மலர் பாதம் பணிந்து..15(2)

இந்த சூழ்நிலையில் துரிதமாக செயல் பட வேண்டுமென “அவர் வர்ற வரைக்கும்லாம் இங்கேயே இருக்க முடியாதுண்ணா. முதல்ல கிருஷ்ணாவை வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்” என்றவள், கிருஷ்ணாவைப் பார்க்க “நீங்களும் வாங்க அக்கா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று அழ,

“அழக் கூடாது கிருஷ்ணா. எதுக்கு பயம்? நான் இருக்கேன் தான..” என்றவள், தபால் அலுவலகித்திற்கு அழைத்து தான் வரத் தாமதமாகும் என்று கூறி, தன் ஸ்கூட்டியை பள்ளியில் உள்ள பார்க்கிங் ஏரியாவிலேயே நிறுத்தி விட்டு அவளுடன் காரில் ஏறிக் கொண்டாள்.

செல்லும் வழியிலேயே சேதுவிடம் காரை நிறுத்தச் சொல்லியவள் எதிரே இருந்த கடையில் கிருஷ்ணாவுக்கென ‘நேப்கின்’ வாங்கிக் கொண்டாள்.

இல்லம் வந்ததும் சேது காரை வீட்டின் நுழைவாயிலில் நிறுத்தி விட்டு “நீங்க பாப்பாவை கூட்டிட்டு உள்ள போங்கம்மா. நான் அமுதன் தம்பிக்கு போன் பண்ணி வீட்டுக்கு வந்த விஷயத்தை சொல்லுறேன்” என்று கூறி விட்டு இறங்கிக் கொண்டார்.

அவர் சென்றதும் கிருஷ்ணா காரை விட்டே இறங்காமல் தேன்மலரின் கையை பற்றிக் கொண்டு “டிரஸ் ஃபுல்லா ப்ளட் ஆகிடுச்சு அக்கா.. எப்படி இதோட வருவேன்…” என சங்கடத்துடன் அழ,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல கிருஷ்ணா. வீட்டுக்கு வந்துட்டோம் தான. வா போகலாம்..” என்றவள் அவளை கைத்தாங்கலாக பற்றிக் கொண்டு வீட்டிற்குள் வந்தாள்.

இன்று தான் முதல் முறையாக அந்த வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கிறாள் தேன்மலர். கிருஷ்ணாவின் அறை எதுவென கேட்டு அவளை குளியலறை அழைத்துச் சென்றவள் அவளுக்கான உதவிகளை செய்து இந்த கால கட்டத்தில் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி, வேறு உடை மாற்ற உதவி செய்து அவளின் பயத்தை போக்கி ஆறுதலாக பேசி அவளை வெளியே அழைத்து வர, சரியாக அமுதகீதன் வீட்டிற்கு வந்திருந்தான்.

அண்ணனைக் கண்டதும் கிருஷ்ணா ஓடிச் சென்று அவனை கட்டிக் கொள்ள, தங்கையை அணைத்துக் கொண்டவனுக்கு கண்கள் பனித்துக் கிடந்தன.

“ரொம்ப பயந்துட்டேன் ண்ணா. அப்பாக்கு கூப்பிட்டேன்.. அப்பா எடுக்கல. அம்மாவுக்கு கூப்பிட சொல்லணும்னு தோணல. அப்புறம் தான் சேது அண்ணா கிட்ட உனக்கு கால் பண்ணி ஸ்கூலுக்கு வர சொன்னேன்” என்று கேவலுடன் சொன்னவள்,

அவன் வயிற்றில் தாடையை ஊன்றி நிமிர்ந்து பார்த்து “அப்ப தான் மலர் அக்கா வந்தாங்க. அவுங்கள பாத்ததும் தான் எனக்கு கொஞ்சம் தெம்பே வந்தது” என்றவள் மேலும் அழுகையுடன், “அக்கா தான் எல்லா ஹெல்ப்பும் பண்ணாங்க” என்றாள்.

தங்கையை மீண்டும் அணைத்துக் கொண்டவன், எதிரே அமைதியுடன் நின்றிருந்த தேன்மலரை நிமிர்ந்து பார்த்தான்.

பனித்துக் கிடந்த அவன் கண்களில் அவளுக்கென ஆயிரம் கோடி நன்றிகள் தென்பட்டன.

காதலை மறைத்து நன்றியை மட்டும் பார்வையில் தேக்கி இருப்பான் போலும்.. தேன்மலரும் அவன் பார்வையில் எந்த வித நெருக்கத்தையோ, வேறு உணர்வையோ உணரவில்லை.

எனவே, மௌனமாக அவன் பார்வையை ஏற்றுக் கொண்டு நின்றாள்.

“ரொம்ப தேங்க்ஸ் மலர்” என்று மனதார அமுதகீதன் மொழிய, ஒரு தலை அசைப்பை மட்டும் கொடுத்தாள் தேன்மலர். வேறெதுவும் அவளுக்குப் பேசத் தோன்றவில்லை.

கிருஷ்ணரூபியை அந்த நிலமையில் கண்டதும் அவளால் அப்படியே விட்டுச் செல்ல இயலவில்லை.

சின்ன பெண்.. அதுவும் பயந்து போய் இருக்கிறாள் என்பதால் தான் இல்லம் வரை அவளுடன் வந்து அத்தனை உதவியும் செய்தாள்.

இப்போது அமுதகீதனை கண்டதும் அமைதியுடன் நின்றிருந்தாள்.

அமுதன் கிருஷ்ணாவிடம் “நீ போய் ரெஸ்ட் எடு கிருஷ்ணா. நான் அப்பா அம்மாக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லிட்டு வரேன்” என்று கூறி, அவளை அறைக்கு அனுப்பி வைத்தவன் பெற்றவர்களுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி, என்ன செய்ய வேண்டும் என்று கேட்டறிந்து கொண்டு தேன்மலரிடம் வந்தான்.

அவன் வந்ததும் தேன்மலர் தன் ஷோல்டர் பேக்கினை மாட்டிக் கொண்டு “அப்ப நான் கிளம்புறேன்” என்று நகர எத்தனிக்க,

“ஒரு நிமிஷம் மலர்” என்றவன் அவளை தடுத்து நிறுத்தினான்.

தேன்மலர் மௌனமாக அவனின் முகம் பார்க்க, “அம்மா அப்பா வர்றதுக்கு ஈவ்னிங் ஆகிடும் மலர். கிருஷ்ணாவுக்கு வேற பால் பழம் கொடுத்த பின்ன தான் வேற ஏதாவது சாப்பிட கொடுக்கணும்னு அம்மா சொன்னாங்க” என்றதும்,

“பால் பழம் அத்தை முறைல இருக்கவங்க தான் கொடுக்கணும். நானோ நீங்களோ கொடுக்க கூடாது” என்றாள் தேன்மலர் அவசரமாக.

ஆமோதிப்பாக தலை அசைத்தவன் “ஹ்ம்ம்.. அம்மா சொன்னாங்க மலர்..” என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் திக்கியது.

வசுந்தலாவிடம் அவன் விஷயத்தை சொல்லிய போது தேன்மலர் உதவி செய்ததையும் அவள் இங்கே இருப்பதையும் சொல்லி இருந்தான்.

வசுந்தலாவோ “ரொம்ப நல்லது அமுதா… அப்படியே தேனு கிட்ட மங்கையை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லிடு. முதல்ல மங்கை தான் கிருஷ்ணாவுக்கு பால் பழம் கொடுக்கணும்” என்று சொல்லி இருக்க, அமுதன் அன்னையிடம் சரி என்றிருந்தான்.

ஆனால், அதனை மலரிடம் கூறுவதற்கு ‘நா’ எழவில்லை.

முதலில் எப்படி சொல்வது என்றே அவனுக்குப் புரியவில்லை. இது வரையில் எந்த ஒரு விஷேஷங்களுக்கும் மங்கை அத்தை குடும்பத்திற்கு அவர்கள் அழைப்பு சொல்லியதில்லை.

இன்பசேகரனும் அதை விரும்பியதில்லை. வசுந்தலா கணவரிடம் எடுத்துச் சொல்லிய போதும் “அதெல்லாம் வேண்டாம் வசு. மங்கையை கூப்பிட எனக்கு இஷ்டமில்லை” என்று இரண்டே வரியில் மறுத்து விடுவார்.

அமுதனுக்கும் தந்தையின் கூற்றில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருந்ததில்லை.

ஆனால், இன்று அப்படி இல்லையே!

அவன் மனதில் ஆயிரம் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் போது கருத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்காதா?

தொண்டையை செறுமிக் கொண்டவன் அவளிடம் உன் அன்னையை இங்கே அழைத்து வா என்று சொல்வதற்காக அவள் முகம் பார்க்க, அவன் முகத்தைப் பார்த்து என்ன புரிந்து கொண்டாளோ.. அவன் பேசுவதற்கு முன்பே அவள் பேசி இருந்தாள்.

“உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது அத்தை முறைல பக்கத்துல இருந்தாங்கன்னா அவுங்களை வந்து கொடுக்க சொல்லுங்க” தேன்மலர் பட்டென்று கூறி விட, அமுதனின் முகம் அப்படியே மாறி விட்டது.

தேன்மலர் அவன் முக மாற்றத்தை கவனித்தாலும் மௌனமாக நின்றிருந்தாள். வேறு என்ன பேச முடியும்?

இவன் அன்னையை அழைத்துக் கொண்டு வா என்று கூறினால்.. தன்னால் அழைத்து வர முடியுமா?

இப்படி எத்தனை நிகழ்விற்கு தங்களை இவர்கள் மதித்து அழைத்திருக்கிறார்கள்? இதற்கு மட்டும் ஏன் அழைக்க வேண்டும்?

தேன்மலருக்கும் கிருஷ்ணரூபி பருவமடையாமல் இருந்த விஷயம் நன்றாகத் தெரியும். அவள் பருவமடைந்தால் சீர் செய்யவோ முறை செய்யவோ தங்களை அழைக்க மாட்டார்கள் என்றும் தெரியும்.

ஆனால், இன்று அமுதகீதன் அழைக்க விளைவதை அவள் முற்றிலும் விரும்பவில்லை. வீடு பால் காய்ச்சியது.. ரிசார்ட் கட்டிய போது ஒரு வார்த்தை கூட சொல்லாதது.. இதற்கு எல்லாம் மேல் தங்களை மதிக்காதது… தங்களை மதிக்கும் படியான நிலைமையில் அன்னையும் அண்ணனும் இல்லாதது என எல்லாவற்றையும் நினைத்து அவள் மனம் அயர்ந்து போனது.

இந்நேரம் அண்ணன் குடிகாரனாக இல்லாமல் இருந்திருந்தால் அன்னையும் சாமியாரிடம் சென்று ஏமாறும் அன்னையாக இருந்திருக்க மாட்டார். மற்றவர்களின் குடும்பம் போல் தங்களின் குடும்பமும் மதிக்கத்தக்க குடும்பமாக இருந்திருக்கும்.

இன்பசேகரன் மாமாவும் கௌரவம் பார்க்காமல் தங்கையுடன் உறவு பாராட்டி இருப்பார்.

அனைத்தையும் எண்ணி பெரு மூச்சினை விட்டுக் கொண்டவள், அமுதனின் முகம் பார்க்க அவள் சொல்லியதற்கு ஒன்றும் கூறாமல், “அம்மா வர வரைக்கும் நீ இங்க இருக்க முடியுமா?” என்று மட்டும் கேட்க, தேன்மலர் பேகினை இறுக பற்றிக் கொண்டு பதில் பேசாமல் அவனைப் பார்த்தாள்.

“இருக்க முடியுமா மலர்?” என்று மீண்டும் அமுதன் கேட்க,

“அது.. நான் ஆஃபிஸ்க்கு லீவ் சொல்லல. பெர்மிஷன் தான் சொல்லிருக்கேன். போகனும்..” என்றாள் தேன்மலர் தயக்கம் நிறைந்த குரலில்.

அவன் கேட்ட உதவி கிருஷ்ணரூபிக்காக என தெரிந்தும் அதை மறுக்கிறோமே என்று தான் தயக்கமாக பேசினாள்.

மற்றொரு காரணம்.. அவர்கள் வந்து சேரும் வரை மாலை இந்த வீட்டில் இருக்க வேண்டும்! அவ்வளவு நேரமும் இங்கே இருந்து என்ன செய்வது? அதுவும் அவனோடு..!

ஆகையால் தான் கிளம்பலாம் என்று நினைத்தாள்.

அமுதனுக்கு அவள் தன்னை நினைத்து தான் இங்கே இருப்பதற்கு ஒப்புக் கொள்ள மறுக்கிறாள் என்று தெளிவாக விளங்க, சுர்ரென்று கோபம் ஏறியது.

ஒரு மாத காலமும் அவளை மறக்கவும் முடியாமல், முழு மனதுடன் நினைக்கவும் முடியாமல் தத்தளித்தபடி நாட்களை நரக வேதனையுடன் கடத்தி இருந்தான் அமுதகீதன்.

இரவில் மலரின் நினைவும் பகலில் மலரின் வார்த்தைகளையும் அவனை கொல்லாமல் கொன்றது. அவளை பார்த்து எப்படி தன் மனதை சொல்வது இல்லை என்றால் அவளை எப்படி அடியோடு மறப்பது என்றவன் தனக்குள்ளேயே போராடிக் கொண்டிருக்க, தங்கையின் மூலம் இன்று அவளை தன் வீட்டிற்குள்ளேயே நேரில் கண்டது முற்றிலும் எதிர் பாராத ஒன்று..!

அவள் செய்த உதவிக்கு நன்றி என்று உதடுகள் மொழிந்தாலும் உள்ளத்தில் காதல் தான் நிறைந்து கிடந்தது. பார்வையில் அன்பும் மறைந்திருந்தது.

அந்த நொடி.. மலரை அடியோடு மறக்க முடியாது என்பதை இனம் புரியாத இன்பத்துடன் உள்வாங்கிக் கொண்டான்.

நெருங்காதே என்று தெளிவாக கூறியவளிடம் உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொண்டு அவளின் கவனம் சிதறும் படி எந்த ஒரு பார்வையையும் வீசி இருக்கவில்லை.

அப்படி இருக்க, கிருஷ்ணாவிற்காக அவளை வீட்டில் இருக்க சொன்னதற்கு தன்னை நினைத்து அவள் மறுப்பதை அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

கடும் கோபத்துடன் அவளிடம் பேச அவன் வாய் திறக்க எத்தனித்த சமயம், யோகவள்ளி வீட்டிற்குள் வந்திருந்தார்.

error: Content is protected !!
Scroll to Top