மலர் பாதம் பணிந்து..18

அத்தியாயம் – 18

தெருமுனையில் அமுதகீதனை கண்டதும் தேன்மலரின் முகத்தில் மெல்ல மெல்ல கோபம் குடியேறியது.

அமுதனோ அவளின் கோபத்தை உணராமல் அவளின் தரிசனத்தில் மெய் மறந்து நின்றிருந்தான்.

சற்று நேரத்திற்கு முன்பு வீட்டில் இருந்த போது மனதில் பரவிய இதம் இப்போது இருந்த இடம் தெரியாமல் பறந்து போய் இருந்தது தேன்மலருக்கு.

எவ்வளவு அழுத்தம் திருத்தமாக சொல்லியும் அவன் தனக்காக இங்கே காத்திருப்பதை எரிச்சலுடன் உள்வாங்கியவள் கோபத்தை கட்டுப் படுத்த அரும்பாடு பட்டாள்.

மேலும் ரோட்டில் வைத்து அவனை எதாவது திட்டி விடுவோமோ என்று பயந்தவள், அவனை கண்டு கொள்ளாமல் ஆட்டோவைப் பார்க்க, அங்கே நின்றிருந்த இரண்டு ஆட்டோக்களும் சவாரி வந்ததும் எப்போதோ கிளம்பி இருந்தன!

இன்றைய தன் சூழ்நிலையை மனதிற்குள் எண்ணி நொந்து போனவள், அவனை நன்றாக திட்டவென நெருங்க, அவள் தன்னை நோக்கி வருவதை உணர்ந்ததும் மோன நிலை கலைந்து நிகழ் உலகிற்கு வந்தான் அமுதகீதன்.

அவளின் கோபத்தை அவளது வேக நடையே பிரதிபலிக்க, தன் பார்வையை மாற்றிக் கொண்டவன் கீழ் பகுதி சட்டையை நீவி விட்டு, கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி நன்றாக நிமிர்ந்து நின்றான்.

அதனுடன், ‘சமாளிக்கலாம் அமுதா..’ என்றும் தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

அவள் அவனை நெருங்கி வந்ததும் “உங்களை தான் கிளம்ப சொல்லிட்டேன்ல! அப்புறம் எதுக்காக இங்கயே நிக்குறீங்க?” என்று வார்த்தைகளில் சூடு பறக்க கேட்க, “நீ ஸ்கூட்டில வந்ததும் உன் பின்னாடி வந்தர்லாம்னு தான் மலர் நின்னுட்டு இருந்தேன்” என்றான் தடுமாறாத குரலில்.

அவனின் விளக்கத்தை கேட்டு அவன் மண்டையை உடைக்கலாமா என்று கூட தோன்றி விட்டது அவளுக்கு.

“ஏன்.. உங்க வீட்டுக்கு போக உங்களுக்கே வழி தெரியாதா? என் பின்னாடி வந்தா தான் உங்க வீட்டுக்கு கரெக்ட்டா போவீங்களா?” என தேன்மலர் சற்றே குரலை உயர்த்தி இருந்தாள்.

ஒரு வாரத்திற்கு முன்பு, தன் வீட்டில் அவள் கோபம் கொண்ட போது அதனை ஏற்க முடியாமல் அவள் மேல் பதில் கோபம் கொண்டான் அமுதகீதன்.

ஆகையால் தான் மதி கெட்டுப் போய் அவளின் கையில் பணத்தை திணித்திருந்தான்.

ஆனால், இன்று மெய்யாகவே மலரின் கோபத்தை கண்டு அவனுள் எவ்வித கோபங்களும் எழவில்லை. இனி மலர் மேல் கோபம் எழவே எழாது என்று கூட தோன்றியது அவனுக்கு.

அவள் கத்தியதும் கைகளால் குறைத்து சைகை செய்தவன் “மெதுவா மலர்.. நாம ரோட்ல நிக்கிறோம்” என அவளுக்கு நினைவு படுத்த, தேன்மலர் இரு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு நீண்ட மூச்சினை வெளியேற்றினாள்.

ரோட்டில் சென்ற இரண்டு பெண்மணிகள் வேறு தேன்மலரையும் அவள் அருகில் நிற்கும் அமுதனையும் ஒரு பார்வை பார்த்து “நம்ம ஞானம் மக தானே.. இவ யாரு கூட நின்னு பேசிட்டு இருக்கா? பிள்ளை முகமே சரியில்லை.. என்னமோ அந்தப் பையன் வம்பு பண்ற மாதிரி இருக்கு.. வா போய் விசாரிப்போம்” என்று அங்கே வந்து விட்டனர்.

“என்ன தேனு.. யாரு இந்தத் தம்பி? தெரிஞ்ச பையனா? எதுக்கு ஒரு மாதிரி கைய கட்டி நின்னுட்டு இருக்க?” என்றந்த பெண்மணி அமுதனை திரும்பிப் பார்த்து ஒரு முறை முறைக்க, தேன்மலருக்கு ‘ஐயோ…’ என்றாகி விட்டது!

மற்றொரு பெண்மணியோ “என்னடி தேனு.. இந்தத் தம்பி எதுவும் வம்பு பண்ணுதா?” என்றவர், அமுதனை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்து “பார்த்தா நல்லா படிச்ச பணக்கார பையனா தெரியுது.. நீ ஏன் ப்பா எங்க ஏரியா பொண்ணு கிட்ட வந்து வம்பு பண்ணிட்டு இருக்க?” என்று அவனிடமே மிரட்டும் தொனியில் பேசி விட, அமுதகீதன் மலரைப் பார்த்து ‘நீயே அவர்களிடம் பதில் சொல்லி விடு’ என்ற ரீதியில் கைகளை கட்டிக் கொண்டு சாவகாசமாக காரில் சாய்ந்து நின்று விட்டான்.

“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு தேனு..” என இருவரும் தேன்மலரின் இரு பக்கமும் வந்து நின்று விட, இதற்கு மேல் விட்டால் இவர்கள் செய்யும் அழிச்சாட்டியத்தில் தெருவே கூடி விடும் என்றவள்,

“ச்சே.. ச்சே.. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல ஆன்ட்டி.. இவுங்க…” என்று அமுதனை சுட்டிக் காட்டி, “இவுங்க என் மாமாவோட பையன் தான்” என்றாள் மெதுவான குரலில்.

அவர்களோ அவளை நம்பாமல் பார்த்து “மாமா பையனா? ரஞ்சித் தம்பி தான உன் மாமா பையன்! அவனுக்கு தான உன்னைக் கட்டி வைக்கிறதா ஞானம் அடிக்கடி சொல்லிட்டு இருப்பா? இந்தத் தம்பி யாரு புதுசா? இது வரைக்கும் இந்தப் பக்கம் பார்த்ததே இல்லையே..” என்று அவர்கள் சந்தேகமாகக் கேட்க, தெரு முழுக்க ரஞ்சிதனிற்கு தன்னை கட்டிக் கொடுக்கும் ஆசையை பற்றி அன்னை தண்டோரா போட்டு வைத்திருப்பதை நினைத்து கடுப்புடன் பல்லைக் கடித்தவள்,

அவர்களிடம் முகம் மாறாமல் “ஹான்.. ரஞ்சி ரெண்டாவது மாமாவோட பையன். இவுங்க என்னோட மூத்த மாமா மகன்” என்று விம் போட்டு விளக்க, அந்தப் பெண்மணிகள் இன்னுமே நம்பாமல் இருவரையும் கூர்ந்து பார்த்தனர்.

அவர்களை நம்ப வைக்கும் பொருட்டு “இவுங்க என்னோட அத்தான் தான். அவுங்க வீட்ல ஒரு விசேஷம். அம்மா அண்ணி எல்லாமே காலைல வெள்ளனவே கிளம்பி போய்ட்டாங்க. நான் கிளம்ப லேட் ஆகிட்டதால அத்தானே என்னை அழைச்சிட்டு போக வந்துட்டாங்க” என்றவள் அமுதனிடம் ஒரு சிரிப்பை உதிர்த்து “போகலாமா அத்தான்..!” என்று உரிமையுடன் கேட்க, அமுதனின் நிலை பற்றி சொல்லவா வேண்டும்?

தன் அத்தை ரஞ்சிதனிற்கு மலரை கட்டிக் கொடுக்கும் எண்ணத்தில் இருப்பதை பற்றி அப்பெண்மணிகள் கூறியதும் உடல் இறுகி நின்றிருந்தவன், மலரின் அத்தான் என்ற அழைப்பில் பனியாக கரைந்து விட்டான்.

சொல்லப் போனால் “யாத்தே யாத்த்தே..” என்று பாடியடி விண்ணுலகம் சென்று குத்தாட்டம் போடாத குறை தான்!

அப்பெண்மணிகளை சமாளிக்கவே அவள் இத்தனை தூரம் நடிக்கிறாள் என்று புரிந்தாலும் உள்ளுக்குள் இன்ப மழை பொழிவதை அவனால் தடுக்க முடியவில்லை.

‘நடிப்பு தான்.. தெரியுது.. ஆனாலும்.. அந்த அத்தான்ல என் மனசு மறுபடியும் மலர் கிட்ட விழுந்திடுச்சு’ என்று உள்ளுக்குள் அவனின் காதல் மனம் அதன் பாட்டிற்கு பேசிக் கொண்டிருந்தது.

அவன் பதிலேதும் கூறாமல் மெய் மறந்து நிற்பதை கண்டு கண்களால் அவனுக்கு ஜாடை காட்டினாள் தேன்மலர்.

அவளின் பார்வை எச்சரிப்பில் தன்னிலை அடைந்தவன் “உங்க சந்தேகம் தீந்திடுச்சுன்னா நான் என்னோட அத்தை பொண்ணை கூட்டிட்டு கிளம்பவா?” என்று அமுதன் மெல்லிய சிரிப்புடன் அழுத்தமாக கேட்க,

அப்பெண்கள் சங்கடத்துடன் நெளிந்தபடி, “மன்னிச்சுக்கங்க தம்பி… இது வரை உங்களை இங்க பாத்ததில்லையா? அதான் தேனு மேல இருக்க அக்கறைல நிறைய விசாரிச்சோம்..” என்றனர் அசடு வழிய.

அவர்களின் பதிலில் மலரை ஒரு முறை திரும்பிப் பார்த்தவன் “இனிமேல் அடிக்கடி என்னைப் பாப்பீங்க!” என்று ஒரு மாதிரியான குரலில் கூறியவன்,

“போகலாம் மலர்..” என்றபடி காரில் ஏறிக் கொள்ள, தேன்மலரும் அவர்களிடம் புன்னகையுடன் ஒரு தலை அசைப்பை கொடுத்து விட்டு முன்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

கார் நகர்ந்ததும் அப்பெண்மணிகளில் ஒருவர் “என்னோட அத்தான் தான்னு தேனு அம்புட்டு உரிமையோட சொல்றா பாரேன்.. எனக்கென்னமோ ரஞ்சி தம்பியை விட இவுங்க ஜோடி பொறுத்தம் தான் அசத்தலா இருக்கும்னு தோணுது..” என்க,

“ஆமாமா.. இவளை அழைச்சிட்டு போக அந்தத் தம்பி லேட்டா வந்திடுச்சு போல. அதான் தேனு கோபமா எதோ பேசிட்டிருந்திருக்கா.. நாம தான் அவசரப் பட்டு அவுங்களுக்கு இடைல வந்து விசாரணை பண்ணிட்டோம்.. அந்தத் தம்பி கண்ணுல தேனு மேல இருக்க பிரியம் அப்படியே தெரிஞ்சது.. கவனிச்சியா நீ?”

“ரெண்டு பேருக்கும் இடையில ஒண்ணுமில்லாமையா நம்ம கிட்டயே உரிமையா தேனு அத்தான்னும்.. அந்தத் தம்பி அத்தை மகன்னும்.. சொல்வாங்க??”

“ஹ்ம்ம்.. நானும் பாத்தேன்! மலர் அத்தான்னதும் அந்தத் தம்பி முகம் அப்படியே மின்னுச்சு..” என்று தாங்கள் ‘இன்ச் இன்ச்’சாக கவனித்த விஷயத்தை அசைபோட்டபடி தங்கள் இல்லத்திற்கு நடை போட்டனர்!

ஆனால், இருவருக்கும் இடையே நிகழும் நிதர்சனம் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது..?

காதலோ.. விருப்பமோ.. பிரியமோ.. எதுவாக இருப்பினும்.. இரு பக்கமிருந்தும் பிரதிபலிக்க வேண்டும்!

இரு கைகளும் இணைந்து தட்டினால் தானே ஓசை வரும்!

அவர்களின் நிலையை பொறுத்த வரை அமுதனின் மனம் மட்டுமே மலர் பக்கம் வீழ்ந்திருக்கிறது. ஆனால், மலரின் மனம்?? அதிலிருக்கும் உணர்வுகள்!!!! அவை மலருக்கு மட்டுமே தெரிந்தவை!

காரிற்குள் இறுகிப் போய் அமர்ந்திருந்தவளுக்கு மனம் எரிமலையென கொதித்தது. அக்கம் பக்கத்தினருக்காக அமுதனை அத்தான் என்று அழைக்கும் சூழல் தன் வாழ்நாளில் உருவாகும் என்றவள் கனவிலும் நினைத்ததில்லை.

அவர்களை சமாளிக்க வேண்டும் என்பதற்காக தன் சமநிலை குழைந்து போனதை எண்ணி வேதனையாகக் கூட இருந்தது!

எல்லாவற்றிற்கும் மேலாக தான் அவனிடம் நடிப்பிற்காக அத்தான் என்று அழைத்தது தெரிந்தும் அவன் முகத்தில் மின்னல் எழுந்ததை தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அப்பட்டமாக அவன் மனதில் தனக்கான உணர்வுகள் என்னவென அவளால் நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது!

உணர்ந்ததை நினைக்கவே பயந்தவள் போல் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அவனோடு.. தன் வாழ்க்கை!

தன் வாழ்க்கைத் துணையாக அவன்..!

ஹ்ம்ம்ஹும்..!

வேண்டவே வேண்டாம்..!

மனதிற்குள் சொல்லொண்ணா வலி கூட எழுந்தது! இறுகி மூடி இருந்த கண்களுக்குள் அவளின் எண்ணவோட்டங்கள் அவளையே பந்தாட, கண்களில் காரணமில்லாமல் கண்ணீர் வேறு நிறைந்தது.

உள்ளத்தில் அளவுக்கதிகமான கோபமும் பொங்கியது. ஆனால், இந்த விஷயத்தில் கோபம் கொண்டால் அது தனக்கு தான் ஆபத்தாக முடியும் என்றெண்ணியவள் அவனிடம் பொறுமையாக சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

பத்து நிமிடங்கள் மேலாக கண்களை மூடியபடி என்னென்ன பேச வேண்டும் என்று தனக்குள்ளேயே ஒத்திகை பார்த்தவள், பெரும் மூச்சினை விட்டுக் கொண்டு அவனிடம் பேசுவதற்காக கண்களைத் திறக்க, அமுதகீதனோ ஒரு சாலையோர பூக்கடையில் காரினை நிறுத்தி இருந்தான்.

தேன்மலர் அவனிடம் தன் எண்ணத்தை பேசும் நோக்கத்துடன் “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று கூற,

“ஒரு நிமிஷம் மலர்..” என்று அவளை தடுத்து நிறுத்தியவன், அந்த பூ விற்கும் பெண்மணியிடம் “மல்லிகை பூ தாங்கக்கா” என கேட்டு இரு கை கொள்ளும் அளவுக்கு பூவினை வாங்கியவன், அதனுடன் ஒரு ரோஜா மலரையும் வாங்கினான்.

மல்லிகை சரம் நிறைய என்பதால் அந்தப் பெண்மணி பிளாஸ்டிக் கவரில் போட்டு கொடுக்க, அதை வேண்டாம் என்றவன் இரு கைகலாலயே மல்லிகை சரங்களை வாங்கிக் கொண்டான்.

எதற்காக அவன் பூ வாங்குகிறான் என்று ஆராயும் மன நிலையில் எல்லாம் தேன்மலர் இல்லை!

அவளுக்கு எப்படியேனும் அவனிடம் உங்கள் எண்ணம் நிறைவேறவே நிறைவேறாது என்று சொல்லி புரிய வைத்து விட வேண்டும் என தன்னிலை மறந்து அமர்ந்திருந்தாள்.

அவனோ பூவை இரு கைகளால் வாங்கி அதை ஒரு கையில் தாங்கிக் கொண்டு, மற்றொரு கையால் ஸ்டியரிங்கை இயக்கி சற்று தூரம் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரினை நிறுத்தினான்.

கார் நின்றதும் தேன்மலர் அவனைத் திரும்பிப் பார்க்க, அமுதகீதனும் அவளைத் தான் பார்த்திருந்தான்.

தேன்மலர் அவன் கைகளில் குவிந்து கிடக்கும் மல்லிகை பூவையும், அக்குவியலின் மேல் மகுடமாக வீற்றிருந்த பிங்க் வர்ண ரோஜா மலரையும் கண்கள் விரிய பார்த்தாள்.

சிறிது நொடிகள் இருவருக்கும் இடையே எவ்வித பேச்சு வார்த்தையும் இல்லை. கண்கள் மட்டுமே திறந்து கிடந்தன.

அமுதனுக்கு இதற்கு மேல் தன் மனதை மறைக்க முடியாது என்று தோன்றியது. எனவே, அவள் கண்களை நேராகப் பார்த்தவன் “மலர்..” என்று மென்மையாக அழைக்க, தேன்மலரின் மனதிற்குள் மத்தள சத்தம்!

அவன் பேச வருவதற்கு முன்பு தான் பேசி விட வேண்டும் என்றவள் அவசர அவசரமாக “ஒரு நிமிஷம்.. நான் பேசி..டு….றேன்..” என்று முடிக்கக் கூட இல்லை..

அமுதன் அவளின் வலது உள்ளங்கையை தன் இடது உள்ளங்கையால் பற்றி கொண்டான்! மிக அழுத்தமாக பற்றி கொண்டான்!

அவன் கையில் இருந்த வெம்மையை தன் உள்ளங்கையில் உணர்ந்ததும் தேன்மலருக்கு மூச்சே நின்று விட்ட போது… பேச்சு எங்கிருந்து வரும்?

திக் பிரம்மை பிடித்தவள் போல் அகன்ற விழிகளுடன் அவனையே பார்க்க, அமுதன் மேலும் அவளின் கரத்தினை இறுக பற்றிக் கொண்டு, பேசத் துவங்கினான்.

“தெரிஞ்சோ தெரியாமையோ சின்ன வயசுல இருந்தே நமக்குள்ள நல்ல டெர்ம்ஸ் இல்லாம போச்சு மலர். வளர வளர அப்பா மாதிரி எனக்கும் அத்தை குடும்பம்னாலே ஆகாதுன்னு இருந்துட்டேன். நம்ம தாத்தா உங்களை பத்தி பேச்செடுத்தாலே அப்பாவுக்கு ரொம்ப கோபம் வரும். எப்பப் பாரு திட்டிட்டே இருப்பாங்க. எல்லாத்துக்கும் மேல உங்க அண்ணனும் பொறுப்பில்லாம இருக்கதை பாத்திட்டு அப்பாவோட வெறுப்பு அப்படியே தங்கிடுச்சு. அவர் கைக்குள்ள இருந்து வளந்ததுனால எனக்கும் உங்க ஃபேமிலி மேல வெறுப்பு வந்தது. அப்படியே ஒதுங்கிட்டேன்” என்றவன், பார்வையை சாலை பக்கம் திருப்பிக் கொண்டு சிறிது இடைவெளி விட்டான்.

“வேணும்னு ஒதுங்க நினைக்கல மலர். காலப் போக்குல உங்க மேல பெரிய அபிப்ராயம் வர்றதுக்கான சூழ்நிலை உருவாகவே இல்லை. அதே சமயம் உங்க அம்மா, அண்ணா கிட்டையும் எந்த மாற்றமும் வரல! ஆனா…” என்றவன்,

நிமிர்ந்து அவளின் கண்களை ஆழமாக ஊடுருவி “நீ என்னை மாற வச்சிட்ட மலர்! நீ மட்டும் தான் மலர் என்னை மாத்தி இருக்க! நீ நினைக்கிற மாதிரி நான் இல்லடான்னு என் மூஞ்சில ஆயிரம் ரூபாயை விட்டெறிஞ்ச பாரு!! அன்னைக்கே என்னோட ஈகோ பாதி அடி வாங்கினது மட்டுமில்லாம உன் மேல சின்னதா மதிப்பும் உருவாச்சு!” என்றவன்,

இதழில் மென்மையான புன்னகையுடன், “போஸ்ட் கொடுக்க வீட்டுக்கு வந்திருந்த போது.. உனக்கு அடி பட்டப்ப கூட என் தயவுல உனக்கு எந்த உதவியும் வேண்டாம்னு காரை நிறுத்த சொன்னப்ப உன் மேல கோபம் வந்த அதே சமயம் ஆச்சர்யமும் வந்துச்சு!”

“உன் ஹாஸ்பிடல் பில்’லுக்கான பணத்தை கொடுத்தே தீருவேன்னு நீ சொன்னப்ப நீ என்னை விட பெரிய அழுத்கக்காரின்னு புரிஞ்சிகிட்டேன்! சொல்லப் போனா வைராக்கிய வைரம் தன்மான தங்கம்னு எல்லாம் உன்னை பத்தி மனசுக்குள்ள நினைச்சிருக்கேன்..” என்று சிரித்துக் கொண்டவன்,

“ஒவ்வொரு நாளும் உன் மேல எனக்கிருந்த அபிப்ராயம் மாறிட்டே போனது. நீயும் அதை புரிஞ்சிகிட்டு என்னை நெருங்காதன்னு தெளிவா முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டுப் போய்ட்ட! அதுக்கப்புறம் நான் பட்ட பாடு எனக்கு மட்டும் தான் மலர் தெரியும்!” என்றவன் அப்படியே மௌனமானான்!

தேன்மலருக்கு தொண்டைக் குழி ஏறி இறங்கியது! அசைவின்றி சிலை போல் அமர்ந்து கிடந்தாள். அவன் உள்ளங்கை வெம்மை அவளின் சில்லிட்டிருந்த விரல்களுக்கு கதகதப்பூட்டியது!

“கிருஷ்ணாவுக்கு நீ ஹெல்ப் பண்ண அன்னைக்கு அக்கா பேசினதை கேட்டு எனக்கு அப்படி ஒரு கோபம் மலர்! அவுங்க பேசினதை சுத்தமா என்னால ஏத்துக்க முடியல. அதுக்காக தான் உன் கிட்ட மன்னிப்பு கேட்க ஓடி வந்தேன்.. ஆனா.. நீ சீன் க்ரியேட் பண்ணாதீங்கன்னு சொன்னதை கேட்டதும் எனக்கு இன்னும் கோபம் வந்திடுச்சு. அதனால தான் அன்னைக்கு அப்படி நடந்துகிட்டேன். வேணும்னு.. செய்யல மலர். கோபம்.. அதை டக்குன்னு கட்டுப் படுத்த முடியல. அது என் குணம்.. எப்படி சொல்ல..” என்று தடுமாறியவன் அவள் கைகளை மேலும் அழுத்திக் கொடுத்து, “மன்னிச்சிடு மலர். இனி அப்படி நடந்துக்க மாட்டேன்” என்றான் மனதார.

தேன்மலருக்கு இதயம் எம்பிக் குதித்து வெளியே வந்துவிடும் போலிருந்தது. அதிகத் திகைப்பில் இருந்தவளுக்கு அவனின் வார்த்தைகளை கேட்க மட்டுமே முடிந்தது. எதிர் வினையாற்ற முடியவில்லை.

அமுதன் அவளின் கண்களை நேராக பார்த்து, கையிலிருந்த மல்லிகை குவியலை அவள் முன் நீட்டி “எப்படி நீ எனக்குள்ள வந்தேன்னு எனக்குத் தெரியல மலர். ஆனா, மனசு முழுக்க நீ தான் இருக்க. என் மூச்சு நிக்குற வரைக்கும் நீ மட்டும் தான் இருப்ப! வாழ்க்கை முழுக்க மலரோட அமுதனா வாழனும்னு ஆசைப் படுறேன்! அந்த ஆசை நிறைவேறுறது உன் கைல மலர்..!” என்றவன், அவள் தன்னை திகைத்து பார்க்கும் பொழுதே அவள் மடியினில் மல்லிகை குவியலையும் ரோஜா மலரையும் வைத்தான்.

அமுதம் மலரின் மடியில் தன் விருப்பத்தை சேர்ப்பித்திருந்தது!

error: Content is protected !!
Scroll to Top