அத்தியாயம் – 22
தாயின் பிடிவாதத்தில் அதிர்ந்தவள் “அம்மா..” என்று கோபத்துடன் குரலை உயர்த்த,
“என்னடி அம்மா? நீ சும்மா இரு.. நான் இப்பவே கமலம் அண்ணிக்கு போன் போடுறேன்” என்று போனை எடுக்க போனவரை கவி பிடித்துக் கொண்டாள்.
“அத்த அவசரப் படாதீங்க” என்று சொல்ல, மங்கை கேட்படதாக இல்லை.
“என் பொண்ணை விட்டுட்டு எப்படி அவுங்க வேற பொண்ணை பாத்து நிச்சயம் வரை வைக்கலாம். என் நெஞ்சு கொதிக்குது. இவ தான் விரும்பலன்னு சொல்றா.. ரஞ்சித் மாப்பிள்ளையுமா இவளை விரும்பல..? அப்பப்ப ஃபோன்ல பேசினது, அடிக்கடி பாக்க வந்தது, வெளில ஒன்னா போனது எல்லாம் பொய்யா?” என்று கண்ணீர் விட, தேன்மலர் நெற்றியில் அறைந்து கொண்டாள்.
அத்தோடு நில்லாமல் “உன் கல்யாண யோகத்தை பத்தி தெரிஞ்சுக்க அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே ஜோசியம் பாத்தேன்டி.. உனக்கு சொந்தத்துல தான் மாப்பிள்ளை அமையும்னு அந்த ஜோசியக்காரன் சூடம் ஏத்தி சத்தியம் பண்ணி சொன்னான்… அதை நம்பித் தானே நான் ரஞ்சித் மாப்பிள்ளை உனக்கு புருஷனா வருவாருன்னு கனா கண்டுட்டு கிடந்தேன்.. இப்ப எல்லாமே போச்சே.. அவருக்கும் உன் மேல ஆசை இல்லையா???” என்ற மங்கை ஜோசியத்தை பற்றி கூறி மேலும் கண்ணீர் சிந்தினார்.
ஜோசியம் ஜாதகம் என்று பேசிய அன்னையை எரிச்சல் பொங்க பார்த்தாள் தேன்மலர். “திருந்தவே மாட்டமா நீயெல்லாம்! ஜோசியம் ஜாதகம் சாமியார்.. இதையே கட்டிட்டு அழு!” என்றவள், அந்தப் பேச்சை முடிக்க எண்ணி,
“நானும் அவனும் நட்போட பழகுனது உன் கண்ணுக்கு வேற மாதிரி தெரிஞ்சிருக்கும்மா. ஆரம்பத்துல இருந்தே எங்களைப் பத்தி நான் உன் கிட்ட தெளிவா தான் சொன்னேன். ஆனா, நீ கேட்கல. இப்ப நீ வருத்தப் பட்டு எந்தப் பிரயோஜனமும் இல்ல. போய் அடுத்த வேலையைப் பாரு. நானும் கோகுலக் கூட்டிட்டு கிளம்புறேன்” என்றவள் அயர்ந்த குரலில் கூற, மங்கை மீண்டும் முருங்கை மரம் ஏறினார்.
“எப்படிடி அடுத்த வேலையை பாக்க முடியும்? இது உன் வாழ்க்கைடி. நம்ம குடும்பத்துக்கு வெளிய என்ன பேருன்னு உனக்கு நல்லா தெரியும் தான. எவன்டி உன்னை கல்யாணம் கட்டுவான். உன் அண்ணன் இருக்க லட்சனத்துக்கு ஒரு பய கூட நம்ம வீட்டுப் படி மிதிக்க மாட்டான். அதனால தான் அந்த ஜோசியக்காரன் சொன்னதை மலை போல நம்பிட்டு சொந்தத்துலயே உன்னை கட்டிக் கொடுக்க அரும்பாடு படுறேன்.. என் மூத்த அண்ணன் என்னை கிட்ட கூட சேத்துக்க மாட்டாரு. இல்லேன்னா அமுதன் தம்பிக்கு உன்னை கட்டிக் கொடுக்க ஆசைப் பட்டிருப்பேன். அவுங்க வீடு ஒத்து வராதுன்னு தான் சின்ன அண்ணன் பையனை உனக்கு கட்டி வைக்க ஆசப்பட்டேன். இப்ப அவுங்களும் நம்மள கை விட்டுட்டாங்க. இனி உனக்கு எப்படிடி கல்யாணம் நடக்கும்” என்று மங்கை ‘ஓ’வென்று கதறியபடி புலம்பித் தள்ளினார்.
அன்னை அமுதனின் பெயரை எடுத்ததும் தேன்மலர் இதயக்கூட்டில் மெல்லிய நடுக்கம்!
அன்று மலர் குவியலை தன் உள்ளங்கையில் வைத்து “என் மூச்சு நிக்கிற வரைக்கும் நீ மட்டும் தான் மனசுல இருப்ப” என்று ஆத்ம நேசத்துடன் அவன் உதிர்த்த வார்த்தைகள் இம்மி பிசகாமல் இப்போதும் செவிக்குள் ஒலித்தது.
கண்களை இறுக மூடித் திறந்தவள் அவன் நினைவுகளை விரட்டி அடிக்க நினைத்து தலையை குலுக்கிக் கொண்டாள்.
“மலர்..” என்றவன் அழைப்பதாகவே மனதிற்குள் குரல் எழும்ப, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் “நான் கிளம்புறேன்மா. நீ என்னமோ பண்ணு” என்று பொறுமையின்றி கத்தி விட்டு கோகுலனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
செல்லும் மகளைக் கண்ட மங்கை, “என்ன கவி இவ? இப்படி எடுத்தெறிஞ்சு பேசிட்டு போறா.. இப்ப நான் கமலம் அண்ணிக்கு போன் பண்ணவா வேண்டாமா?” என்று மருமகளிடம் கேட்க,
“நீங்க என்ன பண்ணாலும் நீங்க நினைக்கிறது நிறைவேறாது அத்த. இது எல்லாத்துக்கும் மேல நீங்க நினைக்கிற மாதிரி செய்யணும்னா அது பெரிய கலகத்துல தான் போய் முடியும். அப்புறம் உங்க இஷ்டம்” என்றவள்,
“கமலம் பெரியம்மாக்கு உங்க எண்ணம் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா அத்த? உங்க ஆசையப் பத்தி நல்லா தெரிஞ்சதுலனால தான் வேணும்னே ரஞ்சித்கு பொண்ணு பாத்த விஷயத்தை முதல் முதல்ல உங்க கிட்ட போன் பண்ணி சொல்றாங்க..” என்றதும் மங்கை திகைத்தபடி மருமகளை பார்த்தார்.
“நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இனி நீங்க தான் முடிவு பண்ணனும்..” என்றவள் வேலையைப் பார்க்க சென்று விட்டாள்.
மங்கையோ குழம்பிய குட்டையாக தெளிவில்லாமல் அமர்ந்து விட்டார். அடுத்த நாள் விடிந்தும் கூட அவர் மனதில் நிம்மதி இல்லை.
இத்தனை ஆண்டுகளாக ரஞ்சிதன் தான் மாப்பிள்ளை என்று தான் கட்டிய கனவுக் கோட்டை ஒரே நாளில் ‘டமால்’ என்று சரிந்து விழுந்ததை ஏற்கவும் முடியவில்லை.
கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல தன் மகளுக்கு ரஞ்சிதன் தான் மாப்பிள்ளை என்று அவர் மனதில் பச்சை குத்தி வைக்காத குறை தான். இன்று அந்த நிலை இல்லை எனும் போது மங்கை உடைந்து தான் போனார்.
மகள் வாழ்க்கையை எண்ணி அச்சம் கட்டுக்கடங்காமல் பெருகியது மங்கைக்கு. அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கதி கலங்கிப் போனார்.
இதனுடன் கவி கூறியது வேறு மனதில் கனலை மூட்டிக் கொண்டிருந்தது. தன் ஆசைப் பற்றி தெரிந்தும் கமலம் அண்ணி மகளை புறக்கணித்ததை எண்ணி மனம் குமைந்து போனார்.
“தெரிஞ்சே வேற பொண்ணு பாத்திருக்காங்க.. நான் ஒரு மூளை இல்லாதவ.. ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே கமலம் அண்ணி கிட்ட நேரடியா கல்யாணப் பேச்சை எடுத்திருக்கணும். அதை விட்டுட்டு அவுங்களா பொண்ணு கேட்டு வருவாங்கன்னு உக்காந்திருந்தது என் தப்பு தான்” என்று வெம்பிப் போனார்.
அவரின் புலம்பல்கள் ஒரு புறம் நிற்காமல் தொடர, தேன்மலர் அன்றும் அன்னையை கண்டு கொள்ளாமல் வேலைக்குத் தயாரானாள்.
மங்கை அசைவின்றி மகளைப் பார்க்க, “இப்படியே இன்னும் எவ்வளவு நேரம்மா உக்காந்துட்டு இருப்ப.. போய் சமைக்கலாம் தான. நேத்தும் சரி இன்னைக்கும் சரி அண்ணி தான் எல்லா வேலையும் செஞ்சிட்டு இருக்காங்க.. நீ இப்படியே கப்பல் கவுந்த மாதிரி உக்காந்துட்டு இருக்க” என்று தாயை முறைக்க,
“உனக்கு என்னடி..? உன் இஷ்டத்துக்கு நீ பேசுவ..! ஆனா எனக்கு தானே உன் வாழ்க்கை நெனச்சு கவலையா இருக்கு..” என்று மங்கையும் மகளை முறைத்தார்.
கவி பெருமூச்சுடன் ஹாலிற்கு வந்து “தேனு.. நீ சாப்பிட்டு கிளம்பு. வேலை எல்லாம் எனக்கொரு கஷ்டமே இல்ல. அதான் நீ மதியத்துக்கு வேண்டிய காய் எல்லாம் நறுக்கி வச்சிட்டியே.. அடுப்புல ஏத்துற வேலை மட்டும் தான் எனக்கு. அத்தையை ஃப்ரீயா விடு. அவுங்க சரியாக இன்னும் கொஞ்ச நாள் ஆகும்” என்றாள்.
ஆதூரத்துடன் அண்ணியை பார்த்தவள், “பாத்திரம் எல்லாம் நீங்க விலக்க வேண்டாம் அண்ணி. வேலையைப் பாருங்க. நான் சாய்ந்தரம் வந்து எல்லாத்தையும் சுத்தம் பண்ணிடுறேன்..” என்றவள், தாய் முறைப்பதை கண்டு கொள்ளாமல் சாப்பிட அமர்ந்தாள்.
உணவில் கை வைத்த நேரம் வெளியே கார் வந்து நிற்கும் அரவம் கேட்க, யார் என்று பார்ப்பதற்காக உணவை மீண்டும் தட்டில் வைக்கப் போனவளை தடுத்த கவி “நீ சாப்பிடு தேனு. நான் பாக்குறேன்” என வாசலிற்கு வந்து பார்க்க, அமுதனின் மோரிஸ் கேரேஜை கண்டதும் புருவம் சுருக்கினாள்.
அவள் யோசனையுடன் நிற்கும் போதே காரிலிருந்து அனைவரும் இறங்க, வசுந்தலாவின் கையில் இருந்த தாம்பூலத் தட்டினை பார்த்து விட்டு அதிர்ச்சியில் கண்கள் அகன்றது கவிரத்னாவிற்கு.
அவர்களை வரவேற்கக் கூட மறந்தவளாய் திகைத்து நிற்க, இன்பசேகரன் வாசல் கதவை திறக்கவும் தன்னிலை அடைந்தவள் தன்னை சுதாரித்துக் கொண்டு “வாங்க.. வாங்க” என்று எல்லோரையும் வரவேற்றவள் கிருஷ்ணாரூபியும் வந்திருப்பதை கண்டு “வாடா ரூபி..” என்றாள் இன்முகத்துடன்.
“மங்கை வீட்ல தான இருக்கா…” என்று வினவியபடி இன்பசேகரன் உள்ளே வர, அண்ணனின் குரலில் சற்று திகைத்தபடி எழுந்தார் மங்கை.
திடீரென்று மூத்த அண்ணனின் குடும்பத்தை கண்டதும் மங்கைக்கு ஒன்றும் புரியவில்லை.
எல்லோரையும் வரவேற்றவர் என்ன விஷயமாக வந்திருக்கிறார்கள் என்பதை யூகிக்க முடியாமல் நின்றார்.
மங்கை இருந்த மன நிலைக்கு வசுந்தலா கையில் இருந்த தாம்பூலத் தட்டினை எல்லாம் கவனிக்கவில்லை.
ஆனால், தேன்மலர் கவனத்திருந்தாள்.
அவர்கள் தோற்றமும், தாம்பூலத் தட்டிலிருந்த உயர் ரக பட்டுப் புடவையும், மோதிர பெட்டியும் பூக்களும் பழங்களும் என எல்லாம் அவர்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்பதை பறைசாற்ற, திகைப்பின் உச்சத்திற்கே சென்று விட்டாள் தேன்மலர்.
உணவில் வைத்த கையை அப்படியே பின்னுக்கு இழுத்தவளின் கால்கள் தன்னைப் போல் எழுந்து நிற்க, பார்வை அமுதனை தான் திகைப்புடன் தீண்டியது.
அவள் அதிர்வின் உச்சத்தில் இருப்பதை அமுதனால் நன்றாக உணர முடிந்தது.
அலுவலக சீருடையில் இருந்தவளை கண்டு ‘வேலைக்கு கிளம்பி இருப்பாள் போலும்..’ என்று நினைத்தபடி கண்களால் அவளிடம் என்னவோ கூற, தேன்மலருக்கு அதிர்ச்சி நீங்கியபாடில்லை.
மங்கையோ வந்திருப்பவர்களை கவனிக்க மறந்து நிற்பதை உணர்ந்து “நான் ஒருத்தி.. அப்படியே நிக்கிறேன்..” என்றவர்,
“இருங்க.. நான் போய் பலகாரம் எல்லாம் எடுத்துட்டு வரேன்” என்று அடுக்களைக்கு செல்ல திரும்பியவர், மகள் உறைந்த பனியாக நிற்பதை கண்டு “என்னடி.. வந்தவங்களை வாங்கன்னு கூட கேட்காம அப்படியே நிக்கிற..” என்று மகளை அதட்ட, அப்போது தான் தேன்மலர் சுயத்திற்கே வந்தாள்.
அமுதனிடம் இருந்து பார்வையை விலக்கியவள் “வாங்க..” என்று பொதுவாக எல்லோரையும் வரவேற்க, கிருஷ்ணா அவளிடம் வந்து “அக்கா..” என்று அவளின் இடது கையினை பற்றிக் கொண்டாள்.
அவள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்! நேற்று தந்தை உனக்கு தேன்மலர் தான் அண்ணி என்று கூறியதும் அவளை கைகளில் பிடிக்க முடியவில்லை.
அண்ணனை கட்டிக் கொண்டு சந்தோஷத்தில் கூச்சலிட்டாள்.
“மலர் அக்கா தான் எனக்கு அண்ணியா ண்ணா..?! ஐயோ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்று அவளிடம் ஒரே ஆனந்தம் தான்.
இன்றும் அதே ஆனந்தத்துடன் மலரை அக்கா என்று அழைத்தவள் நேற்று தந்தை அண்ணி என்று கூறியதை நினைவில் வைத்து “இல்ல இல்ல.. இனிமேல் உங்களை அக்கான்னு கூப்பிடக் கூடாதாம்.. அண்ணின்னு தான் சொல்லனுமாம். மலர் அண்ணி…” என்று முகம் மலர மகிழ்ச்சியாக அழைக்க, பெரியவர்கள் தாங்கள் பேசுவதற்கு முன்பு மகள் சந்தோஷத்தில் படபடவென தேன்மலரிடம் பேசியது வசுந்தலாவிற்கு அத்தனை கோபத்தை கொடுத்தது.
அனைவர் முன்பும் கடியவும் முடியாத பட்சத்தில் “ரூபி..” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கண்டிப்புடன் அழைக்க, கிருஷ்ணரூபியின் ஆரவாரம் அப்படியே அமைதியாகி விட்டது.