பணிதல் – 12
தேன்மலரின் முகத்தில் இறுக்கமும் ஆழ்ந்த அமைதியும் தெரிந்ததை கண்ட ரஞ்சிதன், “ஹே தேனடை.. என்ன ஆச்சு? அமுதன் என்ன சொன்னான்?” என்று கேட்க,
“எதோ முக்கியமான வேலை போல ரஞ்சி.. சோ, இன்னொரு நாள் வாங்கிக்கிறேன்னு சொன்னார்” என்று இரண்டு வரிகளில் பதில் கூறியவளுக்கு, மனதிற்குள் அவன் பேசிய அத்தனையும் இடை விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘ஒரு மணி நேரமா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தியா மலர்?’ – இதைக் கேட்ட போது அவன் குரலில் தென்பட்ட கோபம்.. அதுவும் நெருக்கத்தை உணர்த்தும் வகையிலான கோபம்.. அதைத் தான் தேன்மலரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஏன் அப்படிக் கேட்டான்..?
அதுவும் இறுதியாக அவன் கூறிய வார்த்தைகள் அவளையும் சற்று குற்ற உணர்வில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
‘நீ ஒரு மணி நேரம் கழிச்சு கால் பண்றப்பவே தெரியுது மலர்.. நான் தான் வர சொன்னேன்னு உனக்கு எவ்வளவு தூரம் நியாபகம் இருக்குன்னு!’
உண்மையில் அவளுக்கு ரஞ்சிதனைக் கண்டதும் எதற்காக அந்த பேக்கரிக்கு வந்தோம் என்றதே மறந்து தான் போனது.
அடுத்தடுத்து அவன் சொல்லிய மகிழ்வான செய்தியில் அமுதகீதனை முற்றிலும் மறந்தே போய் இருந்தாள்.
அதுவும் ஒரு மணி நேரம் என்றவன் சொல்வதை வைத்தே கணித்து விட்டாள் அவன் இங்கு வந்து தன்னை.. ம்ஹூம் தங்களை பார்த்திருக்கிறான் என!
அப்படிப் பார்த்ததால் தான் கோபமாகப் பேசினானா? எதற்கு கோபப் பட வேண்டும்? பார்த்ததும் வந்திருக்கலாமே!
தான் அவனோடு ஒட்டாமல் பேசினாலும் ரஞ்சிதன் நன்றாகத் தானே பேசுவான்.. அவனுடனாவது பேசி விட்டு சென்றிருக்கலாம் அல்லவா? எதற்காக வராமல் சென்றான் என்று தேன்மலருக்கு விளங்கவே இல்லை!
அவளுக்கு யார் சொல்லி புரிய வைப்பது? ரஞ்சிதனுடன் அவள் நன்றாகப் பேசியதும், தன்னால் அவளுடன் இப்படி நன்றாகப் பேச முடியவில்லையே என்பதும் தான் அமுதனிற்கு கோபமே என்று!
“தேனு.. என்ன ஆச்சு? அமுதன் எதுவும் திட்டிட்டானா?” அவள் முகம் சரியில்லாததை வைத்து ரஞ்சித் கேட்க,
“இல்ல ரஞ்சி.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல. என்னமோ ஒர்க் டென்ஷன்ல பேசின மாதிரி இருந்தது” என்றாள் சமாளிப்பாக.
“நீ ஏன் தேனு அதுக்கு ஒரு மாதிரி டல் ஆகிட்ட?”
“அதில்ல ரஞ்சி… இந்தக் காசை நானும் அவர் கிட்ட கொடுத்திடலான்னு பாக்குறேன்.. முடியல. தள்ளி தள்ளி போகுது” என்றாள் பெரு மூச்சுடன்.
“விடு.. அமுதன் இங்க தான இருக்கான். எப்பப் பாக்குறியோ அப்ப கொடுத்திடு” என்றவன், தையல் போடப்பட்டு சற்றே குணமாகி இருந்த அவளின் கண் காயத்தை பார்த்தபடி,
“ஆனா நீ கொஞ்சம் கவனமா வந்திருக்கனும் தேனடை.. கண்ணுக்கு மேல காயம் ஆகுற அளவுக்கா விடுறது” என்று நூறாவது முறையாக கடிந்து கொண்டான்.
“டேய்.. போதும்டா! அடி பட்டது பட்ருச்சு… தையலும் போட்டாச்சு. காயம் கூட கொஞ்சம் சரி ஆகிடுச்சு. ஆனா, இந்த ஒரு வாரமா எல்லாரும் இதையே சொல்லி சொல்லி எனக்கு காது வலிக்குது” என்றாள் செவிகளை மூடிக் கொண்டு.
“ஆமா.. ஆமா உனக்கு வலிக்கும் தான். எங்களுக்கு தான் உன்னை இப்படி பாக்க பாக்க கவலையா இருக்கு” என்றான் அன்பான அக்கறையுடன்.
தேன்மலருக்கு அவனோடு பேசிக் கொண்டிருந்தாலும் மனதிற்குள் அமுதனின் குரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.
சற்று நேரத்தில் இருவரும் கிளம்ப “தேனு வீட்ல யாருக்கும் இந்த விஷயத்தை சொல்லிடாத. அம்மாவே இன்னும் பத்து நாள்ல எல்லாருக்கும் சொல்றதா சொல்லி இருக்காங்க” என்று ரஞ்சிதன் கேட்டுக் கொள்ள,
“ஓகே ரஞ்சி” என்றவள்,
“அப்புறம் ஏன்டா எனக்கு மட்டும் வந்து சொன்ன?” என்று முறைப்புடன் கேட்க,
“உன் கிட்ட சொல்லாம இருக்க முடியுமா? எனக்கு ஓகேன்னதும் உன் கிட்ட தான் வந்து சொல்லணும்னு இருந்தேன். அதே மாதிரி நேத்து ஊர்ல இருந்து கிளம்பி வந்ததும் இன்னைக்கு உன்னை வந்து பாத்து சொல்லிட்டேன்” என்றான் புன்னகையுடன்.
“சரி சரி.. பாத்துப் போ. இப்படி பல்லை காட்டி கண்ணு தெரியாம எங்கேயும் விழுந்து வச்சிடாத” என்று தேன்மலர் கிண்டல் செய்ய,
“எல்லாம் என் நேரம்” என்றவன்,
“நீ முதல்ல பாத்து போ தேனடை! இப்ப தான் ஒரு புதையல் அள்ளி முடிச்சிருக்க!” என்று பதிலுக்கு கிண்டல் செய்தவன் அவள் ஸ்கூட்டியை எடுத்து கிளம்பியதும் தானும் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
வீட்டிற்கு வந்த பின்னர் கூட அமுதனின் நினைவுகள் தேன்மலரை பிடித்துக் கொள்ள, அப்படியே சோர்ந்து அமர்ந்து விட்டாள்.
அவனின் நெருக்கத்தை உணர்த்தும் கோபம் எதனால் என்று அவளுக்கு புரியவில்லை. எதோ உரிமையுடன் கோபம் கொள்பவன் போல் அவன் பேசியதை எண்ணிப் பார்த்தவளுக்கு, எரிச்சலும் சலிப்பும் தான் வந்தது.
‘இவனுக்கு நம்மன்னா ஆகாது தான். இதுக்கு முன்னாடியும் கூட இப்படி கோபமா பேசி இருக்கான் தான். ஆனா, இன்னைக்கு அந்தக் கோபம் என்னமோ வித்தியாசமா ஃபீல் ஆச்சு…! அதான் என்னன்னு புரியல’ என்று தனக்குத் தானே யோசித்துக் கொண்டு அமர்ந்தவளின் அருகே வந்து அமர்ந்தாள் கவி.
“என்ன தேனு? ரஞ்சித் வந்து உன்னைப் பார்த்தானா?” என்று கவிரத்னா விசாரிக்க,
யோசனையில் இருந்து கலைந்த தேன்மலர் “ஹான்.. என்ன அண்ணி கேட்டீங்க?” என்று முழித்தாள்.
“அடிப்பாவி.. நான் கேட்டது காதுல விழலையா?” என்ற கவி,
“ரஞ்சித் வந்து உன்னை பார்த்தானான்னு கேட்டேன்” என்றாள் சத்தமாய்.
“ம்ம்.. பார்த்தான் அண்ணி. நீங்க தான் அவன் கிட்ட நான் பேக்கரிக்கு போய் இருக்கதா சொன்னீங்களா?”
“ம்ம் தேனு. என்னமோ உன் கிட்ட முக்கியமா பேசணும்னு சொன்னான். நீ வெளிய போய் இருக்கதா சொன்னேன். எங்கன்னு அவசரமா கேட்டான்.. நானும் நீ அமுதன் தம்பி கிட்ட பணம் கொடுக்க போயிருக்கிறதா சொல்லிட்டேன். உடனே காரை கிளப்பிட்டு போய்ட்டான்” என்றவள்,
“அப்படி என்ன தல போற விஷயத்தை சொல்ல வந்தான்?” என்று தாடையில் கை ஊன்றி கவிரத்னா சுவாரஸ்யமான குரலில் கேட்க,
“முக்கியமான விஷயம் தான் அண்ணி. ஆனா, வேற யாரு கிட்டயும் சொல்ல கூடாதுன்னு கன்டிஷன் போட்டுட்டான்” என்று கூற,
“கன்டிஷனா..” யோசனையாக கேட்ட கவி,
“மறுபடியும் உன் கிட்ட கல்யாணம் அது இதுன்னு உளறினானா?” என்று சந்தேகமாகக் கேட்க,
“ஐயோ அண்ணி.. அதெல்லாம் இல்ல. போன மாசமே ரெண்டு பேரும் அதைப் பேசி களியர் பண்ணிட்டோம்னு சொன்னேன் தான” என்று தேன்மலர் கூற,
“சொன்ன தான்! ஆனாலும், இப்ப அவன் வந்த வேகமும் உன் கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்னு அவசரமா கிளம்பி போனதையும் பார்த்தா லைட்டா டவுட் வந்தது.. அதான் கேட்டேன்” கவிரத்னா விளக்கமாய் சொல்ல,
“அப்படி எல்லாம் இல்ல அண்ணி” என்றவளுக்கு போன மாதத்தின் ஓர் விடுமுறை நாளில் அவனோடு அலைபேசியில் பேசியவை நினைவில் வந்தது.
அன்று தேன்மலரிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டு விட்டுச் சென்ற பின்னர் ரஞ்சிதனுக்கு நிம்மதி பறி போய் இருந்தது.
ஏனடா அப்படிக் கேட்டோம் என்று எண்ணி எண்ணி தன்னையே நொந்து கொண்டான். அதுவும் தேன்மலர் வேறு நானாக அழைக்கும் வரை நீ எனக்குக் கூப்பிடாதே என்றும் சொல்லி விட, அவனால் தாளவே முடியவில்லை.
தங்களுக்குள் இருக்கும் அழகான நட்பை களங்கம் செய்யும் விதமாக அப்படிக் கேட்டது மனதிற்குள் வலியை கொடுத்திருக்க, தேன்மலரின் மௌனமும் அவனை கொன்று போட்டது. எனவே தான் அவள் சொன்னதையும் மீறி தானே அவனுக்கு அழைத்தான்.
ஆனால், முதல் சிறிது நாட்களில் தேன்மலர் அவனின் அழைப்பை ஏற்கவே இல்லை.
கவிரத்னாவிடம் தங்களுக்குள் நிகழ்ந்த பேச்சு வார்த்தையை சொல்லி அவன் பக்கம் இருந்து என்ன ஆனது என்று தெரியாமல் அவனிடம் இப்படி கோபம் கொள்வது தவறு என்று புரிந்தவளுக்கு அப்போதே அவன் மீது கோபம் குறைந்திருந்தது.
ஆனாலும், அழைப்புகளை புறக்கணித்து கொண்டே தான் இருந்தாள். ஓர் நாள் அவன் காணொளி இணைப்பில் அழைத்திருக்க, அதனை புறக்கணிக்க முடியாமல் ஏற்றிருந்தாள்.
ஏற்றதும் “சாரி சாரி சாரி..” என்று விடமால் ஜெபம் செய்தவன், கை எடுத்து கும்பிட்டு இருந்தான்.
ஏனோ தேன்மலருக்கு அவனை அப்படிக் காண சிரிப்பு தான் வந்தது. அவள் சிரிப்பைக் கண்டவன் “அம்மாடி தாயே.. கோபம் போச்சா? ஒரு வழியா சிரிச்சிட்ட” என்று பெரு மூச்சுடன் சொல்ல,
“கோபம் எல்லாம் போகல. ஆனாலும் நீ அப்படிக் கேட்டதை ஏத்துக்க முடியல ரஞ்சி. முதல்ல ஏன் அப்படிக் கேட்ட? எது உன்ன என்கிட்ட அப்படிக் கேட்க சொல்லி தூண்டிச்சு?” என்றாள் தேன்மலர் பொறுமையாக.
கவி அன்று பேசிய பின்பு ரஞ்சிதன் தன்னிடம் அப்படிக் கேட்டதற்கு அவன் பக்கமும் எதோ ஒரு வலுவான காரணம் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டாள் தேன்மலர்.
எனவே தான் இன்று பொறுமையுடன் அவனிடம் கேட்டாள். இந்தக் கேள்வியை அன்றே அவனிடம் கேட்கும் நிதானம் அவளிடத்தில் இல்லை என்பதே நிஜம்!
திரையில் தெரியும் அவள் முகத்தையே சிறிது நேரம் அமைதியாக பார்த்தவன்,
“வேண்டாம் தேனடை..நான் எதோ லூசு மாதிரி வந்து அப்படிக் கேட்டுட்டேன். விடு” என்று உண்மையான காரணத்தை சொல்லாமல் மூடி மறைத்தான் ரஞ்சிதன்.
அதில் கோபம் கொண்டவள் “இப்ப நீ சொல்லலேன்னா கால் கட் பண்ணிட்டு பேசாம போயிடுவேன்” என்று மிரட்ட,
“சரி சொல்றேன். ஆனா நீ ஃபீல் பண்ணக் கூடாது” என்றவன், தடுமாறும் குரலில் சொல்லத் துவங்கினான்.
“வீட்ல அம்மா பொண்ணு பாக்குற பேச்சை எடுத்தப்ப, அப்பா உன்னையே நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு வரலாமேன்னு சொன்னாரு” என்றவன் அவளின் முகம் பார்க்க,
“சொல்லி முடி ரஞ்சி!” என்று அதட்டினாள் தேன்மலர்.
“ம்ம்.. அப்பா யதார்த்தமா தான் அப்படி சொன்னாரு தேனு. அப்பவே நான் அப்பா கிட்ட “என்னால முடியாதுப்பா. நானும் தேனும் அப்படிப் பட்ட எண்ணத்தில இல்லேன்னு மறுத்துட்டேன்..” என்றதும்,
அவனை நன்றாக முறைத்தவள்,
“அப்புறம் என்னத்துக்குடா என்கிட்ட வந்து அப்படிக் கேட்ட?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்க,
“இரு. நான் சொல்லி முடிக்கிறேன்..” என்றவன், அவள் முகம் பார்க்காமல் வேறு பக்கமாக திரும்பிக் கொண்டு,
“நான் அப்படி சொன்னதும்..அம்மா..” என்றவன் தொண்டையை செருமிக் கொண்டு பேச முடியாமல் திணற, தேன்மலருக்கு அப்போதே புரிந்து போனது!
கமலம் எதையோ மனம் நோகும் படி சொல்லி இருக்கிறார் என! அவன் சொல்லப் போவதை கிரகித்துக் கொள்ள மனதை திடப் படுத்திக் கொண்டாள்.
“அம்மா.. தான்.. என்னவோ சொல்லிட்டாங்க.. எனக்கு ஒரு மாதிரி ஃபீல் ஆகிடுச்சு. அதனால தான் உன் கிட்ட வந்து அப்படிக் கேட்டுட்டேன்..” என்றான் கமறிய குரலில்.
“என்னவோ சொன்னாங்களா.. இல்லை என்னைப் பத்தி சொன்னாங்களா?”என்று இறுகிய குரலில் தேன்மலர் கேட்க,
“தேனடை..” என்று தொண்டைக் குழி ஏறி இறங்க இயலாமையுடன் ரஞ்சிதன் அழைக்க,
“அத்தை என்ன சொல்லி இருந்தாலும் என்னால நிச்சயம் தாங்கிக்க முடியும் ரஞ்சி. ஏன்னா சின்ன வயசில இருந்தே நம்ம சொந்தங்க பேசுற பேச்சை தாங்கினவ தானே நான். ஏன்.. இப்பவும் தாங்கிட்டு தான இருக்கேன்” என்று மரத்த குரலில் சொன்னவள்,
“என்ன சொன்னாங்கன்னு சொல்லிடு ரஞ்சி” என்றாள் பிடிவாதமான குரலில்.
அவளுக்குத் தெரிய வேண்டி இருந்தது. கமலம் என்ன சொல்லி இருப்பார் என்று கட்டாயம் தெரிய வேண்டி இருந்தது.
நிச்சயம் நல்ல விதமாக எதையும் சொல்லி இருக்க மாட்டார். எனவே, தான் தைரியமாக அவனை சொல்லும் படி பிடிவாதமாகக் கூறினாள்.
அவர் சொல்லியதை தெரிந்து கொண்ட பின்னர்.. அதனை கிரகித்துக் கொண்ட பின்னர்.. அவளின் மன உறுதி நிச்சயம் இரட்டிப்படையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆம்! அவள் மன உறுதி இரட்டிப்படையும் தான்!
சொந்தங்களின் வசவுகளை, அவதூறான பேச்சுக்களை சிறு வயது முதலே கேட்டுக் கேட்டு அதற்கு தன்னை பழக்கிக் கொண்டு அதிலிருந்து மன உறுதியையும் அழுத்தத்தையும் தன்னுள்ளே உருவாக்கிக் கொண்டவள் தேன்மலர்!
ஆகையால், கமலம் தன்னைப் பற்றி திருமணம் சார்பான விஷயத்தில் என்ன கூறி இருந்தாலும் அதைத் தன் மன உறுதிக்கு உறுதுணையாக ஏற்றுக் கொள்வாளே அன்றி அதையே எண்ணி வருந்தி உடைந்து போகும் ரகமில்லை அவள்!
ரஞ்சிதன் அவளின் உறுதி படைத்த முகத்தை பார்த்து உணர்வற்ற குரலில் அன்னை கூறியதை கூறினான்.
கணவர் தேன்மலரை தங்கள் வீட்டின் மருமகளாக கொண்டு வரலாமே என்று சொன்ன போதே கொதித்துப் போன கமலம் மகன் சொன்ன பதிலில் சற்று தணிந்தாலும் கணவரின் எண்ணத்தை அடியோடு அழிக்க வேண்டும் என வார்த்தைகளை சரமாரியாக கொட்டினார்.
“உங்களுக்கு என்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சாங்க? போயும் போயும் உங்க உருப்படாத தங்கச்சி வீட்ல இருந்து பொண்ணெடுக்கலாம்னு சொல்றீங்க? அவ மட்டும் நம்ம வீட்டுக்கு வந்தா நம்ம குடும்ப மானமே போய்டும். அவ அண்ணன்காரன் எப்ப எங்க குடிச்சிட்டு வருவான்னு சொல்ல முடியாது. அப்புறம் உங்க தங்கச்சி.. ஒண்ணத்துக்கு லாய்க்கில்ல. புள்ளையையே சரியா வளக்கத் தெரியாதவ. பொண்ணை மட்டுமா உருப்படியா வளத்து வச்சிருப்பா! அவ என்ன லட்ச்சணமோ? எந்தப் புத்துக்குள்ள எந்தப் பாம்புன்னு நமக்கெப்படி தெரியும்? நீங்க வேணும்னா பாருங்க உங்க தங்கச்சி மகளுக்கு கல்யாணமே நடக்காது..! எவனும் அவளை பொண்ணு கேட்டு வர மாட்டான். அப்படியே வந்தாலும் நான் விட மாட்டேன். உங்க தங்கச்சி குடும்பத்த பத்தியும், அவ பையன் லட்சணத்தை பத்தியும் சொல்லி வர்றவங்களை ஓட ஓட விரட்டிடுவேன்” என்று ஆவேசமாக கூறி இருந்தார்.
தாய் சொன்னதை கசந்த குரலில் கூறியவன் கண்களில் படந்த நீரினை துடைத்துக் கொண்டு திரையில் தெரிந்த தேன்மலரைப் பார்க்க, அவளோ திடமான முகத்துடன் அவனைப் பார்த்து,
“சோ, அத்த அப்படி சொல்லவும் சார் பயந்து போய் என்னை யாரு கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு இரக்கப் பட்டு அப்படி வந்து கேட்டீங்களா?” என்று நக்கலாக கேட்க,
அவள் முகத்தில் கடுகளவு கூட வருத்தமோ, கோபமோ தெரியாததை கண்டு மெலிதாக அதிர்ந்தவன் “அப்படி இல்ல தேனு.. எனக்கு அம்மா அப்படி சொல்லவும் ரொம்ப கஷ்டமா போச்சு. என்னமோ.. உன்னை யாரு நல்லா பாத்துக்குவாங்கன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு. அதான் ஒரு கவலைல அப்படி வந்து கேட்டுட்டேன். சாரி தேனடை..” என்றவன்,
“அம்மா பேசினதுக்கும் நான் சாரி கேட்டுக்குறேன்!” என்று மன வருத்தத்துடன் கூற,
“அதை எல்லாம் விடு. இனி இப்படி எல்லாம் அம்மா சொன்னாங்க.. அப்பா சொன்னாங்கன்னு வந்து பேசாத. அப்புறம் ஜென்மத்துக்கும் உன் மூஞ்சில முழிக்க மாட்டேன்” என்றாள் தீவிரமான குரலில்.
“அம்மா தாயே.. இனி அப்படி நான் பேசுவேனா??” என்றவன்,
“சாரி தேனு. இதை எல்லாம் உன் கிட்ட சொல்ல வேணாம்னு தான் நினைச்சேன்.. ஆனா நீ பிடிவாதமா கேக்கவும் சொல்லிட்டேன். மனசுல எதயும்..” என்றவனை இடை மறித்தாள் தேன்மலர்.
“நான் இந்த மாதிரி நிறைய கேட்டுட்டேன் ரஞ்சி. விடு. இனி அதைப் பத்தி பேச வேண்டாம்” என்றவள், அன்றிலிருந்து அவனிடம் சகஜமாவே பேசத் தொடங்கி இருந்தாள்.
இதோ இன்று கூட ரஞ்சிதன் அவனுக்குப் பெண் பார்த்திருக்கும் விஷயத்தைப் பற்றி தான் கூறி இருந்தான். அதுவும் அவனின் தேனடையிடம் தான் முதன் முதலாக கூறி இருந்தான்.
பெண்ணின் பெயர் கமலி! சென்னையில் அவளின் தோழிகள் இருவருடன் இணைந்து ஒரு இன்டீரியர் டிசைனிங் கம்பெனி வைத்திருக்கிறாள்.
பத்து தினங்களுக்கு முன்பு கமலம் பெண்ணைப் பற்றி மகனிடம் சொல்லி அவனை சென்று நேரில் சந்தித்துப் பேசச் சொல்லி இருந்தார்.
ரஞ்சிதன் தாய் சொன்னதை தட்ட முடியாமல் அசிரத்தையுடன் தான் கமலியைப் பார்க்கச் சென்றான்.
ஆனால், அவளிடம் பேசிய போது அவளின் புன்னகை வாடாத பேச்சும், நிதானமான அணுகுமுறையும், எந்த வித ஒழிவு மறைவின்றி அவளைப் பற்றி சொல்லி, தன்னைப் பற்றி கேட்டறிந்து கொண்டு என அவளின் குணங்கள் இரஞ்சிதனுக்கு மிகவும் பிடித்துப் போனது.
இருவரும் மனம் திறந்து பேசி இருந்தாலும் முடிவைக் கூற பத்து நாட்கள் எடுத்துக் கொண்டார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டில் சம்மதம் சொல்லி இருக்க, அடுத்த மாதம் ஓர் நல்ல நாளில் நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர் பெரியோர்கள்.
கமலம் நிச்சயத்திற்கு பத்து தினங்களுக்கு முன்பு எல்லோரிடமும் சொல்லிக் கொள்ளலாம்.. அது வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தார்.
ஆனால், ரஞ்சிதனால் தேன்மலரிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நேற்று ஊரில் இருந்து வந்தவன் இன்று அவளிடம் கமலியின் புகைப்படத்தையும் காண்பித்து எல்லாவற்றையும் சொல்லி இருந்தான்.
இந்த குட் நியூஸ்சை கேட்காமல் தான் அமுதன் அப்படி என்ன குட் நியூஸ் என்று எரிச்சலுடன் கிளம்பி இருந்தான்.
“ஹே தேனு.. என்ன நான் கேட்டுட்டே இருக்கேன்.. நீ ரொம்ப அமைதியாகவே இருக்க” என்று கவி அவளின் கையைப் பிடித்து உலுக்க,
“ஹான்.. ஒன்னுமில்ல அண்ணி.. நல்ல விஷயம் தான் சொன்னான். ஆனா, யாரு கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு கன்டிஷன்!” என்று புன்னகையுடன் சொன்னவள்,
கவியிடம் பெரிதாக மறைக்க விரும்பாமல் “அடுத்த மாசத்துல நம்ம எல்லாருக்கும் நியூஸ் வந்திடும் பாருங்க” என்றாள் கண் சிமிட்டியபடி.
கவிக்கும் புரிந்து விட, “அப்ப அடுத்த மாசம் உங்க அம்மாக்கு நெஞ்சு வழி வர்ற மாதிரி ஒரு விஷயம் நடக்கப் போகுது..” என்று இழுவையாக சொன்னாள்.
தேன்மலர் பெரு மூச்சுடன் “அப்படித் தான் அண்ணி.. ஆனா, அம்மாவோட எதிர்பார்ப்புக்கு அர்த்தமே இல்ல” என்றவள்,
“கமலம் அத்தைக்கு அம்மாவோட எதிர் பார்ப்பு தெரிஞ்சா அவ்வளவு தான்.. பெரிய ரகளையே பண்ணிடுவாங்க. அம்மாவை எப்படி சமாளிக்கிறதுன்னு தான் தெரியல” கவலையுடன் கூற,
“விடு தேனு. நான் இருக்கேன் தான. பாத்துக்கலாம்” என்றவள் தைரியம் சொல்ல, பின்வரும் நிகழ்வுகளை எண்ணி கவலை கொள்ள விரும்பாமல் தேன்மலரும் பேச்சை மாற்றும் விதமாக,
“எங்கண்ணி அம்மாவைக் காணோம்?” என்று கேட்க,
“நீ காலைல கிளம்பினதும் உங்க அம்மா அவரைக் கூட்டிட்டு சேலத்தில யாரோ ஜோசியரைப் பார்க்க போயிருக்காங்க தேனு” என்றாள் பெருமூச்சுடன்.
தேன்மலர் நெற்றியில் தட்டிக் கொள்ள, “விடு.. நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா. நமக்கு மட்டும் தான் மதிய சாப்பாடு. மீன் வாங்கி வச்சிருக்கேன். நீ க்ளீன் மட்டும் பண்ணிக் கொடு. நான் சமைக்கிறேன்” என்றவள் எழுந்து செல்ல, தேன்மலரும் மற்ற விஷயங்களை மறந்து விட்டு அண்ணியோடு இணைந்து மதிய உணவு வேலையில் இறங்கினாலும், மனதிற்குள் அமுதனிடம் பணத்தை கொடுக்காமல் விட்டது உறுத்திக் கொண்டே இருந்தது.
அன்று மட்டுமல்ல.. அடுத்த வந்த மாதத்திலும் அவளால் அவனை சந்திக்கவே முடியவில்லை. அதற்கான வாய்ப்பை அமுதகீதன் ஏற்படுத்த விரும்பவில்லை என்பதே உண்மை!
அவள் அலைபேசியில் அழைத்தாள் துண்டித்தான்! குறுஞ்செய்தி அனுப்பினால் அதனை நாள் கணக்காக பார்க்காமல் கிடப்பில் போட்டான்! சரி இப்படியே விட்டால் சரி வராது என்றவள் ஒரு முடிவோடு அவனின் ‘ஜி-பே’ நம்பரை சரி பார்த்து அதற்கு பணத்தை அனுப்பி விட, அவள் அனுப்பிய ஒரு மணி நேரத்தில் மீண்டும் அவளுக்கே திருப்பி பணத்தினை அனுப்பி இருந்தான்.
பல்லைக் கடித்துக்கொண்டு அவள் மறுபடியும் அனுப்ப, மறுபடியும் இவளுக்கே அனுப்பினான்!
தேன்மலருக்கு அவனின் செயலில் அளவு கடந்த கோபம் தான் வந்தது. அவனிடம் இதைப் பற்றி கேட்கவென கோபத்துடன் அழைப்பு விடுக்க.. அழைப்பை புறக்கணித்தான்!
தேன்மலருக்கு கட்டுக்கடங்காத கோபம் பெருகியது!
அமுதம் மௌன ஆயுதத்துடன் மலரின் பொறுமையை நன்றாகவே சோதித்தது!