மலர் பாதம் பணிந்து..11

பணிதல் – 11

அலைபேசியில் மலரின் எண்ணைக் கண்டதும் அமுதனின் முகம் அவனையும் அறியாமல் இறுக்கம் குறைந்து இளகி மலர்ந்தது.

“நம்ம கடல மிட்டாய்..” என்றவன் சின்னதாகத் தோன்றிய புன்னகையுடன் மெல்ல முணுமுணுக்க, அவனின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்த வள்ளி அவன் கடலை மிட்டாய் என்று கூறியதை கேட்டிருந்தார்.

“அமுதா..” என்றவர் சத்தமாக அழைக்க, முகத்தை சீராக்கிக் கொண்டவன் “I’ll call you in few minutes” எனும் டெம்ப்ளேட் மெசேஜினை அவளுக்கு அனுப்பி விட்டு அக்காவின் புறம் பார்வையை திருப்பினான்.

“சொல்லுக்கா” என்றவன் தோள்களை குலுக்கியபடி கூற,

“நீ தான்டா சொல்லணும். இங்க நாங்க பேசிட்டு இருக்கோம். நீ பாட்டுக்கு அமைதியாகிட்ட. ஃபோட்டோ காட்டவான்னு கேட்டேன்.. நீ என்னடான்னா ஃபோன் வந்ததும் அதைப் பாத்து கடல மிட்டாய்ன்னு சொல்ற” என்று தான் உன்னிப்பாக கவனித்த ஒவ்வொன்றையும் கூற,

அமுதகீதன் மாறாத முக பாவத்துடன் “ஃபேக்டரி விஷயமா ஒரு கால் அக்கா. அதான் அப்படி சொன்னேன்” என்றான் படு நேர்த்தியாக.

அவன் அப்படிக் கூறியதும் இன்பசேகரனும் வசுந்தலாவும் கூட மறு கேள்வி கேட்கவில்லை. ஆனால், வள்ளிக்கு உறுத்தியது.

அந்த அழைப்பு.. அலுவல் அழைப்பாக இருந்தால் எதற்காக அவன் முகம் புன்னகையை தத்தெடுக்க வேண்டும்? சம்மந்தமே இல்லாமல் ஏன் கடல மிட்டாய் என்று முணுமுணுக்க வேண்டும்?

அவர் தம்பியையே கூர்மையாக பார்க்க, அமுதன் அசரவில்லை.

அவர் பேச வந்த விஷயத்தை முதலில் முடிக்க எண்ணி “இன்னும் நாலு மாசம் போகட்டும் அக்கா. ஐ நீட் சம் டைம்” என்றான் ‘இது தான் என் முடிவு’ எனும் தெளிவான குரலில்.

வள்ளிக்கோ கோபம் வந்தது. “என்னடா டைம்? ஏன்? என் நாத்தனாருக்கு என்ன குறைச்சல்? டபிள் டிகிரி முடிச்சிருக்கா. அழகா இருப்பா.. அப்புறம் என்ன?” என்றவர் கோபத்தில் படபடக்க,

“வள்ளி.. மெதுவா பேசுடி. ஏன் கோபப்படுற”

வசுந்தலா மகளை அமைதிப்படுத்த முயன்றார்.

“இல்லமா.. எனக்கு இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும். இவன் ஏன் நாலு மாசம் போகட்டும்னு சொல்றான்?” மெல்லிய ஆவேசத்தோடு பேசிய வள்ளி,

அதே ஆவேசத்துடன் தம்பியைப் பார்த்து “ஏன்டா.. நீயே உனக்கு பொண்ணு பாத்திட்டயா? அதான் என் நாத்தனாரை வேண்டாம்னு சொல்றியா?” என்று கேட்டு விட, அமுதகீதனின் பார்வையில் அழுத்தம் ஏறியது.

தான் அமர்ந்திருக்கும் சோஃபாவில் தோரணையுடன் சாய்ந்து கொண்டவன் கன்னத்தில் இடது கையை ஊன்றி மௌனமாக அவரை ஏறிட்டான்.

அவ்வளவு தான்.. யோகவள்ளி அப்படியே அடங்கிப் போனார்.

பெரு மூச்சுடன் இரு கைகளையும் கோர்த்துக் கொண்ட அமுதகீதன் “நீ சொல்ற மாதிரி நானே எனக்கு பொண்ணு பாத்திருந்தா இந்நேரம் உங்க கிட்ட இப்படி டைம் எல்லாம் கேட்டுட்டு இருக்க மாட்டேன் க்கா. அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஆணித்தரமா சொல்லி இருப்பேன்!” என்றான் தீர்க்கமான குரலில்.

அவன் அப்படிக் கூறவும் வள்ளியுடன் சேர்ந்து அவனைப் பெற்றவர்களும் சற்று திகைத்து தான் போனார்கள்.

இன்பசேகரன் மகனிடம் “உன் விருப்பத்துக்கு இங்க யாரும் குறுக்க நிக்க மாட்டோம் அமுதா. ஆனா, அப்படி எதாவது இருந்தா எங்க கிட்ட சொல்லலாமே.. ஏன் ஆறு மாசம் டைம் கேக்குற?” மகனின் பேச்சுத் தந்த திகைப்பில் மெல்ல கேள்வி எழுப்பினார்.

“அப்பா.. அப்படி இருந்தா உங்க கிட்ட தான் முதல்ல வந்து சொல்லுவேன். ஆனா, இந்த ஆறு மாசம்.. எப்படி சொல்லி புரிய வைக்க..” என்று தலையை கோதியவன்,

“எனக்கு கல்யாணம்..குடும்பம்.. இதுக்கெல்லாம் நான் இன்னும் ரெடி இல்லேன்னு தோணுது. அதனால தான் என்னை நானே கன்வின்ஸ் பண்ணிக்க இந்த டைமை கேக்குறேன்”

தன் விளக்கமாக அவன் கூறியவை நியாயமானதாக இருக்கவும் இன்பசேகரன் மௌனமாக மகனைப் பார்த்தார்.

வள்ளிக்கு தம்பியின் பேச்சை ஏற்க முடியவில்லை. கூடவே, தந்தையின் பேச்சையும்!

அவர் புகுந்த வீட்டினர் எல்லோரும் அவர்கள் வீட்டுப் பெண்ணை எப்படியாவது தன் தம்பிக்கு கட்டி வைத்து விட வேண்டும் என்று ஒரு வித தீவிரத்துடன் இருக்க, தம்பியின் பிடி கொடுக்காத பேச்சில் வள்ளிக்கு கதி கலங்கியது.

அக்காவின் முகத்தை வைத்தே அவரின் எண்ணத்தை படித்தவன் “அக்கா.. இன்னும் நாலு மாசம் கழிச்சு எனக்கு கல்யாணத்துக்கு ஓகே தான். ஆனா, அதே சமயம் இன்னொரு முறை இப்படி ஃபோர்ஸ் பண்ணி கேட்காதீங்க. நாலு மாசம் கழிச்சு என்ன சூழ்நிலையோ அதுக்கேத்த மாதிரி என்னாலையும் முடிவெடுக்க முடியும். அதனால் தயவு செஞ்சு உங்க வீட்ல அவசரப் படுத்த வேண்டாம்னு சொல்லிடுங்க” என்று முடிவாகக் கூறியவன் எழுந்து கொண்டான்.

வள்ளி அவனை அதிருப்தியுடன் பார்க்க, “நீங்க பேசிட்டு இருங்க. நான் ரூமுக்கு போறேன்” என்று கூறியவன், யாரின் பதிலிற்கும் காத்திராமல் படிகளில் ஏறி சென்று விட்டான்.

செல்லும் அவனைக் கண்ட வசுந்தலா மகளிடம் பார்வையை திருப்பி “வள்ளி.. அவன் காரணம் இல்லாம இப்படி சொல்ற மாதிரி தெரியல. அதனால நீ கொஞ்சம் உன் வீட்டுகாரர் கிட்ட எடுத்து சொல்லிடு” என்றார் முன்னெச்சரிக்கையாக.

தாயை தீயாக முறைத்த வள்ளி அதே முறைப்புடன் தந்தை பக்கம் திரும்பி “என்னப்பா நீங்க? அவன் தான் அப்படி பேசிட்டுப் போறான்னா நீங்களும் உன் இஷ்டத்துக்கு இங்க யாரும் குறுக்க நிக்க மாட்டோம்னு சொல்றீங்க” என்று கோபமாக வினவ,

“இங்க பாரு வள்ளி.. அமுதன் இந்த வீட்டுக்கு பொறுப்பான பிள்ளை. அவன் முடிவுகள் என்னைக்கும் தப்பா போகாது. அவன் ஒரு பொண்ணை விரும்புறான்னா கண்டிப்பா அந்தப் பொண்ணு இந்தக் குடும்பத்துக்கு ஏத்தவளா தான் இருப்பா” என்று நம்பிக்கை நிறைந்த குரலில் கூறியவர்,

“யார் மேலயாவது விருப்பம் இருந்தா அவன் சொல்லி இருப்பான். இப்ப வரைக்கும் இல்லேன்னு தான் நினைக்கிறேன்” என்றவர் சிறிது நேர மௌனத்திற்கு பின்பு,

“ஒரு வேளை அவன் விரும்பி வந்து நின்னா நான் சொன்ன மாதிரி யாரும் குறுக்க நிக்க மாட்டோம் வள்ளி” என்றார் உறுதியான குரலில்.

தந்தையின் பேச்சை கேட்டுக் கொண்டே மேல் தளம் வந்தவனுக்கு உள்ளம் நெகிழ்ந்து போனது.

வள்ளிக்கு மனநிலை முற்றிலும் மாறி இருந்தது. தாய் வீட்டினர் தம்பியின் பக்கம் உறுதுணையாக நிற்பதை பார்த்து நிச்சயம் தான் மட்டும் இவர்களுடன் மல்லுக்கட்ட முடியாது என்பதை புரிந்து கொண்டவர், நான்கு மாதங்கள் கழித்து முறையாக கணவர் வீட்டாட்களை வந்து பேசச் சொல்லலாம் என்று முடிவு செய்தபடி மேற்கொண்டு பெற்றோரிடம் எதையும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார்.

மதியம் உண்டு விட்டு கிளம்பலாம் என்று கூறிய தாயிடம் வேண்டாம் என மறுத்து விட்டு அப்போதே கிளம்பி இருந்தார்.

வசுந்தலா கணவனை கவலையுடன் பார்க்க, “விடு வசு.. கொஞ்ச நாள்ல அவளே சரி ஆகிடுவா” என்றார் மனைவியை தேற்றும் விதமாக.

மேலே அறைக்கு வந்தவன் தேன்மலருக்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்றதும் அன்று போலவே இன்றும் அமைதியாக இருக்க, இவனும் அமைதியாகத் தான் இருந்தான்.

இரண்டு நிமிடங்கள் கடந்த பின்னர் அலுப்பான புன்னகையுடன் ‘ இவ பேச மாட்டா.. நாம தான்டா பேசணும்..’ என்றவன்,

“சொல்லு மலர். கால் பண்ணி இருந்த” என்றான் அவளிடம்.

“ம்ம்.. ஆமா..” என்றவள் மேலே பேசும் முன்,

“எப்படி இருக்க? காயம் எல்லாம் சரி ஆகிடுச்சா?”

சாதாரணமாக விசாரித்தாலும் அவன் குரலில் மெல்லிய அக்கறை இழையோடியது.

“ம்ம். சரி ஆகிடுச்சு” என்று சுருக்கமாக பதில் கொடுத்தவள்,

“அதனால, தான் உங்களுக்கு கால் பண்ணேன். பணத்தை கொடுத்திடலாம்னு..” என்றாள்.

கொடுக்காமல் விட மாட்டாள் என்று தெரியும். ஆனால், கொடுப்பதில் இத்தனை முனைப்பாக இருப்பாள் என்றும் எதிர் பார்க்கவில்லை.

ஒரு வாரமாக எப்போதடா இவன் காசை திருப்பிக் கொடுப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் போலும்..

“ம்ம் சரி..” என்றவனிடம்,

“இப்ப பேசிட்டு இருக்க நம்பர் தான் உங்க ஜி.பே நம்பரா..” என்றவள் கேட்க, நமட்டுச் சிரிப்புடன் இடமும் வலமும் தலையை அசைத்துக் கொண்டவன், “நேர்ல வந்து கொடு மலர்” என்றான் குரலை செருமிக் கொண்டு.

“என்னது நேர்லையா?” திகைப்பான குரலில் தேன்மலர் கேட்க,

“ம்ம்.. நேர்ல தான்” என்றான் இரு தோள்களையும் குலுக்கிக் கொண்டு.

அவளுக்கு மெல்ல மெல்ல கோபம் ஏறியது. அன்றே வாங்கிக் கொள் என்றால் காயம் சரி ஆனதும் கொடு என்றான். இப்போது நேரில் வந்து கொடு என்கிறான்.. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்..

இவை அனைத்திற்கும் கிரீடம் வைத்தார் போல் “மலர்….” என்றவன் மென்மையாக அழைப்பது வேறு கடும் எரிச்சலை கொடுத்தது அவளுக்கு!

“நேர்ல எல்லாம் வர முடியாது. உங்க ஜி.பே அக்கவுண்ட் சொல்லுங்க. நான் பணத்தை டிரான்ஸ்ஃபர் பண்ணிடுறேன்” என்றதும்,

“என்னோட அக்கவுண்ட் ப்ராப்ளம்ல இருக்கு மலர். அதான் நேர்ல வந்து வாங்கிக்கிறேன்னு சொன்னேன்!” பிசிரில்லாத குரலில் சரலமாக பொய் கூறினான் அமுதன்.

அவளுக்கோ அயர்ச்சியாக இருந்தது.

‘இவனோட…’ என்று பல்லைக் கடித்தவள், இன்றோடு இவன் சகவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, “சரி..” என்று கூறியதும்,

ஒரு புகழ் பெற்ற பேக்கரியின் பெயரை சொல்லி அங்கே வரச் சொல்லியவன், “இன்னும் அரை மணி நேரத்தில அங்க வந்து வாங்கிக்கிறேன்.” என்றதும், வேறு வழியே இல்லாமல் சரி என்று விட்டு அழைப்பை துண்டித்தாள் தேன்மலர்.

அமுதகீதனுக்கு ஒரு புறம் ஏன் இப்படி தன்னிடம் பணத்தை கொடுக்க முனைப்பாக இருக்கிறாள்.. அவளிடம் வேண்டாம் என்று எப்படிக் கூறுவது என யோசனையாக இருந்தாலும் மற்றொரு புறம் ‘இவ எப்படி நம்ம கிட்ட பணத்தை கொடுக்கிறான்னு பாக்கிறேன்’ என்ற சவாலான மன நிலையுடன் தான் பேக்கரிக்கு கிளம்பினான்.

அவன் வெளியே செல்வதைக் கண்ட வசு “எங்கப்பா ஏற்காடு கிளம்பிட்டயா?” என்று கேட்க,

“இல்லமா.. ஒரு சின்ன வேலை. வந்தர்றேன்” என்றவன் தங்கையிடமும் சொல்லி விட்டு கிளம்பினான்.

அவன் வரும் போதே அவளின் ஸ்கூட்டி வெளியே நிற்பதைக் கண்டவன், “கடல மிட்டாய் வந்தாச்சு போலயே” என்றபடி உள்ளே சென்றான்.

அது சற்று பெரிதான பேக்கரி தான். ஏகப் பட்ட நபர்கள் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்து உண்டு கொண்டிருக்க, இவளின் தலையை தேடியவன், அங்கே ‘கேக்’கள் அடங்கிய கண்ணாடி பெட்டிக்கு முன்பு நின்றிருந்தவளை கண்டதும் மெல்லிய புன்னகையுடன் அவளை நோக்கி நகர்ந்தான்.

சில நொடிகளிலேயே அவனின் கால்கள் தானாகத் தேங்கியது. அவளருகே யாரோ ஒருவன் நின்றிருந்தான்.

யாரென்று தெரிந்து கொள்ள சுருங்கிய புருவங்களுடன் அமுதன் இன்னும் சில எட்டுக்கள் எடுத்து வைக்க.. அவன் ரஞ்சிதன்.

தேன்மலரிடம் சிரித்துக் கொண்டே என்னவோ கேட்டான்..

அவளோ படு உற்சாகமாக “டேய்.. முதல்ல எனக்கு ட்ரீட் வைக்கனும் நீ! எனக்குப் புடிச்ச கேரமல் கேக் நாலு வாங்கித்தா!” என்று உத்தரவு பிறப்பிக்கும் தொனியில் கூற,

“நாலா.. போதுமா மேடத்துக்கு..” என்றவன் அவளை மேலும் கீழும் பார்த்தபடி கேட்க,

தேன்மலர் அவனின் முழங்கைச் சட்டையை பிடித்திழுத்து “ஒழுங்க மரியாதையா நான் கேக்குறதை வாங்கித் தர்ற. இல்லேன்னா உன்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவேன்” என உரிமையுடன் மிரட்டியவள்,

“சொல்லாம கொள்ளாம என் முன்னாடி வந்து நின்னு எவ்வளவு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருக்க! அது போக ஸ்வீட்டான குட் நியூஸ்சும் சொல்லியிருக்க! அப்ப ட்ரீட் வைக்கத் தானே வேணும்” என்றாள் கருவிழிகளை அபிநயமாக அசைத்தபடி.

ரஞ்சிதனுக்கு அவளின் சந்தோஷத்தில் மனம் நிறைந்து போனது. புன்னகையுடன் அவளையே பார்த்திருக்க,

“டேய்.. வாங்கித் தாடான்னா சிரிச்சிட்டு நிக்கிற?” என்று தேன்மலர் அவன் முழங்கை சட்டையை பிடித்து உலுக்க,

“உனக்கில்லாததா.. நாலென்ன? நாப்பதே வாங்கித் தரேன். நல்லா சாப்பிடு” என்றவன், அவள் கேட்டதை ஆர்டர் கொடுக்க, தேன்மலரும் புன்னகையுடன் தன் ‘கேக்’கிற்காக காத்திருந்தாள்.

இதை எல்லாம் பார்த்தும் கேட்டும் நின்றிருந்த அமுதகீதனுக்கு உள்ளத்தில் எதோ ஒரு உணர்வு புகைந்து வெப்பத்தை பரப்பியது.

அதுவும் தேன்மலர் அவனின் முழங்கை சட்டையைப் பற்றி உரிமையுடன் ஆசையாக கேட்ட விதம் அவனை என்னவோ செய்ய, அங்கே நிற்கவே முடியவில்லை அவனால்.

கடகடவென வெளியே வந்தவன் காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.

அவளை மட்டுமே பார்த்து, நலன் விசாரித்து, ‘பில் செட்டில்’ செய்யும் விஷயத்தை பற்றி பேசி விட்டுச் செல்லலாம் என்று வந்தவனுக்கு ரஞ்சிதனுடன் அவள் உரிமையாக, எந்த வகையான ஒதுக்கமும் காட்டாமல் இயல்பாய் இருந்த விதத்தை ஏற்கவே முடியவில்லை.

அவளின் விழி அபிநயங்கள் உட்பட அனைத்தும் அவன் கண்களுக்குள்ளேயே உலா போக, “ச்சே..” என்று எரிச்சலுடன் ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தினான்.

“அதென்ன ஸ்வீட் குட் நியூஸ்…?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவனுக்கு அவனே கேட்டுக் கொண்டவன்,

“சொல்லாம கொள்ளாம அவன் ஏன் இப்ப வந்து மலரை சர்ப்ரைஸ் பண்ணனும்.. வேற நேரமே கிடைக்கலையாமா? இடியட் ரஞ்சித்!” என்று மேலும் எரிச்சலுடன் ரஞ்சிதனை வாயில் அரைத்தவன், மீண்டும் பேக்கரிக்குள் பார்வையை வீசினான்.

இருவரும் எதிர் எதிரே உள்ள ஒரு இருக்கையில் அமர்ந்து எதோ சிரித்துப் பேசியபடி அவர்கள் வாங்கிய கேக்கினை உண்டு கொண்டிருந்தனர்.

பார்க்கப் பார்க்க மனதில் எரிந்தது அமுதனுக்கு. கூடவே எதோ ஒரு மூலையில் ஏன் தன்னால் அவளிடம் இப்படி நெருங்கிப் பழக முடியவில்லை எனும் ஏக்கமும் சேர்ந்து கொள்ள, அமுதகீதனால் ஒரு நிலையில் இருக்கவே முடியவில்லை.

பார்க்காதே என்று அறிவு அறிவுறுத்தினாலும் அவன் கண்கள் மீண்டும் அவளையே சென்று சரணடைய அதே போல் தான் இருந்தனர் இருவரும்.

ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டு வாங்கிய கேக்கினை ரசித்து உண்டு கொண்டிருந்தனர்.

தான் அவளை எதற்காக இங்கே வரச் சொன்னோம் என்று கூட அவளுக்கு நினைவில் இல்லையா? எனும் கேள்வி எழ, அலைபேசியை எடுத்தவன் அவளுக்கு அழைக்கலாமா வேண்டாமா என சிந்தித்தான்.

உள்ளே இருந்த இருவரும் பேச வேண்டிய விஷயங்களை சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் இப்போதைக்கு பேச்சை நிறுத்தப் போவதில்லை என்பதை புரிந்து கொண்டவன் மிதமிஞ்சிய கோபத்துடன் வண்டியை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.

அடுத்த ஒரு மணி நேரமும் காரில் ஏசியை ஃபுல்லாக வைத்துக் கொண்டு தாரமங்கலம் டவுனையே சுற்றி இருப்பான்!

ஆனால், உள்ளத்தில் உலைக்களமாக பொங்கிய சூடு மட்டும் குறையவே இல்லை.

“என்ன ஸ்வீட் குட் நியூஸ்?”

“எதுக்கு சர்ப்ரைசா வந்தான்?”

“அவனுக்கும் மலருக்கும்…” என்றவன் அதற்கு மேல் அந்த சிந்தனையை தொடர விரும்பாமல் காரை சடன் ப்ரேக்கிட்டு நிறுத்தி விட்டான்!

இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. காரை சாலையோரம் நிறுத்தி தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்தியவன் கொஞ்சம் கொஞ்சமாக நிதானித்தான்.

இருவருக்கும் இடையே என்னவாக இருந்தாலும் எனக்கு ஏன் இருதயம் இப்படி தாளம் தப்பித் துடிக்க வேண்டும்? என குழப்பமாக யோசனை செய்தவன் அதனை நூல் பிடித்து மேலும் யோசித்திருந்தால் நிச்சயம் தன் மனம் என்ன உணர்வில் சிக்கி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டிருப்பான்.

ஆனால், அவன் சிந்தனைக்கு தடை விதிப்பார் போல் அலைபேசி சிணுங்கியது.

அழைத்தது தேன்மலர் தான்!

ஒரு மணி நேரமாக தன்னைக் காணவில்லை என்றதும் எதற்காக பேக்கரிக்கு வந்தோம் என்று நினைவு கூர்ந்து அழைத்திருப்பாள் போலும்!

திரையில் அவளின் எண்களை பார்த்ததும் பெருமளவு கோபம் வந்தது அமுதனுக்கு.

எடுக்கவே கூடாது என்று மனம் முடிவு செய்தாலும் அவன் விரல்கள் மனதின் பேச்சை கேட்கவில்லை. பச்சை குறியை தொட்டு மலரின் அழைப்பை ஏற்றிருந்தது..

இம்முறை அவன் அமைதியாகவே இருக்க மலர் ஒரு நொடி அமைதிக்கு பின்னர் “ஹலோ..” என்றாள்.

“ம்ம் சொல்லு”

இறுக்கமாக வந்தது அமுதனின் குரல்.

“பணத்தை வாங்க வரேன்னு சொல்லி இருந்தீங்க”

“ஆமா சொல்லி இருந்தேன்” என்று இறுக்கம் விலகாத குரலில் பேசியவனின் வார்த்தைகளை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“இன்னும் வரல..” என்றவள் அவன் குரலில் தெரிந்த இறுக்கத்தில் மெதுவாக கேட்க,

“ஆமா.. வரல!” என்றான்

விட்டேற்றியான குரலில்.

தேன்மலருக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்படி கேட்ட கேள்விக்கு ஒப்புவிக்கும் பாணியில் பதில் கூறுபவனிடம்

என்னவென்று திரும்பப் பேச?

அவள் அமைதியாகவே இருக்க, அமுதனும் வாயைத் திறக்கவில்லை.

ஒரு மணி நேரமாக ரஞ்சிதனுடன் பேசி இருக்கிறாள். அதன் விளைவாக அவளுக்கு தன்னை நினைவில் கூட இல்லை என்பதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

எனவே, அவனின் இதழ்கள் திறக்க மாட்டேன் என்று பிடிவாதத்துடன் இருக்க, தேன்மலரே இறங்கி வந்தாள்.

“நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று மட்டும் கூற,

“ஓ… இவ்வளவு நேரமா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தியா மலர்?” என்றவன் கேட்டதும் ஒரு நொடி காதிலிருந்து போனை நீக்கி விட்டாள் தேன்மலர்.

‘எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தியா மலர்..’ இதைக் கேட்ட போது அவன் குரலில் இருந்த எதோ ஒன்று அவளை தடுமாற வைத்தது!

“சொல்லு மலர்.. பேக்கரிக்கு வந்ததுல இருந்து எனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தியா?” என்றவன் மீண்டும் அழுத்தமான குரலில் கேட்க, தேன்மலர் புருவங்கள் நன்றாகவே சுருங்கியது.

அவள் அமைதியாகவே இருக்கவும் “நீ ஒரு மணி நேரம் கழிச்சு கால் பண்றப்பவே தெரியுது மலர்.. நான் தான் உன்னை வர சொன்னேன்னு உனக்கு எவ்வளவு தூரம் நியாபகம் இருக்குன்னு!” என்றான் கோபமான குரலில்.

அவனின் வார்த்தைகளில் தேன்மலரின் முகம் நன்றாகவே மாறி விட, அவள் எதிரே அமர்ந்திருந்த ரஞ்சிதன் ‘என்ன ஆச்சு?’ என்று மெல்லிய குரலில் கேட்டான்.

அழைப்பில் இருந்த அமுதனுக்கும் அவனின் குரல் கேட்டது. கேட்டதும் சர்ரென கோபம் ஏற “எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு மலர். நான் இன்னொரு நாள் வாங்கிக்கிறேன். டேக்கேர்” என்றவன் அவள் பதிலுக்கு கூடக் காத்திராமல் அழைப்பை துண்டித்து விட்டான்!

அதற்கு மேல் பேசினால் நிச்சயம் வார்த்தையை விட்டு விடுவோம் என்று தான் அழைப்பை துண்டித்திருந்தான்.

சிறு வயதிலிருந்தே அவளை, அவளின் குடும்பத்தை பார்வையால் எரித்தவனுக்கு இந்த நொடி அவளை வார்த்தையால் கூட திட்ட மனம் வரவில்லை.

ஆனால், அமுதனின் மனதிற்குள் முளைத்த கோபக் கொம்புகள் மலரை காயம் செய்யாமல் குத்திக் கொண்டிருந்தன!

error: Content is protected !!
Scroll to Top