பணிதல் – 13
தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்த தேன்மலருக்கு கோபம் அடங்காததில் தாறுமாறாக மூச்சுக்கள் வாங்கியது.
கோபத்திற்கு காரணம் அமுதகீதன் என்று சொல்லத் தான் வேண்டுமா?
அவளும் இந்த இரண்டு வாரங்களாக எப்படியாவது அவனிடம் அவனுடைய பணத்தை கொடுத்துவிட போராடிக் கொண்டிக்கிறாள்.
அவனோ பிடி கொடுக்காமல் இவளை சுற்றலில் விடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறான் போலும்..
அவனின் செயல்கள் தேன்மலரின் கோபத்தை கூட்டியதே தவிர்த்து குறைக்கவில்லை.
இதோ இப்போது கூட அவனின் ஜி-பே நம்பருக்கு பணத்தினை அனுப்பி வைத்தாள். அவனோ ஒரு மணி நேரத்தில் மீண்டும் பணத்தை திருப்பி அனுப்பி வைத்தான்!
அதைக் கண்டே கோபம் கொண்டவளுக்கு, பணத்தின் பின்னே அவன் அனுப்பிய குறுஞ்செய்தியைக் கண்டதும் மேலும் கோபம் வந்தது.
“நேர்ல வந்து வாங்கிக்கிறேன். அதுவரைக்கும் அனுப்பாத. மீறி அனுப்பினா நானும் நிமிஷ வட்டியோட சேர்த்து திருப்பி உனக்கே அனுப்புவேன்!” என்று அனுப்பி இருந்தான்.
பார்த்ததும் பல்லைக் கடித்தவள் அவனுக்கு அழைப்பு விடுக்க, அமுதகீதன் ஏற்கவே இல்லை.
உச்சந்தலை வரை கோபம் சுள்ளென்று ஏறியது. கோபத்தில் எதையாவது தூக்கி உடைத்து விடுவோமோ என்று கூட பயந்தவள் நேராக மொட்டை மாடிக்கு வந்திருந்தாள்.
அப்போது தான் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தவள், சீருடையை கூட மாற்றாமல் வந்ததும் வராததுமாக அவனுக்கு பணத்தை அனுப்பும் வேலையில் மும்முரமாக இறங்கி இருக்க,
அமுதனோ பண விஷயத்தில் அவளை தவிர்த்துக் கொண்டே இருப்பதை அவளால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
“இந்தக் காசை வாங்கிக்காம என்னைக்காவது ஒரு நாள், ‘நீ அடி பட்டுக் கிடந்தப்ப நான் தான உன்னை ஹாஸ்பிடல் தூக்கிட்டு போய் காசு கொடுத்து டிரீட்மெண்ட் பண்ணேன்’னு சொல்லிக் காமிக்குற ஐடியால இருக்காரா?” என்று வாய் விட்டே கோபத்துடன் பேசியவள், தலையை பிடித்து கொண்டு கைப் பிடிச் சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.
இப்போதே நேரில் சென்று அவன் முகத்தில் பணத்தை வீசி எறியும் ஆவேசம் வந்தது. ஏனோ அவன் உதவியால் தன் காயங்கள் ஆறுவதில் அவளுக்கு துளி கூட விருப்பமில்லை.
தன் கோபத்தை கூட அவளிடம் வெளிப்படுத்த முடியாத அளவிற்கு அவன் அழைப்புகளை ஏற்காமல் விடுவது இன்னும் அவளை எரிச்சலுக்கு உள்ளாக்கியது.
“அப்படி என்ன வேலை? மெசேஜ் பாக்கல. ஃபோன் பண்ணா எடுக்கல! இதெல்லாம் கிடக்குது.. ஆனா, காச அனுப்சா? திருப்பி ஏன் அனுப்பனும்! நேர்ல தான் பாத்து வாங்கிக்கணும்னு அப்படி என்ன அர்த்தமில்லாத பிடிவாதம்! ச்சே..” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தாள்.
மாலை நேரத் தென்றல் காற்று கூட மலருக்கு இதம் தரவில்லை. அவளுக்கான காஃபியுடன் மேலே வந்த கவி, தேன்மலர் தன் போக்கில் புலம்பிக் கொண்டிருப்பதை கண்டு “ஹே தேனு.. என்ன நீயா பேசிட்டு இருக்க?” என்று கேட்க,
அண்ணியின் குரலில் தன்னிலை அடைந்தவள் சோர்ந்த குரலில் “ஏன் அண்ணி நீங்க வேற! எரிச்சலா இருக்கு” என்றாள் காஃபியை வாங்கிக் கொண்டே.
“என்னாச்சு தேனு? போஸ்ட் ஆஃபிஸ்ல எதுவும் பிரச்சனையா?” என்று கவி விசாரிக்க,
“இல்ல அண்ணி.. எல்லாம் இன்பசேகரன் மாமா பையனால தான்” என்றவள், இத்தனை தினமும் நடந்த கூத்தினை கூற,
தாடையில் கை வைத்த கவிரத்னா, “அடிப்பாவி.. இன்னமுமா நீ அந்த பில்லை விடல? அன்னைக்கு அந்தத் தம்பி கிட்ட பணத்தை கொடுக்குறதுக்காக தான பேக்கரிக்கு போயிருந்த” என்று கேட்க,
“போய் இருந்தேன் தான். ஆனா, எங்க கொடுத்தேன்? அதுக்குள்ள தான் ரஞ்சி வந்துட்டான். திடீர்னு அவன நான் எதிர் பார்க்கல. அவன் வேற சந்தோஷமான விஷயத்தை சொல்லவும் எதுக்கு அந்த பேக்கரி போனோம்னு எனக்கு சுத்தமா நியாபகம் இல்லண்ணி” என்றவள்,
“இவரும் அங்க வந்து எங்களை பாத்திருக்காரு அண்ணி. அப்படி இல்லேன்னா ஒரு மணி நேரமா எனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தியான்னு எப்படி கேட்க முடியும்?” என்று குழப்பமாக சொன்னவள்,
“அன்னைக்கே வந்து வாங்கிட்டு போய் இருந்தா ஒரு தலை வலி முடிஞ்சிருக்கும். இப்ப பாருங்க! நேர்ல தான் வாங்கிப்பேன்னு சத்தியாகிரகம் பண்றாரு” என்றாள் எரிச்சல் மங்கிய குரலில்.
அவள் சொல்வதை எல்லாம் கேட்ட கவிக்கு என்னடா இது என்று தான் இருந்தது! போதா குறைக்கு அமுதன் ஏன் அன்று ரஞ்சித்தையும் தேனுவையும் பார்த்து விட்டு அவர்கள் இருவரையும் தவிர்த்து செல்ல வேண்டும்?
“நீ அவர் கிட்ட கூப்பிட்டு பேசிட வேண்டியது தான தேனு?” என்று கவி சொல்ல,
“எங்கண்ணி? ஆளு ஃபோனை எடுத்தா தானே பேச முடியும்? ரெண்டு வாரமா ட்ரை பண்றேன். மெசேஜும் பாக்கல. காலு’ம் அட்டன் பண்ணல” என்றாள் அயர்ந்த குரலில்.
கவிக்கு உள்ளுக்குள் ஆயிரம் சந்தேகங்கள் உதித்தாலும் “விடு தேனு. உண்மையாவே நிறைய வேலை இருக்கும் போல. கொடுக்கிற வாய்ப்பு வர்றப்ப கொடுத்திடு” என்றாள் சாதாரணமாகவே.
“கொடுத்திடனும் அண்ணி. அப்ப தான் எனக்கு நிம்மதி” என்று தேன்மலர் பெரு மூச்சுடன் சொல்ல, அதில் சிரித்த கவி, “அப்படி என்ன தான் தேனு பிரச்சனை? ஏன் காசை அந்த தம்பி கிட்ட கொடுத்தே ஆகனும்னு நிக்கிற? அவரும் நம்ம சொந்தம் தான” என்று தன் சந்தேகத்தை கேட்டு விட்டாள் கவிரத்னா.
“சொந்தமா?” என்று கசந்த குரலில் வினவிய தேன்மலருக்கு சிறு வயதில் தான் ஆசை ஆசையாக உண்ட கடலை மிட்டாயை தட்டி விட்டு அவன் சொன்னவை தான் நினைவில் வந்து போனது!
“நம்மளை அவுங்க சொந்தமா நினைச்சிருந்தா இப்படி ஒதுக்கி வைப்பாங்களா அண்ணி? சொந்தமா ரிசார்ட் கட்டினப்ப ஒரு வார்த்தையாவது நம்ம கிட்ட சொல்லி இருப்பாங்க தான? ரஞ்சி சொல்லி தான் எனக்கு தெரியும். அதுக்கப்புறம் நான் சொல்லி உங்க எல்லாருக்கும் தெரியும். அதைக் கூட விடுங்க..
நாமளும் இதே ஊர்ல தான இருக்கோம். அவரோட வீடு பால் காய்ச்சுறதுக்கு நம்மள கூப்பிட்டு இருப்பாரா?” என்று கசந்த குரலில் கேட்டவள்,
“எதுக்குமே நம்மளை சேர்த்துக்க கூடாதுன்னு தான ஒதுங்கி இருக்காங்க. நம்மளையும் ஒதுக்கி வைக்கிறாங்க. நம்ம மட்டும் ஏன் அவுங்களை சொந்தமா நினைக்கனும்? நமக்கு மட்டும் ஏன் அவுங்க உதவியோ தயவோ வேணும்? எனக்கு வேண்டாம் அண்ணி! அதான் இந்தக் காசை திருப்பிக் கொடுக்கிறதுல குறியா இருக்கேன்” என்றாள் நீள விளக்கமாய்.
இந்த அளவிற்கு அவள் சொந்தங்களை வெறுப்பதை கவிரத்னாவே இப்போது தான் தெரிந்தது கொள்கிறாள்.
அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதால் வேறு எதையும் சொல்லாமல் “சரி விடு. இன்னும் ஒரு வாரம் பாரு. அதுக்கு மேல ஃபோன் எடுக்கலேன்னா வீட்டுக்கே போய் கொடுத்திட்டு வந்திடுவோம். நானும் வரேன் சரியா?” என்று கேட்க “சரி அண்ணி!” என்றாள் தேன்மலர்.
“இன்னும் நாலு நாள்ல கோகுலுக்கு பிறந்த நாள் வருது தேனு. இன்னைக்கு போய் ட்ரெஸ் எடுத்துட்டு வந்திடுவோமா?” என்று கவி கேட்க,
“நேரம் ஆச்சே அண்ணி. போய்ட்டு வந்திட முடியுமா?” என்று தேன்மலர் இன்னும் கழற்றி இருக்காத கடிகாரத்தை பார்த்தபடி கேட்க,
“அதெல்லாம் வந்திடலாம் தேனு.. மணி நாலு தானே ஆகுது. நைட் ஒன்பது மணிக்குள்ள வந்திடுவோம்” என்றதும், “சரி அண்ணி. நான் போய் ட்ரெஸ் மாத்தி ரெடியாகி வந்துடுறேன்” என்றவள் கீழே செல்ல கவியும் அவளை பின் தொடர்ந்தாள்.
இருவரும் தயாராகி மங்கையிடம் சொல்லிக் கொண்டு புறப்பட, “தேனு.. வீட்டுக்கு கட்டுற புடவை எல்லாம் பழசா போச்சு. எனக்கும் ரெண்டு சாதா சேலை எடுத்துக்கடி” என்று மங்கை மகளிடம் பணத்தினை கொடுக்க,
“என் கிட்ட இருக்குமா. நானே வாங்கிட்டு வரேன்” என்றவள், கோகுலன் மற்றும் கவியோடு சேலத்திற்கு வந்திருந்தாள்.
எப்போதும் அவர்கள் உடை எடுக்கும் கடைக்கு சென்றவர்கள் கோகுலனுக்கு உடை எடுக்க, சின்னவன் எனக்கு ஷர்வானி உடை தான் வேண்டும் என்று அடம் பிடித்தான்.
“இந்த பர்த் டேக்கு எனக்கு ஷர்வானி வேணும்மா” என்று அன்னையிடம் ஆரம்பித்தவன்,
“அதெல்லாம் முடியாது கோகுல். ஷர்வானி எல்லாம் நீ போட மாட்ட. நார்மல் ஷர்ட் பேண்ட்டே போதும்” என்று கவி மறுத்ததும்,
“அத்த..எனக்கு ஷர்வானி தான் வேணும்” என்று அத்தையிடம் வந்து நின்றான்.
மருமகன் கேட்டதும் மறுக்க முடியாமல் “சரி. அத்த வாங்கித் தரேன்” என்றவள் கவியின் முறைப்பை வாங்கிக் கொள்ள,
“விடுங்கண்ணி. ஆசையா கேக்கும் போது எப்படி இல்லேன்னு சொல்றது..” என்றவள் தானே அவனுக்கு ஒரு உடையை தேர்ந்தெடுத்தாள்.
“நீ போய் அத்தைக்கு சேரி எடுத்துட்டு வா தேனு. நான் இவனுக்கு ரெண்டு மூணு நார்மல் சட்டையும் ட்ரவுசரும் எடுத்துட்டு இருக்கேன்” என்க,
“சரி அண்ணி” என்றவள் மேல்தளம் செல்லவென லிஃப்ட்டிற்குள்ளே நுழைந்து மேல் தளத்திற்கான பட்டனை அழுத்தினாள்.
சரியாக மின் தூக்கி மூடப் போன சமயம் உள்ளே வந்தான் அமுதகீதன்!
திடீரென அவனைக் கண்டதும் தேன்மலர் ஜெர்காகி என்ன சொல்வதென தெரியாமல் விழிக்க, அவனுமே அவளை அங்கே எதிர் பாராதவன் போல் மௌனமாக விரிந்த கண்களுடன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இருவரின் பார்வைகளும் உரசிக் கொண்டு நிற்கையில் அமுதனோடு சேர்ந்து வந்த கிருஷ்ணரூபி தேன்மலரை கண்டதும் “அக்கா.. எப்படி இருக்கீங்க?” என்று மலர்ந்த முகத்துடன் கேட்க, அவள் குரலில் இருவரும் தன்னிலை அடைந்தனர்.
“ஹான் நல்லா இருக்கேன் கிருஷ்ணா” என்றவள் புன்னகைக்க, அமுதன் அவளை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே அவளின் பின்னே சென்று நின்று கொள்ள, கிருஷ்ணரூபி தேன்மலர் அருகே நின்று கொண்டாள்.
மின் தூக்கி மேலே செல்ல, அமுதனின் பார்வை மொத்தமும் தனக்கு முன்னே நின்றிருந்தவள் மீது தான்!
மின் தூக்கிக்குள் அவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர். தனக்கு முன்னே நிற்பவளின் பக்கவாட்டு முகம் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது.
கிருஷ்ணா எதையோ கேட்க, அதற்கு சிறு புன்னகையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால், அவர்கள் பேச்செல்லாம் அவனின் செவிகளை எட்டவே இல்லை.
அவளின் மதி முகம் மட்டுமே அவனின் கண்களோடு சேர்த்து செவிகளையும் நிறைத்திருந்தது. மனதையும் நிறைத்ததா இல்லையா என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்!
இத்தனை நாட்களும் அவளை புறக்கணித்தவனுக்கு இன்று அவளை நேருக்கு நேராகக் கண்டதும் அவளை புறக்கணிக்க முடியுமா எனும் பெரிய கேள்வி மனதினுள் எழுந்தது.