மலர் பாதம் பணிந்து..13(2)

அன்று இறுதியாக அவளை ரஞ்சிதனுடன் பேக்கரியில் பார்த்தது. அதற்கடுத்து இன்று தான் அவளைக் காண்கிறான்.

இந்த இரண்டு வாரங்களாக அவள் தன்னை தொடர்பு கொள்ள பலவாறு முயற்சி செய்ததை கண்டவனுக்கு அவளைத் தவிர்ப்பதைத் தவிற வேறு வழி தெரியவில்லை.

அவளைப் புறக்கணித்தாலும் மனதிற்குள் எழும் அவளின் நினைவுகளை புறக்கணிக்க முடியாமல் தோற்றுத் தான் போனான் அமுதகீதன்!

அவனுக்கு அவனையே தெளிவு படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. எனவே, தான் அவளின் குரலைக் கூட கேட்க வேண்டாம் என இன்று அவளின் அழைப்புகள் அத்தனையும் புறக்கணித்தான்.

இத்தனைக்கும் காரணம் என்னவென கேட்டால்..

‘காதல் தான்!’ என்று அவனால் உறுதியாக ஒப்புக்கொள்வதற்குக் கூட மனோதிடம் இல்லை!

அன்று பேக்கரியில் அவளையும் ரஞ்சிதனையும் பார்த்து விட்டு ஒரு மணி நேரமாக காரில் சுற்றியவனுக்கு கொஞ்சம் கூட மனம் அமைதி அடைய மறுத்தது.

தேன்மலர் அழைப்பதற்கு முன்பு அவனுள் எழுந்த கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்து அவனை நிம்மதியாக உறங்கக் கூட விடவில்லை.

‘அவளும் ரஞ்சிதனும் ஒன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தால் தனக்கு ஏன் இப்படி கோபமும் இயலாமையும் ஏக்கமும் வர வேண்டும்?’

அன்று இரவு உறக்கத்தை தொலைத்தவனை, இந்தக் கேள்வி ஒரு நீண்ட யோசனைக்கு இழுத்துச் செல்ல, யோசனையின் முடிவில் மனதிற்குள் உணர்வுகள் சங்கமிக்க, சங்கமத்தின் அர்த்தங்கள் அவனை திடுக்கிட வைத்தது என்பதை மறுக்கவே முடியாது!

அர்த்தங்களை ஒரே வார்த்தையாக கோர்த்தால் “தன்னவள்..!” என்று தான் மனம் உரக்கச் சொல்லியது.

பிரியமோ பிடித்தமோ இல்லாமல் இப்படி ஒரு உரிமை உணர்வு வர முடியுமா?

அவள் மீது தனக்கு இப்படியொரு உணர்வு வந்ததையே அவனால் நம்ப முடியவில்லை. முதலில் அந்த உணர்வு உண்மையா பொய்யா என்று கூட அவனால் யூகிக்க முடியவில்லை.

அதுவும் தான் சிறு வயதில் இருந்து பார்வையால் கூட மதிக்காத, மதிப்பை அளிக்கும் அளவிற்கு அவர்கள் ஒன்றும் பெரிய ஆட்கள் இல்லை என்று அலட்சியப் படுத்திய குடும்பத்தில் இருந்து ஒருத்தியை தனக்கெப்படி பிடித்தது?

அவள் மேல் இந்தப் பிடித்தம் வந்திருப்பதை கண்டு ஒரு புறம் அதிர்வாக இருந்தாலும் இன்னொரு புறம் மனதை மயிலிறகாய் வருடியது மலரின் மேல் உருவான உணர்வுகள்.

இந்தப் பிடித்தம் எந்தப் புள்ளியில் தொடங்கியது என்று கூட அவனால் கண்டறிய முடியவில்லை.

அன்று அக்கா வந்திருந்த போது வாழ்க்கைத் துணைக்கான இடம் வெற்றிடமாக இல்லை எனத் தோன்றியதே!

அப்படி என்றால் அப்போதே தனக்கு அவளைப் பிடித்து விட்டதா? இல்லை என்றால் அதற்கு முன்பு தன் வீட்டு தோட்டத்தில் அடி பட்ட மலராக இரத்தம் சிந்திக் கிடந்தாளே.. அப்போதே பிடித்து விட்டதா?

இல்லை இவை அனைத்தும் தன் கற்பனையா? பிரம்மையா? என்று குழம்பித் தவித்துப் போனான்.

எப்போதும் மனம் அமைதியின்றி குழப்பத்தில் இருந்தாலும் ஏற்காடு சென்று பக்கோடா பாயிண்ட்’டில் நின்று எதிரே தெரியும் இயற்கையின் கொடையான மலையையும் ஆகாயங்களையும் பார்த்தான் என்றால் மனதில் அமைதி நிலவி விடும். இம்முறை அந்த இயற்கை கூட அவன் மனதிற்கு இதம் தரவில்லை.

முதலில் அவனுக்கு இந்த உணர்வு அவள் மேல் எப்படி வந்தது? ஏன் வந்தது? இது சரியா? சரி வருமா? இதற்கான காரணம் என்ன? என்பதையே அவனால் கண்டறிய முடியவில்லை.

காதல் பிறக்க காரண காரியங்கள் தேவை இல்லை! காதல் பிறக்க காதலொன்றே போதும்!

இதை அமுதகீதன் புரிந்து கொள்ள தற்போதைக்கு வாய்ப்பில்லை!

அதே புரியாத மன நிலையுடன் பத்து நாட்கள் ஏற்காட்டில் இருந்து விட்டு இன்று மாலை தான் தாரமங்கலம் வந்திருந்தான்.

வந்ததும் அவள் ஜிபே மூலம் பணம் அனுப்பியதைக் கண்டு கோபம் தான் வந்தது. அதை அவளுக்கே திருப்பி அனுப்பி வைத்தவன், ‘அப்படி என்னடி அவசரம்? நேர்ல பாத்து வாங்கிக்கிறேன் வான்னு சொன்னா.. அந்த இடியட் ரஞ்சித்த பாத்ததும் என்னை மறந்துட்ட! இப்ப ‘ஜிபே’வா பண்ற! உனக்கிருக்கு’ என்று பல்லைக் கடித்துக்கொண்டு குறுஞ்செய்தியையும் அனுப்பி வைத்தான்.

அதற்கடுத்து அவளும் அழைக்காமல் இருக்கவும் தான் நிம்மதியுடன் மூச்சு விட்டுக் கொண்டான்.

ஆனால் மனதிற்குள் அவளைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. நேரம் செல்லச் செல்ல தோன்றிய உணர்வு அவளைப் பார்த்தே ஆக வேண்டும் எனும் பிடிவாதத்தில் வந்து நிற்க, பேசாமல் அவளை அழைத்து அன்று போல் எங்காவது வர சொல்வோமா? என்று தான் நினைத்தான்.

அதற்குள் கிருஷ்ணரூபி அவனிடம் வந்து “அண்ணா.. நெக்ஸ்ட் வீக் ஸ்கூல்ல ‘Annual Day’ வருதுன்னா. நான் பரதநாட்டியம் ஆடுறதுக்காக நேம் கொடுத்திருக்கேன். அதுக்கேத்த மாதிரி காஸ்டியூம் எடுக்கணும். சேலத்துல இருக்க கடைக்கு கூட்டிட்டு போறியா?” என்று கேட்டிருக்க, மறுப்பு சொல்ல முடியாமல் இதோ தங்கையை அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.

சத்தியமாக இங்கே மலரைப் பார்ப்போம் என்று அவன் நினைக்கவில்லை. மனதிற்குள் பூகம்பத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தவள் தன் முன்னே நின்றதும் அவனின் மனம் ஆழ் கடலின் அமைதியுடன் அடங்கிப் போய் இருந்தது.

அவளைப் பார்த்ததும் மனதிற்குள் இதம் பரவியதை அவனால் வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை.

எல்லாவற்றையும் யோசித்தபடி அவன் நிற்க, அவர்கள் வந்தடைய வேண்டிய தளம் வந்ததும் தான் மலருலகில் இருந்து வெளியே வந்தான் அமுதகீதன்.

மூவரும் லிஃப்ட்டில் இருந்து வெளியே வர, “அக்கா பிளீஸ் க்கா! நீங்க எனக்கு ஒரு நல்ல ட்ரெஸ் சூஸ் பண்ணி கொடுங்களேன்” என்று கிருஷ்ணா அவளின் கைப் பற்றிக் கொண்டு கெஞ்ச,

“இல்ல கிருஷ்ணா.. எனக்கு பரத நாட்டியம் அவுட் ஃபிட் பத்தி எல்லாம் பெருசா தெரியாதுடா” என்று தேன்மலர் சங்கடத்துடன் மறுக்க,

“தெரியாட்டி என்ன? கலர் காம்பினேஷனாவது சொல்லுங்க. ப்ளீஸ் க்கா..” என்று கெஞ்சினாள் சின்னவள்!

தேன்மலர் அமுதனைப் பார்க்க, கிருஷ்ணரூபியும் அண்ணனிடம் “அண்ணா.. பாருண்ணா மலர் அக்காவை ட்ரெஸ் சூஸ் பண்ணித் தர சொல்றேன்… ஆனா அவுங்க நோ சொல்றாங்க. நீ கேளேன்..” என்று அவனிடம் கெஞ்ச, மலரை ஒரு முறை ஏறிட்டவன், தங்கையிடம் திரும்பி “அவுங்களுக்கு வேற வேலை இருக்கும் தானே கிருஷ்ணா! வா நாமளே எடுப்போம்” என்க,

இளையவளின் முகம் கூம்பி விட்டது!

தேன்மலருக்கு அவளின் முக வாட்டத்தைக் கண்டு சங்கடமாகப் போயிற்று!

கிருஷ்ணாவிற்கு எடுத்துக் கொடுக்க அவளுக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. ஆனால், அமுதன் நிற்பது தான் பெரும் தயக்கத்தை கொடுத்தது.

“அண்ணா..” என்று சின்னவள் கெஞ்சலாக அழைக்க, தங்கையை கண்டிப்பாய் பார்த்தவன் “நான் சொல்லிட்டேன் தான கிருஷ்ணா. புரிஞ்சிக்காம மறுபடியும் கேட்டா என்ன அர்த்தம்?” என்றவன் சட்டென்று குரலை உயர்த்தி இருந்தான்!

அவனுக்கு மலர் தன்னைக் கண்டு தான் தயங்கி, வேண்டாம் என்று கூறுகிறாள் என நன்றாகப் புரிந்தது!

அப்படி என்ன செய்து விடுவேனாம் இவளை? என்று கோபத்தில் பல்லைக் கடித்தவன் அதே கோபத்துடன் தங்கையிடம் குரலை உயர்த்தி இருந்தான்!

அண்ணனின் அதட்டலில் கிருஷ்ணரூபிக்கு கண்கள் கலங்கி விட்டன.

தேன்மலருக்கு அவளை அப்படிப் பார்க்கவே கஷ்டமாக போயிற்று. சற்று நொடிகளுக்கு முன்பு வரை சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாக தன்னிடம் துறுதுறுவென பேசிக் கொண்டிருந்தவள் அண்ணன் அதட்டியதும் கண்கள் கலங்கியதை தேன்மலரால் ஏற்கவே முடியவில்லை.

அவளின் தோளில் கையிட்டு தன்னோடு அரவணைத்துக் கொண்டவள், அமுதனை நிமிர்ந்து ஒரு முறை முறைத்தாள்!!!

அவ்வளவு தான்..! அமுதன் அடங்கிப் போனான்!

அவனின் குரல் முகம் கண்ணசைவுகள் என எல்லாமே மலரின் கண்களுக்குள் கைதியாகி விட்டன.

“சின்ன பொண்ணு கிட்ட இப்படி தான் குரலை உசத்துவீங்களா? ஆசையா தான கேட்டா? அதுக்கு ஏன் அதட்டனும்!” என்றவள் ஒரு அதட்டல் போட, தன் தவறை உணர்ந்தவனாய் முன்னுச்சி முடிகளை பற்றிக் கொண்டான்.

கூடவே, அமுதனின் பார்வை தங்கையிடம் மன்னிப்பை வேண்டியது.

அவனை முறைத்துக் கொண்டே இளையவளின் கன்னம் தொட்டு முகத்தை நிமிர்த்தியவள் “கிருஷ்ணா.. நான் உனக்கு ட்ரெஸ் சூஸ் பண்ணித் தரேன். நீங்க அழ வேண்டாம்” என்றதும் அவள் முகம் பளிச்சென மாறி விட,

தேன்மலர் அமுதனை நிமிர்ந்து (முறைப்புடன்) பார்த்து “நான் சூஸ் பண்ணித் தரதுல உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று வினவ,

“எனக்கென்ன பிரச்சனை?” குரலை செருமிக் கொண்டு கேட்டவன் “உனக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம் மலர்” என்றான் மிக மிக மென்மையான குரலில்!

இந்தச் சம்மதத்தை எதற்காக கேட்கிறான்? என்பதை அவனின் மனம் தான் சொல்ல வேண்டும்.

அவளோ புருவம் சுருக்கி அவனைப் பார்க்க, அவள் பார்வையில் சுதாரித்தவன் “அது.. ட்ரெஸ் எடுக்கிறதுக்கு சொன்னேன்!” என்றான் சமாளிப்புடன்.

“ஓ..” என்றவள் தலை அசைக்க, “வாங்க போகலாம்” என அமுதன் முன்னே நகர, “நில்லுங்க” என்று அவனை நிறுத்தினாள் தேன்மலர்! அவனும் நின்று விட்டான்!

தற்போதைக்கு அவனின் மனம் மலரின் கையில் பொம்மையாக சிக்கியிருந்தமையால் அவள் ஆட்டுவிக்கும் திசையில் எல்லாம் அவனும் அசைந்தாடவே விரும்பினான்.

அவளைக் கேள்வியாகப் பார்க்க, “கிருஷ்ணா கிட்ட அப்படிப் பேசினதுக்கு முதல்ல சாரி கேளுங்க!” என்று கட்டளையிட்டாள் அவனை ஆட்டுவிக்கும் மலர்!

அமுதன் கண்கள் விரிய மெல்லிய புன்னகையுடன் புருவங்களை உயர்த்த, “முதல்ல சாரி கேளுங்க! பாவம் அவ முகமே விழுந்திடுச்சு!” என்றவள் அவன் அசையாமல் தன்னையே பார்ப்பதைக் கண்டு, “ம்ம்…” என்று கண்ணால் கட்டளை பிறப்பிக்க அமுதனின் தலை தானாக அசைந்தது.

பார்வையை மலரிடமே வைத்துக் கொண்டவனின் உதடுகள் தன் போக்கில் “சாரி கிருஷ்ணா” என்க, “பரவாயில்ல ண்ணா” என்ற இளையவள், மலரைக் கட்டிக் கொண்டு “தேங்க்ஸ் அக்கா. வாங்க போகலாம்” என்று சந்தோஷமாக முன்னே சென்றாள்.

தேன்மலர் அமுதனை ஒரு பார்வை பார்த்து விட்டு அவளோடு செல்ல அமுதனும் எவ்வித மறுபேச்சுமின்றி மலர் பாதங்களை பின் தொடர்ந்தான்!

நெஞ்சமும் அவளை பின் தொடரவே ஆசை கொண்டது.

தன்னுள் அவள் நிகழ்த்தும் மாற்றங்களை சுவாரஸ்யமாக உள்வாங்கியவனுக்கு மனதிற்குள் இனம்புரியாத இன்பத்தூரல்கள் வீசின!

அவன் பின்னால் வருகிறானா என்று மலர் திரும்பிப் பார்க்க, மெதுவாக வந்து கொண்டிருந்தவனைக் கண்டு, அவள் முன்னே செல்லும் படி கையசைக்க “ஹான்.. வரேன் மலர்” என்றவன் அவளை நோக்கி தன் பாதங்களை வேகமாக எட்டிப் போட்டான்.

மலர் இழுத்துச் சென்ற பாதைக்கெல்லாம் அமுதம் வழிந்தோடியது!

error: Content is protected !!
Scroll to Top