பணிதல் – 10
தாங்கள் உள்ளே வந்ததும் தங்களை நலன் விசாரிக்கக் கூட விடாமல் தேன்மலர் ‘பில்’லை பற்றிப் பேசியது கவிரத்னாவிற்கு சந்தேகத்தை கிளப்பியது.
அமுதனுக்கும் அவளுக்கும் இடையே பிரச்சனையோ என்றவள் யோசிக்க, “அண்ணி.. என்ன யோசிக்கிறீங்க? முதல்ல அவுங்க கிட்ட போய் பில்லை வாங்கி காசை கொடுங்க” என தேன்மலர் துரிதப்படுத்த, மங்கை மகளையும் மருமகளையும் மாறி மாறி புரியாமல் பார்த்து நின்றார்.
அவருக்கு தாங்கள் உள்ளே வந்தவுடன் மகள் இப்படிப் பேசவும் ஒன்றுமே புரியவில்லை.
எதற்கு இந்த அவசரம்? பணத்தை கொடுக்கச் சொன்னதை பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. ஆனால், தங்களை பேசக் கூட விடாமல் இப்படி அவசரப் படுத்த வேண்டியதன் அவசியம் என்ன?
அதுவும் அவளை முழுதாக இன்னும் பார்க்கக் கூட இல்லை அவர். இடது கண்ணிற்கு மேலே தையல் போட்டு பாதி கண்ணை மறைக்கும் அளவிற்கு கட்டுப் போட்டிருக்க, முழங்கை காலென அடி பட்டு ஆங்காங்கே களிம்புகளும் பிளாஸ்ட்டரும் ஒட்டி இருந்த நிலையில்,
அவளை நெருங்கி ‘என்னடி ஆச்சு? ஏன் இப்படி விழுந்து வச்சிருக்க’ என்று கேட்கும் முன்னர் தங்களைப் பார்த்ததும், மகள் அமுதனிடம் வைத்தியத்திற்கு செலவான பணத்தை கொடுக்கச் சொன்னதை கேட்டு மனதில் என்னவோ நெருடியது.
கவியோ மாமியார் தங்களை கூர்மையாக பார்க்கவும் பேச்சை மாற்றும் விதமாக “அப்புறம் அதை எல்லாம் கொடுத்துக்கலாம் தேனு. நீ எப்படி இருக்க?” என்று அவளை நெருங்க,
“அண்ணி.. எனக்கு ஒன்னுமில்ல. கண்ணுக்கு மேல தான் காயம். மத்தது எல்லாம் சாதாரண அடி தான்” என்றவள்,
“நீங்க போய் அவுங்க கிட்ட கேட்டு…” என்றவளை மேலும் பேச விடாமல் இடை மறித்தாள் கவிரத்னா.
“தேனு.. இதென்ன சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிற. முதல்ல எங்களை உன்னை பாக்க விடு. பேச விடு. வந்ததுல இருந்து பில்லை மட்டும் கேட்டுட்டு இருக்க. எங்க போயிட போறாங்க” என்றவள், வாசல் பக்கம் ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு,
“இங்க தான் வெளிய நிக்கிறார்! எவ்வளவு செலவானதோ கொடுத்திடலாம்” என்று கண்ணை சுருக்கி காண்பித்து அமைதியாக இருக்கும் படி கண்டனமாய் பார்த்தாள்.
கவியின் பார்வை எச்சரிக்கையை கண்டு சற்று எட்டிப் பார்த்தவள் வாயிலில் அவன் தலை தெரிவதைக் கண்டாலும் அசரவில்லை.
“இங்க தான நிக்குறாங்க. அப்புறம் என்ன அண்ணி? போய் கொடுத்திட்டு வாங்க” என்று தேன்மலர் அதிலேயே நிற்க,
“உனக்கும் அமுதன் தம்பிக்கும் பிரச்சனையா?” என்று மங்கை பட்டென கேட்டு விட்டார்.
அன்னை அப்படிக் கேட்டதும் தேன்மலர் மௌனமாகி விட, “சொல்லுடி.. வந்ததில இருந்து பாக்குறேன்! பணத்தை கொடுக்குறதுலயே குறியா இருக்க? ஏன் இந்த அவசரம்? பொறுமையா கொடுத்தா என்ன?” என வெளியே எட்டிப் பார்த்தார்.
தாடை இறுக நின்றிருந்தவனை கண்ட போதே புரிந்தது.. அவன் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறான் என!
திரும்பி மகளை முறைத்தவர் “அவுங்க செஞ்ச உதவியை நினைச்சு முதல்ல நன்றி சொல்லு. அப்புறம் பணத்தை கொடுக்கலாம்” என்றவர் குரலை தழைத்துக் கொண்டு,
“நாம பேசுறது அவர் காதுல விழுந்துட்டு தான் இருக்கு தேனு. சங்கடமான சூழ்நிலைய உருவாக்காத. பேசாம இரு” என்று கோபமாக சொன்னதும் அமைதியாகி விட்டாள் தேன்மலர்.
ஏனோ, அவனின் தயவில் தனக்கு எதுவுமே வேண்டாம் என்று அடிமனதில் இருந்து வெறுப்புடன் ஒரு எண்ணம் முகிழ்த்தது அவளுக்கு.
அன்று ‘சீப் பீப்பில்ஸ்’ என்றானே!
அந்த சீப் பீப்பில்ஸ்சிற்கு எதற்காக அவன் இப்படி உதவி செய்ய வேண்டும்? எக்கேடோ கெடட்டும் என்று விட வேண்டியது தானே. அவன் உதவியில் இத்தனை தூரம் தனக்கு சிகிச்சை நடந்ததை அவளால் ஏற்கவே முடியவில்லை.
அவனை நினைக்க நினைக்க மனம் முழுவதும் ஏனோ ஒரு வித அசௌகரியமான எண்ணம் எழுவதையும் தடுக்க இயலவில்லை.
நடந்ததை அமுதனும், அலைபேசி வாயிலாக ரஞ்சித்தும் சொல்லி இருந்தாலும் கவியும் மங்கையும் நடந்ததை அவளிடம் முழுதாக கேட்டு கொண்ட பின்னர், “ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா? இப்படியா விழுந்து வைப்ப? கண்ணுக்கு மேல அடி பட்டதால சரி. கண்ல அடி பட்டிருந்தா என்ன ஆகி இருக்கும்?” என்று ஆளுக்கொரு பக்கமாக அர்ச்சனை செய்து விட்டு,
“அந்தத் தம்பியும் பிள்ளையும் உன்னைப் பாக்கணும்னு தான் காத்திட்டு இருக்காங்க. இரு நாங்க போய்ட்டு அவுங்களை வர சொல்றோம்” என்ற மங்கை மருமகளுடன் வெளியே வந்தார்.
வெளியே இறுகிய தோற்றத்தில் நின்றிருந்தவனிடம் மங்கை கையை பிசைந்து கொண்டே “மன்னிச்சுகங்க தம்பி.. அவ எதோ சின்ன பொண்ணு! தெரியாம உளர்றா. நீங்க இதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. பாப்பாவை கூட்டிட்டு உள்ள போய் பாருங்க” என்று கூறி விட்டு நகர்ந்து விட,
‘யாரு உங்க பொண்ணா சின்ன பொண்ணு! அவ எவ்வளவு பெரிய ஆளுன்னு எனக்கு தான் தெரியும்! முதல்ல திமிர்னு நினைச்சேன்! இப்ப தான் தன்மானம்னு புரியுது. ஆனா..இவ்வளவு தன்மானத்தை எதிர் பார்க்கல’ என்று மனதிற்குள் பேசியவன் வெளியே அவரிடம் ஒரு தலை அசைப்பை மட்டும் கொடுத்து விட்டு, தங்கையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
அவன் தங்கையுடன் வந்ததும் தேன்மலர் அவனை நேராகப் பார்த்து “அடி பட்டதும் இவ்வளவு தூரம் கொண்டு வந்து ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்று வேகமாக கூற, “ம்ம்..” என்று மட்டும் தலை அசைத்தானே தவிற வேறு எதுவும் பேசவில்லை.
அவளும் அடுத்து அமைதியாகி விட, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டவனின் பார்வை மொத்தமும் தேன்மலரிடம் தஞ்சம் அடைந்தது.
கிருஷ்ணரூபி அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு தயக்கத்தை மீறி அவளின் வலது கை காயத்தை மெல்ல வருடியபடி “இப்ப எப்படி இருக்கீங்க அக்கா? காயம் ரொம்ப வலிக்குதா?” என்று பயந்த குரலில் அக்கறையுடன் கேட்க, ஏனோ அவளின் அக்கறையான விசாரணை தேன்மலருக்குள் கொஞ்சம் இதத்தை பரப்பியது.
தானும் இடது கையால் அவளின் விரல்களை பற்றிக் கொண்டவள் “எனக்கு ஒன்னுமில்ல. நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்று அவள் தாடையை பற்றி சிறு பிள்ளைக்கு சொல்வது போல் கொஞ்சும் குரலில் சொல்ல, கிருஷ்ணரூபிக்கு சட்டென அவளை பிடித்து விட்டது.
“எப்படிக்கா விழுந்தீங்க?” என்று வருத்தமாக கேட்க,
“அங்க தண்ணி பாய்ச்சுற டியுப் இருந்தது. அதை நான் சரியா கவனிக்காம வந்தேனா.. கால் ஸ்லிப்பாகி விழுந்துட்டேன்” என்றாள் தேன்மலரும் தயக்கமில்லாமல்.
“நான் கார் விட்டு இறங்கும் போது அண்ணா உங்களை தூக்கிட்டு வந்தாங்களா.. எனக்கு ஒண்ணுமே புரியல. அப்புறம் கார்ல ஏறினதும் சட்டுன்னு உங்களை.. அது.. யாருன்னு அடையாளம் தெரியல” என்று இளையவள் மிகுந்த சங்கடமான குரலில் கூற, தேன்மலருக்கு சிறியவளின் பேச்சில் உருகிப் போனது.
கூடவே, அண்ணா தூக்கிட்டு வந்தாங்களா… என்று கூறும் போது தேன்மலரின் ஓர விழிப் பார்வை அமுதனைத் தீண்டியிருக்க, அவனும் அவளைத் தான் பார்த்திருந்தான்.
இளையவளின் கன்னத்தை தடவி கொடுத்தவள் “அச்சோ.. இதுக்கு ஏன் ஃபீல் பண்றீங்க? இப்ப நான் யாருன்னு தெரிஞ்சிடுச்சுல்ல! இனிமேல் என்னை எங்க பார்த்தாலும் அடையாளம் தெரியும் தான” என்று புன்னகையுடன் கேட்க,
“ம்ம்.. கண்டிப்பா..” என்று முக மலர்ச்சியுடன் தலை அசைத்த கிருஷ்ணரூபி “மலர் அக்கான்னு கூப்பிடுவேன்” என்றாள் மகிழ்வுடன்.
தேன்மலருக்கு அவள் தங்களை விட மிகவும் இளையவள் என்கிற எண்ணம் எல்லாம் துளி கூட இல்லை! அவள் அக்கறையாக கேட்டதும் வெகு இயல்பாக அவளோடு பேசி இருந்தாள்.
சொல்லப் போனால் காயங்கள் கொடுத்த வலியையும் மீறி கிருஷ்ணரூபியுடன் பேசிய போது அவளின் குரலில் ஒரு விதத் தெம்பு இருந்தது.
அமுதகீதன் இருவரின் பேச்சையும் தான் இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது இருவரின் பேச்சையும்!
அதுவும் தேன்மலர் மற்றவர்களை போல் தங்கையை ஒதுக்கிப் பார்க்காமல் அவளோடு இணைந்து பரிவுடன் பேசியது அவன் நெஞ்சத்திற்கு அத்தனை ஆறுதலைத் தந்தது.
“ஃப்ரெண்ட்ஸ்..” என்று கிருஷ்ணரூபி புன்னகையுடன் அவளிடம் கை நீட்ட, எந்த வித யோசனையும் இல்லாமல் “ஃப்ரெண்ட்ஸ்” என தானும் அவளோடு கை குலுக்கினாள் தேன்மலர்.
அவளின் செயல் ஒவ்வொன்றும் அமுதனின் ஆழ் மனதில் அழுத்தமாகப் பதிந்து போனது.
“அண்ணா.. இனி நானும் மலர் அக்காவும் ஃப்ரெண்ட்ஸ்” என்று அண்ணனிடம் தன் புது நட்பை அறிமுகப் படுத்தினாள் கிருஷ்ணா.
அது வரை தேன்மலரையே அசையாமல் பார்த்தவன் தங்கையின் குரலில் சுயம் பெற்று “ஹான்.. ஓகே கிருஷ்ணா” என்றவன்,
“நீ வெளில வெயிட் பண்ணு. அண்ணா வரேன்” என்றதும் இளையவள் தேன்மலரிடம் “டேக் கேர் அக்கா. பை” என்று கூறி விட்டு வெளியே செல்ல, இப்போது தேன்மலரும் அவனும் மட்டும்!
இருவரும் ஒருவரை ஒருவர் நேராகப் பார்த்தனர். அமுதனின் பார்வைக்கு தேன்மலர் வித்தியாசமாக.. புதிதாகத் தெரிந்தாள்.
தேன்மலரோ தங்கையை வெளியே அனுப்பி விட்டு இவன் மட்டும் ஏன் நிற்கிறான் என்பது போல அவனை மௌனமாகப் பார்த்தாள்.
தொண்டையை செருமிக் கொண்டவன், “சாரி..” என்று மொட்டையாக கூற,
அவனை புரியாமல் பார்த்து “எதுக்கு சாரி?” என்றாள்.
அவனோ மௌனமாகவே நிற்க, “நீங்க என்ன பண்ணீங்க? உங்க தப்பு எதுவும் இல்ல. நான் தான் கவனிக்காம விழுந்திட்டேன்” என்றாள் தேன்மலர் விளக்கமாக.
“இல்ல.. நீ விழுந்ததுக்காக நான் சாரி சொல்லல. இந்த சாரி… அன்னைக்கு இளவழகன் சித்தப்பா வீட்டுக்கு உங்களை கூட்டிட்டு வந்தப்ப உன் கிட்ட ரெஸ்பெக்ட் இல்லாம பேசினதுக்கு!” என்றான் எந்த விதமான பொய்ப் பூச்சுகள் இல்லாத குரலில்.
அவனையே ஒரு நொடி அசையாமல் பார்த்தவள் “சாரி கேட்க வேண்டிய அவசியம் இல்ல. உங்க பார்வைல நாங்க சீப் பீப்பில்ஸ்சாவே இருந்துட்டு போறோம். எனக்கதுல கவலை இல்ல” என்றாள் உடையாத குரலில்.
அமுதகீதனுக்கு கோபம் வரவில்லை. மாறாக இதழில் புன்னகை அரும்பியது. தேன்மலர் அவனின் புன்னகைக்கான அர்த்தம் புரியாமல் புருவங்களை சுருக்க, அமுதகீதனோ பேன்ட் பாக்கெட்டில் இருந்த ஹாஸ்பிடல் பில்லை எடுத்து அவளிடம் நீட்டினான்.
தேன்மலர் அவனையே பார்க்க, “ம்ம்.. பிடி” என்றவன், அவள் அதனை வாங்கியதும் “உங்க அம்மாகிட்டயும் அண்ணிகிட்டயும் பேசிட்டு இருந்தத நான் கேட்டுட்டு தான் இருந்தேன். நீ அப்படி பேசினதுல எனக்கும் எந்த ஆச்சரியமும் இல்ல. கண்டிப்பா நீ எனக்கு செட்டில் பண்ணியே தீருவ! எனக்கது தெரியும்!” என்றவன்,
அவளை சுவாரசியமாக பார்த்தபடி “ஆனா ஒரே ஒரு கண்டிஷன்!” என்றான்.