மலர் பாதம் பணிந்து – 16
தலைக்கு குளித்து விட்டு வீட்டில் அணியும் சாதாரண நைட்டியை அணிந்து கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தாள் தேன்மலர்.
வீட்டில் யாருமில்லை. அவள் மட்டுமே!
தலையை துவட்டியபடி அலைபேசியை எடுத்தவள் பார்க்க, ரஞ்சிதனிடமிருந்து ஐந்து அழைப்புகளும் இரண்டு குறுஞ்செய்திகளும் வந்திருந்தன.
“ஹே தேனடை.. என்ன பண்ற? கால் பண்ணா எடுக்கல?” என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
தேன்மலருக்கு மீண்டும் அழைக்கவோ குறுஞ்செய்தி அனுப்பவோ தயக்கமாக இருந்தது. தற்போது அவன் எங்கிருப்பான் என்று அவளுக்குத் தெரியும். ஆகையால், தான் அழைக்கத் தயங்கினாள்.
‘சரி.. காஃபி போட்டு வந்து அவனுக்கு கால் பண்ணுவோம்’ என்று பெருமூச்சுடன் ஃபோனை மேஜை மேல் வைத்து விட்டு இரு பக்க காதோர முடிகளை எடுத்து பின்னலிட்டவள், கிச்சனிற்கு சென்று தனக்கான காஃபியை கலந்து எடுத்து வர, கவிரத்னாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
திரையில் ‘Kavi Anni’ என்று பார்த்ததும் “எருமை ரஞ்சித்.. அவன் கூப்பிட்டு ரெஸ்பான்ஸ் பண்ணலேன்னதும் அண்ணியை கூப்பிட சொல்லிட்டான் போல” என்று பல்லைக் கடித்தவள், அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்க அண்ணி..”
“தேனு.. ரஞ்சித் தான் உனக்கு கால் பண்ணி தர சொன்னான்” என்ற கவி,
“இதோ பக்கத்துல தான் இருக்கான். அவன் கிட்ட தரேன். நீ பேசு” என்றவள் அலைபேசியை ரஞ்சிதனிடம் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டாள் போலும்.. இப்போது ரஞ்சிதன் அழைப்பில் இருந்தான்!
“பொறுமையில்லாத எருமை..”
“மேடம் நான் கூப்பிட்டா எடுக்க மாட்டீங்களோ..” என இருவரும் ஒரே நேரத்தில் பேசி இருக்க, தேன்மலர் அவன் சொன்னதில் கடுப்பாகி “இப்ப தான் குளிச்சிட்டு வந்தேன் பக்கி. அதுக்குள்ள அண்ணி மொபைல்ல இருந்து கூப்பிடுற நீ!” என்று திட்ட,
“மெசேஜ் பார்த்தும் ஏன் ரிப்ளை அனுப்பல..” என ரஞ்சித் கேட்க,
“காஃபி போட்டு வந்து கூப்பிடலாம்னு இருந்தேன்.. எருமை!” என்று அதற்கும் திட்டினாள் தேன்மலர்.
“சரி.. சரி.. அதை விடு! நீ ஏன் கிருஷ்ணாவோட ஃபங்ஷனுக்கு வரல? இன்னைக்கு உனக்கு ஆபீஸ் லீவ் தான!”
ரஞ்சிதன் கேட்டதும், தேன்மலரிடம் பெரும் மௌனம்!
அவன் கேட்ட கேள்வி ஒரு வாரத்திற்கு முன்பு நிகழ்ந்த விஷயங்களை நினைவு படுத்த, கண்களை இறுக மூடிக் கொண்டாள் தேன்மலர்.
“ஹே தேனடை.. இருக்கியா? என்ன பதிலை காணோம்..?” என்று ரஞ்சிதன் அவள் பதில் கூறாததில் கேட்க,
“இருக்கேன் ரஞ்சி..” என்ற தேன்மலரின் குரலில் தென்பட்ட மாற்றத்தை கண்டு கொண்டான் ரஞ்சிதன்.
“ஹே தேனு.. என்னாச்சு? வாய்ஸ் மாறிடுச்சு?”
“ஒன்னுமில்ல ரஞ்சி..” என்று குரலை செறுமிக் கொண்டு பதில் சொன்னவள்,
“வரத்தோணல ரஞ்சி.. ரொம்ப டயர்டா இருந்தது. அதனால தான் அம்மா ஃபோர்ஸ் பண்ணி கேட்டும் நான் வரல. நீங்க போய்ட்டு வாங்கன்னு சொல்லிட்டேன்” என்றாள் கோர்வையாக.
அவள் சொல்வது பொய் என்று ரஞ்சிதனால் யூகிக்க முடிந்தது. என்னவோ இருக்கிறது என்று நினைத்தவன் அவளிடம் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை. நேரில் பார்க்கும் போது கேட்டுக் கொள்ளலாம் என்றவன் மேற்கொண்டு எதையும் பேசாமல்,
“சரி தேனு.. நீ ரெஸ்ட் எடு. நான் ஒரு வாரத்துக்கு இங்க தான் இருப்பேன். நாளைக்கு உன்னை வந்து பாக்குறேன்” என்க, “சரி ரஞ்சி..” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.
கண்களை மூடியபடி சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டவளுக்கு மனம் அமைதி இழந்து கிடந்தது.
அந்த அமைதியின்மைக்கு காரணம் அமுதகீதன் என்று நினைக்கையில் மனம் இன்னமும் அமைதியிழந்து போக எரிச்சலுடன் நெற்றியில் தட்டிக் கொண்டவள் கண்களை மூடிக் கொண்டு சோஃபாவில் படுத்து விட்டாள்.
அவள் கலந்த காஃபி குளிர்ந்து போய் இருக்க, அவளின் மனம் மட்டும் அன்று அமுதகீதன் பேசிய பேச்சை நினைத்து தகித்துக் கொண்டிருந்தது.
ஒரு வாரத்திற்கு முன்பு..
கிருஷ்ணரூபி பருவமடைந்திருந்த நாளன்று..
அமுதகீதன் தேன்மலரிடம் கோபமாக பேச வர, அதற்குள் யோகவள்ளி வீட்டிற்குள் நுழைந்திருந்தார். அவருடன் ஒரு உறவுக்கார பெண்மணியும் உடன் வந்திருக்க, அமுதகீதனின் கோபம் அப்படியே பின் தங்கி விட்டது.
“வாக்கா.. வாங்க அத்த..” என்றவன் இருவரையும் வரவேற்க, யோகவள்ளி தம்பியின் புறம் பார்வையை திருப்பாமல் அங்கே நின்றிருந்த தேன்மலரை பார்வையால் ஆராய்ந்தார்.
சட்டென்று யோகவள்ளிக்கு தேன்மலரை இனம் காண முடியவில்லை. யாரென்று புருவச் சுளிப்புடன் அவளின் முகத்தையே கூர்ந்து கவனிக்க, அவரின் அறிமுகமில்லாத ஆராயும் பார்வையை வைத்தே அவருக்குத் தன்னை தெரியவில்லையென்று தேன்மலருக்கு புரிந்து போனது.
மேலும், அவளுக்கு வந்திருப்பது அமுதகீதனின் மூன்று அக்காக்களில் ஒருவர் என்று தான் தெரிந்ததே தவிற குறிப்பாக யாரென்று தெரியவில்லை.
இவர்களை எல்லாம் கைலாசநாதன் இறந்த போது பார்த்தது.. அதற்குப் பின்னர் பெரிதாக எந்த ஒரு விசேஷங்களிலும் பார்த்தது கிடையாது.
பார்க்கும் சூழ்நிலை இருந்தாலும் பெரிதாக உறவு பாராட்டியது கிடையாது!
ஆனாலும், மரியாதைக்காக தலையசைத்து, “வாங்க” என்று பொதுவாக தேன்மலர் அழைக்க, யோகவள்ளியுடன் வந்திருந்த உறவுக்கார பெண்மணி “இது மங்கை மக தேனு தான” என்று அவளை சரியாக அடையாளம் கண்டு கேட்க, தேன்மலர் ஆம் என்பது போல் தலையசைத்தாள்.
அமுதகீதனும் ஆமோதிப்பாக
தலையசைத்து “இன்னைக்கு கிருஷ்ணாவ ஸ்கூல்ல பார்த்து, அவளோடவே வீட்டுக்கு வந்து ஹெல்ப் பண்ணது எல்லாமே மலர் தான்” என்றான்.
அவள் யாரென்று தெரிந்ததும் யோகவள்ளியின் பார்வை ‘ஓ.. மங்கை அத்த மக தானா!!!’ என்ற ரீதியில் சிறு ஏளனத்துடன் மாறிப் போனது.
அவரின் ஏளனப் பார்வையை தேன்மலரால் நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது. இது போன்று எத்தனை பார்வைகளை சிறு வயதிலிருந்து உணர்ந்திருப்பாள்?
யோகவள்ளியின் பார்வை மட்டும் விதிவிலக்கா என்ன?
பழக்கப்பட்ட பார்வை தான் என்பதால் தேன்மலரின் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. சாதரணமாகவே நின்றிருந்தாள்.
யோகவள்ளி தம்பியிடம் பார்வையை திருப்பி “இவ இங்க இருக்க விஷயம் அம்மாவுக்கு தெரியுமா அமுதா?” என்று கேட்க, அமுதன் ஆம் என்பது போல் தலையசைத்ததும், “ஓ… அம்மா எனக்கு போன் பண்ணி ரூபி வயசுக்கு வந்த விஷயத்தை மட்டும் தான் சொன்னாங்க. இவ உதவி பண்ணதை பத்தியோ நம்ம வீட்ல இருக்கதை பத்தியோ ஒண்ணுமே சொல்லல” என்று அலட்டலான குரலில் கூறியவர்,
“இவ இங்க இருக்க விஷயம் தெரிஞ்சிருந்தா நான் அரக்க பறக்க கிளம்பி வந்திருக்கவே மாட்டேன் அமுதா… இவ போன பின்னாடி வந்திருப்பேன். தங்கச்சி பயத்துல தனியா இருப்பாளே.. நீ மட்டும் இருந்து சமாளிக்க முடியாதேன்னு தான் நான் ஓடோடி வந்தேன். அது போக முதல்ல ரூபிக்கு பால் பழம் கொடுக்கனும். இதெல்லாம் அத்தை முறைல இருக்கவங்க செய்யனும்.. அதுக்காக தான் கையோட சுந்தரி அத்தையை கூட்டிட்டு வந்தேன். நம்ம சொந்த அத்தை கூட நமக்கு அவ்வளவா நல்ல உறவில்ல பாரு” என்றவர் தேன்மலரை எள்ளலாக பார்த்துக் கொண்டே,
“சொந்தம் கொண்டாடுற அளவுக்கு அவுங்களும் அவ்வளவு தரமான ஆளுங்க இல்ல. பையன் ஒரு ரகம்.. அம்மா ஒரு ரகம்.. இதோ இங்க நிக்குறாளே.. இவ எந்த ரகம்னு இவ வாழ்க்கைப்பட்டு போற இடத்துல பார்த்தா தான் தெரியும்…. இதெல்லாத்துக்கும் மேல இவுங்களுக்கு ஒரு நல்ல மருமக வேற சிக்கிடுச்சு. பாவம் அந்தப்….” என்றவர் மேலும் என்னவெல்லாம் பேசி இருப்பாரோ..
மேலும் அவரை பேச விடாமல் “அக்கா..” என்று அமுதகீதன் கண்டனத்துடன் குரலை உயர்த்தி இருந்தான்.
அவன் அழைத்த விதத்தில் வந்திருந்த பெண்மணி அரண்டு விட, யோகவள்ளி திகைத்துப் போய் தம்பியை பார்த்தார்.
தேன்மலருக்கோ தேகம் இறுகி விட்டது. அவரின் குத்தலான வார்த்தைகளை கேட்டு முகம் மாறாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள்.
தன்னை இங்கிருந்து கிளப்ப வேண்டி தான் அவர் இந்தளவு பேசுகிறார் என்று எண்ணியவள் அதற்கு மேல் ஒரு நொடி கூட அந்த வீட்டிற்குள் நிற்கவில்லை.
“நான் கிளம்புறேன்…” என்று பொதுவாக கூறியவள், விறுவிறுவென வாசல் வரை நகர்ந்து விட, “நில்லு மலர்..” என்று அமுதன் கூறியதை அவள் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
அவள் வாசலைத் தாண்டியதும் அக்காவை முடிந்த அளவிற்கு பார்வையால் எரித்தவன், “இப்ப நீ பேசினது எல்லாம் அனாவசியமானது க்கா. கிருஷ்ணாவுக்கு ஹெல்ப் பண்றதுக்காக தான் மலர் இவ்வளவு தூரம் வந்தா. இல்லன்னா அவ இப்படி எல்லாம் வீடேறி வர்ற ஆள் கிடையாது! இனி இப்படி பேசாத. இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும். இனி ஒரு தடவை நீ இப்படி பேசுறதை கேட்டுட்டு நான் அமைதியா இருக்க மாட்டேன்” என்று தகிக்கும் குரலில் கூறியவன்,
அரண்டு போய் நின்றிருந்த சுந்தரி அத்தையிடம் “கிருஷ்ணா தூங்கிட்டு இருக்கா அத்தை. அவ எழுந்ததும் என்ன சாப்பிட கொடுக்கணுமோ கொடுங்க. நான் மலரை ட்ராப் பண்ணிட்டு வரேன்” என்றவன் அக்காவை முறைத்தபடி வெளியேறி விட்டான்.
யோகவள்ளிக்கு பேசி விட்டுச் செல்வது தன் தம்பி தானா என்று அதிர்வாக இருந்தது. இந்தளவிற்கு குரலை உயர்த்தி ஆவேசத்துடன் அவன் தன்னிடம் பேசுவது இதுவே முதல் முறை என்று எண்ணியவர் கண்கள் கலங்கி விட்டார்.
அதுவும் மங்கை அத்தை குடும்பத்தை பேசியதற்கு, தன் உடன் பிறந்தவன் இந்த அளவிற்கு கோபம் கொள்வான் என்று கனவிலும் நினைத்ததில்லை.
அவருக்குத் தெரியாதே.. மலர் மனதிற்குள் வரும் முன் இருந்த அமுதகீதன் வேறு.. மலர் மனத்திற்குள் வந்த பின் இருக்கும் அமுதகீதன் வேறு.. என்று!
அவன் சென்ற திசையையே பார்த்தபடி நின்றிருந்தவருக்கு மனதில் பயம் பிடித்துக் கொண்டது.
பயத்திற்கு காரணம்..
அமுதன் அவளை மலர் என்று உரிமையும் இயல்புமாய் அழைத்ததும், அவள் குடும்பத்தை பற்றி எள்ளலாக பேசியதற்கு தன்னை பார்வையால் எரித்ததும், அவள் கிளம்பியது பொறுக்காமல் அவளின் பின்னே சென்றதும் தான்.
தம்பியின் நடவடிக்கையை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தன் நாத்தனாரை எப்படியாவது அமுதனுக்கு கட்டி வைத்து விட வேண்டும் என்று அவரின் குடும்பம் மொத்தமும் கனவுக் கோட்டை கட்டி வைத்திருக்க, அக்கோட்டையை அமுதகீதன் மலர் செண்டால் சரித்து விடுவானோ என்று பயந்து போனார்.
சிலையென நின்றிருந்த வள்ளியின் தோளில் கை வைத்த சுந்தரியோ “நீயும் கொஞ்சம் பார்த்து வார்த்தையை விட்டிருக்கலாம் வள்ளி. பாவம்.. அந்தப் பிள்ளை முகமே மாறிப் போச்சு..” என்றவர்,
“நான் போய் ரூபியை கவனிக்குறேன்” என நகர்ந்து விட்டார்.
******************************
தேன்மலரை பின்தொடர்ந்து வந்த அமுதனுக்கோ மனம் ஒரு நிலையில் இல்லை. அக்கா பேசியதில் மலரின் மனம் எப்படி துடித்துப் போய் இருக்குமோ என்றவன் வேக வேகாமாக கார் ஷெட்டினை தாண்டி வர, தேன்மலர் தோட்டப் பகுதியைத் தாண்டி இருந்தாள்.
கிட்டத்தட்ட அவளிடம் ஓடியவன் “மலர் ப்ளீஸ் நில்லு..” என்று கெஞ்சியபடி அவளின் முழங்கையை பற்றி இருந்தான். அவன் பற்றிய வேகத்தில் தேன்மலர் திரும்பி அவன் மீதே மோதும் படி வந்து நிற்க, நொடியில் சுதாரித்து இரண்டு எட்டுக்கள் பின் வைத்தாள்.
அமுதனையும் அவன் பற்றி இருந்த தன் கையையையும் உக்கிரத்துடன் பார்த்தவள் “கையை விடுங்க..” என கடுமையான குரலில் கூற,
“சாரி மலர்..” என்றபடி அவளின் கரத்தை விட்டவன், “அக்கா பேசினத்துக்காக நான் மன்னி…பு..” என்றவனை முடிக்கக் கூட விடவில்லை அவள்.
“தயவு செஞ்சு எதுவும் பேசாதீங்க. உங்க அக்கா பேசினதெல்லாம் ஏற்கனவே நிறைய பேர் பேசி நான் கேட்டாச்சு. கேட்டுக் கேட்டு மரத்தும் போச்சு” என்றவள் சிவந்த கண்களுடன் அவனின் கண்களை நேரடியாகப் பார்த்து, “நீங்களே அப்படி நினைக்குற ஆளு தானே! இப்ப உங்க அக்கா பேசினதை எல்லாம் கேட்டு ஏன் இந்தளவுக்கு ரியாக்ட் பண்றீங்க? மன்னிப்பெல்லாம் கேட்டு ‘சீன் க்ரியேட்’ பண்ணாதீங்க! ப்ளீஸ்!” என்றவள் இரு கை கூப்பி கும்பிட, அமுதனுக்கு அவளின் வார்த்தைகளை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
“நான் சீன் க்ரியேட் பண்றனா மலர்.. ஆர் யூ சீரியஸ்..?” என்று கோபத்தை உள்ளடக்கிய குரலில் கேட்டவன், இரு கரங்களாலும் தலையை கோதியபடி பெரு மூச்சை விட்டுக் கொண்டான்.
அவளிடம் தெளிவாக பேசி விட எண்ணியவன் “லுக் மலர்.. நீ சொல்ற மாதிரி நானும் எங்க அப்பா சொல்றதை எல்லாம் கேட்டு எனக்கான ஒரு கண்ணோட்டத்தோட தான் இருந்தேன். ஆனா, இப்ப நான் அப்படி கிடையாது மலர். என்னால உன்னை புரிஞ்சிக்க முடியுது. புரிஞ்சிக்க கூடிய பக்குவம் வந்திருக்கு..” என்றவன்,
அவள் கண்களை நேராகப் பார்த்து “சொல்லப் போனா எனக்குள்ள இந்தப் புரிதலும் பக்குவமும் வர்றதுக்கு காரணமே நீ தான் மலர்” என்றான் மனதார.
தேன்மலருக்கோ அவன் வார்த்தைகளை கேட்கக் கேட்க ஆவேசமாக வந்தது. வீட்டிற்குள் வள்ளி பேசிய குத்தல் பேச்சிற்கு இவன் மருந்திட வந்துவிட்டானா என்று கோபத்துடன் எண்ணியவள் “போதும் ப்ளீஸ்.. நீங்க இந்த மாதிரி விளக்கம் கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. கிருஷ்ணாவை ஸ்கூல்ல பாத்ததும் அப்படியே விட எனக்கு மனசு வரல. அதனால தான் ஹெல்ப் பண்ண வந்தேன்” என்று அயர்ந்த குரலில் கூறியவள்,
“இப்ப சொன்னீங்களே.. புரிதலும் பக்குவமும் வர்றதுக்கு காரணமே நான் தான்னு.. இனி அந்த மாதிரி எல்லாம் சொல்லாதீங்க. எந்த வகையிலையும் உங்க வாழ்க்கைக்குள்ள நான் இருக்க விரும்பல” என்றாள் கண்ணாடித் தெளிவுடன்.
அமுதனுக்கு அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கோபத்தை தான் கிளப்பியது. மலர் தன்னை புரிந்து கொள்ள மறுப்பதுடன், புரிந்து கொள்வதற்கான சூழ்நிலையை கூட புறக்கணிப்பதை தான் அவனால் ஏற்க முடியவில்லை.
“அன்னைக்கே சொன்னேனே.. தள்ளியே இருங்கன்னு.. உங்களால அதைப் புரிஞ்சிக்க முடியலையா? இப்ப ஏன் என் பின்னாடியே வர்றீங்க? ஒரு தடவை சொன்னா புரியாதா?” என்றாள் கோபத்தில் துளிர்த்த கண்ணீருடன்.
அமுதனுக்கோ தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. ‘தள்ளியே இருங்க’ என்றவள் சாதாரணமாக சொல்லி விட்டாள்..
ஆனால், அவளிடமிருந்து தள்ளி நிற்கவும் முடியாமல் அவளை தள்ளி நிறுத்தவும் முடியாமல் தவிப்பது அவன் தானே..!
தன் உணர்வுகள் புரிந்தும் அதை அவள் கருத்தில் கொள்ளாமல் அவள் இஷ்டத்திற்கு பேசுவதை எண்ணி கோபம் கொண்டவனுக்கு முற்றிலும் நிதானமே இல்லை.
முகத்தை இரு கைகளாலும் துடைத்துக் கொண்டவன், “இப்ப என்ன மலர் வேணும் உனக்கு? நான் உன்னை நெருங்கக் கூடாது. உன்னை புரிஞ்சிக்க கூடாது. உன்னைப் பத்தின என்னோட கண்ணோட்டம் மாறக் கூடாது. மாறுனாலும் அதை நான் அனுமதிக்கக் கூடாது.. ஆக மொத்தத்துல உன்னைப் பத்தி நான் நினைக்கவே கூடாது. அதானே….!” என்றவன்,
“தென் ஓகே.. ஃபைன்! என்னை நெருங்கவே வேண்டாம்னு சொல்லி ஒதுங்கிப் போற உன் கிட்டருந்து நானும் எந்த உதவியும் எதிர்பார்க்க கூடாது..” என்று இரும்புக் குரலில் கூறியவன்,
தன் பர்ஸில் இருந்து குறிப்பிட்ட ரூபாயை எடுத்து அவள் உள்ளங்கையை பற்றி அதில் வைத்தவன் “கிருஷ்ணாக்கு தேவையான நெசஸ்சிட்டி திங்க்ஸ் வாங்கிக் கொடுத்ததுக்காக இந்தப் பணம்! இனி எதுக்காகவும் நான் உன்னை நெருங்க மாட்டேன் மலர். இனி நீயும் எப்பேர்பட்ட சூழ்நிலை வந்தாலும் எனக்கோ என் ஃபேமலிக்கோ எந்த ஒரு உதவியும் செய்ய வேண்டாம். தேங்க்ஸ்..!” என்றான் ஆவேசத்துடன்.
தேன்மலர் அவன் செயலில் விக்கித்துப் போய் உணர்ச்சி துடைத்த முகத்துடன் தன் உள்ளங்கைக்குள் இருந்த ரூபாய் நோட்களை பார்க்க, அமுதனால் அதற்கு மேல் அவளின் உணர்ச்சி வடிந்த முகத்தை பார்க்க முடியவில்லை.
இன்னும் ஒரு நொடி அவள் முன் நின்றாள் கூட அவளைத் தன் மார்புக்குள் பொத்தி வைத்துக் கொண்டு “ஏன்டி என்னைக் கொல்ற? என்னை புரிஞ்சிக்கவே மாட்டியா? அப்படி என்ன பிடிவாதம் உனக்கு? நீன்னா எனக்கு இஷ்டம் மலர்!” என்று தன்னை மறந்து தன் மனதில் உள்ளதை உளறி விடுவோமோ எனப் பயந்தவன், சேதுவை அழைத்து அவள் ஸ்கூட்டி எங்கே என விசாரித்து அவளை பள்ளியில் இறக்கி விடும் படி சொன்னவன் அவள் புறம் கடைக்கண் பார்வையை கூட வீசாமல் திரும்பி வீட்டிற்குள் விறுவிறுவென சென்று விட்டான்.
அதன் பின்னர் ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது. தேன்மலரால் அமுதகீதனின் செயலை கடந்து வெளி வர முடியவில்லை.
இன்று கிருஷ்ணாவிற்கு அவர்கள் இல்லத்திலேயே பூப்பு நீராட்டு விழா. அவர்கள் அழைப்பு விடுத்தும் தேன்மலர் அங்கே செல்ல பிரியப்படவில்லை.
கிருஷ்ணாவிற்காக செய்த உதவி அவள் மனதார செய்த ஒன்று! அதைப் புரிந்து கொள்ளாமல் நேப்கின் வாங்கியதற்கென அவன் பணத்தை கொடுத்ததை நினைக்கும் போது மனம் அமைதி இழந்து கொதித்தது.
“ச்சே..” என்று எரிச்சலுடன் மொழிந்தவளுக்கு இப்போது நினைத்தாலும் ஆத்திரமாக வந்தது. இந்த நொடி அவன் மட்டும் தன் கண் முன்னே வந்து நின்றால் அவன் தன் உள்ளங்கைக்குள் வைத்த பணத்தை அவனிடமே வீசி எறியும் ஆவேசம் பிறக்க, அவளின் ஆவேசத்தை தடை செய்யும் விதமாக வீட்டின் அழைப்பு மணி ஓசை எழுப்பியது.
யாரென்று சென்று கதவினைத் திறந்து பார்த்தவளுக்கு நெஞ்சம் துடிப்பது நின்று தான் போனது!
எண்ணத்தில் இருந்தவன் கண் முன்னே வந்து நின்றிருந்தான். கண்கள் விரிய தேன்மலர் அவனையே பார்த்திருக்க, வாசலில் நின்றிருந்தவனும் இமையாடாமல் அவளைத் தான் பார்த்து நின்றான்.
அமுதும் மலரும் கண்ணோடு கண் நோக்கி கட்டுண்டிருந்தது!