பணிதல் – 15
அன்று காலை பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் கிருஷ்ணரூபி. புத்தகங்கள் நோட்கள் என அனைத்தையும் எடுத்து ஸ்கூல் பேகினில் வைத்தவள் அறையை விட்டு வெளியே வர, கையில் லேகியத்துடன் அவள் முன் வந்து நின்றார் வசுந்தலா.
அன்னையை கண்டு தேங்கி நின்றவளின் முகம், அவர் கையில் இருந்த லேகியத்தை கண்டதும் அஷ்ட கோணலானது.
“இந்தா சாப்பிடு” என்று வசுந்தலா லேகியத்தை நீட்ட, முகத்தை சுளித்தவள் பாவமாக அன்னையை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஹ்ம்ம் பிடி” என்று வசுந்தலா கண்களை உருட்ட,
“அம்மா.. இது வேண்டாம்மா..” என்று கெஞ்சல் குரலில் கூறிய கிருஷ்ணா, அன்னை மேலும் முறைப்பதை கண்டு “ஒரு வாரம் மட்டும் சாப்பிட்டா போதும்னு சொன்னீங்க தானேமா. இப்ப மறுபடியும் கொண்டு வந்து கொடுக்குறீங்க” என்று அந்த லேகியத்தை பார்த்துக் கொண்டே கேட்டு விட்டாள்.
அவள் குரலில் அவ்வளவு பயம்! மறுத்துப் பேசியதற்காக எங்கே அன்னை அடித்து விடுவாரோ என்று நடுங்கியபடி நின்றிருந்தாள்.
வசுந்தலாவோ மகளை நன்றாக முறைத்து “ஒரு வாரம் சாப்பிட்டு என்ன ப்ரயோஜனம்? இன்னும் நீ வயசுக்கு வந்த பாடில்லையே” என்று எரிச்சலுடன் மொழிந்து விட, கிருஷ்ணரூபிக்கு கண்கள் கலங்கி விட்டன.
ஆம்!
கிருஷ்ணரூபி இன்னும் பருவமடைந்திருக்கவில்லை. மகள் பத்தாம் வகுப்பை எட்டியும் இன்னும் பருவமடையவில்லையே என வசுந்தலா கவலை கொண்டதை விட, அவரின் உறவுக்கார பெண்கள் தான் நிறைய கவலை கொண்டனர்.
பத்து நாட்களுக்கு முன்பு ஒரு நிச்சய விழாவிற்கு சென்றிருந்த போது உறவினர்கள், கிருஷ்ணரூபியை பற்றி விசாரித்து வசுந்தலாவின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்திருந்தனர்.
“இன்னுமா வயசுக்கு வரல உன் பொண்ணு.. நல்லாத்தான் போ.. இந்த காலத்துல அது அது அஞ்சாவது படிக்கும் போதே வயசுக்கு வந்திடுதுங்க. உன் பொண்ணு என்னடான்னா பத்தாவது வந்தும் இன்னும் வயசுக்கு வரலன்னு சொல்ற. ஒரு வேளை ரொம்ப வருஷம் கழிச்சு பெத்துக்கிட்டதால ரூபிக்கு எதுவும் குறையோ என்னவோ? ஒழுங்கா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் செக் பண்ணிடு வசு..” என்று வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் பலரும் சொல்லி இருந்தனர்.
ஒரே ஒரு வயதான பாட்டி மட்டும் வசுந்தலாவை தனியே அழைத்துச் சென்று “இவளுக சொல்றதை எல்லாம் கேட்டுட்டு பிள்ளையை ஆஸ்பத்திரி அது இதுன்னு கூட்டிட்டு போய் அலைக்கழிச்சிடாத வசு. நான் சொல்ற பொருளை எல்லாம் வச்சு நெய்ல பிரட்டி லேகியம் செஞ்சு கொடு. ஏழே ஏழு நாள்.. காலைலையும் நைட்லையும் சாப்பிட்டா போதும்! அப்புறம் பாரு.. உன் பொண்ணு தன்னபாட்டுல உக்காந்திடுவா” என்றிருந்தார்.
அவரின் அறிவுரை படி வசுந்தலாவும் ஏழு தினங்களாக மகளை அதட்டி மிரட்டி காலையும் மாலையும் அந்த லேகியத்தை உண்ண வைத்திருந்தார்.
அதை உண்டு இரண்டு நாட்கள் கடந்தும் பலனின்றி போக, இதோ இன்று மீண்டும் லேகியத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார் வசுந்தலா.
கிருஷ்ணரூபி கண் கலங்கியதை கண்டெல்லாம் அவர் அசரவில்லை. அவருக்கு எப்படியேனும் மகள் பருவமடைந்து விட்டால் அதுவே போதும் என்றிருந்தது.
அவருக்கு கிருஷ்ணரூபி என்றால் பிடிக்காது தான். அதிக அளவில் அக்கறை காட்ட மாட்டார் தான். ஆனால், பருவமடையாமல் இருப்பவளை கண்டு கொள்ளாமல் அப்படியே
விடவும் முடியாதே! அதுவும் இது பெண்கள் சார்ந்த விஷயம் என்பதால் அவரே எல்லாம் செய்ய வேண்டிய கட்டாயம்! மகனிடமோ கணவரிடமோ இதைக் குறித்து சொல்லி உதவி கேட்கவும் முடியாது..
வேண்டா வெறுப்பாகத் தான் இதை எல்லாம் செய்கிறார்.
தாயன்பை அவளுக்கு மட்டும் கொடுக்க அவரின் அன்றைய மன நிலை இடம் தரவில்லை. நாளடைவில் அதுவே பழக்கமாகவும் போயிற்று.
அவளின் விஷயங்களில் முழுமையாக கவனம் செலுத்த மாட்டார் வசுந்தலா. கவனம் செலுத்த அவரின் மனமும் அவ்வளவு அக்கறை கொண்டதாக இல்லை என்பதே அத்தாய் மகளுக்குள் நிகழும் நிதர்சனம்.
“இந்தா சாப்பிடு முதல்ல..” என்று வசுந்தலா லேகியத்தை நீட்ட, கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டவள் பேசாமல் அதனை வாங்கி வாயில் போட்டுக் கொண்டாள்.
கசந்தது! ஆனாலும், மென்று விழுங்கினாள் இளையவள்.
அன்னையின் முகம் பார்த்தாள். வசுந்தலாவின் முகத்தில் கண்டிப்பான தோரணை தான் தென்பட்டது.
அவள் முழுங்கியதும் சக்கரை கலந்த வெந்நீரை அவளுக்கு கொடுத்தவர், அவள் குடித்து முடித்ததும் “நானும் அப்பாவும் ஒரு முக்கியமான கல்யாணத்துக்காக சென்னைக்கு கிளம்புறோம். அமுதன் இங்க தான் இருப்பான். அவன் உன்னை பாத்துப்பான். நாங்க வர்ற ரெண்டு நாள் ஆகிடும். அதுக்குள்ள ஏதாவது வயிறு வலி வந்தாலோ நான் சொன்ன மாதிரி ஆனாலோ உடனே ஃபோன் பண்ணு. புரிஞ்சதா?” என்றவர்,
“இந்தா.. அடுத்த ரெண்டு நாளைக்கு லேகியம் இந்த டப்பால இருக்கு. மறக்காம ரெண்டு நேரமும் சாப்பிடனும். அமுதன் கிட்ட கேட்பேன்… காலைலயும் சாய்ந்தரமும் சாப்பிட்டயான்னு.. சாப்பிடாம விட்டேன்னா பிச்சிடுவேன்” என்றவர் பேசிக் கொண்டிருக்க அவரையே அசையாமல் சிறிது நொடிகள் பார்த்தாள் கிருஷ்ணரூபி.
தான் பிறந்ததில் இருந்து அன்னை தன்னிடம் பேசிய மிக நீளமான பேச்சு இதுவே என்று நினைத்தவள் மௌனமாக தலை அசைக்க, “ஸ்கூல்ல இருக்கும் போது எதாவது அறிகுறி தெரிஞ்சா உடனே எனக்கோ அப்பாக்கோ கூப்பிடு. அப்படி இல்லேன்னா அமுதன கூப்பிடு. சரியா?” என்றதும் அதற்கும் மௌனமாக தலை அசைத்தாள் கிருஷ்ணரூபி.
வசுந்தலா அங்கிருந்து நகர்ந்து விட, அவர் சென்றதும் “அம்மாவுக்கு நம்ம மேல கொஞ்சம் அக்கறை இருக்கும் தான் போல” என்று முனங்கியவள், பெரு மூச்சுடன் பள்ளிக்கு கிளம்பி இருந்தாள்.
அடுத்த நாளும் சமர்த்து பிள்ளையாக அமுதன் முன்பே லேகியத்தை உண்டவள் “அம்மா கிட்ட சாப்பிட்டேன்னு சொல்லிடு ண்ணா” என்று கூற,
தங்கையை ஆதூரமாய் பார்த்த அமுதன் “பிடிக்கலேன்னா விடு கிருஷ்ணா. நான் அம்மா கிட்ட சாப்பிட்டேன்னு சொல்லிடுறேன்” என்று அவளுக்காக கூற,
“இல்லண்ணா.. அம்மா என் நல்லதுக்காக தான சாப்பிட சொல்றாங்க. பரவாயில்ல” என்றவள் அன்று மாலையும் முகம் சுளிக்காமல் அதனை உண்டிருந்தாள்.
மறு நாள் காலை எழும் போதே அசௌகரியமாக உணர்ந்தாள் கிருஷ்ணரூபி. அடி வயிறு வேறு சுறுசுறுவென வலிக்க, என்னவோ போல் இருந்தது.
ஆனாலும், அதனை புறந்தள்ளி விட்டு குளித்து தயாராகி பள்ளிக்கு கிளம்பினாள். அவளிடம் தென்பட்ட சோர்வைக் கண்ட அமுதகீதன் “முடியலேன்னா ஸ்கூலுக்கு லீவ் போட்றேன் கிருஷ்ணா” என்று அக்கறையுடன் கேட்டுக் கொள்ள,
“இல்லண்ணா.. இன்னைக்கு எக்ஸாம் இருக்கு. போய் தான் ஆகனும்” என்றவள் மறுக்க,
“சரி கிருஷ்ணா. நானும் ஃபேக்டரிக்கு கிளம்புறேன். ரொம்ப முடியலேன்னா கால் பண்ணிடு.. நான் வந்திருவேன்.. ஓகேவா” என்றவன் சேதுவுடன் தங்கையை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு தானும் சேலத்திற்கு கிளம்பி இருந்தான்.
பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருக்கும் போதே கிருஷ்ணரூபிக்கு அடி வயிறு பலமாக வலிக்க ஆரம்பித்தது. ஆனாலும் பொறுத்துக் கொண்டவள் ‘எக்ஸாம் முடிஞ்சதும் அண்ணாக்கு போன் பண்ணி வர சொல்லி மதியம் வீட்டுக்கு போய்டலாம்’ என்று தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டு பள்ளிக்கு வந்து சேர்ந்திருந்தாள்.
காரை விட்டிறங்கலாம் என்று எழும் போது தான் இருக்கையில் உதிரக் கரை இருப்பதை கவனித்தாள். ஒரு நொடியில் முகமெல்லாம் வியர்த்து கண்கள் கலங்கி விட்டன.
படபடப்புடன் தன் சீருடையை கவனிக்க.. அதிலும் உதிரக் கரை!
அன்னை செய்து கொடுத்த லேகியம் அதன் பலனை காட்டி விட்டது என்று புரிந்து கொண்டவளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை. பயத்தில் அழுகை தான் வந்தது.
இப்படி ஏதாவது நேர்ந்தால் தனக்கோ அப்பாவிற்கோ அழைத்து கூறும் படி சொல்லிய அன்னையின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தாலும் அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
சேது வேறு அவள் இன்னும் கீழே இறக்காமல் இருப்பதை கவனித்து அவள் பக்க கார் கதவினை திறந்து “என்னாச்சு பாப்பா?” என்று கேட்க,
வேக வேகமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டவள், கதவினை பட்டென்று சாற்றி விட்டு ஜன்னலை மட்டும் இறக்கி “சேது அண்ணா.. அப்பாவுக்கு போன் போட்டுத் தரீங்களா?” என்று கலங்கிய குரலில் வினவ,
அவள் கலங்கிய முகத்தை கண்டு பயந்து போனவர் வேறெதுவும் கேட்காமல் “இதோ பாப்பா..” என்றபடி இன்பசேகரனுக்கு அழைத்து அலைபேசியை அவளிடம் கொடுத்தார்.
சேதுவிற்கு அவள் ஏன் இப்படி கலங்கியபடி இருக்கிறாள் என்று புரியவில்லை.
உடல் நலம் எதுவும் சரியில்லையோ என்றவர் யோசித்தபடி நிற்க, “அப்பா எடுக்கல. அண்ணாக்கு கூப்பிட்டு ஸ்கூலுக்கு நீங்களே வர சொல்றீங்களா?” என்றாள் கிருஷ்ணரூபி அழுகையுடன்.
“சரி பாப்பா” என்றவர் அலைபேசியை வாங்கி அமுதனுக்கு அழைக்க, அப்போது தான் கோகுலனை தன் ஸ்கூட்டியில் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்திருந்தாள் தேன்மலர்.
அவனை வகுப்பறையில் விட்டு விட்டு வெளியே வந்தவள் கிருஷ்ணரூபி கலங்கிய முகத்துடன் காரில் அமர்ந்திருப்பதையும், வெளியே நின்றபடி சேது யாருடனோ படபடப்புடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதையும் கண்டு அப்படியே கடந்து செல்ல மனம் வராமல் அவர்களை நெருங்கினாள்.
தேன்மலரைக் கண்டதும் கிருஷ்ணரூபிக்கு அப்படி ஒரு நிம்மதி மனதினுள். கூடவே அழுகை வேறு வந்து விட்டது.
“மலர் அக்கா” என்றவள் காரிற்குள் இருந்தபடி அழுகையுடன் அழைக்க, சேதுவிற்கும் தேன்மலரை கண்டதும் நிம்மதி ஆனது.
“என்னாச்சு கிருஷ்ணா? ஸ்கூலுக்குள்ள போகலயா?” என்று வினவியவள் ஜன்னல் வழியாகவே இருக்கையில் படிந்திருந்த உதிரக் கரையை கண்டு கொண்டாள்.
தேன்மலர் சற்றே திகைத்து கிருஷ்ணாவைப் பார்க்க, “ஹ்ம்ம்..” என்று கிருஷ்ணா கண்ணீருடன் பயந்த முகத்தோடு தலையசைக்க,
“என்னன்னு தெரியலமா.. ஸ்கூலுக்கு வந்ததும் பாப்பா பயந்து போய் அழ ஆரம்பிச்சிடுச்சு. காரை விட்டு கீழேயும் இறங்கல…. பெரிய ஐயாவுக்கு போன் போட்டு தர சொல்லிச்சு.. ஐயா எடுக்கலன்னதும் அமுதன் தம்பிக்கு போன் போட்டு இங்க வர சொல்லிச்சு. நானும் அமுதன் தம்பி கிட்ட விஷயத்தை சொல்லிட்டேன். ஃபேக்டரிக்கு கிளம்பி போனவர், பாதி வழியிலேயே திரும்ப வரேன்னு சொல்லிட்டாரு. அவர் இங்க வர வரைக்கும் நீங்க கூட இருங்களேன்..” என்று கேட்டுக் கொள்ள, தேன்மலர் தயங்கவோ தாமதிக்கவோ இல்லை.