தோசையம்மா தோசை
“இனியா, நான் பாப்பா வீட்டுக்குப் போயிட்டு அவ கூட இருந்துட்டு, நாளைக்கு காலைல வர்றேன் டா. முகிலன் இன்னமும் தூங்குறான். தூங்கட்டும்.“ என்றபடி வந்தார் இனியனின் அம்மா சிவராணி.
“ம்மா, வேணும்ன்னே செய்றீங்க. இன்னைக்கு ஆறு மணிக்கு அந்தப் பொண்ணு வீட்டுக்கு வரும்ன்னு சொன்னீங்க. இப்போ தங்கச்சி வீட்டுக்கு கிளம்பி நிக்கிறீங்க.”
“உனக்கு ராத்திரிக்கு தோசைக்கு மாவு இருக்கு. சட்னி செஞ்சுட்டேன். தம்பிக்கு சாம்பாரும் செஞ்சு வச்சுட்டேன். ரெண்டு பேரும் தோச சுட்டு சாப்பிட்டு தூங்குங்க.” அவன் சொன்னதை டீலில் விட்டுவிட்டு டின்னருக்கு பதில் சொன்னார் சிவராணி.
“ம்மா, நா என்ன கேட்டேன் நீங்க என்ன சொல்றீங்க?” இனியன் இரைந்தான்.
“அடேய், தெரியாத பொண்ணுனா உன்ன வெளிய எங்காவது பார்த்து பேசுன்னு சொல்லிருப்பேன். அந்த பொண்ணுக்கு உன்ன நல்லா தெரியிது. உனக்கும் அவளைத் தெரியிது. அவங்கம்மாவே இங்க நம்ம வீட்டுல ரெண்டு பேரும் பார்த்து பேசி முடிவு பண்ணட்டும்ன்னு சொன்னாங்க. அப்புறம் உனக்கு என்னடா?”
‘அதான்ம்மா பயமே.’ என்றவனின் குரல், வளையிலேயே பின்னிக் கொள்ள, பெருமூச்சு மட்டுமே வெளிவந்தது. மனைவி இழந்தவனின் மறுமணம், அதுவும் இரண்டரை வயது மகனோடு இருப்பவன். எங்கெங்கோ பெண் தேடி கடைசியில் பொருத்தம் என அம்மா நீட்டிய படத்தில் கன்னத்தின் குழி தெரியாமல் முயன்று சிரித்துக் கொண்டிருந்தாள் பனிமலர்.
பள்ளியில் பூமியின் மேல் பூத்த வைரம் போல் மின்னியவள். என்ன நடந்தது இவளுக்கு? ‘விவாகரத்தானவள்’ என்பதைத்தாண்டி வேறு விவரம் ஏதும் அவன் கேட்கவில்லை. பள்ளித்தோழி என்று இவன் சொல்ல, அவளும் அதையே சொல்லி இருந்தாள்.
“இனியா, என்ன டா யோசிக்கிற? மலர் என்கிட்டே நல்லாத்தான் பேசினா. நம்ம மாப்பிள்ளையே அவளுக்காக இவ்ளோ சொல்றாருன்னா நல்ல பொண்ணுதானே?” அம்மா இன்னும் அங்கேயே நின்றார்.
“ம்மா, அதில்ல வீட்டுக்கு அவங்க வந்தா சாப்பிட சொல்லணுமா? இல்ல காபியோட அனுப்பவா?” ஏதேதோ கேள்விகள் அவனுள் உந்த எதையும் கேட்கும் எண்ணமில்லை. இதை மட்டும் கேட்டுவைத்தான்.
“ஏன்டா, நீ ஊத்துற தோசைல ரெண்ட அவளுக்கும் குடு, இதென்ன கேள்வி?“
”ப்ச்“ என சலித்தவன், ”ம்மா அப்பப்ப நம்ம கல்லுல ஒழுங்கா தோசை வராதுல்ல. பேசாம சாப்பாடு ஆர்டர் பண்ணிடவா.“ பதற்றத்தில் அதிகமாகவே பிதற்றினான் இனியன்.
”இனியா, ஒழுங்கா மலர்கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வாங்க. இல்ல உனக்கு வேண்டான்னாலும் வேற இடம் பாக்கலாம். இப்படி ஒளராத.“ என்றவர் அடுத்த அரை மணி நேரத்தில் மகள் வீடு சென்றிருந்தார்.
இனியனுக்கு என்ன முயன்றும் அவன் பள்ளியில் பார்த்த பனிப்புயலை இன்று வாடிய மலராக, நினைக்கவே மனம் கனத்தது.
இனியனின் மனைவி இறந்த இந்த இரண்டு ஆண்டுகளில் ஓரளவு மனம் தேறி இன்னொரு திருமண பந்தத்திற்குத் தயாராகிவிட்டான்.
பனிமலரை மறுக்க எல்லாம் தோன்றவில்லை. ஆனாலும் தெரிந்தவள் என்றவொரு சிறுதயக்கம். அவளின் முடிவை ஒட்டியே இவனும் முடிவெடுக்க எண்ணிக்கொண்டான். மேலும் நிமிடங்கள் பல யோசனையிலேயே கரைய உள்ளே மகனின் குரல் கேட்கவும் எழுந்து ஓடினான்.
அடுத்த ஒருமணி நேரமும் மகனோடு தானும் குளித்து இருவரும் தயாராகி என வேலைகள் நடந்தாலும் மனமெல்லாம் இன்று அவளுடன் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதிலேயே உலன்றது.
புதிதாய் ஒன்றை வரைவதற்கும், ஏற்கனவே பார்த்த ஓவியத்தை அவர் பார்க்காத கோணத்தில் காட்டுவதற்குமான வித்தியாசம் தான் தெரியாதவரை துணையாக்கிக் கொள்வதில் உள்ள எளிமையும், தெரிந்தவரோடு தொடங்கும் இல்லறமும்.
இனியனின் மனம் முழுதும் இனி என்ன, இனி என்ன? எனும் கேள்வியோடு நகர்ந்தாலும், அவளுக்கும் விருப்பம் இருப்பின் புது உறவுக்குள் தங்களைப் பொருத்திக் கொள்ளும் ஆரம்பகட்ட தயக்கம் மட்டுமே.
மகன் சிறியவன், உறவு சீராக இருப்பின் பயமில்லை. இல்லை மொத்தமும் சீரழிந்துவிடும். பனிமலருடன்தான் மறுமணம் எனில் மனத்தில் ஏதோ ஒரு நம்பிக்கை. மகனை அவள் ஏற்றுக்கொள்வாள் என்று.
அதோ இதோ என எண்ணங்கள் அலைபாய மணியோ ஆறையும் தாண்டி போய்க் கொண்டிருந்தது. நாற்காலியில் அமர்ந்திருந்தவன் எழுந்து வந்து தோசை மாவை குளிரூட்டியிலிருந்து வெளியில் எடுத்து வைத்து அம்மா செய்து வைத்தவைகளைத் திறந்து பார்க்க தேங்காய் சட்னியும் சாம்பாரும் இருந்தது.
‘எல்லாமே சவசவன்னு காரமில்லாம இருக்கு’ என நினைத்தவன் கைகள் காரசாரமாக ஒரு தக்காளி சட்னியைத் தயாரித்தது. செய்ததை எடுத்துவைத்து பாத்திரங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
“ப்பா, ஐம்ஸ் போவுங்க” மழலையில் மிலற்றியபடி வேகநடையிட்டு சமையலறைக்குள் வந்தான் முகிலன். மகனை ஒற்றைக் கையால் வாறி அணைத்து தூக்கிப் பிடித்து சமையல் மேடையின் மேல் அமர்த்தினான் இனியன்.
“முகிகுட்டி என்ன ஐம்ஸ் வேணும் சொல்லுங்க அப்பா பாடுவேன்.”
“அப்பா ஏனாம். தீவீல போவுங்க. நிலா ஐம்ஸ் அப்புவம் எயிபன்ட் ஐம்ஸ் அப்புவம் அப்புவம் பாட்டி சொல்ல தோச ஐம்ஸ் அப்புவம்…”
“டேய் டேய் போதும் டா லிஸ்ட் நீண்டுக்குட்டே போகுது. இரு அப்பா ஒன்னு ஒன்னா சொல்றேன்.” என்றபடியே கைவேளையையும் கவனிக்கத் தொடங்கினான்.
“யானை யானை அழகர் யானை”
“ப்பா இது ஏனாம் குள்ள வாத்து பாடு”
“சரி, முகிலனுக்கு பிடிச்ச குள்ள வாத்து பாடுவோமா? குள்ள குள்ள வாத்து, குவாகுவா…”
“ப்பா ப்பா இடுவு ஏனாம் வேல ஐம்ஸ்” என மீண்டும் பாடலை மாற்ற “அடேய் ஏன்டா ஏன்?” என மகனின் குட்டி தொப்பையில் கிச்சுகிச்சு மூட்டும் போது வாசல் மணியின் ஓசை கேட்டது.
அவள் தான் எனத் தெரியும், ஆனாலும் பள்ளி சிறுவனுக்கான அதே படபடப்பு. இருவருமே வாழ்வின் மோசமான நாட்களைக் கடந்துவிட்டார்கள். இனி இவர்களது வருங்காலம் என்பது நேற்றைய நாட்களின் நிழல் இன்றி இருக்க வேண்டுமே.
தொண்டைக்குள் முன்பெப்போதும் இல்லாதது போல ஒரு உணர்வு தோன்ற மூச்சுவிடுவதே சிரமமாகி இனியனுக்கு வியர்க்கும்போல் இருந்தது.
‘ச்சி எனக்கு மட்டும் தான் இப்படி நெர்வஸ்ஸா இருக்கா. இல்லல்ல அவளுக்கும் இப்படி தா இருக்கும். சமாளிப்போம்’ நினைத்தபடியே கதவைத் திறக்க சந்தன நிறத்தில் இளஞ்சிவப்பு நிற மலர்கள் நிறைந்த லினன் சேலையில் கைப்பையோடு பளீர் புன்னகையில் நின்றிருந்தாள் பனிமலர்.
“உள்ள வா, வாங்க மலர்.”
“என்ன இனியன், பழையபடி பனி சனின்னு சொல்லுவீங்கன்னு நெனச்சேன். வாங்கன்னு மரியாதையா கூப்பிடுறீங்க.” என்றவள் இன்னும் மேல் படியிலேயே நின்றிருந்தாள்.
“இ.. இல்ல. நீங்க… நீ உள்ள வா.” என்று திக்கித் திணற, “அப்பா, யாலுப்பா?” என அவனின் காலைப் பிடித்து நின்றிருந்தான் முகிலன்.
இனியனைத் தாண்டி உள்ளே வந்தவள் முகிலன் அருகில் மெல்ல மண்டியிட்டு, “ஹலோ, ஸ்பைடர் மேன், இந்தாங்க” என நீட்ட பனிமலர் கொடுத்ததைப் பார்த்ததும் வெட்கமெல்லாம் மறந்து “ஐ, ப்பா பாலுங்க ஸ்பைடல் மேன் குக்கி. நாக்கு தாங்க.” என்றவனின் குதூகலம் அடுத்த அரை மணி நேரமும் வீடு மொத்தமும் எதிரொலித்தது.
முகிலனை கூடத்தில் விளையாடவிட்டு இருவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர். இருவருக்கும் பேச இடைவெளியின்றி முகிலனே பேச்சிட்டு நிரப்பிக் கொண்டிருக்க ‘என்ன கேட்பது’ என்று இனியனுக்கும் தயக்கம். ஆனால் பனிப்புயலுக்கு அந்த தயக்கம் எல்லாம் இல்லை. சிறிது நேரத்தில் அவளே தொடங்கினாள்.
“இனியன், முகிலனோட அம்மா?” கேள்வியாக அவள் நிறுத்த, “தோசை மாவு வாங்க பைக்ல போனான்னு அம்மா சொன்னாங்க. லாரி டர்னிங்ல அவள அடிச்சுடுச்சு. நான் ஹாஸ்பிடல் போகும்போதே எல்லாம் முடுஞ்சுடுச்சு.” பலமுறை சொல்லிப் பழகிய ஒன்றை எந்திரமாய் மீண்டும் உச்சரித்தான்.
“சாரி” என்ற ஒற்றைச் சொல்லில் அவள் நிறுத்த, இது இனியனின் முறை. ஆனால் அவனுக்கு அவளைப் போல கேட்கத் தெரியவில்லை. அவன் முகம் பார்த்து அவளே சொல்லத் தொடங்கினாள்.
“இனியன், உங்க அளவுக்கு சொன்னா கீறி ரத்தம் வர்ற புண்ணு இல்ல என்னது. அவன் கீறி ரத்தம் வர வச்ச பல புண்ணு இப்ப ஆறி தழும்பா கூட ஏ ஒடம்புல இல்ல. சிம்பிளா சொல்லனுன்னா அண்ணாடம் நம்ம கேக்குற அபியூஸ் கததான். என்ன, எனக்கு அதவிட்டு வர்ற தைரியம்வர ஒரு வருஷம் ஆச்சு. இப்பொ சட்டப்படி பிரிஞ்சு வந்து ரெண்டு வருஷம் ஆச்சு.“ சுருக்கமாக சொல்லி முடித்தாள்.
”கெட்டதுல எனக்கு நடந்த நல்லது என்னன்னா அந்த விஷ செடியோட வித எனக்குள்ள வளரவேயில்ல.“ சொல்லியவளின் முகம் வேறெதுவும் தகவல் வேணுமா? என இனியனின் முகம் பார்த்தது.
அவனோ ‘முதல் கல்யாணமே கொடுமைன்னா இனி இன்னொரு கல்யாணத்துக்கு ஒத்துக்குவாளா? ஈஸியா அவ கதைய சொல்லிட்டா. இவள ஸ்கூல் நாள்ல எத்தன முற சனிமலர்ன்னு கூப்பிட்டு காலாச்சிருப்பேன். இப்ப எனக்கு ஓகே சொல்லுவாளா‘ என்று அவளின் முன்கதை சுருக்கத்தைக் கேட்ட அதிர்ச்சியில் ஏதேதோ யோசித்தான்.
“நல்லதோ கெட்டதோ சில விஷயங்களை தூக்கி சுமக்காம விட்டு விலகி நடக்குறது நமக்கு நல்லது இனியன்.” இருவருக்கும் பொதுவாக அவள் சொல்லிக்கொண்டு இருக்க முகிலன் தனது ஸ்பைடர் மேன் தட்டுடன் தந்தையின் அருகில் வந்தான்.
“ப்பா, ஹங்கி.” என்றவன் மீண்டும் சமையலறைப் பக்கம் செல்ல இனியனும் எழுந்து அவனுடன் செல்ல நினைத்தவன் “முகிலனுக்கு தோச ஊத்திக் குடுக்கணும். நீங்க… ” என்றான்.
“நீன்னே சொல்லலாம். நானும் வரலாம் தானே உங்க கிட்சன்க்கு”
“ஹ்ம்ம், வா மலர். இவனுக்கு தோச செய்யணும்ன்னா ஆயக்கலையும் கத்திருக்கணும். பாரு இப்பொ எப்படி எல்லாம் கேக்குறான்னு.” என்றபடி மகனை ஏற்றி சமையலறை மேடையில் அமர்த்தி தோசை ஊற்றத் தொடங்கினான்.
“இனியனுக்கு சமையல் எப்படி? டாப் குக்கா? இல்ல டூப் குக்கா?” பேசியபடியே முகிலனின் அருகில் வந்தவள் அவனை அணைத்தபடி நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.
பனிமலரின் கைகளில் சற்றே நெளிந்தாலும் ஸ்பைடர்மேன் குக்கி கொடுத்ததால் வந்த பாசத்தில் விலகி ஓடாமல் இருந்தான் முகிலன்.
“தோச, கல்லுல ஒட்டாம வர்ற அன்னைக்கெல்லாம் டாப் குக்கு தான். இல்லன்னா நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம். அம்மா எப்பவும் எங்களோட இருந்தாலும் அப்பப்ப தங்கச்சி வீட்டுக்கு போயிடுவாங்க. அப்போவெல்லாம் நானே சமைச்சுடுவேன். இன்னைக்கும் தக்காளி சட்னி செஞ்சிருக்கேன். சாப்பிட்டு பார்த்து சொல்லு.“
“கண்டிப்பா இனியன். காபியோட அனுப்பிடுவியா என்ன?” அவளின் கேள்வி உணவுதான் என்றாலும் அதில் உள்ளிருக்கும் உணர்வைப் படிக்க தடுமாறினான் இனியன்.
இல்லை என மறுப்பாய் தலை அசைத்தவன், ‘இந்தக் கல்யாணம் ஓகேவா உனக்கு’ என மண்டையில் சிக்கி, தொண்டையை அடைத்த கேள்வியை நேரடியாக அவளிடமே கேட்கத் தடுமாறினான். ‘அவ சாதாரணமா இருக்கா, பேசுறா, நாந்தா சொதப்புறேன்.’ அவள் வீட்டிற்கு வந்ததிலிருந்து இதை நன்கு உணர்கிறான்.
ஏனோ அவள் சம்மதம் சொல்லும் வரையிலும் இந்த நிலையில்லா நிலைதான் போல. அவன் மனநிலை போலவே காய்ந்த கல்லில் அவன் ஊற்றிய தோசையும் பிடித்து ஒட்டி என பார்க்கவே பரிதாபமாய் இருந்தது.
“இடு நானுக்கு ஏனா ப்பா” இனியன் முந்திக்கொண்டு சொல்ல, புகைப்படத்தில் தவறிய கன்னக்குழி புன்னகையை மட்டும் காட்டி வந்த வெடி சிரிப்பை அடக்க முயன்றுகொண்டிருந்தாள் பனிமலர்.
“டேய் இருடா, நான் எண்ண தேக்க மறந்துட்டேன் அதான் ஒட்டிக்கிச்சு. நேத்து சப்பாத்தி போட்டுட்டு தோச கல்ல கழுவி போட்டுட்டாங்க. அதான் இப்பிடி. இப்ப பாருங்க எண்ண தேச்சு ஊத்துறேன். சும்மா மொறு மொறுன்னு பேப்பர் ரோஸ்ட் முகி குட்டிக்கு.” என்றவன் கல்லில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு தடவி மாவு ஊற்றத் தொடங்கினான்.
இனியன் தோசை ஊற்றவுமே இந்தமுறை முகிலன் பாடத் தொடங்கிவிட்டான். “ப்பா, நா டோச ஐம்ஸ் சொல்லேன். டோசயம்மா டோச. ப்பா சுட்ட டோச…” அவன் பாட இங்கோ இனியனின் தோசை அதிகப்படி எண்ணெயில் ஒட்டி சுருண்டு, வட்டாமாய் தேய்த்து சுத்த முடியாமல் அவனை சுத்தலில்விட்டது.
இந்தமுறை என்ன முயன்றும் வெடித்து சிரித்து விட்டாள் பனி மலர். முகிலனோ “இன்ட டோசையு அப்பாக்கு. அப்பாக்கு நாவு, பாட்டிக்கு மூணு, முகிக்கு ஒன்னு. டோசயம்மா டோச.” வெடித்து சிரித்த பனிமலரின் கன்னம் தொட்டு அவன் முகம் நோக்கி திருப்பிப் பாடினான்.
இனியனோ இந்த தோசையும் ஒட்டி பிய்ந்து அவன் பொறுமையை சோதிக்க மலரிடம் என்ன சொல்ல என சிந்தித்தபடியே மீண்டும் அடுத்த தோசை ஊற்ற ஆயத்தமானான்.
பனிமலர், முகிலனின் பாடலைக் கேட்டவள், சிரித்தபடியே “அப்போ அம்மாவுக்கும் மூணு இல்லையா? இனி அம்மாவுக்கும் மூணு சொல்லணும்.” என்று சொல்ல, முகிலன் அவளுக்கு பதில் சொல்லும் முன், அந்த கேள்வி தந்த அதிர்ச்சியில் கையிலிருந்த கரண்டியைத் தவறவிட்டான் இனியன்.
“அப்பா அம்மாக்கு மூணு ஏணுமா.” முகிலன் சொல்லியபடி பாடலைத் தொடர்ந்தான். இரண்டறை வயது முகிலனுக்கு மலரை அம்மாவாய் ஏற்பதில் குழப்பமில்லை. பிடித்ததை கொடுத்தவர்களை எல்லாம் பிடிக்கும் பருவம் அல்லவா? ஏற்றுக்கொள்ளுதல் எளிதான, இயல்பான வயது. அவள் ‘அம்மா’ என்கவும் இவனும் கிளிப் பிள்ளையாய் ‘அம்மா’ என்று சொல்லிவிட்டான்.
“ப..பனி …மலர் என்ன சொன்ன? இனிமே, இனி” என்றவன் திக்க “இனி, ‘இனி’தான் எல்லாம் வேறென்ன சொல்ல இனியன். அதோட இனி இந்தப் பணி என்னோடது.” என்றவள் அவன் கையிலிருந்து தவறிய கரண்டியை கைப்பற்றினாள். இனியனின் முகம் இன்பமாய் அதிர்ந்து பின் புன்னகையில் விரிந்தது.
குழந்தையும் கரண்டியும் இடம் மாற மலரும் இனியனும் கண்களால் மனம் மாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் இருவரின் பேச்சு மட்டும் இன்னும் தோசையையே சுற்றியது.
“தோசக்கல்லு பதமா இல்லாட்டி இப்படித்தான். இனி ஒழுங்கா கத்துகோங்க.”
மலர் கல்லை நன்கு சூடாக்கி தண்ணீர்விட்டு துடைத்து, துளி எண்ணெய் விட்டு, அதை பாதியாக வெட்டிய வெங்காயம் கொண்டு கல் மொத்தமும் தேய்த்துவிட்டு, சரியான சூட்டில் மாவு ஊற்றி மெலிதாக தேய்த்து, நெய் விட்டு மூடி, வேகவும் எடுக்க நிஜ பேப்பர் ரோஸ்ட் பார்த்த மகிழ்ச்சி மூவருக்கும்.
“ப்பா ப்பா பாலுங்க முலுகள் டோச” முகிலனின் முகம் முழுத்தும் புன்னகையில் பூக்க, “முகிகுட்டிக்கு அம்மா, குட்டிடோச ஊத்தவா?” கேட்டப்படியே மலர் சொட்டு சொட்டாக மாவை கல்லில் வார்க்க அது ஒரு ரூபாய் நாணயம் அளவில் குட்டி பன் தோசையாக உருவம் கொண்டது.
“ஐ, குத்தி டோச. நானுக்கு” கொண்டாட்டமாக முகிலன் கேட்க அவனது ஸ்பைடர்மேன் தட்டு முழுவதும் சிரித்தபடி சிதறி நிறைந்தன பௌர்ணமி நிலவுகளாய் குட்டி தோசைகள். அதில் இனியன் சாம்பார் வார்க்க முகிலோடு தழுவும் பல நிலவுகளை தட்டில் ஏந்தி மேடையில் அமர்ந்தே உண்ணத் தொடங்கினான் முகிலன்.
இனியனுக்கு இவ்வளவு எளிதாக இயல்பாக எல்லாம் மாறிவிட்டதா? மனதுக்குள் சற்று முன்னர் வரை குழப்பிய குட்டை இன்னும் தெளியாமல் இருக்க “பனிமலருக்கு என்ன ஸ்கூல்லெயே பிடிக்குமா?” என்றான்.
“அன்னைக்கு இந்த ‘இனி’ இனிக்கும்ன்னு எனக்கு தோணல. ஆனா இன்னைக்கு காலம் சொல்லித்தந்த பாடம் படிச்சதுக்கு அப்புறம், ‘பனிமுகிலோடு’ தான் ‘இனி’யும் இருக்கணும்ன்னு முடிவெடுக்க ஈஸியா இருந்தது.“ என்றாள் மலர்.
அத்தோடாவது நிறுத்தி இருக்கலாம் இனியன். ஆனாலும் ஆண் என்பவன் இந்த தோசைக் கல் போல. ஆண்டு முழுவதும் பழக்கினாலும் மீண்டும் மீண்டும் ஒட்டி பிய்த்து மீண்டும் அடிபட்டு என பழகிக் கொண்டே இருப்பவன்.
“ஆனாலும் அன்னைக்கு கேட்டிருந்தா ஓகே சொல்லியிருப்பியா?” மனதை அரித்த அடுத்த கேள்வியைக் கேட்டான்.
“அன்னைக்கு வட்டதோசை சுட பனிமலருக்கு திறமையும் இல்ல, இப்டி குட்டியோட நின்னு குட்டிதோசை ஊத்த பொறுமையும் இல்ல…. ஆனா இன்னைக்கு தோச கல்ல பழக்குற அளவுக்கு அனுபவம் இருக்கு” என்ற மலரின் பதில் இனியனுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.
இல்லையென்றாலும் கவலையில்லை. தோசைக்கல் சூடுவாங்கி தண்ணீர் விட்டு துடைத்து மீண்டும் ஒருமுறை பனிமலரால் பழக்கப்படும்.