மலர் பாதம் பணிந்து..10(2)

“என்ன கண்டிஷன்?” என்று தேன்மலரும் அழுத்தமாக கேட்க,

“இந்தக் காயம் எல்லாம் சரியானதும் பணத்தை நீயே என்கிட்ட வந்து கொடு” என்றவன் ஆட்காட்டி விரலால் அவளை சுட்டிக்காட்டி “நீயே வந்து கொடுக்கணும். உன் கையால என்கிட்ட கொடுக்கணும். அப்பதான் நான் வாங்கிப்பேன். உன் அண்ணியும் அம்மாவும் இன்னைக்கே என் கையில கொடுத்தாங்கன்னா நான் வாங்கிக்க மாட்டேன்” என்றான் உறுதியான குரலில்!

‘இதென்ன பேச்சு’ என்பது போல் தேன்மலர் அவனை பார்க்க, அவனோ அவளின் கண் காயத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு “என்ன அப்படிப் பாக்குற? உனக்கு தானே அடிபட்டுச்சு? உனக்கு தானே நான் ஹெல்ப் பண்ணேன்! அப்ப நீ தானே என்கிட்ட வந்து கொடுக்கணும். எதுக்கு அவசர அவசரமா அவங்கள வந்து என்கிட்ட குடுக்க சொல்ற?” என்று இரு புருவங்களையும் உயர்த்தியபடி கேட்டவன்,

“எந்த அவசரமும் வேண்டாம். உனக்கு உடம்பு சரி ஆனதும் நீயே வந்து கொடு! நான் கண்டிப்பா வாங்கிக்கிறேன்” என்று கூற,

“உங்களுக்கு என்ன? என் கையால கொடுக்கணும் அவ்வளவுதானே..! இப்பவே கொடுக்கிறேன். வாங்கிக்கங்க” என்றவள் கவிரத்னாவை அழைக்கவென வெளியே எட்டிப் பார்க்க,

“நோ.. நோ..” என்றவன்,

“காயம் சரியானதும் கொடுத்தா போதும். நான் செலவு பண்ணதுல உனக்கு காயம் சரியாகாம போச்சுன்னா…? அப்ப நீ காசை திருப்பித் தரது வேஸ்ட் தானே! சோ, காயம் சரியாகட்டும் அப்புறம் நான் வாங்கிக்கிறேன்” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

தேன்மலர் பல்லை கடித்தபடி “அது எப்படி காயம் சரியாகாம போகும்? ட்ரீட்மென்ட் பண்ணியாசுல்ல. கொஞ்ச நாள்ல சரியாகிடும்” என்க,

“அதுதான் நானும் சொல்றேன். சரியானதும் கொண்டு வந்து கொடு. நான் வேண்டாம்னு சொல்லலையே” என்று மீண்டும் இரு புருவங்களையும் உயர்த்தினான்.

தேன்மலருக்கு ஆயாசமாக வந்தது. எதற்கு இப்படித் தன்னை தெளிவாக குழப்புகிறான் என்று புரியாத போதிலும் ‘சரி எப்படியும் அவனிடம் கொடுக்கத் தானே போகிறோம்.. அவனும் வாங்கிக் கொள்கிறேன்’ என்றுதானே சொல்கிறான் என்றவள் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

“குட்” என்றவன் வாயிலை எட்டியதும் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளும் அவனைத் தான் பார்த்தாள்.

“டேக் கேர் மலர்” என்று மென்மையாகக் கூறியவன் வெளியே சென்று விட, அவன் சென்றதும் கையில் இருந்த பில்’லை பிரித்துப் பார்த்தாள்.

தொகையை பார்த்தவள் அதன் கீழே அவன் என்னவோ எழுதி இருப்பதைக் கண்டு அதன் மீது கவனத்தை செலுத்தினாள்.

“First take care of your health. And then settle my Bill Malar :-)” என்று எழுதி இருந்தான்.

பெருமூச்சுடன் பில்’லை மடித்து அங்கிருந்த சேரில் வைத்தபடி “இதென்ன புதுசா மலர்னு எல்லாம் பேர் சொல்லிக் கூப்பிடுறான்” என்று வினோதமாக எண்ணியவளுக்கு அவன் தன்னைக் கண்டு புருவம் உயர்த்தி புன்னகைத்ததற்கான அர்த்தம் என்னவென்று புரியவில்லை.

ஆனால், மனதிற்குள் காயம் சரியானதும் ஹாஸ்பிடல் செலவுக்கான பணத்தை அவனைப் பார்த்துக் கொடுத்து விட வேண்டும். அதற்குப் பிறகு அவனைக் காணும் வகையிலான சூழ்நிலைகள் உருவாகவே கூடாது” என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

ஆனால், மீண்டும் மீண்டும் மலர் என அழைப்பவனை காணும் சூழ்நிலைகள் உருவாகவிருந்தன!

***********

ஐந்து நாட்கள் கடந்திருந்த நிலையில்..

அன்று ஞாயிற்று கிழமை.

வசுந்தலா காலை உணவினை தயார் செய்து முடித்து விட்டு அனைத்தையும் டேபிள் மீது எடுத்து வைத்தார்.

மேல் தளத்தை ஒரு முறை எட்டிப் பார்த்தவர் இன்னும் யாரும் வருவது போல் தெரியவில்லை என்றதும் அனைத்தையும் ஒரு முறை சரி பார்த்து விட்டு பணியாளிடம் “வடை மட்டும் சூடா போட்டுக்கலாம். நீ போய் மத்யான சமையலுக்கான காய் கறியை நறுக்கு” என்று பணித்து விட்டு ஹாலில் வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.

அரை மணி நேரத்தில் இன்பசேகரன் கீழே வர, கணவருக்கு உணவை எடுத்து வைக்க வேண்டி எழுந்து கொண்டவர் வீட்டிற்குள் யாரோ வரும் அரவம் கேட்கவும் யாரென்று பார்த்தார்.

அவரின் மூத்த மகள்களுள் இளையவரான யோகவள்ளி தான் வந்திருந்தார்.

முன்னறிவிப்பின்றி வந்திருக்கும் மகளைக் கண்ட வசுந்தலாவிற்கு திக்கென்று இருந்தாலும் “வா வள்ளி” என்று இன்முகமாகவே வரவேற்க, இன்பசேகரனும் மகளை வரவேற்று “வந்து சாப்பிடு வள்ளி” என்றார்.

“இல்லப்பா.. நான் சாப்பிட்டு தான் வந்தேன். நீங்க சாப்பிடுங்க. நான் அம்மா கூட பேசிட்டு இருக்கேன்” என்று கூற, சரி என்று விட்டு உண்ண அமர்ந்தார் இன்பசேகரன்.

அவரின் மற்ற இரு மகள்களும் சென்னையில் தத்தம் குடும்பங்களுடன் வசிக்க, யோகவள்ளியின் கணவர் ஏழுமலை சேலத்தில் சொந்தமாக ஜவுளிக்கடை வைத்திருக்கிறார். எனவே, அவரின் ஜாகை சேலம் தான்.

ஏழுமலையின் தங்கைக்கு அமுதகீதனை மணம் முடிக்க அவர்களின் வீட்டினர் பிரியப்பட, வள்ளியும் புகுந்த வீட்டின் விருப்பத்தை அன்னையிடம் கூறி இரண்டு மாதங்கள் மேலாகி இருந்தது.

ஆனால், தாய் வீட்டிடம் இருந்து சரியான பதில் வராமல் இருக்கவும் இன்று நேரிலேயே பேசி விடுவது என முடிவு செய்து வந்திருந்தார்.

வசுந்தலா கணவருக்கு பரிமாற வேண்டுமே என்று அவரைப் பார்க்க “நீ பேசு வசு. நான் பாத்துக்கிறேன்” என்றதும் மகளுடன் ஹாலில் வந்து அமர்ந்தவர்,

“என்ன வள்ளி? திடுதிடுப்புன்னு வந்து நிக்கிற? எனக்கு ஒண்ணுமே புரியல” என்று படபடப்புடன் பேச்சினை ஆரம்பித்தார் வசுந்தலா.

“எனக்கும் தான்மா ஒண்ணும் புரியல. நம்ம அமுதனை என் நாத்தனாருக்கு கேட்டோம் தான.. நீ என்னடான்னா தெளிவா ஒரு பதிலே சொல்ல மாட்டேங்குற. அங்க என் புருஷனும் மாமியாரும் விடாம கேட்டுட்டே இருக்காங்க” என்று அன்னையை முறைத்துக் கொண்டே பேசியவர்,

“இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு வேணும். அதான் எல்லாரும் இருக்கிற நேரமா பார்த்து வந்தேன்” என்றார் முடிவாக.

வசுந்தலாவிற்கு மகளின் பேச்சில் பீதி ஆனது.

“என்ன வள்ளி நீ? நான் தான் சொன்னேன்ல.. உன் தம்பி ஆறு மாசம் கழிச்சு தான் கல்யாணத்துக்கு ரெடின்னு சொன்னதா..”

“இதெல்லாம் ஒரு காரணமா ம்மா.. ஆறு மாசம் எதுக்கு டைம் கேட்டிருக்கான்? ஓ.. அவனே பொண்ணுப் பாக்குற ஐடியால இருக்கானா?”

மகளின் பேச்சில் திகைத்த வசு “மெதுவாப் பேசு வள்ளி.. உன் தம்பி வர்ற நேரம் தான்” என்று மாடியைப் பார்த்துக் கொண்டே கூற,

“அவன் வரட்டும். அவனுக்காக தான் நானும் காத்துட்டு இருக்கேன். இன்னைக்கு நான் அவன் கிட்டயே நேரடியா பேசிக்கிறேன்” என்றவரின் குரலில் கிஞ்சித்தும் பொறுமை இல்லை.

வசுந்தலாவும் இதற்கு மேல் மகளை கட்டுப்படுத்த முடியாது என அமைதியாகி விட்டார்.

கிருஷ்ணரூபிக்கு அன்று பள்ளி விடுமுறை. அப்போது தான் எழுந்து குளித்து வெளியே வந்திருந்தாள்.

திடீரென்று அக்காவைப் கண்டதும் திகைத்தாலும் “வாங்க அக்கா” என்று மெல்லிய குரலில் வரவேற்றாள்.

“ம்ம்.. ம்ம்..” என்று மட்டும் தலை அசைத்தார் யோகவள்ளி. அதற்கு மேல் தங்கையின் பக்கம் பார்வையை திருப்பவில்லை.

கிருஷ்ணாவும் தந்தையுடன் சென்று உணவை உண்ணத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் அமுதகீதன் கீழே இறங்கி வந்தான். நேவி ப்ளூ நிற டி – ஷர்ட்டும், க்ரீம் நிற ட்ராக் பேண்ட்டும் அணிந்திருந்தான்.

அவனைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன் எழுந்து நின்றார் யோகவள்ளி.

அக்காவைப் கண்டதும் அவனும் இன்முகமாக “வாக்கா.. எப்போ வந்த?” என்று கேட்க,

“இப்ப தான் அமுதா.. கொஞ்ச நேரம் தான் ஆகுது” என்றவள்,

“உன் கிட்ட கொஞ்சம் பேசணும்டா” என்று உரிமையுடன் கேட்க,

“தாராளமா பேசலாம்.. சாப்பிட்ட பின்ன பேசலாம் வா” என்றான் அவனும் சகோதரிக்கு குறையாத உரிமையுடன்.

அமுதன் உணவு மேஜையை நோக்கி நகர்ந்து விட, யோகவள்ளி அங்கே தங்கையும் அமர்ந்திருப்பதை கண்டு அசௌகரியாமக உணர்ந்தபடி நின்று விட, அக்கா வராததை கண்டவன் திரும்பிப் பார்த்து “வா” என்பது போல் கையசைக்க,

“இல்ல..அமுதா. நான் சாப்பிட்டு தான் வந்தேன்” என்றார் தங்கையை பார்த்துக் கொண்டே பிடிக்காத குரலில்.

“சாப்பிட்டிருந்தா என்ன? ரெண்டு வடையாவது சாப்பிடு” என்றவன், அவளை வலுக்கட்டாயமாக அழைக்க, வேறு வழியில்லாமல் தம்பியின் அருகே வந்து அமர்ந்தார்.

எல்லோரும் உணவை உண்ண ஆரம்பிக்க, யோகவள்ளி தம்பியின் புறம் திரும்பி “அமுதா.. நான் ஏன் வந்தேன்னா..உன் கல்யாண விஷயமா பேசலாம்னு..” என்றதும் அமுதன் ஒரு நொடி உண்பதை நிறுத்தி விட்டு அக்காவை நிமிர்ந்து பார்த்தான்.

கிருஷ்ணாவும் மூத்த சகோதரியின் பேச்சில் மெல்ல அண்ணனைப் பார்த்து விட்டு மீண்டும் உணவில் கவனம் வைத்தாள்.

அன்று போல் இன்றும் எதாவது பேசி அன்னையிடம் திட்டு வாங்க வேண்டாம் என்று நினைத்தாள் போலும்..

அதுவும் இப்போது அக்கா வேறு இருக்கிறார்.. அவரும் அன்னையை விட மோசமாக திட்டுவார் என்பதால் கிருஷ்ணரூபி தலையை உயர்த்தவில்லை.

அமுதன் உணவை உண்ணத் தொடங்கியபடி “சாப்ட்டு முடிச்சிட்டு பேசலாம்க்கா” என்றான் அழுத்தமான குரலில்.

அந்தக் குரலை மீறும் தைரியம் இல்லாததால் வள்ளி அமைதியாகி விட்டார். எல்லோரும் உணவை உண்ட பிறகு ஹாலில் வந்தமர்ந்தனர்.

கிருஷ்ணரூபி அவர்களை தயக்கமாக பார்த்துக் கொண்டே அறைக்குள் செல்லவிருக்க, “கிருஷ்ணா” என்று அவளை அழைத்த அமுதன், அவள் திரும்பியதும் “இங்க வந்து உட்கார்” என்றான் தன் அருகே காலியாக இருந்த சோபாவை தட்டியபடி.

“வா ரூபிமா..” என்று இன்பசேகரனும் கூற, தந்தையும் அண்ணனும் அழைத்ததும் இளையவள் மறுக்க முடியாமல் ஓரடி அவர்களை நோக்கி எடுத்து வைக்க,

“நில்லு..” என்று அவளை கை நீட்டி தடுத்திருந்தார் யோகவள்ளி.

அமுதன் அக்காவை கண்டனமாய் பார்க்க, வள்ளி அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவனிடமே பேசினார்.

“இங்க பாரு அமுதா.. இப்ப பேசப் போறது உன்னோட கல்யாண விஷயம் பத்தி. அதுக்கு இவ ஏன் இங்க வரணும்” என்று தம்பியிடம் கூறியவர்,

“நீ உள்ள போ. போய் படிக்கிறது எதாவது இருந்தா படி” என்று அதட்டலாக கூற, சிறியவள் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் “சரிக்கா” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள்

கிருஷ்ணரூபிக்கு வள்ளி இவ்வாறு பேசியதில் அதிர்வோ திகைப்போ கிஞ்சித்தும் இல்லை. இப்படி தான் எதாவது சொல்வார்கள் என்று முன்பே அறிந்திருந்தவள் அமைதியுடன் உள்ளே சென்று விட்டாள்.

அவள் சென்றதும் இன்பசேகரன் மகளை கண்டிப்புடன் பார்த்து “ஏன் வள்ளி அவளை இப்படி விரட்டுற” என்று கோபமாக கேட்க,

“என்னமோ ப்பா.. அவ இருந்தா என்னால சாதாரணமா பேச முடியாது. பேச வந்த விஷயமும் ரொம்ப முக்கியமானது. அதான் அவளை உள்ளேயே இருக்க சொன்னேன்” என்றார் ஒவ்வாத குரலில்.

அமுதகீதன் அவரையே அழுத்தமாக பார்த்தபடி “சரிக்கா. பேச வந்த விஷயத்தை சொல்லு” என்று, தானே ஆரம்பித்தான்.

அதில் வள்ளியும் நேரடியாக விஷயத்திற்கு வந்திருந்தார்.

“அமுதா.. உனக்கு என்னோட நாத்தனாரை கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம்னு எங்க வீட்ல எல்லாரும் பிரியப்படுறாங்கடா. நீ என்ன சொல்ற?”

பெருமூச்சுடன் அன்னையை பார்த்தவன் “அக்கா கேட்டதும் தான் அன்னைக்கு கல்யாண பேச்சு வார்த்தை எடுத்தீங்களாமா?” என்று அவரிடம் கேட்க, ஆமோதிப்பாக தலை அசைத்தார் வசுந்தலா.

இன்பசேகரனும் மகனிடம் “ஆமா அமுதா. வள்ளி இந்த மாதிரி கேட்டான்னு வசு என்கிட்ட சொல்லி இருந்தா. அதனால தான் நானும் உன்கிட்ட கேட்டிருந்தேன்” என்றார் விளக்கமாய்.

புரிந்தார் போல் தலை அசைத்தவன் எதிர்பார்ப்புடன் தன்னை நோக்கும் அக்காவிடம் “ஆறு மாசம் போகட்டும்னு சொல்லி இருந்தேனேக்கா” என்றான் தாடையில் கை ஊன்றி.

“அம்மா சொன்னாங்க தான் அமுதா. ஆனா, எதுக்கிந்த ஆறு மாசம் வெட்டியா கழியனும்? எப்படியும் உனக்கு ஓகேன்னா பொண்ணு பாக்குறது, நிச்சயம் வைக்கிறது, கல்யாணம் பண்றதுன்னு நாள் ஓடிடும். ஏற்கனவே நான் கேட்டு ரெண்டு மாசம் முடிஞ்சு போச்சு” என்றார் படபடவென.

ஆழ்ந்த மூச்சுடன் அக்காவைப் பார்த்தவனுக்கு நிச்சயம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

நீண்ட நேரமாக மௌனம் காத்தான். அவன் யோசிப்பதை கண்டு பெரியவர்கள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டார்கள்.

வள்ளி, “நீ என் நாத்தனாரை கடைசியாக எப்பப் பாத்தியோ..? அதான் இப்படி யோசிக்கிறன்னு நினைக்கிறேன். நான் வேணும்னா என் நாத்தனார் ஃபோட்டோ காட்றேன். பாக்குறியா?” என்று ஃபோனை எடுக்க, உடனே வேண்டாம் என்று இடமும் வலமும் தலையை அசைத்தவன், நீண்ட சிந்தனை வலையில் தன்னை சிக்க வைத்து கொண்டான்.

அக்கா கூறியது போல் பெண் பார்ப்பது, நிச்சயம், கல்யாணம் எல்லாவற்றையும் யோசிக்கும் போதே, ‘இதை எல்லாம் ஏன் அக்காவின் நாத்தனாருடன் செய்ய வேண்டும் எனும் கேள்வி தான் எழுந்தது அவனுக்கு.

நொடிகள் மறைய மறைய ‘முதலில் ஏன் பெண் பார்க்க வேண்டும்? வேண்டாமே..!’ எனும் எண்ணம் வந்தது.

மனதிற்குள் வாழ்க்கை துணை எனும் ஸ்தானம் வெற்றிடமாக இருப்பது போல் அவனுக்குத் தோன்றவில்லை.

அப்படித் தோன்றியதும் திக்கென்று உணர்ந்தான்.

அப்படி என்றால் அந்த ஸ்தானம் பூர்த்தி அடைந்து விட்டதா? என்கிற புதிரான கேள்வி அவனை திடுக்கிட வைக்க, அமுதகீதனுக்குள் இனம்புரியாத அலைப்புறுதல்!

தனக்கே தன்னைப் புரியாமல் அமைதியுடன் இருந்த நொடியில் அவன் அலைபேசி சிணுங்க, பட்டென்று தலையை உலுக்கிக் கொண்டவன் யாரென்று எடுத்துப் பார்த்தான்.

அலைபேசியில் பதிந்திராத எண்ணில் இருந்து வந்த அழைப்பு! ஆனால், அவன் மனதில் அந்த எண்கள் நன்றாகவே பதிந்து போய் இருந்தன!

மறக்க முடியுமா அந்த அலைபேசி உரையாடலை!

‘போன் போட்டா ஹலோன்னு சொல்லி பேசத் தெரியாதா உங்களுக்கு? போன் போட்டதே நீங்க தான’ என்று அவனை வெளுத்து வாங்கியவளின்

எண்களை பார்த்ததும் புன்னகையை அதக்கிக் கொண்டே “நம்ம கடல மிட்டாய்..” என்று முணுமுணுத்தான் அமுதகீதன்.

சற்று நொடிகளுக்கு முன்பு உள்ளத்தில் கடலாய் பொங்கிய அலைபுறுதல் எல்லாம் மலரின் அழைப்பில் தற்போது அலையாய் அடங்கி ஓய்ந்தே போனது!

அமுதம் மலரிடம் சிந்தக் காத்திருந்தது!

error: Content is protected !!
Scroll to Top