மலர் பாதம் பணிந்து..2

அத்தியாயம் – 2

மீண்டும் மீண்டும் ரஞ்சிதனிற்கு அழைத்தவனின் பொறுமை எல்லை கடந்தது.

“இடியட்! என்னை இங்க சுத்த விட்டுட்டு இவன் பாட்டுக்கு ஓமக் குண்டத்துல உக்காந்துட்டான் போல!” என்று கடுப்புடன் சொல்லிக் கொண்டவன் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என எப்படி கண்டு பிடிப்பது என்று மண்டை காய்ந்தவன் கடைசி முறையாக அந்த ‘இடியட்’ ரஞ்சிதனுக்கு அழைக்கலாம் என்று மீண்டும் அழைப்பு விடுக்க, இம்முறை அழைப்பை ஏற்று விட்டான் ரஞ்சிதன்.

“சொல்லு அமுதன். அவுங்களை பாத்திட்டயா? கிளம்பியாச்சா” என்றவன்,

“சாரிடா. நீ இத்தன தடவ கூப்பிட்டிருக்க. என்னால அட்டன் பண்ண முடியல” என்று கூற,

“அவுங்க எங்க நிக்குறாங்க!” என்று அமுதகீதன் பல்லைக் கடித்துக்கொண்டு கேட்க, அவன் குரலில் தெரிந்த இறுக்கத்தில்,

“என்னாச்சு அமுதன்?” என்றான் ரஞ்சிதன் தடுமாறியபடி.

“அரை மணி நேரத்துக்கும் மேல தேடிட்டு இருக்கேன். அவுங்களை காணோம்” என்றான் எரிச்சல் ஓங்கிய குரலில்.

“என்னடா சொல்ற? இவ்வளவு நேரமா தேடிட்டு இருக்கியா?” என்றவனுக்கு அப்போது தான் நன்றாக சொதப்பி விட்டோம் என்று புரிந்து போனது.

“அமுதன்.. அவுங்க ஓல்ட் பஸ் ஸ்டாப்க்கு தான போயிருக்க?” என்று அமுதனிடம் சந்தேகமாக கேட்க,

“இடியட்! நீ தான எம். ஜி. ஆர் பஸ் ஸ்டாப்னு சொன்ன” என்றான் அமுதன் எரிச்சல் பெருக்கெடுத்த குரலில்.

“ஓ மை காட்.. அமுதன்.. அவுங்க ஓல்ட் பஸ் ஸ்டாப் வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்று சொன்னது தான் தாமதம்!

அவனை வறுத்து எடுத்து விட்டான் அமுதகீதன்!

“எந்த பஸ் ஸ்டாப் வந்திருக்காங்கன்னு கூட சரியா கேட்டு சொல்ல முடியாதா உன்னால? என்னை என்னன்னு நினைச்ச நீ? ஹான்..வேற வேலை வெட்டி இல்லாமையா இங்க அர மணி நேரமா அலைஞ்சிட்டு இருக்கேன்!” என்று காட்டு கத்தல் கத்த,

போனை காதிலிருந்து தூரப் படுத்திய ரஞ்சிதன் “செத்தடா மவனே! வச்சு செய்யப் போறான்” என்று உள்ளுக்குள் கதி கலங்கினாலும் வெளியே,

“சாரி அமுதன். என் தப்பு தான்” என்றவன்,

“நீ தேனுக்கு கால் பண்ணி கேட்டிருக்கலாமே!” என்று வாய் சும்மா இருக்கமால் ரஞ்சிதன் சொல்ல,

“உன்னை….” என்று பல்லைக் கடித்த அமுதகீதன்,

“நீ ஒழுங்கா கேட்டு சொல்லாம என்னை போன் பண்ணி கேட்க சொல்வியா? என் கிட்ட அவ நம்பர் எல்லாம் கிடையாது. ஏன்.. அவுங்க ஃபேமிலில யாரோட நம்பருமே என் கிட்ட கிடையாது!” என்றான் பற்கள் நெறிபட.

‘அடப் பாவி.. யோகராசு..’ என்று உள்ளுக்குள் எண்ணியவன்,

“நம்ம ஃபேமிலி வாட்ஸ் அப் குரூப்ல எல்லாரோட நம்பரும் இருக்குமே அமுதன்” என்று வாய் சும்மா இருக்காமல் மீண்டும் உளறி விட,

“ரஞ்சித்த்த்….” என்ற அமுதனுக்கு பொறுமை இம்மியும் இல்லை.

“ஓகே ஓகே அமுதன். டென்ஷன் ஆகாத.

நீ பழைய பஸ் ஸ்டாப் போ. நான் தேனு நம்பரை உனக்கு வாட்ஸ் அப் பண்ணிவிடுறேன்” என்று சொல்லி விட்டு அவன் பதிலிற்கு கூட காத்திராமல் அழைப்பை துண்டித்து விட்டான்.

அழைப்பில் இருந்தால் யார் அவனின் வசவுகளை வாங்குவது?

கோபத்துடன் தலையை கோதிக் கொண்ட அமுதகீதன் அவனின் ‘மோரிஸ் கேரேஜ்’ காரினை கிளப்பிக் கொண்டு பழைய பேருந்து நிலையம் நோக்கி விரைந்தான்!

அமுதகீதன்!

இன்பசேகரன் மற்றும் வசுந்தலாவிற்கு பிறந்த ஒரே மகன்!

ஒரே மகன் என்றால், அவன் மட்டும் தனியாள் அல்ல. அவனுக்கு முன்னால் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் பின்னால் பிறந்த ஒரு சகோதரி என அவர்கள் மொத்தம் ஐந்து பேர்!

அதுவும் மூத்த சகோதரிகள் மூவரும் ‘டிரிப்லெட்ஸ்!’ (Triplets)

யோகராணி!

யோகலக்ஷ்மி!

யோகவள்ளி!

முப்பேத்திகள் பிறந்த நேரம் தான் தங்களது குடும்பத் தொழிலான கடலை மிட்டாய் வியாபாரம் ஓஹோவென்று பெருகி வளர்ந்திருக்கிறது என்று நம்பினார் அவ்வீட்டின் தலைவர் கைலாசநாதன்.

அவர்கள் பிறக்கும் சில மாதங்களுக்கு முன்பு தான், சொந்தமாக இருபது வகையிலான கடலை மிட்டாய்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றினை மகன்களின் உதவியுடன் சேலத்தில் நிறுவி இருந்தார்.

உற்பத்திக்கு ஏற்ற வருமானமும் நன்றாக வரவே, லாபத்திற்கு எக்குறைவும் இல்லை.

எனவே, மூத்த பெண் வாரிசுகள் மூவரும் யோகம் அளிக்கும் மகாலக்ஷ்மிகள் என்று ‘யோக’வில் ஆரம்பித்த பெயர்களையே வைத்து விட்டார் கைலாசநாதன்.

அவர்களுக்கடுத்து ஒன்பது ஆண்டுகள் கழித்து பிறந்தவன் அமுதகீதன்! அவன் பிறந்த நேரமும் ஏகப் பட்ட சிக்கலாக இருந்த சொத்து விவகாரமும் சீராகி கைலாசநாதன் கைக்கு வந்திருக்க,

“எம்பேத்திங்க மட்டுமில்ல. பேரனும் யோகக்காரன் தான்! அதனால அவனுக்கும் யோகராசுன்னு பேர் வச்சிடுவோம்” என்று கூறியதற்கு வசுந்தலா ஒப்புக்கொள்ளவே இல்லை.

“போதும் மாமா. அதான் பொண்ணுங்க மூணு பேத்துக்கும் உங்க இஷ்டப்படி பேரு வச்சிட்டீங்க தான. என் பையனுக்கு நான் தான் பேரு வைப்பேன். உங்க யோகத்தை என் பையன் பேருல திணிக்காதீங்க” என்று அடமாக கூறியவர்,

அமுதமான உணர்வை கொடுக்கும் மகனுக்கு “அமுதகீதன்” என்று அழகுத் தமிழில் பெயர் சூட்டியிருந்தார்.

அவனுக்கடுத்து பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து பிறந்த பெண் பிள்ளை. அமுதகீதனின் செல்லத் தங்கை. கிருஷ்ணரூபி!

இளையவள் பிறப்பதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே கைலாசநாதன் கைலாசத்திற்கே சென்று சேர்ந்திருந்தார். எனவே, தன் குட்டித் தங்கைக்கு கிருஷ்ணரூபி என ஆசையும் பாசமுமாய் பெயர் சூட்டியது அமுதகீதனே தான்! இது தான் அவனின் குடும்ப வரலாறு!

பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தவன் அவர்கள் எங்கேவெனத் தேட, அதே சமயம் ரஞ்சிதனிடம் அதீத கோபத்தோடு கத்திக் கொண்டிருந்தாள் தேன்மலர்.

“உனக்கு அறிவில்லையாடா. பழைய பஸ் ஸ்டாப் வந்துட்டோம்னு தான சொன்னேன். ஏன்டா இப்படி ஏழரையை கூட்டுற? உன்னால வர முடியலேன்னா அதோட நிறுத்தி இருக்கலாம். அதை விட்டுட்டு அவரை வேற கிளம்பி வர சொல்லி.. அதுவும் அந்த பஸ் ஸ்டாப்க்கு..” என்று கடுப்புடன் பல்லைக் கடித்தவள் அவனை முடிந்த அளவிற்கு திட்டித் தீர்த்து விட்டாள்.

ரஞ்சிதனோ அவள் திட்டுக்களை அசராமல் கேட்டுக் கொண்டான். மனதிற்குள் ‘ம்ம்.. அந்த யோகராசு பேச்சையே அசால்ட்டா கேட்டுட்டோம். நம்ம தேனு கொட்டுறதை தாங்கிக்க மாட்டோமா’ என்று தான் எண்ணிக் கொண்டவன்,

“இங்க சடங்கு சம்பிரதாயம் செய்யுற டென்ஷன்ல கொஞ்சம் சொதப்பிட்டேன் தேனு. நீ ஒன்னும் ஃபீல் பண்ணாத. அமுதன் கிட்ட உன் நம்பர் கொடுத்திருக்கேன். அவன் கண்டிப்பா கால் பண்ணுவான்” என்றதும்,

“எருமை! ஏன்டா என் நம்பர அவர் கிட்ட கொடுத்த” என்று தேன்மலர் மேலும் பல்லைக் கடிக்க,

அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளமால், “அவன் உனக்கு கால் பண்ணியே தீருவான். ஏன்னா நீ எங்க இருக்கேன்னு அவனுக்கு தெரியணும் தானே. சோ அவன் போன் பண்ணுவான். நீயும் பேசு. ஒரு வழியா வீடு வந்து சேரு” என்றவன் அன்னை அழைக்கும் சத்தம் கேட்கவே,

“இதுக்கு மேல நான் தனியா ரூமுக்கு வந்து பேசினா உன் சின்ன அத்த என்னைய கடிச்சு குதறிடுவாங்க தேனடை. நான் கிளம்புறேன்” என அழைப்பை துண்டித்து விட்டு போயே போய் இருந்தான்.

தேன்மலர் எரிச்சல் படர்ந்த முகத்துடன் காதிலிருந்து அலைபேசியை அகற்ற, அதை மீண்டும் காதிற்கு கொடுக்கும் படி அவளுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

அழைப்பது அவனாகத் தான் இருக்க வேண்டும் என்ற யூகத்துடனே தான் அழைப்பை ஏற்றாள் தேன்மலர்.

ஏற்றதும் அவள் அமைதியாகவே இருக்க, அவனும் அமைதியாகத் தான் இருந்தான்.

அந்தப் பக்கம் பேச்சு வராததிலேயே புரிந்து போனது அவன் தான் அழைத்திருப்பது என.

உனக்கு நான் சளைத்தவள் இல்லை என்று காட்டும் விதமாக அவள் மௌனத்தை தொடர, அந்தப் பக்கம் ஒரு நீண்ட பெரு மூச்சிற்கு பின்னர்,

“ஹலோ.. நான் அமுதகீதன் பேசுறேன்” என்றான் அழுத்தமாக.

“ம்ம். சொல்லுங்க” என்றாள் அவன் கொடுத்த அழுத்தத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்து!

அமுதனுக்கோ கடுப்பானது. இவளை அழைத்துச் செல்லவென அவன் வந்திருந்தால், இவளோ ஒன்றும் தெரியாதவள் போல் ம்ம் சொல்லுங்க என்று சாதாரணமாக சொல்கிறாளே..

எதற்காக அழைத்தோம் என்று இவளுக்கு தெரியாதமா? என்று கடுப்பானவன்,

“போன் அட்டன் பண்ணா ஹலோ சொல்லணும்னு தெரியாதா உனக்கு?” என்று அவன் அதட்டலாகக் கேட்க,

“அதே மாதிரி போன் போட்டா ஹலோன்னு சொல்லி பேசத் தெரியாதா உங்களுக்கு? அமைதியாவே இருக்கீங்க? போன் போட்டதே நீங்க தான” என்றாள் தேன்மலரும் அசராமல்!

அவளின் பதில் பேச்சில் பற்களை நரநரவென கடித்தவன், “எங்க இருக்கீங்க?” என்று மட்டும் வினவ,

“பஸ் ஸ்டாப் வெளிய இருக்க சுடர் டீ கடை கிட்ட நிக்குறோம்” என்றாள் அவளும் தகவலாய்.

“வரேன். வை” என்றவன் அழைப்பை துண்டிக்க,

“என்னாச்சு தேனு. அந்தத் தம்பி வந்துட்டாரா? நீ ஏன் அந்தத் தம்பி கிட்ட போய் இவ்வளவு கோபமா பேசிட்டு இருக்க?” என்று கவிரத்னா கவலையாக வினவ,

“இல்லண்ணி. கால் அட்டன் பண்ணி ஹலோ சொல்லத் தெரியாதான்னு கேட்டா..! கோபம் வர தானே செய்யும்” என்றவளிடம்,

“அதுக்கு நீ ஏன் இப்படி கோபமா பதில் பேசுற. அந்தத் தம்பி எதாவது நினைச்சுக்க போகுது”

“அதுக்காக எல்லாம் சாதாரணமா பேச முடியாது அண்ணி. நினைச்சா நினைச்சிட்டு போகட்டும். நமக்கு என்ன?” என்று விட்டாள் கண்டு கொள்ளாத குரலில்.

கவிரத்னாவும் அதற்கு மேல் எதுவும் பேசமால் பெரு மூச்சுடன் அவளின் தோளில் உறங்கிக் கொண்டிருந்த மகனை தன் தோளுக்கு மாற்றிக் கொள்ள,

“இருக்கட்டுமே அண்ணி” என்றவளிடம்,

“எவ்வளவு நேரமா நீயே தூக்கி வச்சிட்டு இருப்ப? கை வலி எடுத்திருக்கும்” என்ற கவி,

“வீட்டுக்கு போற வரைக்கும் நானே வச்சிருக்கேன்” என்று விட, தேன்மலரும் சரி என்று விட்டு விட்டாள்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர்களை உரசுவது போல வந்து நின்றது அமுதகீதனின் மோரிஸ் கேரேஜ்!

சரக்கென்று ப்ரேக்கிட்டு அவன் வந்து காரினை நிறுத்தியதும் தேன்மலர் திடுக்கிட்டு ஒரு நிமிடம் நெஞ்சில் கை வைத்து விட்டாள்.

கவியும் பயந்து போய் காரினை பார்க்க, உள்ளே இருந்த அமுதனோ அவர்கள் பக்கமிருந்து ஜன்னலை கீழிறக்கி அவர்களை ஏகத்திற்கும் முறைத்தபடி ஹாரனை அழுத்த, தேன்மலர் அவனை நன்றாகவே முறைத்தாள்.

“என்ன பார்வை? உள்ள ஏறுங்க!” என்று அதட்டலாக அவன் கூற,

மறுபேச்சு பேசாமல் பெண்கள் இருவரும் பின் இருக்கையில் ஏற எத்தனிக்க, தேன்மலர் பின்னே செல்வதை கண்டவன், “நில்லு. நீ முன்னாடி வந்து உக்காரு” என்று அதிகாரத் தோரணையில் கூற, கடுப்பானது அவளுக்கு.

“உன்னை தான். முன்னால வந்து உக்கார்” என்றான் மீண்டும் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து!

கவியோ வீண் பிரச்சனை வேண்டாம் என்று எண்ணி தேன்மலரிடம் கண்ணை காண்பித்து, “அதான் தம்பி சொல்றாரில்ல தேனு. போ. போய் முன்னாடி உக்காரு” என்றவள்,

குழந்தையுடன் பின்னே அமர்ந்து கதவையும் சாற்றி விட, தேன்மலர் பல்லைக் கடித்துக்கொண்டு முன் இருக்கையில் ஏறிக் கொண்டாள்.

அவள் ஏறி அமர்ந்த மறு நொடி, “உனக்கு அறிவிருக்கா இல்லையா? எங்க வரோம்னு கூடவா ரஞ்சித் கிட்ட ஒழுங்கா சொல்லத் தெரியாது?” என்று இருந்த கோபத்திற்கு உச்சஸ் ஸ்தாதியில் கத்த, அவன் போட்ட சத்தத்தில் கார் எங்கும் அவனது குரல் தான் எதிரொலித்தது.

அது மட்டுமின்றி திடீரென்று கேட்ட சத்தமான குரலில் கோகுலன் தூக்கம் கலைந்து பயந்து போய் அழ ஆரம்பித்து விட, கவி அவனை முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்ய முயன்றாள்.

குழந்தையோ பயத்தில் வீறிட்டு அழுதான்.

பின் இருக்கையை திரும்பிப் பார்த்த தேன்மலர் இரு மடங்கு கோபத்தோடு தன் அருகே அமர்ந்திருக்கும் அமுதனிடம்,

“உங்களுக்கு முதல்ல அறிவிருக்கா? குழந்தை தூங்குறது கூடவா தெரியாது? இப்படியா கத்துவீங்க?”

பதிலுக்கு அவனைப் போல் சத்தமிடவில்லை என்றாலும் தேன்மலரின் வார்த்தைகளில் சூடு பறந்தது!

குழந்தை அழுததும் அமுதகீதனும் சற்று திகைத்து விட்டான். அவன் தூங்குவதை கவனித்திருந்தாலும் கருத்தில் பதிந்திருக்கவில்லை.

எனவே தான் கத்தி விட்டான். குழந்தை இன்னும் அழுவதைக் கண்டு,

“சாரி” என்று திரும்பி கவிரத்னாவிடம் கூறியவன், குழந்தை அழுவதை பார்த்துக் கொண்டே தன்னை ஆத்திரமாக முறைக்கும் தேன்மலரிடம் பார்வையை கொண்டு வந்திருந்தான்.

அவளோ மீண்டும் எதோ கோபமாக கூற வருவதை கண்ட கவி இருவருக்கும் பெரும் அளவில் சண்டை வந்து விடுமோ எனப் பயந்து, “தம்பி.. கொஞ்சம் சீக்கிரம் போறீங்களா? குழந்தைக்கு பசி எடுத்திடுச்சு போல. அதான் ரொம்ப அழறான்” என்று அவனிடம் கூற, தேன்மலரை முறைத்த வண்ணம் முதல் கியரினை பட்டென்று மாற்றியவன் வேகத்துடன் காரினை செலுத்தினான்.

தேன்மலரின் கைகளை சுரண்டிய கவி “எதுவும் பேசாதே” என்று கண்களால் கெஞ்சிக் கொள்ள, அவளும் அமைதியாகி விட்டாள்.

புது மனை வரும் வரை காருக்குள் கோகுலின் சிணுங்கல் தவிர வேறெந்த சத்தமும் கேட்கவில்லை!

அடுத்த இருபது நிமிடத்திற்குள் இல்லம் வந்து விட, கவிரத்னா காரை விட்டு கீழே இறங்கியதும் தான் நிம்மதியாக மூச்சு விட்டாள்.

கோகுல் பசியில் சிணுங்கிக் கொண்டே இருக்கவும் “நீங்க முதல்ல உள்ள போய் கோகுல கவனிங்க அண்ணி. நான் கிஃப்ட் பேக்கை எடுத்துட்டு வரேன்” என்று தேன்மலர் கூற, கவியும் முன்னே சென்று விட்டாள்.

அவள் சென்றதும் பின் சீட்டில் இருந்த கிஃப்ட் கவரினை எடுத்துக் கொண்ட தேன்மலர் அமுதகீதனிடம் “தேங்க்ஸ்” என்று மட்டும் கூறி விட்டு நகர எத்தனிக்க,

“நில்லு” என்றான் அமுதகீதன்.

தேன்மலரும் நின்று விட, “கேட்ட கேள்விக்கு பதில் சொல்ற பழக்கம் இல்லையா?” என்றான் கோபமான குரலில்.

“என்ன கேள்வி கேட்டீங்க?” என்று தேன்மலர் மார்பிற்கு குறுக்கே கை கட்டி நிமிர்ந்த பார்வையுடன் கேட்க,

“அதான்.. நீ காருக்குள்ள ஏறினதும் கேட்டனே..” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.

அவனை முறைத்த தேன்மலர் “எனக்கு அறிவிருக்கு தான். ஆனா ரஞ்சித்துக்கு தான் சுத்தமா அறிவில்லை. அப்படி அறிவிருந்திருந்தா எங்களை கூப்பிடுறதுக்காக போயும் போயும் உங்களை அனுப்பி இருக்க மாட்டான்!” என்று விட்டாள் பட்டென!

அவள் பதிலில் கோபம் உச்சத்திற்கு ஏறியது அமுதனக்கு. முகம் எல்லாம் கனலாகி விட,

“போயும் போயும் என்னையவா? எவ்வளவு திமிர்?” என்று தகிக்கும் விழிகளுடன் கேட்டவன், அவளின் நிமிர்வை உடைக்கும் வேகத்துடன்,

“அவனுக்கு தான் அறிவில்ல! என்னை அனுப்பிட்டான். ஆனா.. மேடம் நீங்க தான் அறிவுக் களஞ்சியம் ஆச்சே! அப்புறம் எதுக்கு என் கூட கார்ல ஏறிட்டு வந்த? அப்படியே நடந்து வந்திருக்க வேண்டியது தான!” என்றவன்,

அவளை ஏளனமாக பார்த்து உதடு வளைத்து “ஓசில லிஃப்ட் கிடைச்சா.. உடனே ஏறிட்டு வந்திடுவியா? ஹ்ம்ம்.. உன்னை சொல்லி என்ன பண்றது? நீ மட்டுமா அப்படி? உங்க ஃபேமிலியே அப்படித் தான! சீப் பீப்பில்ஸ்!” என்று வார்த்தைகளை அள்ளி இரைத்து விட்டான்!

அவனின் வார்த்தைகளில் தேன்மலரின் தேகம் இறுகியது. முகம் செந்தனலென தகிக்க, கண்களில் செவ்வரி படற கண்ணீர் நிறைந்து விட்டது.

இருந்தாலும் தலை நிமிர்வுடன் அவனைப் பார்த்தவள் இமை சிமிட்டி கண்ணீரைக் கண்களுக்குள் தாங்கிக் கொண்டு தன் பர்ஸில் இருந்து ஐநூறு ரூபாய் தாளினை எடுத்து

“இந்தாங்க” என்று ஸ்டியரிங் மேல் பணத்தை வீசியவள்,

“ஓசில நாங்க வரல! நீங்க எங்களை அழைச்சிட்டு வந்ததுக்கு ட்ரைவர் சார்ஜ் ஃபை ஹன்றட்! அண்ட், சொகுசு கார்ல ஏசி போட்டு கூட்டிட்டு வந்ததுக்கு இன்னொரு ஃபை ஹன்றட்!” என்று இரும்புக் குரலில் கூறியவள் மற்றுமொரு ஐநூறு ரூபாய் தாளினை ஸ்டியரிங் மேல் வீசி விட்டு,

ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கும் விதமாய் எரிக்கும் நயனங்களுடன் அவனைப் பார்த்து “ரோல் யுவர் டங்க்! அண்ட் மைண்ட் யுவர் வேர்ட்ஸ்!” என்று கர்ஜனையாக கூறி விட்டு அவனைத் திரும்பியும் பாராமல் விறுவிறுவென புது மனைக்குள் நுழைந்து விட்டாள்!

செல்லும் அவளையும் தன் மடியில் விழுந்து கிடந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளையும் ஆவேசத்தில் சிவந்த முகத்துடன் கண்ட அமுதகீதன் “வாட் த ஹெல்….!” என்று கோபமும் ஆத்திரமுமாக ஸ்டியரிங்கில் ஓங்கிக் குத்தினான்!

error: Content is protected !!
Scroll to Top