அத்தியாயம் – 24
தன் அறையில் அமர்ந்து தன் விரல்களிலேயே பார்வையை பதித்திருந்தாள் தேன்மலர். நீண்ட நேரமாக விரல்கள் மேல் தான் அவளின் மொத்த கவனமும் இருந்தது.
நேரம் காலை பத்து மணியை கடந்திருக்க, இன்னும் காலை உணவை உண்ண வராமல் இருக்கும் நாத்தானரை அழைக்கவென அவளின் அறைக்குள் வந்த கவி, அவள் விரல்களில் பார்வையை பதித்து அமர்ந்திருப்பதை கண்டு அப்படியே பின் தங்கி நின்று விட்டாள்.
அவளின் சிந்தனையை கலைக்க விரும்பாமல் “சரி இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து சாப்பிட கூப்பிடுவோம்” என்று கவிரத்னா அங்கிருந்து அமைதியாக நகர்ந்து விட, அவள் வந்து சென்றதைக் கூட கவனிக்கும் நிலையில் இல்லை தேன்மலர்.
பார்வை மொத்தமும் விரலிலேயே தஞ்சம் பெற்றிருக்க, நினைவுகள் மொத்தமும் இன்னும் பத்து தினங்களில் தனக்குக் கணவனாகப் போகும் அமுதகீதனிலேயே தஞ்சம் அடைந்திருந்தது.
இரு கைகளின் மோதிர விரல்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். நிச்சய விழா தாரமங்களத்தில் உள்ள அவர்களின் பூர்வீக வீட்டிலேயே சிறப்பாக நடைபெற்றிருந்தது.
மண்டபம் பிடித்து சிறப்பாக கிராண்டாக செய்யலாமே என்று இன்பசேகரன் மகனிடம் கூறிய போது “இல்லப்பா.. நம்ம பூர்வீக வீட்லயே வச்சுக்கலாம்” என்று கூறி விட்டான் அமுதகீதன்.
அதற்குக் காரணம்.. மலரிடம் அவன் க்ராண்டாக வைக்கலாமா என்று கேட்ட போது அவள் பதிலேதும் சொல்லாமல் இருந்தது தான்!
அவளின் மௌனத்திலயே வெகு விமர்சையாக நிச்சயம் நடப்பதை அவள் விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டவன் “சரி மலர். மண்டபம் வேண்டாம். நம்ம பூர்வீக வீட்ல வச்சுக்கலாமா?” என்று கேட்டிருக்க, தேன்மலர் சரி என்று கூறி இருந்தாள்.
ஆகையால், பூர்வீக வீட்டையே அலங்கரித்து அங்கேயே நிச்சயத்தை வைத்திருந்தனர்.
மோதிரத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய சமயம் வந்த போது தேன்மலர் இடது கையினை நீட்ட, அந்த மோதிர விரலில் அன்று வீட்டில் ஏற்கனவே அவன் அணிவித்து விட்ட மோதிரம் இருந்தது.
வசுந்தலா அதனைப் பார்த்து விட்டு “இது சும்மா உறுதி படுத்திக்க போட்ட மோதிரம் தானே தேனு. அதைக் கழட்டிடு. அந்த விரல்லயே இப்ப நிச்சய மோதிரம் மாட்டிக்களாம்” என்று கூற,
தேன்மலரோ அதை கழற்ற மனமில்லாமல் தயங்கினாள்.
அமுதகீதன் மலரின் முகம் பார்த்தே அக உணர்வுகளைப் படித்தவன் “வேண்டாம்மா.. அது இருக்கட்டும்..” என்றபடி அவளின் வலது கையைப் பற்றி அதில் நிச்சய மோதிரமான வைர மோதிரத்தை அணிவித்து விட்டான்! தேன்மலருக்கு அதில் நிம்மதி பெரு மூச்சு வெளியேறியது.
இப்போதும் அந்த மோதிரங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒன்று தங்கம்.. மற்றொன்று தங்கத்துடன் பிணைக்பட்டிருந்த மலர் வடிவிலான வைர மோதிரம்! இரண்டும் அவன் அணிவித்தவை தான்!
ஆனால், முதன் முதலாக அவன் அணிவித்த மோதிரத்தை வசுந்தலா கழற்ற சொல்லிய போது அவளால் அது இயலவில்லை! அதைப் புரிந்து கொண்டு அவனும் மற்றொரு கையில் மோதிரத்தை போட்டு விட்டான்!
முகம் பார்த்தே தன்னைப் புரிந்து கொள்ளும் வித்தையை எங்கிருந்து கற்றுக் கொண்டான் என்று இப்போதும் ஆச்சர்யமாய் உணர்ந்தாள்.
ஆச்சர்யமாக உணர்ந்தாளே தவிற ஆனந்தம் கொள்ள முடியவில்லை!
இன்னும் பத்து தினங்களில் திருமணம்! திருமண நாள் நெருங்க நெருங்க தேன்மலரின் மனதில் பயமும் நெருங்கிக் கொண்டே இருந்தது.
எப்படி அவனைத் திருமணம் செய்ய சம்மதம் சொன்னோம் என்று ஒரு நொடி யோசித்தவள்.. அந்த யோசனையின் நடுவில் அப்படியே தலையை மேஜை மீது வைத்து சாய்ந்து கொண்டாள்.
மனம் அலைப்புறுதலோடு இருந்தமையால் அவளிடம் தெளிவில்லை. திடமுமில்லை!
“என் மூச்சு நிக்குற வரைக்கும் என் மனசுல நீ மட்டும் தான் இருப்ப!” என்றவனின் வார்த்தைகள் எப்போதும் போல் இந்த நொடியும் அவளின் மனதை ஆட்டிப் படைத்தது!
இந்த வார்த்தைகளைக் கடந்து வர அவளால் ஜென்மத்திற்கும் முடியாது!
கண்கள் கலங்க அமர்ந்திருந்தவள் அப்படியே கண்களை மூடிக் கொண்டாள்.
கவிரத்னா வந்து தோள் தொட்டு அழைக்கும் வரையிலும் அவளிடம் அசைவில்லை.
“தேனு.. சாப்பிடாம இன்னும் என்ன பண்ற? வா சீக்கிரம் சாப்பிட்டு பார்லர் போகனும். இல்லேன்னா அத்த சத்தம் போட ஆரம்பிச்சுடுவாங்க” என்று கூற,
“ப்ச்.. எனக்குப் பார்லர் போகவெல்லாம் விருப்பம் இல்ல அண்ணி” என்று சோர்ந்த குரலில் கூறியவளை முறைத்த கவி,
“சரி.. பார்லர் வேண்டாம். இப்ப வந்து சாப்பிடு..” என்று கூற, “எனக்கு வேண்டாம் அண்ணி. அப்புறம் சாப்பிட்டுக்குறேன்” என்றாள் தேன்மலர் கலைத்த குரலில்.
“அப்புறமாவா? இப்பவே மணி பத்தரைய தாண்டியாச்சு..” என்ற கவி, “நீ சரி பட்டு வர மாட்ட. இரு.. நான் போய் இட்லி சாம்பார் எல்லாமே இங்கேயே எடுத்துட்டு வரேன்” என அவளின் பதிலை எதிர்பாராமல் உணவை தட்டிலிட்டு எடுத்து வந்து அவளின் கையில் கொடுத்து,
“ஒழுங்கா சாப்பிடு. அப்புறம் விரல்ல இருக்க மோதிரத்தை ஆராய்ச்சி பண்ணலாம்!” என்று கூற, அண்ணியை விழி விரித்துப் பார்த்தவள், “அண்ணி..” என்க,
“முதல்ல சாப்பிடு மலர். அப்புறம் பேசலாம்” என்றாள் கவிரத்னா.
தேன்மலரும் அமைதியாக சாப்பிட, அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை கவி அமைதியாக இருந்தாள்.
தேன்மலர் வெளியே சென்று கை கழுவி வந்ததும், “ஒரு நிமிஷம் தேனு..” என்ற கவி தன் அறைக்குச் சென்று, எடுத்த பொருளை உள்ளங்கைக்குள் மறைத்தபடி மீண்டும் தேன்மலரின் அறைக்கு வந்தாள்.
“சொல்லு தேனு.. சாப்பிட கூட முடியாம அப்படி என்ன யோசனை உனக்கு?” என்று கவி பேச்சினைத் துவங்க, தேன்மலர் சிறிது நொடிகள் மௌனமாக இருந்தாள்.
பின்பு அண்ணியைப் பார்த்து “இன்னும் பத்து நாள்ல கல்யாணம்.. அதை நினைச்சாலே ரொம்ப டிஸ்டர்ப்டா ஃபீல் ஆகுது அண்ணி” வலது விரல் மோதிரத்தை இடது கையால் திருகிக் கொண்டே பதில் கூறினாள் தேன்மலர்.
“பாருடா… நார்மலா இந்த நேரத்துல கல்யாணப் பொண்ணுங்க எல்லாம் கனவு தான் காணுவாங்க. நீ என்னடான்னா கல்யாணத்தை நினைச்சே ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்குன்னு சொல்ற!” என்று கவி வேடிக்கையாகக் கேட்க,
“கனவா…” என்று முழித்த தேன்மலர், “அதெல்லாம் எப்படி அண்ணி வரும்? அவரோட என் வாழ்க்கையை நினைச்சு இப்பவும் பயம் தான் பிரதானமா இருக்கு எனக்கு” என்றாள் மனதை மறையாமல்!
“தேனு…” என்று ஆழ்ந்த குரலில் அவளை அழைத்த கவி, “ஏன்டா சம்மதம் சொன்னோம்னு ஃபீல் பண்றியா?” என்று கேட்டிட, அதில் அதிர்ந்த தேன்மலர் “இல்ல அண்ணி.. அப்படி எல்லாம் இல்ல” என்று திகைப்புடனே மறுத்தவள்,
“சம்மதம் சொல்லாம இருக்க முடியல அண்ணி. அந்த அளவு அவரோட உண்மையான அன்போட வந்த வார்த்தை மட்டும் தான் மனசுல ஓடிட்டே இருந்தது…” என்றவள்,
“அவரோட வார்த்தையைக் கடந்து.. மறந்து.. வேற ஒரு ஆளை…ஹ்ம்ம்ஹூம்…” என தலையை பலமாக உலுக்கிக் கொண்டவள் “என்னால நிச்சயமா முடியாது அண்ணி.. அதான் சம்மதம் சொல்லிட்டேன்!” என்றாள் படபடவென!
அவளை மேலும் படபடப்பாக்கும் படியாக கவிரத்னா கைக்குள் மறைத்து வைத்திருந்த பொருளை அவளிடம் நீட்டியபடி “அமுதன் தம்பியோட அன்பான வார்த்தைக்காக மட்டும் தான் சம்மதம் சொன்னயா? இல்ல இதுக்காகவுமா?” என்று கவி, தன் உள்ளங்கையை திறந்து காட்ட, அதில் இருந்த பொருளைக் கண்டு தேன்மலர் அதிர்வின் உச்சியில் நின்றாள்.
“அ..அ..ண்ணி.. இது எப்படி..? உங்க கிட்ட? இதை நான்….” என்றவள், சந்தோஷத்தில் துளிர்த்த கண்ணீரோடு அதனை இரு கரங்களாலும் வேக வேகமாக எடுத்து முகத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
“ரெண்டு நாளா இதைக் காணோம்.. தொலைச்சிட்டோம்னு நினைச்சேன் அண்ணி.. கடைசில இது உங்க கிட்ட தான் இருந்ததா? எப்படி கிடைச்சது? எங்க கண்டுபிடிச்சு எடுத்தீங்க?” என்று தேன்மலர் வேகத்துடன் கேட்க,
“உன் ரூம் க்ளீன் பண்றப்ப உன்னோட பெட்கு அடியில இருந்தது.. சரி.. எடுத்து வைப்போம்னு எடுத்து வச்சேன்!” என்ற கவி, கேலியாக ஒற்றை புருவம் உயர்த்தி “இது உனக்கு ஸ்பெஷல்னு முன்னாடியே தெரியும்! கொடுத்திடலாம்னு தான் நினைச்சேன். அப்புறம் சும்மா நீ என்ன பண்றேன்னு பாக்குறதுக்காக என் கிட்டயே வச்சிருந்தேன்” என்றாள் புன்னகையுடன்.
தேன்மலர் அதனை வருடியபடி “தேங்க்ஸ் அண்ணி..” என்று கூற,
“இப்ப சொல்லு தேனு.. கல்யாணத்தை நினைச்சா டிஸ்டர்ப்டா ஃபீல் ஆகுதா? என்று கேட்க, தேன்மலர் மெல்ல திகைத்து அண்ணியைப் பார்த்தாள்.
“இது.. இதைப் பத்தி உங்களுக்கு எதாவது தெரியுமா அண்ணி?” என்று தேன்மலர் தடுமாற்றத்துடன் கேட்க,
“எனக்கு எப்படித் தேனு தெரியும்? ஆனா, புரிஞ்சுக்கிட்டேன்!” என்றாள் கவிரத்னா கண் சிமிட்டி!
“என்ன… புரிஞ்சது..” என்று தேன்மலர் தடுமாற்றம் குறையாமல் கேட்க,
“கிருஷ்ணா ஃபன்ஷன் போய்ட்டு வந்ததுல இருந்தே நீ சரியில்ல தேனு. நீயா வந்து என்கிட்ட எதாவது மனசு விட்டு பேசுவ.. சொல்லுவன்னு பாத்தேன். நீ வர்ற மாதிரி தெரியல. மந்திருச்சு விட்டவ மாதிரியே திரிஞ்சிட்டு இருந்த. ரொம்ப அமைதியாகிட்ட. கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சுருங்கிப் போச்சு.. என்னடான்னு எனக்கு ஒன்னும் புரியல! சரி நானே வந்து பேசலாம்னு அன்னைக்கு நைட் உன் ரூமுக்கு வந்தேன். நீ என்னடான்னா இதோ..” என்று அவள் கையிலிருந்த பொருளை உயர்த்திக் காட்டியவள்,
“இதைக் கையில வச்சுட்டு அழுதிட்டே முனங்கிட்டிருந்த!” என்று கூற, தேன்மலர் ஸ்தம்பித்துப் போய் அண்ணியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹ்ம்ம்..நீ முனங்கினதும் என் காதுல லேசா விழுந்தது…” என கவிரத்னா சொன்னதும்,
“அண்ணி அது..”
“ஹ்ம்ம்.. நீ எதுவும் எனக்கு விளக்க வேண்டாம். உன்னை அன்னைக்கே நான் புரிஞ்சிக்கிட்டேன். எனக்கும் அதிர்வா தான் இருந்தது. ஆனா, நீ என்ன பண்ண போறேன்னு நினைச்சு வருத்தப் பட்டுட்டே இருந்தேன். நல்ல முடிவா எடுப்பேன்னு நானே எனக்கு சமாதானம் சொல்லிக்கிட்டேன். ஆனா, நீ வாயே திறக்கல! சரியான அழுத்தக்காரியா இருந்த!” என்றாள் முறைப்புடன்.
“அமுதன் தம்பி வீட்லேருந்து பொண்ணு பாக்க வந்தப்ப நீ என்ன சொல்லுவியோன்னு எனக்கு பயமா இருந்தது. நான் வேற இடையில கோகுலனை ஸ்கூல்ல விட போய்ட்டேன். நீ என்ன சொல்லி இருப்பியோன்னு மனசெல்லாம் உன் கிட்ட தான் இருந்துச்சு. கடைசில நீ சம்மதம்னு சொன்னது தெரிஞ்சதும் தான் நிம்மதியா மூச்சே விட முடிஞ்சது” என்றாள் கவி இப்போதும் நெஞ்சில் கை வைத்து நீண்ட மூச்சுடன்.
தேன்மலர் அமைதியாகவே இருக்க, “அமுதன் தம்பியோட உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும் தேனு! நீ பயப்பட எந்த அவசியமும் இல்லேன்னு தான் நான் சொல்லுவேன். நம்ம வீட்டுக்கு வந்திருந்தப்பவும் சரி, நிச்சயத்தன்னைக்கும் சரி.. அந்தத் தம்பி உன்னைப் பார்த்த பார்வைல இருந்து உன் கிட்ட பேசின விதம் வரைக்கும் எல்லாத்துலயும் உனக்கான காதலை பாக்க முடிஞ்சது தேனு..” என்றாள் கவிரத்னா அமுதனின் அசைவுகளை கூர்ந்து கவனித்த படியால்!
தொண்டைக்குழி ஏறி இறங்க அண்ணியைப் பார்த்தவள் “நீங்க சொல்ற மாதிரி என்னால நினைக்க முடியல அண்ணி. ரெண்டு பேருக்குள்ள எதாவது பிரச்சனை வந்திடுமோ.. ரெண்டு பேருக்கும் சரியா வராதோ அப்படி இப்படின்னு பயமாவே இருக்கு..” என்றாள் பயந்து போன குரலில்!
அவளை அதிருப்தியுடன் பார்த்த கவி “ரொம்ப நெகட்டிவா திங்க் பண்ற தேனு. இப்படி யோசிச்சா கஷ்டம் தான்! அவரோட உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு மனசுல பதிய வை! நல்ல விதமா திங்க் பண்ணு” என்றாள் அக்கறை நிறைந்த குரலில்!
தேன்மலர் சோர்ந்து போய் முகத்தை தொங்கப் போட்டுக் கொள்ள, அவள் கையில் இருந்த பொருளை சுட்டிக் காட்டிய கவி “இது உன் கிட்ட எப்ப வந்தது.. எப்படி வந்தது.. இதெல்லாம் எனக்குத் தெரியாது தேனு. ஆனா, இது தான் உன் மனசு! உனக்கு பயமா இருக்க நேரம், ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்க நேரம் எல்லாம் இதைப் பாரு. எதுக்காக அமுதன் தம்பியை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னோம்னு உனக்கே தெளிவு கிடைக்கும். அப்புறம் பயப்பட மாட்ட” என்ற கவி அவளின் தலையை கோதி,
“நீ நல்லா இருப்ப தேனு. தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காத. ரெடி ஆகிட்டு சொல்லு. பார்லர் போய்ட்டு வந்துடலாம். உனக்கு ஃபேஷியல் பண்ணலேன்னா அத்தை விட மாட்டாங்க” என்றபடி எழுந்து கொண்டவள் அவள் கையில் இருந்த பொருளை கண்டு,
“முதல்ல இதை பத்திரமா எடுத்து வை. இப்படியா ‘பெட்’க்கு அடில போட்டு வைப்ப? உன் அண்ணன் பார்த்தா அப்புறம் சுவாகா தான்” என்று அவளை எச்சரித்தவள் “சீக்கிரம் கிளம்பு. நானும் ரெடி ஆகிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு சென்றாள்.
அண்ணி சொன்ன வார்த்தைகளையே மனதிற்குள் அசை போட்டபடி அமர்ந்திருந்தவளுக்கு அமுதகீதனின் நினைவே மனதை சூழ்ந்திருந்தது!
நிச்சயம் முடிந்த பின்னர் கல்யாண ஜவுளி எடுக்க எல்லோரும் ஒன்றாக காஞ்சிபுரம் சென்று வந்தனர். அதன் பின்னர் அவனைப் பார்க்கவில்லை.
அழைத்துப் பேசவும் இல்லை. அவனும் இவளுக்கு அழைத்திருக்கவில்லை.
இப்போது அவன் முகமே அவளின் கவனம் மொத்ததையும் களவாடி இருக்க, மனதின் உந்துதலில் அவனுக்கு அழைத்து விட்டாள்.
அழைப்பு துண்டிக்கப் போகும் சமயம் தான் அழைப்பை ஏற்றிருந்தான் அமுதகீதன்!
“சொல்லு மலர்..” என்றவன் பரபரப்புடன் கேட்ட விதமே எதோ வேலையில் இருக்கிறான் என்பதை உணர்த்த,
“இல்ல.. சும்மா.. தான் கால் பண்ணேன்..” என்று மென்று முழுங்கியவள், “வேலை நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றாள் தன்னை சமாளித்துக் கொண்டு.
“இல்ல மலர்” என்றவன், “ஒரு நிமிஷம் லைன்லயே இரு” என்றபடி, அங்கே வேலையாட்களுக்கு பணிகளை கொடுத்து விட்டு, அழைப்பிற்கு வந்தான்.
“சொல்லு மலர். இப்ப தான் கால் பண்ண தோணுச்சா?” என்றான் அமுதன் கிண்டலாக.
அவன் கிண்டலில் மலருக்கு மூக்கு சிவக்க, “உங்களுக்கு அது கூட தோணல தானே? அப்புறம் ஏன் கிண்டல் பண்றீங்க?” என்று சூடாகக் கேட்க,
“நான் கால் பண்ணுவேன்னு மலர் எதிர் பார்த்தாளாமா…..??” என்றான் துள்ளலான குரலில்.
தேன்மலர் தான் விட்ட வார்த்தைகளை எண்ணி சங்கோஜமாகக் கண்களை மூடிக் கொள்ள, “நான் கால் பண்ணி நீ எடுக்கலேன்னா.. எனக்கு ஒரு மாதிரி டிஸ்டர்ப் ஆகிடும் மலர். அதான் பயந்தே கால் பண்ணல” என்றான் அமுதகீதன் உண்மையை மறைக்காமல்.
தேன்மலர் ‘அப்படியும் செய்திருப்போம்.. வாய்ப்புகள் இருக்கிறது’ என்று யோசித்த நிலையில் அமைதியாக இருக்க, “சரி சொல்லு.. என்ன பண்ற? சாப்பிட்டாச்சா?” என்று அடுத்த பேச்சிற்கு தாவி இருந்தான் அமுதன்.
“ஹ்ம்ம்..” என்றவள், “நீங்க?” என்று கேட்க,
“ஹ்ம்ம் ஆச்சு மலர்” என்றான்.
அடுத்து அவள் அமைதியாகவே இருக்க, அவனும் வேலையை கவனித்தபடியே லைனில் இருந்தான்.
அவனிடம் நிறைய பேச வேண்டும் போல் தோன்றியது! தன் மனதில் உள்ள பயத்தை அவனிடமே வெளிப்படையாக சொல்ல வேண்டும் போல் தோன்றியது! அவனுடனான வாழ்கையை பற்றி பேச வேண்டும் போல் இருந்தது.
ஆனால், வார்த்தைகள் எல்லாம் தொண்டைகுள்ளேயே சிக்கிக் கொண்டன.
“மலர்.. இருக்கியா?”
“ஹான்..இருக்கேன்” என்றவள், “வீட்லையா இருக்கீங்க?” என்று கேட்க,
“இல்ல மலர். ஏற்காட்டுல இருக்கேன். இங்க ரிசார்ட்ல கொஞ்சம் வேலை! கல்யாணத்துக்கு அப்புறம் விருந்து, குல தெய்வம் கோவில் போறது அப்படி இப்படின்னு இந்தப் பக்கம் கொஞ்ச நாள் வர முடியாது. அதான் முன்னாடியே இங்க முடிக்க வேண்டிய வேலையை கொஞ்சம் முடிச்சிடலாமேன்னு ரெண்டு நாள் முன்னாடியே வந்துட்டேன்” என்றவன்,
“ஏன் மலர்.. என்னாச்சு?” என்று கேட்க,
“இல்ல.. அது.. ஒன்னுமில்ல. சும்மா தான் கேட்டேன்” என்றவள், அவனிடம் இயல்பாகக் கூட தனக்குப் பேச வரவில்லையே என்று தன்னையே நொந்தபடி “வைக்கிறேன். நீங்க ஒர்க் பாருங்க” அவனின் பதிலைக் கூட எதிர்பாராமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.
“ஒன்னுமில்ல..” என்றவளின் அலைப்புறுதல் மிகுந்த குரலே அவனுள் ஒலிக்க, “எதாவது முக்கியமான விஷயம் பேச கூப்பிட்டு இருப்பாளோ..” என்று நினைத்தவன் மீண்டும் அவளுக்கு அழைக்கலாம் என்று அலைபேசியை எடுக்க, பின்பு வேண்டாம் என்று முடிவு செய்தவன், அங்கே வேலைகளை எல்லாம் நந்தனை கவனிக்கச் சொல்லி விட்டு தாரமங்கலம் கிளம்பி இருந்தான்.
அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் தாரமங்கலம் வந்திருந்தவன் மலரின் வீட்டிற்கே வந்து விட்டான்.
அப்போது தான் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்திருந்த ஞானமங்கை இன்னும் மகளும் மருமகளும் பார்லர் கிளம்பாமல் இருப்பதை கண்டு அர்ச்சனை செய்யத் தொடங்கி இருந்தார்.
“இந்தாடி தேனு.. நானும் ஒரு வாரமா சொல்றேன். பார்லர் போய் முகத்தை பளிச்சுன்னு ஆக்கிட்டு வான்னு.. நீ நகருவேனான்னு சாதிக்கிற! இன்னைக்கு லீவ் தான உனக்கு. போய்ட்டு வந்திருக்க வேண்டியது தான” என்றவர்,
மருமகளை முறைத்து “உனக்கும் லீவ் தானே இன்னைக்கு. அவ வேண்டாம்னு சொன்னா மூத்தவளா ரெண்டு அதட்டு அதட்டி அவளை கூட்டிட்டு போறதை விட்டுட்டு அவ சொல்றதை கேட்டுட்டு இருந்தியாக்கும்” என்று நொடிக்க,
“அத்தை.. மலருக்கு ஃபேஷியல்ல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல போல. விட்டர்லாமே.. ஏன் வற்புறுத்துறீங்க..” என்று கவி கூற,
“இதுல என்னத்த இன்ட்டிரஸ்ட் பார்க்க வேண்டிய கிடக்கு.. கல்யாணப் பொண்ணா நல்லா அழகா ஜொலிஜொலிப்பா இருக்க வேண்டாமா… அதுக்காக தானே அவளைப் போகச் சொல்றேன்..” என்று குதித்த மங்கை,
ஹாலில் இருந்தபடியே, “அடியே தேனு.. இப்ப கிளம்பி வெளிய வரப் போறியா இல்லையா?” என்று கத்த, உள்ளே மேசை மீது தலை சாய்த்தபடி சுரத்தின்றி அமர்ந்திருந்த தேன்மலர் அன்னையின் குரலில் “ப்ச்” என்று சலித்தபடி முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் “மாப்பிள்ளை.. வாங்க வாங்க..” என்ற அன்னையின் பரபரப்பான குரல் கேட்க, அதனைத் தொடர்ந்து “வாங்க தம்பி..” என்ற கவியின் குரலும் கேட்டதில் தேன்மலர் வேக வேகமாக எழுந்து நின்றாள்.
“திடுதிப்புன்னு வந்து நிக்கிறீங்க.. எனக்கு ஒன்னும் ஓடல” என்ற மங்கை, “இருங்க நான் போய் காஃபி எடுத்துட்டு வரேன்” என்று அடுப்படிக்கு நடந்தபடி “தேனு.. மாப்பிள்ளை வந்திருக்கார். உள்ள என்னடி பண்ணிட்டு இருக்க?” என்று மகளிடம் குரல் கொடுக்க, தேன்மலர் திகைப்பூண்டை மென்றவள் போல் நின்றாள்.
அவன் தானா? கொஞ்ச நேரத்திற்கு முன்பு தானே ஏற்காட்டில் இருக்கிறேன் என்றான்? இப்போது வீட்டிற்கே வந்து விட்டானா? ஏன்? என்று பல கேள்விகளுடன் அப்படியே நின்றிருந்தாள்.
கவி உள்ளே வந்து “என்ன தேனு? பனி மாதிரி உறஞ்சு போய் நிக்கிற. வா..மாப்பிள்ளையை வந்து வாங்கன்னு கேளு” என்று விட்டுச் செல்ல,
விரிந்து கிடந்த கூந்தலை ஒற்றை க்ளிப்பில் அவசரமாக அடக்கியவள், சுடிதாரின் மேலே துப்பாட்டாவை போட்டுக் கொண்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்து பொட்டில்லாத நெற்றியில் குட்டி கோபுர பொட்டை ஒட்டிக் கொண்டு வேக வேகமாக வெளியே வந்தாள்.
ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் “வாங்க” என்று மெல்ல அழைத்தவள் கவி அருகே சென்று நின்று கொண்டாள்.
தன்னைப் பார்க்கத் தான் உடனே கிளம்பி வந்திருப்பானோ எனும் கேள்வியுடன் அவளின் இதயம் ‘டொம் டொம்’மென துடித்துக் கொண்டிருந்தது.
காஃபி போட்டு எடுத்த வந்த மங்கை மகள் வெறுமனே நிற்பதை கண்டு “தேனு.. என்னடி மசமசன்னு நின்னுட்டு இருக்க? வந்து காஃபியை வாங்கி மாப்பிள்ளை கிட்ட கொடு” என்றதும் அன்னை சொன்னதை மறுக்காமல் செய்தவள், காஃபியை கொடுக்கும் போது அவனின் முகம் பார்க்க, “தேங்க்ஸ் மலர்” என்று எடுத்துக் கொண்டவன், அமைதியாகப் பருக ஆரம்பித்தான்.
மங்கை என்ன விஷயமாக அவனே நேரில் வந்திருக்கிறான் என்று ஆச்சர்யம் கொண்டு பார்த்திருந்தார்.
இத்தனைக்கும் திருமண செலவுகள் மற்றும் வேலைகள் என அத்தனையும் தாங்களே பார்த்துக் கொள்வதாக இன்பசேகரன் கூறி இருந்தார்.
பத்திரிக்கை கூட மங்கையின் அண்ணன் பொறுப்பு தான்! பத்திரிக்கை அடித்து எல்லோருக்கும் கொடுத்தும் ஆகி விட்டது.
ஜவுளி, நகைகள் என செய்ய வேண்டிய அத்தனையையும் கிட்டத்தட்ட முடித்தாகி விட்டன.
மண்டப வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கிறது என வசுந்தலா அலைபேசியில் கூறி இருந்தார். இப்போது மங்கை அமுதனின் வரவில் எதாவது கல்யாண விஷயமோ என்று நினைத்துக் கொண்டிருக்க, அவனோ நிதானமாக காஃபியை பருகி முடித்ததும்,
“மலரைப் பார்க்க தான் வந்தேன் அத்த. அவளை வெளிய கூட்டிட்டு போகட்டுமா?” என்று எந்த வித தயக்கமும் இன்றி சாதாரணமாகக் கேட்டிருக்க, தேன்மலர் மெல்ல அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
மங்கையும் சற்றும் தயங்காமல் “அதுக்கென்ன மாப்பிள்ளை? தாராளமா கூட்டிட்டு போங்க” என்று தாராள மனதுடன் சொல்லி விட, தேன்மலர் தாயை மெல்ல முறைத்தாள்.
அவரோ “என்னடி பார்வை? மாப்பிள்ளை கூப்பிடுறார் தானே. போ.. போய் வேற நல்ல ட்ரெஸ் மாத்திட்டு கிளம்பு” என்று சொல்ல,
“இதுவே போதும். அழகா தான் மலர் இருக்க. வா கிளம்பலாம்” என்று கூலாக சொல்லியவன், மற்ற இருவரிடமும் விடை பெற்று மலரை வரும்படி கண்ணசைத்து விட்டு வெளியே சென்றான்.
கவி சிரித்தபடி நாத்தனாரிடம் “கிளம்பு மலர். இல்ல உங்க அம்மாவே உன்னை தரதரன்னு இழுத்துட்டுப் போய் காருக்குள்ள தள்ளி விட்டாலும் ஆச்சர்ய படுறதுக்கு இல்ல” என்று கூற, தேன்மலர் அண்ணியை பொய்யாக முறைத்தபடி கிளம்பி விட்டாள்.
அமுதனோடு காரில் ஏறியதும் “ஏற்காட்டுல இருக்கேன்னு சொன்னீங்க. உடனே கிளம்பி வந்துட்டீங்க?” என்று மெல்ல கேட்க,
“ஹ்ம்ம். நீ பேசின பிறகு உன்னைப் பாக்கணும் போல இருந்தது மலர். அதான் கிளம்பி வந்துட்டேன்” என்றவன்
அவளின் பார்வையில்,
“பேசும் போது உன் வாய்ஸ் சரியில்ல. ஏதோ ரொம்ப டிஸ்டர்ப்டா தெரிஞ்சது. அதான் வந்துட்டேன்” என்றான் தோள்களை குலுக்கிக் கொண்டு.
“இப்ப எங்க கூட்டிட்டு போறீங்க?”
ஸ்டியரிங்கை லாவகமாக வளைத்தபடி, “எங்க போகனும்னு சொல்லு மலர். போகலாம்” என்றவன் கூறியதும் தேன்மலர் அவனைத் திரும்பிப் பார்க்க,
“வீட்ல உங்க அண்ணியும் அம்மாவும் இருந்தாங்க மலர். எதுவும் பேச முடியாது. அதான் வெளியே கூட்டிட்டு போறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டேன். நீயே எங்க போகணுமோ சொல்லு. போகலாம்” என்று சொல்ல,
நீண்ட மூச்சினை இழுத்து விட்டவள் “கைலாசநாதர் கோயில் கூட்டிட்டு போறீங்களா?” என்று மெல்ல தயங்கிக் கேட்டாள் தேன்மலர்.
காரை கோவிலிற்குண்டான சாலையில் திருப்பியவாறே “அது என்ன மலர்.. கூட்டிட்டு போறீங்களா….ன்னு தயக்கமா கேக்குற. கூட்டிட்டு போங்கன்னு அழுத்தம் திருத்தமா சொல்லு! அதான் என்னோட மலருக்கு ஷூட் ஆகும்! கட் அன்ட் ரைட்டா, கறாரா என் கிட்ட பேசுறவ தான் என் வருங்காலப் பொண்டாட்டி!” என்று புன்னகையுடன் கூற,
அவனின் உரிமை கலந்த பேச்சில் விழித்தவள், அவனுக்கு ஈடு கொடுக்கும் விதமாக “ஆமா. போங்க! நான் ஏன் உங்க கிட்ட தயங்கனும். அப்படி எல்லாம் இல்ல. போங்க! கோவிலுக்கே போங்க!” என்றாள் தேன்மலரும் முயன்று தன்னை சமாளித்துக் கொண்டு.
அவளின் பதிலில் புருவங்களை உச்சி மேட்டிற்கே உயர்த்தியவன் “பாருடா.. மை மலர் இஸ் பேக்!” என்றபடி காரை கைலாசநாதர் கோவிலுக்கு செலுத்தினான்.