மலர் பாதம் பணிந்து..1

அத்தியாயம் – 1

“தேனு அத்த.. கால் வலிக்குது. இன்னும் எவ்வளவு நேரம் நாம இங்கயே நிக்கணும்?” என்று நீண்ட நேரம் அந்தப் பேருந்து நிலையத்திலேயே நின்றமையால் கால்கள் வலி எடுத்ததில் தன் அத்தையிடம் சிணுங்கிக் கொண்டே கேட்டான் நான்கு வயது கோகுலன்.

நின்று கொண்டிருந்த மருமகனின் முன் மண்டியிட்ட தேன்மலர் “இன்னும் கொஞ்ச நேரம் தான் கோகுல். அம்மா வந்ததும் நாம பஸ் ஏறி கிளம்பிடலாம்” என்றவள் அவன் முகத்தில் தென்பட்ட சோர்வை கண்டு குழந்தையைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டாள்.

அத்தை தன்னை ஏந்திக் கொண்டதும் சிறியவனுக்கு முகம் மலர்ந்து விட, “தேங்க் யூ தேனு அத்த” என்றவன் அவள் கழுத்தை கட்டிக் கொண்டான்.

தேன்மலரும் புன்னகையுடன் சின்னவனின் முதுகை தட்டிக் கொடுக்க,சிறிது நொடிகளில் கண்கள் சொக்க உறங்கிப் போனான் குழந்தை.

தேன்மலரின் இரண்டாவது தாய்மாமா இளவழகன் சொந்தமாக சேலத்தில் தனது இரண்டாவது வீட்டினை கட்டியிருக்கிறார். அவ்வீட்டிற்கு இன்று கிரகப் பிரவேச விழாவை வைத்திருக்கிறார்.

அங்கே செல்லத் தான் தேன்மலரும் அவளின் அண்ணி கவிரத்னாவும் அதிகாலையிலேயே கிளம்பி குழந்தையோடு வீட்டிலிருந்து ஆட்டோவில் தாரமங்கலம் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தனர்.

தேன்மலர் குடும்பத்தின் ஜாகை தாரமங்கலத்தில் தான்! வீட்டில் இருந்து கிளம்பி பேருந்து நிலையம் வந்த பின்னர் தான் இளைய மாமாவின் குடும்பத்திற்கு கொடுக்கவென வாங்கி வைத்திருந்த கிஃப்ட் கவர் இல்லாததை கவனித்தாள் தேன்மலர்.

உடனே அண்ணியிடம் “அண்ணி கிஃப்ட் பேக் எங்க?” என்று கேட்டிருக்க, நெற்றியில் தட்டிக் கொண்ட கவிரத்னா,

“வீட்லயே மறந்து வச்சுட்டு வந்துட்டேன் போல தேனு. ஐயோ இப்ப என்ன பண்றது?” என்று புலம்ப,

“ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணி. நீங்க கோகுலோட இங்க நில்லுங்க. நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று தேன்மலர் கூற,

“இல்ல தேனு. நீ அலைய வேண்டாம். நானே போய் எடுத்துட்டு வரேன். நீங்க இங்க இருங்க” என்று மறுத்த கவி அவளே பரிசினை எடுத்து வர சென்றிருந்தாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் கவிரத்னா பேருந்து நிலையத்திற்கு வந்து விட, அண்ணியைக் கண்டதும் “கிஃப்ட் எடுத்தாச்சா அண்ணி?” என்று கேட்க,

“எடுத்துட்டேன் தேனு” என்ற கவிரத்னா “நல்ல வேளை. கிஃப்ட் எங்கன்னு கேட்ட.. இல்லேன்னா இந்நேரம் கிஃப்ட்ட மறந்துட்டு பஸ் ஏறி இருப்போம்” என்றாள் பெருமூச்சுடன்.

“அதான் இப்ப எடுத்தாச்சுல்ல அண்ணி. வாங்க போகலாம்” என்று புன்னகையுடன் சொன்னவள் சேலம் செல்லும் பேருந்தினை நோக்கி நடக்க, அவள் தோளில் உறங்கி விட்டிருந்த மகனைக் கண்ட கவிரத்னா,

“இவன் என்ன தேனு. இப்பவே தூங்கிட்டான்?” என்று தேன்மலரிடம் கேட்க, அண்ணியை செல்லமாய் முறைத்தவள்,

“பின்ன என்ன அண்ணி? குழந்தையை நாலு மணிக்கே எழுப்பி கூட்டிட்டும் வந்துட்டோம். கிஃப்ட்டை வேற நீங்க மறந்து வீட்ல வச்சிட்டு வந்ததால அர மணி நேரத்துக்கும் மேல பஸ் ஸ்டாண்ட்ல நிக்கிற மாதிரி ஆகிடுச்சு. அசதில அப்படியே தூங்கிட்டான். விடுங்க. சேலம் போக இன்னும் முக்கால் மணி நேரத்துக்கு மேல ஆகும். பஸ்ல தான போறோம். தூங்கிட்டு வரட்டும்” என்று விட்டாள் தேன்மலர்.

கவியும் அவள் சொன்னதற்கு ஆமோதித்து மகனை தன்னிடம் வாங்கிக் கொள்ள முயல, அத்தை தோளில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்த கோகுலன் “அத்த…” என்று சிணுங்கியபடி விடாமல் அவளின் கழுத்தை கட்டிக் கொள்ள,

புன்னகையுடன் மகனின் தலை கோதிய கவி “சரியான அத்த கோண்டு..” என்றாள்.

ஆம்! அவள் சொல்வதும் உண்மை தான்! கோகுலன் அத்தையின் செல்லம் தான். அம்மாவின் மடியை தேடுவதை விட அத்தையின் மடியை தான் குழந்தை அதிகம் நாடுவான்.

“விடுங்கண்ணி. என் கிட்டயே இருக்கட்டும்” என்று தேன்மலர் கூறி விட, கவியும் அதற்கடுத்து மகனை வாங்க முயலவில்லை.

இருவரும் சேலம் செல்லும் பேருந்தில் ஏறிக் கொள்ள, அடுத்த பத்து நிமிடத்தில் பேருந்து கிளம்பி இருந்தது.

அதிகாலை நேரம் தான் என்பதால் அதிக போக்கு வரத்து நெரிசல் இல்லை. எனவே அரை மணி நேரத்தில் சேலத்தின் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்து விட்டனர் இருவரும்.

******************

இளவழகனின் புது மனையில்..

ஹோம குண்டத்தில் இருந்து வெளியேறிய புகை, புது வீட்டினுள் எங்கும் பரவி இருக்க, எல்லோரும் கண்கள் கலங்கிய நிலையிலும் இருமிய வண்ணமும் தான் இருந்தனர்.

ஐயர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க, இன்னும் சற்று நேரத்தில் பால் காய்ச்ச வேண்டி அனைத்தும் தயார் நிலையில் இருந்தது அங்கே!

அப்போது இளவழகனின் மகனான ரஞ்சிதனின் அலைபேசி சிணுங்க, தெருமுனை வரை கணீரென ஒலிக்கும் ஐயர்களின் மந்திர உச்சரிப்பில் அவனுக்கு அலைபேசியின் சப்தம் கேட்கவில்லை.

மறுமுறையும் அலைபேசி சிணுங்க, அவனருகில் அமர்ந்திருந்த அவனின் தங்கை மித்ராதேவி “ண்ணா.. உன் போன் அடிக்குது பார்” என்று சற்றே கத்தி சொல்ல, அலைபேசியை எடுத்துப் பார்த்தவன்,

“தேனடை..” என்று பெயரைத் தாங்கி இருந்த திரையைக் கண்டதும் அந்தப் புகை மூட்டம் ஏற்படுத்திய எரிச்சலையும் மீறி புன்னகைத்தான் ரஞ்சிதன்.

வீட்டிற்கு வெளியே வந்தவன் அழைப்பை ஏற்று “ஹே தேனடை… வந்துட்டியா? எங்க இருக்க?” என்று உற்சாகமான குரலில் வினவ,

“நாங்க பழைய பஸ் ஸ்டாப் வந்துட்டோம் ரஞ்சி. நீ பிக்கப் பண்ண வரியா? இங்க ஆட்டோ எதுவும் கண்ணுக்கு தட்டுப் படல” என்று தேன்மலர் கூற,

“ஓகே ஓகே. நான் வந்துடுறேன்” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு தன் தாய் கமலத்திடம் சென்றான்.

ஓர் அறையில் மாலையை எல்லாம் எடுத்து பெரிய தாம்பூலத் தட்டினில் அடுக்கிக் கொண்டிருந்த கமலம் மகன் அறைக்குள் வருவதை கண்டதும்,

“டேய் ரஞ்சித்.. வந்திட்டியா. உன்னை தான் தேடிட்டு இருந்தேன்” என்றவர் அவன் கையில் அந்த மாலைகள் அடங்கிய தாம்பூல தட்டினை கொடுத்து,

“இந்தா.. இதைக் கொண்டு போய் ஹோமம் செய்யுற இடத்தில வை. இன்னும் கொஞ்ச நேரத்துல நாம நாலு பேரும் ஹோமத்துல உட்கார்ந்து ஐயர் சொல்ற சம்பிரதாயத்தை செய்யணும்” என்று கூற,

அன்னையை தயக்கமாக பார்த்தவன் “அம்மா.. தேனு போன் பண்ணாமா. பஸ் ஸ்டாப் வந்துட்டாளாம். யியர்லி மார்னிங்ன்றதால ஆட்டோ எதுவும் கிடைக்கல போல. அதான்.. நான் போய் அவளை பிக்கப் பண்ணி கூட்டிட்டு வந்த…” என்றவனை கோபத்துடன் இடை வெட்டினார் கமலம்.

“என்னடா விளையாடுறியா? இன்னும் கொஞ்ச நேரத்தில ஹோமத்தில உட்காரணும்னு சொல்றேன். நீ அவளைப் போய் கூட்டிட்டு வரேன்னு என் கிட்டயே சொல்ற. ஏன் அவளுக்கு வர வழி தெரியாதாமா? வீடு எந்த ஏரியால கட்டிருக்கோம், வீட்டு நம்பர் எல்லாம் பத்திரிக்கைல போட்டிருக்கோம் தான. அதை வச்சு வர வேண்டியதை விட்டுட்டு உன்னை ட்ரைவர் வேலை பாக்க சொல்றாளா?” என்று கமலம் மடை திறந்த வெள்ளமாய் வார்த்தைகளை தெறிக்க விட,

“அம்மா.. அம்மா… ப்ளீஸ்.. கூல் டவுன். தயவு செஞ்சு டென்ஷன் ஆகாத. நான் போய் கூட்டிட்டு உடனே வந்திடுறேன்” என்று தாயிடம் கெஞ்ச,

மகனை ஏகத்திற்கும் முறைத்த கமலம் “இங்க நடக்குற கிரகப் பிரவேசம் நம்ம வீட்டுக்கு ரஞ்சித். அது உனக்கு நியாபகம் இருக்குன்னு நினைக்கிறேன்” என்று அழுத்தமாய் கூறியவர்,

“இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீ வர்ற. இல்லேன்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று மிரட்டுலுடன் முடிவாக கூறியவர், அங்கிருந்து சென்று விட தலையில் கை வைத்து நின்று விட்டான் ரஞ்சிதன்.

“இப்ப என்ன பண்றது? நாம வேற வரோம்னு தேனடை கிட்ட சொல்லிட்டோமே” என்று புலம்பியவன், வெளியே வந்து மாலைகள் அடங்கிய தட்டினை தங்கையின் கையில் திணித்து விட்டு வாசலுக்கு வந்தான்.

வீடெங்கும் சொந்தங்கள் சூழ்ந்திருப்பதை கண்டவன் ஒரு யோசனை வந்தவனாக நேராக தன் பெரியப்பா இன்பசேகரனிடம் சென்றான்.

“பெரியப்பா அமுதன் எங்க?” என்று அவரிடம் கேட்க,

“மொட்டை மாடிக்கு போனான் ரஞ்சித்” என்று கூறியவர்,

“ஏன் ப்பா.. என்ன விஷயம்?” என்று விசாரிக்க, அவரிடமும் விஷயத்தை சொன்னால் வம்பு தான் என்று வாயை மூடிக் கொண்டவன்,

“ஒன்னுமில்ல பெரியப்பா. சும்மா தான். அவனை காணோமேன்னு கேட்டேன்” என்றவன் அவர் நகர்ந்ததும் நேராக மொட்டை மாடிக்கு விரைந்தான்.

அங்கே கைப்பிடிச் சுவரினை பற்றியபடி தூரத்தில் தெரிந்த மலை முகடுகளில் பார்வையை பதித்திருந்தவனின் முதுகுப் புறம் மட்டுமே ரஞ்சித்துக்குத் தெரிய, “அமுதன்..” என்று அழைத்தான்.

அதிகாலை நேரத்தின் ஈரக் காற்றை அந்த மொட்டை மாடியில் தனியாக நின்று சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்த அமுதன் ரஞ்சிதனின் அழைப்பில் அவன் புறம் பார்வையை திருப்பினான்!

அவன்.. அமுதன்! அமுதன் என்று அழைக்கப்படும் அமுதகீதன்!

“என்ன இங்க வந்து நின்னுட்ட?” என்று அவனிடம் பொதுவாக பேச்சினை ஆரம்பித்தான் ரஞ்சிதன்.

“கீழ நிக்க முடியல ரஞ்சித். அதான் மேல வந்துட்டேன்” என்று சுருக்கமாக பதில் வந்தது அமுதகீதனிடமிருந்து.

“ஆமா.. கீழ ஒரே புகை மூட்டம்.. என்னாலயும் தாக்குப் பிடிக்க முடியல” என்றவன், கேட்க வந்த உதவியை எப்படி கேட்பது என்று புரியாமல் தயங்கி நின்றான்.

அவன் எதோ கேட்கத் தயங்குவதை அவனின் உடல் மொழியை வைத்தே புரிந்து கொண்டான் அமுதகீதன்.

கிட்டத்தட்ட அமுதகீதனுக்கும் ரஞ்சிதனுக்கும் ஒரே வயது தான். ஒரு மூன்று நான்கு மாதங்கள் மட்டுமே வித்தியாசமிருக்கும்.

இருவருமே நெருங்கிய நட்பு கொண்டவர்கள் இல்லை என்றாலும், பகைவர்களும் கிடையாது. இயல்புடன் பழகிக் கொள்வார்கள்.

எனவே, அமுதகீதன் “என்ன விஷயம் ரஞ்சித்? சொல்லு” என்று இயல்பாக கேட்டிட,

“அது.. அமுதன் ஒரு ஹெல்ப் வேணும்” என்று தயங்கி கொண்டே தான் கேட்டான் ரஞ்சிதன்.

“சொல்லு. என்ன ஹெல்ப் வேணும்?” என்று அமுதகீதனும் அவனை ஊக்க,

“நம்ம.. மங்கை அத்தை பொண்ணு தேன்மலர் தெரியும் தான.. அவளும் அவுங்க அண்ணியும் இன்னைக்கு இங்க வர இருக்காங்க. பஸ் ஸ்டாண்ட்டுக்கு கூட வந்துட்டாங்க… ஆனா, யியர்லி மார்னிங்னால ஆட்டோ எதுவும் கிடைக்கல போல. அவுங்களை போய் கூட்டிட்டு வரணும்..” என்று ஆரம்பத்தில் தடுமாறியவன் கடைசி இரண்டு வரிகளை உள்ளே சென்று விட்ட குரலில் தான் கூறினான்.

பின்னே… மங்கை அத்தை என்றதுமே அமுதனின் முகத்தில் எரிச்சல் பரவியதை அவனும் கவனித்தான் தானே!

எனவே தான், இறுதி வாக்கியங்களை மெல்லிய குரலில் கூறினான். அவன் சொன்னதை கேட்ட அமுதனோ “என்னால முடியாது ரஞ்சித்” என்று தயவு தாட்சண்யம் ஏதுமின்றி முகத்தில் அடித்தது போல் பட்டென்று கூறி விட, ரஞ்சித் சங்கடமாக அவனைப் பார்த்து,

“பிளீஸ் அமுதன். இன்னும் கொஞ்ச நேரத்தில நான் ஹோமத்துல உக்காரணும்னு அம்மா சொல்லிட்டாங்க. இல்லேன்னா நானே போறதா தான் இருந்தேன்” என்றவன் விளக்க,

“என்னால போக முடியாது ரஞ்சித். தட்ஸ் இட்” என்று அமுதகீதன் முடிவாக கூறி விட,

“அதுக்கில்ல அமுதன். நம்ம ஃபேமிலி தான அவுங்க. சோ வந்திருக்கவங்க வேற யார் கிட்டயும் இப்படி என்னால போய் கேட்க முடியாது. அதான் உன் கிட்ட கேக்குறேன். இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பிளீஸ்..” என்று கெஞ்சுதலாக கேட்க, அமுதகீதன் அசையாமல் அழுத்தமாய் அவனைப் பார்த்தான்.

ரஞ்சிதனுக்கும் அமுதகீதனின் நேரடியான குணம் பற்றி நன்றாகவே தெரியும். எனவே தான் அவனிடம் உரிமையாகக் கேட்காமல் தன்மையாகக் கெஞ்சிக் கேட்டான்.

அவனைப் போலவே தயவு தாட்சண்யமின்றி அழுத்தமாக பேசுவதற்கு எல்லாம் ரஞ்சிதனுக்கு வராது!

தான் இவ்வளவு கெஞ்சியும் அவன் அழுத்தமாக நிற்கவும் ரஞ்சிதன் பெரு மூச்சுடன் அமைதியாக கீழே செல்ல எத்தனிக்க,

“இரு ரஞ்சித்…” என்று அவனை நிறுத்திய அமுதகீதன்,

“உனக்காக பண்றேன்” என்றதும் நம்ப முடியமல் மலர்ந்த முகத்துடன் அமுதனைக் கண்டவன் “தேங்க்ஸ் அமுதன். என்னோட கார எடுத்துக்கிறியா.. இந்தா கீ..” என்று அவனிடம் நீட்ட,

“இல்ல. எனக்கு என் காரைத் தவிற வேற காரை ட்ரைவ் பண்ண பிடிக்காது” என்று சொன்னவன்,

“எந்த பஸ் ஸ்டாப்? ஓல்ட் பஸ் ஸ்டாப்பா? இல்ல எம். ஜி. ஆர் பஸ் ஸ்டாப்பா?” என்று அவனிடம் விசாரிக்க, ரஞ்சித்தோ தேன்மலர் பழைய பஸ் ஸ்டாப் என்று கூறியதை தற்காலிகமாக மறந்து விட்டவன்,

“எம். ஜி. ஆர் பஸ் ஸ்டாப் தான் அமுதன்” என்று கூறி விட, சரி என்று தலை அசைத்து விட்டு கீழே இறங்கி சென்றான் அமுதகீதன்.

செல்லும் அவனைக் கண்டு “அப்பாடா.. ஒரு வழியா யோகராசை கெஞ்சி கூத்தாடி கரைச்சு அனுப்பி வச்சாச்சு” என்றவன்,

இந்த விஷயத்தை தேன்மலருக்கு தெரியப் படுத்தவென அவளுக்கு அழைக்க, அழைப்பை ஏற்றதும் “டேய்.. எங்கடா இருக்க? இன்னுமா வர..” என்று வெகு நேரம் காத்திருந்த கடுப்பில் அவனிடம் பொரிந்தாள்.

“தேனடை.. நான் இங்க எதோ சம்பிரதாயம் செய்ய ஹோமத்துல உக்காரணும்னு அம்மா சொல்லிட்டாங்க. சோ என்னால வர முடியல” என்றவன் சொன்னதை கேட்டு மேற்கொண்டு கடுப்பானவள் அவனை மேலும் பேச விடாமல்,

“அதை போன் பண்ணி சொல்ல வேண்டியது தானடா எரும மாடே! நான் வேற வழி பண்ணி வந்திருப்பேன்ல” என்று கத்த,

“ஹே இருடி.. சொல்றதை முழுசா கேட்டுட்டு அப்புறம் திட்டு” என்றவன், அவர்களை அழைத்து வர அமுதகீதன் வருவதாகக் கூற,

அமுதகீதன் என்ற பெயரைக் கேட்டதும் புருவம் சுருக்கிய தேன்மலர், “இன்பசேகரன் மாமா பையனா ரஞ்சி?” என்றவள் கேட்க,

“ஆமா தேனடை” என்றவன், “அதென்ன இன்பசேகரன் மாமா பையனானு கேக்குற? பின்ன என்ன பொண்ணா?” என்று கிண்டல் அடித்தவனிடம்,

மிகுந்த எரிச்சலுடன் “உன் தலை….” என்றவள் பல்லைக் கடிக்க,

ரஞ்சிதனோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் “சரி. கீழே அம்மா கூப்பிடுறாங்க. நான் போறேன். நீ பத்திரமா வீட்டுக்கு வந்து சேரு.. ஓகே!” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க, தேன்மலருக்கு தலைவலியே வந்துவிடும் போலிருந்தது.

அவளின் முகம் மாற்றத்தை கண்ட கவிரத்னா “என்னாச்சு தேனு? ஏன் ஒரு மாதிரி ஆயிட்ட?” என்று விசாரிக்க,

“அங்க பூஜைய ஆரம்பிச்சி இருப்பாங்க போல அண்ணி. அதனால ரஞ்சித் வர முடியாதுன்னு சொல்லிட்டான்” என்று கூறியவளிடம்,

“சரி பரவால்ல தேனு. இங்க டவுன் பஸ் இருக்கும். அதுல போயிடலாம்” என்று கவிரத்னா சாதரணமாக கூற,

“ஐயோ அந்த ஏரியாவுக்கு டவுன் பஸ் வராதாம் அண்ணி. ரஞ்சித் ஏற்கனவே சொல்லிட்டான்” என்று சலிப்புடன் கூறிய தேன்மலர்,

“அது மட்டும் இல்ல அண்ணி. இப்ப நம்மளை கூப்பிட்டு போறதுக்கு இன்பா மாமா பையன் வறாராம்..” என்று கூற, கவிரத்னாவிற்கும் ஒரு நிமிடம் திக்கென்று ஆகி விட்டது.

“அந்தத் தம்பியா? போச்சு போ. சும்மாவே நம்ம குடும்பத்தை பார்த்தா அவர் முறைச்சுக்கிட்டு தான் திரிவார். இப்ப அவரையே பிக்கப் பண்ண அனுப்பி வச்சிருக்கானா இவன்?” என்று கவி புலம்ப, தேன்மலரும் என்ன செய்வதென தெரியாமல் நின்றிருந்தாள்.

பேசாமல் சற்று தூரம் சென்று வேறு ஏதேனும் ஆட்டோ தென்படுகிறதா எனப் பார்த்து வீட்டிற்கு நாமே சென்று விடலாமா என்று மனதிற்குள் யோசனை எழ,

பின்பு வேண்டாம் என்று முடிவு செய்தவள் ‘ஒருவேள நம்மள தேடி அவர் இங்க வந்திருந்தார்னா’ என்று எண்ணியவள் அவன் வரும் வரை காத்திருக்க முடிவு செய்தாள்.

அமுதகீதனோ எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இவர்களுக்காக காத்திருக்க, அரை மணி நேரம் மேலாகியும் அவர்களை காணாததால் பேருந்து நிலையம் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டான்.

எங்கேயும் அவர்களை காணவில்லை என்றதும் எரிச்சலுடன் ரஞ்சிதனுக்கு அழைக்க, அவனோ ஹோமத்தில் ஐக்கியமாகி விட்டதால் அழைப்பை ஏற்கவில்லை!

“ஷிட்…” என்றவன் கோபமாக மீண்டும் அழைக்க, இம்முறையும்

அழைப்பை ஏற்கவில்லை ரஞ்சிதன்.

“நம்மளை இங்க அலைய விட்டுட்டு இவ பாட்டுக்கு கிளம்பி போய்ட்டாளோ..??!!” என்றவனுக்கு தேன்மலரின் மேல் எரிச்சலும் கோபமும் உருவானது!

error: Content is protected !!
Scroll to Top