மலர் பாதம் பணிந்து..22(2)

இளையவள் சொன்னதை கேட்ட மங்கைக்கு அப்போது தான் அவர்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

தாம்பூலத் தட்டிலிருந்த பொருட்களை கவனிக்க, பாலைவனமாய் மாறி இருந்த மனதிற்குள் ஆனந்தப் புயல் புகுந்தது போலானது மங்கைக்கு!

‘கடவுள் ஒரு கதவை மூடினாலும் இன்னொரு கதவை என் மகளுக்காக திறந்து விட்டிருக்கார்…. அந்த ஜோசியக்காரன் சொன்னது பொய்யில்ல! என் மகளுக்கு சொந்தத்தில தான் கல்யாணம் நடக்கப் போகுது. அதுவும் என் மூத்த அண்ணனோட பையன் கூட.. கடவுளே.. இது நிஜமா கனவா.. என்னால நம்ப முடியலையே..’ என்று மங்கை ஆனந்த திகைப்பில் திக்கு முக்காடிப் போய் இருந்தார்.

என்ன பேச? எப்படி எதிர்வினை ஆற்ற என்று கூட புரியாமல் அவர் நெகிழ்ந்து போய் அண்ணன் குடும்பத்தைப் பார்க்க, இன்பசேகரன் தானே பேச்சினை தொடங்கினார்.

“என் பொண்ணு சொல்றது நிஜம் தான் மங்க. என் பையன் அமுதனுக்கு உன் பொண்ணு தேன்மலரை பொண்ணு கேட்டு வந்திருக்கேன். உனக்கு சம்மதம்னா சொல்லு.. இப்பவே பூ வச்சு மோதிரம் மாத்தி உறுதி செஞ்சிடலாம்” என்றார் தங்கையிடம்!

மங்கைக்கு அண்ணனே இவ்விஷயத்தை பேசியதில் தலை கால் புரியவில்லை.

தன் அண்ணன் இன்பசேகரனுக்கு இப்படி எல்லாம் தன்மையுடன் தன்னிடம் பேசத் தெரியுமா என்று வாயடைத்துப் என போனார். கண்களில் வேறு கண்ணீர் வந்து நின்றது.. ஆனந்தத்தில் நெஞ்சம் விம்மியது.. கைகள் கூட நடுங்கின..

“என்ன மங்க..? பதிலே சொல்ல மாட்டேங்குற..” என்று இன்பசேகரன் கேட்கவும், தன்னிலை அடைந்தவர் “அண்.. அண்ணே.. எனக்கு சந்தோஷத்தில ஒன்னும் புரியல…கடவுளே.. எனக்கு என்ன பேசுறதுன்னு கூட தெரியலையே… என் அண்ணன்.. என் வீட்டுப் படி ஏறி வந்து என் பொண்ணை கேட்குது.. இதை என்னால நம்ப முடியல…” என சந்தோஷ அதிர்வுடன் அரற்றியவரிடம், “மங்க.. உன் பதில் என்ன? அதை சொல்லு” என்றார் இன்பசேகரன்.

“அண்ணே.. நீயே வந்து கேட்கும் போது நான் என்ன பதில் சொல்ல வேண்டியது கிடக்கு? இனி தேனு என் மக இல்லண்ணே! உன் வீட்டு மருமக..” என்று அண்ணனை ஆராதிக்காத குறையாக மங்கை வாக்குக் கொடுக்க, இன்பசேகரன் முகத்தில் பெருமையும் மிதப்பும் தாண்டவமாடியது.

‘நான் பொண்ணு கேட்டு என் தங்கச்சி வேண்டாம்னு சொல்லிடுவாளா.. அந்த இடத்துலயா அவ இருக்கா?’ எனும் இறுமாப்பும் அவருள் குடி கொண்டது. மகனின் ஆசையை நிறைவேற்றி விட்ட திருப்தியும் மனதை சூழ்ந்து கொண்டது.

அன்னையின் பதிலில் தேன்மலர் தான் விக்கித்துப் போனாள். தன்னிடம் ஒரு வார்த்தை கேட்கக் கூட இல்லாமல் அவர் பாட்டிற்கு சம்மதம் சொல்லியது உள்ளுக்குள் தகிப்பை உண்டாக்க, “அம்மா..” என்று அழுத்தமாக அழைத்தாள்.

அந்த அழுத்தத்தை உணரும் நிலையில் எல்லாம் ஞானமங்கை இல்லை.

“ஏய் தேனு.. என்னடி மசமசன்னு அப்படியே நின்னுகிட்டு இருக்க.. போய் முதல்ல கையை கழுவிட்டு வந்து பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்க..” என்று கூற, தேன்மலருக்கு அன்னையின் செயல்பாடுகளில் கடுப்பு பொங்கியது.

அமுதனுக்கு அவளின் அசைவுகள் ஒவ்வொன்றிலும் அவளின் மறுப்பே தெரிய, பெருமூச்சுடன் அவளையே பார்த்தான்.

தந்தையின் சம்மதம் கிடைக்கும் என்றோ, அவன் இன்றைக்கே பெண் பார்க்க வருவோம் என்றோ அவன் நினைக்கவில்லை.

விருப்பத்தை சொன்னவன், அவளுக்கான கால அவகாசத்தை கொடுக்க எண்ணி தான் இத்தனை நாட்களும் அவளை எந்த வகையிலும் அணுகவில்லை.

இந்த நொடி அவளுக்கு முள் மேல் நிற்பது போன்ற நிலை தான் என்று நன்கறிவான்.. ஆகையால் மங்கையின் பேச்சை நிறுத்தும் விதமாய் “அத்த..” என்று நீண்ட ஆண்டுகள் கழித்து அவரை உரிமையுடன் அழைக்க, மங்கைக்கு செவிக்குள் தேன் வந்து பாய்ந்தது போலிருந்தது.

கண்ணீருடன் “தம்பி..” என்றவர், “இல்ல.. இனிமேல் மாப்பிள்ளைன்னு தான் கூப்பிடனும்.. சொல்லுங்க மாப்பிள்ளை..” என்றார் பயபக்தி நிறைந்த குரலில்!

“உங்க சம்மதம் மட்டும் போதாது. மலர் கிட்ட இருந்தும் சம்மதம் கிடைக்கணும்..” என்க,

“அவ என்ன மாப்பிள்ளை மறுப்பு சொல்லப் போறா..” என்று மகளைப் பார்க்க, தேன்மலர் உக்கிரமாக தாயை முறைத்தாள். எல்லோரும் அதனை கவனித்தனர்.

வசுந்தலா தேனுவிடம் “இங்க பாரு தேனு.. மங்கை சொல்றதுக்காக நீ சம்மதம் சொல்ல வேண்டாம். உன் முடிவு என்னவோ அதை நீ நல்லா யோசிச்சு சொல்லு” என்க, தேன்மலருக்கு நெருப்பின் மேல் நிற்பது போலானது.

அந்த சூழ்நிலையில் எதையும் உடைத்து பேசவும் முடியாது என்று தவிப்புடன் நின்றவள், அமுதனைத் தான் பார்த்தாள்.

மங்கைக்கோ மனதிற்குள் அபாய ஒலி கேட்பது போலிருந்தது. மகளின் இறுக்கம் படர்ந்த முகத்தை வைத்தே அவளுக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்பதை உணர்ந்த மங்கை கண்களால் மகளை எச்சரிக்கை செய்தார்..

மறுப்பேதும் சொல்லி விடாதே என்று!

அவளோ அமுதனைப் பார்த்து “நான் உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்..” என்று கூறி இருக்க, இன்பசேகரன் புருவம் சுருக்கி தங்கையைப் பார்த்தார்.

அதற்கே மங்கை பதறி விட்டார்.

“அவ எதோ விவரம் புரியாம சொல்றா அண்ணே..” என்றவர் மகளை கோபத்துடன் நெருங்க,

“இருக்கட்டும் மங்கை.. தேனுவுக்கும் நாங்க இப்படி திடுதிடுப்புன்னு வந்து நிக்கிறதுல சட்டுன்னு முடிவு சொல்ல முடியாது தானே.. அவ பேசணும்னு சொல்றதுல தப்பேதும் இல்ல” என்ற வசுந்தலா மகனிடம், “போய் பேசிட்டு வாங்க அமுதா..” என்று சொல்ல, அன்னை முறைத்ததையும் பொருட்படுத்தாமல் “மொட்டை மாடிக்கு போகலாம்” என்றவள் வெளியே வந்து படிகளில் ஏற, அவளை பின் தொடர்ந்தான் அமுதகீதன்.

கவியோ நடப்பதை பார்த்துக் கொண்டு நின்றவள் அவர்கள் சென்றதும் “பையனுக்கு ஸ்கூல் டைம் ஆச்சு.. நான் கொண்டு போய் விட்டுட்டு வரேன்” என்று ஒரு தலை அசைப்புடன் கிளம்பி விட்டாள்.

பெரியவர்களும் கிருஷ்ணரூபியும் மட்டுமே இருக்க, மங்கைக்கு வயிற்றில் நெருப்பை வைத்தது போலிருந்தது.

மேலே மகள் என்ன பேசுகிறாளோ.. என்ன முடிவினை சொல்லப் போகிறாளோ என்று பீதியுடன் நின்றிருந்தார்.

மொட்டை மாடியில்…

இருவரும் மேலே வந்ததும் தேன்மலர் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி நீண்ட மூச்சினை வெளியேற்றினாள்.

பின்பு அவனை நேராகப் பார்த்து “அன்னைக்கு நீங்க உங்க மனச சொன்னப்பவே நான் மறுத்திருக்கனும். ஆனா, அந்த நொடி அதிர்ச்சில என்னால பதில் சொல்ல முடியல. அப்புறமும் சொல்றதுக்கான வாய்ப்புகள் அமையல. இப்ப நீங்க வீட்டுக்கே வந்து பொண்ணு கேட்பீங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல” என்றவள்,

அவன் கண்களை தீர்க்கமாகவும் ஆழமாகவும் பார்த்து “வேண்டாம். நமக்குள்ள ஒரு பந்தம் ஒத்து வராது” என்றாள் தெளிவான குரலில்!

அவளின் இந்த பதிலை எதிர்பார்த்தே வந்தவன் தான் என்பதால் அமுதகீதன் பெரிதாக அதிரவில்லை.

“எனக்கு உன் பக்க நியாயமும் உணர்வுகளும் புரியுது மலர். அதனால தான் இத்தனை நாளும் நான் எந்த வகைலையும் உன்னை நெருங்கவே நினைக்கல. இன்னைக்கு பொண்ணு பாக்க வந்தது கூட அப்பா முடிவு பண்ணி தான். நானும் இதை எதிர் பார்க்கல. அதே சமயம் எதிர்க்கவும் இல்ல. அப்பா முடிவு பண்ணதுமே நானும் உன்னை பாக்க இது ஒரு சாக்குன்னு நினைச்சிட்டு தான் வந்தேன்” என்றான் மென்மையான புன்னகையுடன்.

“நிஜமாவே சொல்றேன் மலர். இந்த பொண்ணு பாக்க வந்ததுனால நமக்குள்ள எதுவும் மாறிட போறதில்லன்னு நீ நினைக்கலாம். ஆனா, எனக்குள்ள எப்பவோ மாற்றம் வந்தாச்சு மலர். அதனால உன்னை மட்டுமே காதலிக்கிற அமுதனா உன் முன்னாடி நிக்கிறேன்” என்றான் அவள் கண்களை ஆழமாக ஊடுருவி.

தேன்மலருக்கோ தான் மறுத்தும் அவன் இப்படி பேசுதை கண்டு கோபம் தான் வந்தது.

“உங்க கிட்ட மறை முகமாவும் சொல்லிட்டேன்.. நேரடியாவும் சொல்லிட்டேன்.. ஆனாலும் இப்படியே இருப்பேன்னா என்ன அர்த்தம்?” என்றவள், அவன் ஈகோவை தூண்டும் விதமாக,

“நீங்க எனக்கு வாழ்க்கைத் துணையா வேண்டவே வேண்டாம்னு சொல்றேன்.. சொல்லப் போனா உங்களை ரிஜெக்ட் பண்றேன். உங்க தன்மானத்தை அது பாதிக்கவே இல்லையா?” என்றாள் தேன்மலர் பற்களை கடித்துக்கொண்டு!

அமுதனுக்கோ அவளின் தொடர் மறுப்பில் எந்த வித கோபமோ துக்கமோ வரவில்லை. ஏன், அவள் நக்கலாக கேட்டது போல் அவனின் தன்மானம் கூட அடி வாங்கவில்லை.

முன்பிருந்த அமுதன் என்றால் அவள் இப்படி கேட்டதற்கு எப்படி வேண்டுமானாலும் திருப்பிக் கொடுத்திருப்பான். ஆனால், இப்போது இருப்பவன் அவள் மேல் காதலில் விழுந்தவன் ஆயிற்றே!!

காதலில் விழுந்தவர்கள் மான அவமானம் பார்ப்பது கிடையாது! அவர்களுக்கு காதல் ஒன்றே முக்கியம்! அந்தக் காதல் நிறைவேறுவதற்காக மட்டுமே போராடுவார்கள்!

அதே சமயம் அவமானப்பட்டவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுவது கிடையாது. மலரின் நிலையும் இதுவே!

அதுவும் தன்னை அவமானப்படுத்தியவனிடமே அன்பு பாராட்ட வேண்டும் என்றால் சற்று கடினமான இழக்கு தான்!

தேன்மலர் அவனையே தீப்பார்வை பார்க்க, அமுதகீதன் இரண்டு அடிகள் முன்னே வைத்து அவளை நெருங்கி நின்றான்.

அவனின் நெருக்கம் மலரின் தீப்பார்வையை சற்று தணியச் செய்து விழிகளை விரிய வைத்தது!

அவ்விரிந்த கண்களையே பார்த்தபடி பேசத்துவங்கினான் அமுதன்.

“உன்னை கட்டாயப்படுத்தி காதலிக்க வைக்கிறதோ கல்யாணம் பண்றதோ என் எண்ணம் இல்ல மலர். அந்தளவுக்கு கீழ் தரமானவன் இல்ல நான். அதே சமயம் நீ என்னை வேண்டாம்னு மறுக்குறதுனால நான் இன்னொரு பொண்ணப் பத்தி நினைச்சுப் பாக்கப் போறதும் கிடையாது! நான் அன்னைக்கு சொன்ன மாதிரி என் மூச்சு நிக்கிற வரைக்கும் என் மனசு இந்த மலருக்காக மட்டும் தான் துடிக்கும்!” என்றவனின் ஆத்மார்த்தமான வார்த்தைகள் மலரின் இதயத்தை ஒரு நொடி உலுக்கியது.

“இதை எல்லாம் மீறி நீ நமக்குள்ள ஒரு பந்தத்தை விருப்பப் படலேன்னா….. இட்ஸ் ஓகே மலர். உன்னை மட்டுமே நினைச்சிட்டு கடைசி வரை வாழ்ந்திடுவேன்” என்று உறுதியான உள்ளத்துடன் கூறியவன் அவள் அசைவின்றி சிலை போல் நிற்பதை கண்டு,

“என் வார்த்தைல எந்த மாற்றமும் இருக்காது மலர். நான் கீழ போறேன். உன் முடிவு எதுவா இருந்தாலும் நீ வந்து சொல்லு. என் அப்பா அம்மாவை நான் சமாளிச்சுக்குவேன்” என்றவன் கீழிறங்கி சென்று விட்டான்.

“மூச்சு நிக்கிற வரைக்கும் நீ மட்டும் தான் மலர்!!!!”

இந்த வார்த்தைகளே மலரின் மனதை சிதைக்க வள்ளதாக இருந்தது.

“எதுக்கு இவருக்கு என் மேல இவ்வளவு காதலும் பிடித்தமும் வரணும்..” என்று கசப்பாக கூறியவள், கீழே செல்ல தைரியம் அற்றவளாய் அங்கேயே தேங்கி நின்று விட்டாள்.

மலரின் மனமும் அமுதனிடமே தேங்கி நின்று விட்டது!

 

error: Content is protected !!
Scroll to Top