு உணவுடன் போராடிக் கொண்டிருந்தாள்.

கரைக்கும் கடலுக்கும் அலையும் அலையாய் மனம் அலைய, அமைதியிழந்த மனதுடன் அவளால் ஒரு வாய் உணவைக் கூட உருப்படியாக உண்ண முடியவில்லை.

அவள் உண்ணாததைக் கண்ட அமுதனுக்கும் உணவு உள்ளே இறங்கவில்லை.

அவளின் பார்வை திவாகரனின் அறைப் பக்கம் நகர்ந்ததுமே அவள் முகம் இறுகத் தொடங்குவதை கவனித்து விட்டான்!

மங்கை, கவி இருவர் சொல்லியும் உணவை உண்ணாமல் அளந்து கொண்டிருந்தவளைக் கண்டவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் “இந்த ஸ்வீட்ட நீ சாப்பிடவே இல்லையா மலர்? சூப்பரா இருக்கு! இந்தா ஒரு வாய் சாப்பிடு.. வாய்ல வச்சதும் மெல்ட் ஆகுது..” என்று தன் இலையில் இருந்த அந்த இனிப்பினை எடுத்து மனைவியின் வாயருகே கொண்டு சென்றான்.

திடீரென்று அவன் பேசியதிலும், அவன் செயலிலும் தேன்மலர் விதிர்த்து விழித்தாள்!

“ஹ்ம்ம்.. சாப்பிட்டு பாரு..” என்றவன், “என்ன ஸ்வீட் க்கா இது?” என்று கேட்டபடி இன்னும் அவள் வாயருகே அந்த இனிப்பினை கொண்டு சென்றான்.

“பால் கேசரி தம்பி! இந்தக் கேசரி தேனுக்கு ரொம்ப இஷ்டம்!” தன்னை சமாளித்துக் கொண்டு புன்னகையுடன் பதில் கூறினாள் கவிரத்னா!

“ஹ்ம்ம்.. பாரு மலர்.. உனக்குப் பிடிச்ச பால் கேசரியாமே! அப்புறம் ஏன் வாங்காம என்னையே பாக்குற ‘ஆ’ காட்டு” என்றான் சிரிப்புடன்!

“மாப்பிள்ளை தராறு தானே.. சாப்பிடு தேனு” என்ற மங்கைக்கு மாப்பிள்ளை கொடுத்தாலாவது மகள் உண்ண மாட்டாளா என்று மனம் தவித்தது!

அன்னையும், அண்ணியும் இருக்கையில் என்ன செய்கிறான் இவன் என்று மெல்ல சங்கோஜம் அடைந்தவள் “இல்ல இல்ல.. நானே சாப்பிடுறேன்..” என்று மறுக்க,

“நீ முதல்ல இதை வாங்குவியாம்! அப்புறம் நீயா சாப்பிடுவியாம்!” என்றவன் அவள் பார்வை அன்னை, அண்ணியைப் பார்த்து விட்டு தன்னிடம் முறைப்புடன் வந்ததைக் கண்டு ‘ஹ்ம்ம்.. என்னோட மலர் ஃபார்முக்கு வந்தாச்சு!’ என்று சிரித்துக் கொண்டவன் வேண்டுமென்றே கையை விலக்காமல்,

“என்ன மலர் முறைக்கிற? யார் இருக்கா இங்க? அத்தையும் அக்காவும் தானே? நான் உனக்கு ஊட்டினா எதுவும் சொல்ல மாட்டாங்க மலர்! வாங்கிக்க!” நமட்டுச் சிரிப்புடன் மனைவியிடம் வம்பிழுத்தவன்,

“என்ன அத்தை.. அக்கா.. எதுவும் சொல்ல மாட்டீங்க தானே!” என்று அவர்களிடம் வேறு கேட்க,

“அதான.. நாங்க என்ன சொல்லப் போறோம்! உங்க பொண்டாட்டிக்கு நீங்க ஆசையா கொடுக்குறீங்க” என புன்னகையுடன் கவியும்,

“அச்சோ மாப்பிள்ளை.. அப்படி எல்லாம் இல்ல..” என்று மங்கையும் கூற,

“ஹ்ம்ம் பாரு.. எதுவும் சொல்ல மாட்டாங்க. வாங்கிக்க” என்றான் விடாமல்!

வாங்காமல் விட மாட்டான் என்று புரிந்து கொண்டவள் அவன் ஊட்டிய பால் கேசரியை கொஞ்சமாக வாங்கிக் கொள்ள, அவள் உண்டதும் கையில் இருந்த மீதியை அவன் உண்டிருந்தான்!

அவன் செயலில் தேன்மலருக்கு மற்றவை மறந்து முகம் சிவந்து போனது!

‘அண்ணி அம்மா முன்னாடி… அய்யோ!’ என கூச்சம் கொண்டவள் கண்களை மூடித் திறந்தாள்.

அவள் அடுத்து உண்ணாமல் இருப்பதை கவனித்தவன், “இந்தா.. வெள்ள பணியாரம் சூடா சூப்பரா இருக்கு..” என்று அதையும் அவள் வாயருகே கொண்டு செல்ல, தான் உண்ணவில்லை என்றால் கணவன் தனக்கு ஊட்டியே அனைத்தையும் உண்ண வைத்து விடுவான் என்றவள், அவன் வாயருகே கொண்டு வந்த பணியாரத்தை டபக்கென்று வாங்கி அவசர அவசரமாக தானே வாயில் போட்டுக் கொண்டாள்.

கூடவே “நீங்க சாப்பிடுங்க. எனக்கு வேண்டியதை நானே சாப்பிட்டுக்குவேன்” என முறைப்பாக சொன்னவள், சொன்னது போல் அனைத்து உணவுகளையும் நன்றாகவே உண்டிருந்தாள்!

அமுதனின் செயலால் சூழ்நிலையின் இறுக்கம் சற்று குறைந்தது போல் தோன்றியது அனைவருக்கும்.

காலை விருந்து நன்றாகவே முடிந்திருக்க, “மாப்பிள்ளையை உன் ரூம் கூட்டி போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க தேனு..” என்று மங்கை கூறியதும், சரி என்றவள் கணவனுடன் தன் அறைக்கு வந்தாள்.

வந்ததும் வேக வேகமாக அவனின் முகத்தையே அவசர அவசரமாக ஆராய்ந்தாள்!

அவனின் எண்ணம் என்னவாக இருக்கும்..? என்ன நினைக்கிறான் என்று அவன் முகத்தைப் பார்த்து படிக்க முயன்றாள் போலும்..

அவளின் கணவனோ அவளின் அறையை சாவகாசமாக சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்!

மனைவி தன்னையே அலைப்புறுதலுடன் பார்த்ததை கவனித்தாலும் அதனை தவிர்த்தபடி “என் பெட்டை விட உன் பெட் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு மலர். நாம ரெண்டு பேரும் படுத்தா.. ஒருத்தர் மேல ஒருத்தர் ஒட்டிட்டு கட்டிட்டு தான் படுக்கணும்!” என்றான் குறும்புச் சிரிப்புடன்!

அவன் பேசிய பேச்சில் தேன்மலரின் அலைப்புறுதல் எல்லாம் பின்னுக்கு சென்று விட்டன. அவன் வார்த்தைகளை கிரகித்தவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க, அவனோ அவளை மேலும் இயல்பாக்கும் நோக்குடன்,

“நான் ஊட்டி விட்ட பால் கேசரி எப்படி இருந்தது மலர்? உங்க அண்ணி டேஸ்ட்டா பண்ணி இருந்தாலும் நான் என் கையாள கொடுத்ததுக்காகவே அது சூப்பரா இருந்திருக்குமே??” என்று புன்னகையுடன் உதடுகளை மடித்து கண் சிமிட்டினான்.

ஊட்டி விட்டதை நியாபகப் படுத்தவும் தேன்மலரிடம் கோபம்!

“ஏன் இப்படி எல்லாம் பண்ணீங்க?” என்று மனைவி கோபமாகக் கேட்க,

“எப்படி பண்ணேன்!” என்றான் அமுதகீதன் மனைவியின் அறையை மேலும் சுற்றிப் பார்த்துக் கொண்டே ஒன்றும் அறியாதவன் போல்!

“அம்மா அண்ணி முன்னாடி ஊட்டி விட்டீங்களே!” என்று தேன்மலர் கோபத்தில் பல்லைக் கடிக்க,

“ஹ்ம்ம்.. ஆமா.. என் பொண்டாட்டிக்கு நான் ஊட்டி விட்டேன்.. இதுல என்ன இருக்கு?” என்று தோள் குலுக்கி கூலாக கூறியவனை தேன்மலர் இன்னுமே முறைத்தாள்!

“அவுங்க முன்னாடி ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க?” என்றவள் குரல் சோர்ந்து ஒலித்தது!

“நான் பண்ணது இருக்கட்டும் மலர்! நீ என்ன பண்ண?” நிதானமாகக் கேட்டவனின் குரலில் மெல்லிய அழுத்தம்!

அதை உணர்ந்த தேன்மலர் மௌனமாக பார்வையைத் திருப்பினாள்.

அவள் பார்வையில் தலையை கோதிக் கொண்டவன் பெரு மூச்சுடன் “சரி இதைப் பேச வேண்டாம்னு நினைச்சேன்.. ஆனா முடியல.. பேசிடலாம்..” என்றவன் பேசத் துவங்கினான்.

“உங்க அண்ணாவைப் பத்தி யோசிச்சிட்டு உங்க அண்ணி உனக்காகப் பாத்துப் பாத்து சமச்சதை எல்லாம் ஒரு வாய் கூட சாப்பிடாம கண்ணுல தண்ணி வச்சுட்டு உக்காந்திருந்த! அதைப் பாத்ததும் அவுங்க முகம் எப்படி ஆகிடுச்சு தெரியுமா? நம்மளோட கஷ்டமான உணர்வுகள் எதிர்ல இருக்கவங்களுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்கக் கூடாது மலர்! அதுவும் அவுங்களும் அதே கஷ்டத்தை அனுபவிக்கும் போது நாம இன்னும் ஜாக்கிரதையா இருக்கணும்! உன் முகம் டல் ஆனதும் உன் அண்ணி முகமும் அப்படியே மாறிடுச்சு..” என்றவன்,

“நாம வரும் போது உன் அண்ணா இல்லாதது உன்னை விட அவுங்களுக்கு தான் வேதனை.. கஷ்டம். சொல்லப் போனா ரொம்ப எம்பாரசிங்கா (Embarrassing) ஃபீல் பண்ணுவாங்க. வீட்டு மாப்பிள்ளை வரும் போது இந்த வீட்டோட பையனா இருந்து நம்ம புள்ள வரவேற்கலன்னும், நம்ம புருஷன் பக்கத்துல இல்லையேன்னும் ரெண்டு பேரும் யோசிக்காம இருந்திருப்பாங்களா? துயரப் படாம இருந்திருப்பாங்களா? ஆனா, அதை எல்லாம் உள்ள வச்சு மறைச்சுட்டு உனக்காக.. நமக்காக காலைல எழுந்து எல்லாமே செஞ்சிருக்காங்க. இதோ.. மதியத்துக்கும் செஞ்சிட்டு இருக்காங்க. அப்படி இருக்கும் போது நீ உன் அண்ணன் இல்லாததை பார்த்திட்டு ஒண்ணுமே சாப்பிடாம உக்காந்திருந்த! அதான் நான் ஊட்டினேன்!” என்றான் அவளை குற்றம் சாட்டும் குரலில்!

தேன்மலருக்கும் அதெல்லாம் விளங்கியதே! ஆகையால் தானே உணவைக் கூட விழுங்க முடியாமல் தவித்தாள். அது அண்ணி அன்னையையும் பாதிக்கும் என்பதை உணர்ந்தும் அவளால் தன் சிந்தனையில் இருந்து வெளி வர முடிந்திருக்கவில்லை!

இப்போது கணவன் அதனை எடுத்துச் சொன்னதும் முகம் கலங்கிச் சிவந்தது! தவறு செய்து விட்டோம் எனும் உணர்வுடன் அவள் தலை கவிழ, தாங்குமா மலரின் தலைவனுக்கு??

“மலர்..” என்று மென்மையாக அழைத்தவன், வாடி விட்ட அவளின் முகத்தை இரு கரங்களால் பற்றி நிமிர்த்தி நெற்றியில் முத்தம் வைத்து “ஒரு நாள் நீ இல்லாமயே உங்க அண்ணிக்கு கஷ்டமா இருந்திருக்கு மலர். அப்படி இருக்கப்ப விருந்துக்கு வந்த நேரம் சந்தோஷமா இல்லாம அவுங்களை வருத்தப் பட வைக்கிற மாதிரி நீயும் நடந்துக்க கூடாது. போய் அவுங்க கிட்ட நல்லா பேசு. உன் அண்ணாவைப் பத்தி எதுவும் கேட்காத. அவரைப் பத்தி பேசுறதுனால யாருக்கும் எந்த சந்தோஷமும் கிடைக்கப் போறதில்ல.. புரிஞ்தா?” என்று கேட்க, கணவனின் நெஞ்சில் தானாக சாய்ந்து கொண்டவள் மௌனமாக கண்ணீர் சிந்தினாள்.

அவள் கண்ணீர் மார்புச் சட்டைப் பகுதியை தீண்டியதும் “ஹே மலர்…” என்று அமுதன் பதற, “ப்ளீஸ் கொஞ்ச நேரம்..!” என்றவள் விசும்ப, அமுதகீதனுக்கு கஷ்டமாகி விட்டது.

“மலர்.. நான் பேசினதுக்கா அழர?” என்றவன் தவிப்புடன் கேட்க, அவன் மார்பில் தலையை முட்டியபடி இல்லை என மௌனமாக இடமும் வலமும் தலை அசைத்தவள்,

“நீங்க என்னைப் பத்தி, அண்ணி, அம்மாவைப் பத்தி என்ன நினைப்பீங்கன்னு நினைச்சு ஒரு மாதிரி இருந்தது… முன்ன மாதிரி..” என்று சொல்லும் போதே அவள் உதடுகள் துடிக்க.. “மலர்..” என்று கண்டிப்பான அழைப்பு அவனிடம்!

அவன் அதட்டலில் இன்னும் அவன் மார்பில் முகத்தை புதைத்து அழவே செய்தாள். தைரியத்தை இழந்த நொடியில் அவளால் தெளிவாக யோசிக்க முடியவில்லை.

“முன்ன மாதிரியே உங்களைப் பேசுறதுக்கும் உங்களைப் பாக்குறதுக்கும் நான் முட்டால் இல்ல! நான் என்ன நினைப்பேன்னு நினைச்சு நினைச்சே உன்னை நீ இப்படி கஷ்டப் படுத்திக்கக் கூடாது மலர்! நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நான் என் பொண்டாட்டியை, அவ குடும்பத்தை நினைக்கல! என் மலரை நேசிக்க ஆரம்பிச்சதே அவளை புரிஞ்சிகிட்டதால தான்! அப்புறம் நிச்சயம் ஆனதுல இருந்தே அத்தை, கவி அக்கா இவுங்களைப் பத்தியும் புரிஞ்சுகிட்டேன்! புரிஞ்சதா?” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி அவளுக்குத் தன்னை புரிய வைக்க முயன்றவன்,

“சரியான புரிதலும் பக்குவமும் இல்லாத நேரத்துல நான் பேசினதை யோசிச்சு இப்படி வருத்தப் படாத மலர்! நீ இவ்வளவு ஃபீல் பண்றதை பாக்கும் போது ‘ஏன்டா இப்படி எல்லாம் பேசின? மலரைப் பத்தி தெரியாம ரொம்பத் திமிராப் பேசி அவளை வேதனைப் படுத்தி இருக்கியேன்’னு என் மேல எனக்கே கோபம் வருது!” என்றான் சுய கோபம் கொண்ட குரலில்!

“இல்ல.. நான் எதோ.. ஒரு நியாபகத்துல…” என்றவள் மேலும் பேச முடியாமல் தேம்பினாள்!

“ஷ்ஷ் மலர்..” என்றவன் அவளின் முதுகினை வருடிக் கொடுத்து, “ஓகே.. இப்ப உனக்கு என்னைப் புரியுது தானே! இனி இப்படி யோசிக்கக் கூடாது” என்று மென்மையாகக் கூற, “ஹ்ம்ம்..” என்றாள் தேம்பலுடன்!

அவள் அழுகை இன்னும் குறையாமல் இருப்பதை கண்டவன், “என்னோட மலர் ரொம்ப ஸ்ட்ராங்! என்னையவே லெஃப்ட் அன்ட் ரைட் வச்சு செய்வா! அப்படி இருக்கும் போது இப்படி அழலாமா?” என்றான் அவளைத் தேற்றும் வகையில்!

“உங்களை லெஃப்ட் அன்ட் ரைட் வச்சு செஞ்சதெல்லாம் முன்னாடி… இப்ப என்ன வச்சு செய்றேன்..?” என்று அவன் மார்பில் இருந்து விலகாமல் கேட்டவள்,

“இந்த அழுகை அண்ணியை நினைச்சு தானா வருது?” என்றாள் துயரத்துடன்.

அவளின் தலையை வருடிக் கொடுத்தபடி “என் தங்கச்சிக்கு மாதிரி மலருக்கும் அவ அண்ணின்னா ரொம்ப இஷ்டம் போலவே?” என்று அமுதன் ஆச்சர்யமும் சந்தோஷமுமாக கேட்க,

அவன் அப்படிக் கேட்டதும் அவள் முகத்திலும் அழுகையை தாண்டி மெல்லிய புன்னகை!

அவன் மார்பில் தாடையை ஊன்றி நிமிர்ந்து பார்த்தவள் “கவி அண்ணி எனக்கு எப்பவும் ஸ்பெஷல் தான்! எனக்காக அவுங்க எவ்வளவு செஞ்சிருக்காங்க தெரியுமா? அண்ணனோட எவ்வளவு கஷ்டப் பட்டுட்டாங்க தெரியுமா?” என்றவளுக்கு மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

“திவாவை அவங்க டைவர்ஸ் பண்ணாததுக்கு அவுங்களோட முதல் காரணம்.. இனி டைவர்ஸ் பண்ணி மட்டும் என்ன ஆகப் போகுது.. குழந்தை அவனோடது இல்லைன்னு ஆகிடுமா? அவனோட வாழ்ந்த வாழ்க்கை இல்லேன்னு ஆகிடுமான்னு விரக்தி! இன்னொரு காரணம் நான்..!” என்றதும், அமுதகீதன் திகைத்துப் போய் மனைவியைப் பார்த்தான்!

error: Content is protected !!
Scroll to Top