பணிதல் – 17
தன் வீட்டு வாசலில் நிற்பது அமுதகீதனா என்று நம்ப முடியாமல் திகைத்து நின்றாள் தேன்மலர்.
வலது கை விரல்களால் இரு கண்களையும் தேய்த்து விட்டுக் கொண்டவளுக்கு, எதிரே நிற்பவனின் உருவம் நிஜம் தானா என்று தோன்றியது.
அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தமையால், அவனின் பிம்பம் தெரிகிறதோ என்று குழம்பிப் போனவள் அவனின் முகத்தையே பார்த்தபடி நிற்க, அமுதகீதனுக்கு அவளின் பார்வையில் மூச்சடைத்தது.
அவனுமே தன்னை மறந்து அவளைத் தான் பார்த்திருந்தான்!
நெற்றியில் சிறிய குங்கும வர்ண கோபுர பொட்டு.. காதோர கூந்தலை பின்னலிட்டு எஞ்சி இருந்த கூந்தலை மயிலிறகாய் விரித்து விட்டிருந்தாள். மாசில்லாத பளிச்சென்ற முகம்.. வீட்டில் அணியும் சாதாரண நைட்டி!
அவ்வளவே மலரின் தோற்றம்!
ஆனால், அதுவே அமுதனின் மனதை அசைக்க போதுமானதாக இருந்தது.
எதிரே நிற்பவனை கூர்ந்து கவனித்தாள் தேன்மலர். விசேஷ வீட்டிலிருந்து நேராக இங்கே வந்திருப்பதை பறைசாற்றும் விதமாக பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை கலையுடன் இருந்தான் அமுதகீதன்.
நெற்றியில் சந்தனம்.. அதன் மேல் குங்குமம்.. இங்கும் அங்கும் ஆடாத வண்ணம் கேசத்தை ‘ஜெல்’ போட்டு படிய வைத்திருந்தான்.
பார்த்ததும் மனதில் பதிந்து போகக் கூடிய ஆண்மைத் தோற்றத்தில் நின்றிருந்தவனின் மீதிருந்து தன் கூர்ந்த பார்வையை குறைத்துக் கொண்டவள், இரண்டு நொடிகள் மௌனமாக நின்றாள்.
வீடு வரை வந்திருப்பவனை வரவேற்க வேண்டும்.. ஆனால், வரவேற்கும் விதமான சொற்களை உதிர்க்க வாய் வரவில்லை அவளுக்கு.
அழைக்கக் கூடாது என்றில்லை. எதோ ஒரு வித தடை.. தயக்கம்..
அமுதனும் அவளின் மனவோட்டம் புரிந்து அமைதியாகவே நிற்க, மேலும் இரண்டு நிமிடங்கள் கடந்த பின்னரே, “வாங்க..” என்றாள் தேன்மலர்
“ம்ம்..” என்று மெல்ல தலை அசைத்தவன், அவள் வழி விட்டதும் உள்ளே வந்தான்.
இருவருக்குமே என்ன பேச என்று தெரியவில்லை. அன்றைய நிகழ்விற்கு பின்னர் இருவருமே ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவே கூடாது என்று முடிவெடுத்திருக்க, ஆனால் விதி தன் வீட்டு வாசலிலேயே அவனைக் கொண்டு வந்து நிறுத்தும் என தேன்மலர் நினைத்திருக்கவில்லை.
என்ன விஷயமாக இங்கே வந்தான் என்று அவனே சொல்லட்டும் என்றவள் அமைதியாக நிற்க, அமுதனும் அமைதியை தத்தெடுத்துக் கொண்டு நின்றிருந்தான்.
இந்த வீட்டிற்கு அவன் சிறு பிள்ளையாக இருந்த போது கைலாசநாதனுடன் வந்திருக்கிறான். அதற்குப் பின்னர் அத்தை வீட்டுப் பக்கம் எட்டிப் பார்த்ததாகக் கூட நினைவில்லை.
இன்று வரக் கூடிய சூழல் உருவாகி இருந்தது.. உண்மையை சொல்லப் போனால் மலரைக் காணவென இங்கே வரக் கூடிய சூழலை அவன் கை பற்றிக் கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும்!
இன்று கிருஷ்ணாவுக்கு பூப்பு நீராட்டு விழா என நான்கு நாட்களுக்கு முன்பே இன்பசேகரனும் வசுந்தலாவும் நேரில் வந்து ஞானமங்கை குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
மூத்த அண்ணன் நேரில் வந்ததும் ஞானமங்கைக்கு தலை கால் புரியவில்லை. படபடப்பில் கண்ணீரே வந்து விட்டிருந்தது.
“உன் சொந்த தங்கச்சி வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு இத்தனை வருஷம் ஆகிடுச்சாண்ணே.. இன்னமும் என்னை மன்னிக்க மனசு வரலையா உனக்கு? நான் எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணேனோ.. புருஷனும் சரியில்லாம போயி.. புள்ளையும் சரியில்லாம இருக்கான்.. என் தலை விதி.. நானும் மகன் திருந்தணும்னு கிறுக்கி மாதிரி கோயில் குளம் சாமியார்னு திரிஞ்சிட்டு காலத்தை ஓட்டிட்டு இருக்கேன். அதுக்காக நீ என்னை மொத்தமா ஒதுக்கினதை என்னால தாங்கிக்கவே முடியலண்ணே..” என்று நீளமாக பேசி ஒப்பாரி வைத்து விட்டார் மங்கை.
இன்பசேகரன் தங்கையின் ஒப்பாரியில் கடுப்பாகி “பழசை பேச வேண்டாம் மங்கை. இப்பவும் எனக்கு உன் மேலயோ.. உன் குடும்பத்து மேலயோ பெரிய அபிப்ராயம் இல்லை. என் மூத்த பொண்ணுங்க மூணு பேத்துக்கும் அத்தை முறை செஞ்சது நீ தான்.. கிருஷ்ணாவுக்கும் நீ தான் வந்து தலைக்கு தண்ணி ஊத்தி பூ வைக்கணும்னு வசுந்தலா பிரியப்பட்டா. அதுக்காக தான் இத்தனை வருஷம் இந்த வீட்டுப் படி மிதிக்காதவன் இன்னைக்கு வந்திருக்கேன்.” என்றார் ஒட்டாத குரலில்.
மனைவி சொன்னதற்காக தான் வந்தேன் மனதார அழைக்க வரவில்லை என்பது அவரின் முகம் காட்டும் உணர்வுகளை வைத்தே அங்கிருந்தே அனைவராலும் புரிந்து கொள்ள முடிந்தது.
வசுந்தலா சங்கடத்துடன் கணவரின் முகம் பார்த்து இப்படி பேச வேண்டாமே என்பது போல் பார்வையால் கெஞ்ச இன்பசேகரன் மனைவியின் பார்வையை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.
கணவர் சாந்தமாக பேச மாட்டார், தான் தான் சூழ்நிலையை கையாள வேண்டும் என்று புரிந்து கொண்ட வசுந்தலா “அவருக்கு இன்னும் உன்னை நினைச்சு கோபமும் வருத்தமும் போகல மங்க.. அதனால தான் இப்படி எல்லாம் பேசுறார். நீ அதை பெருசா எடுத்துக்க வேண்டாம்” என்று ஆதூரமான குரலில் கூறியவர்,
தேன்மலரிடம் அன்று மகளுக்காக செய்த உதவிக்கு மனதார நன்றி உரைத்து விட்டு அனைவரையும் ஒரு பார்வை பார்த்து “எல்லாரும் கட்டாயம் விசேஷத்துக்கு வந்திடனும்..” என்றார் எந்த வித வேறுபாடுகளும் இல்லாத குரலில்.
வசுந்தலாவிற்கு ஆரம்ப கால கட்டத்தில் மங்கை குடும்பத்தின் மீது கோபமும் வெறுப்பும் இருந்தது தான். ஆனால், அவை எல்லாம் காலப் போக்கில் மறைந்துவிட்டிருந்தது.
இப்போது மங்கையையும் திவாகரனையும் நினைத்து மனதிற்குள் இரக்கம் கொள்வார். மற்றபடி கணவரைப் போல் கோபமோ வெறுப்போ அவருக்கில்லை.
அவர்களுடன் நல்ல முறையில் உறவு பாராட்டவே நினைக்கிறார். எனவே தான் இன்று காலை தங்கைக்கு அழைப்பு சொல்ல எனக்கு பிரியமே இல்லை என்று வழக்கம் போல் முரண்டு பிடித்த கணவரை சரி கட்டி “நம்ம மூத்த பொண்ணுங்க மூணு பேருக்கும் மங்கை தான் முறை செஞ்சா. என்ன குறைஞ்சு போச்சு.. மூணு பேரும் நல்லா இருக்காங்க தான. ரூபிக்கும் அவ தாங்க செய்யனும். தயவு செஞ்சு மறுத்துப் பேசாதீங்க..” என்று மன்றாடி தான் கணவரை இங்கு அழைத்து வந்திருந்தார்.
இன்பசேகரன் மனைவி கூறியதை கேட்டு சற்றும் யோசிக்காமல் தங்கையின் புறம் பார்வையை திருப்பி “உன் மகனைத் தவிர்த்து யாரு வேணும்னாலும் வரலாம்..” என்று முகத்தில் அறைந்தார் போல் கூறி விட, ஞானமங்கையின் முகம் அப்படியே விழுந்து விட்டது.
அண்ணன் சொல்வதை மறுக்கக் கூட முடியாத சூழலில் நிற்பது மேலும் கண்ணீரைத் தான் பெருக செய்தது. கவிரத்னா இதற்கெல்லாம் பழகிக் கொண்டதால் அவள் சிலை போல நின்றிருந்தாள்.
மூத்த மாமாவின் பேச்சை கேட்டு தேன்மலரின் இதழோரம் இகழ்ச்சியுடன் வளைந்தன.
தன் உடன் பிறந்தவனை வர வேண்டாம் என்று சொன்னதை பற்றி அவளுக்கு எவ்வித வருத்தங்களும் இல்லை. அண்ணன் இப்படி ஒரு அழைப்பிற்கு தகுதியற்றவன் என்று அவளும் புரிந்தவள் தான்..
ஆனால், எஞ்சி இருக்கும் நாங்கள் என்ன செய்தோம்?
யாருவேணும்னாலும் வாங்க.. என்று விட்டேற்றியாக கூப்பிடுவதற்கு?
இந்த அழைப்பு கடனுக்கே என்று அவர்கள் வந்த போதே தெரியும்! இப்போது இன்பசேகரனின் பேச்சைக் கேட்டு ‘எப்பவும் போல எங்களை ஒதுக்கியே வச்சிருக்கலாம்.. எதுக்கு இவ்வளவு தூரம் வந்து இஷ்டமே இல்லாம அழைப்பு வைக்கணும்.. இதுக்கு வராமலே இருந்திருக்கலாம்’ என விரக்தியாக எண்ணியவள் அமைதியாக தன் பேகினை எடுத்துக் கொண்டு “நான் ஆஃபிஸ்க்கு கிளம்புறேன் ம்மா..” என்று கூறி விட்டு யாரையும் பார்க்காமல் கிளம்பி இருந்தாள்.
அவள் அப்படி கிளம்பியதும் இன்பசேகரன் கடுமையான அதிருப்தியுடன் தங்கையை பார்க்க, மங்கையோ மகளை மனதிற்குள் அர்ச்சித்து விட்டு அண்ணனிடம் “இன்னைக்கு முக்கியமான வேலை இருக்குன்னு காலைலையே சொல்லிட்டு இருந்தா அண்ணா. அதான் சட்டுன்னு கிளம்பிட்டா.. நீங்க ஒன்னும் மனசுல வச்சுக்காதீங்க” என்று அன்றைய தினத்தில் அண்ணனை சமாளித்தவருக்கு, அடுத்த வந்த நாட்களில் மகளை சமாளிக்கவே முடியவில்லை.
கிருஷ்ணாவின் விசேஷத்திற்கு திவாவை தவிர நாம் அனைவரும் சென்றே ஆக வேண்டும் என்று அந்த நான்கு நாட்களும் மங்கை விடாமல் வலியுறுத்திக் கொண்டே தான் இருந்தார்.
அப்போதெல்லாம் தேன்மலர் வாயே திறக்கவில்லை. அன்னை கூறியதை கேட்டுக் கொண்டு அமைதியாக வலம் வந்தாள்.
இன்று காலை மங்கை பரபரப்புடன் கிளம்பி அறையை விட்டு வெளியே வந்ததும் முதலில் கண்டது சுகமாக உறங்கிக் கொண்டிருந்த மகளைத் தான்.
“ஹே தேனு.. எந்திரிடி.. இன்னும் என்ன தூக்கம்? நேரமாச்சு.. ஒன்பது மணிக்கு விசேஷம் ஆரம்பிச்சிடுவாங்க. இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்” என்று தொண்டை தண்ணி வற்றும் அளவிற்கு கதறினார்.
தேன்மலர் அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை! அம்மணி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து வெளிவரத் தயாரில்லை!
கவியும் கோகுலனும் தயாராகி வந்தும் கூட அவள் எழாமல் இருக்க, மங்கை மகளின் முதுகில் இரண்டு தட்டு தட்டினார்.
இதற்கு மேல் தூங்கினால் அன்னை விட மாட்டார் என சாவகாசமாக எழுந்து அமர்ந்த தேன்மலர் “நான் வரலமா. நீங்க போய்ட்டு வாங்க” சுருக்கமாக என்றாலும் அழுத்தமாக தன் மறுப்பினை கூறியவள் ஓய்வறைக்குள் புகுந்து கொண்டாள்.
மங்கை கடுப்புடன் மகளை இருபது நிமிடங்களுக்கும் மேலாக அர்ச்சித்தபடி இருக்க, தேன்மலர் ஓய்வறையை விட்டு வெளியே வரவில்லை.
தஸ் புஸ் என கோபத்துடன் மூச்சு வாங்கிக் கொண்டிருந்த மாமியாரிடம் “தேனு வரலேன்னா விடுங்க அத்த. நாம மட்டும் போகலாம். அவ வீட்ல இருக்கட்டும். அவளுக்கும் இன்னைக்கு ஒரு நாள் தான ரெஸ்ட்” என்று எப்படியோ கவி தான் மாமியாரை சமாளித்து நாம் மட்டும் செல்வோம் என்று கூறி அவரை அழைத்துச் சென்றாள்.
கவியிடம் முன்றைய நாள் இரவே தான் வரப் போவதில்லை எனும் விஷயத்தை சொல்லி விட்டாள் தேன்மலர். அது மட்டுமல்லாது “நாளைக்கு காலைல நான் வரலேன்னு சொன்னதும் அம்மா ஆட்டமா ஆடுவாங்க அண்ணி. நீங்க தான் அம்மாவை சமாளிச்சு எப்படியாவது கூட்டிட்டு போகனும்!” என்றிருந்தாள்.
அதற்கேற்ப கவியும் மாமியாரை சமாளித்து அவருடன் கிளம்பி விட்டாள்.
திவாகரன் வழமை போல் அன்னையிடம் தன் ‘நல்ல பிள்ள’ வேஷத்தை போட்டு இரண்டாயிரம் பணம் வாங்கி தன் குடிமகன் கடமையை நிறைவேற்ற சென்றிருந்தான்.
தேன்மலர் மட்டுமே வீட்டில் இருந்தாள்! இப்போது அவளோடு அமுதகீதனும்!
அவன் அமைதியாகவே நிற்கவும் “உட்காருங்க.. காஃபி எடுத்திட்டு வரேன்..” என்றவள் நகர,
“இல்ல மலர்..” என்று அவசர அவசரமாக மறுத்தவன், அவள் நின்றதும் “நான்.. உன்னை அழைச்சிட்டு போக தான் வந்தேன்..” என்றான் மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பவன் போல்!
தேன்மலர் புருவங்கள் சுருக்கி அவனைப் பார்க்க, “அ..அது.. இன்னைக்கு தான் கிருஷ்ணாக்கு ஃபன்ஷன்.. நீ வரலேன்னதும் அம்மா உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றவன், அவள் கோபத்துடன் எதோ பேச வருவதை உணர்ந்து,
“இங்க வந்ததும் அம்மா உன் கிட்ட பேசணும்னு சொன்னாங்க. கால் பண்ணித் தரேன்..” என்றவன், டக்கென்று அலைபேசியை எடுத்து அழைப்பினை விடுத்து அவளிடம் நீட்டினான்.
தன்னை பேசவே விடாமல் அவன் கடகடவென செய்த செயல்களை எண்ணி தேன்மலர் கண்ணில் மெல்லிய கோபத்துடன் அவனைப் பார்க்க, அமுதனோ அவளின் கோபத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாதவனாய் “லைன் போகுது..” என்றான் சமாளிப்புடன்.
வசுந்தலா அழைப்பை ஏற்றதும் ஸ்பீக்கரில் போட்டவன் அவளை பேசும் படி கண் ஜாடை காட்ட, அந்தப் பக்கமிருந்து வசுந்தலா “சொல்லு அமுதா.. மங்கை வீட்டுக்கு போய்ட்டியா? தேனு இருக்காளா?” என்றார்.
“ஹ்ம்ம் இருக்காமா. நீங்க பேசுங்க” என்றவன், மலரின் முகம் பார்க்க, பெரு மூச்சுடன் அவன் கையில் இருந்த அலைபேசியை வாங்கியவள் “அத்தை..” என்றாள் தயக்கத்துடன்.
“என்ன தேனு.. அன்னைக்கு ரூபிக்கு அவ்வளவு உதவி செஞ்சிட்டு இன்னைக்கு வராம இருக்க? லீவ் தான.. அம்மா அண்ணியோட நீயும் வந்திருக்க வேண்டியது தான..” என்று உரிமையுடன் கடிந்து கொண்டவர்,
“அன்னைக்கு உன் மாமா பேசுனதை நினைச்சு வராம இருக்கியா??” என்றதும் தேன்மலர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் உதடுகளை கடித்தபடி நிற்க,
“அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்..” என்றவரை பதட்டத்துடன் இடை மறித்தாள் தேன்மலர்.
“ஐயோ என்னத்தை நீங்க? அப்படி எல்லாம் எதுவும் இல்ல” என்றாள் சங்கடம் நிறைந்த குரலில்.
“இல்ல தேனு.. ஆயிரம் இருந்தாலும் உனக்கு எங்க மேல வருத்தமும் கோபமும் இருக்க தான் செய்யும். அது நியாயம் தான்.. அதுக்காக தான் நான் மன்னிப்பு கேட்டேன்..” என்றவர்,
“இன்னைக்கு நீ இங்க வந்தீன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் தேனு. சொந்தம் விட்டுப் போயிட கூடாதுன்னு தான் இத்தனை வருஷம் கழிச்சு உங்க மாமா கிட்ட அன்னைக்கு சண்டை போட்டு உங்க வீட்டுக்கு அழைப்பு சொல்ல கூட்டிட்டு வந்தேன். ஆனா, அவரு வழக்கம் போல முகத்துல அடிச்ச மாதிரி பேசுவாருன்னு நானும் நினைக்கல. நீ அதெல்லாம் மனசுல வச்சுக்காம கிளம்பி வா தேனு.. ஃபோன்ல சொல்லி உன்னை மட்டும் கிளம்பி வர சொல்லலாம்னு தான் இருந்தேன். அப்புறம் சரி தனியா வர சொல்ல வேண்டாம்னு சேது அண்ணனை வர சொல்லலாம்னு யோசிக்கும் போது தான் அமுதன் ‘நானே போய் கூட்டிட்டு வரேன்மா’ன்னு சொன்னான். இங்க விசேஷத்த விட்டுட்டு நானும் வர முடியாது. எனக்கும் வீட்டாளுங்க யாராவது வந்து உன்னை கூட்டிட்டு வரது தான் சரின்னு பட்டது. அதான் அமுதனையே வர சொல்லிட்டேன்!” என்றதும், தேன்மலர் கண்களை மட்டும் உயர்த்தி அவனை முறைக்க, அமுதன் சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டான்.
அன்னை தன் குட்டுக்களை இப்படி பொட்டென்று உடைப்பார் என்று அவனென்ன கனவா கண்டான்?
இன்று காலை மங்கையும் கவியும் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனின் கண்கள் அவர்களுக்குப் பின்னால் தேன்மலரைத் தான் தேடியது. அவள் வரவில்லை என்று அறிந்ததும் மிகுந்த வருத்தம் அவனுள்!
அன்று அவள் கையில் பணத்தை திணித்ததை எண்ணி இப்போதும் தன் மேலயே தீராத கோபம் பொங்கியது அவனுக்கு.
தன் மனதை அவளிடம் சொல்லவில்லை என்றாலும் அன்றைய செயலுக்கு மன்னிப்பாவது கேட்டு விட வேண்டும் என்று தான் அன்னை சேதுவை அனுப்பலாம் என்று சொல்லியதற்கு “நானே போய் அழைச்சிட்டு வரேன்மா” என்று கூறி இருந்தான்.
வசுந்தலாவும் வீட்டாட்கள் செல்வதும் சரி என்று மகனை கிளம்ப சொல்லி இருந்தார். இப்போது தேன்மலரிடமும் வந்தே தீர வேண்டும் என்று அவள் மறுக்க முடியாத வண்ணம் உரிமையுடன் கட்டளை போட்டவர், மகனிடம் தேன்மலரை பத்திரமாக அழைத்து வர சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
அவர் அழைப்பை துண்டித்ததும் தேன்மலர் பெருமூச்சுடன் பொத்தென்று சோஃபாவில் அமர்ந்து விட, அமுதகீதன் வாயே திறக்கவில்லை.
முழுதாக ஐந்து நிமிடங்கள் கடக்கும் வரையில் அவர்களுக்கிடையே மௌனம் மட்டுமே உலா வந்தது.
இவ்வளவு தூரம் வசுந்தலா பேசியதற்கு பின்பு போகாமல் இருந்தால் நன்றாக இராது என்று முறையாக எண்ணியவள், முகத்தை இரு கரங்களாலும் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.
அமுதன் அவளின் முகத்தையே சிறு எதிர்பார்ப்புடன் பார்க்க, “நீங்க கிளம்புங்க. நான் ரெடி ஆகிட்டு என் ஸ்கூட்டிலயே வந்திடுறேன்” என்றதும் அவனுக்கு புஸ் என்றாகி விட்டது.
அவளுடன் தனிமையில் பேச வேண்டி தான் இத்தனை தூரம் அன்னையை சமாளித்து அவனே கிளம்பி வந்தான்.
இவள் என்னடாவென்றால் ‘நான் ஸ்கூட்டியில் வரேன்’ என்று கூறுகிறாள் என நொந்து போனவன்,
“இல்ல மலர்.. நானே அழைச்சிட்டு போறேன்..”
“ப்ளீஸ்.. சொன்னா புரிஞ்சிக்கங்க. அத்தை இவ்வளவு தூரம் சொன்னதுனால தான் அங்க வர்றதுக்கு சம்மதிக்கிறேன். நானே வரேன்.. நீங்க கிளம்புங்க” என்றவள் அழுத்தம் திருத்தமாக சொல்ல, அமுதனால் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
அவளுடனான தனிமை கிட்டவே கிட்டாது போலும்.. என்று தவிப்புடன் எண்ணியவன், “பத்திரமா கிளம்பி வா மலர்..” என்று மட்டும் கூறி விட்டு வெளியேறி விட்டான்.
அவன் சென்றதும் கதவை அடைத்து விட்டு வந்தவளுக்கு ‘அய்யோ’ என்றிருந்தது.
சுத்தமாக அங்கே செல்ல விருப்பமில்லை! ஆனால், வசுந்தலா மன்னிப்புக் கேட்டது வேறு மனதை நெருட, வேறெதையும் சிந்திக்காமல் அறைக்குள் சென்று தயாரானாள்.
சுடிதார் அணியலாம் என்று யோசித்தவள், கப்போர்டில் இந்த வருட பிறந்தநாளுக்கு கவிரத்னா வாங்கிக் கொடுத்த பட்டுப் புடவை கவர் அப்படியே பிரிக்காமல் இருப்பதைக் கண்டதும் “அண்ணி வாங்கிக் கொடுத்ததை கட்டவே இல்ல.. இதை இன்னைக்கு கட்டலாம்” என்று அதனை எடுத்தாள்.
சரியாக பதினைந்து நிமிடங்கள் எடுத்தது அவள் முழுதாக தயார் ஆவதற்கு!
கண்ணாடியில் ஒரு முறை தன்னைப் பார்த்துக் கொண்டவளுக்கு புடவையில் சற்று அழகாக இருப்பது போல் தோன்றியது.
மெல்லிய புன்னகை கூட முகத்தில் பூக்க, ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டவள் கதவை பூட்டி சாவியை ஹேன்ட் பேக்கில் வைத்துக் கொண்டு வண்டியை நெருங்க, ஸ்கூட்டி பஞ்சராகி ‘நான் உனக்கு உதவ முடியாது தாயி..’ என்ற ரீதியில் கிடந்தது!
“ப்ச்… இப்பன்னு பார்த்து பஞ்சராகி இருக்கே..!” என்று எரிச்சலுடன் காலை நிலத்தில் உதைத்தவள், தெரு முனையில் ஆட்டோ பிடித்துக் கொள்ளலாம் என்று வீதியை நோக்கி நடை போட்டாள்!
அக்கம் பக்கத்தினர் அவளை புடவையில் கண்டதும் என்ன ஏதென விசாரித்து குடைந்த பின்னரே போக விட்டனர்.
“இவுங்களுக்கெல்லாம் ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு புடவை கட்டிட்டா போதும்.. என்ன விசேஷம்.. நிச்சயமா.. கல்யாணமா.. எங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லலைன்னு கடுப்பக் கிளப்ப வேண்டியது..” என்று அவர்களை வாயில் மென்றபடி தெரு முனையில் வந்தவள் அப்படியே நின்று விட்டாள்.
அங்கே ஆட்டோவோடு ஆட்டோவாக அமுதகீதனின் மோரிஸ் கேரேஜும் நின்றிருந்தது! அவனும் நின்றிருந்தான்.
மலரைக் கண்டதும் காரில் சாய்ந்து நின்றிருந்தவன் நிமிர்ந்து நின்றான்.
இளம் ரோஜா வர்ண பட்டுப் புடவையில் அவனின் இதயத்தை மொத்தமாக பறித்துக் கொண்டாள் தேன்மலர்!
முகத்தில் எவ்வித பெரிய ஒப்பனைகளும் இல்லை. கோபுர பொட்டில்லாமல் வட்ட வடிவ பொட்டை வைத்திருந்தாள்.
ஒரு கையில் பிரேஸ்லெட்.. மற்றொரு கையில் வழமை போல கடிகாரம்.
விரித்து விட்டிருந்த ஈரக் கூந்தலை இறுக்கமாக அல்லாமல் தொலதொலவென பின்னலிட்டிருந்தாள்.
மொத்தத்தில் பெரிதான அலங்காரங்கள் இன்றி இயற்கை மலராகவே கண்களுக்கு காட்சி கொடுத்தாள்.
அமுதகீதனுக்கு அவளில் இருந்து பார்வையை அகற்றுவது மிகக் கடினமாக இருந்தது. இப்படி தன்னையே மறந்து போக வைக்கும் அளவிற்கு அவள் வந்து நின்றதும் அவனுக்கு ஒன்றும் ஓடவில்லை.
இதயம் மட்டும் மலர் மலர் என்று ஜெபம் செய்து கொண்டிருந்தது.
அந்த நொடி எந்த வித தடைகளும் நெருடலும் இல்லாமல் திடமான ஒரு முடிவினை எடுத்தான் அமுதகீதன்!
தனக்குத் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது தன் மலரோடு தான் என்று!!!
என்ன ஆனாலும் சரி! மலரே தனக்கு மனைவி என்று மனதினுள் உறுதி ஏற்றுக் கொண்டான்!
அமுதம் மலரை மனப்பூர்வாக மணக்க தயாராகி இருந்தது!