அத்தியாயம் – 14
கிருஷ்ணரூபிக்கு மலர் தனக்கு உடை எடுத்துக் கொடுப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. அவளின் கையைப் பற்றிக் கொண்டவள் விடவே இல்லை.
அமுதனுக்கு தங்கையையும் அவளையும் இப்படிப் பார்க்கவே ரம்மியமாக இருந்தது. இந்த இரண்டு வாரங்களாக மனதிற்குள் உதிர்த்த உணர்வுகளுக்கும் எழுந்த கேள்விகளுக்கும் ஏற்பட்ட குழப்பங்களுக்கும் இன்று விடை கிடைத்தார் போல் மலரின் தரிசனம் கிடைத்திருந்தது அவனுக்கு!
அவளைப் பிடித்ததை எண்ணி ஆச்சர்யம் கொண்டாலும் மலரைப் பிடித்ததற்கு தன்னையே பிடிப்பதை போல் உணர்ந்தான்.
இதழில் மெல்லிய புன்னகை இருந்து கொண்டே இருந்தது.
ஆனால், மனதிற்குள் எழும்பி இருந்த சிறு பயம் அவனை முழுமையாக மகிழ்ச்சி அடைய விடவில்லை. தனக்கு அவளைப் பிடித்ததைப் போல் அவளுக்கும் தன்னை பிடிக்குமா எனும் கேள்வி விஸ்வரூபமாய் மனதில் படை எடுக்க, ஊஃப் என்று பெரிய மூச்சினை வெளியேற்றினான்.
நிச்சயம் அவளுக்குத் தன் மேல் நல்ல விதமான அபிப்ராயம் இருக்க வாய்ப்பில்லை என்று அறிவான் தான்!
அவன் மேல் அப்படி ஒரு நல்ல அபிப்ராயம் வரும் அளவிற்கு துரை அவளிடம் நல்ல விதமாக நடந்து கொண்டிருக்க வேண்டுமே?
சிறு வயதில் ஆசை ஆசையாக கடலை மிட்டாயை உண்ணும் போது பறித்து கீழே போட்டதும், எங்கு பார்த்தாலும் பார்வையால் ஒதுக்கத்தை காட்டியதும், மரியாதை குறைவாக பார்த்ததும் என இருந்தவன் மேல் அவளுக்கு நல் அபிப்ராயம் இருந்தால் தான் ஆச்சர்யம்!
இது போதாது என்று தற்போது சித்தப்பா வீட்டின் கிரகப் பிரவேசத்தின் போது அவன் விட்ட வார்த்தையை நினைத்தால் அவனுக்கே வெட்கமாக இருந்தது.
அவளுக்கு அடி பட்டு மருத்துவமனையில் இருந்த போது அன்று பேசியதற்காக மன்னிப்பு கேட்டிருந்தாலும் அவன் பேசியவை தவறு தானே..
இதை எல்லாம் எப்படி சீர் செய்வது? எப்படி அவளிடம் தன் மனதை திறப்பது என ஒன்றும் விளங்கவில்லை.
அவள் என்னை ஏற்றுக் கொள்வாளா? அவளுக்கும் தன்னைப் பிடிக்குமா? என சிந்தித்துக் கொண்டே இருந்தவனுக்கு கலவையான மனநிலைகள் ஏற்பட்டாலும் ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாக விளங்கியது!
தனக்கு மலரை மிகவும் பிடித்திருக்கிறது. நான் அவளை விரும்புகிறேன் எனும் தெளிவு தான் அது!
இப்போதைக்கு அந்தத் தெளிவே போதும் என்றவன் அமைதியாகி விட்டான்.
அவன் அசையாமல் அப்படியே நிற்க, பெண்கள் உடையை எடுத்து முடித்திருந்தனர்.
கிருஷ்ணா இவனிடம் வந்து “அண்ணா.. இந்தக் கலர் காஸ்டியூம் பாரு.. ஓகே வா..” என்று தேன்மலர் தேர்ந்தெடுத்துத் தந்த உடையினைக் காட்ட, பாசிப் பச்சையும் குங்கும நிறமும் கலந்திருந்த அந்த பரதநாட்டிய உடையைக் கண்டு “அழகா இருக்கு. உனக்கு நல்லா இருக்கும் கிருஷ்ணா” என்று அவளிடம் கூறியவன், மலரிடம் திரும்பி “நைஸ் செலக்ஷன் மலர். தேங்க்ஸ்” என்றான்.
“ம்ம்..” என்றவள் அவனிடம் அவனின் பணத்தினைக் கொடுத்து விட எண்ணினாலும் அதற்கு இது சரியான சமயம் இல்லை என்று தயங்கினாள்.
அதற்கு காரணமும் இருந்தன.
முதலில், கிருஷ்ணரூபியும் அவர்களின் அருகில் தங்களை கவனிக்கும் படி தான் நின்றிருந்தாள்.
இரண்டாவதாக பொது வெளியான இடத்தில் வைத்து பணத்தைக் கொடுப்பதை யாராவது தெரிந்த உறவினர்கள் பார்த்து விட்டால் சங்கடமாகி விடுமே என்று தயங்கினாள்.
இதை இவனிடம் கொடுக்கும் சந்தர்ப்பம் எப்போது தான் கிட்டுமோ? என்று பெருமூச்சை விட்டுக் கொண்டவள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து அவனிடம் ஒரு தலை அசைப்பை கொடுத்து விட்டு கிருஷ்ணரூபியிடம் “நான் வரேன் கிருஷ்ணா. ஆல் த பெஸ்ட்” என்று கூறி விடைபெற,
“ஒரு நிமிஷம் மலர்” என்று அவளை நிறுத்தினான் அமுதகீதன்.
நின்றவள் கேள்வியாக அவனைப் பார்க்க, “அ..அது.. நீ கிளம்பிட்டேன்னா எங்களோடயே தாரமங்கலம் வாயேன். நாங்களும் வீட்டுக்குத் தான் போகப் போறோம்” தயக்கத்தை மறைத்துக் கொண்டு இயல்பான குரலில் அவன் கேட்க, தேன்மலரின் முகமே மாறிப் போனது.
‘அன்று இவன் காரில் ஏரியதற்கு தானே அந்தப் பேச்சு பேசினான்! இப்போது இப்படி உடன் அழைத்து அதையும் சொல்லிக் காட்ட போகிற எண்ணத்தில் இருக்கிறானா?’ என்று மனதிற்குள் பல்லைக் கடித்தவள், அவனிடம் நறுக்கென்று பேச நினைத்தாலும் கிருஷ்ணரூபியை மனதில் வைத்து வார்த்தைகளை கட்டுப் படுத்தி,
“இல்ல. எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு” என்று இறுக்கமான குரலை மறைத்து பேசியவள், கிருஷ்ணரூபியிடம் புன்னகையுடன் தலை அசைத்து விட்டு அங்கிருந்த புடைவை பிரிவிற்கு நகர்ந்து விட்டாள்.
அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்ற அமுதனுக்கு இவளாக எப்படி தாரமங்கலம் வரை வருவாள்.. மணி வேறு எட்டாகிற்றே என அக்கறை கலந்த கவலை உண்டானது.
“எனக்கு இந்த மலர் அக்காவை ரொம்பப் பிடிச்சிருக்குண்ணா. ரொம்ப நல்லவங்க. எவ்வளவு கேரிங்கா பாசமா பேசுறாங்க தெரியுமா” சிலாகிப்புடன் சொன்ன தங்கையை புன்னகையுடன் பார்த்தவன்,
“ரொம்ப நல்லவங்க தான்..” ‘ஆனா, வைராக்கிய வைரம் உன் அண்ணி!’ முதல் வரியை அவளுக்கு கேட்கும் படி சொன்னவன், இரண்டாம் வரியை தனக்குள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டான்.
தேன்மலர் தாய்க்கு இரண்டு புடவைகளை தேர்வு செய்து அதனை பில் போட்டு கீழே வர, அவளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த கவி அவள் வந்ததும் “என்ன தேனு? ரெண்டு சேரி எடுக்க இவ்வளவு நேரம் பண்ணிட்ட? உங்க அம்மாவுக்கு பாத்து பாத்து சூஸ் பண்ணியா?” என்று புன்னகையுடன் கேட்க,
“அட நீங்க வேற ஏன் அண்ணி..? மேலே கிருஷ்ணாவையும் அவுங்க அண்ணனையும் பார்த்தேன்” என்றவள் நடந்ததை கூற, கவி ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்து விட்டாள்.
“அந்தத் தம்பியா இப்படி நல்ல விதமா பேசினது?” கவி கன்னத்தில் கை வைத்துக் கேட்க,
“இப்ப எப்படிப் பேசினாலும் முன்ன பேசினது எல்லாம் மறந்திடுமா அண்ணி?” என்று உதடு வளைத்து சொன்னவள்,
“அவரை விடுங்கண்ணி. மணி ஆச்சு. நாம கிளம்பலாம்” என கோகுலை தூக்கிக் கொண்டு வெளியே வர, கவியும் பெரு மூச்சுடன் அவளைத் தொடர்ந்தாள்.
வெளியே இடது புறத்தில் உள்ள பார்க்கிங் ஏரியாவில் தன் காரை உயிர்ப்பித்த அமுதன் தங்களின் எதிரே மலரும் அவள் அண்ணி, குழந்தையுடன் செல்வதைக் கண்டவன்
“மூணு பேரும் வந்திருக்காங்களா!” என்றபடி கடிகாரத்தை ஒரு முறை பார்த்தான்.
“கடலை மிட்டாய் திட்டினாலும் பரவாயில்ல. நம்ம கூடவே வர சொல்லிடலாம்” என தங்கையிடம் சொல்லி விட்டு காரை விட்டு கீழே இறங்கி அவர்களை நோக்கி நடந்தான்.
இவன் செல்வதற்குள் அவர்கள் வாயிலை விட்டு வெளியேறி இருக்க, “மலர்..” என்று சப்தமாக அழைத்தான்.
அவளுக்குக் கேட்கவில்லை போலும். வாயிலைக் கடந்து வெளியேறி கவியுடன் சாலையில் நடக்கத் துவங்கி இருந்தாள் தேன்மலர்.
“காலே பண்ணிடலாம்..” என்றவன் “Kadala mittaai” (கடல மிட்டாய்) என்று பதிந்து வைத்திருந்த அவளின் எண்ணிற்கு அழைத்தான்.
அழைப்பின் ஓசை கேட்டு கோகுலனை கவியிடம் கொடுத்து விட்டு தன் ஹேன்ட் பேக்கில் இருந்து அலைபேசியை எடுப்பவளை இங்கிருந்தே பார்த்துக் கொண்டு நின்றான் அமுதகீதன்.
அலைபேசியில் அவளின் எண்களை கண்டவள் முகம் சுருக்கி, புருவ சுழிப்புடன் தான் அழைப்பை ஏற்றாள். தன் அழைப்பை கண்டதும் அவளின் முக மாற்றத்தை கண்டவனுக்கு என்னவோ போலானது.
அழைப்பை ஏற்றவள் அமைதியாக இருக்க, தன்னை சமாளித்துக் கொண்டவன், “ஹலோ.. மலர்..” என்றான்.
“சொல்லுங்க” என்றவள் ஒரு முறை திரும்பிக் கடையைப் பார்ப்பதை கண்டவன்,
“மலர் இப்ப தான் உங்களைப் பார்த்தேன். நீயும் உங்க அண்ணியும் க்ராஸ் பண்ணிப் போனீங்க….” என்றவன்,
“எங்களோடவே வாங்களேன் மலர். ஐ வில் ட்ராப் யூ..” என்று மீண்டும் கேட்டுப் பார்த்தான். ஏனோ, அவளைக் கண்டதும் அப்படியே விட மனமில்லை.
தேன்மலர் இரண்டு நிமிட அமைதிக்குப் பின்னர் பெரு மூச்சுடன் “இப்ப நீங்க எங்க இருக்கீங்க?” என்று கேட்டாள்!
அவள் வார்த்தைகளில் உஷ்ணம் தெரிந்தது. அதை உணர்ந்தவன் குரலை உள்ளிழுத்துக் கொண்டு “பார்க்கிங் ஏரியால மலர்” என்றான் மெதுவாக.
“அங்கேயே நில்லுங்க வரேன்” என்று இறுக்கமான குரலில் சொன்னவள், அழைப்பை துண்டித்திருந்தாள்.
“ஏன் சட்டுன்னு கோபமாகிட்டா..” என்றவன் அவளைத் தான் பார்த்து நின்றான்.
கவியிடம் குழந்தையை கொடுத்து அங்கேயே நிற்க சொல்லி விட்டு இவள் மட்டும் வருவது தெரிந்தது.
கோபத்துடன் தன்னிடம் வந்து நின்றவளைக் கண்டவன், “என்னாச்சு ம..லர்?” என்று கேட்டு முடிக்கக் கூட இல்லை..
“முதல்ல இதைப் பிடிங்க!” என்று அவனிடம் ‘பில்’லிற்கான பணத்தினை நீட்டினாள்.
அதனை வாங்காமல் அவளையும் பணத்தையும் அவன் ஒரு பார்வை பார்க்க, “ப்ளீஸ்.. பிடிங்க” என்றாள் தேன்மலர் அழுத்தமாய்.
“எதுக்கு மலர் இது?” அவனும் கைகளை கட்டிக் கொண்டு கேட்க,
“இது நீங்க ஹாஸ்பிட்டல்ல கொடுத்த பணம்” என்றதும்,
“அது தெரியுது. அதை எதுக்கு இப்ப கொடுக்குற” என்றான் அழுத்தமாக.
“இப்ப கொடுத்தா என்ன?” என்றவள், சலிப்புடன் “ப்ச்.. நீங்க தான சொன்னீங்க! காயம் ஆறினதும் நீயே வந்து கொடுன்னு. கடைக்குள்ள இருந்த போது கிருஷ்ணாவும் இருந்தா. வேற யாராவது பார்த்தாலும் சங்கடம்னு தான் கொடுக்கல. இப்ப யார் பார்த்தாலும் கவலை இல்ல. நீங்க இதை வாங்கிக்கங்க” என்றாள் படபடவென.
அதற்கு மேல் அவளிடம் வாதிட முடியாது என்றவன் அமைதியாக அவள் நீட்டிய பணத்தினை வாங்கிக் கொண்டான்.
ஐநூறு ரூபாய் தாள்களை மடித்து ஒரு ரப்பர் பேண்ட் போட்டிருந்தாள். அதனை அவன் உள்ளங்கைக்குள் வைத்துக் கொள்ள, “உங்க கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்” என்றதும் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“சொல்லு மலர்”
காரில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணாவை ஒரு பார்வை பார்த்தவள் அவள் கை அசைத்து சிரித்ததும் தானும் ஒரு சிரிப்பினை கொடுத்து விட்டு மீண்டும் இவனிடம் பார்வையை கொண்டு வந்தாள். பின்பு ஒரு பெரு மூச்சுடன் பேசத் துவங்கினாள்.
“இங்க பாருங்க.. அன்னைக்கு உங்க வீட்ல போஸ்ட் டெலிவரி பண்ண வந்தப்ப என்னோட கவனக் குறைவுனால அடி பட்டிடுச்சு. அதுக்கு நீங்களும் உதவி பண்ணிட்டீங்க. பணத்தையும் திருப்பி வாங்கிக்கிறதா சொன்னீங்க. அன்னைக்கு உங்க கிட்ட பணத்தை கொடுக்க தான் பேக்கரிக்கு வந்தேன். ரஞ்சித் வந்ததும் உங்களைப் பாக்க வந்த விஷயத்தையே மறந்துட்டேன். அதுக்காக சாரி” என்றவள் சிறிது நொடிகள் அமைதி ஆனாள்.
அமுதனோ அவள் பேச வந்ததை பேசி முடிக்கட்டும் என அமைதி காத்தான்.
“இன்னைக்கு யதார்த்தமா தான் நாம சந்திச்சோம். கிருஷ்ணா ட்ரெஸ் எடுக்க சொல்லி கேட்டதும் என்னால சட்டுன்னு ஒத்துக்க முடியல. நீங்க இருந்தீங்கன்னு தயங்கினேன். அத புரிஞ்சிக்கிட்டு நீங்க அவ மேல கோபப் பட்டதையும் என்னால ஏத்துக்க முடியல. அதனால தான் உங்க கிட்ட அப்படி எல்லாம் பேசினேன். மத்தபடி…” என்றவளை கையமர்த்தி நிறுத்தியவன்,
“இப்ப எதுக்கு இதை எல்லாம் சொல்ற” என்றான் பொறுமை இழந்து.
“எதுக்கு சொல்றேன்னா..” என்றவள், “நீங்க எதுக்காக என்னை ட்ராப் பண்ற அளவுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறீங்க” என்றாள் தீர்க்கமான குரலில்.
“மலர்.. இஸ்ட் ஜஸ்ட் அ ஹெல்ப்” என்று அமுதன் இடுப்பில் கை வைத்து ஆயாசத்துடன் கூற,
“இல்ல. இது ஹெல்ப் மட்டும் இல்ல” என்றவள், அவன் முகத்தை நேராகப் பார்த்து
“உங்க கிட்ட நான் என்னைக்குமே உதவி கேட்கணும்னு நினைச்சதில்ல. அந்த நிலமை வந்திடவும் கூடாதுன்னு இருக்கவ நான். ஆனா, இப்ப.. உங்க பேச்சு.. பார்வை.. இதோ.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசின போது உங்க குரல்ல தெரிஞ்ச பரிவு..” என்று அவள் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வர வர அமுதனின் கருவிழிகள் கண்களுக்குள் தடுமாறி இங்கும் அங்கும் உலாவியது.
“என்னமோ நீங்க என் கிட்ட நெருங்கி வர்ற மாதிரி ஃபீல் ஆகுது! உதவி செய்யணும்றதைத் தாண்டி உங்க கிட்ட வேற எதோ ஒரு உணர்வு தென்படுது” என்று விட்டாள் பட்டென.
அவளின் பேச்சில் அமுதகீதன் ஆடித் தான் போனான். தன்னை கண்டு கொண்டாளா என்று உள்ளுக்குள் பதறி விட்டான்.
பெண்ணின் நுண்ணிய உணர்வுகள் மிகவும் அபாயகரமானது. அதை ஆண் மனம் அறியாது! அமுதகீதனும் இதற்கு விதி விலக்கல்ல.
தேன்மலருக்கு அவனின் பார்வை மாற்றங்கள், குரல் மாற்றங்கள், தன்னிடம் நடந்து கொள்ளும் முறையில் உள்ள மாற்றங்கள் என எல்லாமே மாறி இருப்பதை விருப்பமின்றி உள்வாங்கிக் கொண்டாள்.
அவனின் நெருக்கம் எந்த வகையிலான நெருக்கமானாலும் சரி! அதனை தவிர்க்கவே அவள் மனம் விழைந்தது.
அவனை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டவள் “உங்களோட இந்த நெருக்கமும், அக்கறையும் அனாவஸ்யமானது. சின்ன வயசுல இருந்தே எங்களை எப்படி பாப்பீங்களோ.. எப்படி நடத்துவீங்களோ.. இனிமேலும் அப்படியே பாருங்க! அப்படியே நடத்துங்க! புதுசா அக்கறை, பரிவு, உதவி செய்ற மனப்பான்மை, மரியாதை இதெல்லாம் வேண்டாம். எங்களை சீப் பீப்பில்ஸ் ‘கேட்டகரி’க்குள்ளையே வச்சுக்கோங்க. அதான் நல்லது” என்றவள், அவன் சிலை போல் நிற்பதை கண்டு,
“ஒதுக்கி வச்சது வச்சதாவே இருக்கட்டும்! எனக்கு ஒதுக்கம் ஒன்னும் புதுசில்ல. பழகினது தான்! ஆனா இப்ப நீங்க நெருங்கி வர்ற நினைக்கிறீங்க பாருங்க. இதான் எனக்குப் புதுசு! இது எனக்கு வேண்டவே வேண்டாம். இவ்வளவு தூரம் உங்க கிட்ட நின்னு பேசுறதுக்கு காரணமே குடும்பத்துக்குள்ள எந்த ஒரு சங்கடமான சூழ்நிலையும் வந்திட கூடாதுன்னு தான். சோ, பிளீஸ்.. தள்ளியே இருங்க” என்றவள் நகர்ந்து விட, அவள் பேசிச் சென்ற நிதர்சன வார்த்தைகள் தந்த தாக்கத்தில் தேங்கி நின்றான் அமுதகீதன்.
கிருஷ்ணா இறங்கி வந்து இவனின் கை தொடும் வரை அவன் அசைந்திருக்கவில்லை.
“என்ன ஆச்சு அண்ணா? மலர் அக்கா நம்ம கூட வரலையா?” என்று கிருஷ்ணா கேட்க,
“ஹான்..” என்று திரும்பியவன் குரலை செறுமிக் கொண்டு “அவுங்களுக்கு வேற எதோ வேலை போல கிருஷ்ணா. வா நாம போகலாம்” என காரினுள் ஏறிக் கொண்டான்.
தாரமங்கலம் வந்து சேரும் வரையிலும் அமுதன் மௌனமாகவே தான் வந்தான். இல்லம் வந்த பின்னர் கூட அவனின் மௌனத்தில் எவ்வித மாற்றமும் இல்ல.
அவனின் மௌனம் வெளியே தான் என்றாலும் மனதினுள் போர்க்களமே நிகழ்ந்து கொண்டிருந்தது.
தேன்மலர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவனை குத்திக் கிழித்தது என்று தான் சொல்ல வேண்டும்!
ஒதுக்கம் தனக்கு புதிதில்லை என்றாளே! இதை சர்வ சாதாரணமாக அவள் கூறுகிறாள் என்றால் எவ்வளவு ரணங்களை கடந்து வந்திருக்க வேண்டும்?
அவளுக்குள் ஏற்பட்டிருக்கும் காயங்கள் பெரிதென்பதை விட, அக்காயங்களால் அவளுள் ஏற்பட்ட வலியின் ஆழத்தை தான் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
“சின்ன வயசுலயே நிறைய அனுபவப்பட்டுட்டா!” என்று முனங்கியவன், “அதுக்கு நானும் ஒரு காரணம்” என்று கசப்புடன் கண்களை மூடிக் கொண்டான்.
சிறிது நேரம் வேறெதுவும் அவன் சிந்திக்கவில்லை. அவளின் முகமே மனதில் நின்றது. பின்பு மீண்டும் ஒரு சுய ஆலோசனைக்குள் சென்றான்.
அவளிடம் தனக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை மிகத் துல்லியமாக கண்டறிந்தவளின் அறிவுக் கூர்மையை கண்டு மெச்சுதலாக புன்னகைத்துக் கொண்டான்!
அந்த மாற்றத்தை உணர்ந்திருந்தாலும் அதனை வெளிப்படையாகப் பேசாமல் இலை மறை காயாகவே பேசி விட்டு சென்றிருந்தாள்.
வெளிப்படையாகப் பேசப் பிடிக்கவில்லையோ என்னவோ? இல்லை.. தன் யூகம் தவறாகக் கூட இருக்கலாம் என்று எண்ணி இப்படி மேலோட்டமாக பேசி விட்டு சென்றாளோ என்னவோ?
ஆனால், என்னை நெருங்காதே என்று மிகத் தெளிவாக விளங்க வைத்து விட்டு சென்றிருந்தாள். உன் மாற்றம் அவசியமற்றது என முகத்தில் அரைந்தார் போல் கூறி விட்டு சென்றிருந்தாள். அதை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவளுக்குத் தன் மேல் நல்ல விதமான அபிப்ராயம் இல்லை என்று அறிந்தவன் தான். ஆனால், நெருங்க வேண்டும் என்று நினைத்த நொடியே, அதனை கண்டு கொண்டு தன்னை விலக்கி நிறுத்தியதை தான் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
“மலர்…” என்றபடி முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டவனுக்கு இதயம் நடுங்கியது. நடுங்கிய இதயத்திற்குள் மலரின் மணமே பரவி இருக்க, எழுந்து அமர்ந்து விட்டான்.
தனக்கு அவள் மேல் காதல் என்று தெளிவு படுத்திக் கொண்ட அன்றே அக்காதல் சிதைந்து போகக் கூடிய நிலமை வந்திருக்க வேண்டாம் என்று நொந்து கொண்டவன்,
“உன்னை என்னமோன்னு நினைச்சேன் மலர். ஆனா.. நீ வைராக்கியத்தை மிஞ்சுற அளவுக்கு அழுத்தக்காரியா இருப்பேன்னு நினைக்கல. எவ்வளவு ஸ்மார்ட்டா ‘என்னை நெருங்காத.. ஒதுங்கியே இரு’ன்னு புரிய வச்சிட்டு போய்ட்ட? ராட்சஸி!” என்று புலம்பியவன் தலையணைக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான்.
தலையணைக்குள் முகத்தை புதைத்தது போல் மனதிற்குள் மலரைப் புதைக்க முடியும் என்று தோன்றவில்லை.
நெருங்காதே என்று சொன்னவள் தான் நெஞ்சுக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டாள். வாழ்வு முழுவதும் வாழ்க்கைத் துணையாக அவளே வேண்டும் என்று அடிமனம் அடம் பிடித்தது.
இரு தலை கொள்ளி எரும்பாக அவன் மனம் அலைக்கழிக்க அன்றைய இரவு தூங்கா இரவாகிப் போனது அமுதனுக்கு!
அன்றைய இரவு மட்டுமல்ல அடுத்த வந்த ஒரு மாத காலமும் மலரால் தூக்கத்தை தொலைத்தான் அமுதகீதன்.
நாட்கள் செல்லச் செல்ல அவளின் அழுத்தம் போலவே அவன் மனதும் மலர் வாழ்க்கைத் துணையாக வேண்டும் என அழுத்தம் பெற்று விட்டது.
அவளை சந்திக்க வேண்டும்.. அவளிடம் மனம் விட்டு வெளிப்படையாக பேசி புரிய வைக்க வேண்டும் என்று ஆயிரம் எண்ணங்கள் இருந்தாலும் அதையெல்லாம் செயலாற்றுவதற்கு சூழ்நிலைகள் உருவாகவே இல்லை!
ஒரு மாத காலமும் காதலை மனதிற்குள் வைத்து மலரை நினைத்து புழுங்கிக் கொண்டிருந்தவன் அவளை சந்திப்பதற்கு வெகுவாகத் தயங்கினான். கிருஷ்ணரூபியின் மூலமாக தான் இருவரும் சந்திக்கும் படி நேர்ந்தது. ஆனால், அந்த சந்திப்பும் கசப்பானதாக அமைந்தது தான் காலக் கொடுமை!