மலர் பாதம் பணிந்து..28

அத்தியாயம் – 28

மனதினுள் எழுந்த திடீர் கேள்வியில் வசுந்தலா சமைந்து போய் நின்றிருந்தார். இன்பசேகரன் மனைவியின் தோள் தொட்டதும் தான் தன்னிலை அடைந்தார்.

ஹாலை வந்தடையும் போது மருமகளையும் மகளையும் நொடிக்கு அதிகமாகப் பார்த்தவர், அவர்கள் அருகில் இருந்த காஃபி மக்கையும், டம்ளரையும் கண்டு விட்டு புரிந்து கொண்டார். இருவரும் எப்போதோ எழுந்து காஃபி அருந்தி விட்டார்கள் என.

இன்பசேகரன் அங்கே வந்து விட, தேன்மலரின் பார்வை நிமிர்ந்து பெரியவர்களை கவனித்து விட்டன.

வசுந்தலா முகத்தை சீராக்கிக் கொண்டு “எழுந்திட்டீங்களா?” என்று இருவரிடமும் பொதுவாகக் கேட்டதும், தேன்மலர் “ஹ்ம்ம் அத்தை..” என்று கூற,

அன்னை குரல் கேட்டதும் கிருஷ்ணரூபியின் முகம் அப்படியே அமைதியாக மாறி இருந்தது. அதை தேன்மலரும் கவனிக்கத் தவறவில்லை.

மருமகள் தலைக்கு குளித்து விட்டு வந்திருப்பதை கவனித்த வசுந்தலா, “ஃப்ரிட்ஜ்ல மல்லிகை பூ இருக்கும் தேனு.. எடுத்து வச்சுக்க. அப்படியே பூஜை அறையில விளக்கேத்திடு” என்றவர் மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு அடுக்களைக்குள் நுழைந்து கொண்டார்.

கிருஷ்ணா அண்ணியிடம் “நீங்க போய் பூவை வச்சுட்டு விளக்கேத்துங்க அண்ணி. நானும் போய் குளிச்சிட்டு ஸ்கூலுக்கு கிளம்பி வந்துடுறேன்” என்று சொல்லி விட்டு தனது அறைக்கு சென்று விட்டாள்.

டைனிங் டேபில் இருந்த பகுதியில் தான் ஃப்ரிட்ஜ் இருந்தது. தேன்மலர் பூவை எடுக்கவென அங்கே வர, கணவன் அங்கே நாற்காலியில் அமர்ந்து காஃபி அருந்திக் கொண்டிருப்பதை கண்டு, “எப்ப எழுந்து வந்தீங்க?” என்றாள் மெல்லிய குரலில்.

“கிருஷ்ணாவும் நீயும் சீரியசா படிச்சிட்டு இருக்கும் போதே வந்தாச்சு. உங்களை டிஸ்டர்ப் பண்ண விரும்பல. அதான் இங்கேயே உக்காந்து காஃபி குடிச்சிட்டு இருந்தேன்” என்றவன்

கண்கள் மனைவியை ரசித்தது.

காதோர கூந்தலை மட்டும் எடுத்து பின்னி இருந்தாள். மீதிக் கூந்தல் முதுகில் படர்ந்து விரிந்திருந்தது.

லேசான ஜரிகை வைத்த பட்டுப் புடவை தான் கட்டி இருந்தாள். புது மஞ்சள் தாலியின் பளபளப்பும் நெற்றி வகுட்டின் அடர்ந்த குங்கும சிவப்பும் அவளுக்கு மேலும் அழகூட்டியது.

அவன் பார்வையை உணர்ந்தவள் வேகமாக ஃப்ரிட்ஜில் இருந்து தனக்கு வேண்டிய அளவு மல்லிகை பூவினை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

செல்லும் அவளைக் கண்டு புன்னகைத்துக் கொண்டவன், தந்தை வந்ததும் அவருடன் பேச்சில் மூழ்கி விட்டான்.

மேலே அறைக்குச் சென்று காய்ந்திருந்த கூந்தலை ஒழுங்காக வாரி பின்னலிட்டவள் இரண்டு முழம் பூவினை தலையில் வைத்துக் கொண்டாள்.

வியர்வையின் துளிகளில் நெற்றி வகுட்டில் குங்குமம் லேசாக அழிந்திருக்க, அதன் மேல் மீண்டும் நன்றாக குங்குமத்தை வைத்துக் கொண்டாள்.

கீழே வந்தவள் பூஜை அறைக்கு செல்ல, அங்கே வசுந்தலா சாமிப் படங்களுக்கு பூமாலைகள் சூட்டி எல்லாம் தயாராக வைத்திருந்தார்.

தேன்மலர் விளக்கேற்ற, காலை பூஜை சிறப்பாகவே முடிந்திருந்தது.

காலை உணவு வசுந்தலாவின் மேற்பார்வையில் சீக்கிரமே தயாராகி இருக்க, வசுந்தலா உணவை பரிமாறத் தொடங்கினார்.

“நான் பண்றேன் அத்த” என முன் வந்த மருமகளிடம்,

“நீயும் அமுதன் கூடவே உக்காந்து சாப்பிடு தேனு. நானே பரிமாருறேன்” என்றவரிடம்,

“கிருஷ்ணா வந்ததும் நான் அவளோட சாப்பிடுறேன் அத்த. நீங்க உக்காருங்க” என்றவள், அவளின் பதிலை எதிர்பாராமல் உணவை பரிமாற ஆரம்பித்து விட்டாள்.

கிருஷ்ணாவை கருத்தில் கொண்டு பேசிய மருமகளின் மீது முதல் முறையாக இன்பசேகரனின் பார்வை ஆச்சர்யத்துடனும் நன்மதிப்புடனும் படிந்தது.

மகனின் தேர்வு சோடை போகவில்லை என்பதை புரிந்து கொண்டவர், மருமகள் பரிமாறிய அன்றைய காலை உணவை மிகவும் திருப்தியாகவே உண்டிருந்தார்.

கிருஷ்ணா வருவதற்குள் மற்றவர்கள் உண்டு முடித்திருக்க, அவளோடு அமர்ந்து காலை உணவை சாப்பிடத் தொடங்கிய தேன்மலர், இளையவளையும் கவனித்தாள்.

“அண்ணனோட முன்னமே சாப்பிட்டு இருக்கலாமே அண்ணி? எனக்காக ஏன் இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்கீங்க..” என்று கிருஷ்ணா சங்கடமாக வினவ,

“உங்க அண்ணா, அத்த மாமா கூட சாப்பிட்டாச்சு. எனக்கு உன்னோட சாப்பிடணும் போல இருந்தது. நீ மட்டும் தனியா உக்காந்து என்னத்த சாப்பிடுவ?” என்றவள்,

“நேத்து மதியம் மண்டபத்துல நீ எங்களோட தானே உக்காந்து சாப்பிட்ட. அப்பவே நீ சாப்பிடுற அளவ கவனிச்சேன் நான். அவ்வளவு வெரைட்டீஸ் இருந்தது. நீ வெறும் ரசம் சாதத்தையும் கொஞ்சம் காய் மட்டும் கொரிச்சிட்டு எழுந்துட்ட. இப்படி சாப்பிட்டா உடம்புக்கு என்ன சத்து கிடைக்கும்?” என்று அக்கறையுடன் கடிந்து பேசினாள்.

அவளின் பேச்சில் கிருஷ்ணரூபி மட்டும் அல்லாது ஹாலில் அமர்ந்திருந்த அமுதனுக்கும் இன்பசேரனுக்கும் கூட நெஞ்சத்தில் சொல்லொண்ணா நெகிழ்வும் மகிழ்வும் படர்ந்தது.

“இப்ப நான் வைக்கிறதை எல்லாம் நீ சாப்பிடணும். வயிறு நிறைஞ்சு இருந்தா தான் ப்ரைன் ஒழுங்கா வேலை செய்யும். சோ, பேருக்கு சாப்பிட்டு எழாம நல்லா சாப்பிடனும்” என்றவள்

அவள் தட்டில் உணவை நிறப்ப, கிருஷ்ணரூபி கலங்கிய கண்களை சிமிட்டிக் கொண்டே தேன்மலர் வைத்த அனைத்தையும் சாப்பிட்டு முடித்திருந்தாள்.

மேலும் உணவை வைக்கப் போனவளிடம் “போதும் அண்ணி. எக்சாம் இருக்கு. அப்புறம் தூங்கிடுவேன்” என்று பாவமாகக் கூறினாலும், அவளின் அக்கறை நிறைந்த கவனிப்பிலேயே கிருஷ்ணரூபியின் மனமும் வயிறும் நிரம்பி இருந்தது.

பரீட்சை என்று சொன்னதும் தேன்மலரும் அதற்கு மேல் உணவை வைக்கவில்லை. தானும் உண்டு எழுந்தவள், அவளோடே ஹாலிற்கு வந்தாள்.

குல தெய்வக் கோவிலுக்கு செல்லவென வசுந்தலா பூஜை சாமான்களை எல்லாம் பரபரப்புடன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு உதவியவள் எல்லாம் எடுத்து வைத்த பின்னர், “அத்த.. மறு வீடு வர்றதுக்கு அம்மா போன் பண்ணி இருந்தாங்க” என்று கூற,

“ஹ்ம்ம்.. இன்னைக்கு கோவில் போய்ட்டு வந்திடலாம் தேனு. நாளைக்கு மறு வீடு போங்க” என்று வசுந்தலா கூறவும் சரி என்றவள் கவிக்கு அழைத்து தாங்கள் நாளை வருவதாக சொல்லி விட்டாள்.

எட்டரை மணி போல் கிருஷ்ணா பள்ளிக்கு கிளம்ப, அமுதன் தங்கையிடம் “நானே கொண்டு வந்து விடுறேன் கிருஷ்ணா. வா போகலாம்” என்று கூற,

தேன்மலரும் ‘பத்து மணிக்கு தான கோவில் கிளம்பணும்.. அதுக்குள்ள கிருஷ்ணாவை ஸ்கூல்ல விட்டுட்டு வந்திடலாம்’ என்று அவர்களோடு செல்ல நினைத்தவள் தானும் வருவதாகக் கூற,

வசுந்தலா இருவரிடமும் “அவளை சேதுவே கொண்டு போய் விட்டுட்டு வரட்டுமே. நாம கோவில் கிளம்பனும்” என்றார் மறுப்பாக.

அதில் கிருஷ்ணாவின் முகம் விழுந்து விட்டது. தேன்மலர் அத்தையின் வார்த்தையை எதிர்க்க முடியாமல் நிற்க,

“பத்து மணிக்கு தானேமே கோவில் போகனும்.. அதுக்குள்ள நாங்க கிருஷ்ணாவை ஸ்கூல்ல விட்டுட்டு வந்து கிளம்பிடுறோம்” என்றவன் தந்தையிடம் சொல்லி விட்டு மனைவியுடன் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு வெளியே காரிற்கு வந்தான்.

பின் இருக்கையில் கிருஷ்ணா ஏறிக் கொள்ள, அவளோடே அமர்ந்து கொண்ட மனைவியை நிறைவான புன்னகையோடு பார்த்தவன் காரை கிளப்பி இருந்தான்.

அவர்கள் கிளம்பியதும் வசுந்தலா கணவரிடம் “கல்யாணம் ஆன மறுநாள் காலைலயே ரெண்டு பேரும் அவளைக் கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வரலேன்னா என்னங்க..? சேது அவளைக் கொண்டு போய் விடுவார் தானே!” என்று கணவரிடம் குறை படிக்க,

“விடு வசு… நம்ம தான் இப்படி எல்லாம் ஒன்னா சேர்ந்து ரூபி கூட போக முடியல. அண்ணனும் அண்ணியுமாவது போகட்டும்” என்று நெகிழ்ந்த குரலில் சொன்னவர்,

“என் தங்கச்சி மகளை குறைச்சு நினைச்சது எவ்வளவு பெரிய தப்புன்னு…. நம்ம வீட்டுக்கு மருமகளா வந்த அடுத்த நாளே நிரூபிச்சிட்டா இந்த தேனுப் பொண்ணு. இப்ப தான் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வசு. அமுதன் மலரை விரும்பினது தப்பே இல்ல” என்றவர்,

“நீ எல்லாத்தையும் பாத்து எடுத்து வை. நானும் போய் ரெடி ஆகிட்டு வந்திடுறேன். அவுங்க வந்ததும் கிளம்பலாம்” என்று கூறி அறைக்கு நகர்ந்து விட்டார்.

வசுந்தலாவிற்கு தான் கணவனின் வார்த்தைகளில் மனம் என்னவோ போல் தடுமாறியது.

தேன்மலர் மருமகளாக வந்தது அவருக்கும் நிறைவு தான். ஆனால், கிருஷ்ணாவுடன் அவளின் பிணைப்பு அவரின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக குற்ற உணர்வில் தள்ள ஆரம்பிப்பது போல் தோன்ற, அதற்கு மேல் அதை சிந்திக்க விரும்பாதவராய் அடுத்த வேலையை கவனிக்கச் சென்று விட்டார்.

பள்ளிக்கு வந்து சேரும் வரை கிருஷ்ணாவிடம் தேர்வு குறித்து பேசிக் கொண்டு வந்தாள் தேன்மலர்.

“முதல்ல பத்து நிமிஷம் குவெஸ்டின் பேப்பரை ‘கோ த்ரூவ்’ பண்ணிடு கிருஷ்ணா. எதுக்காவது பதில் தெரியலேன்னா பதட்டப்படாம யோசி. படிச்சது கண்டிப்பா நியாபகம் வந்திடும். அப்படியே மறந்திட்டா அந்த குவெஸ்டின்ல டைம் வேஸ்ட் பண்ணாம அடுத்த குவெஸ்டினுக்கு ஆன்சர் பண்ண ஸ்டார்ட் பண்ணு. எதையும் மிஸ் பண்ணாம.. எல்லாத்தையும் அட்டன் பண்ணிடு.. டைம் குள்ள முடிச்சிட்டு லாஸ்ட் டென் மினிட்ஸ் எல்லாத்தையும் வெரிஃபை பண்ணு..” என்று தனக்குத் தெரிந்த வரை அவளைத் தயார் படுத்தினாள்.

அமுதன் கண்ணாடி வழியே மனைவியை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தங்கைக்கு தாயாக இருந்து அவள் கூறும் அறிவுரைகள் அவன் நெஞ்சத்தை நிம்மதியினால் நிரம்பி வழியச் செய்தது.

நிச்சயம் தேன்மலர் கிருஷ்ணாவிற்கு அண்ணியாக மட்டுமல்லாமல் அன்னையாகவும் வாழப் போவது அத்தனை திண்ணம்!

தங்களுக்கு திருமணமான அடுத்த நாளே மனைவி கிருஷ்ணாவின் மீது காட்டும் அன்பும் அக்கறையுமே அதற்கு சாட்சி!

இந்த நொடியே அவளை கை வளைவிற்குள் வைத்து முகம் முழுக்க முத்தங்கள் வைக்க வேண்டும் எனும் பெருங்காதலை எப்படியோ அடக்கிக் கொண்டான்.

பள்ளி வந்ததும் கிருஷ்ணாவுடன் இருவரும் கீழே இறங்க, அண்ணன் அண்ணி இருவரையும் கண்ணார கண்டவள் உணர்ச்சி மிகுதியில் தேன்மலரின் இடையோடு இறுக கட்டிக் கொண்டாள்.

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணி!” என்று கரகரத்த குரலில் கூறியவள்,

“இதே மாதிரி எல்லா எக்சாம்கும் என்னை நீங்களும் அண்ணாவும் கொண்டு வந்து விடுவீங்களா?” என்று ஆசையும் ஏக்கமுமாக கேட்டாள் சிறு பெண்!

தேன்மலருக்கு அவளின் ஏக்கம் என்னவோ போலானது. அதை மறைத்துக் கொண்டு “அதுக்கென்ன? கண்டிப்பா கொண்டு வந்து விடுவோம். இப்ப நீ போய் எக்ஸாம் நல்லா எழுதிட்டு வா. சாய்ந்தரம் பாக்கலாம்” என்றதும் கிருஷ்ணா கண்களை எட்டும் புன்னகையுடன் வகுப்பறை கட்டிடத்தை நோக்கி நகர்ந்ததும் கணவன் பக்கம் திரும்பினாள்.

அவன் அசையாமல் இவளையே பார்த்து நிற்க,

“கிளம்பலாம்ங்க. கோவிலுக்கு நேரமாச்சு” என்க, “ஹ்ம்ம்..” என்றவன் அடுத்து இல்லம் வந்து சேரும் வரை மௌனமாகவே இருந்தான்.

தேன்மலரும் அவனிடம் எதையும் பேசவில்லை. ஆனால், அவனின் மௌனம் என்னவோ புதிதாகத் தோன்றியது. அவ்வப்போது தன்னை அவன் பார்க்கும் உள்ளார்ந்த நேசப் பார்வை வேறு இதயத்தினுள் குறுகுறுப்பினை மூட்டியது.

வீட்டிற்கு வந்ததும் வசுந்தலா கையில் சில நகைப் பெட்டிகளுடன் அவளிடம் எதோ சொல்ல வர, “அம்மா.. நாங்க போய் ரெடி ஆகிட்டு வந்திடுறோம்” என்று அவசர அவசரமாக அன்னையிடம் சொன்னவன், மனைவியின் உள்ளங்கையை பற்றிக் கொண்டு மாடிப் படிகளில் வேகமாக ஏறி இருந்தான்.

மகனின் பதிலிலும் வேகத்திலும் வசுந்தலா புன்னகையுடன் நகர்ந்து விட்டார்.

அறைக்கு வருவதற்குள்ளேயே தேன்மலர் கணவனின் வேகத்தில் தடுமாறினாள்.

“மெதுவா மெதுவா.. ஏன் இப்படி ஓடுறீங்க.. என்னால உங்க ஸ்பீடுக்கு ஏற முடியல. புடவை வேற தடுக்குது” என்றாள் அவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி.

விரைவாக அவளை அறைக்குள் அழைத்து வந்து விட்டவன், வந்த வேகத்தில் அவளை இறுக அணைத்துக் கொண்டான்!

காற்று கூட புக முடியாத அளவிற்கான இறுகிய அணைப்பு! தேன்மலருக்கு

அவன் கொடுத்த இறுக்கத்தில் மூச்சு முட்டிப் போனது.

“கொஞ்சம்.. கம்மியா.. பிளீஸ்…” என்று அவனின் அணைப்பில் திணறினாள் பெண்!

அவனோ அவளின் முகத்தோடு முகம் வைத்து, நெற்றி முட்டி “கிருஷ்ணாவுக்கும் அம்மாவுக்கும் அவ்வளவு க்ளோஸ் பாண்டிங் இல்ல மலர்” என்றான் குரல் கமற.

“ஹ்ம்ம். தெரியும்” என மலர் அமோதித்ததும் அமுதன் பட்டென்று விலகி அவளைப் பார்க்க,

“ஹ்ம்ம். தெரியும்.. புரிஞ்சுகிட்டேன்” என்றாள் கண்களை மூடித் திறந்தபடி.

அமுதன் என்ன சொல்வதென்று கூடத் தெரியாமல் திணற, “அத்தை வந்துட்டா, அவுங்க குரல் கேட்டுட்டா கிருஷ்ணா முகம் அப்படியே மாற ஆரம்பிச்சிடுது. அவுங்க எதாவது கேட்டாலோ சொன்னாலோ சுருக்கமா அமைதியா பதில் சொல்றா. அம்மான்னு கூப்பிடுறது கூட ரேர் போல. அதை வச்சே புரிஞ்சுக்கிட்டேன்” என தான் புரிந்து கொண்டதை சொன்னவள், அவனிடம் ஏன் எதனால் இப்படி என்றெல்லாம் கேட்கவில்லை.

நிச்சயம் அக்காரணம் எல்லாருக்கும் ரணமாக தான் இருக்கும் என்று ஒரு யூகம் அவளுக்கு!

அதனைப் பகிரும் போது அவனுக்கும் வலிக்கும் தானே!! எனவே, தான் புரிந்து கொண்டேன் என்பதை மட்டும் அவனிடம் சொல்லி விட்டவள், அவனிடம் இருந்து எதையும் கேட்க விழையவில்லை.

அமுதனுக்கு அதுவே அவளிடம் எல்லாவற்றையும் சொல்லத் தூண்டியது.

அன்னைக்கு கிருஷ்ணாவின் மீதான ஒதுக்கும்,பாசமின்மை, இன்று வரை அவரின் மாறாத மன நிலை, என அனைத்தையும் சொன்னவன் அவர்களுக்குள் இருக்கும் உறவு நிலையைப் பற்றி விளக்கி,

“எனக்கு அண்ணியா வரப் போறவங்க அம்மா மாதிரி இருந்திடக் கூடாதுன்னு கிருஷ்ணா என் கிட்ட ரெக்குவஸ்ட் வச்சிருந்தா மலர்” என்றான் கரகரத்த குரலில்!

கணவன் சொன்னதை எல்லாம் கேட்டு விக்கித்துப் போனவளுக்கு நெஞ்சம் அடைத்தது! கண்கள் கலங்கி விட்டன.

பொது இடங்களில் எதாவதுவிசேஷ வீட்டில் இருவரையும் பார்த்தவளுக்கு அவர்களின் உறவு நிலை பற்றி எதுவும் வித்தியாசமாக தோன்றியதில்லை.

ஆனால், திருமணமாகி வந்த நேற்று அந்த வித்தியாசத்தை உணர்ந்திருந்தாள்.

இவ்வளவு வருடங்களாக தாய் மகள் இடையே இருக்கும் உறவுப் பாலம் சிதைந்து போய் இருக்கிறது என்பதை விட, உறவுப் பாலமே அமையாமல் இருப்பதை நினைத்துத் தான் அளவு கடந்த வேதனை அவளுள்!

வயதான பின்னர் பிறந்திருந்தாலும் அவரின் உதிரத்தில் பிறந்தவள் தானே கிருஷ்ணரூபி!

இப்படி ஒதுக்கி வைத்து தாய்ப் பாசத்தை காட்டாமல் வளர்க்கும் அளவிற்கு அவள் என்ன பாவம் செய்தாள்?

முதலில் அவள் மேல் என்ன தவறு இருக்கிறது? இத்தனை ஒதுக்கம் காட்டும் அளவிற்கு?

தன் குழந்தை மீதே எப்படி வெறுப்பை வளர்த்துக் கொள்ள முடிந்தது?

ஆரம்ப கால கட்டத்தில் உறவுகளின் கிண்டல் பேச்சு, நக்கல் பார்வை இதை எல்லாம் யோசித்து மன அழுத்தமாக இருந்தாலும் காலப் போக்கில் மாறி இருக்க வேண்டாமா?

பெண் பிள்ளையாக இருந்தவளுக்கு தாயன்பை ஊட்டி வளர்க்காமல் இப்படி ஒதுக்கத்தையும் பாசமின்மையையும் காட்டி வளர்த்திருக்கிறாரே!

பெண்ணாகப் பிறந்தவள் வேறு! அண்ணன், தந்தை பாசம் மட்டும் எப்படி போதுமானதாக இருக்கும்?

அம்மாவைப் போல் எல்லாம் அண்ணி வேண்டாம்.. அண்ணி எனக்கு அண்ணியாகவே இருந்தால் போதும் எனக் கேட்டிருக்கிறாள் என்றால் அவள் மனதில் தாய்க்கான உணர்வு எவ்வளவு ரணப் பட்டு போய் இருக்கிறது என்பதை யூகிக்க கூட முடியவில்லை மலரால்!

அதுவும் இத்தனை ஆண்டு காலமும் ஓர் பெண்ணின் அரவணைப்பும் அன்புமின்றி அண்ணன், தந்தையின் பாசத்திலேயே வளர்ந்து இவ்வளவு பொறுப்பாக தெளிவாக இருக்கும் கிருஷ்ணாவை எண்ணி அந்த வேதனையிலும் தேன்மலரின் நெஞ்சம் விம்மியது!

அந்த நொடி தேன்மலர் திடமாக தெளிவாக மனப்பூர்வமாக ஒரு முடிவினை எடுத்தாள்!

அதைக் கணவனிடமும் தயக்கமின்றி கூறி இருந்தாள்.

“கிருஷ்ணா கடவுளோட படைப்புங்க! அதான் இத்தனை வருஷமும் அம்மா பாசம் இல்லாத போதும் நீங்களும் மாமாவும் காட்டுன அன்புலயே இவ்வளவு பொறுப்பா, தெளிவா, மெச்சூர்டா வளர்ந்திருக்கா!” என்றவள்,

கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டு

“ஆனாலும் ஷீ நீட்ஸ் அ ஃபீமேல்ஸ் கேர் அன்ட் லவ். இனி கிருஷ்ணாக்கு எப்பவும் நான் இருப்பேன். நீங்களும் இருக்கணும். அவளுக்காக அவ கூட நாம ரெண்டு பேருமே இருக்கணும். அட்லீஸ்ட் இன்னும் கொஞ்ச வருஷத்துக்கு! இப்ப ‘டென்த்’ படிக்கிறா. அவ ப்ளஸ் டூ முடிச்சு காலேஜ் போற வரைக்கும்.. இல்ல.. காலேஜ் செக்கண்ட் யியர் முடிக்கிற வரைக்கும் நாம குழந்தைப் பெத்துக்க வேண்டாம்ங்க. நாம பேரெண்ட்ஸ் ஆகுறதுக்கு முன்னாடி கிருஷ்ணாக்கு பேரெண்ட்டிங் கேரை கொடுக்கணும். குறிப்பா ஒரு தாயோட அரவணைப்பு.. அது ஒரு பெண் குழந்தைக்கு ரொம்ப அவசியம்! ஒரு வேள நமக்கு பாப்பா வந்துட்டா நம்ம குழந்தையை தான் நாம முதல்ல கவனிப்போம்! அதுக்காக கிருஷ்ணாவை கவனிக்காம இருப்போம்னு சொல்ல வரல. இயல்பாவே நம்ம குழந்தைக்கு தான் நம்ம முதல் பிரதானம் கொடுப்போம்! அப்புறம் கிருஷ்ணாவை சரியா கவனிக்க முடியாது. சோ, நமக்கு எப்பவுமே முதல் குழந்தை கிருஷ்ணாவாவே இருக்கட்டும். ஒரு நாலு வருஷத்துக்கு அப்புறம் நாம குழந்தை பெத்துக்கலாம்!” என்று சொல்லிக் கொண்டே வந்தவள் கணவனின் இறுகிய அணைப்பை உணர்ந்து அவன் மார்பில் தாடையை ஊன்றி நிமிர்ந்தாள்.

அமுதனின் முகத்தில் சொல்ல முடியாத.. வெளிக்காட்ட முடியாத.. ஓர் உணர்வு!

சில உணர்வுகள் சொற்களுக்கும் செயல்களுக்கும் அப்பாற்பட்டது!

வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வை, ஒற்றை நிமிட மௌனம் உணர்த்தி விடும்!

அன்பு பாராட்டுபவர்கள் நம்மிடம் அதே அன்பை பல மடங்கு திருப்பிக் கொடுக்கும் போது நம்மால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் திணறி திண்டாடிப் போவோம்!

தற்போது அமுதனும் மலரின் அன்பில் திணறி திண்டாடி சிலை போல் உறைந்து நின்றான்.

தான் கிருஷ்ணாவின் தாயன்பு இல்லாத வாழ்வைப் பற்றி சொன்ன அடுத்த நொடி… கிஞ்சித்தும் யோசிக்காமல் அவள் தாயாவதை தள்ளிப் போடும் அளவிற்கு முடிவினை எடுத்திருக்கிறாள் என்றால் அவளின் மனம் எத்தகை தூய்மையான பரிசுத்தமான அப்பழுக்கற்ற அன்பினை கொண்டிருக்க வேண்டும் என்று பிரம்மிப்பாக உணர்ந்தவனுக்கு தேன்மலர் மேல் பெருங்காதல் பெருக்கெடுத்தது.

மனதின் அடி ஆழத்தில் இருந்து ஒட்டு மொத்த நேசத்தையும் ஒன்று திரட்டி “மலர்….” என்றழைத்தவன் குரலில் தேன்மலரின் கண்கள் விரிந்து கொண்டன.

அவன் அழைப்பில் தனக்கான ஒட்டு மொத்த நேசத்தையும் உணர்கிறாளே!

உணர்த்துகிறான் அமுதகீதன்!

ஆனால், அதனை அனுபவிக்க முடியாமல் அவனின் கலங்கிய கண்கள் வேறு அவளை பதற வைக்க, “என்ன ஆச்சு..? நான் எதுவும் தப்பா….” என்று தயங்கியவள்,

“குழந்தை வேண்டாம்னு சொன்னதால வருத்தமா..?” என்று உள்ளே சென்று விட்ட குரலில் கேட்க, அமுதன் என்பவன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தான்.

அந்த நொடி அவள் மேல் பெருகிய காதலை அவளிடமே கொட்டி விட வேண்டும் என்று மனம் அவனின் உணர்வுகளை துரிதப்படுத்தியது.

அவளின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் நிலையில் இல்லாதவன் அவசரமாக அவளின் இரு கன்னங்களையும் உயர்த்திப் பிடித்து கண்ணோடு கண் கலந்து “பிளீஸ் நோ சொல்லிடாத மலர்! ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்துக்குறேன்” என்றான் நேற்று போலவே!

அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு மற்றவை எல்லாம் பின்னே சென்று விட்டன! மேலும் அவன் கெஞ்சலில் அவளிடம் மெல்லிய முறைப்பு!

நேற்றே அவனின் ஒரு முத்தக் கணக்கு ஒன்பது முத்தங்களில் முடிந்ததைப் பார்த்தவள் தானே!

அவனின் பொய்க் கணக்கில் அடங்கிய முத்தங்களை அறிந்து.. அனுபவித்து.. அவனை மறுக்கும் நிலையை இழந்து.. இறுதியில் எப்படியோ சமாளித்து உறங்கியவள் இப்போது அவன் ஒரே ஒரு முத்தம் என்று கேட்டதும் கண்களை சுருக்கி முறைக்கவே செய்தாள்!

அவள் கண்கள் சுருக்கி முறைத்த விதத்தில் “ப்ளீஸ் மலர். நோ சொல்லி என்னை தவிக்க வைக்காத. பிளீஸ்.. பிளீஸ்..” என்றான் காதலானத் தவிப்புடன்.

அவன் கெஞ்சுவதைப் இமை அகலாமல் பார்த்தவள் “நீங்க ஒரு முத்தம்னு ஆரம்பிச்சு எப்படி முடிப்பீங்கன்னு நேத்து பாத்தேன் தான” என்றதும் கண்களை மூடி அசடு வழிய புன்னகைத்தவன், “ஸ்ஸ்…” என்று உதடுகளை கடித்துக் கொண்டான்.

அவன் நெஞ்சில் கை வைத்து தானும் கண்களை மூடிக் கொண்டவள் “இனி என் கிட்ட கெஞ்ச வேண்டாம். ஏன் சொல்றேன்னா.. நீங்க கெஞ்சும் போது வேணும்னே ‘நோ’ சொல்லணும்னு எனக்குள்ள இருக்க ‘DEVIL MIND’ சொல்லுது..” என்றவளின் முகத்தில் குறும்புப் புன்னகை தாண்டவமாடியது!

அதைக் கண்டவன் அவள் சொன்ன விஷயத்தில் “ஹே மலர்!…” என்று அதிர, தேன்மலர் நன்றாகவே சிரித்து விட்டாள்.

“எனக்கு ‘நோ’ சொல்றதை நினைச்சு எவ்வளவு சிரிப்பு?” என்று பொய்யாக பொறுமியவன், அவளின் சிரிப்பில் தன்னை மறந்து அவளை ரசித்து நின்றான்.

“நீ நோ சொன்னா நான் அதை மீற மாட்டேன் மலர்! உன் விருப்பம் இல்லாம உன்னை.. தொடுறது.. ஹ்ம்ம்ஹூம்..” என்று மறுப்பாக தலை அசைத்தவன், “ஆனா.. இந்த நிமிஷம்.. ஐ கான்ட் ஹெல்ப் மைசெல்ஃப்! என்னை மீறி உன் கிட்ட என்னோட கட்டுங்கடங்காத காதலை கொட்டிடுவோமோன்னு பயமா இருக்கு” என்றவன் முன்னேறாமல் இமைகளை மூடி அவளின் இடை பற்றிக் கொண்டு அமைதியாகவே நின்றான்.

தன் மீதான அவனின் தீராத காதல் தேன்மலருக்கு இப்போதும் தீராத திகைப்பையே கொடுத்தது!

அவனின் நெஞ்சில் மெதுவாக சாய்ந்து கொண்டவள் “விருப்பம் இல்லாம இல்ல. நிறைய தயக்கம் இருந்தது. இருக்கு! அதான் நமக்கான நெருக்கம் வேண்டாம்னு நேத்து அப்படி சொன்னேன்”

அவனின் முதுகில் கைகளை சுற்றிக் கொண்டு “ஆனா, இனிமேல் நீங்க முத்தத்துக்கு என் கிட்ட கெஞ்சணும்னு இல்ல!” என்றவள், அவனுக்கு சம்மதம் சொல்லும் வகையில் அவளாகவே அவனின் கன்னத்தில் இதழ் ஒற்றினாள்.

அவளின் வார்த்தைகளிலேயே மயங்கி நின்றவன், முத்தத்தில் மொத்தமாக மயங்கி நின்றான்.

இரு கரங்களால் மலர் முகத்தை பூவாக ஏந்தியவன் நேற்று போல் அல்லாமல் முதல் முத்தத்தை நெற்றியில் வைத்து விட்டு இரண்டாம் முத்தத்தை இதழுக்கே கொடுத்து விட்டான்.

அமுதத்தின் கரை புரண்ட காதலை மலரிதழ் உணர்ந்தது!

இதழோடு இதழ் சேர்த்து முத்தக் கவிதைக்கு முற்று புள்ளி வைத்து நிதானமாக விலகியவனுக்கு அவள் காட்டிய அன்பிற்கு தான் கொடுத்த முத்தம் போதாது என்றே தோன்ற, இரண்டு நொடிகளுக்கு பின்னர் மீண்டும் மலரிதழை தன் இதழுக்குள் இழுத்துக் கொண்டான்.

முதல் முத்தம் நிதானமாக இருக்க, இரண்டாவது அதற்கு நேர் மாறாக இருந்தது.

முத்தத்தில் காதலின் ஆழத்தை அழுத்தமாக உணர்த்தினான் அமுதகீதன்!

அவன் முதுகில் படர்ந்திருந்த மலரின் விரல்கள் அவனின் வேகத்தில் திணறி அவனுடைய கேசத்தை இறுக பற்றிக் கொண்டது! பற்றுகோலாக!

நீள் முத்தம்.. தேன்மலர் சோர்ந்து கிறங்கி அவன் மேலேயே சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் தாடையை பற்றி நிமிர்த்தியவன், முத்த மயக்கத்தில் இன்னும் கண்களைத் திறக்காமல் இருப்பவளைக் கண்டு மந்தகாசமாகப் புன்னகைத்தான்.

இரண்டாம் முத்தத்தை அவன் அழுத்திக் கொடுத்த விதத்தில் மலரிதழ் சிவந்து போயிருந்தது.

அதனை விரல் கொண்டு மென்மையாக வருடியவன் “சிவந்து போச்சு மலர்..” என்று அவள் காதினில் கிசுகிசுக்க, “மூச்.. எதுவும் பேசக் கூடாது” என அதட்டியவள் முகமும் இதழுக்கு நிகராக செக்கச் சிவந்து போய்க் கிடந்தது!

அவன் கொட்டிய இதழ் காதலில் தன் முடிவு அவனை எத்தனை நெகிழ வைத்திருக்கிறது என்பதை உணர்ந்த தேன்மலர், “கிருஷ்ணாக்காக நான் எடுத்த முடிவு.. உங்களுக்கு கஷ்டமாகிடல தானே!” என்று மீண்டும் ஒரு முறை அவனிடம் கேட்க,

“கஷ்டமாகிடல மலர்.. காதலாகிடுச்சு!” என்றான் காதல் நிறைந்த குரலில்!

“உன்னை விரும்பி கல்யாணம் பண்ணி இருந்தாலும் நீ எனக்கு மனைவியா கிடைச்சது வரம் மலர். உண்மையாவே நான் கொடுத்து வச்சவன்! எத்தனை பேருக்கு இப்படி ஒரு பொக்கிஷம் கிடைக்கும்? என் குட்டி தங்கச்சிக்கு ஒரு அம்மாவோட அரவணைப்ப கொடுக்குறதுக்காக உன்னோட தாய்மையை தள்ளிப் போட முடிவெடுத்தது எல்லாம்….. எந்த ஒரு பொண்ணும் யோசிக்கக் கூட தயாரில்லாத விஷயம்! ரியல்லி என்னோட மலர் எனக்கு கிடைச்ச பொக்கிஷம்” என்றான் மீண்டும் அவள் நெற்றியில் முத்தம் வைத்து உள்ளார்ந்த குரலில்!

மலர் தயக்கமாக “நான் முடிவெடுத்தது உங்களோட முடிவை, எண்ணங்களை பாதிக்கலாம் இல்லையா? அதான் கேட்டேன்!” என்றவள் குரலில் அப்போதும் தயக்கம் இருந்தது!

அதைப் புரிந்தவன் “எனக்கு வருத்தம் எல்லாம் இல்லடா மலர்!” என்றவன், நமட்டுச் சிரிப்புடன் “நமக்கு இடையில இருக்க தலகாணி சுவரை தகர்த்து நெருங்குறப்போ பாதுகாப்பா நெருங்கினா போதும்” என்று குறும்பாக கண்களைச் சிமிட்ட… அவன் சொன்ன விஷயம் புரிந்த நொடி தேன்மலரால் அவனின் முகம் பார்க்க முடியவில்லை!

சங்கடம் கலந்த நாணத்தில் சிவந்து போன முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு “ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..” என்று முணுமுணுத்தவள்,

“கேட்ட விஷயத்துக்கு மட்டும் பதில் சொல்லாம மத்ததை எல்லாம் பேச வேண்டியது!” என்று வேறு முணுமுணுக்க,

அவளின் முகம் பற்றி தன்னைக் காண வைத்தவன், “சரி சரி… மத்ததெல்லாம் மத்தது நடகுறப்ப பாத்துக்கலாம்!” என்று சமாதானமாகக் கூறியவன்,

“உன் முடிவு தான் என் முடிவு மலர்! மலர் எவ்வழியோ அமுதனும் அவ்வழியே!” என்றிருந்தான் காதாலான புன்னகையுடன்!

அமுதம் மலரினுள் காதலும் காதலுமாகி நிறைந்து வழிந்தது!

error: Content is protected !!
Scroll to Top