அத்தியாயம் – 27
தன் அறையின் பால்கனியில் நின்றிருந்தான் அமுதகீதன்.
வானத்தில் மின்னிய முழு நிலவின் பிரகாசம் அவனின் கவனத்தை ஈர்க்கவில்லை!
இரவு நேரக் குளிர் காற்று கூட அவன் இதயத்திற்கு இதம் சேர்க்கவில்லை!
அந்த அளவிற்கு மனதில் வெம்மையை பரப்பி இருந்தன வள்ளியின் வார்த்தைகள்!
தாய் மூலமாக எல்லாவற்றையும் கேட்டறிந்து கொண்டவன், கொதித்துப் போய் இருந்தான்.
“அக்கா அப்படி பேசினதைக் கேட்டு நீங்க வேடிக்கை பாத்துட்டு இருந்தீங்களாமா?” என்று தாயிடம் சீற,
“அமுதா.. கோபப்படாதப்பா. இதுக்கு தான் தேனு இதை யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்னு இருந்தா…” என்றவர்,
“வள்ளி அப்படிப் பேசுவான்னு நானும் நினைக்கல அமுதா. தேனு முகம் அப்படியே கலங்கிப் போச்சு. வள்ளியை நானும் திட்டிட்டேன் தான். இதை பெருசு பண்ண வேண்டாம் அமுதா. நான் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு அவ கிட்ட பேசுறேன். இப்ப நீ மேலே போ. மலரை கொஞ்ச நேரத்துல அனுப்பி வைக்கிறோம். அவ கிட்ட நீ எதுவும் கேட்டுக்க வேண்டாம் அமுதா. வேற எதைப் பத்தியும் யோசிக்காம உங்க வாழ்க்கையை சந்தோஷமா தொடங்குங்க..” என்றவர், மகனை ஒரு வழியாக சமாதானம் செய்து அனுப்பி வைத்திருந்தார்.
ஆனால், அவனால் கொஞ்சம் கூட நிதானிக்க முடியவில்லை.
“ச்சே.. எப்படி பேசி இருக்காங்க..! விளங்கவே விளங்காதாம்..!!! ஷிட்..!” என பல்லைக் கடித்தவனின் முகத்தில் சீற்றம் மட்டுமே!
“மலர் எப்படி இதைத் தாங்கிக்கிட்டா? திருப்பி பேசி இருக்க வேண்டாமா? முதல் நாளே.. இப்படி..” என்று நெற்றியை பிடித்துக் கொண்டவன் அவள் வந்ததும் அவளிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று அவளின் வருகைக்காக காத்திருக்க, அவனின் மனைவியும் வந்தாள்!
முதலிரவு அலங்காரங்களை தாங்கி இருந்த அறையை சுற்றிப் பார்த்தவள், கணவனைத் தேடியபடி கதவை சாற்றி விட்டு உள்ளே வர, அமுதன் பால்கனியில் நிற்பதை கண்டதும் கையில் வைத்திருந்த பாலினை நைட் லேம்ப் இருந்த மேஜை மீது வைத்து விட்டு
பால்கனிக்கு கால்களை எட்டிப் போட்டாள்.
அவள் வந்து நிற்பதை உணர்ந்தவன் அமைதியாகவே நிற்க, “பால் குடிக்கிறீங்களா.. எடுத்துட்டு வரட்டுமா?” என்றாள் தேன்மலர்.
அவனிடமிருந்து பதில் வராமல் போகவே, “என்ன ஆச்சுங்க?” என்று கேட்க, பெரு மூச்சுடன் அவளைப் திரும்பிப் பார்த்தவன், அவளின் கையைப் பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டதுடன் அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
அமுதனின் மனம் மனைவியை எண்ணி அலைப்புற்று போய் கிடந்தது!
தேன்மலரோ அவனின் செயலில் திடுக்கிட்டுப் போனாள்! சட்டென்று தன்னை நெஞ்சில் சாய்த்துக் கொண்டவனின் வேகம் அவளை கலங்க வைக்க, கூடவே அவன் அணைப்பில் தெரிந்த அலைப்புறுதலைக் கண்டு “என்ன.. என்னாச்சு?” என்றாள் தடுமாறிய குரலில்!
“அக்கா பேசினது ரொம்பத் தப்பு மலர். ஐயம் சாரி ஃபார் தட்” என்றவன், அவள் முகம் நிமிர்த்த முயன்றதை கண்டு அவளை மேலும் தன் மார்பில் பொத்தி வைத்துக் கொண்டு,
“சாரி மலர்” என்றான் மீண்டும் வருத்தம் நிறைந்த குரலில்!
சிறிது நொடிகள் அவளும் எதுவும் பேசவில்லை. அவனின் அணைப்பில் கட்டுண்டு கிடந்தவள்
பெரு மூச்சுடன் அவனிடம் இருந்து விலகி “அத்த கிட்ட கேட்டீங்களா!?” மெல்லிய முறைப்புடன் கேட்டாள்.
“ஹ்ம்ம்..” அவனும் ஒப்புக் கொள்ள, “ஒரு விஷயத்தை பேச வேண்டாம்னு விட சொன்னா இப்படி தான் அதை விடாப்பிடியா தெரிஞ்சுகிட்டு வருத்தப்படுவீங்களா?” என்றாள் கோபமாக.
“நான் வருத்தப்படுறதை விட, நீ எவ்வளவு வேதனைப் பட்டிருப்பேன்றது தான் என்னை பாதிக்குது மலர்..” என்றவன் குரலில் அத்தனை துயரம்!
மலருக்கோ முதல் நாளே தங்களுக்குள் இப்படி ஒரு சங்கடம் நிறைந்த பேச்சு உருவாகி இருக்க வேண்டாமே என்று தோன்றியது!
மதியமும் இதே பேச்சு வார்த்தை தங்களுக்குள் சிறு வாக்குவாதமாக மாறவிருந்தது உண்மை! ஆகையால் தான் அவனை அதற்கு மேல் பேசக் கூடாது என்று அமரச் சொல்லி விட்டு குளிக்கச் சென்று விட்டாள்.
இப்போது அத்தையிடம் இதைக் குறித்து கேட்டறிந்து கொண்டு அவனை வருத்திக் கொள்வதை எண்ணி அவளுக்கும் வருத்தமாக இருந்தது.
“ப்ளீஸ்… இதை விட்ருங்க. அவுங்க பேசிட்டாங்க. போய்ட்டாங்க. நானும் அதை கேட்டு மறந்துட்டேன். ஆனா, நீங்க அதை திரும்பத் திரும்பக் கேட்டு நியாபகப் படுத்திற மாதிரி இருக்கு” என்றவள்,
சோர்வுடன் அவனைப் பார்த்து “இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் ஆகி இருக்கு. ஆனா, ஃபர்ஸ்ட் டேவே இப்படி ஒரு சங்கடம்.. ரொம்ப கவலையாகுது எனக்கு. இதை பத்தி பேச வேண்டாம் மறந்துடுங்கன்னு சொல்லியும் அத்தை கிட்ட எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சிருக்கீங்க. உங்களை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல!” என்றாள்
அயர்ந்த குரலில்!
அவளின் வார்த்தைகளில் தான் என்ன செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்து நெற்றியில் தட்டிக் கொண்டவன், “சாரி மலர். இனி இதைப் பத்தி பேசல. நீயும் இதை நினைச்சு ஃபீல் பண்ண வேண்டாம். ஐ வில் சார்ட் அவுட் இட்” என்றவன், “வா.. உள்ள போகலாம்” என்று அவளுடன் உள்ளே வந்தான்.
இருவரும் மல்லிகை மொட்டுகளும் ரோஜா இதழ்களும் தூவி இருந்த கட்டிலில் அமர, பாலினை எடுத்து அவனுக்குக் குடிக்கக் கொடுத்தவள், தானும் கொஞ்சம் குடித்துக் கொண்டாள்.
அமுதன் அப்போது தான் அவளைக் கவனித்தான். இளம் சந்தன வர்ண பட்டுப் புடவையில் மிகவுமே அழகாக இருந்தாள்.
“ரொம்ப அழகா இருக்க மலர்” என்று மென் புன்னகையுடன் அவன் கூற, அவளின் தலை தானாகத் தாழ்ந்தது!
ஆனால், அத்தாழ்வெல்லாம் ஒரு நொடி தான்!
மறு நொடியே வேகமாக நிமிர்ந்தவள் ரோஜா இதழ்களும் மல்லிகை மொட்டுக்களும் பரவிக் கிடந்த மெத்தையை சுட்டிக் காட்டி “இந்த விஷயம்.. இதை இன்னைக்கே தொடங்க எனக்கு தயக்கமா இருக்கு! நமக்குள்ள முதல்ல நல்ல புரிதலுக்கான நெருக்கம் வரட்டும். அதுக்கப்புறம் இந்த நெருக்கத்துக்கு வரலாம்” என்றவளை அகன்ற விழிகளுடன் பார்த்திருந்தான் அமுதகீதன்.
தாம்பத்ய வாழ்க்கையில் தனக்கு தயக்கம் இருக்கிறது என்பதை கிஞ்சித்தும் தயக்கமின்றி பேசிய மனைவியின் சொல்லாடலில் சிரித்து விட்டவன், “தென்..?” என்று புருவங்கள் உயர்த்திக் கேட்க,
“தென்…னா?” என்றவள், “அப்புறமென்ன தூங்க வேண்டியது தான்!
மதியம் சொன்ன மாதிரி நான் சோஃபால படுத்துக்கிறேன். நீங்க பெட்ல நல்லா உருண்டு புரண்டு படுத்துக்கங்க” என்று அலட்டிக் கொள்ளாத குரலில் கூற,
“அது சரி..” என இரு பக்கமும் தலையசைத்துக் கொண்டவன், பெரு மூச்சுடன் பாலை பருகி முடித்தான்.
“சோஃபால எல்லாம் தூங்க வேண்டாம் மலர்” என்றவன், கட்டிலின் நடுவே இரண்டு தலையணைகள் வைத்து, அது போதாது என்று அதன் மேல் மேலும் இரண்டு தலையணைகள் வைத்து ஒரு தலையணை சுவரினை எழுப்பி விட்டான்.
“ஓகே வா? இடைல பில்லோ வால் கட்டியாச்சு? போதுமா?” என்று கேட்டிட, தேன்மலர் சிரித்து விட்டாள்.
“ஹ்ம்ம்..” என்றவள், அணிந்திருந்த நகைகளை எல்லாம் சென்று கழற்ற துவங்க, அவனும் பெரு மூச்சுடன் உடை மாற்றும் தடுப்பிற்கு பின்னால் சென்று உடை மாற்றி வந்தான்.
அவளும் இரவு உடைக்கு மாறி வந்தவள் உறங்க ஆயத்தமாக, “உனக்குப் போர்வை மலர்..” என்று அவளிடம் ஒரு ரஜாயை நீட்டியவன், குளிரூட்டியை மிதமான வேகத்தில் வைத்து விட்டு வந்து படுத்து விட்டான்.
தேன்மலரும் மறு பக்கம் வந்து படுத்துக் கொள்ள, அவர்களின் இடையே இருந்த தலையணை அவர்களின் முகத்தைக் கூட மறைக்கும் வகையாக உயர்ந்து கிடந்தது!
“ரெண்டு தலகாணி வச்சிருக்க வேண்டாம். மலர் முகம் கூடத் தெரியல” ஏக்கம் கலந்த
பெரு மூச்சுடன் அமுதன் கண்களை மூடிக் கொள்ள, தேன்மலர் எப்போதோ கண்களை மூடி இருந்தாள்.
மெல்ல மெல்ல தேன்மலரின் கண்கள் உறக்கத்தை எட்டிய நேரம், எதோ ஒரு உணர்வில் பட்டென கண்களைத் திறக்க, மேலே இருந்த ஒரு தலையணையை நீக்கி விட்டு தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த கணவனைக் கண்டதும் அவளின் கண்கள் உறக்கமிழந்து விரிந்து கொண்டது.
“எ.. ன்ன?” என்று அவன் பார்வையில் தடுமாறியபடி பெண் கேட்க, வலது கரத்தை அவளின் கன்னம் நோக்கி நீட்டியவன், ஒற்றை விரலால் அவளின் கன்னம் தொட்டு “கிருஷ்ணா உன்னை கிஸ் பண்ணப்ப எனக்கு அப்படி ஒரு பொறாமை வந்தது மலர்! நான் ஃபர்ஸ்ட் இல்லையேன்னு இப்பவும் தோணுது” என்று திடீரென அவன் ஏக்கத்துடன் பேச, தேன்மலருக்கு சுத்தமாக உறக்கம் பறி போனது.
என்ன பதில் பேச என்று கூட தெரியாமல் அவள் விழிக்க, “வித் யுவர் பெர்மிஷன்…” என்றவன், இடையில் இருந்த ஒற்றை தலையணையில் தாடையை ஊன்றி அவளின் கன்னத்தை நிமிண்டிக் கொண்டே “ஒரே ஒரு முத்தம் மட்டும் நான் கொடுத்துக்குறேன் மலர்?” என்று காதலாகக் கெஞ்சினான்.
அவனின் பார்வையும் அதிலிருந்த நேசமும் கன்னத்து முத்தத்திற்காக அவனின் காதல் கெஞ்சலும், ஒற்றை விரல் தீண்டலும் தேன்மலரை தன் வசம் இழக்க வைத்திருந்தது.
அதில் தன்னையும் மீறி “ஹ்ம்ம்..” என்று மலர் முனங்க, தலையணையில் இருந்த முகத்தை அவளை நோக்கி கொண்டு சென்றவன், முதல் முத்தத்தை நெற்றியில் வைத்தான்!
அமுதத்தின் நெற்றி முத்தத்தில் மலர் இமைகள் தாமாக மூடிக் கொள்ள, இரண்டாம் முத்தத்தை இமையில் வைத்தான்!
மூன்றாம் முத்தம் நாசியில் இறங்கியது!
நான்காம் முத்தம் நாசியின் வழியே இடது இமைக்கு இடம் பெற்றது!
இடது இமையில் இருந்து நகர்ந்த இதழ்கள் ஐந்தாம் முத்தத்தை இடது கன்னத்தில் பதித்தது! மீசையின் உராய்வுடன்!
ஆறாம் முத்தம் இதழைக் கடந்து வலது கன்னத்தில் விழுந்தது! சற்று அழுத்தமாக!
அனைத்து முத்தங்களிலும்
அவனின் மீசை நன்றாகவே அவள் முகத்தில் உராய்ந்திருக்க, தேன்மலரின் உடலெங்கும் புல்லரித்து அவஸ்தையை கொடுத்தது.
மூடிய இமைகளை மேலும் அழுத்தமாக மூடிக் கொண்டன.
பாத விரல்களை மெத்தையில் வைத்து அழுத்தியவளின் கை விரல்கள் தலையணையை இறுக பற்றிக் கொண்டது.
அவளின் சிலிர்ப்பை கண்டு சிரித்துக் கொண்டவன் ஏழாம் முத்தத்தை செவியினில் வைக்க, தேன்மலரின் ஒரு கரம் கணவனின் கன்னத்தைத் தாங்கி இருந்தது.
அவளின் கரத்தினை மேலும் தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டவன், இடையே இருந்த தலையணைச் சுவரை தகர்த்திருந்தான்.
செவியிலிருந்து கீழே இறங்கிய இதழ்கள் சங்குக் கழுத்தில் தன் எட்டாம் முத்தத்தை பதித்திருக்க, தேன்மலரின் பெண்மை விழித்துக் கொண்டது.
அவனை மறுக்கும் நிலையில் இல்லை அவள்! அதே சமயம் தங்களுக்குள் இன்னும் சற்று புரிதல் உருவான பின்னர் இது நேர்ந்தால் நல்லது என்று தோன்ற, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளின் முகத்தை தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன் “இன்னும் ஒரே முத்தம் மலர்..” என்றவன், அவள் கண்கள் விரிய தன்னைப் பார்க்கும் போதே ஒன்பதாம் முத்தமாக இதழ் முத்தத்தை பதித்தான்.
அமுதம் மலரிதழ்களை தனக்குள் எடுத்துக் கொண்டது.
திகைப்பில் விரிந்த மலரின் கண்கள் கணவனின் இதழாக்கத்தில் மெல்ல மெல்ல மயக்கத்துடன் மூடிக் கொண்டது.
கட்டுப்பாட்டில் அவனில்லை! கட்டுப்பாட்டில் அவனை நிறுத்தும் நிலையில் அவளுமில்லை!
இதழ்கள் களைத்துப் போகாமல் நீண்ட நேரம் கதை பேசிக் கொண்டன. ஆனால், மூச்சுக் காற்றின் பற்றாக்குறை காரணமாக இருவரும் விலக வேண்டிய சூழ்நிலை வர, மனமின்றி மலரிதழை விடுவித்தான் அமுதகீதன்.
தேன்மலர் அவனின் முகம் பார்க்க முடியாமல் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்.
மார்புக் கூடு ஏறி இறங்கியது இருவருக்கும். தேன்மலர் அவனுள் இன்னும் புதைந்து கொண்டாள்.
ஒரு முத்தம் என்று கெஞ்சியவன், ஒன்பது முத்தத்தில் வந்து நிறுத்தி இருப்பதை உணர்ந்து மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.
காந்தமாய் தன்னை இழுக்கும் மலரின் வாசம் அவனை கிறங்கடித்தது.
அடுத்த முத்தப் பாதை போட்டு அவளுள் கரைய ஆசை இதயம் முழுக்க இருந்தாலும் அவளின் வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றவன், “ ‘பில்லோ வால்’ கட்டிறலாம் மலர். இல்லேன்னா நான் என் கட்டுப்பாட்டுல இருக்கது ரொம்ப கஷ்டம்” என்று அவளிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி விட, தேன்மலர் அவனின் முகம் பார்க்க, மார்பில் இருந்து விலகிக் கொண்டாள்.
அவன் முகத்தை.. காதல் சிந்தும் கண்களை.. தன்னை உருக்கும் அவனின் ஸ்பரிசத்தை.. உயிரை உறைய வைக்கும் மெய் தீண்டலை அதற்கு மேலும் அவளால் புறக்கணிக்க முடியும் என்று தோன்றவில்லை. அதே சமயம் நெருக்கங்களையும் தொடங்க முடியவில்லை.
எனவே, அவன் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தவள், அவன் மார்பில் முகத்தை புதைத்து “இல்ல. இடைல தலகாணி வேண்டாம். இப்படியே தூங்கலாம். குட் நைட்” என்று கூறி அவனின் முதுகைச் சுற்றி தன் கரங்களை பின்னிக் கொண்டாள்.
தன் கை வளைவில் அவளும், அவள் கை வளைவில் தானும் என உணர்ந்தவன் மெய் சிலிர்த்து அவளின் நெற்றியில் முத்தம் வைக்க, “தூங்கனும்” என்று மெதுவாக முனங்கினாலும் அழுத்தமாக முனங்க, “குட் நைட் மலர்” என்றவன், தானும் கண்களை மூடிக் கொண்டான்.
மலர் முகம் முழுவதும் தான் பதியணிட்ட முத்தங்களை நினைத்துக் கொண்டே மனைவியை தன் கை வளைவிற்குள் மேலும் இறுக்கிக் கொண்டு ஒரு வழியாக கண்ணயர்ந்து விட்டான் அமுதகீதன்.
ஒன்பது முத்தங்களின் சத்தங்களுடன் அவர்களின் முதலிரவு முடிந்திருந்தது.
மறு நாள் காலை முதலில் கண் விழித்தது தேன்மலர் தான். அவன் கை வளைவில் இருப்பதை உணர்ந்து ஒரு நொடி அமைதியாக கண்கள் மூடி அந்த நொடியை உள்வாங்கிக் கொண்டாள்.
அவன் மார்பில் இருந்த விலக மனமில்லை போலும்! மேலும் அவனோடு ஒன்றினாள்.
அதில் லேசாக அமுதகீதன் அசையவும், அவனின் முகம் பார்க்க.. அசதியில் நன்றாக ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
அவனின் உறக்கம் கலையாத வண்ணம் மெதுவாக அவன் கைகளை விலக்கி எழுந்து கொண்டவள் காலை கடன்களை முடித்து குளித்துத் தயாராகி கீழே சென்றாள்.
நேரம் ஏழு மணியை நெருங்கி இருந்தது. கிருஷ்ணா ஹாலில் இருந்த சோபாவின் கீழே அமர்ந்து அதில் சாய்த்த வண்ணம் படித்துக் கொண்டிருந்தாள்.
பெரியவர்கள் யாரையும் காணவில்லை. உறவினர்கள் எல்லாம் நேற்றே கிளம்பி இருந்தனர். யோகராணி யோகலட்சுமி கூட நேற்று இரவே தத்தம் குடும்பங்களுடன் கிளம்பி இருந்தனர். இப்போது அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே!
கிருஷ்ணா படிப்பதைக் கண்டு அவளை தொந்தரவு செய்யாமல் கிச்சன் பக்கம் சென்றாள்.
காலை காஃபி கட்டாயம் வேண்டும் அவளுக்கு! இல்லை என்றால் தலை சூடாகி விடும்!
பால் எங்கே எனப் பார்க்க, அடுப்பில் ஏற்கனவே பால் காய்ச்சி வைக்கப் பட்டிருந்தது. அத்துடன் காஃபி டிக்காஷனும் இருக்க, “அத்த நேரமே எழுந்து இதெல்லாம் பண்ணி வச்சாங்களா?” என்று மெல்ல தனக்குத் தானே கேட்டபடி காஃபி கலக்கவென பாத்திரம் அடங்கிய கப்போர்ட் எது எனப் பார்த்துத் திறக்க, இவள் உருட்டிய சத்தத்தில் கிருஷ்ணா அங்கே வந்திருந்தாள்.
“குட் மார்னிங் அண்ணி..” என்றவள் குரலில் தேன்மலர் திரும்பிப் பார்த்து “குட் மார்னிங் கிருஷ்ணா..” என்றாள் மலர்ந்த முகத்துடன்.
“எப்ப எழுந்து வந்தீங்க அண்ணி.. நான் உங்களை கவனிக்கவே இல்ல” என்று இளையவள் கேட்க,
“நீ படிச்சிட்டு இருந்த கிருஷ்ணா. அதான் உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணல” என்றவள்,
“உனக்கு காஃபி கலக்கவா? அத்த எழுந்து டிக்காஷன் போட்டு, பால் எல்லாம் காய்ச்சி வச்சிருப்பாங்க போல” என்று அவளாகப் புரிந்து கொண்டதை கூற,
“அம்மா எழுந்திருக்கல அண்ணி” என்றாள் இளையவள்.
“அப்ப இதெல்லாம் பண்ணது..?” என்று தேன்மலர் வியப்புடன் கேட்க,
மெல்லிய புன்னகையுடன் “நான் தான் அண்ணி பண்ணேன். எனக்கு காஃபி இல்லேன்னா யியர்லி மார்னிங் ஸ்டடி, மிட்நைட் ஸ்டடி எல்லாம் பண்ண முடியாது” என்க,
“காஃபி போடத் தெரியுமா கிருஷ்ணாக்கு..” என்று ஆச்சர்யமாக கேட்டவள்,
“நீ எத்தன மணிக்கு எழுந்த?” என்று வினவ,
“நாலு மணிக்கு அண்ணி. பப்ளிக் எக்ஸாம் இன்னைக்கு” என்றாள் கிருஷ்ணா.
“ஓ.. என்ன சப்ஜெக்ட்?” என்ற தேன்மலர் பேசியபடி இருவருக்கும் காஃபியை கலக்க, “நான் போட்டுத் தரேன் அண்ணி” என்றவளை தடுத்து விட்டாள் தேன்மலர்.
“நானே போடுறேன் கிருஷ்ணா. நீ போய் படி. உனக்கும் காஃபி போட்டு எடுத்துட்டு வரேன். எப்படியும் நீ குடிச்சு நேரமாகி இருக்கும்!” என்க,
“நானும் காஃபி நல்லா போடுவேன் அண்ணி. உங்களுக்குப் போட்டுத் தரேனே?” என்று கண்களை சுருக்கிக் கெஞ்ச,
“உன் டிக்காஷன் ஸ்மெல்லே சொல்லுது கிருஷ்ணா.. நீ ஒரு சூப்பர் காஃபி மேக்கர்னு” என்று புன்னகையுடன் கூறிய தேன்மலர்,
“உன் எக்சாம் எல்லாம் முடியட்டும்! அதுக்கப்புறம் தாராளமா நீ எனக்கு காஃபி போட்டுத் தா. இப்ப படிக்கலாம்” என்றவள் பேசியபடி காஃபியை கலந்திருந்து அவள் கையில் கொடுத்திருந்தாள்.
கிருஷ்ணாவும் தன் காஃபி கப்பை வாங்கிக் கொண்டவள் இன்னொரு புது காஃபி ‘மக்’கினை எடுத்து அவளுக்காக கொடுக்க, “எனக்கு டம்ளர் ஓகே தான் கிருஷ்ணா” என்ற தேன்மலர் தனக்கான காஃபியை டம்ளரில் ஊற்றிக் கொண்டாள்.
இருவரும் வெளியே வர, இன்னும் யாரும் எழவில்லை என்பதன் அடையாளமாக வீடே மிக அமைதியாக இருந்தது.
தாய் வீடு என்றால் இந்நேரம் பரபரப்பு தான்!
மூன்று பெண்களும் ஆறு, ஆறரை போல் எழுந்து விடுவார்கள். கோகுலனை பள்ளிக்கு கிளப்ப வேண்டும் என்பதால் எப்போதும் காலை அரக்க பறக்க மூன்று பெண்களும் வேலைகளை செய்து கொண்டிருப்பர்.
இங்கே எந்த ஆரவாரமும் இல்லாமல், காலைப் பொழுது அமைதியாக இருந்தது!
அண்ணியின் பார்வையில் “எப்பவும் எல்லாரும் எழுந்திருக்க எப்படியும் ஏழு மணி மேல ஆகிடும் அண்ணி. நேத்து கல்யாணம் வேற. சோ, எப்படியும் அசதில இருப்பாங்க. எழுந்து வர லேட் ஆகிடும்” என்றவள் கூற,
“அப்ப உனக்கு ப்ரேக்பாஸ்ட்” என்று தேன்மலர் கேட்க,
“இப்ப குக் அக்கா வந்துடுவாங்க. அவுங்க சமைச்சு வச்சிடுவாங்க அண்ணி” என்றாள்.
“ஹ்ம்ம்..” என்ற தேன்மலர் காஃபியை ஒரு சிப் பருகி விட்டு அதன் சுவையில் லயித்துப் போனாள்.
“சூப்பரா இருக்கு கிருஷ்ணா உன் காஃபி” என்க,
“நீங்க தானே அண்ணி காஃபி போட்டீங்க?”
“காஃபி கலந்தது நான் தான். டிக்ககாஷன் உன்னோடதாச்சே! டிக்காஷன் நல்லா இல்லேன்னா காஃபி சொதப்பல் தான்! உன்னோட டிக்காஷன் சூப்பர்”
அண்ணியின் பாராட்டில் புன்னகைத்தவள் படிக்கத் துவங்க, தேன்மலரும் அவளின் அருகே காஃபியை பருகியபடி அமர்ந்திருந்தாள்.
சற்று நேரத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்மணி வந்து விட்டார். அவரைத் தொடர்ந்து சமையல் செய்யும் பெண்ணும் வந்திருந்தார்.
சமையல் வேலைக்கு உதவி செய்யலாம் என்று தேன்மலர் கிச்சன் செல்ல, அவரோ “நானே பண்ணிடுவேன் சின்னம்மா. நீங்க போங்க. அமுதன் தம்பிப் பார்த்தா என்னை தான் சத்தம் போடுவார்” என்றவர் அமுதனுக்கு பயந்து கூறி விட, அவளின் சின்னம்மா என்ற அழைப்பில் தேன்மலர் தன்னையே ஒரு நொடி அந்நியமாக உணர்ந்தாள்.
“சின்னம்மா எல்லாம் வேண்டாம் அக்கா. தேனுன்னே கூப்பிடுங்க” என்க, “இல்லமா. இப்படியே நான் கூப்பிடுறேன். இனிமேல் இந்த வீட்டு சின்ன முதலாளி அம்மா நீங்க. எப்படி பேர் சொல்றது..” என்று பவ்யமாக கூற, தேன்மலருக்கு அந்த சூழ்நிலை ஒரு மாதிரி ஒவ்வாமையை கொடுத்தது.
அவரின் பணிவை அதற்கு மேல் ஏற்க முடியாமல் “சரி.. நீங்க பாருங்க” என்று வெளியே வந்து மீண்டும் கிருஷ்ணாவிடம் அமர்ந்து கொண்டாள்.
கிருஷ்ணா அவளிடம் “இந்த டென் மார்க் குவெஸ்டின் ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணி. எப்படியோ படிச்சிருக்கேன். ஆனா, மறந்து போகுது. உங்க கிட்ட ஒப்பிக்கிறேன். நீங்க செக் பண்றீங்களா?” என்று கேக்க,
“சரி கிருஷ்ணா.. சொல்லு” என்றவள் புத்தகத்தை வாங்கிக் கொண்டாள்.
அடுத்த அரை மணி நேரம் இருவரும் படிப்பில் மூழ்கி இருந்தனர்.
கிருஷ்ணா ஒப்பிக்க, தேன்மலர் அதனைக் கேக்க, தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்ட, அவளுக்குப் புரியாததை சொல்லிக் கொடுக்க என நேரம் செல்ல, அமுதன் குளித்து விட்டு கீழே வந்த போது மனைவியையும் தங்கையையும் அவர்களுக்குள் தென்பட்ட ஒற்றுமையையும் கண்டு ஒரு நொடி நின்று விட்டான்.
இது வரை கிருஷ்ணா அதிகாலை எழுந்து படிக்கும் போதெல்லாம் அவளுக்கு யாரும் துணை இருந்ததில்லை.
அவன் இருக்க நினைப்பான் தான். ஆனால், தொழில் அதற்குண்டான வேலை என உழைத்து விட்டு வருபவனால் நான்கு மணிக்கெல்லாம் எழ முடிந்ததே இல்லை.
ஒரு கட்டத்தில் கிருஷ்ணா அவளாகவே எல்லாம் பழகிக் கொண்டாள். அதில் அண்ணனுக்கு வருத்தமே! தங்கையுடன் துணை இருக்க முடியவில்லை என.
இப்போது இன்றைய காலைப் பொழுதினில் தங்கையுடன் மனைவியைக் கண்டதும் அவனுக்கு சொல்லொண்ணா திருப்தி!
அகம் நிறைந்து போக, முகம் மலர்ந்து போனது. அவர்களை தொந்தரவு செய்யாமல் டைனிங் ஹால் பக்கம் நகர்ந்தான்.
அவனின் வரவைக் கண்டதும் சமையல் காரப் பெண்மணி அவனுக்கான காஃபியை கொடுத்து விட்டுச் சென்றார்.
டைனிங் டேபபிள் இருக்கையில் அமர்ந்தவன் இருவரையும் பார்த்தபடி காஃபியைப் பருகினான்.
சற்று நேரத்தில் வசுந்தலாவும் வந்து விட்டார். அவரைத் தொடர்ந்து இன்பசேகரனும்.
மருமகள் மகளுடன் அமர்ந்து அவளுக்கு சொல்லிக் கொடுத்து, மகள் ஒப்பிப்பதை கேட்பதைக் கண்டு அப்படியே நின்று விட்டனர்.
கிருஷ்ணாவிடம் மிகப் பாந்தமாகப் பொருந்திப் போய் இருந்தாள் தேன்மலர். அதுவும் திருமணமான அடுத்த நாளே மருமகள் மகளுடன் இப்படி ஒன்றி இருப்பது வசுந்தலாவிற்கு பெரும் ஆச்சர்யத்தை கொடுத்தது.
முதல் முறையாக வசுந்தலாவின் மனதில் தன்னால் ஏன் இப்படி மகளுடன் பொருந்திப் போக முடியவில்லை.. ஏன் ஆரம்பத்தில் இருந்தே அவளை இப்படி வெறுத்து ஒதுக்கினோம் என்ற கேள்வி திடுமென்று மனதில் எழுந்து அவரை சமைந்து போக வைத்தது!