அத்தியாயம் – 25
கைலாசநாதர் கோவில் வந்ததும் தேன்மலர் காரை விட்டு கீழிறங்க எத்தனிக்க, “ஒரு நிமிஷம் மலர்..” என்று அவளை நிறுத்தியவன்,
அவன் என்னவென்று கேள்வியாக பார்க்கும் போதே இருக்கையில் இருந்து நகர்ந்து அவளை நெருங்க, மலர் தன்னிச்சையாக முகத்தை பின்னே இழுத்துக் கொண்டாள்.
அவளின் செயலில் அவளுடைய எண்ணத்தை புரிந்தவன், “அம்மாடியோவ்… நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் பண்ணிட மாட்டேன். வா இங்க” என்றவன் சொன்னதும் தேன்மலர் விழிக்க, இடையே இருந்த கியர் பாக்ஸ்சை ஆயாசமாக பார்த்தவன் அதனிடம்,
“நல்ல வேள இடையில நீ இருக்க. இல்லேன்னு வை.. இதோ இந்த மேடம் நான் அவுங்க மடியில வந்து உக்கார போறதா நினைச்சிருப்பாங்க” என்று உச் கொட்டி தலை அசைத்தபடி சற்று எக்கி அவளை நெருங்கியவன்
நெற்றியில் கோணலாக வைத்திருந்த கோபுர பொட்டினை நேர்த்தியாக வைத்து விட்டான்.
“பொட்டை அவசரத்துல வச்சிட்டு வந்திருப்பேன்னு நினைக்கிறேன் மலர். கோணலா இருந்தது.. இப்ப கரெக்ட்டா இருக்கு” நெருங்கி இருந்தவன் சாதாரணமாகப் பேச, நெருக்கத்தை உணர்ந்தவள் தான் மூச்சு முட்டிப் போனாள்.
அவனோ இயல்பாக “போகலாமா..” என்று கேட்டு இறங்கி இருக்க, இரண்டு நிமிடங்கள் கடந்தே இயல்புக்கு வந்தாள் தேன்மலர்.
அவனின் இரு விரல் பட்ட நெற்றி குறுகுறுத்தது. மெல்ல ஒற்றை விரலால் பொட்டை வருடிக் கொண்டவள் தலையை உலுக்கிக் கொண்டு இறங்கி விட்டாள்.
அவளின் தடுமாற்றம் எல்லாம் அவனின் கண்ணில் பட்டாலும், சின்ன புன்னகையை சிந்தினானே தவிர அதனை பெரிதாக கண்டு கொண்டு அவளை அசௌகரியப் படுத்த விரும்பவில்லை.
இருவரும் கோவிலுள் சென்று சுவாமி தரிசனம் முடித்து விட்டு பிரகாரத்தை சுற்றி வந்ததும் கல் தூண்களாலான சிறிய நிழற்குடை மண்டபத்தில் அமர்ந்து கொண்டனர்.
பின்காலை பொழுது தான் என்றாலும் கோவிலிற்குள் தென்றல் காற்று தாராளமாக வீசியது.
தேன்மலர் உள்ளங்கையை விரிப்பதும் மூடுவதுமாக இருக்க, அவளைத் திரும்பிப் பார்த்தவன் “சொல்லு மலர்.. என்ன சொல்லணுமோ.. என்ன கேட்கணுமோ அதை சொல்லிடு… கேட்டிடு.. மனசுலயே வச்சு மருகாத” என்று அவளின் மௌனத்தை உடைக்குமாறு கூறினான்.
தேன்மலர் உள்ளங்கையை மடித்து மடியில் வைத்துக் கொண்டு நீண்ட மூச்சினை வெளியேற்றி விட்டு “நம்ம கல்யாணத்தை நினைச்சு பயமா இருக்கு!” என்றாள் ஒரே வரியில்!
“அவ்வளவு தான் சொல்லணுமா?” என்று அமுதன் தலை சாய்த்து கேட்க, தன் மனதில் உள்ள அத்தனையும் சொல்லத் தூண்டுகிறான் என்பதை புரிந்து கொண்டாள்
தேன்மலர்.
“நம்மளுக்குள்ள ஆரம்பத்துல இருந்தே டெரம்ஸ் சரியில்லாம தான் இருந்திருக்கு. சண்டைகள் தான் அதிகமா இருந்திருக்கு. அப்புறம் உங்க நெருக்கத்தை உணர ஆரம்பிச்ச பின்ன ஒதுங்கிப் போகனும்னு தான் நான் நினைச்சேன். உங்களையும் ஒதுங்கி இருக்க சொல்லிட்டேன். ஆனா, நீங்க…” என்றவள்,
“உங்க கடைசி மூச்சு இருக்க வரைக்கும் நான் தான் உங்க மனசுல இருப்பேன்னு சொல்லிட்டீங்க..” என்றாள் கரகரத்த குரலில்.
அமுதன் அவளையே பார்த்திருக்க, தொண்டைக் குழி ஏறி இறங்க மீண்டும் பேசத் தொடங்கினாள்.
“அந்த வார்த்தை.. அதை என்னால சாதாரணமா கடந்து போக முடியல. ஒரு பக்கம் அது உங்க பிடிவாதம்னு தோணுனாலும் இன்னொரு பக்கம் இந்த அளவுக்கு நீங்க உறுதியா வார்த்தையை விடுறீங்கன்னா எந்த அளவு என் மேல உங்களுக்கு பிடித்தம் இருக்குன்னு யோசிக்க வச்சது…” என்றாள்.
அவளின் வார்த்தைகளில் அமுதன் புன்னகைக்க, “ஏன்? ஏன் உங்களுக்கு என்னை இந்த அளவு பிடிக்கணும்? இத்தனைக்கும் நான் உங்க கூட நல்ல விதமா பேசினது கூட கிடையாது. கார்ல நீங்க சொன்ன மாதிரி உங்க கிட்ட கறாரா நடந்துக்க கூடிய ஆள் நான்! அப்புறம் ஏன் என்னை உங்க மனைவியா வேணும்னு முடிவு பண்ணீங்க? என் கூட ஒரு வாழ்க்கை.. அதை எப்படி உங்களால யோசிக்க முடிஞ்சது? எனக்கு அதை நினைச்சு தான் பயமாவே இருக்கு. நம்ம ரெண்டு பேர் கேரெக்ட்டருக்கும் ஒத்து வருமா? நாம சரியா இருந்தாலும் எல்லா நேரத்துலயும் சூழ்நிலை சரியா இருக்காது இல்லையா?” என்றவள்,
“ரொம்ப வருஷம் காதலிச்சு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்டு கல்யாணம் பண்ணிக்கிறவங்களே கல்யாணத்துக்கு பின்ன சரியான புரிதல் இல்லாம பிரிஞ்சி போய்டுறாங்க. அப்படி இருக்கும் போது.. நாம….” என்றவள் முடிக்க முடியாமல் பயத்துடன் நிறுத்தி விட்டாள்.
அவள் பேசுவதை எல்லாம் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் நிறுத்தியதும், “மலரோட மூளை ரொம்ப ஓவரா திங்க் பண்ணி இந்நேரம் சூடாகி வெடிச்சு இருக்கணுமே!” என்றான் கன்னத்தில் கை வைத்து.
தேன்மலர் அவனை மெல்ல முறைக்க, “ஓகே.. ஓகே..” என்றவன் பேசத் துவங்கினான்.
“லுக் மலர்! உன்னோட பயம்.. அது அவசியமான்னு கேட்டா இல்லேன்னு தான் நான் சொல்வேன்! நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே நாம பிரிஞ்சி போய்டுவோமோன்னு இவ்வளவு பயப்படுற! அந்தப் பயத்துக்கு என்ன காரணம்னு முதல்ல யோசிச்சயா?” என்று அழுத்தமாக கேட்க, புரியாமல் அவனைப் பார்த்தாள் தேன்மலர்.
“உன்னோட பயத்துக்கான அடிப்படை எண்ணம்… நம்மளோட சந்தோஷமான வாழ்க்கையை நீ நினைச்சதால தான்” என்க, தேன்மலருக்கு ஒன்றும் புரியவில்லை.
“உன் மனச தொட்டு சொல்லு மலர்.. இந்த அளவு பயப்படுறேன்னா அந்த அளவுக்கு நாம நம்ம வாழ்க்கையை நல்ல விதமா, சந்தோஷமா வாழணும்னு தான யோசிச்சு இருக்க?” என்று கேட்க, தேன்மலர் கண்கள் அகல அவனைப் பார்த்தாள்.
“எஸ்!! யோசிச்சு இருக்க! இந்த அமுதன் கூட சந்தோஷமான ஒரு வாழ்க்கையை மலரோட மனசும் எதிர்பார்க்குது” என்று நெஞ்சில் கை வைத்து புன்னகைத்தவன், அவளின் கைப் பிடித்து, “பயப்படாத மலர். நாம சந்தோஷமா இருப்போம்!” என்றான் நம்பிக்கை நிறைந்த குரலில்.
அவனின் முகத்தையே விடாது பார்த்தவள், “நீங்க இவ்வளவு இயல்பா, சாதாரணமா என் கிட்ட பேசுறீங்க.. நடந்துக்குறீங்க. ஆனா என்னால அப்படி முடியல. உங்க கூட கல்யாணம்னு முடிவான பின்ன
ரொம்ப தடுமாற்றம் வருது. ரொம்ப தயக்கமா இருக்கு. இப்படி எல்லாம் நான் கிடையாது…” என்று கூற,
“அதான் நானும் சொல்றேன். ஏன் தடுமாறுர? ஏன் தயங்குற? என்னன்னாலும் வெளிப்படையா சொல்லி பேசிடுறது பெட்டர் இல்லையா? இப்ப பேசின மாதிரி பேசிடு. நோ தடுமாற்றம். நோ தயக்கம்” என்றான் தோள்களை குலுக்கிக் கொண்டு.
மலரோ இன்னும் தெளியாமல் “இதெல்லாத்துக்கும் மேல என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றது உங்க நடவடிக்கைகள் தான். என் கிட்ட அவ்வளவு அன்பா பேசுறீங்க. காதலோட நடந்துக்குறீங்க. இதோ இப்ப கூட என் வாய்ஸ் வச்சே நான் சரியில்லேன்னு புரிஞ்சுகிட்டு எனக்காக எல்லா வேலையும் விட்டுட்டு உடனே நேர்ல பாக்க கிளம்பி வந்துட்டீங்க. முன்ன இருந்த கோபம், அழுத்தமான பார்வை, ஏளனப் பேச்சு, உங்க ஆட்டிடியூட் இதெல்லாம் அப்படியே மாறி போச்சு. எனக்காக நீங்க இவ்வளவு இறங்கி வர்றீங்க! அதுக்கான அவசியமே இல்லையே?” என்று கேட்க, அமுதகீதன் அவளின் வார்த்தைகளில் நெற்றியை பிடித்து விட்டான்.
“மலர்… நீ ரொம்ப பிரில்லியன்ட்டான பொண்ணு தான…. நீ ஏன் இப்படி எல்லாம் பேசுற!” என்று அலுப்புடன் கேட்டவன்,
“முதல்ல ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்க மலர்! நான் உன்னை விரும்புறேன். மனசார விரும்புறேன். என் மலர் தான் எனக்கு எல்லாம்ன்ற நிலமைக்கு எப்பவோ நான் வந்துட்டேன். இதுல நான் எங்க இறங்கி வந்தேன்?” என்று கேட்க,
“அப்ப நீங்க எனக்காக இறங்கி வரலேன்னு சொல்றீங்களா?” என்றாள் மலர் மெய்யாகவே புரியாமல்!
அவள் சொன்னதைக் கேட்டு இடமும் வலமும் தலை அசைத்துக் கொண்டவன் “இறங்கி வந்தேனா??? சரி சொல்லு.. எவ்வளவு தூரம் இறங்கி வந்தேன்.? ஒரு பத்து படி, அம்பது படி? சரி.. நூறு?” என்று விளையாட்டாக கேட்டதும் தேன்மலர் மௌனமாகி விட, அவளின் புறங்கையை வருடிக் கொடுத்தவன்,
“உன் புரிதல் தப்பா இருக்கு மலர். நான் எங்க உனக்காக இறங்கி வந்தேன்? நமக்குள்ள நடக்கப் போறது தொழிலா இல்ல போட்டியா? ‘நான் மேல இருந்தேன். நீ கீழ இருந்த. உனக்காக நான் இறங்கி வந்தேன்’னு சொல்றதுக்கு?? நாம கல்யாணம் பண்ணிக்க போறோம் மலர். நமக்குள்ள ஒரு பூரண பந்தம் உருவாகப் போகுது. நம்ம மனசு ஒத்து ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல துணையா இருந்து வாழப் போறதுக்கான பந்தம் அது! அந்த பந்தத்துல நீ மேல நான் கீழ அதெல்லாம் கிடையவே கிடையாது. நாம ரெண்டு பேருமே சமம்! ஒரே படகுல இருந்து நம்ம பயணத்தை சரிசமமா ஆரம்பிக்கப் போறோம்” என்றவன்,
அவளின் கண்களை பார்த்துக் கொண்டே “நான் இறங்கி வரல மலர். உன்ன காதலிக்கிற அமுதகீதனா மாறி இருக்கேன்! மலருக்கான என் உணர்வுகள் மாறி இருக்கதால என்னோட ஆட்டிடியூடும் மாறி இருக்கு. அவ்வளவு தான். உன்னை காதலிக்கிற அமுதன் உன்னை மதிக்கவும் செய்வான் மலர். சொல்லப் போனா உன்னோட மதிப்பு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் நான் உனக்காக விழ ஆரம்பிச்சதே! அப்படி இருக்கப்ப உன் கிட்ட நான் இயல்பா, சாதாரணமா, அன்போட இஷ்டத்தோட தான் பேசுவேன்!” என்றான் கண் சிமிட்டி!
அவன் பேசப் பேச மலரின் குழப்பங்கள் எல்லாம் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தது போலாகி விட, வியப்பாகவே அவனைப் பார்த்தாள்!
அவனின் மாற்றங்கள் எல்லாம் மலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.
எவ்வளவு அழகாக புரிய வைத்து விட்டான் என்று இமையாடாமல் அவனைப் பார்க்க, “க்கும்… மலர் மண்டைக்குள்ள இருக்க குழப்பம் எல்லாம் போய்டுச்சா? கிளம்பலாமா?” என்று கேட்க,
“ஹான்.. ஹ்ம்ம்!” என்றவள், அவன் எழும் முன்னே தானாக அவனின் கைப் பற்றி அலைபாயும் கண்களுடன் “நமக்குள்ள எதுவும் தப்பா போகாது தானே?” என்று நடுங்கிய குரலில் கேட்க, பற்றிய கையை அழுத்தமாக தானும் பற்றிக் கொண்டவன்,
“நிச்சயம் எதுவும் தப்பா போகாது மலர். நான் இருக்கேன்” என்று அவளின் கண்களை துடைத்து விட, அந்த நொடி முழுமையாக அவன் மேல் நம்பிக்கை கொண்டாள் தேன்மலர்.
“ரெண்டு நிமிஷம்.. ப்ளீஸ்…” என்றவள் தானாகவே அவனின் தோள் சாய்ந்து முழங்கையை இறுக பற்றிக் கொண்டதுடன் கண்களையும் இறுக மூடிக் கொண்டாள்.
அவளாக தோள் சாய்ந்த நிமிடம்…. அமுதனக்கு வார்த்தைகள் வரவில்லை! அவளின் நம்பிக்கையை பெற்றுவிட்ட சந்தோசம் அகமெங்கும் வியாபித்தது..
அவன் அசையாமல் இருப்பதை உணர்ந்து தேன்மலர் இன்னமும் அவனின் முழங்கையை இறுக்கிக் கொள்ள,
அவளின் அலைப்புறதலை நன்றாக புரிந்து கொண்டவன் அவளின் மற்றொரு கரத்தை அழுத்திக் கொடுத்தான்.
மனதில் உள்ள சஞ்சலங்கள் எல்லாம் நீங்கி, அலைப்புறுதல் விலகி அவனின் வார்த்தைகளை மட்டுமே நெஞ்சில் நிறுத்தி
மனதை சமன் செய்தவள் கண்களைத் திறந்து “போகலாம்” என்று தெளிந்த முகத்துடன், சின்ன புன்னகையுடன் கூற, “ஹ்ம்ம்” என தலை அசைத்தவன் எழுந்து கொண்டான்.
தெய்வீகம் நிறைந்த இடத்தில் இருவரின் மனமும் தெய்வீகமடைந்திருக்க, கோவில் வாசல் தாண்டி கார் ஏறும் வரை தேன்மலர் பற்றி இருந்த அவனின் உள்ளங்கையை விடவே இல்லை.
நம்பிக்கையின் அடிவேராக!
அதே நம்பிக்கையுடன் அவர்களின் திருமண நாளும் இனிதே விடிந்திருக்க, சுப முகூர்த்த தினத்தில் குறித்த நேரத்தில் சொந்த பந்தங்கள் நிறைந்திருந்த மண்டபத்தில் எல்லோரின் நல்லாசியுடன் தேன்மலரின் கழுத்தில் பொன் தாலி கட்டி அவளைத் தன் சரிபாதியாக்கிக் கொண்டான் அமுதகீதன்!
தன் நெஞ்சை வந்தடைந்த திருமாங்கல்யத்தை கண்கள் கலங்கப் பார்த்தவள் அதே கலங்கிய கண்களுடன் கணவனைப் பார்க்க, குங்குமத்தை நெற்றி வகுட்டில் வைத்து விட்டவனின் கண்களும் மெல்ல பனித்துக் கிடந்தன.
மண மேடையில் நின்றிருந்த ரஞ்சிதனோ இருவரின் பின்னால் வந்து நின்று சற்று குனிந்து “ரெண்டு பேரும் கண்ணு கலங்குற அளவுக்கு இப்ப என்ன ஆகிப் போச்சு? என் நண்பன் தாலி தான கட்டினான்! நீ தலை குனிஞ்சு தாலியை வாங்கிக்கிட்ட.. இதுக்கெல்லாமா அழுவுறது… சின்னப் பிள்ளத்தனமா இல்ல” என்று கிண்டலாக கேட்டு வைக்க, இருவருமே சற்று சகஜ நிலைக்கு வந்திருந்தனர்.
தேன்மலரோ நண்பனை முறைத்து “அவர் நண்பன்னா நான் யாரு உனக்கு?” என்று உரிமைக் கொடி தூக்க,
“என்ன கண்ணு இப்படிக் கேட்டுபுட்ட!!! நீ தான் என்ற உயிர் டோலியாக்கும்! இவன் இடைல வந்த எக்ஸ்ட்ரா ஃப்ரெண்ட் மூட்டை!” என்று புது மாப்பிள்ளையை வாரி அமுதனின் முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டான்.
தேன்மலர் மெல்ல சிரித்து விட, அமுதனும் அவளின் புன்னகையில் மகிழ்ந்து ரஞ்சிதனிடம் நன்றி எனும் விதமாக தலை அசைத்தான்.
ரஞ்சிதனோ பில்டப்பாக காலரை தூக்கி விட்டுக் கொண்டு, “ஹே மேன்! சியர் அப்! உங்களுக்கு நண்பனா இதெல்லாம் நான் செய்ய வேண்டிய கடமை” என்றதும் இருவருமே அவனை பொய்யாக முறைத்தனர்.
“அடேய்.. கல்யாண ஜோடிகளா! சிரிச்ச முகமா இருங்கடா.. அதுக்காக தான இவ்வளவு தூரம் பெர்ஃபார்ம் பண்றேன்” என்று ரஞ்சிதன் பாவமாகக் கூற, மணமக்கள் இருவரும் நன்றாகவே சிரித்து விட்டனர்.
ரஞ்சிதனின் லூட்டிகளை கண்ட ஐயரோ “பொண்ணு மாப்பிள்ளையை சத்த விடறேளா… அடுத்தடுத்து சடங்குகள் இருக்கோன்னோ..” என்று கண்களை உருட்ட, பெரியவர்களும் “ஆமாம்மா.. அடுத்தடுத்து எல்லா சடங்கையும் ஆரம்பிக்கணும். ரஞ்சிதா நீ தள்ளி வா” என்று கூற,
அவனுடன் நின்றிருந்த அவனின் வருங்காலமான கமலியும் “அவுங்களை சிரிக்க வச்சது போதும் ரஞ்சித். வாங்களேன்..” என்று அழைத்ததும், “நீ சொல்லி கேக்காம இருப்பேனா என் இனிய வருங்காலமே! இந்தா வாரேன்!” என்றவன் கப் சிப்பென்று அவளருகே சென்று நின்று கொண்டான்.
கமலி அவனின் கலாட்டாவில் புன்னகையும் முறைப்புமாக அவனைப் பார்த்து வைத்தாள்!
இந்த இடைப்பட்ட நாட்களில் ரஞ்சிதனிற்கும் கமலிக்கும் நிச்சயம் முடிவடைந்திருக்க, அவர்களுக்கும் மூன்று மாதங்கள் கழித்து திருமணத் தேதி முடிவு செய்யப் பட்டிருந்தது.
மண்டபத்தில் எல்லா சடங்குகள் முடிந்த பின்னர் உறவுகளின் வருகை, ஃபோட்டோ என்று நேரம் செல்ல, மதியத்திற்கு மேல் உறவுகளின் தலைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.
அதன் பின்னர் தேன்மலரும் புகுந்த வீடு செல்லும் நேரம் நெருங்க, அவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டது.
முதல் முதலாக கவிரத்னாவிடம் தான் அவளின் பாதங்கள் நகர்ந்தன. அவளை இறுக கட்டிக் கொண்டு அப்படி ஒரு அழுகை அழுதாள் தேன்மலர்! கவியும் அழுது விட்டாள்.
இருவருக்கும் இடையே அண்ணி, நாத்தனார் என்று உறவு முறையைத் தாண்டி ஒரு நட்பும், சகோதரத்துவமும் நிறைந்து இருக்கும்.
சொல்லப் போனால் சகோதரிகள் போலவே வாழ்ந்திருக்கிறார்கள்.
மனம் விட்டு ஆறுதலாக பேச ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க என அன்பும் அரவணைப்பும் நிறைந்த உறவு அவர்களுடையது.
அதுவும் தேன்மலருக்கு தன் குடும்பம் என்று வந்தால் கவிரத்னா தான் முதலில்! கவிரத்னா தான் அவளுடைய பலம்! தனக்கு ஒரு மூத்த சகோதரியாக தாயன்புடன் தன்னை அரவணைத்த அண்ணியை தேன்மலருக்கு அத்தனை பிடிக்கும்!
வாழ்வில் தன்னுடைய இருள் சூழ்ந்த நேரத்தில் தனக்கு ஒளியாகக் கிடைத்த உறவு அண்ணியின் உறவு என்றவள் எப்போதும் நினைப்பதுண்டு!
இன்று அந்த உன்னத உறவாக இருக்கும் அண்ணியைப் பிரிந்து புகுந்த வீடு செல்வதை நினைத்து அவளுக்கு கண்ணீர் பெருகவே செய்தது!
அன்னையும் அத்தையும் கட்டிக் கொண்டு அழுவதைக் கண்டு கோகுலனும் வீறிட்டு அழ ஆரம்பித்து விட, சிறிது நேரம் அங்கே பிரிவின் வலிகளும் கண்ணீரும் தான் நிறைந்திருந்தன.
ஞானமங்கைக்கு சந்தோஷக் கண்ணீர் தான் வந்தது.
மகள் மூத்த அண்ணன் மருமகள்! அதுவே அவருக்குப் பரம திருப்தி! நினைத்தது நடந்து விட்ட சந்தோஷம்! இனி அவள் நன்றாக வாழ்ந்தால் அதுவே போதும் என்ற மனப்பான்மை அவரை பெரிதாக கலங்கடிக்கவில்லை.
திவாகரன் ஒரு ஓரமாக இருக்கையில் அமர்ந்திருந்தான். அதிசயத்தின் அதிசயமாக இன்றவன் குடிக்கவில்லை. மங்கை அதற்கு விடவுமில்லை!
தங்கையின் திருமணத்தன்று குடித்து விட்டு வந்து நின்று விடாதே என்று அவனின் காலில் விழாத குறையாக அவனை சரி கட்டி இருந்தார் மங்கை!
வாழ்நாளில் முதல் முறையாக அவனும் அன்னையின் பேச்சிற்கு செவி சாய்த்திருந்தான்.
அண்ணனிடம் வந்த தேன்மலர் “ஒரே ஒரு விஷயம் மட்டும் உன்கிட்ட கேட்டுக்குறேன். எனக்காக செய்வியா?” என்று அண்ணனிடம் குரலை உயர்த்தாமல் பேசலானாள் தேன்மலர்.
திவாகரனும் “சொல்லு தேனு” என்று கூற,
“இனி நம்ம வீட்டுல நான் தினமும் இருக்க மாட்டேன். கல்யாணம் ஆகி நான் புகுந்த வீட்டுக்கு கிளம்பிட்டேன்றதுக்காக தயவு செஞ்சு அண்ணியையும் அம்மாவையும் குடிக்கிறதுக்கு காசு கேட்டு கொடும பண்ணாத. வீட்டோட தலைமகனா இருந்து எந்த பொறுப்பையும் நீ ஒழுங்கா செய்யல. ஆனா உனக்கு ஒரு மகன் இருக்கான். அவனுக்காகவாவது நீ மாறனும். இனிமேலாவது திருந்துற வழியப் பாரு” என்றவள், அவன் எல்லாவற்றிற்கும் வெறுமனே தலையசைப்பதை கண்டு,
“நான் இல்லன்னு அம்மாகிட்டயும் அண்ணிகிட்டயும் காசு கேட்டு தொந்தரவு பண்ணேன்னு தெரிஞ்சதுன்னா……..” கல்யாண கோலத்தில் இருந்தவள் காளியாக கண்களை உருட்டி ஒற்றை விரல் நீட்டி, “அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்று அண்ணனை மிரட்டி விட்டே புகுந்த வீடு கிளம்பினாள் திருமதி. தேன்மலர் அமுதகீதன்!