அத்தியாயம் – 19
சேலத்தில் இருக்கும் தங்களின் கடலை மிட்டாய் ஃபேக்டரிக்கு வந்திருந்தான் அமுதகீதன்.
ஃபேக்டரி ரவுண்ட்ஸ் முடிந்ததும், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பெட்டிகளை ஊழியர்களுடன் சேர்த்து சரி பார்த்து அதனை அனுப்பி வைத்த பின்னர் தனது அலுவலக அறைக்கு வந்தவன் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு நீண்ட மூச்சினை இழுத்து விட்டான்.
மூடிய விழிகளுக்குள் ஒளிரும் நிலவாக மலரின் முகம் நியாபகம் வந்தது!
அன்று அவளின் மடியில் மல்லிகை பூவை வைத்ததும் அவள் முகத்தில் தோன்றிய பாவனைகள் ஒவ்வொன்றும் இப்பொழுது வரை அதன் சுவடுகள் மாறாமல் அப்படியே கண்களுக்குள் நிற்கிறது அமுதனுக்கு.
அவளின் திகைத்த முகத்தை மனதினுள் நினைத்துப் பார்த்தவனுக்கு இதழில் அழகான புன்னகை உதிர்த்தது.
“நீ உன் மறுப்பை சொல்ல வந்த! ஆனா, நான் உன் வாயை அடைக்கிற மாதிரி என் விருப்பத்தை சொல்லிட்டேன்..” என்று வாய் விட்டு தனக்குத் தானே பேசியவனுக்கு அன்று நிகழ்ந்தவை தான் கண்ணிற்குள் உலா போனது!
தன் மனதை அவளிடம் கூறியதும் நீண்ட மூச்சினை விட்டான் அமுதகீதன்!
நீண்ட நாட்களாக இதயத்தை சுகமாக அழுத்திய ஒன்றை இன்று இறக்கி வைத்தது போல் தோன்றியது.
தேன்மலருக்கு வார்த்தைகளே வரவில்லை. தன் மடியில் கிடந்த மல்லிகை குவியலையே அதிர்வுடன் பார்த்திருந்தாள்.
அமுதனுக்கு அவளின் உணர்வுகள் புரிந்தது. எனவே, அவளிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை அவன்.
“என் மேல உனக்கு என்ன அபிப்ராயம் இருக்குன்னு எனக்குத் தெரியும் மலர். ஆனா, அதை வச்சு உன் முடிவை சொல்லாத. நிஜமாவே மனசார யோசிச்சு சொல்லு. இப்ப உன் கிட்ட விருப்பத்தை சொன்ன அமுதன் நிச்சயம் நீ நினைச்சிட்டிருக்க அமுதன் கிடையாது! நான் மலரை விரும்புற அமுதன்! மலரை மட்டுமே மனசுல பிரதானமா நிறுத்தி தன்னோட விருப்பத்தை உன் கிட்ட சொன்ன அமுதன்” என்று உள்ளார்ந்த குரலில் கூறியவன், மீண்டும் அவளின் உள்ளங்கையை பற்றிக் கொள்ள, “ஹான்..” என்று உடல் அதிர அவனைப் பார்த்தாள் தேன்மலர்.
“என் மூச்சு நிக்கிற வரைக்கும் உனக்கு துணையா இருப்பேன் மலர். உன்னை எந்த சூழ்நிலையிலயும் காயப் படுத்த மாட்டான். நீ என்னை நம்பலாம்” என்றவன் மென்மையுடன் அவளின் கரத்தினை விடுவித்தான்.
தேன்மலருக்கு கண்ணீர் கண்களை மறைத்து விட, அவளின் கண்ணீர் மனதை உருக்கியது!
மேலும் எதையும் பேசாமல் காரினை கிளப்பி இருந்தான் அமுதகீதன்.
இல்லம் வந்து சேரும் வரையிலும் கூட தேன்மலரிடம் அசைவில்லை. அவன் காரை நிறுத்தியதை கூட உணராமல் சிலை போல் அமர்ந்திருந்தாள்.
அமுதனும் அவளுக்கான நேரத்தை கொடுத்து அமைதியாகவே அமர்ந்திருக்க, அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்த கவிரத்னா அமுதனின் காரை கண்டதும் அவர்களை நெருங்கி தேன்மலரின் பக்கம் வந்து ஜன்னலைத் தட்ட, அதில் சுயம் பெற்று திரும்பினாள் தேன்மலர்.
கண்ணாடி வழியே கவி கையசைத்ததும், அமுதன் ஜன்னலை இறக்கி விட்டான்.
தேன்மலர் திகைப்பிலிருந்து வெளி வந்து “அண்ணி..” என்க,
“என்ன தேனு.. வண்டி ரொம்ப நேரமா நிக்குது. ரெண்டு பேரும் இறங்காம இருக்கீங்க…?” என்று கவி கேட்க, அப்போது தான் தேன்மலர் நீண்ட நேரமாக அசைவின்றி அமர்ந்திருந்ததை உணர்ந்தாள்.
விருட்டென்று அவள் அமுதனின் பக்கம் திரும்பிப் பார்க்க, “வா மலர்..” என்று புன்னகை முகமாகக் கூறியவன் இறங்கிக் கொள்ள, தானும் வேக வேகமாக இறங்க எத்தனித்தவள் மடியில் உள்ள பூவை கண்டு அப்படியே தடுமாறி போனாள்.
இரண்டு நொடிகள் மௌனமாக அதையே வெறித்தவள் மல்லிகை பூவையும் ரோஜாவையும் ஒரு கையில் எடுத்துக் கொண்டபடி கீழே இறங்க, அவள் கையில் பூ இருந்ததை கண்ட கவி “அட வர்ற வழில வாங்கிட்டு வந்தியா தேனு? பூ நல்லா ஃப்ரெஷ்ஷா இருக்கு!” என்று சாதாரணமாக கேட்டாள்.
அமுதன் அருகே நின்றிருந்தமையால் தேன்மலர் பதிலேதும் கூறாமல் தலையை மட்டுமே அசைக்க, “கொடு நான் வச்சு விடுறேன்” என்று கவி கூறியதும்
தேன்மலர் பதறி மறுப்பாக தலை அசைக்க, அதை சரியாக கவனிக்க முடியாத வகையில் அவள் கட்டியிருந்த புடவை கவியின் கண்களை ஈர்த்து விட்டிருந்தது.
“ஹே தேனு.. இது உன் பிறந்த நாளைக்கு நான் எடுத்துக் கொடுத்த புடவை தான.. கட்டவே கட்டாம ரொம்ப நாளா பீரோக்குள்ளயே பூஜை பண்ணி வச்சிருந்த! இன்னைக்கு எடுத்து கட்டிட்டயா??” என்று சந்தோஷ ஆச்சர்யத்துடன் மேலும் கீழும் அவளை பார்த்து பூரித்தவள், “அழகா இருக்க தேனு.. புடவையை நல்லா கட்டியிருக்க” என்க,
தேன்மலர் மெல்ல புன்னகைத்தாள்.
“இரு.. இரு.. தலைல இந்தப் பூ மட்டும் தான் மிஸ்ஸிங். இதையும் வச்சிட்டா.. அப்படியே கல்யாணப் பொண்ணு கலை வந்திடும்” என்றவள், தேன்மலர் மறுப்பதற்கு முன்பு தான் சொன்னதை செய்திருந்தாள். இப்போது அமுதன் வாங்கிய மல்லிகையும் ரோஜாவும் மலரின் கூந்தலுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தது!
“ஹ்ம்ம்… இப்ப தான் இன்னும் அழகா லட்சணமா இருக்க” என்ற கவி, “ஹையோ. என் கண்ணே பட்டுடும் போலிருக்கே.. வீட்டுக்கு போனதும் அத்தை கிட்ட சொல்லி உனக்கு திருஷ்டி சுத்தி போடணும்” என்று அவளின் கன்னத்தை வழித்தபடி கூறினாள்.
“சரி சரி சீக்கிரம் வாங்க.. கிருஷ்ணாக்கு சந்தன நலங்கு வைக்க ஆரம்பிச்சிடுவாங்க” என்றவள், மற்றொரு உறவுக்கார பெண்மணி வந்ததும் அவருடன் பேசியபடி உள்ளே சென்று விட, அமுதன் தேன்மலரைத் தான் பார்த்து நின்றிருந்தான்.
மல்லிகையை சூடியதும் மெய்யாகவே அவ்வளவு அழகாக இருந்தாள் தேன்மலர். பார்வையை விலக்க முடியாமல் அவன் நிற்க, அவளுக்கோ தன் கூந்தலை அலங்கரித்திருந்த மல்லிகையை எண்ணி மனம் தடுமாற, அதனுடன்
அந்த மல்லிகையை வாங்கிக் கொடுத்த மன்னவனின் பார்வையும் பெண்ணை தத்தளிக்க வைத்தது!
உள்ளங்கையில் வியர்வை பூக்க ஆரம்பிக்க, அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாத வண்ணம் அவளின் சமநிலை முற்றிலும் குழைந்து போய் இருந்தது.
அமுதன் அவளின் அருகே சற்று நெருங்கி “வா மலர்.. உள்ள போகலாம்” என்று அழைத்தவன் முன்னே செல்ல, நகர மறுத்த கால்களை அரும்பாடு பட்டு நகர்த்தி அவனை பின் தொடர்ந்தாள் தேன்மலர்.
இருவரும் இணைந்து வீட்டிற்குள் நுழைந்ததும் நடு ஹாலில் அலங்கரித்திருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த கிருஷ்ணரூபி தான் “அண்ணா மலர் அக்காவை கூட்டிட்டு வந்தாச்சு..” என்று சந்தோஷத்தில் கத்த, எல்லோரின் பார்வையும் அவர்களின் பக்கம் தான் ஒட்டு மொத்தமாக குவிந்தது.
பட்டு வேட்டி சட்டையில் அமுதனும், அவனுக்கு ஏற்றார் போல் பட்டுப் புடவையில் தேன்மலரும் உள்ளே நடந்து வருவதை காணக் காண எல்லோராலும் பார்வையை விலக்கிக் கொள்ளவே முடியவில்லை.
மங்கை, கவி இருவரும் அசந்து போய் தங்களை மறந்து அவர்களை பார்த்துக் கொண்டு நின்றனர்.
கவிக்கு மனதில் “வெளிய தேனுவை பாக்கும் போது தனியா அழகா தெரிஞ்சா.. இப்போ அமுதன் தம்பி கூட பாக்குறப்ப இன்னும் அழகா தெரியிறாளே..!” என்று யாருக்கும் கேட்காத வண்ணம் தனக்குள் முனங்கிக் கொண்டாள்.
பரபரப்புடன் இங்கும் அங்கும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்த வசுந்தலாவும், மகனும் மங்கை மகளும் இணைந்து வருவதைக் கண்டு அவர்களின் ஜோடிப் பொருத்தத்தில் மெய் மறந்து நின்று விட்டார்.
ரஞ்சிதனுக்கு கூட அவர்களைக் கண்டு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை.
எல்லோரும் அவர்களையே பார்த்து நிற்க, ஒரு உறவுக்கார பெண்மணி அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து வசுந்தலாவிடம் “யோகவள்ளியோட நாத்தனாரை உன் மகனுக்கு கட்டி வைக்கிறதை விட, உன் நாத்தனார் மக தேனுவை உன் மகனுக்கு கட்டி வைக்கலாம் வசு.. தேனுப் பொண்ணு தங்கம்! அவ அண்ணன் ஆத்தாவை பத்தி எல்லாம் யோசிக்காத! பேசாம தேனுவை உன் வீட்டுக்கு மருமகளா ஆக்கிக்கோ!” என்று சொல்ல, வசுந்தலாவிற்கு ஒரு நொடி அப்படி செய்தால் தான் என்ன? என்று தோன்றி விட்டது!
அவர் அவ்வாறு நினைத்த அடுத்த நொடியே “என்ன வசு.. அப்படியே நின்னுட்டு இருக்க? நலங்கு வைக்க நேரமாச்சு பாரு..” என்று இன்பசேகரன் அங்கே வந்து விட, அப்போது தான் நிகழ் உலகிற்கே வந்தார் வசுந்தலா.
“இதோ ஆரம்பிச்சிடலாம்ங்க” என்ற வசுந்தலா கணவர் நகர்ந்ததும் “நீங்க சொல்றபடி நடந்தா எனக்கு சந்தோஷம் தான். ஆனா, நடக்க வாய்ப்பில்லக்கா. இவருக்கு தங்கச்சி குடும்பம்னாலே பிடிக்காது.. அமுதனுக்கும் அதே மாதிரி தான்! அப்புறம் இந்த விஷயம் வள்ளிக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்.. சாமியாட்டம் ஆடிடுவா. என் கிட்ட சொன்ன மாதிரி நீங்க வேற யாரு கிட்டயும் சொல்லிடாதீங்க” என்றவர் அங்கிருந்து நகர்ந்து மலரை வரவேற்க சென்று விட்டார்.
அவர் கூறியது போலவே யோகவள்ளி சாமியாடும் மனநிலையில் தான் இருந்தார். தம்பியும் அவளும் ஒன்றாக உள்ளே நுழைந்ததும் எல்லோரும் அவர்களை பார்த்து மெய் மறந்து உறைந்ததை எண்ணி வயிறு பற்றி எரிந்தது.
கூடவே உள்ளுக்குள் பயப் பந்தும் சுழல ஆரம்பித்தது. தன் நாத்தனாரை தம்பிக்கு மணம் முடிக்கா விட்டால் புகுந்த வீட்டு ஆட்கள் தன்னை கொத்தித் தின்று விடுவார்கள் என்று பீதி அடைந்தவர்,
கிருஷ்ணரூபியின் பூப்பு நீராட்டு விழா முடிந்ததும் முதல் வேலையாக தாய் தந்தையிடம் பேசி தம்பிக்கும் தன் நாத்தனாருக்கும் நிச்சயம் செய்து விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவாக எண்ணிக் கொண்டார்.
எல்லோரும் வந்ததும் கிருஷ்ணரூபியின் பூப்பு நீராட்டு விழா இனிதே துவங்கியது.
சென்னையிலிருந்து அமுதனின் மற்ற இரண்டு சகோதரிகளும் தத்தம் குடும்பங்களுடன் வந்திருந்தனர்.
அத்தை முறையில் இருந்து செய்ய வேண்டிய அனைத்தையும் மங்கையே முதன்மையாக நின்று செய்தார்.
விழா நல்ல படியாக முடிந்திருக்க, மதியத்திற்கு மேல் வந்தவர்கள் எல்லோரும் மெல்ல மெல்ல கிளம்பத் துவங்கினர்.
மங்கையும் கவியும் கிளம்ப வேண்டித் தயாராக, அமுதனின் கண்கள் மலரைத் தான் தேடியது.
அவளைக் காணவில்லை என்றதும் சற்றும் தயங்காமல் கவியிடம் வந்தவன் “மலர் எங்கன்னு தெரியுமா?” என்று கேட்க, அவன் மலர் என்றதும் யாரைக் கேட்கிறான் என்று ஒரு நொடி புரியாமல் நின்றாள் கவிரத்னா.
“மலர் மட்டும் தனியாக் கிளம்பிட்டாளா?” என்று மீண்டும் கேட்க, அவன் மலர் என்று கேட்ட விதமும் கேட்ட வேகமும் ‘என்னது மலரா… இது எப்ப இருந்து!! அடப்பாவி..’ என்று தான் கவியை நினைக்க வைத்தது.
அமுதன் பதிலிற்காக நிற்க, “வெளிய ரஞ்சித் கூட நின்னு பேசிட்டிருக்கா தம்பி..” என்றதும் அவன் முகத்தில் மெல்லிய இறுக்கம்!
சரி என்று விட்டு விறுவிறுவென வெளியே வந்தவன் கண்டது இருவரும் தோட்டத்தில் நின்று சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்ததை தான்!
அவர்களை கண்டதும் அடி வயிற்றில் பாயிலரை வைத்தது போல் கபகபவென பற்றி எரிந்தது அமுதனுக்கு!
“இடியட் ரஞ்சித்…” என்று பற்களை கடித்தவனுக்கு காலை அந்த பெண்மணிகள் தேன்மலரிடம் பேசியது நினைவிற்கு வந்தது!
“இவனுக்கு தான் மலரை கட்டிக் கொடுக்கணும்னு இருக்காங்களா..” என்றவன், “ஒரு வேளை.. ரஞ்சித்கும்.. மலர் மேல.. என்னை மாதிரி.. மலருக்கும் ரஞ்சித்தை…… ஓ காட்.. நோ..” என்று முன்னுச்சி முடிகளை பற்றிக் கொண்டு நின்று விட்டான்.
அன்று பேக்கரியில் இருவரின் புன்னகை முகங்களும் நினைவில் எழுந்தது. இருவருக்கும் இடையே காதல் இருக்குமோ என்றவன் மனம் வேறு அடித்துக் கொள்ள, அடுத்த நொடி சற்றும் தாமதிக்காமல் அவர்களின் எதிரே சென்று நின்றான்.
அவன் வந்ததும் தேன்மலரின் முகம் அப்படியே மாறி விட, அமுதனும் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு ரஞ்சிதனிடம் திரும்பினான்.
சட்டென்று சூழ்நிலை இறுக்கம் பெற்றது போல் தோன்றியது ரஞ்சிதனுக்கு. எனவே, அதனை இயல்பாக்கும் பொருட்டு “வா அமுதா.. ஃபன்ஷன் சூப்பரா போச்சு..” என்று கூற,
“நான் உன் கூட கொஞ்சம் தனியா பேசனும் ரஞ்சித்..” என்றான் அமுதகீதன் அழுத்தம் திருத்தமாக!
அவன் குரலில் தென்பட்ட அழுத்தத்தில் ரஞ்சிதன் ஒரு நொடி தடுமாறிப் போனான்.
அவன் தேன்மலரை சங்கடத்துடன் பார்க்க, “சரி ரஞ்சி.. நான் கிளம்புறேன். ஊருக்கு போறதுக்கு முன்னாடி கால் பண்ணு” என்று கூறியவள், மறந்தும் அமுதன் பக்கம் பார்வையை திருப்பவில்லை.
அவள் சென்றதும் ரஞ்சிதன் அமுதனிடம் “சொல்லு அமுதா.. என்ன விஷயமா பேசணும்?” என்று கேட்க,
“இங்க இல்ல.. மொட்டை மாடிக்கு போகலாம் வா” என்றவன் முன்னே செல்ல,
“யோகராசு.. என்ன பிரச்சனைய இழுத்திருக்கான்னு தெரியலையே.. காலைல இவன் தான் தேனுவைப் போய் கூட்டிட்டு வேற வந்தான்.. தேனு வேற இவன் பக்கம் பார்வையை திருப்பாம போறா.. இவன் என்னடான்னாஅவளையே விடாம பாக்குறான்.. ரெண்டு பேருக்கு இடையில மறுபடியும் என்ன பிரச்சனையோ..?” என்று புலம்பியபடி அவனை பின் தொடர்ந்தான் ரஞ்சிதன்.
இருவரும் மேலே வந்ததும் அமுதன் இரண்டு நொடிகள் மௌனமாக நின்றான்.
ரஞ்சிதன் அவனே பேசட்டும் என்று மௌனமாக நிற்க, நீண்ட மூச்சினை வெளியேற்றிய அமுதன் “நான் ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வரேன் ரஞ்சித்.. நீயும் எதையும் மறைக்காம பதில் சொல்லணும்..” என்று கூற, என்ன என்று புரியா விடினும் எதுவோ தீவிரமாக கேட்கப் போகிறேன் என்று புரிந்து ஆமோதிப்பாக தலை அசைத்தான்!
“நீயும் மலரும் லவ் பண்றீங்களா?” என்று அமுதகீதன் பட்டென்று கேட்டிருக்க, அவன் கேட்ட கேள்வியில் ரஞ்சிதன் ஒரு நொடி திகைத்து நின்று விட்டான்.
“வாட்.. கம் அகைன் அமுதன்..” என்ற ரஞ்சிதனின் குரலிலும் இப்போது அழுத்தம் வந்திருந்தது.
“நீயும் மலரும் லவ் பண்றீங்களா..ன்னு” என்றவனை முடிக்கக் கூட விடாமல் ரஞ்சிதன் கோபம் கொண்டிருந்தான்.
“ஷட் அப் அமுதன்..!!” என்று முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன்,
“எங்களை பத்தி என்ன நினைச்சிட்டிருக்க நீ?” என்று சீற, அமுதனின் முகத்தில் கோடாய் புன்னகை!
பின்னே… ரஞ்சிதன் தன் கோபத்தால் அவனின் கேள்விக்கு பதில் கூறி விட்டானே!
அவன் புன்னகையை கண்டதும் ரஞ்சிதனுக்கு இன்னும் தான் கோபம் வந்தது!
“என்ன மேன் சிரிக்கிற? முதல்ல எதுக்காக இந்தக் கேள்வியை கேக்குற!” என்று புரியாத கோபத்துடன் கேட்ட ரஞ்சிதன், மனதிற்குள் ‘ அவன் எதுக்காக வேணும்னாலும் கேட்டிருக்கட்டும்.. முதல்ல எங்களைப் பத்தி இந்த பச்ச மிளகாய்க்கு தெளிவாக புரிய வைக்கணும்’ என்றவன் பொறுமையாக பேசத் துவங்கினான்.
“லுக் அமுதன்.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையவே கிடையாது.. நானும் தேனுவும் சின்ன வயசுல இருந்தே ஃப்ரெண்ட்ஸ் தான்..! ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான்!” என்றான் அழுத்தம் திருத்தமாக!
அமுதனின் உள்ளத்தில் சொல்லொண்ணா இன்பம்!
அவன் கோபம் கொள்ளும் முன்பு வரை அவன் பயந்த பயம் அவனுக்கு மட்டுமே தெரியும்!
மலரும் ரஞ்சிதனை விரும்புகிறாளோ.. ஆகையால் தான் தன் விருப்பத்திற்கு பதிலேதும் கூறவில்லையோ.. ஒரு வேளை ரஞ்சிதன் மட்டும் அவளை விரும்புகிறானோ என்று என்னென்னவோ சிந்தனைகள் அவனுள்!!
இப்போது அவனின் தெளிவான பதிலைக் கேட்டதும் தான் உயிரே வந்தது போலிருந்தது அமுதனுக்கு!
“நான் கேட்டுட்டே இருக்கேன்.. நீ பதிலே சொல்லாம சிரிச்சிட்டு இருக்க!” என்ற ரஞ்சிதன் அமுதனின் தோள் தொட,
“ஹான்..என்ன கேட்ட ரஞ்சித்..?” என்றான் அமுதன் தன்னை நிதானித்துக் கொண்டு!
“என்ன.. கேட்டவா…? அது சரி..! கொஞ்ச நிமிஷத்துக்கு முன்னாடி லூசுத் தனமா நீ என் கிட்ட ஒரு கேள்வி கேட்டியே.. அதை ஏன் கேட்டேன்னு கேட்டுட்டு இருந்தேன்..” என்ற ரஞ்சிதன்,
“ஏன்டா… உங்களுக்கெல்லாம் எங்களை பார்த்தா எப்படி தெரியுது.. தேனுவோட அம்மாவும் இப்படி தான் நினைக்கிறாங்க. நாங்க ரெண்டு பேரும் நட்போட பழகுறதை சரியா புரிஞ்சிக்காம தேனுவை எனக்கு கட்டி வைக்க ஆசைப் படுறாங்க. சொல்லப் போனா.. இதோ நீ கேட்டியா.. அதே மாதிரி தான் அவுங்களும் நானும் அவளும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்னு நம்பிட்டு இருக்காங்க.. இது எங்க போய் முடியப் போகுதுன்னு தான் தெரியல..” என்று
மெய்யான வருத்தத்துடன் புலம்பியவன்,
“நீ முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு! உனக்கு ஏன் இப்படி ஒரு கேள்வி வந்தது..” என்று தீவிரமாகக் கேட்டான்.
“முதல்ல நீ ஏன் இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேக்குற! தேனு பேரை எடுத்தாலே எரிஞ்சு விழுவ தானே நீ! அப்புறம் ஏன்?” என்று விடாமல் கேள்வி எழுப்பினான் ரஞ்சிதன்.
அவனுக்கு அமுதன் தன்னையும் தேனுவையும் இணைத்து யோசித்து இப்படி ஒரு கேள்வி எழுப்பியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை விட, ஏன் இப்படி ஒரு கேள்வி அமுதன் மனதினுள் எழுந்தது என்று தான் தோன்றியது!
அமுதனின் பதிலிற்காக ரஞ்சிதன் அவன் முகத்தையே கூர்மையாக நோக்க, பெரிதாக புன்னகைத்த அமுதன் “ரொம்ப யோசிக்காத ரஞ்சித்.. நானே சொல்றேன்..” என்ற அமுதன் இன்பத்துடன் துடித்த இதயத்தை வலது கையால் நீவி விட்டு, தூரத்தே தெரிந்த ஆகாயங்களை பார்த்தபடி பரவசத்துடன் பதில் கூறினான்.
“ஒரு வேளை நீ மலரை விரும்பினா.. அதை அடியோட மறந்திடு.. ஏன்னா நான் மலரை விரும்புறேன்! அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லத் தான் இந்தக் கேள்வியைக் கேட்டேன்!” என்றானே பார்க்கலாம்!
அவன் கூறிய பதிலில் ரஞ்சிதனுக்கு நெஞ்சு வலியே வந்து விடும் போலிருந்தது!
“வாஆ..ஆ..ஆ..ட்ட்..!!!” என்று வாயைப் பிளந்த ரஞ்சிதன், “நீ தேனுவ விரும்புறியா…” என்றான் பேரதிர்ச்சி நிறைந்த குரலில்!
அமுதன் புன்னகையுடன் ஆம் என்பதாக தலை அசைக்க, அப்போது தான் ரஞ்சிதன் ஒன்றை உணர்ந்தான்.
இப்போது வரை அவன் மலர் மலர் என்று அழைத்ததை..!
அது மட்டுமல்லாமல் காலையில் அவனே சென்று அவளை அழைத்து வந்ததையும் நினைவு கூர்ந்தவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய வர, அதிர்ந்து நிமிர்ந்தவன் “அடப் பாவி.. யோகராசு.. எப்புட்ராஆஆ!!?? ஹவ்??!! எலா?? கைசே..??” என்று தான் அறிந்த அத்தனை மொழிகளிலும் ‘எப்படி’ என்று விடாமல் கேட்க, பதில் சொல்லாமல் புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்த அமுதன்,
“அதென்ன யோகராசு..” என்றான் புரியாமல்!
“நீ முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு மேன்!” என்று ரஞ்சித் பல்லைக் கடிக்க,
“எப்படின்னு சொல்ல..” என்று சிரித்தவன், “மலரை பிடிச்சிடுச்சு ரஞ்சித்.. மலரை மட்டும் தான் பிடிக்குது..” என்றும் கூற, ரஞ்சிதன் மயங்கி விழுவது போல் பாவனை செய்து மீண்டும் எழுந்து நின்றான்..
“அமுதன்.. நீயா பேசுற.. இப்படி சிரிப்போட.. அதுவும் தேனுவை நினைச்சு…” என்றவன், அங்கும் இங்கும் நடந்தபடி “ஹையோ.. நான் என்ன செய்வேன்…இதெல்லாம் நிஜமா கனவா.. ஐயோ ஆண்டவா.. என்னை இப்படி புலம்ப விட்டியே..” என்று அநியாயத்திற்கு நம்ப முடியாமல் புலம்பியவன்,
சட்டென்று நின்று விட்டான்.
நின்ற வேகத்தில் அமுதனை நெருங்கி அவன் தோள்களை பற்றி “நீ விரும்புற விஷயம் வீட்ல யாருக்கும் தெரியாது தானே! குறிப்பா தேனுக்கு தெரியாது தானே? தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும் அமுதா..!” என்று பயத்துடன் கூற,
“வீட்ல யாருக்கும் தெரியாது…..” என அமுதன் இழுத்துக் கூறியதும், “ஹப்பாடி..” என்று ரஞ்சிதன் ஆசுவாசம் கொள்ள,
அதை உடைக்கும் வண்ணம் அடுத்த நொடியே அமுதனோ சாவகாசமாக “ஆனா, மலருக்குத் தெரியும்.. இன்னைக்கு காலைல தான் மல்லிகை பூ வாங்கிக் கொடுத்து ப்ரப்போஸ் பண்ணேன்!” என்று கூற,
“என்னது….. மல்லிகை பூ கொடுத்து ப்ரப்போஸ் பண்ணியா…??” என நெஞ்சில் கை வைத்த ரஞ்சிதன் மெய்யாகவே மயங்கி விழுந்து தான் போனான்!