அத்தியாயம் – 26
புகுந்த வீடு வந்து செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்த பிறகு, ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்திருந்தாள் தேன்மலர்.
அவளோடு அமர்ந்திருந்த அமுதகீதன் இன்பசேகரன் அழைத்ததும் “நீ நம்ம ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்குறதுனா எடு மலர். மேல ரைட் சைட் ஃபர்ஸ்ட் ரூம் நம்மளோடது” என்று கூற,
“இல்ல.. பரவாயில்ல. நான் இங்கேயே இருக்கேன். நீங்க வந்ததும் மேல போகலாம்” என்றவள், “நீங்க போங்க. மாமா கூப்பிடுறார்” என்றதும் அமுதன் பெரு மூச்சுடன் அவளையே பார்த்தான்.
மண்டபத்தை விட்டு கிளம்பியதிலிருந்து அவளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவளின் முகத்தில் கவலையும் சோர்வையும் தாண்டி எதோ ஒரு வேதனையின் சாயலை உணர முடிந்தது கணவனால்.
காரில் வரும் பொழுது கூட ஜன்னலின் வழி வெளியே பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்.
ஆறுதலாக அவளின் கைப் பற்றியதும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு “அண்ணிய நெனச்சு தான் கவலை அதான்..” என்று அவசரமாகக் கூறியவளை என்ன சொல்லி தேற்ற என்று அவனுக்குத் தெரியவில்லை.
ஒரே ஊர் தான்! நினைத்தால் சென்று பார்க்கலாம் தான்! ஆனால், நினைத்த நேரமெல்லாம் சென்று பார்க்க முடியாதே!
இனி அவளின் பிராதானங்கள் மாறும்! வாழ்க்கை முறையும் மாறும்! பொறுப்புகளும் கூடி விடும்!
பெண்கள் கடந்து வர வேண்டிய கசப்பான சூழ்நிலைகளில் இதுவும் ஒன்று என யோசித்தவன் அவளின் நிலை புரிந்து வீட்டிற்குள் வந்த பின்னரும் அவளுடனே இருந்தான்.
ஆரத்தி எடுத்த தன் மூத்த அக்காக்கள் இருவரும் கூட அவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை.
யோகராணியும் யோகலக்ஷ்மியும் வள்ளி அளவிற்கு தேன்மலரிடம் மோசமாக நடந்து கொள்ளவில்லை!
ஆனால், அவளைத் தங்கள் வீட்டு மருமகளாக, தம்பிக்கு மனைவியாக ஏற்க முடியாததை தங்களின் ஒதுக்கத்திலும் அமைதியிலும் வெளிப்படுத்தினர்!
யோகவள்ளியோ திருமணத்திற்கு கடனே என்று கணவருடன் வந்திருந்தார். மாப்பிள்ளையின் அக்கா என்ற முறையில் மணமேடையில் கூட வந்து நிற்கவில்லை. மூன்றாம் மனிதர்கள் போல் கணவனும் மனைவியும் ஓரமாக நாற்காலியில் அமர்ந்து தான் அட்சதையை வேண்டா வெறுப்பாகத் தூவினர்.
‘இல்லம் வரை வந்து விட்டு செல்’ என்று வசுந்தலா கேட்டுக் கொண்டதற்கு அவர் திருப்பிப் பேசி விட்டுச் சென்றதை வசுந்தராவால் கூட ஜீரணிக்க முடியவில்லை. அப்படி இருக்க மணப்பெண் தேன்மலர் என்ன செய்வாள்?
எல்லோரும் மண்டபத்திலிருந்து கிளம்பும் சமயம் வசுந்தலாவிடம் வந்த யோகவள்ளி “நான் கிளம்புறேன்மா” என்று பட்டுக் கொள்ளாத குரலில் கூற, “என்னடி இப்பவே கிளம்புற? பொண்ணு மாப்பிள்ளை வீடு கிளம்புற நேரம். வீட்டுக்கு வந்து ராணி, லட்சுமி கூட சேர்ந்து அவுங்களுக்கு ஆரத்தி எடுத்து ஆசீர்வாதம் பண்ணிட்டு போகலாம் தான” என்று வசுந்தலா மகளிடம் குறையாக கேட்டுக் கொள்ள, வள்ளிக்கோ அன்னையின் பேச்சில் எரிச்சல் மேலோங்கியது.
அவர்கள் நின்றிருந்த இடத்தில் யாரும் இல்லை.. குறிப்பாக தம்பியோ தந்தையோ இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட வள்ளி “இங்க பாருமா.. என் நாத்தானாரை விட்டுட்டு போயும் போயும் இந்த மகாராணி தான் வேணும்னு கட்டிக்கிட்டான் உன் மகன்! இவளுக்கெல்லாம் நான் வேற வந்து ஆரத்தி எடுக்கணுமா?” என்று ஆவேசமாகப் பேசியவர்,
அன்னை கோபமாகக் கூற வருவதை தடுத்து “நீ வேணும்னா பாருமா.. இவ வந்த நேரம் நம்ம வீடு விளங்கவே விளங்காது..!” என்று சாபம் போல் சொல்லி விட, வசுந்தலா பதறிப் போய் நெஞ்சில் கை வைத்து விட்டார்.
தன் பேச்சில் அமைதியாக இருந்த அன்னையை வள்ளி உற்று பார்க்க, அவரின் பார்வை தன் பின்னே இருப்பதை உணர்ந்து அவரும் திரும்பிப் பார்க்க, அங்கே கலங்கிய முகத்துடன் நின்றிருந்தாள் தேன்மலர்.
மருமகளின் முக மாற்றம் வசுந்தலாவைப் பதற வைத்தது. மகள் பேசிய அனைத்தையும் கேட்டு விட்டாள் என்று புரிந்து கொண்டவர், “தேனு…” என்று அவளை நெருங்க, “அம்மா உங்களை கூப்பிட்டாங்க அத்த” என்றவள் மறந்தும் வள்ளியின் பக்கம் பார்வையைப் திருப்பவில்லை.
அவளின் கலங்கிய முகத்தைக் கண்டதும் தான் வள்ளிக்கு உள்ளுக்குள் குளிர்ந்தது.
வசுந்தலா மகளை நன்றாக முறைத்து “வார்த்தையை பார்த்து விடுடி. இது உன் தம்பிக்கு தெரிஞ்சா என்ன செய்வான்னு எனக்கே தெரியாது..” என்று மகளை எச்சரித்து விட்டு மேலும் எதையும் பேசாமல் மருமகளிடம் பேச வந்தார்.
அவளோ “கிளம்பணும் அத்த. எல்லாரும் நமக்கு தான் வெயிட் பண்றாங்க” என கலங்கிய குரலை செருமிக் கொண்டு கூறியவள் அவரின் பதிலைக் கூட எதிர்பாராமல் நகர்ந்து விட்டாள்.
வசுந்தலாவும் இல்லம் சென்ற பின்னர் அவளிடம் ஆறுதலாக பேசிக் கொள்ளலாம் என்று மேலும் எதையும் பேசாமல் கிளம்பி இருந்தார்!
வள்ளியின் இத்தகைய பேச்சால் தான் தேன்மலரிடம் அமைதியும் வேதனையின் சாயலும்!
திருமணமான அன்றே.. தான் வாழ வரப் போகும் இல்லம் தன்னால் சீர்குழைந்து விடும் என்று சாபம் விடும் அளவிற்கு அவருக்கு நான் என்ன தீங்கு செய்தேன் எனும் கேள்வியே தேன்மலரின் நெஞ்சத்தை பிசைந்தது.
அமுதகீதன் அவளிடம் “என்னாச்சு மலர்? உன் முகமே சரியில்ல. உன் அண்ணி கிட்ட பேசிட்டு வந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் டல்லா தான் இருந்த. ஆனா, கார்ல ஏறும் போது உன் முகம் சரியில்ல. வெளிய வர்றதுக்குள்ள அப்படி என்ன நடந்தது?” என்று அவன் துள்ளியமாகக் கேட்க, தேன்மலர் தொண்டைக் குழி ஏறி இறங்கியது.
தன் ஒவ்வொரு அசைவையும் கச்சிதமாக கவனித்துக் கேள்வி கேட்பவனிடம் அவளால் நடந்ததை சொல்ல முடியாது! நிச்சயமாக முடியாது!
எனவே, “ஒன்னுமில்ல. கார்லயே சொன்னேனே.. அண்ணி நியாபகம்.. அவ்வளவு தான். இப்ப ஓகே நான்” என்றாள் சின்ன புன்னகையை உதிர்த்தபடி.
அமுதன் மேலும் பேசுவதற்கு முன் இன்பசேகரனே மகனிடம் வந்திருந்தார்.
“அமுதா.. நம்ம யூ.எஸ். டீலர். கல்யாணத்துக்கு வர முடியலன்னு ஃபோன்ல உன் கிட்ட வாழ்த்தை சொல்றாங்க. பேசு” என்று அவனிடம் ஃபோனை நீட்டியவர் நகர்ந்து விட, அமுதன் பார்வை மலரிடம் தான் இருந்தது!
இங்கேயே நின்றால் தன்னை கண்டு கொள்வான் என்றவள் என்ன செய்வதென்று தவிப்புடன் நிற்க, அவளைக் காப்பாற்றவென கிருஷ்ணரூபி வந்திருந்தாள்.
கிருஷ்ணாவைக் கண்டதும் சோர்ந்திருந்த தேன்மலரின் முகத்தில் வேகமாக புன்னகை படர்ந்தது.
அண்ணியின் அருகே வந்த கிருஷ்ணா “வெல்கம் டூ நம்ம ஹோம் அண்ணி” என்று கண் சிமிட்டி புன்னகைத்தவளின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.
“தேங்க்ஸ் கிருஷ்ணா” என்ற தேன்மலர், “நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க” என்றாள் பச்சை மற்றும் சந்தன வர்ண பட்டு தாவணியில் இருந்தவளை ரசித்த வண்ணம்.
அவர்கள் பேச ஆரம்பித்ததும் அமுதன் அலைபேசியுடன் நகர்ந்து விட்டான். ஆனால், மனைவியிடம் என்ன ஆகிற்று என்பதை கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்பதை மறக்கவில்லை.
“என்னை விடுங்க அண்ணி. நீங்களும் அண்ணாவும் தான் சூப்பர் டூப்பரா இருந்தீங்க. உங்களுக்கு சுத்திப் போடணும்னு பெரியவங்க பேசிட்டு இருந்தாங்க” என்றவள்,
“அவ்வளவு அழகா இருக்கீங்க அண்ணி” என்றாள் சிலாகிப்புடன்.
தேன்மலர் புன்னகைக்க, “ஆமா.. உங்களோட ஹேர் ஒரிஜினல் ஹேராமே? சவுரி முடி வைக்கலயா நீங்க? அம்மா அக்காங்க கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. உண்மையா அண்ணி?” என்று ஆச்சர்யத்துடன் இளையவள் கேட்க,
“ஆமா கிருஷ்ணா. என்னோட ஹேர் தான்” என்று தேன்மலர் கூறியதும், கழுத்து வரை வெட்டப்பட்டிருந்த தன் குட்டைக் கூந்தலை பெரு மூச்சுடன் பார்த்தவள் “எனக்கும் உங்களை மாதிரி முடி வளர்க்கணும்னு தான் ஆசை. ஆனா, வளர்க்கல” என்றாள் ஏமாற்றம் நிறைந்த குரலில்.
“ஏன்?” என்று தேன்மலர் கேட்க, “ரிப்பன் வச்சு ஜடை பின்னி விட ஆள் இல்ல அண்ணி!” என்று சாதாரணமாகக் கூறியவளின் குரலில் வலியின் சுவடு.
‘அத்த பின்னி விடுவாங்க தானே..’ என்று கேட்க நினைத்த தேன்மலர் அவள் முகம் காட்டிய உணர்ச்சிகளில் கேள்வியை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டாள்.
“ஆள் இல்லைன்ற கவல இனி உனக்கு வேண்டாம். இனிமேல் நான் பின்னி விடுறேன். நீளமா முடி வளக்களாம்” என்று கூற, கிருஷ்ணாவிற்கு குஷி ஆகியதுடன் கண்களில் கண்ணீர்த் துளிகள் தேங்கி விட்டது.
“தேங்க்ஸ் அண்ணி” என்றவள் அவளின் கைப் பற்றிக் கொண்டு “என் ரூம் வந்து பாக்குறீங்களா?” என்று ஆவலும் ஆசையுமாக கேட்க, இங்கே இருந்து தன்னை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு தன் குட்டி நாத்தனாருடன் அவளின் அறைக்கு செல்வது நல்ல யோசனையாக இருந்தது தேன்மலருக்கு.
அறைக்குள் நுழைந்ததும் மடை திறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்து விட்டாள் கிருஷ்ணா.
சிறு வயது புகைப்படங்கள், கப்போர்ட்டில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த அவளது வெற்றிக் கோப்பைகள் என அனைத்தையும் காட்டி தன் அண்ணியிடம் இளையவளின் பேச்சு நீண்டு கொண்டே சென்றது.
அவளின் ஆர்வமும் ஈடுபாடு நிறைந்த பேச்சையும் வைத்து தேன்மலர் ஒன்றை புரிந்து கொண்டாள்! கிருஷ்ணா இந்த வீட்டில் எதோ ஒரு வகையில் தனிமையில் இருப்பதை!
ஒரு கட்டத்தில் “ரொம்ப பேசுறேனோ அண்ணி?” என்று கிருஷ்ணா அசடு வழிய கேட்க,
“அதெல்லாம் இல்ல கிருஷ்ணா. நீ சொல்லு.. நான் கேக்குறேன்” என்றவள் புன்னகையுடன் கூற, கிருஷ்ணாவிற்கு சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் மட்டுமே!
“நீங்க எனக்கு அண்ணியா கிடைச்சது எனக்கு எவ்ளோ ஹேப்பி தெரியுமா?” என்றவள், மகிழ்ச்சியின் உச்சத்தில் அவளின் கன்னத்தில் முத்தம் வைக்க, சரியாக அங்கே வந்திருந்தான் அமுதகீதன்.
மனைவியைத் தேடி வந்தவன், கிருஷ்ணா மனைவியின் கன்னத்தில் முத்தம் வைத்ததும் ஒரு நொடி நின்று விட்டான்!
‘தங்கை தன்னை முந்திக் கொண்டாளே…’ என்று மனதிற்குள் சிறு பிள்ளை போல் எண்ணிக் கொண்டவனுக்கு பெரு மூச்சு வேறு வெளியேறியது!
அண்ணனைக் கண்டதும் கிருஷ்ணா மலர்ந்த முகத்துடன் “வாண்ணா..” என்க, உள்ளே வந்தவன் மனைவியின் முகம் இயல்பாக இருப்பதைக் கண்டு நிம்மதி உண்டானாலும் அவளின் வேதனைக்கு என்ன காரணம் என்று அறிய நினைத்தான்.
தங்கை முன் கேட்க முடியாமல் “அம்மா உன்னை வர சொன்னாங்க மலர்..” என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வசுந்தலா வந்திருந்தார்.
மருமகளைக் கண்டவர் “இங்க தான் இருக்கியா தேனு” என்றவர் மகளிடம் முறைப்புடன் “நீ இன்னும் ட்ரெஸ் கூட மாத்தாம என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அதட்ட, கிருஷ்ணா மெல்லிய குரலில் “மாத்திடுறேன்” என்று முனங்கினாள்.
“ஹ்ம்ம் சீக்கிரம் மாத்திட்டு படிக்க ஆரம்பி. நாளைக்கு உனக்கு எக்சாம் இருக்குன்னு வேற சொன்னல்ல” என்று கூற, “ஹ்ம்ம்” என்று முனங்கிய கிருஷ்ணா அமைதியாக கப்போர்டில் இருந்து கைக்குக் கிடைத்த ஒரு உடையை எடுத்துக் கொண்டு குளியலறை சென்று விட்டாள்.
அத்தை கிருஷ்ணாவிடம் பேசிய விதத்தை கண்டு தேன்மலர் சற்று திகைத்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்!
தன்னிடம் பேசிய போது அவர் குரலில் இருந்த இளக்கம், மகளிடம் பேசிய போது ஏன் இல்லை? எனும் கேள்வி அவளின் மனதை அரித்தது. ஆனாலும் கிருஷ்ணாவிடம் கண்டிப்பாக இருப்பார் போலும் என்று அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
வசுந்தலா அவளிடம் “நீ ரூமுக்கு போய் குளிச்சிட்டு வேற பட்டுப் புடவை கட்டிட்டு வா தேனு. சாய்ந்தரம் விளக்கேத்தி சாமி கும்பிடனும்” என்று கூற, “சரி அத்தை” என்றாள் தேன்மலர்.
“அமுதா.. தேன உன் ரூம் கூட்டிட்டு போ. அப்படியே நீயும் குளிச்சிட்டு இன்னொரு பட்டு வேட்டி சட்டை போட்டுக்க” என்று வசுந்தலா கூற, “சரிம்மா..” என்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு மேலே ஏறினான்.
அமுதகீதனின் அறையில் முதல் முறையாக பிரவேசித்தாள் தேன்மலர்.
நல்ல பெரிய அறை! அதிலிருந்த கட்டில்.. இரண்டல்ல மூன்று பேர் படுக்கும் அளவு தாராளப் பெரிதாக இருந்தது!
அதனைக் கண்டதும் தேன்மலர் தன் போக்கில் “ஒரு இடமா படுக்க மாட்டீங்களா நீங்க? நல்லா உருண்டு புரண்டு படுப்பீங்களா?” என்று கேட்டிருக்க, அதில் அவளைப் புரியாமல் பார்த்தான் அமுதகீதன்!
அவன் பார்வையில் என்ன கேட்டு விட்டோம் என்று சங்கோஜத்துடன் கண்களை இறுக மூடித் திறந்தவள் “இல்ல.. பெட்.. இவ்வளவு பெருசா இருக்கே.. அதான் கேட்டேன்” என்றாள் சமாளித்துக் கொண்டு.
நன்றாகவே சிரித்து விட்டவன், “ஃபர்ஸ்ட் டைம் ரூமுக்குள்ள வந்ததும் செம கேள்வி கேட்ட போ!” என்றவன், அவளை சுவாரஸ்யமாக பார்த்தபடி, “நான் உருண்டு புரண்டு தான் படுப்பேன். இனி அப்படி படுக்க முடியாதுன்னு நினைக்கிறேன்” என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க, ஏன் என்று புரியாமல் பார்த்தவள் அவனின் புன்னகையில் சுதாரித்து விட்டாள்.
நெற்றியில் வியர்வை பூக்கள் பூப்பது போலிருந்தது.
அமுதன் ‘என்ன’ என்பது போல் உதட்டுக்குள் சிரித்தபடி புருவங்களை உயர்த்த, “ஏன் முடியாது! நீங்க தாரளமா உருண்டு புரண்டு படுங்க… அதுக்கென்ன இப்ப?” என்றவள், அவனின் கேலிப் பார்வைக்கு பதிலடி கொடுக்கும் வேகத்துடன் அங்கே மறு பக்கத்தில் இருந்த சோபாவை சுட்டிக் காட்டி,
“நான் இதோ.. இந்த சோஃபால படுத்துக்குவேன்” என்றாள் கைகளை கட்டிக் கொண்டு!
“ஓ..” என்று தாடையில் கை வைத்து யோசித்தவன், “அப்ப நானும் உன் கிட்ட வந்து ஒட்டிக்கிட்டு… கட்டிக்கிட்டு படுத்துப்பேன்” என்றான் அசராமல்!
அவனின் பேச்சில் அவளுள் தடுமாற்றம்!
“ஹ்ம்ம்.. நா..நான் என்னோட லக்கேஜ் எடுத்துட்டு வரேன்” என்று வெளியே செல்லத் திரும்ப, வசுந்தலா வேலை செய்யும் பெண்மணியுடன் அங்கே வந்திருந்தார். அவரின் கையில் தேன்மலரின் உடமைகள் இருந்தன.
“உன் அம்மா, அண்ணி எல்லாம் வந்தாச்சு தேனு. லக்கேஜ் வச்சுட்டு போகலாம்னு தான்” என்ற வசுந்தலா, வேலை ஆளிடம் உடமைகளை அங்கே ஓரமாக வைக்கச் சொல்லி விட்டு அவர் கிளம்பியதும் மருமகளிடம் திரும்பினார்.
மகன் அலைபேசியை எடுத்துக் கொண்டு பால்கனி பக்கம் நகர்ந்ததைக் கண்டவர், அவன் யாருடனோ பேசுவதை உறுதி செய்து கொண்டு மருமகளின் கைகளை பற்றிக் கொண்டவர், “தேனு.. மண்டபத்துல வச்சு வள்ளி பேசினதுக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று பெரும் சங்கடம் நிறைந்த குரலில் கேட்டுக் கொள்ள,
“நீங்க எதுக்காக அத்த மன்னிப்பெல்லாம் கேக்குறீங்க?” என்றவள்,
“நான் அதை மறந்துட்டேன் அத்த. விடுங்க” என்றாள் புன்னகையுடன். ஆனாலும் அவர் வள்ளியின் பெயரை எடுத்ததுமே அவளின் முகம் மாறி இருந்தது.
வசுந்தலா அதை கவனித்து மேலும் கவலையுடன் அவளைப் பார்க்க, கணவன் இன்னும் பால்கனியில் நிற்பதை கண்டவள் “அவர் வந்திட போறார் அத்த.. நார்மலா இருங்க. அவருக்குத் தெரிஞ்சா பிரச்சனை தான்” என்று மாமியாரை எச்சரிக்க, வசுந்தலாவும் முகத்தை சீராக்கி கொண்டு,
“அறிவில்லாம வள்ளி அப்படி எல்லாம் பேசிட்டா. நீ எதையும் மனசுல வச்சு வருத்தப்படாத தேனு.” என்றவர் மகன் வரவை உணர்ந்து மருமகளிடம் கண்ணை காண்பித்து விட்டு அமைதியாக கீழே சென்று விட்டார்.
அன்னை செல்வதை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவன் மனைவி குளியலறை செல்வதை கண்டு “ஒரு நிமிஷம் மலர்” என்று அவளை நிறுத்தினான்.
என்ன என்பது போல் தன்னைப் பார்த்தவளிடம் “வள்ளி அக்கா என்ன சொன்னாங்க?” என்று அமுதகீதன் கூர்மையுடன் கேட்க, தேன்மலர் கண்கள் திகைப்பில் விரிந்து கொண்டன.
“சொல்லு மலர்!” என்றவன் குரலில் அழுத்தம் ஏறி இருந்தது. பார்வையிலும் மெல்லிய கோபம்!
அக்கா பேசியதற்கு தான் அவளின் முகத்தில் அத்தனை வேதனை என்று அறிந்த நொடி அவனுள் கட்டுக்கடங்காத கோபம்!
என்னவென கேட்டதற்கு அண்ணியை நினைத்து தான் கவலை என்று சமாளித்த மனைவி மீதும் மெல்லிய கோபம் உண்டானது அவனுக்கு!
தன்னிடம் ஏன் மறைக்க வேண்டும்? எனும் கேள்வி வேறு மனதில் முகிழ்த்தது.
“உன்னை தான் மலர்! சொல்லு!” என்றவன் விடமால் கேட்க,
“அத்தையும் நானும் பேசினதை கேட்டீங்களா?” என்று கேட்ட மலரின் குரலிலும் கோபம் தென்பட்டது.
“கால் கட் பண்ணதும் அம்மா லாஸ்ட்டா பேசினது என் காதுல விழுந்தது மலர். நானா வேணும்னு கேக்கல” என்றவன், “என்ன ஆச்சு? அக்கா என்ன பேசினாங்க” என்றான் மீண்டும்!
கைகளை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்தவள் “அத்தை சொன்னதை மறந்திடுங்க. அப்படி எல்லாம் ஒன்னுமில்ல” என்றவள் ‘என்னால் கூற முடியாது’ எனும் விதமாக நிற்க,
“அப்போ நீ சொல்ல மாட்ட!” என்று கோபமாகக் கேட்டவன்,
“இதுல நான் மறந்திடனும் வேற இல்ல?? கார்ல உன் முகம் அவ்வளவு வேதனையோட இருந்ததைப் பார்த்து எனக்கு எப்படி இருந்ததுன்னு உனக்குத் தெரியாது மலர். என்னன்னு கேட்டதுக்கு உன் அண்ணியை காரணம் சொல்லி சமாளிக்குற. உண்மையை என் கிட்ட சொல்றதுக்கு என்ன?” என்று வருத்தமும் கோபமும் நிறைந்த குரலில் கேட்டான்.
“உங்க கிட்ட அந்த விஷயத்தை சொல்லாம விடுறேன்னா, அந்த விஷயத்தால பிரச்சனையும் கஷ்டமும் தான் வரும்னு அர்த்தம். அதனால எந்த நல்லதும் நடக்கப் போறதில்லன்னு அர்த்தம்” என்றாள் அழுத்தமாக.
“நீ அவ்வளவு தூரம் அழற அளவுக்கு அக்கா என்னமோ பேசி இருக்காங்க ரைட்! ஓகே! நீ எவ்வளவு கேட்டாலும் சொல்ல மாட்ட! நான் போய் அம்மா கிட்டயே கேட்டுக்குறேன்” என்று அறையை விட்டு வெளியேற எத்தனித்தவனின் முழங்கை பற்றி தடுத்த தேன்மலர், கோபம் தாங்கிய விழிகளுடன் அவனைப் பார்த்து,
“நான் அவ்வளவு தூரம் சொல்றேன் தான. அதை புரிஞ்சிக்காம அத்த கிட்ட போய் கேட்பேன்னா என்ன அர்த்தம்?” என்று அதட்டியவள், பற்றிய அவனின் கையை விடாமல், அவனை கட்டிலில் அமர வைத்து அவனின் இரு பக்கத் தோள்களையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு “நான் குளிச்சிட்டு வர வரைக்கும் நீங்க இங்கேயே உக்காந்திருக்கணும்! அதை மீறி எதாவது அத்த கிட்ட கேட்டு பிரச்சனை பண்ணீங்கன்னா எனக்கு கெட்ட கோபம் வந்திடும்” என்று முகத்தின் அருகே தன் முகம் வைத்து அதிகாரத்துடன் அவனை எச்சரித்தவள், குளிக்கச் சென்று விட்டாள்!
மூடிய குளியலறையை கண்டவன் அப்போது தான் இழுத்துப் பிடித்த மூச்சினை வெளியேற்றினான்.
தன் முகத்தருகே அவளின் முகத்தை.. மூச்சுக் காற்றை.. உணர்ந்ததுமே அவனின் கோபங்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போனது.
தன்னை எச்சரித்த மலரின் இதழ் அசைவுகள், கண்கள் சிந்திய கோபம், வார்த்தையில் தொனித்த கோபம்.. என அவளின் ஒவ்வொரு செயல்களும் அவனை இம்சித்திருக்க, மூச்சை உள்ளிழுத்துக் கொண்டான்.
அவள் விலகியதும் தான் “ஊஃப்…” எனும் பெரு மூச்சு வெளியேறியது.
“மலர்…” என்று பின்னந்தலை முடியை கோதிக் கொண்டவன், “நல்ல வேள.. விபரீதமா எதுவும் பண்ணிடல. கிஸ் பண்ணனும்னு தோணுனதை எப்படியோ கண்ட்ரோல் பண்ணிட்டேன்!” என்று அந்த நொடி தலையை உலுக்கிக் கொண்டவனுக்கு இரவின் தனிமையில் மலரிதழை தீண்டாமல் இருக்க முடியவில்லை!
அமுதம் மலரிதழில் மூழ்கவிருந்தது! ஆனால், மலர் பெண் கீதம் பாடி அமுதத்தில் மூழ்கத் தயாராக இல்லை!