மலர் பாதம் பணிந்து..23

அத்தியாயம் – 23 

அமுதகீதன் கீழே வந்ததும் எல்லோரும் ‘என்ன ஆகிற்று..?’ எனும் படியாக அவனின் முகத்தைப் பார்க்க, மங்கையின் முகத்தில் பயமும் எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே தென்பட்டது. 

எல்லோரையும் பார்த்தவன் பொதுவாக “மலர் வந்து அவளோட முடிவை சொல்லுவா..” என்று மட்டும் கூறி விட்டு தங்கையின் அருகே சென்று அமர்ந்து கொண்டான். 

கிருஷ்ணா அண்ணனின் முகத்தை ஆவல் தொனிக்க பார்த்து “அண்ணி ஓகே தானண்ணா சொல்வாங்க?” என்று வினவ, அமுதனுக்கும் இளையவளின் எதிர்பார்ப்பே மனதில் ஏக்கமாய் குடிகொண்டது. 

ஆனால், இனி அவன் கையில் ஒன்றும் இல்லையே! 

மலர் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அதை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். 

சிறிது நொடிகள் ஆகியும் மலர் கீழிறங்கி வராமல் போக, இன்பசேகரன் புருவம் சுருக்கி தங்கையைப் பார்த்தார். 

அப்பார்வையில் மெல்லிய கோபமும், உன் மகளின் இந்த யோசனைக்கு என்ன அர்த்தம் எனும் கடுமையும் தெரிய, மங்கை கைகளைப் பிசைந்தார்.

பெண் பார்க்க வந்த இடத்தில் இன்பசேகரனால் கடுமையாகப் பேசவும் முடியவில்லை. பொறுமையையும் கையாள முடியவில்லை. 

தங்கையிடம் “என்ன முடிவுன்னு சொன்னா அடுத்து என்னன்னு பாக்கலாம் மங்க. அதை விட்டுட்டு இப்படி மேலேயே நின்னா என்ன அர்த்தம்?” என்று கேட்க, 

மங்கை தர்மசங்கடத்துடன் அண்ணைப் பார்த்தார். 

அமுதனோ “அப்பா.. மலர் யோசிக்கட்டும் ப்பா.. பரவாயில்ல..” என்று கூற, பெருமூச்செறிந்தார் இன்பசேகரன்.

மங்கைக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. “கொஞ்சம் இருங்கண்ணே.. நானே மேலே போறேன்..” என்றவர் யாரின் பதிலையும் எதிர்பாராமல் மகளைத் தேடிக் கொண்டு மேலே வர, தேன்மலர் அப்போது தான் கீழிறங்கி வர எண்ணி படிகளை எட்டி இருந்தாள். 

முறைத்துக் கொண்டே மகளை நெருங்கிய மங்கை “என்னடி நினைச்சிட்டிருக்க உன் மனசுல?” என்று எடுத்த எடுப்பில் கத்த, தாயை முடிந்த அளவிற்கு முறைத்தாள் தேன்மலர்.

“என்னடி முறைப்பு? வீடு தேடி வந்த சம்மந்தம்? அதுவும் யார் கிட்ட இருந்து? என் மூத்த அண்ணன் கிட்ட இருந்து.. இதுக்கு நீ இவ்வளவு யோசிக்கணுமா? கமலம் அண்ணி கை விட்டதும் என்னடா பண்றதுன்னு இந்த ரெண்டு நாளும் தலையில இடி விழுந்த கணக்கா இருந்த எனக்கு கடவுள் என் அண்ணன் மூலமா வரத்தை கொடுத்திருக்கார். நான் சொல்றதை தயவு செய்து கேளு தேனு.. மறுப்பா எதுவும் சொல்லிடாத. அமுதன் மாப்பிள்ளையோட உன் வாழ்க்கை அமோகமா இருக்கும்” என்று கோபத்தில் ஆரம்பித்தவர் கெஞ்சலில் முடிக்க, தேன்மலர் தாயை இதழ் வளைத்து பார்த்தாள். 

இரண்டு நாட்களாக ரஞ்சித் மாப்பிள்ளை கை விட்டுட்டார்.. ரஞ்சித் மாப்பிள்ளையை தானே நம்பி இருந்தேன் என்று கண்ணீருடன் புலம்பித் தள்ளியவர் இன்று அமுதம் மாப்பிள்ளை என்று தாவிய அன்னையைப் பார்த்தவளுக்கு மனம் வெறுத்துப் போனது. 

மகளின் அமைதியில் மங்கைக்கு பயம் ஏற்பட்டது. அவளை வழிக்கு கொண்டு வர எண்ணி “இங்க பாரு தேனு.. எனக்கு உன்னை நம்ம சொந்தத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அவ்வளவு தான். நீ அமுதன் தம்பியை வேண்டாம்னு சொன்னா நான் நிச்சயம் கமலம் அண்ணி கை கால்ல விழுந்தாவது.. இல்லேன்னா நெஞ்சு வலி வர்ற மாதிரி நடிச்சாவது உன்னை ரஞ்சித் தம்பிக்கு கட்டி வைக்க ஏற்பாடு செஞ்சிடுவேன்..” என்று குருட்டு நம்பிக்கையில் பேச, தேன்மலர் தாயை அற்பப் பார்வை பார்த்தாள். 

மங்கைக்கு அதெல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை. அவருக்கு எப்படியேனும் மகளை சொந்தத்தில் கட்டிக் கொடுத்து விட வேண்டும்! அவ்வளவே!

அது ரஞ்சிதனாக இருந்தாலும் சரி! அமுதனாக இருந்தாலும் சரி! 

“மிரட்டுறியாமா?” என்று தேன்மலர் அழுத்தமாகக் கேட்க, “ஆமாடி.. அப்படியே வச்சுக்க. கமலம் அண்ணிக்கு மட்டும் தான் எல்லாம் தெரிஞ்சும் ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கத் தெரியுமா? நானும் நடிப்பேன்! என் பொண்ணு வாழ்க்கைக்காக என்ன வேணாலும் செய்ய நான் தயார்.. என் பையன் தான் ஊதாரியா போயிட்டான்… மகளாவது நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன்” என்றார் சுயநலமான குரலில். 

“அதுக்காக ரஞ்சித் நிச்சயத்த நிறுத்துவேன்னு உளறுவியா? அவனுக்கு அந்தப் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. அது முதல்ல தெரியுமா உனக்கு?” என்று தேன்மலர் கொதித்துப் போய் கேட்க, 

“அதெல்லாம் எனக்கு முக்கியமில்லை. கீழ வந்து நீ சம்மதம் சொல்லலேன்னா நான் எடுக்குற அடுத்த நடவடிக்கை ரஞ்சித் தம்பியை உனக்கு மாப்பிள்ளை ஆக்குறது தான்!” என்றார் மங்கை சபதம் போல். அவர் குரலில் அத்தனை பிடிவாதமும் உறுதியும் தெரிந்தது. 

அன்னையை கோபமாக முறைத்தவள், “உன் மிரட்டலுக்கு பயப்படுற ஆள் நான் இல்லமா. இப்ப நீ என்னை மிரட்டினேன்றதுக்காக கீழ வந்து நான் சம்மதம் சொல்றேன்னு மட்டும் நினைக்காத.. நீ மேலே வர்றதுக்கு முன்னாடியே நான் அந்த முடிவை எடுத்துட்டேன்..” என்று படபபடவென பொரிந்தவள் “வா போகலாம்” என்று அவரைத் தாண்டிக் கொண்டு கீழே செல்ல, 

“இப்ப இவ சம்மதம்னு தானே சொல்லிட்டு போறா…?!??” என்று மகளின் வார்த்தைகளில் புரியாமல் குழம்பி நின்றவர், பின் அவள் சொன்னதின் அர்த்தத்தை உணர்ந்து “அட.. சம்மதம் சொல்ல தான் நினைச்சிருப்பா போல! அதுக்குள்ள நாம தான் அவசரப்பட்டு நிறைய பேசிட்டோம்” என்றவர் வேகமாக கீழே வந்தார். 

எல்லோரும் மலரின் முகத்தையே பார்க்க, அமுதகீதன் மட்டும் தள்ளாட்டம் நிறைந்த மன நிலையுடன் கண்களை இறுக மூடிக் கொண்டான். 

அவளின் முடிவு என்னவென அறியும் தைரியம் அந்த நொடி குறைவது போலிருக்க, அருகில் இருந்த தங்கையின் கையினை பற்றிக் கொண்டான். 

அண்ணன் கண்கள் மூடிக் கொண்டதை கண்ட கிருஷ்ணா “அண்ணா..” என்று அழைக்க, அவன் கண்களை திறக்க மறுத்தான். 

உடலோடு சேர்த்து மனமும் நடுங்கியது. அவனின் இமை மூடிய முகத்தைப் பார்த்துக் கொண்டே “எனக்கு சம்மதம்” என்று தேன்மலர் கூற, மூடிய அவன் கண்களுக்குள் கண்ணீர் நிறைந்து விட்டன. 

கிருஷ்ணா அண்ணனின் கரத்தை பற்றி “கண்ணைத் திறந்து அண்ணியை பாருங்கண்ணா..” என்று சொன்னதும் தான் தேன்மலரை பார்த்தான்.  

அவன் பார்வையில் காதல், ஆசுவாசம், நிறைவு என எல்லாமே நிரம்பிக் கிடந்தது. 

தேன்மலர் அதற்கு மேல் அவனின் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டாள். 

அப்போது கவிரத்னாவும் கோகுலனை பள்ளியில் விட்டு வந்து விட, தேன்மலர் சம்மதம் கூறிய விஷயம் அறிந்தவளுக்கு ஆச்சர்யமும் சந்தோஷமும் ஒருங்கே பிறந்தது.

இன்பசேகரன் மனைவியுடன் இணைந்து தங்கையிடம் தாம்பூலத் தட்டினை நீட்டி “வாங்கிக்க மங்க” என்று கூற, ஞானமங்கை மனம் நிறைந்த சந்தோஷத்துடன் அதனை வாங்கிக் கொண்டார். 

மனமெல்லாம் மகள் நன்றாக வாழ வேண்டும் என்கிற வேண்டுதல் வேறு! 

வசுந்தலா, பூவினை தேன்மலரின் கூந்தலில் சூடியவர் அவளுக்காக வாங்கி வந்திருந்த மோதிரத்தை மகனிடம் கொடுத்து அதனை அணிவிக்குமாறு கூறினார். 

அமுதன் தேன்மலரின் எதிரே வந்து நின்று அவளின் விரலுக்காக இடது கையினை நீட்ட, மெல்ல தன் விரல்களை அவனை நோக்கி உயர்த்தினாள் தேன்மலர். 

பூவிதழிற்குள் மென்மையாக ஊடுருவும் தென்றல் போல மலரின் விரலிற்குள் மென்மையாக மோதிரத்தை நுழைத்தவன், அவளின் கையினை ஒரு முறை அழுத்தி விடுவித்தான். 

தேன்மலர் தலை நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவள் கண்களிலும் ஏனோ மெல்லிய நீர்ப் படலம்! அந்தக் கண்ணீரில் சிறு பயமும் பதற்றமும் தென்பட்டது! 

அமுதன் அவளின் பயத்தை உணர்ந்து, விடுவித்த அவள் கரத்தினை மீண்டும் பற்றியபடி “நீ இந்த முடிவை எடுத்ததுக்காக என்னைக்கும் வருத்தப்பட மாட்ட மலர்” என்றான் நேசம் தந்த நம்பிக்கையில்!

அவளிடம் சின்ன தலை அசைப்பு மட்டுமே பதிலாக வர, அதுவே அமுதனுக்கு போதுமானதாக இருந்தது..

பெரியவர்கள் திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் என கலந்து பேசினர். பேச்சின் போது பத்து தினங்கள் கழித்து நிகழவிருக்கும் ரஞ்சிதனின் நிச்சயம் பற்றியும் பேச்சு வர, மங்கை உடனே “அண்ணே நாம அதுக்கு முன்னாடியே நிச்சயம் வச்சுக்களாமா?” என்றார் அண்ணனிடம் பவ்யமாக. 

கமலம் அண்ணியை முந்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் போலும்..! 

வசுந்தலாவும் கணவரிடம் “ஆமாங்க.. மங்கை சொல்றதும் சரி தான். என்ன தான் ஒரே வயசா இருந்தாலும் நம்ம அமுதன் ரஞ்சித்த விட நாலு மாசம் பெரியவன். நாம முன்னாடி நிச்சயம் வச்சாலும் கமலம் ஒன்னும் சொல்ல மாட்டா. அடுத்த வாரமே நாம தேனுவுக்கும் அமுதனுக்கும் நிச்சயம் வச்சிடலாம்” என்று கூற, இன்பசேகரன் மறுக்கவில்லை.  

நிச்சயம் அடுத்த வாரம் என்றும் கல்யாணம் அடுத்த மாதம் என்றும் முடிவானது! 

விஷயம் அறிந்த கமலம் நெஞ்சில் இடி விழுந்தார் போல் அமர்ந்து விட்டார். அதுவும் மூத்தவரே நேரில் சென்று பெண் கேட்டு நிச்சயம் வரை உறுதி செய்து விட்டு வந்ததை அறிந்து அவரின் ரத்தம் கொதித்தது. 

இது போதாது என்று மங்கை வேறு தன் பங்கிற்கு அழைத்து “அண்ணனே வந்து பொண்ணு கேட்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லண்ணி.. இந்த விஷயம் கேள்விப் பட்டதும் நீங்க தான் முதல்ல சந்தோஷப் படுவீங்கன்னு எனக்குத் தெரியும் அண்ணி. கட்டாயம் குடும்பத்தோட எல்லாரும் அடுத்த வார நிச்சயத்துக்கு வந்திடனும் அண்ணி!” என்று வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் நைசாக வார்த்தைகளை இறக்கினார் மங்கை. 

கமலத்திற்கு மனம் குமுறியது! அதுவும் போயும் போயும் மங்கை மகளுக்கு இப்படி ஒரு வாழ்வா என்று வேறு வயிறு எரிந்தது.

அவரைப் பொறுத்த மட்டில் ‘மங்கை மகளுக்கு கல்யாணமே நடக்காது..’ என்ற எண்ணம் தான். 

அதை மீறி யாராவது வெளியில் இருந்து பெண் கேட்டு வந்தால் திவாகரனை பற்றியும், மங்கையின் ‘சாமியார் மயம்’ நிறைந்த குணம் பற்றியும் சொல்லி அதனை கெடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருந்தார். 

இப்போது இன்பசேகரன் நேரில் சென்று உறுதி செய்து விட்டு வந்ததை அறிந்து ஒன்றுமே செய்ய இயலாத கையறு நிலைக்கு தள்ளப்படிருந்தார் கமலம்! 

இன்பசேகரனை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாதே! மீறி பேசினால் இன்பசேகரன் சளைக்காமல் பதிலடி கொடுக்கும் ரகம் என்பதால் கமலம் வாயே திறக்கவில்லை.

அவ்வப்போது கணவரிடம் “உங்க அண்ணனுக்கு புத்தி மலுங்கிப் போச்சு.. அதான் இப்படி ஒருத்திய மருமகளா கொண்டு வரணும்னு முடிவு பண்ணி இருக்கார்” என்று காழ்ப்புணர்ச்சியுடன் பேச, தாயின் பேச்சில் ரஞ்சிதனுக்கு கோபம் வந்தது. 

“அதென்னமா இப்படி ஒருத்தின்னு ரொம்ப கேவலமா பேசுறீங்க? தேனுவைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு” என்று அதிகத்திற்குமே கோபம் கொண்டவன், 

“இனி இப்படி எல்லாம் பேசாதீங்கமா. நம்ம வீட்லயும் ஒரு வாழ வேண்டிய பொண்ணு இருக்கா. என் கூட வாழுறதுக்கும் ஒரு பொண்ணு வரப் போறா. அதனால நல்ல எண்ணத்தோட பேசிப் பழகுங்க” என்று கடுமையாக திட்டி விட்டான். 

அதன் பின்னர் கமலம் அதிகம் பேசவில்லை. ஆனால், உள்ளுக்குள் கருவியபடி தான் இருந்தார். 

நிச்சயத்திற்கு முதல் நாள் ரஞ்சிதன் தேன்மலருக்கு அழைத்து தன் வாழ்த்தினை சொல்லியவன் “தேனடை… உனக்கு நிஜமாவே சம்மதம் தானே?” என்று கேட்க, “ஹ்ம்ம் ரஞ்சி” என்றாள் தேன்மலர் மெதுவாக. 

“தேனு..” என்று ரஞ்சிதன் அழுத்தமாக அழைக்க, அந்த அழைப்பில் உன்னை நான் அறிவேன் எனும் செய்தி தொக்கி நின்றதை உணர்ந்தாள் தேன்மலர். 

அவளுக்குமே அந்த நொடி ஆழ் மனக்கிலேசங்களை நண்பனிடம் பகிர வேண்டும் போல் தோன்ற, 

“முழு மனசோட சம்மதம் சொன்னேனான்னு கேட்டடா பதில் என்னன்னு எனக்குத் தெரியல ரஞ்சி.. அதே சமயம் முழு மனசோட அவரை மறுக்கவும் முடியல” என்றாள் இரண்டே வரியில்! 

அவளின் வார்த்தைகளிலயே அமுதன் அவளின் மனதை பாதிப்படைய வைத்துள்ளான் என்பதை புரிந்து கொண்ட ரஞ்சிதன் மெல்ல புன்னகைத்துக் கொண்டான். 

தன்னிடம் அமுதன் காதலைச் சொன்னது குறித்து தேன்மலர் இதுவரை ரஞ்சிதனிடம் எதுவும் கூறியதில்லை. இப்போது அதனைப் பற்றி சொல்லவும் தோன்றவில்லை. 

ஏனோ.. அன்று காரிற்குள் இருவர் மட்டும் தனிமையாக இருந்த பொழுது அவன் உணர்வுகளை தன் கண் பார்த்து கை பிடித்து மலர் கொடுத்து அமுதன் நேசத்தைச் சொன்ன நொடிகளை பற்றி எல்லாம் யாரிடமும் சொல்ல பிரியப் படவில்லை. உயிர் நண்பனிடம் உட்பட! 

அவள் தன்னிடம் அதனைக் குறித்து பகிர்ந்து கொள்ளாத போதே ரஞ்சிதனுக்கு அவளின் மன உணர்வுகளை புரிந்து விட்டன. 

‘தேனு மனசை பாதிக்கிற அளவுக்கு இந்த அமுதன் பய உருகி இருக்கான்! ரைட்ரா! என் தோழி லைஃப் யோகராசோட செட்டில்டுடா..!’ என்று மகிழ்ச்சி அடைந்தவன், அவளிடம் எதையும் மறைக்க நினைக்கவில்லை. 

அமுதன் அன்று மொட்டை மாடியில் வைத்து பேசியதை பற்றி முழுதாக கூறி விட்டான். 

அவன் சொன்னதும் தேன்மலர் திகைத்து விழிக்க, “என்னைக் கூப்பிட்டு மிரட்டுற அளவுக்கு வந்துட்டான். அந்த அளவுக்கு உன்னை லவ் பண்ணுவான்னு நானெல்லாம் என் கனவுல கூட நினைச்சுப் பாத்ததில்ல தேனு.. அன்னைக்கு அவன் சொல்லச் சொல்ல எனக்கு கரன்ட் கம்பியை கடிச்ச மாதிரி தான் இருந்தது..” என இப்போதும் நம்ப முடியாத குரலில் கூறியவன், 

“ஆனா, ஒன்னு மட்டும் உண்மை தேனு.. அந்த அமுதன் பய உன்னை உண்மையா லவ் பண்றான்.. He fell for you very harder and deeper! அவனோட உணர்வுகள் பொய்யில்ல தேனடை.. உன் லைஃப் அவன் கூட நல்லா இருக்கும்! எனக்கு நம்பிக்கை இருக்கு!” என்று ரஞ்சிதன் நன்னம்பிக்கையுடன்(optimism) பேச, 

தேன்மலருக்கு இன்னும் அதிர்ச்சி நீங்கியபாடில்லை! 

தன் மேல் அவன் கொண்டுள்ள நேசத்தின் ஆழம் அவளின் ஆழ் மனதில் அச்சத்தை விதைத்தது!  

ரஞ்சிதன் தன்னை விரும்பி இருந்தால் அவனை ஒதுங்கிக் கொள்ள சொல்லி எச்சரிக்கை செய்யும் அளவிற்கு பேசி இருக்கிறானே! 

அவனை.. அவனின் நேசத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல் தடுமாறினாள். 

“வேற எதுவும் உன்னை திட்டி விட்டாரா ரஞ்சி..” என்று தேன்மலர் சங்கடமாக வினவ, 

“ச்சே ச்சே.. அதெல்லாம் இல்ல தேனு.. நான் தான் அவனை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கினேன். அப்புறம் தோஸ்த் ஆகிட்டோம்.. ரெண்டு மூணு தடவை இடையில கால் பண்ணி எல்லாம் பேசினோம்னா பாத்துக்கயேன்!” என்றதும் தேன்மலர் புன்னகைக்க, மேலும் அவளை இயல்பாக்கும் பொருட்டு,

“பட், யோகராசு உன் கிட்ட வழுக்கி விழுந்ததை என்னால இப்பவும் நம்பவே முடியல தேனு. இனி பாரு நான் என் ஃபோன்ல அவன் பேரை ‘மிஸ்டர். மலர்தாசன்’னு சேவ் பண்ணி வைக்கப் போறேன்!” என்று நக்கல் செய்ய, தேன்மலர் சற்று லகுவானாள். 

மேலும் சிறிது நேரம் பேசி விட்டு ரஞ்சிதன் அழைப்பை துண்டிக்க, தேன்மலரின் மனம் அமுதனிலேயே சிக்கிக் கொண்டது!   

“ரஞ்சியும் நானும் லவ் பண்றோம்னு வேற இவருக்கு எண்ணம் இருந்ததா….” என்று பல்லைக் கடித்தவள், சற்றும் யோசிக்காமல் அவனுக்கு அழைத்து விட்டாள். 

மலரின் அழைப்பை கண்டதும் அமுதகீதன் புருவங்கள் உயர்ந்தது. புன்னகையும் இதழ்களில் வந்து ஒட்டிக் கொண்டது. 

அன்று பெண் பார்த்து உறுதி செய்து விட்டு வந்த பின்னர் அவளை பார்க்கவில்லை. அவளிடம் பேசவுமில்லை. 

அழைத்தால் ஏற்க மாட்டாளோ எனத் தயங்கி அவன் அழைக்காமல் இருக்க, இப்போது அவளே அழைக்கவும் உள்ளுக்குள் சில்லென்று உணர்ந்தான். 

தொழிற்சாலையில் இருந்தவன் தன் அலுவலக அறைக்கு நடந்து கொண்டே அழைப்பை ஏற்க, அவன் அழைப்பை ஏற்ற வேகத்தில் “அன்னைக்கு ரஞ்சிதனை மிரட்டுறதுக்காக தான் மொட்டை மாடிக்கு கூட்டிட்டு போனீங்களா..” கோபமான குரலில் வேகத்துடன் கேட்டாள் தேன்மலர். 

அவளின் வேகத்தில் ஒரு நொடி நின்றவன், பின் அவள் கேள்வியை கிரகித்ததும் “இடியட் ரஞ்சித்! எல்லாத்தையும் சொல்லிட்டான் போல” என்று மெல்ல பல்லைக் கடிக்க, அது வேறு மலரின் காதில் விழுந்து விட்டது.

“பேசுறதை எல்லாம் நீங்க பேசிட்டு இப்ப அவனை ஏன் இடியட்னு திட்றீங்க..?” என நண்பனை பேசுவது பொறுக்காமல் மீண்டும் கோபமாக கேட்டாள் தேன்மலர்.

அமுதனுக்கோ மாட்டிக் கொண்ட நிலை! ஆனாலும் எதையும் மறுக்கவில்லை. அமைதியாகவே இருந்தான். 

“பதில் சொல்லுங்க!” என்று ஒரு அதட்டல் அந்தப் பக்கமிருந்து வர, 

“என்னோட மலரை யாருக்கும் விட்டுக் கொடுக்கிற நிலமைல நான் இல்ல. அதான் ரஞ்சித்தை கூப்பிட்டு பேசினேன் மலர்” என்றான். 

அவன் குரலில் அத்தனை உறுதி! 

“என்னோட மலர்..” என்று அவன் சொன்ன விதத்தை கேட்டு தேன்மலரின் கோபம் அப்படியே வடிந்து விட்டது.  

“நானும் அவனும் லவ் பண்றோம்னு வேற நினைச்சிருக்கீங்க?” என்று கேட்டவளின் குரல் சற்று மெதுவாக என்றாலும் அழுத்தமாக வர, 

“நினைச்சேன் தான். அன்னைக்கு ஆட்டோ ஸ்டான்ட்ல உன் வீட்டு பக்கத்துல இருந்த லேடீஸ் பேசுனது.. அத்தையோட எண்ணம்.. இதெல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் எல்லா வகையிலும் மனசுல எண்ணங்கள் வளர ஆரம்பிச்சிடுச்சு மலர். அதான் ரஞ்சித் கிட்ட தெளிவா பேசிடலாம்னு..” என்றவன் அதற்கு மேல் எதுவும் கூறாமல் அமைதி காக்க, தேன்மலரும் அமைதியாகவே இருந்தாள்.  

“வேற எதுவும் என் கிட்ட பேசுறதுக்கு இல்லையா மலர்? இதைக் கேட்க தான் கோபமா போன் பண்ணியா?” என்றான் அமுதகீதன் கிண்டலுடன்! 

தேன்மலர் சளைக்காமல் “ஹ்ம்ம்.. ஆமா. வேற எதுவும் பேசுறதுக்கு இல்ல. வச்சிடட்டுமா?” என்று கேட்க, ‘ராட்சஸி..’ என்று மனதிற்குள் சிலாகித்துக் கொண்டான்.

“நாளைக்கு நமக்கு நிச்சயம்.. அது நியாபகம் இருக்கா மலருக்கு..” என்றான் சாவகாசமான குரலில்!

“ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..இருக்கு இருக்கு.. அதுக்கென்ன இப்போ?” என்றவள் சாதாரணமாக கேட்க, 

“ரொம்பக் கஷ்டம்டா அமுதா..” என்று விட்டத்தைப் பார்த்து அவளுக்குக் கேட்கும் படியே புலம்பியவன், நன்றாகவே புன்னகை செய்தான். 

அவள் அமைதியாக இருக்க, “நான் ஒன்னு கேட்கட்டுமா மலர்?” என்று மென்மையான குரலில் வினவ, அந்தக் குரலை மறுக்க முடியாமல் “ஹ்ம்ம்..” என்றாள் அவளும். 

“உண்மையாவே அன்னைக்கு எப்படி சம்மதம் சொன்ன? அத்தை மொட்டை மாடிக்கு வந்து எதுவும் உன்ன மிரட்டி.. அதனால சம்மதம் சொன்னியா?” என்று அலைப்புறுதல் நிறைந்த குரலில் வினவினான் அமுதகீதன். 

அவன் கேட்டதும் தேன்மலரிடம் நீண்ட மௌனம்! 

பின் குரலை செறுமிக் கொண்டவள் “எங்க அம்மா கட்டாயப் படுத்தி என்னை ஒரு முடிவெடுக்க வைக்க முடியாது. நான் தான் அந்த முடிவை எடுத்தேன்” என்றான் தெளிவாகவே! 

அவனிடம் நிம்மதியான பெருமூச்சொன்று வர, “அந்த முடிவை நான் எடுக்க காரணம் இருந்தது. அதான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன்” என்றாள் உள்ளே சென்று விட்ட குரலில்!

“காரணமா.. என்ன காரணம்…” என்று அமுதன் புருவம் சுருக்கி வினவ, தேன்மலர் சுதாரித்துக் கொண்டாள். 

“ஹான்.. அ..அது.. இல்ல…ஒன்னுமில்ல..” என்றவள், “நான் வைக்கிறேன். நாளைக்கு பாக்கலாம்” என்றவள் அவனைப் பேச விடாமல் அவசர அவசரமாக அழைப்பைத் துண்டித்து விட்டாள். 

மனம் படபடவென அடித்துக் கொண்டது தேன்மலருக்கு! மீண்டும் அவன் அழைப்பானோ என்று படபடப்புடன் அலைபேசியையே பார்த்தாள். 

அவன் எண்ணத்தை பொய்யாக்காமல் அமுதகீதன் அழைத்தான்! 

அழைப்பை ஏற்க முடியாமல் தடுமாறியவள் பின்பு ஏற்க, “பேசிட்டு இருக்கும் போதே கால் கட் பண்ணக் கூடாது மலர்…” என்று சிரித்தவன்,

“காரணம் என்னன்னு உனக்குத் தெரிஞ்சா மட்டும் போதும் மலர். நான் துருவிக் கேட்க மாட்டேன்.. எனக்கு நீ கட்டாயத்தின் பேர்ல சம்மதம் சொல்லி இருக்கக் கூடாது. அவ்வளவு தான்” என்றான். 

ஆனாலும் மனதின் மூலையில் என்ன காரணமாக இருக்கும் என்று சிந்தனை ஓடத் தான் செய்தது. ஆனால், அவளாகவே சொல்ல பிரியப்பட்டால் சொல்லட்டும். இல்லை என்றால் நாம் கேட்க வேண்டாம் என்றே முடிவு செய்தான்.

தேன்மலருக்கு அவனின் பதிலில் கொஞ்சம் ஆசுவாசம் பிறக்க, “தேங்க்ஸ்..” என்றாள். 

“தேங்க்ஸ்.. ஹ்ம்ம்?” என்றவன், 

“இந்தத் தேங்க்ஸ்சை கல்யாணத்துக்கு அப்புறம் வேற விதமா வாங்கிக்கிறேன்!” என்று ரகசியமான குரலில் கூறியவன், அதற்கு மேல் அவளை சோதிக்க விரும்பாமல் “நாளைக்கு பாக்கலாம் மலர். டேக் கேர்!” என்று அழைப்பை துண்டித்து விட்டான். 

அவனின் ரகசியப் பேச்சால் அவள் தான் திகைத்து விழித்துக் கொண்டிருந்தாள்! 

மலர் தன்னையும் மீறி அமுதத்தின் ரகசியக் குரலில் சிவந்து போனது!

error: Content is protected !!
Scroll to Top