அத்தியாயம் – 21
யோகவள்ளியும் ஏழுமலையும் ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறார்கள் என்று புரிந்து போனது வசுந்தலாவிற்கு.
எனவே, வேறெதைப் பற்றியும் பேசாமல் அவர்களை நல்ல முகத்துடன் உபசரித்தவர் “அமுதனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்.. ரெண்டு பேரும் இப்ப வந்துடுவாங்க மாப்பிள்ளை” என்று ஏழுமலையிடம் கூற,
அவரோ “ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..” என்று மிதப்புடன் அவரைப் பார்த்து தலை அசைத்தார்.
கிருஷ்ணாவின் விசேஷம் முடிந்த மறு நாளே கணவரிடம் தம்பியின் போக்கை பற்றி கூறி விட்டார் யோவள்ளி.
“அவன் பிடி கொடுக்குற மாதிரி தெரியலங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இனி அத்தை மாமாவை தான் முறையா போய் பேச சொல்லணும்” என்று கூறி இருந்தார்.
“அப்படி என்ன பிடி கொடுக்க மாட்டேங்கிறான் உன் தம்பி! நான் வந்து பேசுறேன்! பேசி நிச்சயத்துக்கே நாள் குறிச்சிட்டு வரேன்! நீ நடக்குறதை வேடிக்கை மட்டும் பாரு!” என்று மனைவியிடம் ஜம்பமாக பேசியவர் இன்று நேரிலேயே வந்திருந்தார்.
இன்பசேகரரனும் அமுதனும் ஒன்றாக வீட்டிற்குள் வந்தனர். இன்பசேகரன் மாப்பிள்ளையை பார்த்து “வாங்க மாப்பிள்ளை.. வா வள்ளி..” என்று நல்ல படியாகவே வரவேற்க, அமுதனோ அக்காவை அழுத்தமாக பார்த்துக் கொண்டே “வாக்கா.. வாங்க அத்தான்” என்று குரலிலும் அதே அழுத்தத்தை தேக்கி வரவேற்றான்.
வள்ளிக்கு தம்பியின் பார்வையில் வியர்க்கத் தொடங்கியது. ஆனால், கணவர் இருக்கும் தைரியத்தில் தன்னை சமாளித்துக் கொண்டார்.
ஏழுமலை மிதப்பாக தன் மாமனாரைப் பார்த்து “என் தங்கச்சி நித்யாவுக்கு நிறைய இடத்துல இருந்து வரன் வந்திட்டு இருக்கு தான் மாமா. ஆனா, ரொம்ப வருஷம் முன்னாடியே நாங்க அமுதன் தான் எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு முடிவு பண்ணிட்டோம்! அதனால தான் உங்களை விட இன்னும் பெரிய பெரிய இடத்தில இருந்து வந்த வரனை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டோம்” என்று அலட்டலான குரலில் கூறியவர்,
“ரெண்டு முறை வள்ளி நேர்ல வந்து கேட்டப்ப நீங்க சரியா பதில் சொல்லலையாம். அதான் இன்னைக்கு நானே நேர்ல வந்தேன்” என்றார் அமுதனை அலட்சியமாக பார்த்துக் கொண்டே!
அவனோ அவரை விட அலட்சியமான பார்வையுடன் அமர்ந்திருந்தான்.
தனது மூன்று அக்காக்களுக்கும் நல்ல வசதி படைத்த வீட்டில் தான் திருமணம் செய்து கொடுத்திருந்தார் தந்தை என்று அறிவான்.
ஆனால், அவர்களில் மிக மோசம் என்று சொல்ல வேண்டும் என்றால் அது ஏழுமலை தான்!
அவரின் சொந்தத் தொழிலான ஜவுளிக் கடை வியாபாரத்தில் அடிக்கடி நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றது. (இப்போதும் ஏற்படுகிறது!) அப்போதெல்லாம் ஏழுமலை கொஞ்சம் கூட தயங்காமல் மாமனாரிடம் தான் பெரும் தொகையை வாங்கி நஷ்டத்தை ஈடு செய்திருக்கிறார்.
வள்ளியுடன் திருமணம் ஆன நாளிலிருந்து இன்றைய நாள் வரை வியாபார ரீதியாக எதாவது ஒரு காரணத்தை சொல்லி இன்பசேகரனிடம் பணம் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்!
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இது வரை அவர் வாங்கிய பணத்தினை திருப்பிக் கொடுத்ததே இல்லை! இந்த விஷயம் அமுதனுக்கும் தெரியும்!
தந்தையிடம் ஒரு முறை இதைக் குறித்து தெளிவாகக் கேட்டறிந்ததும் “என்னப்பா இது? எதாவது ஒன்னு ரெண்டு முறைன்னா பரவாயில்ல. வருஷத்துக்கு நாலு தடவை பணம் வாங்குறார்.. அதுவும் எல்லாம் லட்ச கணக்குல! எந்தப் பணத்தையும் திருப்பித் தரதுமில்ல!” என்று கடுமையாக கோபம் கொண்டிருந்தான்.
இன்பசேகரனோ மகனிடம் பொறுமையாக அவர் அக்காவின் கணவர்! வீட்டின் மாப்பிள்ளை என்று ஏதேதோ சொல்லி இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் விடச் சொல்லி விட்டார்.
அமுதனும் தந்தையின் வார்த்தைக்கு மதிப்பளித்து ஏழுமலையிடமோ வள்ளியிடமோ இதைப் பற்றி பேசியதில்லை!
இப்போது அவர் மிதப்பாகவும் அலட்சியமாகவும் பேசுவதை கண்டு தன் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி அமர்ந்திருந்தான் அமுதன்.
இளைய மாப்பிள்ளை பேசியதை கேட்ட இன்பசேகரனுக்கும் சற்று கோபம் வந்தது தான். ஆனால், அதை வெளிக்காட்டாமல் “அமுதன் கொஞ்சம் டைம் கேட்டிருந்தான் மாப்பிள்ளை. அதான் நாங்க தெளிவான பதில் சொல்லல” என்றார் ஒரு தலை அசைப்புடன்.
“என்ன மாமா பெருசா டைம்? வீட்டுக்கு மகாலட்சுமி வர்ற டைம் எல்லாமே நல்ல டைம் தான். அதுவும் என் தங்கச்சி மாதிரி ஒரு மகாலட்சுமி வர்றதுக்கு நீங்க தான் கொடுத்து வச்சிருக்கணும்” என்று மேலும் அலட்டிக் கொண்டார்.
இன்பசேகரன் மகனை ஒரு பார்வை பார்க்க, அவன் ஏழுமலை பேசி முடிக்கட்டும் என அலட்சியமான பார்வையுடன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“நல்ல விஷயத்தை ஏன் தள்ளிப் போடணும்? நாங்க ஜாதகம் எல்லாம் பாத்திட்டோம். பொருத்தம் எல்லாம் ஓரளவு நல்லாவே இருக்கு.
அதனால இப்பவே நிச்சயத்துக்கு நல்ல நாள் குறிச்சிடலாம்” என்று கூற, பெரியவர்கள் இருவருமே சற்று திகைத்துப் போனார்கள்.
வசுந்தலா மகளைப் பார்த்து ‘என்னடி இதெல்லாம்?’ என்று பார்வையால் கேட்க, அவரோ தம்பியை மிடுக்காகப் பார்த்தார்.
‘அன்று என்னிடம் எப்படி பேசினாய்.. இன்று என் கணவர் பேசும் பேச்சிற்கு மறுப்பு சொல்லித் தான் பாரேன் தம்பி!’ என்று அவரின் பார்வையில் அவ்வளவு திமிர்!
இதழ்கள் வளைத்தபடி அக்காவை பார்த்தவன், அவள் கணவனிடம் பார்வையை கொண்டு வந்தான்!
“நீங்க பேசி முடிச்சாச்சுன்னா நான் பேசலாமா அத்தான்..” என்றான் குரலை செருமிக் கொண்டு.
அவன் குரலில் தென்பட்ட அழுத்தத்தில் ஏழுமலை ஒரு நொடி தன் நெற்றியை துடைத்துக் கொண்டார்!
மகன் எதாவது கோபமாக பேசி விடுவானோ என்று இன்பசேகரன் அவன் கையைப் பற்ற, தந்தையின் கையை அழுத்திக் கொடுத்தவன் “பயப்படாதீங்கப்பா..” என்று புன்னகைத்தபடி
ஏழுமலையிடம் திரும்பினான்.
“நீங்க வீடேறி வந்து உங்க வீட்டு பொண்ணை எங்க வீட்டு மருமகளாக்குறதுக்காக இவ்வளவு மெனக்கெடுறது எங்களுக்கு பெருமையா தான் இருக்கு அத்தான்…” என்றவனை ஏழுமலை கடுமையாக முறைக்க, அடுத்து அவன் சொன்ன விஷயத்தில் எல்லோரும் அதிர்ந்து தான் போனார்கள்.
“ஆனா பாருங்க அத்தான்.. எனக்கு உங்க தங்கச்சி மேல விருப்பம் இல்ல. நான் என் அத்தை பொண்ணு தேன்மலரை விரும்புறேன். அவளை தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுறேன். எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என்னோட மலர் கூட மட்டும் தான்!” என்று பொட்டில் அடித்தார் போல் எந்த வித தங்கு தடையின்றி, தடுமாற்றமின்றி, தயக்கமின்றி பயமின்றி தன் மனதை அழுத்தம் திருத்தமாக கூறி இருந்தான்.
அவன் சொன்ன விஷயத்தில் இன்பசேரனுக்கு பேரதிர்ச்சி என்றால், வசுந்தலாவிற்கு சந்தோஷ அதிர்ச்சி!
அன்று மகனையும் தேன்மலரையும் ஒன்றாக கண்டதில் இருந்து அவர்களின் ஜோடிப் பொருத்தம் கண்களுக்குள்ளேயே நிற்கிறது.
மனதிற்குள் தேன்மலரே தனக்கு மருமகளாக வந்தால் நன்றாக இருக்கும் என்னும் ஆசையும் முளைத்தது. ஆனால், கணவரையும் மகனையும் எண்ணி பயந்து தன் ஆசையை வெளியே சொல்லாமல் வாயை மூடிக் கொண்டார்.
தற்போது மகனே எனக்கு மலர் மேல் மட்டும் தான் விருப்பம் என்று சொன்னதும் அவருக்கு சந்தோஷம் வராமல் இருந்தால் தான் ஆச்சர்யம்!
ஏழுமலை கடும் கோபத்தில் சிவந்த முகத்துடன் “என்ன மாமா? உங்க மகன் என்னமோ கண்டதையும் உளர்றான்.. நீங்களும் அதை கேட்டுட்டு செலை மாதிரி உட்கார்ந்து இருக்கீங்க” என்று குரலை உயர்த்தி இருந்தார்.
மாப்பிள்ளையின் கடுமையான குரலில் இன்பசேகரன் திகைப்பில் இருந்து விலகி மகனைப் பார்த்தார்.
அக்காவின் நாத்தனாரை வேண்டாம் என்று சொன்ன போதே மகன் மனதில் வேறு எதோ பெண் இடம் பெற்று இருக்கிறாள் என்ற யூகம் இருந்தது அவருக்கு.
ஆனால், அது தங்கை மகளாக இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
தந்தையின் அதிர்வைக் கண்டவன் “அப்பா.. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தான் உங்க கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். ஆனா, அத்தானும் அக்காவும் இப்படி ஒரு முடிவோட நம்ம வீட்டுக்கு வந்திருக்கப்ப இதுக்கு மேல மறைக்க முடியாதுன்னு தோணுச்சு. அதான் சொல்லிட்டேன்!” என்றான் நிதானமாக.
வள்ளியோ தம்பியிடம் ஆவேசமாக “நினைச்சேன்டா.. இப்படி எதாவது சொல்லுவேன்னு நினைச்சேன்! அன்னைக்கு நான் வீட்டுக்கு வந்து அவளை கண்டபடி பேசினதுக்காக அவ பின்னாடியே நீ போனப்பவே எனக்கு உன் போக்கு புரிஞ்சு போச்சு! அப்புறம் ரூபி விசேஷ வீட்லயும் நீ….. யே நேர்ல போய் அவளை கூட்டிட்டு ஒன்னா ஜோடி போட்டு உள்ள வந்த!! எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்த்தா ரொம்ப நாளாவே அவ உன்னை மயக்கி வச்சிருப்பா போலவே! நல்ல கைகாரி தான்! அதான் வசதியான மாமன் குடும்பத்திலேயே வாக்கப்பட்டு வந்து சொத்தை எல்லாம் சுருட்ட பிளான் பண்ணி…”
“வாயை மூடுக்கா!!!”
பேசிக் கொண்டே வந்தவர் அமுதனின் ஆவேசத்தில் அரண்டு வாயை மூடிக் கொண்டார்.
“இன்னும் ஒரு வார்த்தை என் மலரைப் பத்தி நீ தப்பா பேசினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்!” என்றான் ஆவேசம் குறையாமல்.
ஏழுமலை கோபமாக எதோ கூற வர, “உங்களுக்கும் தான் அத்தான்! தேவை இல்லாம எதாவது பேசினா அப்புறம் உங்க கொடுக்கல் வாங்கல் விஷயம் பத்தி நான் கணக்கு பாக்க வேண்டியது வரும்!” என்று கூற, அவமானத்தில் கருத்து விட்டது அவரின் முகம்.
இன்பசேகரன் “அமுதா..” என்று அதிருப்தியுடன் அழைக்க,
“இல்லப்பா.. என்னால இவுங்க பேசுறத எல்லாம் கேட்டுட்டு சும்மா இருக்க முடியாது. அதான் இவுங்க வீட்டுப் பொண்ணை கட்டிக்க விருப்பம் இல்லேன்னு சொல்லிட்டேன் தான. அப்புறம் ஏன் நான் விரும்புற பொண்ணை பத்தி தப்பா பேசணும்! அதுக்கு அவுங்களுக்கு உரிமை இல்லப்பா” என்று விட்டான் தீர்க்கமாக.
“பாத்தியாடி.. இப்பவே உன் தம்பி அவ மேல இருக்க மயக்கத்துல நமக்கு இந்த வீட்ல உரிமை இல்லேன்னு பேசுறான். நாளை பின்ன அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தான்னு வை..” என்றவர் மேலும் என்ன பேசி இருப்பாரோ..
அமுதன் பார்த்த பார்வையில் முகம் சிவக்க “வாடி போகலாம்.. இனி இந்த வீட்டுப் படிய நான் மிதிக்க மாட்டேன்! உன் தம்பியை விட்டா என் தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளையா கிடைக்காது..” என்று கத்தி விட்டு எழுந்து சென்று விட்டார்.
வள்ளியும் தம்பியின் மேல் இருந்த கோபத்தை முழுமையாக அவனிடம் காட்ட முடியாததில் தாய் தந்தையிடம் “அவனை பொறுப்பான பிள்ளைன்னு தலைல தூக்கி வச்சிட்டு கொண்டாடுனீங்க தான. இப்ப பாருங்க.. போயும் போயும் உங்க தங்கச்சி மகளை விரும்புறேன்னு வந்து நிக்குறான்! விளங்கின மாதிரி தான்!” என்று குதித்தவர் அமுதன் கோபமாக முறைத்ததும் கணவரின் பின்னே குடுகுடுவென ஓடி விட்டார்.
அவர்கள் சென்றதும் வீடே புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்தது. கூடவே, இறுக்கமும் நிறைந்திருந்தது.
அமுதன் பெற்றவர்களைப் பார்க்க, வசுந்தலா கணவருக்கு பயந்து வாயைத் திறக்காமல் நின்றார். ஆனால், மனதிற்குள் சந்தோஷம் பரவி இருந்தது.
கிருஷ்ணரூபியின் விசேஷத்தின் போது வள்ளி நாத்தானாரைப் பற்றி பேச்சு எழுந்தது.
அப்போது சிலர் “ஏழுமலை சொத்து முழுக்க தன் கிட்ட வந்து சேரணும்னு முடிவு பண்ணிட்டான். அதுக்கு ஒரே வழி.. இந்த வீட்டுக்கு ஒத்த ஆண் வாரிசா இருக்க அமுதனை அவன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை ஆக்குறது தான்! அதனால தான் புருஷனும் பொண்டாட்டியும் அமுதனை வளைச்சு போடுறதுல குறியா இருக்காங்க” என்று கூறி இருந்தனர்.
சொத்துக்காக தன் மகனை மாப்பிள்ளை ஆக்க நினைக்கும் அவர்களின் எண்ணத்தை அறிந்து வசுந்தலாவிற்கு நெஞ்சம் கொதித்தது. அப்போதே முடிவு செய்து விட்டார்.. எக்காரணம் கொண்டும் அவர்கள் வீட்டுப் பெண்ணை தனக்கு மருமகளாக்கி விடக் கூடாது என்று!
இப்போது மகனே அவர்களிடம் நெற்றி அடியாக பேசி, மலரை விரும்புகிறேன் என்று சொன்னது மட்டுமல்லாமல் சந்தோஷம் அளிக்கும் படியான ஒரு விஷயத்தை சொல்லி இருக்க, அவர் முகம் தெளிவுடன் காட்சி அளித்தது.
அமுதன் தந்தையின் அருகே அமர, மகனை நிமிர்ந்து பார்த்தவர் “உன் முடிவு மாற வாய்ப்பில்லையா அமுதா?” என்று கேட்க, பெரு மூச்செறிந்தான் அமுதன்.
“உங்களுக்கு இதுல இஷ்டம் இருக்காதுன்னு எனக்குத் தெரியும்ப்பா. அதுக்காக என்னை மன்னிச்சிடுங்க. ஆனா, நான் தப்பான பொண்ணு கிட்ட என் மனசை பறி கொடுக்கலப்பா. உங்க தங்கச்சி பொண்ணு சத்தியமா உங்க தங்கச்சி மாதிரி கிடையாது! மலர் தங்கம்ப்பா! அதை தெரிஞ்சுகிட்ட பின்னாடி தான் என் மனசும் மாற ஆரம்பிச்சது” என்றவன்,
சிறிது நொடிகள் மௌனத்திற்கு பின்பு “மலரைத் தவிர என்னால வேற யாரையும் என்னோட மனைவியா நினைக்க முடியலப்பா! முடியவும் முடியாது!” என்றான் உறுதியாக.
இன்பசேகரன் மகனையே பார்க்க, எங்கே தந்தை தங்கை மீதிருக்கும் கோபத்தில் மலரை மறுத்து விடுவாரோ என்று அவரின் கைகளை பற்றிக் கொண்டவன், “ப்ளீஸ்ப்பா. எனக்கு மலரை தவிர வேற யாரையும் என்னோட லைஃப் பார்ட்னரா யோசிக்கக் கூட முடியல” என்றான் நெகிழ்ந்த குரலில்.
அவன் வார்த்தைகளில் அவனின் ஆழமான நேசம் புரிய, இன்பசேகரன் சற்று நேரம் மௌனம் காத்தார்.
பின்பு மகனின் தோளில் தட்டிக் கொடுத்தவர் “எனக்கு என் தங்கச்சி குடும்பத்து மேல நம்பிக்கை இல்ல அமுதா. ஆனா, என் மகன் மேல அபார நம்பிக்கை இருக்கு. உன் தேர்வு என்னைக்கும் சோடை போகாது! தேன்மலர் தான் நம்ம வீட்டு மருமக” என்க, அமுதகீதன் ஆனந்தத் திகைப்புடன் தந்தையைப் பார்த்தான்.
“அப்பா..” என்று திகைப்பும் ஆச்சர்யமுமாய் அழைக்க, “நான் நிஜமா தான் சொல்றேன் அமுதா.. இது வரைக்கும் நீ விருப்பப்பட்டு எதையும் என் கிட்ட கேட்டதா எனக்குத் தெரியல. ரூபி பிறந்ததுல இருந்து நீ ரொம்ப பொறுப்பான பிள்ளையா இருந்திருக்க. இன்னைக்கு வரைக்கும் அந்த குணம் உன் கிட்ட மாறி நான் பாத்தது கிடையாது. அப்படி இருக்கப்ப நீயே என் தங்கச்சி மக மேல விருப்பப்பட்டிருக்கேன்னா தேன்மலர் நிச்சயம் அதுக்குத் தகுதியான பொண்ணா தான் இருக்கணும்!” என்றார் நிதானமாக யோசித்து.
அமுதனுக்கு வார்த்தைகளே வரவில்லை. தந்தையின் நம்பிக்கையில் நெகிழ்ந்து போய் அமர்ந்திருந்தான்.
மனைவியிடம் திரும்பியவர் “நீ என்ன சொல்ற வசு? உனக்கு சம்மதமா?” என்று கேட்க,
வசுந்தலாவோ குரலில் துள்ளலுடன் “எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்ங்க.. சொல்லப் போனா எனக்கு தேனை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு வரணும்னு ரொம்ப ஆசை.. ஆனா அப்பாவும் புள்ளையும் கோபப் படுவீங்களோன்னு நான் வாயே திறக்காம இருந்தேன்” என்க, அமுதகீதன் தாயையும் திகைப்புடன் பார்த்தான்.
இன்பசேகரன் மனைவியின் எண்ணத்தை அறிந்து கொண்டு “அப்ப உனக்கும் என் தங்கச்சி மக மேல ஆசை இருந்திருக்கு..” என்று போலியான அதட்டலுடன் கேட்க,
“அப்படி இல்லேங்க.. தேனு உண்மையாவே ரொம்ப நல்ல பொண்ணு!” என்றார் உள்ளே சென்று விட்ட குரலில்.
மனைவி முகம் சுருங்கியதும் “நான் சும்மா தான் சொன்னேன் வசு.. ஏன் டல்லாகுற!” என்றவர்,
“நாளைக்கே போய் என் தங்கச்சி கிட்ட பேசி உறுதி படுத்திட்டு வந்திடலாம்” என்றதும் வசுந்தலாவின் முகம் மலர்ந்து போனது!
தந்தையின் முடிவில் அமுதனுக்கும் மகிழ்ச்சி தான் என்றாலும் மலரை எண்ணி மனம் படபடத்தது! என்ன சொல்லப் போகிறாளோ என!
இங்கே இவர்கள் மலரை பெண் பார்த்து உறுதி செய்யும் வேலைகளில் ஈடுபடத் தொடங்க, அங்கே ஞானமங்கையோ தலையில் இடி விழுந்தது போல் அமர்ந்திருந்தார்.
அதற்குக் காரணம் ரஞ்சிதன் தாயாரே!
சற்று நேரத்திற்கு முன்பு தான் ஞானமங்கைக்கு அழைத்திருந்தார் கமலம்.
ரஞ்சிதனிற்கு பெண் பார்த்திருக்கும் விஷயத்தைப் பற்றி சொல்லி இன்னும் பத்து தினங்களில் சேலத்தில் உள்ள புகழ் பெற்ற மஹாலில் நிச்சய விழா வைத்திருப்பதை பற்றியும் கூறியவர்,
“எங்க வீட்ல நடக்கப் போற முதல் மங்களகரமான விஷயத்தை உனக்கு தான் நான் முதல்ல சொல்றேன் மங்கை! கட்டாயம் குடும்பத்தோட வந்திடனும்” என்றார் நயமான குரலில்!
மங்கைக்கு அவர் விஷயத்தை சொல்ல ஆரம்பித்ததில் இருந்து தலையில் பெரும் இடி விழுந்தது போலானது!
அவர் சொல்லச் சொல்ல நெஞ்சில் கை வைத்தவர் அப்படியே சுவரில் சரிந்து கீழே தொப்பென்று அமர்ந்து விட, தன் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கவி மங்கை அதிர்ந்து அமர்ந்ததைப் பார்த்து என்னமோ ஏதோ என்று பதறி வெளியே ஓடி வந்தாள்.
மங்கையின் நிலை உணர்ந்த கமலமோ மேலும் அவரை சிதைக்கும் நோக்கத்துடன் “நம்ம ரஞ்சித்கு பொண்ணு பாத்ததுல உனக்கு தான் ரொம்ப சந்தோஷம்னு எனக்குத் தெரியும் மங்கை! அதனால தான் பதில் சொல்ல முடியாம தெகைச்சு போய் இருக்கன்னு நினைக்கிறேன்” என்றவர்,
“கட்டாயம் நிச்சயத்துக்கு வந்திடு மங்கை. அன்னைக்கு மட்டும் உன் மகனை குடிக்காம இருக்க சொல்லு! ஏன்னா சம்மந்தம் பண்ணிருக்க இடம் ரொம்ப பெரிய இடம்.. அவுங்க முன்னாடி உன் பிள்ளை குடிச்சிட்டு வந்து நின்னா ஏற்கனவே மலை ஏறிப் போயிருக்க உன் மானத்தோட சேர்த்து எங்க குடும்ப மானமும் போய்டும்” என்றார் குரூரமான புத்தியுடன்!
மங்கை கண்ணீர் பெருக பதில் கூற முடியாமல் சேலை முந்தானையை எடுத்து வாயில் வைத்துக் கொள்ள, கவி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவரிடம் இருந்து அலைபேசியை வாங்கி ஸ்பீக்கரில் போட்டாள்.
“நீ வேணும்னா ஒன்னு பண்ணு மங்க.. பேசாம உன் மக மருமக பேரனை மட்டும் கூட்டிட்டு வா. உன் மகனை கூட்டிட்டு வராம இருக்கது தான் நம்ம எல்லாருக்கும் நல்லது!” என்றார் நக்கல் வடியும் குரலில்!
மங்கைக்கு அண்ணியின் நக்கலில் மேலும் கண்ணீர் பெருகியது.
“என்ன மங்க? பதிலே பேச மாட்டேங்குற?” என்றவர்,
“கண்டிப்பா எல்லாரும் வந்திடணும் சரியா” என்று சொல்லி விட்டு தானே அழைப்பை துண்டித்து விட்டார்.
அழைப்பு துண்டிக்கப் பட்டதும் மங்கை நெஞ்சில் அடித்துக் கொண்டு “ஐயோ.. ரஞ்சித் மாப்பிள்ளையை தானே நான் மலை போல நம்பி இருந்தேன். இன்னும் பத்து நாள்ல நிச்சயத்தையே வைக்க போறாங்களாமே.. இப்ப என்ன பண்ணுவேன்..” என்று ஒப்பாரி வைத்தவர்,
“அடியே கவி.. நம்ம தேனு வாழ்க்கை இனி என்ன ஆகுமோ.. போச்சு… அவ வாழ்க்கையே போச்சு” என்று புலம்பித் தள்ள ஆரம்பித்து விட்டார்.
அவரின் புலம்பல் மறு நாள் காலை வரை தொடர்ந்தது. எந்த வேலையும் செய்யாமல் உணவையும் உண்ணாமல் ஒரு மூலையில் அமர்ந்து அவர் பாட்டிற்கு கண்ணீர் விட்டுப் புலம்பிக் கொண்டிருந்தார்.
கவியும் தேன்மலரும் இதை எல்லாம் எதிர்பார்த்தே இருந்ததால் அவர்கள் தங்களின் வேலையை கவனிக்கத் துவங்கி இருந்தனர்.
“தேனு.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. இன்னைக்கு நீ கோகுலனை கொண்டு போய் ஸ்கூல்ல விட்டர்றியா” என்று கவி கேட்க, “சரி அண்ணி” என்றபடி கோகுலனை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள் தேன்மலர்.
எல்லாவற்றையும் அசைவின்றி கண்ணீர் காய்ந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்த மங்கை சட்டென்று கோபம் வந்தவராக மகளை மறித்து நின்றார்.
“நில்லுடி.. உன் வாழ்க்கையை நினைச்சு இங்க நான் ஒருத்தி அழுது வடிஞ்சு பேசுறதுக்கு கூட திராணி இல்லாம பைத்தியக்காரி மாதிரி உக்காந்து இருக்கேன்! நீ என்னடான்னா உன் பாட்டுக்கு வேலைக்கு கிளம்பிட்ட” என்றார் கோப மூச்சுக்கள் வாங்க.
அன்னையை ஆயாசத்துடன் பார்த்த தேன்மலர் “அம்மா.. உனக்கு தான் இது ஷாக்.. ஆனா, எனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியும். எப்பவோ ரஞ்சி சொல்லிட்டான்” என்க, மங்கை அதிர்வுடன் நெஞ்சில் கை வைத்து விட்டார்.
“என்னடி சொல்ற! உனக்கு முன்னாடியே தெரியுமா?”
“ஹ்ம்ம்.. தெரியும். உன் கிட்ட சொன்னா.. இதோ இந்த மாதிரி அப்பவே அழுது புலம்ப ஆரம்பிச்சிடுவன்னு தான் சொல்லல” என்க, மங்கைக்கு அதிர்வு நீங்கி ஆவேசம் வந்தது.
“அப்போ.. இவ்வளவு பெரிய விஷயம் தெரிஞ்சும் நீ வாயை மூடிட்டு இருந்திருக்க! ஏன்டி ஏன்? உனக்கு நிஜமாவே ரஞ்சிதன் மாப்பிள்ளை மேல விருப்பமே இல்லையா?” என்று கோபத்துடன் கத்த, தேன்மலருக்கும் இப்போது கோபம் வந்தது.
“நீ இன்னும் இந்த எண்ணத்தை விடலயாம்மா.. எத்தனை தடவை சொல்றது உனக்கு..ரஞ்சி மேல எனக்கு விருப்பம் இல்ல இல்ல இல்ல. நாங்க எப்பவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். அவ்வளவு தான்”
“இல்லடி.. நான் விட மாட்டேன். ஃப்ரெண்ட்ஸ் ஆவே இருந்துட்டு போங்க. நான் உங்களை புருஷன் பொண்டாட்டியா மாத்திக் காட்டுறேன். கமலம் அண்ணி கை கால்ல விழுந்தாவது அவுங்க பாத்திருக்க சம்பந்தத்தை வேண்டாம்னு சொல்ல சொல்லிட்டு உன்னை ரஞ்சித் மாப்பிள்ளைக்கு கட்டி வைக்கிறேன்” என்று சபதம் போல் கூற, தாயின் பிடிவாதத்தால் தேன்மலர் அதிர்ந்து விட்டாள்.